அரண்மனையெங்கும் பேரிடியாய் ஒலித்தது அப்பேரொலி…

கசாபா,தீக்டஸ்,உள்ளிட்ட போர்வீரர்களும் தளபதி
கரிஸ்தா வும் வேகமாக அதேசமயம்  வரிசையாக விரைந்தார்கள் சத்தம் வந்த திசை நோக்கி.

முதலில் சென்றவள் கரிஸ்தா தான்…

“ஏன் என்னாச்சு”

அரண்மனை வாயிலில்  பணிசெய்துகொண்டிருந்த ஒலியா,மசூம்தர் கூட்டத்திலிருந்த பணியாட்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை…
அங்கே பிரம்மாண்டமான எதிரியொருவன் நம் வாயிலை அடைத்தபடி படுத்துக் கிடக்கிறான்.
அவன் நாக்கு பிளந்திருக்கிறது ,
எனக்கென்னவோ அவன் நம் பணியாட்கள் அனைவரையும் விழுங்கியிருப்பானோ
என்று பயக்கிறேன்.

மூச்சிவிடாமல் பேசிய
திரையனின் தலை சுவற்றில் மோதியதால் சற்று வீங்கியிருந்தது.,

அந்த அரண்மனை முழுவதும் கரிசல்மண்ணால் கட்டப்பட்டிருந்தது.
அங்கே நூற்றுக்கணக்கான அறைகளும்
லட்டக்கணக்கில் போர் வீரர்களும்,பணியாட்களும் இருந்தனர்.
அங்கிருந்த போர்வீர்களுக்கும்,
பணியாட்களுக்கும் பார்வை தெரியாது.
ஆனால் பார்வையிருப்பவர்கள் செய்யும் வேலையைக்
காட்டிலும் தமக்கிட்ட்பணியைச.்செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள்.

அவ்வளவு திறமையாக  அந்த சாம்ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருந்தாள் இராணி சமுத்ரா.

“எனக்கென்னவோ மிகுந்த அச்சமாய் இருக்கிறது இதுவரை நான் இப்படியொரு எதிரியைப் பார்த்த..தி
…ல்லை”.

பயத்தில் நா குழறியது திரையனின் உடனே இருந்த சுபாகு வுக்கு.

யாராக இருக்கும் என எண்ணியபடியே
முன்சென்றாள் அந்த அரண்மனையின் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வந்த படைத்தளபதி கரிஸ்தா.

வழியில் கருத்துப் பெருத்த உடலாய்ப் படுத்திருந்தான் நாகதீரன்.
அவன் நாக்குப் பிளந்து அவ்வப்போது வெளியே நீட்டிக் கொண்டிருந்தான்.

கரிஸ்தா கவனிப்பதைக் கண்டுகொண்ட நாகதீரன் ம்ம்ம்…இன்னும் சற்று நேரத்தில் இந்த அரண்மனையே எனக்குச் சொந்தமாகப் போகிறது எனத் தன் கரகரத்த குரலில் கத்தத் தொடங்கினான்…

Termite Control - Graduate Pest Solutions
தான் இருந்த அறையை விட்டு வெளியே வந்தாள் ராணி சமுத்ரா…
அவளின் பின்னாலேயே
ராஜா வீரசுந்தரன்.

இருவரும் தங்கள் முன்னால் நின்றிருந்த ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்களிடம்…

வீரர்களே…நம் அரண்மனை இப்போது எதிரியின் கூடாரமாக மாறியுள்ளது.

அதற்காக கவலையுறாதீர்கள்.,
எனது கணக்குப் படி காணாமல்போன ஒலியா ,மசூம்தர் கூட்டத்திலிருந்த ஐநூறுக்கும் மேற்பட்ட பணியாட்கள் அத்தனை பேரையும்
நம் எதிரி விழுங்கியிருப்பான் அவர்கள் இப்போது நம்மோடில்லை…

சமுத்ரா சொல்லிக் கொண்டிருந்தபோது கீழே நின்றிருந்த
ஆயிரக்கணக்கான பணியாட்கள்…

ஆ….அய்யோ…
என
அரற்றத் தொடங்கினர்.
ஒப்பாரியின் வாசம் அந்த அரண்மனையெங்கும் வீசத் தொடங்கியது.

அதனை
உடைக்கும் விதமாகப் பேசினாள்
ராணி சமுத்ரா…

“வீரர்களே,பணியாட்களே இப்போதிருக்கும் இந்த நேரம் நமக்கு அழவேண்டிய நேரமல்ல…
அசுரபலத்தோடு
நம் எதிரியை அழிக்க வேண்டிய நேரம் …

இங்கே வந்திருப்பவன்
ஊர்வன வகையைச் சார்ந்த நல்லபாம்பு…

அவன் இனத்திற்கும் நம் இனத்திற்கும் பல்லாயிரம் ஆண்டுகளாகவே பகை இருந்து கொண்டே இருக்கிறது.

இதுவரை நாம் அவர்களைக் கண்டு பயந்து ஒளிந்தோம் அதனால் அவர்களின் இனம் நம்மை உண்டு கொழுத்தார்கள்…

ஆனால் இப்போது அப்படியல்ல…
நாம் எதிர்க்கப் போகிறோம்.

நாம் அனைவரும் ஐசோப்டரா வகையைச் சேர்ந்தவர்கள்…
நாம் சமூகமாக ஒன்றிணைந்து வாழ்கிறோம்…
நமக்கிருக்கும் மிகப்பெரும்பலம் ஒற்றுமை

எதிரியை ஒன்று சேர்ந்து அழிப்போம் …

ஆதிக்கச் சக்திகள் நம்மீது முதலில்வீசும் ஆயுதமே பயம்தான் அதனை ஒழித்தால் நம்மால் சாதிக்க முடியும்…

பயத்தை ஒழிப்போம்….
பாதை வகுப்போம்…

நம்மால் எதுவும் முடியும்,
எல்லாம் முடியும்…வெற்றி நமதே…

விழுந்தால் அது சாதாரணம்,
ஆனால் வென்றால் இது ஒரு இனத்தின் வரலாறு

வெற்றி நமதே…

போருக்கு தயாரா” ???

என்ற கர்ஜித்தது அந்த கரையான் கூட்டத்தின் தலைவியாகிய இராணி சமுத்ரா…

“நாங்கள் தயார் …நாங்கள் தயார் “…

என்ற போர்க்குரல் அந்த அரண்மனையின் சுவர்களில் பட்டுத் தெறித்தது.

ராஜா வீரசுந்தரன்…

“வீரர்களே அரசியின் வாய்மொழிப் படி அனைவரும் செயல்படுவோம் இறுதி வெற்றி நமதே”
…என்றான்.

இராணி கரிஸ்தாவின் காதில் ஏதோ ஒரு இரகசியம் கூறினாள்…

தளபதி கரிஸ்தா

இராணுவ வீரர்களிம்

“வீரர்களே்உங்களில் துணிச்சல்மிகுந்த ஆயிரம் வீரர்கள் அவசரமாய்த்தேவை உடனே முன்வாருங்கள்”

என்றாள்…வேகமாக வந்தவர்களில் நீங்கள் பின்வாசலில் வெளியே சென்று எனக்கு நான் சொல்வதை எடுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டாள்…

வெளியில் சென்றவர்கள் வெகுசீக்கிரமே திரும்பினார்கள்…

அரசியின் திட்டப்படி வெளியிலிருந்த வந்த ஆயுதம் அரண்மனையில் நாகதீரன் படுத்திருந்த அறையிலிருந்து பல நூறு அறைகள்  வரை பதியமிடப்பட்டது.

படுத்திருந்த  நாகதீரன் உடலெங்கும்
பரவத் தொடங்கினார்கள் கரிஸ்தா படையினர்…

அப்போதுதான் உணவெடுத்த களைப்பில் கரையான்களை உண்ணாமலிருந்த நாகதீரன் உங்களுக்கு இவ்வளவு துணிச்சலா என்றபடி உடல்சிலுப்பினான்..

சிலுப்பிய சிலுப்பலில்
சிதறி விழுந்த அனைவரையும் விழுங்கி எங்கே உங்கள் இராணி என்றபடி வேகமாய் அரண்மனைக்குள்  வேகமெடுக்கத் தொடங்கினான்.

சிறிதுதூரம் விரைந்தவன் தன் உடலெங்கும் சிதறி வடியும் குருதி கண்டு திகைத்தான் …

அப்போதுதான் அறிந்துகொண்டான்
இந்தப் பார்வையற்ற கரையான் கூட்டம்
அந்தப் புற்றெங்கும் கரிசல் மண்ணில் கலந்து நெருஞ்சி முள்ளைப் பதியம் போட்டிருந்தது.

ஐயோ இனி நகரும் ஒவ்வொரு அடியும் நம்  உயிருக்கு ஆபத்து என்பதையறிந்த நாகதீரன் வேகமாக  அந்தப் புற்றிலிருந்து வெளியேறத் தொடங்கினான்…

அவன் போதாத நேரம்
அவன் வெளிவரும்போதும் நெருஞ்சியேறத் தொடங்கியது…

சனீஸ்வரரின் பிடியிலிருந்து ...

புற்றிலிருந்து வெளியே வந்த நாகதீரனுக்கு உடலெங்கும் காயங்களிருக்க வெளியே இருந்த எறும்புகள் சிறு சிறு காயங்கள் மீது ஏறத் தொடங்கியது…

அரண்மனையினுள்ளே…

இராணி சமுத்ரா மற்றும் இராஜா வீரசுந்தரன் தளபதி் கரிஸ்தா போர்வீரர்கள்,மற்றும் பணியாட்கள் அத்தனை பேரும்.,

போரில் வீரமரணமுற்ற திரையன் ,மசூமதர்,ஒலியா,சுபாகு உள்ளிட்ட  இரண்டாயிரத்து முப்பத்தாறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தனர்.

இறுதியில்
சமுத்ரா

உறவுகளே…
இந்நேரம் வெளியே சென்ற நாகதீரன் நம் நண்பர்களான எறும்புகளால் தன் அழிவைத் தேடத் தொடங்கியிருப்பான்
ஆனால் நாகதீரனைப் போல நமையழிக்க  இன்னும் பலர் இருக்கிறார்கள்.

“ஒரு இனத்தின் விடுதலைக்கு   எதிராக ஆதிக்க சக்திகள் கையிலெடுக்கும் மிகப் பெரிய ஆயுதம்
அச்சம்.

நாம் அதைஉடைத்தால் அடக்குமுறைக்கு ஆளாக்குவார்கள்…

அதனையும் எதிர்த்தால்இப்போது நாகதீரன் என்னசெய்தானோ அப்படிப் பின்வாங்குவார்கள்…

எனவே,

எதுவரினும்
அச்சம் தவிர்ப்போம்.,
போர்களத்தில் முன்நிற்போம்.,

இங்கே விடுதலை என்பது கேட்டு வாங்கப்படவேண்டிய ஒன்றல்ல…

போராடிப் பெறவேண்டிய
ஒன்று.

அரண்னையெங்கும் ஒலித்தது அரசியின் கர்ஜனை.

மண்ணிற்குள்ளே அந்தச் சிற்றுயிர்கள் நடத்திய போராட்டமோ,
அதுகுறித்த எண்ணங்களோ
மண்ணிற்கு மேலே ஆறறிவோடு அலைந்து திரிந்த எவர்க்கும் கேட்டதாகத் தெரியவேயில்லை…

இங்கே
செம்மறியாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன எப்போதும் இருப்பதைப் போல இயல்பாகவே.

-கார்த்திகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *