பிஹைன்ட் வுட்ஸ் (behind woods) யூ டியூப் தளத்தில் 20நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தை பார்த்தேன். ஒரு மரண தண்டனைக் கைதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்டு மறு நாள் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்த செய்தியை அவனது பாட்டி அவனது மனைவிக்கு தெரிவிக்கிறாள். அவள் ஒரு தையல் நிறுவனத்தில் பணிபுரியும் ஏழைப் பெண். அவள் கையால் சமைத்த உணவை சாப்பிடுவதே அவனது இறுதி விருப்பம். அதை சிறைத் துறை அதிகாரிகள் நிறைவேற்றுகிறார்கள். மிகுந்த துயரத்துடன் அவள் சமைத்து சிறைக்குள்ளே அவனுக்கு உணவு பரிமாறுகிறாள். ‘என்னுடன் பேச மாட்டாயா?’ என்கிறான்.அவளால் பேச முடியவில்லை. அவன் கைகளை எடுத்து முகத்தில் வைத்துக் கொள்கிறாள். மறுநாள் தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அவள் சோகத்துடன் உட்கார்ந்திருப்பதுடன் படம் முடிகிறது.

சபரிவாசன் சண்முகம் என்பவர் இயக்கியிருக்கிறார். கபரில்லா செல்லாஸ் என்பவர் மனைவி வள்ளியாகவும் லியோ சிவதாசன் கணவன் தமிழ்மாறனாகவும் நடித்துள்ளார்கள். கபரில்லாவின் முகம் சோகத்தையும் விரக்தியையும் கையறு நிலையையும் அற்புதமாக காட்டுகிறது. 7 இலட்சம் பேர் பார்த்த இந்தக் குறும்படத்திற்கு பின்னூட்டம் இட்டுள்ள 6ஆயிரம் பெரும் அதைத்தான் பதிவிட்டிருக்கிறார்கள். பொதுவாக இது போன்ற படங்களில் அவன் என்ன குற்றம் செய்தான் என்பதை தெரிந்து கொள்வதில்தான் நம் ஆர்வம் இருக்கும்.இயக்குனரும் அதற்கு ஏதாவது நியாயம் சொல்லியிருப்பார். இதில் அவன் என்ன குற்றம் செய்தான் என்பது சொல்லப்படவேயில்லை. அவன் பாட்டி’ சனங்க பக்கம் நின்ன. இப்ப அது உன்ன எங்க கொண்டு வந்து விட்டிருச்சு பார்த்தியா?’ என்று சொல்வதிலிருந்து அவன் ஏதோ ஒரு இயக்கத்தில் இருந்திருப்பான். அது தொடர்பான ஏதோ ஒரு நிகழ்வில் அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என்று நாம் ஊகிக்கலாம். மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் தண்டனைக்கு முதல் நாளில் உறங்க முடியாது. அழுவார்கள். அரற்றுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம்.இதில் அவன் அது போல் எதுவும் செய்யவில்லை. சாதாரணமாகவே இருக்கிறான். மனைவியிடம் கூட கனிவாகவே இருக்கிறான். அமைதியாக சாப்பிடுகிறான். சிறைக்குள்ளே உலவுகிறான். அவ்வளவுதான். ஆகவே ஏதோ ஒரு சித்தாந்தம்தான் அவனுக்கு இந்த உறுதியை கொடுத்திருக்க வேண்டும். சில பின்னூட்டங்கள் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் ஒரு பின்னூட்டம் குற்றம் புரிந்தால் நம் உறவினர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றன.

தூக்குதண்டனையை மனித கவுரவத்திற்கு பங்கப்படாமல் எவ்வாறு நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசை கேட்டிருக்கும் வேளையில் மரண தண்டனை குறித்து இந்தப் படம் பல கேள்விகளை எழுப்புகிறது. இது வெளியிடப்பட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. இருந்தாலும் பார்க்காதவர்கள் பார்த்து கருத்துகளை பதிவிடலாம். அவர்களுக்காக இணைப்பு https://youtu.be/fG8YU-DjO-k.

-ரமணன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *