காலியா
லாவோஸ்
இந்த இரண்டு பெயரும் உங்கள் நினைவுக்கு வருகிறதா ?
சின்ன க்ளூ தருகிறேன் .இரண்டும் மனிதர் பெயரல்ல.
என்ன இவ்வளவு நேரமாக யோசிக்கிறீர்கள் . ஞாபம் வரவில்லையா ?
இரண்டும் கப்பலின் பெயர்கள் . கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சி முதன் முதலாக ஓட்டிய சுதேசிக் கப்பல்கள்.
இந்த இரண்டு கப்பலுக்கும் இன்னொரு பெருமை உண்டு தெரியுமா ?
இந்தியாவில் தயாரான எஞ்சின் , மலபார் தேக்கு என முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பு . இதை சாத்தியமாக்கியவர் அட்ரசீர் கர்செட்ஜி . இவர் மகாராஷ்டிரத்தை சார்ந்தவர் .
கணிதமேதை ராமனுஜம் லண்டன் ராயல் கழகத்தில் உறுப்பினரான இரண்டாது இந்தியர் . முதல் உறுப்பினர் யார் தெரியுமா ?
இந்த அட்ரசீர் கர்ஜெட்ஜியே !
இதை எல்லாம் நம் வரலாறு / அறிவியல் சொல்லித் தருகிறதா ?
பாடபுத்தகங்களில் ,” போதிக்கும் போது ரஷ்ய புத்தகம் தங்கள் நாட்டில் உலகிற்கே வழிகாட்டியவர் என்று விளாதிமிர் எவர்னாட்ஸ்கியைஅறிமுகம் செய்கின்றது .அமெரிக்காவில் ஸ்டீவன் பென்சர் பெயரும் ,பிரிட்டானிய பாடபுத்தகத்தில் கார்லைல் பெயரும் ,ஜப்பானிய பாடபுத்தகத்தில் அவர்கள் நாட்டின் மண்வள நிபுணர் ஷிபாகம்சி குறித்தும் தவறாமல் பேசுகின்றன.”
நம் நாட்டில் அப்படி யாருமில்லையா? அல்லது பேசுவதில்லையா ?
மேக்நாத் சாஹாவை அறிவியல் ஆர்வமுள்ள எத்தனை பேர் அறிவீர் ? அறிவில் எவ்வளவு ஓங்கி நின்றாலும் சாதி சமூகம் என்ன பாடுபடுத்தும் என்பதற்கு மேக்நாத் சாஹா வாழ்வு ஓர் உதாரணம் . அவர் வாழ்க்கைக் கதை தனிப் புத்தகமாக வந்துள்ளது .பாரதி புத்தகாலய வெளியீடு .வாங்கி வாசிக்கவும் . அப்போது கணித மேதை ராமானுஜன் வரலாறையும் படிக்கவும் [ பாரதி புத்தகாலய வெளியீடு ] அதில் விஞ்ஞானி த.வி.வெங்கடேஷ்வரன் எழுதிய குறிப்புகளையும் ,கட்டுரையையும் சேர்த்து வாசிக்கவும் . ராமனுஜத்துக்கு சாதகமாக இருந்த ‘ சமூக மூலதனம் ‘ அவர் பிராமண சாதியில் பிறந்தது .அவர் ஓர் தலித்தாய் இருப்பின் இப்பெயரை அடைந்திருக்க முடியுமா என த.வி கேள்வி எழுப்பி இருப்பார் . எனவே இவ்விரண்டு புத்தகத்தையும் இணைத்து வாசிக்கவும் .
நான் இப்போது பேசுவது அந்த புத்தம் சார்ந்து அல்ல .
வேதவிஞ்ஞானம் என ஓங்கி ஓங்கி கத்தும் சங்கிகள் நம் மண்ணில் சமீப இரு நூற்றாண்டுகளில் சாதித்த ஆனால் இருட்டடிப்பு செய்யப்பட்ட அறிவியல் மேதைகளை அறிவாரா ? அது குறித்து பேசமாட்டார்கள் .
இங்கு யாராண்டாலும் ஆளும் வர்க்கம் மிகவும் கொடியது ; திறமையாளர்களை அல்ல ; ஜால்ராக்களையே ஊட்டி வளர்க்கும் . பெருமைப்படத் தக்க சாதனை புரிந்தோரும் இருட்டில் முகவரியற்றுக் கிடப்பர் .
சுப்பாராமசிஸ் ஸ்லெலண்டஸ் என்கிற பூஞ்சைக்காளானைப் பற்றி படிக்கிற உயிரி வேதியல் விஞ்ஞான மாணவன் அடையும் முதல் ஆச்சரியம் என்ன தெரியுமா ? நம் திருத்தணியில் பிறந்த ஓய் .சுப்பாராவ் எனும் விஞ்ஞானி கண்டு பிடித்தது .அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது என்பதே.
பெண் தாவரவியலார் ஜானகி
சோளப் பயிரை சோதனைக் குழாயில் உருவாக்கிய ஜெய்பூர்காரரான பி.மகேஸ்வரியின் பெயர் மெக்சிகோ பல்கலை பாடபுத்தகத்தில் உள்ளது .டாக்டர் பாண்டுரங்க சதாசிவ கங்கோஜி பெயரும் உள்ளது . டாகடர் சுபாஷ் முகர்ஜி ,சுனிட் முகர்ஜி ,சரோஜ் முகர்ஜி ஆகியோர் சோதனை குழாய் குழந்தையின் முன்னோடி என்பதை அறிவோமா ?
உலக அளவில் பூக்களின் தாவரவியல் பெயர்களைத் தொகுக்க மிக்சிகன் பல்கலை முடிவு செய்தபோது தமிழ் சங்க இலக்கியத்திலுள்ள நூறு மலர்களின் பெயர்களை முன்மொழிந்து ஏற்கச் செய்தவர் ஜானகி .
சீனாவில் பாண்டா கரடி பேரழிவில் சிக்கிய போது மூங்கிலை வேகமாக வளர்த்து பாண்டாக் கரடிகளை பாதுகாத்த ஜானகி புராஜக்ட் அறிவோமா ?
தொழில் துறையில் மாசு கட்டுப்பாட்டை அளக்க ஜானகி முறைமை கரியமல மேலாண்மை முறை உண்டு . அந்த ஜானகியை அறிவோமா ?
விஞ்ஞானி கமலா சொஹானி ,
அன்னாமணி ,
ரூபி,
ஜிடி நாயுடு
இப்படி நம் அறிவியல் வரலாற்றின் இருண்ட பக்கங்களில் புதைக்கப்பட்டவர்களை நினைவூட்டும் ஒரு சிறிய நூல்.
48 பக்கங்களே . ஆயிஷா இரா.நடராஜன் எழுதியது .பாரதி புத்தகாலய வெளியீடு .
எப்படியோ என் கண்ணில் தப்பிய புத்தகம் .வாசிக்க வாய்ப்பானது இந்த கொரானா ஊரடங்கு.
இப்புத்தகத்தின் இறுதியில் நம் சாதனைகள் நூறு தொகுக்கப்பட்டுள்ளது . இப்புத்தகம் இப்போது விவாதிக்க வேண்டிய ஒரு புத்தகமே . இந்நூலில் உள்ள ஒரு சில செய்திகளில் எனக்கு சந்தேகம் உண்டு . கொஞ்சம் மிகையும் பெருமிதமும் உள்ளதோ? ஆனால் நான் அறிவியலில் ஆரம்பப்பள்ளி மாணவனே ;எனவே நன்கறிந்தோர் தீர்ப்பு சொல்லட்டும் . கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல் .அதில் ஐயமே இல்லை .