சிறுகதை: ஒம்போதுகள் வந்திருக்காக… – மு.ஆனந்தன் ரயிலிலிருந்து இறங்கும்போதே கைரதிக்கு கக்கூஸ் வருவதைப் போன்ற உணர்வுகள் அடிவயிற்றை செல்லமாக அழுத்தியது.  அது அதிகாலை 5.30 மணி.   விழுப்புரம் ரயிலடியிலிருந்து கைரதியும், பிலோமினாவும், சந்தியாவும் வெளியே வந்தார்கள்,   “உடனே ஒரு ஆட்டோவைப் பிடித்து ஏதாவது  ஒரு லாட்ஜ்க்கு போகலாம்” என்றாள் கைரதி. கிடைத்த ஆட்டோவில் ஏறினார்கள். “பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கிற நல்ல லாட்ஜ்க்கு விடுப்பா” என்றார்கள். 

“என்னம்மா கூவாகம் திருவிழாதான்  முடிஞ்சு பல மாசம் ஆயிடுச்சே, இப்ப வரீங்க”  ஆட்டோ டிரைவர் பேச்சு கொடுத்தார். 

“ஏப்பா கூத்தாண்டவரப் பார்க்க மட்டுந்தா நாங்க வரனும்மா, வேற ஜோலியா வரக்கூடாதா?”  சந்தியா கேட்டாள். 

“எப்ப வேணுன்னாலும் வாங்கம்மா,  நாங்கென்ன புதுசாவா அரவாணிகளப் பாக்கறோம். இது அரவாணிக ஊராச்சே”. 

“நல்லா ரூம் கிடைக்குமாப்பா” 

“ஏம்மா கிடைக்காது, கூவாகம் திருவிழா சமயத்துல ஊர் முச்சூடும் அரவாணிகளா திரிவாங்க, எல்லா லாட்ஜ்களிலும் அரவாணிகதான் தங்குவாங்க”. 

ஆமாம், ஆட்டோ ஓட்டுநர் சொல்வது சரிதான். விழுப்புரம்  மக்களுக்கும் விடுதிகளுக்கும் திருநங்கைகள் புதிதா என்ன?. அந்த ஊர் திருநங்கைகளின் உணர் குவி மையம். புரியும்படி தமிழில் சொல்வதென்றால் “சென்சிடீவ் ஏரியா”.  கூவாகம் கூத்தாண்டர் திருவிழாவின் போது ஊர் தன் உதடுகளில் லிப்டிக் பூசி தலையில் கொண்டை வைத்து பூச்சூடி அமர்க்களமாகத் திரியும்.   அனைத்து விடுதிக் கட்டிடங்களும்   திருநங்கைகளின்  மூச்சுக் காற்றால்  வேர்த்துக் கிடக்கும்.  நாடு முழுவதிலிருந்தும் வந்திருக்கும் தினுசு தினுசான திருநங்கைகளால் குறுக்கும் நெடுக்குமான வீதிகள் கைகளை நீட்டி நீட்டி ஒய்யார நடை பயிலும்.   அவர்களை அனுபவிக்க சிற்றின்பச் சிகாமணிகளும் வருவார்கள். அவர்களுக்கும் லாட்ஜ்களின் பரந்த மனம் தன் ரெண்டு கதவுகளையும் பெப்பரப்பேவென திறந்து வைத்திருக்கும்.  “கூவாகம் திருவிழா முடிந்த மறுநாள் ஊர் முச்சூடும் கொட்டுக்கிடக்கும் ஆணுறைகளை வண்டி வச்சு அள்ளோனும்னு” மக்கள் நக்கலடிப்பார்கள். கூவாகம் பலி களத்தில் அரவாண் துண்டாக்கப்படுவதை முதல் நாள் கட்டிய தாலியுடன் கண்ணுறும் அரவாணிகளின் தொண்டைக்குழியிலிருந்து  வெடித்தெழும் அழு குரல்களுக்கு விழுப்புரம் துக்கம் அனுசரிக்கும்.  அந்த அளவுக்கு மக்களின்  மனம் பழகியிருந்தது. எனவே தங்களுக்கு லாட்ஜ் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என்பதை அவர்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை.   

 கைரதியும் அவள் தோழிகளும் மாறிய பாலினர் நலனுக்காக  “அவதார்’ என்ற  அமைப்பை  நடத்தி வருகிறார்கள்.  கைரதி ஆணாக இருந்த போது முதுகலை ஆங்கில இலக்கியம் படித்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகுதான் தன்னை பெண்ணாக உணர்ந்து திருநங்கையாக மாறினாள். சரளமாக ஆங்கிலம் பேசுவாள். பிலோமினாவும் சந்தியாவும் பள்ளிப் படிப்பை உடைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள். பாதிக்கப்பட்ட மாறிய பாலினருக்கு உதவுவது மட்டுமல்ல சமூக அமைப்புகள், கல்லூரிகளுக்குச் சென்று மாறிய பாலினர் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவது அரசு அதிகாரிகளைச் சந்தித்து மாறிய பாலினருக்கான நலத்திட்டங்களை அமல்படுத்துவது பற்றி அழுத்தமளிப்பது என ஆக்கப்பூர்வமாக இயங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் சென்று மாவட்ட ஆட்சியரை சந்திப்பது முக்கிய பணி.  இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியரையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசுவதற்காகத்தான் வந்துள்ளார்கள். 

ரயிலடியிலிருந்து ஆட்டோவில் ஏறியவுடனே சந்தியாவிற்கு பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு  முன்னர் கலந்துகொண்ட கூவாகம் திருவிழாவின் நினைவுகள் ஊறியது. சித்ரா பௌர்ணமியின் அந்த பதினெட்டு நாளும் எவ்வளவு உணர்ச்சிமயம், எத்தனை பரவசம், எத்தனை அழுகை, எத்தன ஏக்கம். முதல் நாள் கோவிலில் மணிக்கணக்காக கால் கடுக்க வரிசையில் நின்று பூசாரி கையால் தாலியைக் கட்டிக்கொண்ட தருணங்களை மறக்க முடியுமா. கூட்டம் லட்சத்தைத் தாண்டும். அன்று அத்தனை பேரும் புது மணப்பெண்கள். எங்கு திரும்பினாலும் கழுத்தில் புதுத்தாலியும் தழையத் தழைய பட்டுப்புடவையும் தலை நிறைய மல்லிகைப் பூவுமாக கிருஷ்ணனின் மோகினி அவதாரங்கள். அனைவருக்கும் அன்று முதலிரவு. இல்லாத அரவாணுடன் நினைவுகளால் முதலிரவில் இணைந்தார்கள். சந்தியாவும் அப்படித்தான் நினைத்தாள். மறுநாள் ஒவ்வொரு தெருவிலும் கற்பூரம் மலை போல் குவித்து எரிக்கப்பட்டது. கூத்தாண்டவர் பாட்டும் கும்மியாட்டமுமாக கூட்டம் நகர்ந்தது. தேரில் அரவாண் போர் வீரனாக  உலா வந்தான். வழி நெடுகிலும் அர்ச்சனை, தீபாராதனை, வழிபாடுகள். கோவில் வரை அரவாண் தலை மட்டுமே வந்தது. அருகில் வந்தவுடன் அருகிலுள்ள நத்தம், தொட்டி, கீரிமேடு ஊர்களிலிருந்து கொண்டு வரப்பட்ட கைகள், கால்கள், மார்புகள் இணைக்கப்பட்டு முழு வடிவ அரவாண் போர்த்தளபதியாக கம்பீரமாக காட்சியளித்தான். 

Kerala unveils India's first Transgender Policy - Goa Chronicle

ஆக்ரோஷமாக புறப்பட்ட அரவாண் முதல் தெருவைக் கடந்ததும் களப்பலி கொடுக்கப்பட்டான்.  பூக்களைப் பிய்த்து பொட்டை அழைத்து அலங்காரங்களை மாய்த்து மோகினிகளின் தொண்டைக்குழியில் பீறிட்டது  ஓலம்.  அழுகையும் ஒப்பாரியும் ஓலமுமாக பந்தலடியிலுள்ள படுகளத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.  புனித கம்பத்தின் அருகில் பூசாரி மோகினிகளின் தாலிகளை அறுவாளால் அறுத்தெறிந்தார்.  பலிசாதம் வாங்க பொதுமக்கள் முண்டியடித்தார்கள். லட்சம் மோகினிகள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்கள். புராணத்தில் பலி கொடுக்கப்படுவதற்கு முன்பு அரவாணும் மோகினியும் அந்த ஓரிரவாவது தாம்பத்ய வாழ்க்கையில் இணைந்தார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் அரவாணிகள் தாலி கட்டிக்கொண்டு முதலிரவுக்கு காத்திருக்கிறார்கள். அந்த ஓரிரவுக்கு மட்டுமாவது அரவாண் வருவாரா?. யோசனை தடைபட்டது.    

பேருந்து நிலையத்திற்கு எதிரே ஒட்டகச்சிவிங்கி போல் வளர்ந்திருந்த   ஒரு விடுதிக்கு முன் ஆட்டோ நின்றது.  ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு  கைரதியின் கால்கள் வேகமாக லாட்ஜ்ஜுக்குள் நுழைந்தன. அடிவயிற்றில் திரண்டிருந்த அழுத்தம் கால்களை வேகப்படுத்தியது.   நைட் ஷிப்ட்டின் விளிம்பை  முகத்தில் வழிய விட்டிருந்த   இளைஞர் முறுவலை வரவேற்பின் அடையாளமாக உதிர்த்தார். “சொல்லிட்டாளே அவ காதல . . .”  அவருடைய செல்போன் உதிர்த்த  காதலின் ஒலிக்கற்றைகள்  அந்தக் காலை நேர  மழலை வெயிலை இனிமையாக்கியது. 

“என்ன சார், காலங்காத்தாலேயே லவ் சாங் தூள் கிளப்புது”  உற்சாகத்துடன் கேட்டாள் பிலோமினா 

“சுப்ரபாதம் கேட்டுக்கேட்டு காதெல்லாம் புளிச்சுப்போச்சு” என்றார் அந்த இளைஞர். 

சிரித்துக்கொண்டே “ரூம் வேணும்” என்றார்கள் 

 “எந்த ரூம் வேணும், எத்தன பேர், எத்தன நாள் தங்குவீங்க” எல்லா கேள்விகளையும் ஒரே மூச்சில் கேட்டுவிட வேண்டும் என்ற முடிவோடு பேசினார்.  வீட்டுக்குத் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டதால் இருக்கலாம்.

“டபுள் ரூம், மூனு பேரு, நாளைக்கு வெக்கேட் செய்திடுவோம்” அதே பாணியில் பதிலளித்தாள் பிலோமினா. 

“டபுள் ரூம் 1,300  ரூபாய், எக்ஸ்ட்ரா பெட் 200 ரூபாய்,  மொத்தம் 1,500. அட்வான்ஸ் 2000 கட்டனும்”. 

மேற்கொண்டு எந்த விவரங்களும் கேட்காமல் லெட்ஜரில் பெயர் முகவரியை எழுதிக்கொடுத்தாள் கைரதி.  ஐ.டி. புரூப் வேண்டுமென்று சொன்ன போது   ஆதார் அட்டையைக் கொடுத்தாள். ஆதார் அட்டையை ஸ்கேணரில்  நகலெடுத்துவிட்டு திருப்பிக்கொடுத்தார். 

“டெபிட் கார்ட்ல பணம் கட்டலாமா”  பர்சலிருந்து டெபிட் கார்டை எடுத்து நீட்டினாள் கைரதி. 

“105 ஆம் ரூம் எடுத்துக்குங்க” என்று சாவியை எடுத்து வரவேற்பு மேசையின் மீது வைத்தார். 

 “ரூமுக்கு போனவுடன் முதலில் டாய்லெட் போகவேண்டும்”  மனதுக்குள் வடை சுட்டுக்கொண்டிருந்தாள் கைரதி. 

அப்போதுதான் வெள்ளை வேட்டி சட்டையும்  நெற்றியில் திருநீறு பட்டையுமாக  ரோஸ் கலர் ரெண்டாயிரம் ரூபாய் தாளைப் போல் பெரும் வரவாய் வந்தார் அவர். அவரை மேனேஜர் என்று அறிமுகப்படுத்தினார் அந்த இளைஞர்.  மேனேஜர் இவர்களை குறு குறுவெனப் பார்த்தார்.  கண் பார்வைகளைப் பிரித்து ஓவ்வொருத்தரையும் தனித்தனியாகப் பகுப்பாய்வு செய்தார்.  “நாங்க திருநங்கைகள்தான்” என்ற வாசகம் இரண்டு இஞ்ச் அளவில் தடித்த வடிவில் அழகி எழத்துருக்களில் சிவப்பு, பச்சை, கருப்பு நிறங்களில் அவர்கள் உடல் முழுவதும் மார்க்கர் பேனாவால் எழுதப்பட்டிருந்தது.  ஆனால் மூன்று பேரும் மூன்று தினுசாக இருந்தார்கள். எல்லோரும் ஒரே மாதிரி இருக்க வேண்டுமென கூத்தாண்டவரின் கட்டளையா என்ன? 

கைரதி சுடிதார் உடுத்தியிருந்தாள்.  மிகையலங்காரங்கள் எதுவும் இல்லை. மிகையலங்காரம் என்ற வார்த்தை சரியா?, நமது கண்களுக்குத்தான் அது மிகையலங்காரம்.  அவர்கள் மனதுக்கு அதுதான்  அலங்காரம்.  பத்து வருடங்களுக்கு முன்பே “நிர்வாணம்”  (ஆண் குறி நீக்கல்) செய்துவிட்டாள். பெண் குரலாக மாற ஸ்பீச் தெரபியும் மார்புகள் வளர ஹார்மோன் தெரபியும் செய்திருந்தாள். குரல் சற்று பெண் குரலுக்கு ஒத்த குரலாக மாறியது. ஆனால் மார்புகள் நினைத்ததுபோல் வளரவில்லை. எத்தனை ஹார்மோன் மாத்திரைகள், வளருவேனா என பிடிவாதம் பிடித்தன. இடது கை புஜத்தில் ஹார்மோன் ஸ்டிரிப் பட்டையை மாதக்கணக்கில் ஒட்டியும் பார்த்தாள்.   எதுவும் அவள் நெஞ்சு மேட்டில் எந்த உயிரியல் மாற்றங்களை நிகழ்த்தவில்லை. மார்புகளுக்கு கொழுப்பை தரக்கூடிய ஆஸ்ட்ரோஜென் செயல்படவில்லையாம்.  இதற்கு மேல் ஹார்மோன் தெரபி செய்தால் கணையமும் சிறுநீரகமும் பாதித்துவிடும் என்று டாக்டர் கைவிரித்துவிட்டார்.  இருக்கும் ஒரே வழி “சிலாஸ்டிக் ப்ரோஸ்தீசிஸ்” மட்டுமே.   சிலிகானும் பிளாஸ்டிக்கும் கலந்த ரப்பர் பலூன்களை பொருத்துவதுதான் அந்த சிகிச்சை. அவரவர் விருப்பத்திற்கேற்ப சிறிதும் பெரிதுமாக மார்பகங்கள் பொருத்திக்கொள்ளலாம். சிலிகான் மார்புகள் என்பது அதன் செல்லப் பெயர்.  அதற்கு லட்சங்கள் செலவு செய்ய எங்கே போவாள். மெச்சிக்கொள்ளும் அளவுக்கு பெரிய மார்புகள் இல்லையென்றாலும் பிலோமினா, சந்தியா போல்  சொல்லிக்கொள்ளும் அளவுக்காவது வராதா என ஏங்கினாள். ஏங்கித் தவித்துதான் ஆகவேண்டும். வேறென்ன செய்ய முடியும்.  நெஞ்சுக்கு மேல் புடைத்திருக்க வேண்டுமென்ற ஆசை நெஞ்சுக் குழிக்குள் ஏக்கமாக அமுங்கிக் கிடந்தது.  புஷ்டியான ஸ்பெஷல் பிரா உள்ளாடைகளை அணிந்து அந்த ஏக்கத்திற்கு சற்றேனும் ஆறுதல் தேடிக்கொள்கிறாள். 

பால்புதுமையினருக்கான சமூகநீதி . . . . . . . . . . . . . . ! - மாற்று

பிலோமினாவின் உருவம்தான் ரொம்பவும் வித்தியாசமானது. உருண்டைத் தலை.  மொட்டை மண்டை. அதில் ஒரு செண்டிமீட்டர் துளிர்த்து நிற்கும் மயிர்ப் படலம். முழங்காலுக்கு கீழ் வரை அசைந்தாடும் பாவாடை. மேலே வட்டக் கழுத்து டி சர்ட்.  உடலைக் குறித்தும் உடையைக் குறித்தும் எந்த கவனமும் இல்லாத உடல் மொழி. சந்தியாதான் நீங்கள் நினைப்பது போன்ற பொதுமை உருவம். நாம் சேலை ஜாக்கெட்டில் பார்த்துப் பழகிய குறுமிளகின் இருட்டைப் போன்ற கருத்த தடித்த உருவம்.  பிதுங்கிய வயிறு. இரவு புறப்படுவதற்கு முன் எழுதிய கண் மசி.   பார்த்தவுடனே  இவர்கள் திருநங்கைகள் என்பதற்கு  ஏதாவது சிரமம்  இருக்குமா என்ன?  அதுவும் விழுப்புரத்தானுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும்.

ரூம் சாவியைக் கொடுக்கத் தயாரான அந்த இளைஞரை சைகையால் நிறுத்தினார் மேனேஜர். வரவேற்பு மேசையின் மேலிருந்த கம்பிவட தொலைபேசியை எடுத்து யாரிடமோ பேசினார். முதலாளியுடனாக இருக்கும். 

“சார் ஒம்போதுங்க  வந்திருக்காக, ரூம் வேணுமாம்”. 

“………………..” 

“சரிங்க சார்” 

“ரூம் இல்ல, வேற இடம் பார்த்துக்குங்க” 

“ஏ இல்லைங்கிறீங்க, எதுக்கு எங்கள ஒப்போதுங்கிறீங்க” கைரதி உணர்ச்சிவசப்பட்டாள். 

“நீங்க ஒம்போதுகதான”

“நா எம்.ஏ. படிச்சிருக்கேன், ஐ ஆம் ஹெய்லிங்  ஃபிரம் ரெஸ்பெக்டபிள் ஃபேமிலி, வி ஆர் டுயிங் சோசியல் சர்வீஸ்”  கோபமாகப் பேசினாள். 

“என்ன படிச்சிருந்தாலும், என்ன வேலை செஞ்சாலும் ஒம்போதுகள ஒம்போதுன்னுதா சொல்லுவாங்க, காலங்காத்தாலயே மண்டைய ஒடைக்காம போங்கம்மா”  இடது புறங்கையால் வாசலைக்காட்டி பேசினார் மேனேஜர். 

 அறை இல்லை என்று மறுத்ததைவிட ‘ஒம்போதுகள்” என்ற வார்த்தையை மெல்ல முடியவில்லை.   வெளியே வந்து நீண்ட நேரமாகியும் கேலியின் வலியும் நிராகரிப்பின் ரணமும் உள்மனதின் சதைகளை கரகரவென  அறுத்துக் கொண்டிருந்தது.

“ஏண்டி பிலோமினா, நாம என்ன படிச்சிருந்தாலும், என்ன இங்கிலீஷ் பேசினாலும் என்ன வேலை செஞ்சாலும்  நமக்கு இருக்கிற அடையாளம் இந்த ஒம்போதுகதான்” என வலியை சிந்தினாள் கைரதி. 

“சரி விடுடி, நாம வேற லாட்ஜ் பார்த்துக்குலாம்” 

அதன் பிறகு அதே வரிசையில் நான்கு விடுதிகளுக்கு போனார்கள். யாரும் அறை தரவில்லை.  வார்த்தைகள் மாறுபட்டன. பதில் என்னமோ ஒன்றாகத்தானிருந்தது.  மத்திய அரசு ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாயெல்லாம் செல்லாது என அறிவித்த போது கையிலிருந்த நாலாயிரம் ரூபாய் பணத்தை மாற்றுவதற்கு  வங்கி வங்கியாக அலைந்தது ஏனோ இப்போது கைரதிக்கு ஞாபகம் வந்தது.  “என்ன ஒரு அலைச்சல், என்ன ஒரு உளைச்சல்”. அதன் பிறகு அதே போல் இப்பவும் அலைச்சல், உளைச்சல்.  “அந்த அலைச்சல் எல்லாத்துக்குமானது, இந்த அலைச்சல் எங்களைப்போல பாவப்பட்ட ஜென்மங்களுக்கு மட்டுந்தா”.  அவள் மனம் சமனடைய மறுக்கிறது. 

கைரதியின் அடிவயிற்று அழுத்தம்  இப்போது “அவசரம்” என்ற இரண்டாம் கட்டத்திற்கு  முன்னேறியிருந்தது.  அவசரத்தை அடக்க ஒரே இடத்தில் நிற்காமல் முன்னேயும் பின்னேயும் கால்களை நகர்த்திக்கொண்டே  இருந்தாள். 

“பெரிய லாட்ஜ்க்கு போலாம்,  அங்க இதெல்லாம் பார்க்க மாட்டாங்க” என்றாள் சந்தியா.  

அதே வரிசையில் சற்று  தள்ளி தனியாக இருந்த ஒரு த்ரி ஸ்டார் ஓட்டலுக்குப் போனார்கள்.  டபுள் ரூம் வாடகை 3000 ரூபாய் ஜி.எஸ்.டி. வரி தனி என கட்டண அட்டை சொல்லியது.  பட்ஜெட் தாங்காது என்றாலும் அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. ஆனால் அவர்கள் நினைத்ததற்கு மாறாக அங்கும் ரூம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். என்ன கொஞ்சம் டீசெண்ட்டாக “ரூம் எதுவும் இப்ப வேகெண்ட் இல்லைங்க” என்றார்கள். அவர்கள் சொன்னது நம்பும்படியாக இல்லை. அதை உண்மையா பொய்யா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்தாள் கைரதி.  வெளியே வந்து விழுப்புரத்திலுள்ள நண்பர் ஒருவருக்கு போன் செய்து விசயத்தைச் சொன்னாள்.  அந்த நண்பர்  அந்த த்ரி ஸ்டார் ஓட்டலுக்கு போன் செய்து “ரூம் இருக்கிறதா”  என்று கேட்டார். அவர்கள் “ரூம்  இருக்கு வாங்க” என்றார்கள்.  கைரதி மீண்டும் அந்த ஓட்டலுக்குச் சென்றாள். 

“உங்களுக்குத்தான் அப்பவே ரூம் இல்லைன்னு சொல்லிட்டமே” என்றார்கள். 

“என் ப்ரண்ட் உங்களுக்கு போன் செய்து கேட்டார், ரூம் இருக்குன்னு சொன்னீங்க” 

என்ன பதில் சொல்வது என சற்று நேரம் தடுமாறினார் சபாரி சூட் உடையில் தன் இளந்தொந்தி வயிற்றை மறைத்திருந்த  அந்த நடுவயதுக்காரர். 

“அந்த ரூமை ஆன் லைன்ல வேற கஸ்டமர் புக் செஞ்சிருக்காங்க, அத கவனிக்காம சொல்லிட்டாங்க” என்று சமாளித்தார்.  

மீண்டும் விரக்தி மொழி பேசி அகலமான அதே வீதியில் அலைந்தார்கள். கைரதியின் அடிவயிற்று அழுத்தம் இப்போது “அவஸ்த்தை” என்ற மூன்றாம் கட்டத்திற்கு முன்னேறியிருந்தது. அடிக்கடி அடிவயிற்றைப் பிடித்து அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.  எங்கே அவளையும் மீறி  வெளியே வந்துவிடுமோ என்ற பதற்றம் ஒட்டிக்கொண்டது. உடனே எங்கேயாவது கக்கூஸ் போக வேண்டும். எப்படிப் போவது?. சுற்றும் முற்றும் கண்களைச் சுழற்றினாள்.   எதிர்புறமிருந்த பேருந்து நிலையத்தில் கண்கள் நிலை குத்தி நின்றன.  பேருந்து நிலையத்தில் கழிப்பிடம் இருக்குமே. அது நாறிக்கிடக்கும்.  இருந்தாலும் பரவாயில்லை, அவசரத்திற்கு அதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்துக் கொண்டு அதை நோக்கி நடந்தாள்.  பாதி தூரம் சென்றவள் நட்ட நடு சாலையில் நின்றாள்.  ஏதோ யோசித்தாள். திரும்பினாள்.  “ஆட்டோக்களும் பேருந்துகளும் சர் சர்ரென்று சென்றன” என்ற வாசகத்தை இங்கு தனியாக எழுத வேண்டுமா என்ன? அதையெல்லாம் உங்கள் திறமைக்கேற்ப நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். 

“ஏண்டி திரும்பி வந்துட்ட”  சந்தியா கேட்டாள். 

“அங்க ஆம்பளங்களுக்கும் பொம்பளங்களுக்கும் தனித்தனியா கக்கூஸ் இருக்கும். நமக்குன்னு தனியா இருக்குமா?. நாம எதுல போறது. நாம ஆம்பளங்க கக்கூஸ்க்கு போக முடியாது. பொம்பளங்க கக்கூஸ்க்கு போனா அவுங்க ஏத்துக்க மாட்டாங்க, நமக்கு ஏண்டி வம்பு, நமக்கு ஏண்டி இந்த நெலம”  அடிவயிற்று அவஸ்த்தையும் மன உளைச்சலும் கைரதியின் வார்த்தைகளில்  வழிந்தது.  நெருப்புருண்டையை விழுங்கியது போல் வயிற்றுக்குள் மல உருண்டை கிடந்து பாடாய் படுத்தியது. 

 ஒரு மணி நேர தேடலுக்குப் பிறகு ஒரு வழியாக ஒரு லாட்ஜ் முதலாளி பெரிய மனதுடன் அறை கொடுக்க முன்வந்தார். அவள் மனதுக்குள் ஒற்றை மாம்பூவின் வாசம் தென்பட்டது.  ஆனால் மூன்று தளங்களில் காலியாக இருந்த   அறைகள்  எதையும் கொடுக்கவில்லை. மொட்டை மாடியில் அஸ்பெட்டாஸ் சீட் போட்டிருந்த சிறிய அறையை காட்டினார் ரூம் பாய்.  எட்டுக்கு எட்டு அளவு.  ஒரு பழைய ஒத்தை இரும்புக் கட்டில்.  பழைய சாமான்கள் போட்டு வைக்கும் அறையாக இருந்திருக்க வேண்டும். வெளியே மொட்டை மாடியில் வடகிழக்கு மூலையில் குத்த வைத்து அமர்ந்திருந்தது ஒரு கழிப்பறை. அதற்கே 1500 ரூபாய் வாடகை என்றார் அந்தப் புண்ணியவான்.  கைரதியின் அடிவயிற்று அழுத்தம் இப்போது “முட்டல்” என்ற உச்ச நிலையை அடைந்ததிருந்தது. இதற்கு மேல் அதை அடக்குவதற்கான எந்த உக்தியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏதாவது கேட்டால் இதுவும் கிடைக்காதோ என்ற பயத்தில் பணத்தைக் கொடுத்துவிட்டு அறைக்கு வந்தார்கள். 

அறையில் பைகளை எறிந்துவிட்டு கழிப்பறைக்கு ஓடினாள் கைரதி. தாழ் கழண்டு கிடந்த கதவைச் சாத்தினாள்.  பெருங்குடலில் முட்டி மோதிக் கொண்டிருந்த மலம் பெரும் சப்தத்துடன் கடகடவென வெளியேறியது. நிராகரிப்பின் வலி மட்டும்  அமைதியாக உள்ளே தங்கிவிட்டது. 

………….

மு.ஆனந்தன்  – [email protected]