அரச மரமோ, வேறெந்த மரமோ இல்லாத அந்த  நெரிசலான சந்தில்  பிள்ளையார் கோவில் எப்படி வந்தது என்று யாருக்கும் தெரியாது. அந்தப் பிள்ளையாரை எனக்குப் பல ஆண்டுகளாகப் பழக்கம். அப்போதெல்லாம் அவருக்கு   நான்குபுறமும் பழைய கால கெட்டித் தகரத்தால் மறைக்கப்பட்ட கோவில்தானிருந்தது.   பழங்கால லேயவுட்களில் மூலைகளில் டிவைனர் வைக்கும் வழக்கமோ வாய்ப்போ இல்லை. இந்த நாற்சந்தியில் ஒரு புண்ணீயவான் டிவைனர் வைத்து கட்டடம் கட்டியதில் கொஞ்சம் அதிக இடம் கிடைக்க அங்கே இந்தப் பிள்ளையார் அவதரித்திருந்தார்.

கோவிலுக்கு  மூன்றுபுறமும் சாலைகள். பின்புறம் சாக்கடை இருக்கும். அதையடுத்து ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர். கம்பவுண்ட் சுவருக்கும்  கோவிலுக்கும் இடையே ஒரு ஆள் ஒருகளித்து நடக்குமளவிற்கு ஒரு சந்து இருக்கும். ஒளிந்து கண்டு விளையாடும் போதும், பகை கோஷ்டிமீது கெரில்லா தாக்குதல் நடத்தும் போதும் நாங்கள் அந்த சாக்கடைக்கும் கோவில் தகரத்துக்கும் இடையே இருக்கும் சந்தில்தான் ஒளிந்திருப்[போம்.

கோவிலுக்கு கதவாக இருந்த தகரம் குப்பண்ணன் கடை முன்பு கிடந்தது. அதற்கு கதவு தேவையுமில்லை. கோவிலுக்கு சொத்து என்று எதுவுமில்லை.  ராமாயம்மா தினமும் காலையில் வந்து பிள்ளையாரைக் குளித்து விடுவார். போகிறவர்கள் வருகிறவர்கள் விரும்பும் போது பிள்ளையாருக்கு ஒரு செம்பு நீரைக் கொண்டுவந்து ஊற்றுவார்கள்.

ராமாயம்மா நல்ல உயரம். சிவப்பு. எல்லா உணர்வுகளையும் விழுங்கிச் செரித்தது போல முகத்தில் அப்படியொரு அமைதி குடிகொண்டிருக்கும். எப்போதும் மாறாத புன்னகை. அவர் அதிர்ந்து பேசி யாரும் கேட்டது கிடையாது. சனிக்கிழமை மாலைகளில் தெருவில்  எந்த வீட்டில் குடிகாரக் கணவனுக்கும் மனைவிக்கும் சண்டை வந்தாலும் ராமாயம்மா அங்கே தோன்றிவிடுவார். “கோவிச்சுக்காத கண்ணூ” என்று தனக்கேயுரிய மென்மையான குரலில் கூறுவார்.   கணவன் தலையைச் சொரிந்து கொண்டு நழுவிவிடுவான்.

அவர் காரமடையைச் சேர்ந்தவர் என்பார்கள். இரண்டு பையன்கள், இரண்டு பெண்கள் என்று முழுமையான குடும்பம், நிறைவான வாழ்க்கை என்றாலும் காரமடைத் தேரடித் தெருவைச் சேர்ந்தவர்கள் என்று அவரைப் பற்றிக் கிசுகிசுத்துக் கொள்வார்கள்.

தேரடித் தெருவைச் சேர்ந்தவர் என்பதில் என்ன மரியாதைக் குறைவு என்பது எங்களுக்கு ஒருபோதும் புரிந்ததில்லை. அவரது அழகுக்கும் தேரடித் தெருவுக்கும் என்ன உறவு என்பதும் புரிந்ததில்லை. ஆனால் அவர் புள்ளாருக்கு சேவை செய்வதைப் பார்ப்பதில் ஒரு வசீகரம் இருக்கும். அருகே இருக்கும் உப்புத்தண்ணி பைப்பிலிருந்து நீர் பிடித்து புள்ளாருக்கு ஊற்றுவார். பின்பு தயாராகக் கொண்டு வந்திருந்த செம்பருத்தி மலர்களை பிள்ளையாரின் கையிடுக்கு, கால், தலை என்று எல்லா இடங்களிலும் செருகி விடுவார். பின்பு பட்டை அடித்து விடுவார்.

கோவில் வாசலுக்கு நீர் தெளித்து அழகாக நாலு புள்ளிக் கோலம் போடுவார்.

அவருக்குத் தனது குலம் குறித்துத் தாழ்வு மனப்பான்மை, பக்தி மூலம் அதைச் சரி செய்ய முயல்கிறார் என்று  ஒரு பேச்சு இருந்தது. எது எப்படியிருந்தாலும் கோவிலின் முழுக் கட்டுப்பாடும் ராமாயம்மாவிடமே இருந்தது.

மில்லில் ஷிப்ட் முடிந்து வரும் ஆண்கள் கோவில் முன்பிருக்கும் கல்லில் உட்கார்ந்து ஒரு பீடி பிடித்து விட்டு பிள்ளியாரைப் பார்த்து கன்னத்தில் போட்டுவிட்டுச் செல்வார்கள். எப்போதாவது பிள்ளையாருக்கு சிறப்பான பூசைகள் கிடைக்கும். தோல் வியாபாரத்தில் ஈடூபட்டிருந்த மயிலாத்தம்மா வீட்டு அண்ணன் பத்தாவது பாஸ் செய்த போது 108 தேங்காய் உடைத்தார்கள். தெருவில் எல்லோருக்கும் தேங்காய் பழம், சுண்டல் என்று திமிலோகப்பட்டது. பிறகு வழக்கம் போல  பிள்ளையார் அமைதியாகிவிட்டார்.

அதே போல பிள்ளையாருக்கு திடீர் திடீரென்று பக்தர்கள் கிடைப்பார்கள்.

பிரகதாம்பாள் திடீரென்று பிள்ளையார் பக்தையாகிவிட்டாள். தினமும் காலை ஆறுமணிக்கு வந்து என்னை எழுப்பிவிடுவாள். “கோவிலுக்குப் போகணும், வாடா”

பிரகதாம்பா அக்காவுடன் கோவிலுக்குப் போவது தனி அந்தஸ்த்து. அக்கா வழியில் அருகம் புல் பிடிங்கிக் கொண்டு தண்ணீர் குடத்துடன் வருவாள். நீரை புள்ளார் மீது உற்றிவிட்டு அருகம்புல்லை வைத்து விட்டு உள்ளம் உருக ஏதோ வேண்டுவாள்.

Image

“நீயும் வேண்டிக்கடா”

“என்ன வேண்டறது?”

“அக்கா நல்லாயிருக்கணும்னு வேண்டிக்கடா”

சொல்லவே வேண்டியதில்லை. நாங்கள் எல்லோரும் அக்காவின் நலம் விரும்பிகள் அல்லவா?. பரம ரசிகர்களும் கூட . . .மாலை வேளைகளில் அக்காக்கள் எங்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த இலவம்பஞ்சு மரத்தின் அடியில் கூடுவார்கள். தாவணிகளில் மல்லிகை, முல்லை மலர்கள் இருக்கும். தேவி, ராணீ, மாலைமதி, ராணிமுத்துவில் வந்த கதைகளைப் பேசிக் கொண்டே பூக்கட்டுவார்கள். தொடர்கதைகளில் அடுத்தவாரம் என்ன நடக்கும் என்று ஊகம் செய்வார்கள்.

அப்போது அண்ணன்கள் கேரம்போர்டுடன் பிள்ளையார் முன்னால் வந்து உட்கார்ந்து கொள்வார்கள். அண்ணன்களுக்கு பிரகதாம்பாள் அக்கா மீது தனிக்கவனம் இருக்கும். அது இயல்பானதுதானே. எங்கள் தெருவிலேயே அழகி என்று பெயரெடுத்தவள் அவள். தங்க விக்ரகம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.

ஒருநாள் அம்மாவிடம் கேட்டேன். ‘பிள்ளையார் கிட்ட பிரகதா அக்கா என்ன வேண்டறா?”

“வேறென்ன நல்ல மாப்ள கெடக்கணும்னுதான் இருக்கும்” என்றாள் அம்மா.

பிரகதா திருமணமாகிப் போய்விடுவாள் என்றதும் எனக்கு எங்கோ சுருக்கென்று வலித்தது. அதன் பின்பு பிரகதா அக்கா ஸ்டேன்ஸ் மில்லில் வேலை செய்யும் ஒரு அண்ணனோடு ஓடிவிட்டாள்.

பின்பு கொஞ்சம் வயது வந்த போது சரோஜா காலையில் பிள்ளையார் முன் நிற்பதைக் கண்டேன். இவளும் ஓடப் போகிறாளோ என்று நினைத்துக் கொண்டேன். பிரகதாவுக்குப் பின்பு ஏரியா பியூட்டியாக இருந்தது பர்ஸ்ட் ரேங்க்  சரோஜாதான். சரோஜாவுக்கும் காதல் இருக்குமோ? இந்தப் பெண்ணுக்கும் பிள்ளையார் சீக்கிரம் திருமணம் செய்து வைத்து விடுவாரோ என்று நினைத்ததும் மனம் கலங்கிப் போனது. பின்பு ஒருநாள் வேகாத வெயிலில் கோட், நெக் பேண்ட், ஷூ சகிதம் கன்ஸ்யூமர் கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருந்த போது சரோஜா டெபுடி தாசில்தார் ஜீப்பில் வந்து ஹாய் சொல்லிவிட்டுப் போனாள்.

கேட்டதைக் கொடுப்பவர் பிள்ளையார். பிரகதாம்பாளுக்கு கணவன் என்றாலும், சரோஜாவுக்கு படிப்பு என்றாலும் . . . ஆனால் அவரது தகர கொட்டகை வாசம் மாறாவேயில்லை. அவருக்கு ராமாயம்மாதான். ராமாயம்மாவுக்கு அவர்தான்.

இடையில் பிள்ளையாரின் கோலத்தை மாற்ற ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. இரண்டு குட்டிப் பையன்கள் ஊரில் எல்லாப் பிள்ளையாருக்கும் மரம் இருக்கிறது. நமது பிள்ளையாருக்கு மட்டும்   இல்லை என்று வருந்தி ஒரு மரக்கிளையைக் கொண்டு வந்து சாக்கடை ஓரம் நட்டு வைத்தார்கள்.   மரம் சீக்கிரம் வளர்வதற்காக நினைத்த போதெல்லாம் அதன் மேல் ஒன்றுக்கு அடித்தார்கள். இதைத் தெரிந்து கொண்ட மற்ற குட்டி பக்தர்களும் இதே வேலையில் ஈடுபட எல்லோருக்கும்  விரட்டி விரட்டிக் கிடைத்தது பூசை.

அம்மாக்கள், அப்பாக்கள் கன்னத்தில் போட்டுக் கொண்டு பிள்ளையாரிடம் மன்னிப்புக் கோரினார்கள். அவர் தனது குட்டி நண்பர்களைப் பார்த்துக் கண்ணடித்தது எனக்கு மட்டும் தெரிந்தது.

ஒருநாள் திடீரென்று பிள்ளையாருக்கு பெரும் பந்தல் போடப்பட்டது. வாழை மரம் டியூப் லைட் என்று ஒரே தடபுடல் . . . திமுக பிள்ளையாரச் சுவீகரித்துக் கொண்டது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது.

எங்கள் ஊரில் ஒரே ஒரு மாரியம்மன் கோவில்தானிருந்தது. அதன் முக்கிய பொறுப்புகளில் காங்கிரஸ்காரர்கள் இருந்தனர். திமுகவும், மில்லுக்கார கம்யூனிஸ்ட் அண்ணாக்களும் கோவிலைப் பற்றிக் கவலைப் படவில்லை. அதிமுக வந்ததும் எம்ஜி ஆர் ரசிகர்களான இளைஞர்கள் மாரியம்மன் கோவிலில் உரிமை கோரினர். கம்பத்தின் முன் ஆடுவது உள்ளிட்ட எந்த உரிமையையும் பெரிசுகள் வழங்க மறுத்ததால் கலகம் வெடித்தது.

அதிமுக  தொண்டாமுத்தூர் ரோட்டை ஒட்டிய சாலையை ஆகிரமித்து சக்திமரியம்மன் கோவிலைக் கட்டியது. ஆளுங்கட்சி அல்லவா சக்திமாரியம்மன் ஓஹோவென்று வளர்ந்ததும் திமுக தான் தனிமைப்பட்டுப்போனதாக உணர்ந்தது. அப்போது அதிரடியாக எடுத்த முடிவுதான் இந்த பிள்ளையார் கோவிலைத் தத்தெடுப்பது.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கரைவேட்டிகள் வரிசையாக் அமர்ந்திருப்பார்கள். மோசஸ் கவுண்டர், ஆல்பர்ட், பகுத்தறிவு சண்முகம் என்று பலவிதமான பக்தர்கள் பிள்ளையாருக்கு. பிள்ளையார் திடீரென்று வி ஐ பி அந்தஸ்த்தை அடைந்து விட்டார். அதோடு அம்மன்களும் பிள்ளையாரும் அதீத அரசியல்மயமாகிவிட்டனர். ஒவ்வொரு கோவில் விழாவின் போதும் சாமியை வாழ்த்தி இரண்டு பாட்டுகள் போட்ட பின்பு கோன் ஸ்பீக்கரில் புரட்சித் தலைவரையும், கர்மவீரர் காமராசரையும், கலைஞர் கருணாநிதியையும் வாழ்த்தும் பாடல்கள் காதைப் பிளக்கும்.

அப்போதெல்லாம் பிள்ளையாரோடு ராமாயம்மாவுக்கும் விஜபி அந்தஸ்த்து கிடைக்கும். ராமாயம்மா கட்சி வித்தியாசமெல்லாம் பார்க்கமாட்டார். சாதி மதமும் பிள்ளையாரைப்போலவே அவருக்கும் கிடையாது. பம்பரமாகச் சுழல்வார். காற்றுக் கூட அவரைக் கேட்டுத்தான் அந்த நாட்களில் அசைய முடியும். பிள்ளைகளைப் பாட வைப்பார். ஆட வைப்பார். பக்தைகளை அன்பாக விரட்டி கொழுக்கட்டைகளையும் பொரியையும் கொண்டு வந்து குவிப்பார். திமுக காரர்கள் ஒருவிதமான சிரிப்புடன் அவர் ஏவியபடியெல்லாம் ஓடிக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் பிள்ளையாரின் விஜபி அந்தஸ்த்து நீண்டநாள் நீடிக்கவில்லை. உடன்பிறப்புகள் சண்முகமும், ஆல்பர்ட்டும் அடுத்தடுத்து மரணமடைந்தனர். குண்டு வெடித்தது. மில்கள் மூடப்பட்டன. குடும்பங்கள் கடனில் சிக்கி சின்னாபின்னமாகின. பலர் ஊரை விட்டு சொந்த ஊர்களுக்கு ஓடினர். ஊரே இருளடைந்து போனது. பெரிய மாரியம்மனே கொஞ்ச காலம் இருணடைந்து போய்விட்டது. திரும்பவும் ராமாயம்மாவும் பிள்ளையாரும் பிள்ளையாரும் ராமாயம்மாவும்.

ராமாயம்மா இப்போது உடல் வளைந்து போய்விட்டார். அவரது கணவர் படுத்த படுக்கையாகிவிட்டார். அவருக்கு பணிவிடை செய்ய தனக்கு உடல்வலிமையைத் தா என்பதுதான் தனது வேண்டுதல் என்பார் அவர். குறுகி பாதிஉயரமாகிவிட்டாலும் அதே பெரிய பொட்டு. அதே மஞ்சள் பூசிய முகம். அதே சிரிப்பு . . . . மென்மையான நலம் விசாரிப்பு       இப்போதெல்லாம் கோவிலுக்கு வருபவர்கள் அவரது காலில் விழுந்து கும்பிடுகிறார்கள். அவரும் திருநீறு வழ்ங்குகிறார். குழந்தைகளுக்கு   மிட்டாய் கொடுக்கிறார்.

ராமாயம்மாவுக்கு பூசை செய்ய நேரம் காலம் எல்லாம் கிடையாது. காலையில் கணவருக்கு உணவு ஊட்டி, குளிப்பாட்டி துணியெல்லாம் மாற்றிவிட்டுவிட்டு மெதுவாகத்தான் வருவார். சிலபோது மணி 12 கூட ஆகிவிடும். சிடுசிடுப்புக்காரராக மாறிவிட்ட ராமாயம்மாவின் கணவர் சில போது உணவுத்தட்டைத் தூக்கியடித்துவிடுவாராம்.

“கொஞ்சம் லேட்டானா வினாயகர் பொறுத்துக்குவார். உங்கப்பா பொறுத்துக்குவாரா” என்று என் மனைவியிடம் சொல்லிவிட்டுப் போவார்.

கடந்த பத்து ஆண்டுகளில் எங்கிருந்தோ பலர் வந்து லாலிரோட்டில் வீடுகளை வாங்கினர். கோவிலுக்குப் பின்னால் விவசாயப் பல்களைக் கழகம் ஓரம் வீடு வாங்கியவர் ஒரு ஆசிரியர். அவரது மனைவியும் ஆசிரியர். மகன் அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவர் ஏற்கெனவே இருந்த ஓட்டு வீட்டை இடைத்து மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி வீடாக  மாற்றிக் கட்டினார். முதல் முதலா போர்டு எல்காட் கார் அந்த சந்தில் சென்றது அன்றுதான். அவரது வீட்டை பிள்ளையார் கோவில் மறைத்துக் கொண்டிருந்தது. ஆசிரியர் விவரமானவர். அதைப் பயன்படுத்தி இரண்டடி ரோட்டை ஆகிரமித்துக் கொண்டார். பின்பு எல்லோரும் சாலையில் இரண்டடி முன்னால் வந்து விட்டனர்.

ஆசிரியரும் வில்லுவண்டிக்காரர் பேரனும் தங்கள் கட்டுமானப் பணியில் மீதமான பொருட்களைக் கொண்டு பிள்ளையாருக்கு செங்கல் கட்டடம் கட்டினர். கும்பாபிஷேகம் நடைபெற்றது. மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டது. கிளேஸ்டு டைல்ஸ் சுவர் முழுவதும் பதிக்கப்பட்டு கோவில் கண்ணாடி போல ஜொலிக்கத் தொடங்கியது. பிள்ளையார் கோவில் இருக்கும் வரை சாலையை ஆகிரமித்தவர்களுக்குப் பாதுகாப்பு. அதனால்தான் இந்த வேலை என்ற பேச்சு அடிபட்டது.

விநாயகர் சதுர்த்திக்கு வாத்தியாரும் வில்லுவண்டி வீட்டுக்காரருமே வசூலுக்கு செல்வார்கள். பிள்ளையார் திரும்புவும் தந்து விஐபி அந்தஸ்த்தை அடைந்தார். சென்ற திருவிழாவின் போது ஆசிரியர் அய்யரின் தட்டில் ஐநூறு ரூபாய் போட்டு விட்டு எவ்வளவு திவ்யமான் காட்சி என்று உள்ளம் உருகி நின்றார். பிள்ளையாரால் இனி ஊரில் செல்வம் கொழிக்கப் போகிறது. கோவில் நன்றாக இருந்தால்தான் மக்கள் வாழ்வும் நன்றாக இருக்கும் என்று வந்தவர்கள் சிலாகித்துவிட்டுப் போனார்கள்.

“கோவில்ன்னா அதுக்கான ஆச்சாரத்தோட நடக்கணும். அப்படி நடந்தாத்தான் அது கோவில்” என்று ஆசிரியர் சொன்னதன் பொருள் அப்போது யாருக்கும் விளங்கவில்லை.

மறுநாள் காலை தொடக்கியது சண்டை.

ஆசிரியர் தும்பைப் பூ போல வெள்ளுடை அணிந்து கோவிலுக்கு வந்தார். ராமாயம்மா கோவிலைக் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

“இத பாரும்மா. இனி நீ உள்ள போகக் கூடாது. அய்யர் வெச்சிருக்கு. அவர் பண்ற அலங்காரங்களை கலைக்கக் கூடாது. நீ மட்டுமில்ல யாரும்  போகக் கூடாது” என்றார்.

ராமய்ம்மா கண்டுகொள்ளமல் தன் பணியைச் செய்து கொண்டிருந்தார்.

“பூட்டப் போறம் பாரு” என்றார் ஆசிரியர்.

ராமயம்மாவுக்கு கடுங்கோபம் வந்து விட்டது. ‘நீ யாரு பூட்டறதுக்கு? எஞ்சாமிகிட்ட நான் வேண்டறேன். நான் பூச செய்யறேன். நீ யாரு தடுக்க?”

“நீங்க ஏன் இருக்கற வழகக்த்தை மாத்தறீங்க?” என்றேன் நான்.

“பணக்காரங்களுக்கு மட்டும்தான் சாமியா?” யாரோ முணுமுணுத்தார்கள்.

ஆசிரியர் சங்கடப்பட்டார். ‘சாமிக்கு முன்னாடி எல்லோரும் பிச்சக்காரங்கதான்.” என்றவர் சட்டென்று பிளேட்டை மாற்றினார்.

“குடிகாரன் எல்லாம் உள்ள வர்றான்”

‘குடிகாரனைத் தொரத்துங்க. ராமாயம்மாவ ஏன் தொரத்தறீங்க?”

“கோவில் திறந்து கிடக்கு. மணியக் காணோம். நீங்க பொருப்பேத்துக்கறீங்களா?”

“அய்யரும் தர்மகர்த்தாவும் சாமி சிலையையே திருடறாங்கன்னு பேச்சு இருக்கே?”

“வயசுப்பொண்ணு கோவிலுக்குள்ள வருது, குடிகாரணுக வர்றானுக, அலங்காரத்தக் கலக்கறாங்க. கோவில் கோவில் மாதிரியா இருக்கு. சத்தரம் மாதிரி இருக்கு” வாத்தியார் சத்தமாக முணுமுணுத்தபடி விலகிச் சென்றார்.

அடுத்தவாரம் கோவில் வழியாகச் சென்ற போது ராமாயம்மா கோவிலின் முன்னே நின்று கரம் கூப்பி வேண்டிக் கொண்டிருந்தார். அய்யர் தீபாரதனை தட்டை கல்லில் வைத்து விட்டு அருகே போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் உட்கார்ந்திருந்தார்,

உருவமே தெரியாத மாலை அலங்காரங்கள், பட்டு வேட்டி சகிதம் பிள்ளையார் விநாயகராக மாறிவிட்டதால் யாரையோ பார்ப்பது போலிருந்தது.

ம் சொல்ல என்ன இருக்கிறது.

ஒரு  காவிக் கொடி கோவில் கதவில் செருகப்பட்டிருந்தது. வடமொழி ஓம் போடப்பட்ட கிரில் கதவு பொருத்தப்பட்டிருந்தது.

 

 

 

5 thoughts on “சிறுகதை: பிள்ளையார் – எழுத்தாளர் இரா.முருகவேள்”
  1. மிகச் சாதாரணமான ஒரு வழிபாட்டு உருவம் காலமாற்றத்தின் வேகத்தில் வைதீகமாக்கப்படும் அவலத்தின் பின்புலத்தில் அதுவரை அங்கிருந்த எளியவர்கள் வழிபாட்டு உரிமைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் நிறுவன மயமாக்கப்பட்ட இந்துசமய அதிகாரத்துவத்தை பளிச்சென்று உணர்த்தும் கதை.

    1. பழைய தி.க ‘இலக்கியவாதிகளின்’ கதையை குடியரசிலோ, முரசொலி, நம்நாடு பொங்கல் மலரிலோ இருந்து அப்படியே எடுத்து எழுதியதைப் போல் இருக்கிறது.
      இலக்கியம் ரொம்ப தூரம் முந்தி சென்று கொண்டிருக்கிறது என்பதை கொஞ்சமாவது புரிஞ்சிக்கிங்க.

  2. எங்களது ஊர்ப் பக்கத்தில் இசக்கியம்மனை ஓரங்கட்டிவிட்டு இதே வேலையை செய்தார்கள்.
    ஊளைச்சதை அலங்காரங்கள் ஏதுமின்றி சமஸ்திருதமயமாக்கலை கன கச்சிதமாக சிறுகதை வடிவத்தில் எழுதியுள்ளார்.

  3. சமீபகாலங்களில் பல சிறுகோவில்களுக்கு காவிசாயம் பூசப்படுகிறது சரியான நேரத்தில் சரியான இலக்கிய பதிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *