பத்தாவது மைல் வளைவில் திரும்பும் போது வண்டியின் ஹெட் லைட் வெளிச்சத்தில் அவனின் அசாத்தியமான உருவம் முழுமையாக பார்வைக்கு கிடைத்தது. பழைய கைலியை மடித்துக்கட்டி மஞ்சள் வண்ண கட்டம் போட்ட சட்டைக்கும் மேலே சாயம் போன ஒரு அரைஸ்லாக் ஸ்வெட்டரை அணிந்திருந்தான். .வாயில் எரியும் பீடித்துண்டின் சிறிய நெருப்பு மின்வெட்டான் பூச்சி போல கரும்பிண்ணனியில் மினுங்கிகொண்டிருந்தது. கசிந்த பீடிப் புகையின் நாற்றம் தூரத்திலேயே நாசியை நிறைத்துவிட்டது.. வண்டி அவன் அருகில் செல்ல செல்ல அவன் என்னை நோக்கி நகர்ந்துகொண்டேயிருப்பது போல் தெரிந்தது. பக்கத்திலேயே வெள்ளை சுண்ணாம்பு அடிக்கப்பட்ட பக்கவாட்டு தடுப்பு பாலத்திற்கருகே விறகு லோடு ஏற்றப்பட்ட மஞ்சள் லாரி பச்சை வண்ணப்படுதாவால் போர்த்தப்பட்டிருந்தது அதையும் மீறி அங்கங்கே நீட்டிக்கொண்டிருந்த விறகு கட்டைகள் கூட இப்போது கண்ணுக்குத் தெளிவாகத் தெரிந்தன. லாரியின் நெற்றியில் விகேஎஸ் டிரரான்ஸ்போர்ட் சர்வீஸ் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அருகிலேயே ஒரு சின்ன வேல் படம் வரையப்பட்டிருந்தும் கூட மிகத் துல்லியமாக தெரிந்தது. அருகில் சென்றவுடன் அவன் ஆகிருதிக்கு கட்டுப்பட்டது போல் என்னையறியாமலேயே வண்டி நின்றது . நெடுநாள் பழகிய நண்பனைப்போல் பில்லியனில் தொற்றிக்கொண்டான். மீண்டும் ஆக்சிலேட்டரை முறுக்கும் போது தான் கவனித்தேன் .கவனித்தது நினைவுக்குள் உரைத்த கணத்தில் உடம்பெல்லாம் குப்பென்று சிலிர்த்தது.சிசுவைப்போர்த்தியிருக்கும் பனிக்குடம் போல அந்த அத்துவானப் பள்ளத்தாக்கு முழுவதையும் வெண்மேகம் போர்த்தியிருந்தது. எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாத சில்வண்டுகளின் ஒலி அருவியின் பேரிரைச்சல் போல ஹோ வென்று காதுக்குள் அபரிதமாக ஒலித்தது. எங்கிருந்தோ மிதந்து வந்த பச்சை தாழம்பூவின் வாசம் கொத்தாக பின்னாலிருந்து என் மண்டைக்குள் இறங்குவதை நான் உணர்ந்து கொண்டிருந்தேன்..
அவன் முகத்தை இருளில் சரியாக கவனிக்க முடியவில்லை அவனிடம் என்ன கேட்பதென்று நான் யோசிக்கும் முன்பே அவனே என்னிடம் மணி என்ன இருக்கும் ? என்று கேட்டுவிட்டான்
கைபேசியை எடுத்து மணி பார்த்தேன்
மணி ஏழு மணிக்கு மேல ஆச்சு என்றேன்
- •ஏழரை மணிக்குள்ள நாம கீழ செக்போஸ்ட் போயிறனும் இல்லேன்னா அங்க கார்டு ஆயிரம் கேள்வி கேட்பான் ••என்றான்
அதுக்குள்ள போயிற முடியுமா ? என்றேன்
- கொஞ்சம் ஸ்பீடா ஆக்ஸிலேட்டரை முறுக்கினா போயி சேர்ந்துடலாம் என்றவன் நீங்க கொஞ்சம் சீக்கிரமாகவே கீழ இறங்கியிருக்கனும். • என்றான்
‘’நான் இரவங்கலார்ல இருக்குற மாமாவீட்டுக்கு பத்திரிகை குடுத்திட்டு அஞ்சரை மணிக்கெல்லாம் கிளம்பிட்டேன் .ஆனா ரோடு ஹைவேவிஸ் வரைக்கும் ஒரே குண்டும் குழியுமாத்தானே இருந்தது.’’ என்றேன்
‘’வெளியூர்க்காரங்கதான் இப்படி நேரம் காலம் தெரியமால் அஞ்சு மணிக்கு மேல கிளம்புவாங்க. உள்ளூர்காரங்க நாலுமணி ஆயிருச்சுன்னா அதுக்கு மேல மேல இப்படி கீழ இறங்கமாட்டாங்கன்னு சொல்லுவாங்க ’’
‘’சரிதான் நான் புதுசு ‘’என்றேன்
‘’நானும் கூட புதுசுதான் இதுக்கு முன்னால இங்க இரண்டு டிரிப்தான் மேல வந்திருக்கிறேன். . தெரிஞ்ச வழி தானே கிளீனர் எதுக்குன்னு அவசரப்பட்டு வண்டியை தனியா எடுத்துட்டு வந்துட்டேன்.
- •கரெக்ட்டா நான் நின்னுட்டிருந்த இடம் வந்தவுடனேயே வண்டி நிண்ணுபோச்சு. அந்த இடத்தை விட்டு ஒரு இஞ்ச் வண்டி மேல ஏறமாட்டேங்குது..நான் ரிவர்ஸ்ல வந்தெல்லாம் ஏறிப்பார்த்துட்டேன். ம்ஹூம் மேல நகர மாட்டேங்குது. கையில செல்போன் வச்சிருக்கேன் ஆனா டவர் அங்க சுத்தமா கிடைக்கலை. நல்லவேளை தெய்வம் மாதிரி நீங்க வந்தீங்க இல்லன்னா நடுக்காட்டுக்குள்ள வண்டிக்குள்ளேயே தான் நைட்பூராம் உக்காந்திருக்கனும் *என்றவன் கொஞ்சம் இடைவெளிவிட்டு…..
**நீங்க ஸ்வெட்டர் போடாம ரொம்ப நடுங்கற மாதிரி தெரியுது ஒத்தக்கடை போயிட்டா அங்க ஒரு டீ கடை இருக்குது .கடை திறந்திருந்தா குளிருக்கு இதமா ஒரு டீ சாப்பிட்டுப்போகலாம் ‘’ என்றான்
சரி என்று தலையாட்டி வைத்தேன். இந்த அடர்ந்த காட்டுக்குள் வாகனப்போக்குவரத்து எதுவுமில்லையானாலும் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்ல முடியவில்லை.எந்த விலங்கு எப்பொழுது குறுக்கே வருமென்று யாருக்கும்தெரியாது. அபரிதமான குளிரில் கைகால்கள் வேறு விறைத்துக்கொண்டே சென்றன. சிறிது நேரத்திற்குப் பின்னால் உட்கார்ந்திருந்தவன் பேச்சைக் குறைத்துக்கொண்டான். ஒரு பேரமைதியின் வாசல் எனக்கு முன்னே திறந்து கொண்டே செல்வது போல் உணர்ந்தேன். ஐந்தாறு வளைவுகளை கடந்த பிறகு சென்டர் கேம்ப்பை தாண்டி விட்டோம். அடுத்ததாக முரடு முரடான கோங்கு மரங்கள் கண்ணில் பட ஆரம்பித்து விட்டன. இந்தப்பகுதி குரங்குகளின் ராஜ்ஜியம் என்றே சொல்லலாம் .பகலெல்லாம் கொத்து கொத்தாக சிங்கவால் குரங்குகள் அங்கேயும் இங்கேயும் தாவித்தாவித்திரியும். தூரத்திலேயே அந்த தகரடீக்கடகு கண்ணில் பட ஆரம்பித்தது. உள்ளே விளக்குகள் ஏதும் எரியவில்லை. . கடை பூட்டியிருந்தது. வியாபாரத்தை முடித்துவிட்டு கடைக்காரர் கிளம்பிவிட்டார் போல தெரிந்தது
‘’அடடா கடையை பூட்டிட்டு கிளம்பிட்டாங்க போல இருக்கு’’ என்றான் அவன் குரலில் ஏமாற்றம் தெரிந்தது.
‘’பரவாயில்லை போகலாம் ‘’ என்றேன்
கடைக்கு முன்னாலிருந்த நாலைந்து இலுப்பை மரங்களில் கருப்புமந்திகள் ஒவ்வொரு கொப்பாக தாவிக்கொண்டிருந்தன. தாவி அம்ர்ந்த அவற்றின் எடை தாங்காமல் ஒவ்வொரு கொப்பும் குலுங்கிஅதிர்ந்தன. இருளுக்குள் மரங்கள் பலமாக தலையை தலையை அசைப்பது இனம் புரியாத பயத்தை தந்தது. ’ ரொம்ப இருட்டிபோச்சு இன்னும் பத்து பெண்டுதான் கீழ இறங்கிறலாம் ஆனால் அதுவரைக்கும் சூதானமாப்போகனும் இல்ல அலபாதாளத்துக்கே போகனும் ‘’ என்றான் கொஞ்சம் பயமுறுத்தும் குரலில்.
ஏன்னே அப்படிச்சொல்றீங்க ?என்றேன்
- • இல்ல காட்டுவிலங்குகள்லாம் ரோட்டுக்கு வர ஆரம்பிச்சிருச்சு போல தெரியுது சீக்கிரம் போயிடறது நல்லது ‘’என்றான்
‘’ இப்பவே இறங்கிடுமா ‘’ என்றேன்
‘’ இறங்கிடுமாவா ? இது தான் காட்டு விலங்குகள்லாம் சுதந்திரமா ரோட்ல நடமாடுற நேரம் பார்த்து போங்க முன்னாடி ஐயப்பன் ஏதும் நின்னாலும் நின்னுகிட்டிருக்கும் ‘’ என்றான் கனத்த குரலில்.
அதைக் கேட்ட நொடியில் எனக்கு கைகால்கள் எல்லாம் கடகடவென்று உதற ஆரம்பித்துவிட்டன..
‘’ஐயப்பன்னா யானையவா சொல்றீங்க ? ‘’என்றேன் மிரட்சியாக.
‘’ஆமா இங்க யாரும் யானையை பேர் சொல்ற பழக்கம் இல்லை. அய்யப்பன்னு தான் சொல்லிக்கிறாங்க ‘’ என்று சொல்லிவிட்டு அவன் வலது கையை பரிச்சயப்பட்டவன் போல என் தோள்மீது வைத்தான். நன்றாக சில்லிட்டுப்போயிருந்த அந்தக் கை பேய்க்கனம் கனத்தது .
என்ன நினைத்தானோ திடீரென்று ரோட்டுக்கு வலது பக்கத்தில் இருந்த அத்துவானப் பள்ளத்தாக்கை காட்டி
- • இந்த இடத்துல தான் நிறைய விபத்துக்கள் நடந்திருக்குன்னு சொல்றாங்க•• என்றான்
என்ன மாயமோ தெரியவில்லை அந்த இடத்தை கடந்ததிலிருந்து வண்டி என் கண்ட்ரோலிலேயே இல்லை . ஏதோ அதன் கட்டுப்பாட்டில் நான் இருப்பது போல தெரிந்தது. பிரமிப்பாகவும் பயமாகவும் இருந்தது. வெள்ளைக்காகிதம் காற்றில் பறப்பது போல நான் பறந்து கொண்டிருந்தேன் நல்ல குளிர் வேறு ஈரம் வேறு சொட்டு சொட்டாக என் உடையில் அப்பிக்கொண்டிருந்தது. அப்படியே ஹாண்டில் பாரை விட்டுவிட்டால் சொர்க்கமே போய்விடலாம் போல தோன்றியது. அவன் வார்த்தைகள் ஏதோ மயக்க ஊசி உடம்புக்குள் இறங்குவது போல எனக்குள் இறங்கிக்கொண்டிருந்தது.
என்ன சொல்கிறான் என்றே எனக்குத் தெரியவில்லை
‘’. நீங்க நம்புவீங்களான்னு தெரியாது இது நான் இன்னைக்குத்தான் டிரைவர்கள் மூலமாலாரி ஆபீஸ்ல கேள்வி பட்டது.
‘’ என்னது ? என்றேன்
‘’போனமாசம் இது நடந்ததாம் கீழேயிருந்து எங்கள மாதிரி டிம்பர் லோடு மேலே டீ எஸ்டேட்டுக்கு ஏத்திட்டு வந்த லாரி.அது. டிரைவர் மட்டும் தான் வண்டியில இருந்திருக்கிறான். என்னாயிப்போச்சு .இதே அடுக்கம்பாறை வளைவுல வந்து வேகமா திருப்பியிருக்கான் .. இரண்டு ஐயப்பன்கள் ரோட்டுக்கு அந்தப்பக்கம் ஒன்னும் இந்தப்பக்கம் ஒன்னுமா எதிர் எதிரா என்னமோ ஆர்ச் மாதிரி நின்னுக்கிட்டு தும்பிக்கையை தூக்கி வச்சிக்கிட்டு பீப்பி வாசிக்கிற மாதிரி போஸ்கொடுத்திருக்குதுக . பையன் பக்கத்துல வந்துதான் பார்த்திருக்கான். பட படப்புல கையும் ஓடல காலும் ஒடல. ஒரு நொடியில வெல வெலத்துப்போயி என்ன செய்யிறது ஏது செய்யிறதுன்னு தெரியமா வண்டிய நேரா விட்டுட்டான் பாருங்க . .பக்கத்துலபோயி இவன்தான் ஸ்டியரிங்க உழட்டுனான்னா இல்லை.
அது ரெண்டும் சேர்ந்து தான் கண்ணாடியை அடிச்சு தள்ளிவிட்ருச்சான்னு தெரியல ••
- • மறு நாள் வந்து பாக்குறாங்க வண்டி ஆயிரம் அடிப்பள்ளத்துல தலைகுப்புறா கவுந்து கிடக்கு. தூக்கி வீசுன வேகத்துல பையன் கழுத்து ஒரு வேங்கை மரக்கொப்புக்குள்ள பூந்துகிட்டு தொங்குது. இந்தா இதே இடம் தான் சொன்னாங்க ‘’ என்று கையை நீட்டி வலது புறம் அதளபாதாளத்தை காட்டினான்.
அவன் காட்டிய திசையில் திரும்பினேன். பள்ளம் மேடு மலை முகடு என எல்லாவற்றையும் வெள்ளைகொசுவலை போல மஞ்சு மேகம் போர்த்தியிருந்தது. மரம் செடி கொடிகள் சோப்பு நுரைக்குமிழ்கள் போல காற்றில் ஆடித்திளைத்துக்கொண்டிருந்தன.
சற்று நேரம் அவன் பேசவேயில்லை. சரிதான் பேச்சை நிறுத்திவிட்டான் என்று தான் நினைத்தேன்.
ஆனால் அவன் பேச்சை நிறுத்துவதாகவேயில்லை..’’ காலையில பார்த்தா காக்கா குருவி கழுகுகள்னு அந்த இடத்தை சுத்தி ஒரே இரைச்சல் .அப்பறம் அவன அங்கேயிருந்து எடுக்குறதுக்கே ரெண்டு நாள் ஆயிருச்சு என்றான்.அவன் பேசப்பேசப் வண்டி பில்லியனில் ஆள் கனம் கூடிக்கொண்டேயிருந்து. வண்டி கொஞ்சம் கொஞ்சமாக உழன்று கொண்டே சென்றது..
ஏதேச்சையாய வண்டி கண்ணாடியில் வழியே பார்க்க பின்சீட் காலியாக இருப்பது போல தோன்றியது இதயம் திக்திக் என்று அடித்தது. பிரமைதான் போல வளைவில் மறுபடியும் திரும்பும் போது மறுபடியும் அவன் பின்சீட்டில் அமர்ந்திருந்தான். கணப்பொழுதில் அவன் புன்னகை கோணலாக மாறியிருந்தது. நான் சந்தேகப்பட்டது சரிதான் அவனுக்கு என் எண்ணம் என்னவென்று புரிபட ஆரம்பித்துவிட்டது போல தெரிந்தது.
என்ன பேச்சைவே காணோம் ? என்றான்
இல்ல நேர்ல பார்த்த மாதிரியே சொல்றீங்களே ! என்றேன்.
- •எல்லாம் அன்னிக்கு அவன் தண்ணியடிச்சாலும் அடிச்சிருந்திருப்பான் அதான் நிதானம் இல்லாமப் போயிருக்கும்
ஓஹோ!
இல்ல வீட்ல பொண்டாட்டி கூட சண்டைஏதும் போட்டுட்டு வந்தானோ என்னவோ?
அவனை நீங்கநேர்லபார்த்திருக்கீங்களா ?
அவன ஆளை நான் பார்த்தது இல்லை என்றான்
பிறகு எப்படி அவன் குடிப்பான்னு உங்களுக்குத் தெரியும் ?
தெரியாம என்ன ஒரு யூகம் தான் டிரைவர் தான
தெரியாம எப்படிச் சொல்றீங்க உங்களை மாதிரி அவனும் ஒரு டிரைவர் தான ? உண்மையிலேயே அவனுக்கு என்ன பிரச்சினையோ யாருக்குத் தெரியும் என்றேன்.
அப்படியா ? என்றான்
ஆமாம் உண்மையிலேயே அன்னிக்கு அவனுக்கு டிரிப்கிடையாது. அவன் அப்பத்தான் கேரளாவுல திருவனந்தபுரத்துக்கு காய்கறி லோடுக்குப் போயிட்டு வந்து சித்த கண்ணசரல அதுக்குள்ள முதலாளி போனப் போட்டு அன்னிக்கு மேல டிரிப்புக்கு போற டிரைவர் புல்லா தண்ணியப்போட்டுட்டு நிதானமில்லாம படுத்திட்டான்.நீதான் போகனும்னு சொல்லிட்டார் தெரியுமா உங்களக்கு ?
அப்படியா ? என்றான்
ஆமா அவன் மகள் சின்னக்குழந்தைக்கு அன்னிக்கு முதல் பர்த்டே தொட்டில்ல தூங்கிகிட்டு இருக்கு கண்விழிச்சா சொல்லிட்டாவது போகலாம்னு நினைச்சான் சொல்லக்கூட விடலை .வா வான்னு கூப்பிட்டு லோடை ஏத்திவிட்டாங்க தெரியுமா உங்களுக்கு ? இரண்டு நாளும் தூக்கம் இல்லாம தூக்ககலக்கத்துலயே வண்டி ஓட்டிட்டுப்போனா என்ன ஆகும்னு தெரியும்ல உங்களுக்கு அப்படியா ? என்றான் குரல் கம்மியிருந்தது.
சரி அன்னிக்கு லோடுக்குப்போகாம குடிச்சிட்டு நிதானம் தப்பி விழுந்துகிடந்த டிரைவர் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா ?
சட்டென்று அவன் பிடி என் தோளில் இறுகியது.
”அது நான் தான் என்றான்.” பிறகு இறந்து போனவன் உங்களுக்கு நல்லாத் தெரியுமா ? என்றான்.
”ஆமா இப்ப நீங்க அவன்கூடத்தான் பேசிக்கிட்டிருக்கீங்க ”என்றேன். அவன் உடம்பு மரண பயத்தில் குலுங்கி அதிர்வது நன்றாகத் தெரிந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக பைக்கின் முன்சீட்டிலிருந்து மறைந்து கொண்டிருந்தேன். பின்னால் உட்கார்ந்திருந்தவனின் கூக்குரலோடு டிரைவர் இல்லாத வண்டி இரவின் அடர்ந்த பாதலாளத்திற்குள் பாய்ந்துகொண்டிருந்தது..
தங்கேஸ்

நட்டநடுநசியை தொட்டுவிட்டது காலம் . உறைந்த நிலையில் அசைவற்றுக் கிடந்த அந்த வீதியில் அவன் ஒரு சருகு போல மெல்ல அசைந்தபடியே வந்தான். ஓசையெழுப்பாமலே இருளில் மூழ்கி கிடந்த அந்த வீட்டிற்கு முன்பு வந்து ஆவலாக நின்றான். வாசலில் இருந்த வேப்பமரம் அவன் வரவை சட்டென உணர்ந்து கொண்டு நெடு நாள் காணா நண்பனை கண்ட மகிழ்ச்சியில் குலுங்கி குலுங்கி தலையசைத்து .. அவன் வாஞ்சையின் மிகுதியில் சிறிய இலைச்சுருள்களை உச்சிமுகர்ந்து கைகளால் நீவிவிட்டான் . அவைகள் மெய் சிலிர்த்து பதிலுக்கு அவன் கன்னத்தை ஆதுரமாய் வருடின. தூரத்திலேயே அவனை அடையாளம் கண்டுகொண்ட சிமி ஒரே ஒருகுரைப்போடு நிறுத்திவிட்டு ஓடிவந்து அவன் புறங்கையை நக்கி விட்டு மூஸ் மூஸ் என்று மூச்சிரைத்தது..வீட்டுக்குள்ளிருந்த கண்ணாடி சன்னல் வழியாக எல்ஈடி குண்டு பல்பின் ஒளிக்கீற்றுகள் கசிந்து வந்து இளமஞ்சள் நிறத்தில் வாசலை நனைத்துக்கொண்டிருந்தன. அந்த நேரத்தில் அந்த ஒளிக்கலவையில் வாஞ்சையாக வாலாட்டிபடி தன்னை சுற்றி வரும் சிமியை பார்ப்பது கள்ளமற்ற தன் ஆன்மாவை பார்ப்பது போல இருந்தது அவனுக்கு .வெகுநேரமாக தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தவனுக்கு சம்பவங்கள் இரயில் பெட்டியாக தடதடத்து நினைவுக்குள் ஓடின. அதை தொடர்ந்து இந்த நினைவுகள் இந்த நிலையிலும் எங்கிருந்து வந்து கொண்டிருக்கிறன என்ற கேள்வியும் மனதில் எழுந்தது. மீண்டும் கேள்வி எழுந்த மனதில் நினைவு வளையங்கள் தற்காலிகமாக அறுந்து சூன்யத்தில் விழுந்த நெடுநேரம் அசைவற்று கிடந்தான்.
மேல் சட்டை போடாத குழந்தையின் வயிற்றை ஆற்றாமையில் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அவள் .பெரியவள் பசியில் அரற்றி அரற்றி அரைமயக்கத்திலேயே துங்கிப்போயிருந்தாள் சின்னவள் மட்டும் வயிற்றை உரிக்கும் பசியை அடக்க முடியாமல்.மோட்டு வளையில் பெரிய எருமை போல சுற்றி சுற்றி வரும் காற்றாடியின் நிழலை வெறித்தபடியே படுக்கையில் கடந்தாள்.
‘’ என்ன செய்யிறதுன்னு யோசிங்க பெரியவங்க வைராக்கியமா பசியை தாங்கிறலாம் ஆனா பிஞ்சு குழந்தைங்க என்ன செய்யும் ‘’ என்றாள் அவள்
ஏன் ரேசன் அரிசி கிடைக்கலியா ? என்றான் அவன்
மொதல்ல பக்கத்து வீடுகள்ள ரேசன் அரிசியையெல்லாம் நம்மளையே வாங்கிக்கிற சொல்லிடுவாங்க நமக்கும் சாப்பாட்டுக்கவலை இல்லாம இருந்துச்சு இப்ப கொரான பஞ்சத்துல எல்லாத்தையும் அவங்க அவங்களே சமைச்சுக்கிறாங்க .யார் பச்சப்புள்ளைங்கன்னு பாவம் பரிதாபம் பார்க்குறது. ?
முதல்ல நீ கேட்டுப்பார்த்தியா ?
நானும் போய் கையேந்தாத குறையா கேட்டுப்பார்த்துட்டேன் .
இதுக்கும் மேல கேட்குறதுக்கும் கேவலமா இருக்கு
‘’ கடவுளே ‘’
பக்கத்து வீட்டு சமையல் வாசனையை மோந்து பாத்துட்டு பச்சைப்புள்ளைக ஏங்கி ஏங்கி அழுவுறாங்க
மனுசனுக்கு சாவும் வரமாட்டேங்குதே என்ன செய்யுறது ?
சாவு வந்துட்டா இந்தப்பிள்ளைகளை யாரு பாக்குறது ?
பிள்ளைங்க பசியால சாவுறத எத்தனை நாள் கண்கொண்டு பார்க்கறது ?
அப்படி பார்த்தா நான் எப்பவோ செத்திருக்கனும்
ஏன் என்னாச்சு புதுசா ?
புள்ளைங்க பசியிலயே செத்துரும் போல இருக்கேன்னு ஆளில்லாத நேரமா பார்த்து நம்ம வழக்கமா சரக்கு வாங்குற மளிகை கடைக்காரன் கிட்ட போய் உண்மையை சொல்லி கொஞ்சம் அரிசி பருப்பு உப்பு புளின்னு மளிகை சாமான்கள் கேட்டேன். கையில காசு இல்லாம கடன் கேட்குறேன்னு தெரிஞ்சதும் உப்பு புளி குடுக்குற சாக்குல கையை தடவி தடவி குடுக்குறான் . மொறைச்சா நீ என்னை கவனிச்சா நானும் உன்னை கவனிச்சிக்கிறேன்னு கூசாம சொல்றான் பாவி.
அத அவன் மூஞ்சியில தூக்கி வீசிட்டு வரவேண்டியது தான?
தூக்கி வீசல அங்கேயே விட்டுட்டு வந்துட்டேன்
ஏங்க நம்ம ஊருக்கே மறுபடியும் திரும்ப போயிர முடியாதா?
நடந்து கூட போறதுன்னாலும் போயிடலாம்
எப்படி முடியும் ? முக்குக்கு முக்குதான் போலிசு நிக்கிறானே.
ஊருலயிருந்து கிளம்பும் போதே அம்மா சொல்லுச்சு “” கஷ்டம்னாலும் நஷ்டம்னாலும் நம்ம ஊருலயே இருடான்னு நீதான் தான் காதுலயே கேட்கல இங்க வந்தா என்னமோ லட்ச லட்சமா சம்பாரிச்சு கொட்டலாம்னு கூப்பிட்டு வந்து இப்படி இழுத்து விட்டுட்ட””
“”தப்பு என் மேலதான். ஆனா கூலி வேலை செஞ்சாலும் ஊருல மதிப்பு மரியாதை இல்ல பட்டணம் போனால் சாதி மதம் பார்க்க மாட்டான் பசியாறி பொழைச்சுக்கலாம்னு ஊருல இருக்கிறவங்கள்லாம் சொன்னாங்க, அதை நம்பி தான் நான் உன்னை நச்சரிச்சு இங்க கூப்பிட்டு வந்தேன் .ஆனா விதி இப்படியாகும்னு யாருக்கு தெரியும் ?”
சம்சாரியா இருந்திருந்தாலும் அரைக்கஞ்சியாவது குடிச்சிருக்கலாம் .கட்டிட வேலை செஞ்சு பெரிய பொழப்பு பொளச்சிக்கலாம்னு கண்டவங்க பேச்சை கேட்டு ஒடி வந்துட்டோம் ஆனா இங்க திரும்புன திசையெல்லாம் பொணக்காடால்ல இருக்கு
அது தான் பழைய கதையாப்போச்சே பட்டினியிலயிருந்து இந்த புள்ளைகளை எப்படி கரையேத்தப்போறோம்னு தெரியலை .
கடவுள் விட்ட வழி
அந்தக்கடவுள இங்க இழுக்காத கடவுள் அப்படினு எல்லாம் இங்க எதுவும் இல்லை
நீ இப்படி மனசு விட்டு பேசக்கூடாது
ஏன் நீங்க உங்க நண்பருகிட்ட கடன் கேட்டு போனீங்களே என்னாச்சு ?
எல்லாருமே கையை விரிச்சுட்டாங்க பாதிப்பேரு ஊருலயே இல்ல தப்பிச்சு போயிட்டாங்க.
சரி முதலாளி என்ன சொன்னாரு ?
மொதலாளி ‘’ நீ அசலுர்க்காரன்னாலும் நல்லா உழைப்பாளி தான் ஆனாலும் வேலை இல்லையேப்பா நான் என்ன செய்யிறதுன்னு ஒரு நூறு ரூபாய் நோட்டை கொடுத்து எப்படியாவது ஊர் போய் சேர்ந்திரு மறுபடியும் என்னை பார்க்க வந்திராதன்னு கராறாக சொல்லிவிட்டார். “”
எல்லாம் உன்னால வந்தது
அதுக்கு நான் இப்ப நான் என்ன செய்ய ? செத்துறவா ?
செத்துட்டா தீர்ந்திடுமா ?
பொம்பளையவே குத்தம் சொல்லாத நீ , நீயும் ஒழுங்கா யோசிச்சு நான் பட்டணத்துக்கு கூப்பிட்ட போதே வேண்டாம்னு சொல்லியிருந்தா நான் என்ன கேக்காமலா போகப்போறேன் ?
எல்லாத்துக்கும் ஆம்பிளை மேலயே பழியை போடுவ .இவ்வளவு பேசுறவ ஒரு வேள சோத்துக்கு உன்னால வழிபண்ண முடியுமா ?
நான் என்ன செய்யனும் சொல்லு ? வேனும்னா என்னை வித்து சோரு தின்னு
எனக்கு ஒரு உதவி செய்றியா நீ ?
‘’சொல்லு ‘’
“”இந்தா நூறு ரூபாய் இந்தா இந்தப்பணத்தை வச்சிக்க நல்ல சமையல் பண்ணி ஒன் கையால ஒரு வாய் சோறு ஊட்டி விடு ஆனா அதோடகதை முடிஞ்சரனும்
விசம் குடிச்சிறலாம்ங்கிறியா ? விசத்தை வாங்குறதுக்கும் காசு வேணுமே நான் என்ன செய்வேன் ?
சொல்லும் போதே ஹோவென்று அழுதுவிட்டான்.
நீ இப்படியெல்லாம் பேசுனா நான் கேட்கும் போதே செத்ருவேன் தெரியுமா என்றாள் அவள்
சாகிறதுக்கும் தான் என்ன வழி இருக்கு சொல்லு ? புள்ளைகளை யார் பார்த்துக்கிறது ?
மறு நாள் சில்லறை வேலை தேடி ஊரை சுற்றியலைந்து விட்டு வெறும் கையோடும் பற்றி எரியும் வயிற்றோடும் மனதில்லாமல் வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு அடுப்பில் சமைத்ததற்கான வாசனை அடித்தது ஆச்சரியமாக இருந்தது.. பிள்ளைகள் வாய் நிறைய சாப்பிட்டிருக்க வேண்டும். நிம்மதியாக துங்கினார்கள். அவனுக்கும் பரிமாறினாள். தேவைக்கும் அதிகமாக முகத்தில் மஞ்சள் பூசியிருந்தாள். பரிமாறும் போது கன்னம் மினுமினுத்தது.
இப்போது கொஞ்சம் உணர்வு பெற்ற பிறகு இவனுக்கு இடம் கால பரிமாணம் பிடிபட்டது. வீட்டுக்குள்ளிருந்து இளமையின் தாள கதியில் மெல்லிய கொலுசொலி சப்தம் விட்டு விட்டு கேட்டது. சாவித்துவாரத்தின் வழியாக எட்டிப்பார்த்தான். இரவின் உருவெடுத்த இரண்டு உடல்கள் ஒன்றை ஒன்று கூடிக்களித்துக்கொண்டிருந்தன .அதில் ஒரு உடல் அவன் மனைவியினுடையது என்று கண்டு கொண்டான். காலம் துரோகத்தின் சாட்சியாய் சுவர் பல்லியாக மாறி மேலிருந்து வெறித்து நோக்கிக் கொண்டிருந்தது. நடு ஹாலில் அவனது உடல் தூக்கில் தொங்கியது திடீரென்று ஞாபகத்திற்குள் வந்தது.
சாவித்துவாரத்திலிருந்து உடனடியாக கண்களை அப்புறப்படுத்திக்கொண்டான் . எந்த உயிராக இருந்தாலும் இழையும் நேரத்தில் இடையூறு செய்யக் கூடாது என்ற ஒரு நினைப்பும் தன்னிச்சையாய் வந்து போனது. தவிரவும் இந்த நேரம் தான் மனிதனுக்கு மனம் செத்துப்போகும் நேரம். . மனம் செத்துப்போனவைகளை இடையூறு செய்வதால் என்ன இலாபம் ? அது சரி மனம் செத்துப்போன தனக்கு ஏன் இவ்வாறு சிந்திக்க வருகிறது என்று மறுபடியும் எண்ணினான். எண்ணியதால் அதலபாதாளத்தில் விழுந்தான்.
பார்வை இருளில் பறிபோயிற்று மீண்டும் நினைவு வந்த போது எங்கேயோ தாழம்பூ மடலவிழும் வாசம் வந்து நாசியை நிறைத்துப்போனது.
வீட்டுக்குள் நுழையும் அவனை எதுவும் இப்பொழுது தடுக்க முடியாது. சர்வசுதந்திரனாக பூட்டிய வீட்டுக்குள். நுழைந்தான் ஹாலில் பச்சை நிற ஜீரோவாட்ஸ் பல்பு எரிந்து கொண்டிருந்தது.சிறிது அறையில் இருந்த பொருட்கள் யாவும் துலக்கம் பெற்றன அவனைத்தவிர. புகைப்படத்தில் கம்பீரமாய் சிரித்துக்கொண்டிருந்த அப்பாவின் மூக்கு கண்ணாடி பளபளத்தது .ஒற்றுமை தேசத்தை வலியுறுத்தும் நம் மகத்தான தலைவரின் கோட்டுப்பாக்கெட்டில் சொருகியிருந்த தங்கப்பேனா உட்பட அனைத்தும் தெளிவாக பார்வைக்கு கிடைத்தன. படுக்கையறையில் குழந்தைகள் நன்கு உண்ட அசதியில் நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தனர். பெரியவளை பார்த்தால் அச்சு அசலாக அவனைப் பார்ப்பது போலவே இருந்தது. இந்த நிலைமை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் நான்காவது படித்துக் கொண்டிருப்பாள். கண்ணீரின் விளிம்பில் குழந்தைகளுக்கு எண்ணற்ற முத்தங்கள் வைத்துவிட்டு அவளை தேடிப்போனான். அவள் மட்டும் தான் தனித்திருந்தாள். நெடு நேரம் நிலைகுத்திப் போன பார்வையோடு சூன்யத்தை வெறித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து எழுந்து போய் அலமாரியை குடைந்து அந்த கத்திரிப்பூ நிறத்தில் வெள்ளை பூக்கள் சிந்திய புதுப் புடவையை மார்போடு அணைத்தபடி எடுத்து வந்தாள். கண்கள் முழுவதும் கண்ணீர் வழிந்த படியே இருந்தது. அவள் அழுவதை பார்த்த அவனுக்கு கோபம் நொடியில் காணாமல் போய் மனது தானாக கனிந்து இளகியது அவன் அருகிலேயே நெடுநேரம்நின்றான். அவன் மட்டும் அவளை இரகசியமாக அழைக்கும் செல்லப்பெயர் சொல்லி அழைத்துப்பார்த்தான். விடிவெள்ளி போல கள்ளமற்று உறக்கும் குழந்தைகளை ஆசைதீர முத்தமிட்டவள் சேலைத்தலைப்பின் ஒரு முனையை கைகளால் முறுக்க ஆரம்பித்தாள் .அப்போது அவளது கண்களில் கண்ணீர் துளிகள் முத்து முத்தாக முளைத்திருந்தன. நீர்க்குமிழ் போல ஒரே ஒரு துளி கண்ணீரை உள்ளங்கையில் ஏந்திக்கொள்ளலாம் போலிருந்தது. சேலையோடு ஹாலுக்கு வந்தவள் வெகுநேரம் புடவையை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தாள். இது போனதிருமணநாளன்று கோவிலுக்கு போய் விட்டு அழகு சக்தி ஜவுளிக்கடையில் அவர்கள் இருவரும் ஒன்றாக சென்று எடுத்து வந்தது.ஞாபகத்திற்கு வந்தது. சிறிது நேரத்தில் சேலையை மார்போடு அணைத்திருந்தவளிடமிருந்து தாங்காத கேவல்கள் பீறிட்டு கிளம்பின.. அவனுக்கு தாங்க முடியாத வேதனை பிறந்தது. அவள் மர ஸ்டுலின் மீது ஏறி நின்று ஹால் மேல்சுவரில் மின்விசிறி பொருத்துவதற்கு பதிக்கப்பட்டிருந்த இரும்பு வளையத்திற்குள் நன்றாக முறுக்கிய சேலைத்தலைப்பின் ஒரு முனையை நுழைத்தாள். மறுமுனையை கழுத்தில் சுற்றிக்கொண்டாள் .அவன் தாவிச் சென்று அவளை அள்ளி அணைத்துக்கொண்டு கேவினான். , இனம் புரியாத தீண்டலில் அவள் உடல் சிலிர்த்து ஆடியபடியே இருந்தது. அவன் எழுப்பிய ஒலிகள் எதுவும் அவளுக்கு எட்டவேயில்லை .. ஈரம் காயாத அவளது மார்பில் அவன் தலை சாய்த்துக்கொண்டான் இளஞ்சூட்டில் அவைகள் விம்மி தணிந்தன.. அதன் பிறகு அவன் அங்கிருந்து தலையை எடுக்கவேயில்லை


அருமை.
நல்ல வடிவமைப்பு.
நிதானமான கனகச்சிதமான கதைகள்.