இந்தியத் தேர்தல் – தேர்தல் ஆலோசகரின் பார்வையில்… | சித்தார்த்தன் சுந்தரம்புத்தகத்தின் பெயர்: ஹெள டு வின் ஆன் இண்டியன் எலக்‌ஷன் (How to Win an Indian Election)
ஆசிரியர்; ஷிவம் ஷங்கர் சிங்
பதிப்பகம்; பெங்குவின்
விலை: ரூ 299
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/

இந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா. இதற்குச் சான்று கொரோனா   பெருந்தொற்றின் இரண்டாவது அலை காலத்திலும் அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அலைகடலென மக்கள் திரள்வதுதான். அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு. புதுச்சேரி உட்பட ஐந்து சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் பரப்புரை முழு வீச்சில் நடைபெற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தத் தொழில்நுட்ப யுகத்தில் ஒரு வேட்பாளரோ, ஒரு கட்சியோ தேர்தலில் வெற்றி பெறத் தேவையான சூட்சும மந்திரங்கள் வளர்ச்சியா, பொருளாதார முன்னேற்றமா இல்லை மக்களின் உணர்ச்சியா?

இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஏறக்குறைய பத்தாண்டுகள் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரின் ஐபேக்-கில் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியிலும், வேட்பாளர்களுக்கான பேச்சுகளை எழுதும் பணியிலும், கட்சிக்கான உத்திகளை தீர்மானிக்கும் குழுவிலும் பணிபுரிந்து, பா.ஜ.க வின் உறுப்பினராகவும் சில ஆண்டுகள் இருந்து பின் அதிலிருந்து விலகி விட்ட ஷிவம் ஷங்கர் சிங் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் எழுதி வெளிவந்த `ஹெள டு வின் ஆன் இண்டியன் எலக்‌ஷன் (How To Win An Indian Election)” என்கிற புத்தகமாகும்.

அமெரிக்காவில் படித்த இவர் அரசியலில் ஈடுபட வேண்டுமென்கிற நோக்கத்தில் இந்தியாவுக்கு வந்து `பாராளுமன்ற உறுப்பினருக்கான உதவியாளர் (Legislative Assistant to Member of Parliament)’ என்கிற திட்டத்தின் கீழ் சிக்கிம் மாநில பாராளுமன்ற உறுப்பினரான ப்ரேம் தாஸ் ராய்-க்குக் கீழ் பணிபுரிந்தார். அதன் பின், பிரசாந்த் கிஷோர் ஆரம்பித்த ஐபேக்கில் சேர்ந்து குஜராத், மணிப்பூர், திரிபுரா, பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது அதன் வியூக வடிவமைப்பில் பணியாற்றினார். இப்போது சுயாதீன பத்திரிகையாளராக இருந்து வருகிறார்.

பஞ்சாப் மாநிலம் தவிர மற்ற மாநில தேர்தல்களில் ஐபேக் நிறுவனத்தின் க்ளையண்டான பா.ஜ.க. கட்சிக்காக இவர் வியூக வடிவமைப்பிலும் தரவுகளைப் பகுப்பாய்வதிலும் தீவிரமாக பணியாற்றியிருக்கிறார். ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும் இவர் கற்றுக் கொண்ட பாடங்களையும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளையும் இந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

2017 ஆம் ஆண்டு நடந்த மணிப்பூர் தேர்தலில் அம்மாநிலத்தின் முதல்வராக பதினைந்து வருடம் பதவியில் இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இபோபி தான் எங்கே தோல்வி அடைந்து விடுவமோ என்றெண்ணி காலங்காலமாக நாகர்களுக்கும் மெய்தி இனத்தவருக்கும் இடையே இருந்து வந்த பகையை

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?” – ராஜசங்கீதன் – Indian News | SriLankan Tamil News | Articles |
தமிழில் How to win an Indian Election

சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள எண்ணி ஏழு மாவட்டங்களைப் பிரித்து நாகர்கள் இல்லாத பகுதியோடு இணைத்தார். இது பா.ஜ.க.வுக்கு பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதை முறியடிக்க வேண்டுமென நினைத்த பா.ஜ.க. சமூக ஊடகங்கள், வாட்சப், தொலைக்காட்சி விளம்பரங்கள், பத்திரிகை விளம்பரங்கள் என பல முனை தாக்குதல் வாயிலாக இபோபி பதினைந்து ஆண்டுகளில் எப்படி மாநிலத்தைச் சுரண்டி நாசமாக்கினார் என்றும், அனைத்திலும் கமிஷன் பெற்றார் என்பதைக் குறிக்கும் வகையில் `மிஸ்டர் 10%’ என்றும் தொடர்ந்து விளம்பரம் வெளியிட்டு வந்தது. தேர்தல் பரப்புரையில் ஆதிக்கம் செலுத்த வேண்டுமெனில் சொல்லக்கூடிய விஷயம்/எடுத்துரைப்பு (narrative) மக்கள் மனதில் `நச்’ சென்று பதியுமாறு இருக்க வேண்டும். தர்க்கரீதியான காரணங்களை விட உணர்ச்சியைத் தூண்டக் கூடிய காரணங்களாக அல்லது செய்திகளாக இருக்க வேண்டும். அது போல வாக்குக்குப் பணம் அளிப்பதும் அங்கு பரவலாக அரங்கேறியது. (திருமங்கலம் சூத்திரம்?!)

இந்தியாவிலேயே மிகவும் எளிமையான முதல்வர் என பெயர் பெற்று சுமார் 20 ஆண்டுகள் திரிபுராவை நிர்வகித்து வந்த மாணிக் சர்க்காரின் அரசு 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் படுதோல்வியைக் கண்டது. 2013ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலின் போது சுமார் 1.54 சதவிகிதம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த பா.ஜ.க. அரசு மாபெரும் வெற்றி பெற்றது. பா.ஜ.க-வின் தேர்தல் வியூகத்தில் பெரும் பங்கு வகிப்பது `பூத்’ அளவில் அமைக்கப்படும் கமிட்டி ஆகும். ஒவ்வொரு பூத் அளவிலும் எத்தனை வாக்காளர்கள், அவர்களின் வயது, மதம், சாதி ஆகிய அனைத்துத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து அதற்கேற்றாற் போல செய்திகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பது மிகவும் பிரதான பணியாகும். தேசிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாத பா.ஜ.க. அரசு மாணிக் சர்க்காரின் திரிபுராவில் 20 சதவிகிதம் இளைஞர்களுக்கு வேலையில்லை எனவே மாற்றம் வேண்டுமெனில் எங்களைத் தேர்ந்தெடுங்கள் என பிரச்சாரம் செய்ய அது இளைஞர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்று பா.ஜ.கவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

சமூக ஊடகங்களை மிகவும் திறமையாகப் பயன்படுத்தி மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதில் பா.ஜ.க. தொழில்நுட்பப் பிரிவினர் `கில்லாடிகள்”. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது கட்சியிலிருக்கும் பலதரப்பினரும் இடம் பெறும் வகையில் சுமார் 20,000 வாட்சப் குழுக்கள் உருவாக்கப்பட்டதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இவர்களது `மிஸ்ட் கால் பரப்புரை’ என்கிற உத்தி மூலம் பல லட்சம் போன் நம்பர்கள் பெறப்பட்டு அவையனைத்தும் சமூக ஊடகப் பரப்புரைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன.ஐபேக் நிறுவனத்துக்கும் பா.ஜ.க-வும் ஏற்பட்ட பிரச்சனையால் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் மாநிலத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் ஆலோசகராக களம் இறங்கினார். அதுவரை ”மகாராஜா” என்கிற கோதாவில் இருந்த முதல்வர் வேட்பாளரான அம்ரீந்தர் சிங் அடித்தட்டு மக்களையும் சென்று சேர வேண்டுமென்கிற வகையில் `கேப்டன் அம்ரீந்தர் சிங்’ என்றழைக்கப்பட்டார். மோடிக்கு வடிவமைத்த `சாய் பே சர்ச்சா’ என்கிற நிகழ்வு போல `காஃபி வித் கேப்டன்’ என்கிற நிகழ்வு வடிவமைக்கப்பட்டது. 117 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அம்ரீந்தர் சிங் விஜயம் செய்வார் என்றும் அப்போது மக்களின் குறைகளை கேட்டறிவார் எனவும் அவையனைத்துக்கும் அவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் 100 நாட்களில் தீர்வு காணப்படும் எனவும் விளம்பரப்படுத்தப்பட்டது. (இப்போது தமிழகத்தில்  திமுக அணிக்கான வியூகமும் ஏறக்குறைய இதேதான்!)

பொய்ச் செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பா.ஜ.க.வுக்கு இணையான ஒரு கட்சி இதுவரை இருந்ததில்லை என்கிற அளவுக்கு மிகைப்படுத்தப்பட்ட, உண்மைக்குப் புறம்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. உதாரணம் கன்னையாகுமார் சம்பந்தப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பிரச்சனை, (நீதிமன்றத்தில் அவரைத் தாக்கிய பா.ஜ.க உறுப்பினர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை), ரபேல் விவகாரம், மிகைப்படுத்தப்பட்ட `சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ போன்றவை இதில் முக்கியமானவையாகும்.

அது போல `anti-national’, `tukde-tukde gang’, `urban naxals’ என பெயர் சூட்டி முக்கியமான பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவது மத்தியில் ஆளும் கட்சிக்குக் கை வந்த கலை.

Republic TV (அர்னாப் கோஸ்வாமி + பா.ஜ.க. ராஜ்யசபா எம்.பி. ராஜீவ் சந்திரசேகர்), Times Now (ஜெயின் குழுமம்), Zee TV (சுபாஷ் சந்திரா 2016ல் பா.ஜ.க. ஆதரவில் ராஜ்யசபா எம்.பி. ஆனவர்), CNN News 18 (ரிலையன்ஸ் குழுமம்), NDTV 24×7 (இதிலும் முகேஷ் அம்பானிக்கு மிகவும் நெருக்கமான மஹேந்திர நாத்தா முதலீடு செய்திருப்பதாக SEBI மூலம் தெரிய வந்திருக்கிறது) போன்ற ஆங்கில சானல்களிலும், Aaj Tak, News 18 India, Zee News, ABP News, India TV (ரஜத் சர்மா – அருண் ஜேட்லிக்கு வேண்டப்பட்டவர்) போன்ற இந்தி சானல்களிலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டிருப்பதால் அரசுக்கு ஆதரவாகவே இவற்றில் செய்திகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன. சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதிபதி நிக்கிதாகுருசேவ், ` எங்கள் கருத்தாக்கத்துக்கான முக்கியமான ஆயுதம் பத்திரிகைதான்’ எனக் கூறியது எவ்வளவு உண்மை!

குஜராத் கலவரத்தைக் கட்டுப்படுத்தாத மோடி தொடர்ந்து முதல்வராக நீடிக்கக்கூடாது என அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் கூற அவர் தொடர்ந்து முதல்வராக நீடிக்க வேண்டுமென வக்காலத்து வாங்கி மோடியைக் காப்பாற்றியவர் அத்வானிதான் என்று கட்சியின் `உள்வட்ட’த்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.  ஆனால் இன்றைக்கு அவரது நிலைமையென்ன?

ஹிட்லரின் பிரச்சார பீரங்கியாக செயல்பட்ட கோயபல்ஸ், `ஒரு பொய்யை பல முறை சொல்வதால் நாளடைவில் அதுவே உண்மை என மக்கள் நம்பிவிடுவார்கள் என்பதோடு அந்தப் பொய்யைச் சொன்னவரே அதை உண்மையென நம்பிவிடுவார்’ என்றார். இது தற்சமயம் மத்தியில் ஆட்சி செய்து வரும் அரசுக்கு மிகவும் பொருத்தமானதாகும்.

நரேந்திர மோடி ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பார் என நம்பி தான் பா.ஜ.கட்சியில் சேர்ந்தததாகவும் ஆனால் அவரின் நடவடிக்கையும், கட்சியின் நடவடிக்கையும் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது எனக் கூறியதோடு இந்த அரசு செய்த சில நல்ல காரியங்களையும், பல மோசமான காரியங்களையும் நடவடிக்கைகளையும் `நான் ஏன் பா ஜ கட்சியிலிருந்து வெளியேறுகிறேன்’ என்கிற பெயரில் கட்டுரையாகவே எழுதி வெளியிட்டார்.

ஆக, இக்காலத்தில் இந்தியத் தேர்தலில் வெல்ல வேண்டுமெனில் கட்சி மற்றும் வேட்பாளர் ப்ராண்டிங், சந்தைப்படுத்தல், வாக்குக்குப் பணம், எவ்வித பின்விளைவையும் எண்ணிப்பாராமல் செய்தியை மிகைப்படுத்துவது/உண்மைக்குப் புறம்பான செய்திகளை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவது, முக்கியமில்லாதா ஆனால் மக்களின் உணர்ச்சியைத் தூண்டக் கூடிய சாதி, மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை அவர்களிடையேக் கொண்டு சேர்ப்பது, அதிகாரத்தின் மூலம் ஊடகங்களை தன்வயப்படுத்துவது, வரலாற்றைத் திரித்துப் பேசுவது போன்றவற்றை லாவகமாக உபயோகிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியாவைப் பொருத்தவரையில் பெரும்பாலான கட்சிகளின் செயல்பாடுகளை அறிந்து வைத்திருக்கும் ஒரு நபர் யாரெனில் `பி கே’ என நெருக்கமானவர்களால் அழைக்கப்படும் `ஐபேக்’ பிரசாந்த் கிஷோர் என்றால் மிகையில்லை!

இந்நூல் தேர்தலில் அக்கறை கொண்டவர்களும், அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் தேர்தலில் வெற்றி பெற ஆலோசகர்களின் உதவியோடு என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நினைப்பவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய சுவராசியமான நூலாகும். இந்நூல் தமிழிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு சமீபத்தில் வெளியாகியிருகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.