எரிந்த மதுரையில்
தப்பிய வண்ணத்துப்பூச்சி
தேடித் திரிகிறது
தேனுண்ட பூவை.
பியானோவின்
இசையில் கரைந்து
பறையில் துள்ளி
எழுகிறது காற்று.
ஏனங் கழுவும்
பெண்ணின் கைகளில்
ஒட்டியிருக்கும்
ஆயிரம் வருட அழுக்கு.
அடுப்பெரியா வீட்டில்
எரிகின்றன வயிறுகள்
அதன் வெப்பத்தில்
உருகாதிருக்கட்டும் உலகம்.
நாக்கைத் தொங்கவிட்டு
கைகளை நீட்டி
முதுகை வளைத்திறைஞ்சும்
மனிதனும் நாயானான்.
நேசிக்க நினைக்கிறேன்
பூசிக்க பூவெடுக்கிறேன்
வீசும் காற்றில் இதயம் தடுமாறுகிறது.
கண்களின் சங்கீதம்
இதயங்களில் இனிமையாய் இசைக்கும்
இதமாய் இரு உயிர்களை
மெல்ல வருடும்.
ஆண்மை பெண்மை
கருமை வெண்மை
அட போங்கடா
வேலையத்த பயல்களா .
பசித்த வேளையில் கூழாங்கற்கள்
தானியங்களாய் மாறி
பகல் பொழுதாக
உருவெடுக்கிறது.
மிகச் சிரம்மாய்
இருக்கிறது.
உயிர்த்தலின் வலியோடு
இன்னும்
எத்தனை காலங்கள்?
பீதி கொள்ளச் செய்யும்
ஒவ்வொரு நிமிடங்களும்
விழிப்பள்ளங்களை
மூழ்கடிக்கச் செய்கிறது.
சகலமும்
இம்மி இம்மியாக
உலர்ந்து கொண்டேயிருக்கிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.