கொரோனா ஊரடங்கு  காலத்தில்  தெருவில்  உற்சாகக் கூச்சலாக இருக்கிறதே  என்று நானும் ,மனைவியும்  வெளியே  வந்து  பார்த்தோம். நண்பகல் வெயில்  வழக்கத்தை விட வீரியம்  இழந்து  காய்ந்தது. இன்று அமாவாசை. கங்கண  சூரியகிரகணம். முகக்கவசம் அணிந்த  விடலைகள்  கறுப்புக் கண்ணாடி  அணிந்து  முகத்தில் இருபுறமும்  கைகளால் ஒளி மறைப்புக் காட்டி பார்வையை  வானத்தில்  குவித்துப்   பார்த்திருந்தனர்.  முக்கால் வட்டம்   கருப்பாகவும்  கால்வட்டம்  சூரியப் பிறையைப் போல் ஒளிர்வதாகச் சொல்லிக் குதூகலித்தனர். முழுச் சூரியனைக்  கால் வட்டத்தில் பார்ப்பது  புதிய அனுபவம் தான்.!                               

சில விடலைகளிடம்  முகக்கவசமும் இல்லை . கறுப்புக் கண்ணாடியும்  இல்லை .அவர்களால்  வெற்றுக் கண்களால்  சூரியனின்  மாறுபட்ட கோலத்தைப்  பார்க்க இயலாவிட்டாலும்  உற்சாகத்தில்  குதித்தார்கள் கிரகண ஒளி .கண்ணை பாதிக்கும் ,மனித நெருக்கம்  கொரோனா  தொற்றும் என்ற அச்சமில்லை. சமுகத்தடைகளை  மீறுவதே  கொண்டாட்டமாக உணர்கிறார்களே .                                     

“இங்க பாருங்க  கொஞ்சம்கூட  தொற்று பயமில்லாமல் முகக் கவசமோ ,கறுப்புக் கண்ணாடியோ இல்லாமல்  குதியாட்டம்  போடுறாங்க . அவுங்க  எச்சிலோ  மூச்சுக் காத்தோ  நம்ம மேலப் பட்டுறப்போகுது . வாங்க டிவியில பார்த்துக்கலாம்.” என்று  மனைவி என்னை  உள்ளே இழுத்தாள் . மகிழ்ச்சியோடு  இருப்பவர்களைப் பார்த்தால்  அந்த  மகிழ்ச்சி நம்மையும் தொற்றும்  என்பதை  உயிர்ப்பயம்   உணர மறுக்கிறது   . 

டிவியிலும்  சூரியகிரகணத் தோற்றங்களைக் காட்டிக்  கொண்டிருந்தார்கள் .கீழே நகரும் எழுத்துகளில்  மாவட்ட வாரியாக கொரோனா தொற்று, உயிர்ப்பலி  விவரங்கள்  மனதை உறுத்தியது.  கொரோனா கிரகணம்  எப்போது  விலகும்  என்று பெருமூச்சு வெளிவந்தது.

பக்கத்துக்கு  வீட்டில்  கா..கா.. என்று  கத்தும்  சத்தம்  கேட்டது. அம்மாவின்  குரலைத்  தொடர்ந்து  பிள்ளைகள்  பெருங்குரல் எழுப்பி கா..கா.. என்று கத்தினார்கள்.  யாராவது  ஒருத்தர் காக்காவைக் கூப்பிடுங்க. இப்படி காட்டுக்கத்து  கத்தினா  வர்ற காக்கையும்  பயந்து வராமப் போயிரும். அப்புறம்  சாப்பிட  நேரமாகும்  “ என்ற குரலைத் தொடர்ந்து பிள்ளைகள்  சத்தம் இல்லை. அந்த அம்மாவின் குரலே கேட்டது. சில காக்கைகளின்  கரைதலும்  கேட்டது.

எனக்கு சிரிப்பு வந்தது. அடக்கிப் பார்த்தேன். சிரிப்புச்சத்தம்  அடங்கினாலும் கண்ணில் பொங்கிய கண்ணீர்  அடங்கவில்லை. மனைவி  என்னை உற்றுப் பார்த்தாள் . என்னஙக  தானாச்  சிரிக்கிறீங்க ? என்கிட்டே சொல்லிட்டு சிரிங்க . நானும் சிரிப்பேனில்ல . “                             “ ஒண்ணுமில்லை”                                                    

“ ஒண்ணுமில்லாததுக்கு  யாராச்சம் சிரிப்பாங்களா? பிள்ளைக  ரெண்டு பேரையும்  ஆளுக்கொரு திசையில தவிக்கவிட்டுட்டு நாம ரெண்டுபேரும் மட்டும் வீட்டுக்குள்ள  அடைஞ்சு கிடக்கோம் .நாமலாவது  நல்லதை பொல்லதை  பகிர்ந்துக்கிறலாமில்ல  , அமாவாசை  அன்னைக்கு  தானாச்  சிரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்?  தெரியுமில்லை.” 

“ அட  ,இதுக்கு  இவ்வளவு கோவமா ? சொல்லியிறேன் தாயி “

“ நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோது  எங்க வீட்டிலும் அமாவாசை விரதம்  பாட்டி பிடிக்கும். ஒரு அமாவாசை அன்னிக்கு பாட்டி  விரதம்  விடறதுக்காக  தாத்தா போட்டோ முன்னால படையல் போட்டு சாம்பிராணி புகைபோட்டு  கற்பூரம் காட்டிவிட்டு  ஒரு சிறு இலையில் அன்னைக்கு சமைச்ச பருப்புச்சோறு  ,வடை ,பாயசம்  உட்பட ஒரு இலையில்  எடுத்துக் கொண்டு  கொல்லைப்புறத்தில் சுவற்றின் மேல தண்ணீர் தெளிச்சு  வைத்துவிட்டு  கா..கான்னு  கூப்பிட்டது. நானும் ,தங்கச்சியும்    கத்தினோம் . ஒரு காக்கா  வாயில் கவ்விய  எலியோடு  பறந்து வந்து  மரத்தில் அமர்ந்து  நோட்டம்  பார்த்தது. படையல் சோறு  வச்சுதான்  கூபிடறாங்கனு  தெரிஞ்சதும் வாயில் கவ்விய  எலியை கீழே போட்டுவிட்டு  காக்கா,  கா..கான்னு  கரைந்து  மற்ற காக்கைகளை   அழைக்கப் பறந்தது. காக்கா  போட்ட   எலி  பாட்டியின்  காலின் மேலே  விழுந்தது . பாட்டிக்கு  கோபம் கொப்பளித்தது.                                                                    “பார்த்தியா  அந்தக் கிழவனுக்கு  செத்தபின்னும்  திமிரு  அடங்கலை. நாறுன எலியைக் கவ்விக்கிட்டு வந்து மனுசி மேல போடுது . என்று  புலம்பியபடிக் காலைக்  கழுவியது பாட்டியின் முகம்  சுட்ட கத்தரிக்காய் போல் சுருங்கியிருந்தது.

“ஏன் பாட்டி  காக்காவை  திட்டாமா தாத்தாவைத்  திட்டறே ?” 

“ உங்க தாத்தன் தானே காக்காவா  வந்திருக்காரு. அமாவாசை தவறாம பாட்டன் பூட்டனோடு  வர்ரவகளுக்கு  இன்னைக்கு  கவிச்சியை தொடக்                  கூடாதுன்னு  அறிவு வேண்டாம், அழுகின எலியைக் கவ்வியாந்து  மனுசி மேலப் போட்டா  அது திமிரு தானே.?”

இதுக்கு மேல கேள்வி கேட்டா  ,என்னடா  கேள்வி கேட்டு  முகத்தை சுத்துற  குளவியாட்டம்  நச்சரிக்கிறன்னு   வையும். என்று  நடப்பதை  பார்த்துகிட்டே  இருந்தேன். பறந்து போன காக்கா  ஐந்தாறு  காக்காகளோடு  வந்தது. வைத்த  படையலைக் கொறித்தன. அதுக தின்கிறதை  சத்தம் போட்டு விரட்டி விட்டுறாதிங்கடா  என்று எங்களை வீட்டுக்குள் விரட்டிய  பாட்டி  அவை தின்பதை பயபக்தியோடு  பார்த்துக் கொண்டிருந்தது. எங்களுக்கு  பசி. பருப்பு நெய் , பால்பாயச மணமும் பசியைக்  கூடுதலாகக்  கிளறி விட்டது.                                                      

“ பசிச்ச பிள்ளைகளை திங்கவிடாம  உங்க அம்மா செய்யிறதைப்  பாருங்க . “ என்றபடி  அம்மா  ஆளுக்கொரு  அப்பளத்தை எடுத்துக் கொடுத்து  முன்வாசல் பக்கம் நின்னு,  தின்னுட்டு வாங்க  என்றது. 

“சரி விடு , மாசத்துகொரு நாள். அதுவும்  பிள்ளைகளுக்கு லீவுநாளில் தானே பிரச்சினை. அந்தம்மாவின்  நம்பிக்கையில்  நமக்கு பாதகமில்லை. அந்தம்மா காக்காவுக்கு சோறு வைக்கிறதினால  நம்ம குடும்பம் நல்லா இருக்குமுன்னு நம்புது .அதை  ஏன் நாம தடுக்கணும். இனிமேல் அமாவாசை விரத நாள்களில்  ஒருமணிக்குள்ளே சமையலை முடிச்சிடு. .காக்கா படையலும்  சீக்கிரம் முடிஞ்சிருமில்ல.” அப்பா  சொல்லவும்  “,ஆமா, அம்மாவை  விட்டுக் குடுக்க மாட்டீங்களே.” என்று  அம்மா  கழுத்தைத்  திருப்பிக் கொண்டு கொல்லை  பக்கம் போனது. 

காகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் || food Give to crow

“சரி, நான்  கேட்கிறேன் , அமாவாசை  அன்னக்கி  காக்காவுக்கு சோறு வச்சா  நம்ம முன்னோர்கள் வந்து சாப்பிடுவாங்களா , இதை  நீங்க நம்புறீங்களா? “

‘ அந்தக் காலத்தில் ,கலங்கரை விளக்குகள்  இல்லாத சமயம். காக்கா கடலில்  பறக்கிறதை பார்த்து , கரையும்  நாடும் அருகில் இருக்கிறது என்று  காக்கா பறக்கும் திசையில் கப்பலையோ ,படகையோ கடலோடி கள்  செலுத்துவார்களாம் . ஊருவிட்டு ஊரு,நாடுவிட்டு நாடு வாழ்ற மனுசங்களுக்கு  காக்கா உறவுப் பாலமாக நம்பப்பட்டது. .இப்பவும்  சமீபகாலம் வரையில் காக்கா ஒரு வீட்டுக் கூரையில் உட்கார்ந்து  கத்தினால் அந்த வீட்டுக்கு உறவுக்காரங்களோ  முக்கிய ,கடிதமோ வருமுன்னு  நம்பிக்கை. அதனால  காக்காவை  உறவின் அடையாளமா  வச்சிருக்கோம்.ஆனால்  செத்தவங்க  எல்லாம்  காக்காவா  வந்தாக்கா  நாட்டிலே மத்த பறவைகளை விட  காக்காவோட  எண்ணிக்கை தான் அதிகமா  இருக்கும். மனிதர்கள்  காக்காவை  வளர்ப்பதில்லை ஆனாலும்  மனிதர்களை அண்டி வாழற பறவை .கூட்டத்தோடு  தின்னும். கூட்டத்தில்  எந்தப் பறவைக்கும்  பாதிப்பு என்றால்  கூட்டமாகப் போய்க் குரல் கொடுக்கும். வெளியூர் சென்ற  உறவுக்காரர்களின் வரவை முன் சொல்லுகிறது  என்ற நம்பிக்கையில்   அதை  உறவின் தூதுவனாக  மதிச்சாங்க. கடல்கடந்தும் ,நாடுகடந்தும் பிழைப்புக்காக  விலகித்  தொடர்பில் இல்லாத  உறவை நினைத்தும் காக்காவுக்கு சோறு வைக்கும் வழக்கம்  உருவாகி விட்டது .”

“சரி, இந்த சோறு வைக்கிற  விஷயத்துக்காக  அப்படி  சிரிச்சீங்க.”

“கதை  இன்னும்  முடியலை  .  பாட்டி  வச்ச சோறை எல்லாம் காக்கைகள்  தின்னுட்டு போனதுக்கப்புறம்  மறுபடியும்   குளிச்சிட்டு   வந்துதான் பாட்டி விரதம் விட்டது. அன்னக்கி  நாங்க  சாப்பிட மூணு மணியாயிருச்சு. இந்த  பாழாய்ப்போன காக்கானால  எம்பிள்ளகளை பசியில தவிக்க வச்சிட்டேன்  என்று பாட்டி  மன்னிப்புக்  கோரும் தொனியில்   எங்களளது  முகவாயைப் பிடித்துக் கொஞ்சியது. சாயந்திரம் கொல்லையில்  விளையாடும்போது  பார்த்தோம் ,அந்தக் காக்கா கொண்டு வந்து போட்ட  செத்த எலி அங்கே இல்லை. அது எடுத்திட்டு போயிருக்கும் போல, அந்த இடத்தில்  ஐந்தாறு  எறும்புகள்  மட்டுமே ஊர்ந்தன. பாட்டியிடம்  சொன்னேன் , அந்த  சனியனைப் பத்தி பேசாதே  என்று வெடுக்கென்று பாட்டி பதில்  சொன்னது. பாட்டியின்  கோபத்தைப்  பார்த்தால் இனி வரும்  அமாவாசைகளுக்கு  காக்காய்க்கு  சோறு வைக்காது போல் இருக்கிறது.. நாம இனி  விரதச் சாப்பாடு  தாமதமில்லாமல்  சாப்பிடலாம்  என்று  தங்கச்சி கிட்ட சொல்லவும்  இருவரும்  சந்தோசத்தில்  குதித்தோம் . 

அடுத்த அமாவாசைக்கான வடை,அப்பளம்,பாயச  நினைப்பில்  வாயில் நீர் ஊறியது. காத்திருந்த  அமாவாசையும்  வந்தது. பிதாமகர்  ,மாதாமகர்   முதலான முதாதையர்கள்  படங்களின்  முன் படையல் தளுகை இலைகள் விரித்து  பலகாரங்கள் பரிமாறப்பட்டன .நானும் ,தங்கையும் வாயில் உமிழ்நீர் ஊற்றெடுப்பதைக்  கட்டுப்படுத்தி  சாமி கும்பிடுவது போல்  கைகூப்பி நின்றோம். அம்மா அகல்விளக்கேற்றியது. பாட்டி சாம்பிராணி, கற்பூர  தூப தீபம் காட்டியது .நீர் விளாவிய பின் ஒரு சிறு இலையில் படையல் இலையிலிருந்து  பலகாரங்கள் ,பருப்புச்சோறு ,, பாயசம்  என்று கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு  ,தம்பி வாடா காக்காய்க்கு  வச்சிட்டு  வந்துருவோம்  என்று  சொல்லிக்கொண்டே  கொல்லைப்புறம் நோக்கிப் போனது  , அம்மாவையும் அப்பாவையும் பார்த்தோம் .மௌனமாக  இருந்தனர். தங்கையும் நானும் ஆளுக்கொரு அப்பளம் ,வடையை எடுத்துக் கொண்டு  முன்வாசல் பக்கம் ஓடினோம். நம்ம  தலைமுறையில்  அமாவாசை  விரதமெல்லாம்  நினைக்க நேரமில்லாம , வேலை வேலைன்னு பறந்துகிட்டிருக்கோம்.இன்னைக்கு  எலெக்ட்ரானிக் உலகத்தில்  காக்கா ,குருவிகளும் அருகிப் போச்சு . .பிறரைத்   தின்னச்செய்து   நாம்  தின்போம்  என்ற குணமும் குறைஞ்சுப் போச்சு. சரி , கதை  அவ்வளவுதான்.  பசிக்குது ,சாப்பாடு  வை. சாப்பிடுவோம் “ 

“ நீங்களும்  அமாவாசைன்னு  நினைவில்லாம ,காய்கறிக்கு பதிலா  முட்டையை வாங்கிட்டு வந்தீட்டிக . நானும் காலையிலே  மறதியா முட்டைக் குழம்பு வச்சிட்டேன். இன்னைக்கு  அசைவம்  சாப்பிடுவீங்களா..?”

“கொரோனா அடைப்பில ,நாளு  கிழமை எங்கே ஞாபகம் வருது ?. இன்னைக்கும்  யாரும் காய்கறி கொண்டு வரல. ஒரே  கெடுபிடி. கடைவீதியே வெறிச்சோடிக் கிடக்கு. திறந்திருந்த  கடையிலே  கிடைச்சதை  வாங்கிட்டு வந்தேன். வச்ச முட்டைக் குழம்பைக் கொண்டு வா. வயித்துக்கு தெரியுமா  அமாவாசை ,பாட்டிமைன்னு ? உயிர் தங்க  வயிறு நிறைஞ்சா சரி..”

2 thoughts on “சிறுகதை: அமாவாசை – ஜனநேசன்”
  1. சிறுகதை சிறியதாகவும் நேர்த்தியுடனும் நன்றாக இருந்தது.  வாழ்த்துக்கள் ஜனநேசன்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *