எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதிய"ம்" நாவல் | Shoba Sakthi's Mm Tamil Novel Book Review | அன்புச்செல்வன் | www.bookday.in

எழுத்தாளர் ஷோபாசக்தி எழுதிய “ம்” நாவல் – நூல் அறிமுகம்

“ம்” நாவல் – நூல் அறிமுகம்

முப்பது வருடங்களுக்கு மேலான கொடிய யுத்தத்தில் – யுத்தம் பற்றியும் யுத்தத்தின் காரணமாகக் கொல்லப்பட்டவர்களை, காயம்பட்டவர்களை, மனப்பிறழ்வுக்காளானவர்களை, இடப்பெயர்வுகளை, இயக்கங்களை, ஈகிகளை, துரோகிகளை, தமிழை – நெடுங்கதையாடல்களாகச் சொல்லப்பட்டதை ‘ம்’ கொட்டிக் கேட்டபடி இருக்கும் சனங்களுக்கு நாவலை ஷோபாசக்தி சமர்ப்பிக்கும் போதே – இல்லை – அதற்கும் முன்னதான யாத்திராகமத்தின் வசனத்தில் இருந்தே யுத்தத்தின் வலியைச் சொல்லத் தொடங்கி விடுகிறார் – அப்போதிருந்தே நாம் ‘ம்’ கொட்டத் தொடங்கி விடுகிறோம்.

நேசகுமாரன் ஏர்னஸ்டின் வாழ்வின் வழியாக இலங்கையில் தமிழ்மக்கள் மீதான சிங்களப் பேரினவாதத்தின் அராஜகம், ஒடுக்குமுறை, சிறைக்கொட்டடிகளில் மீறப்படும் மனித உரிமைகள், சகோதர இயக்கங்கள் மீதான சந்தேகங்கள், தன்னிருப்பின் பொருட்டு யாரையும் காட்டிக்கொடுக்கும் துரோகங்கள் என வரலாற்றின் அடித்தளத்தில் புனைவு கட்டி எழுப்பப்படுகிறது. வரலாறா புனைவா என்ற மயக்கமே புதினத்தை மேலும் ஈர்ப்புக்குள்ளதாக்குகிறது. ஷோபாசக்தியின் மொழியும் அதற்குள் இயல்பாக அமைந்துள்ள பகடியும் எள்ளலும் அத்தனை வலி மிகுந்த எழுத்தையும் இலகுவாக்குகிறது.

இப்புதினம் முழுமையுமே மனித உடல்கள் கடுமையான வதைக்குள்ளாக்கப்படுகின்றன. பிரதி முழுக்க உடல்கள் எல்லா இடங்களிலும் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன – மருத்துவமனைகளில் இருந்து மலசலக்குழிகள் வரை..! 1982 டிசம்பர்25-ல் இலங்கை பனைத்தீவில் இருந்து விவரிக்கப்படும் நேசகுமாரனின் வாழ்வு, ஜூலை 1983 தமிழினப் படுகொலையின் 20வது வருடக் கறுப்பு நினைவுகள் அனுசரிக்கப்பட்ட 2003-ல் புலம் பெயர்ந்த பிரான்சு தேசத்தில் மனப்பிறழ்வில் முடிந்து போகிறது. இராணுவம், போர், அதிகாரம், இலட்சியம், ஒழுங்கு என இங்கு உடல்கள் மீதான வாதைக்கான களங்களும் காரணங்களும் பலப்பல.

ஷோபாசக்தியின் நுண்ணரசியலும் அதிகாரத்துக்கு எதிராகப் பகடி செய்வதும் பிரதியினூடே இயல்பாக வெளிப்பட்டுள்ளது – அல்லது இயல்பாக வெளிப்படும் வகையில் புனையப்பட்டுள்ளது (அதுவும் கூட பிரதியின் சுத்த சுயம்புத்தன்மைக்கு எதிரான நுண்ணரசியல்தானே). ‘பத்து காணி நிலத்திற்கும் பள்ள அந்தோணியாருக்கும் நன்றி’ என கே.டானியல் சொல்லும் இடம், நேசகுமாரனின் தொடக்க கால புரட்சி இயக்கச் செயல்பாடுகள், TELO – RELO குறித்த இராணுவ அதிகாரி உடுகம்பொலவின் குழப்பம், மட்டக்களப்பு சிறையில் உடன்வந்தோர் அவரவர் இயக்கங்களுடன் சேர நேசகுமாரன் வேறு வழியின்றி கொலைகாரர்களோடு சேர்ந்து கொள்வது, பஷீர் – நாராயணிகளால் முதல் சிறையுடைப்பு முயற்சி தடைப்படுவது, உயிரோடு இருப்பதை அரசுக்கு நிரூபிக்கத் துடிக்கும் கனகரட்ணம் சண்முகநாதன், துப்பாக்கிகள் குறித்த 3 கதைகள், தோழர் பக்கிரியின் அவ்வப்போதைய கமெண்ட்டுகள், சவரிமுத்து பாதிரியார் 32 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை பெற்ற கதை என்று பிரதி முழுவதும் அவை விரவிக் கிடக்கின்றன.

தனது இருப்பின் பொருட்டு, ஊறாத்துறை காவல் நிலையத்தில் தொடங்கி, குருநகர் இராணுவ முகாம், ஆனையிறவு உப்பள இராணுவ முகாம், பனாகொட இராணுவ முகாம், வெலிக்கடை மறியல், இயக்கச்சி புலிகள் நிலை, யாழ்ப்பாணம் புலிகள் சிறை வரை எங்குமே விசாரணையில் நேசகுமாரன் எதையும் மறைப்பதில்லை – மறைப்பதால் தனக்கு ஊறு நேரிடும் என்று பயந்து உணர்ந்தோ அல்லது கத்தோலிக்கக் குருத்துவக் கல்லூரியில் சொல்லிக் கொடுத்த பொய் சொல்லக்கூடாது என்ற சத்தியவாக்குக்குக் கட்டுப்பட்டோ – யாரையும் எதையும் ‘போட்டுக் கொடுப்பதையும்’ ‘காட்டிக் கொடுப்பதையும்’ தவறாமல் செய்து தன் இருப்பைக் காப்பாற்றிக் கொள்கிறான். அது மட்டுமின்றி இறுதியில் புலம் பெயர்ந்து போன பிரான்சில் தன்னைத்தானே காட்டிக் கொடுத்துக் கொண்டு இல்லாமலே போகிறான்.

ஆதிக்க வெள்ளாளீயத்துக்கு எதிராக ‘செயல்’ செய்து மாட்டிக் கொண்ட ‘சுவாமி’ ஏர்னஸ்ட் நேசகுமாரன் தமிழ் அரசியல் கைதிகளோடு சிறைச்சாலை பல கண்டு – அதற்குள் வதை பல பட்டு – சகோதர இயக்க சுற்றிவளைப்புக்குப் பயந்து – புலம் பெயர்ந்து அங்கு மனம் பிறழ்ந்து சொந்த மகளையே புணர்ந்த Paedophileஆக மரணவாய்ப்படைகிறான் என முடிவாகக் கூறினால் அது பெருங்கதையாடலுக்கும் முழுமைத்தன்மைக்கும் எதிரான இப்பிரதிக்கு செய்யும் துரோகமாகும்.

அதிகாரம் அனைத்து வழிகளிலும் மனித உடல்களில் ஏற்படுத்தும் வாதைகளின் தொகுப்பு…

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:“ம்” நாவல்
ஆசிரியர்:ஷோபாசக்தி
வெளியீடு:
கருப்புப் பிரதிகள்
விலை:₹.200
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻அன்புச்செல்வன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *