1

பிரியதர்ஷனா (PRIYADHARSHANA) [ கி.பி. 1999 – ……] 

அந்த ஹோட்டலின் எட்டாவது மாடியிலிருந்த, அடர்த்திக் குறைவான, கண்ணை உறுத்தாத வெளிச்சம் சூழ்ந்திருந்த ஓர் அறையின் மெத்தையில் ‘பிரியதர்ஷனா’ தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த போது வருடம் கி.பி. 2030. நேரம், முதல் நாளின் முடிவிற்கும் அடுத்த நாளின் தொடக்கத்திற்கும் இடையேயான நேரம். அது ஒரு குளிர்ந்த இரவு. இடம், ஆப்பிரிக்காவின் சோமாலியா. அவளுடைய ஜூனியர்கள் நிக்கோலஸ், எட்வின் மற்றும் கரீம் மூவருக்கும் ஐந்தாம் மாடியில் அறை ஒதுக்கியிருந்தார்கள். இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி புரண்டு கொண்டிருப்பது என்ற சலிப்பில் தர்ஷனா எழுந்து உட்கார்ந்தாள். மிகவும் அழகானவர்கள் மட்டுமே இருக்கும் ஒரு தேசம் பூமியில் படைக்கப்பட்டிருந்தால், தாராளமாக இவளை அந்த நாட்டின் ‘இளவரசி’ என ஏற்றுக் கொள்ளலாம்.

மெத்தையிலிருந்து இறங்கி, லேசாக கீழே இறங்கியிருந்த தன் பெர்முடாசை மேலே ஏற்றி சரி செய்தவாறே, மூடியிருந்தக் கண்ணாடி ஜன்னலை நோக்கி நகர்ந்தாள். அந்த ஜன்னலுக்கு நேர் அருகே ஒரு சிறிய டிஜிட்டல் திரையில் ‘OPEN’ என பச்சை நிறத்திலும் ‘CLOSE’ என சிவப்பு நிறத்திலும் மின்னிக் கொண்டிருந்தது. தர்ஷனா அதில் பச்சை நிறத்தைத் தொட்டதும் ஜன்னல் எந்த சத்தமுமில்லாமல் அழகாக எண்ணெயில் வழுக்கிக் கொண்டு போவதைப் போல திறந்து கொண்டது. மறு விநாடியே வெளியிலிருந்து வந்த குளிர்ந்த காற்று ஜில்லென்று அவள் முகத்தில் பரவி, பின் அவளை சிலிர்க்க வைத்தது. லேசாக புன்னகைத்துக் கொண்டாள். அவள் கழுத்தில், காற்றில் அசைந்து கொடுக்கக்கூடிய ஒரு மெல்லிய நெக்லஸ் அழகாக குடிகொண்டிருந்தது. அந்த தருணத்தில் அவள், “மனிதர்கள் தங்கள் இரவுகளின் அழகினை தூக்கத்தினால் இழக்கிறார்கள்” என நினைத்துக் கொண்டாள். கீழே ஊர்ந்து கொண்டிருக்கும் வாகனங்கள் அவற்றின் விளக்கொளிகளில் துல்லியமாகத் தெரிந்தன.  எதிரே, நாளை அவள் தன் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பிக்கப் போகிற கட்டிடம், அங்கிருந்த மற்ற கட்டிடங்களின் கூட்டங்களுக்கிடையில், அவற்றை விட கொஞ்சம் பெரியதாக, மின்னொளியில் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது. அவளின் வாழ்வில் நாளை ஒரு முக்கியமான நாள். தன்னுடைய ஐந்து வருட கடுமையான மருத்துவ ஆராய்ச்சியைப் பற்றியும் அந்த ஆய்வின் முடிவுகளையும் நாளை அவள் இங்கு சமர்பிக்க இருக்கிறாள்.

**************************************************************************

2019-20 ல் உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி 4 லட்சத்திற்கும் அதிகமான மனித உயிர்களைப் பலி கொண்ட COVID-19 என்று சொல்லக்கூடிய கொரோனா வைரஸ் சொல்லிக்கொடுத்தப் பாடத்திற்குப் பிறகு உலகம் விழித்துக் கொண்டது. கிட்டத்தட்ட வைரஸ் பரவிய ஒரு வருடமாக மருத்துவ உலகம் அதற்கு மருந்து கண்டுபிடிக்காமல்தான் இருந்தது. விளைவு, லட்சக்கணக்கான மனித உயிர்களின் இழப்பு. அதன் பிறகு உலகம் முழுவதுமிருந்த பல அறிவியல் விஞ்ஞானிகள், மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்களின் ஒருமித்தக் குரலுக்குப் பிறகு, 2022 ல் World organization of scientific research and innovation (WOSRI) என்ற ஒரு அமைப்பு, உலகளவில் அறிவியல் ஆராய்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் மக்களிடம் நேரடியாக கொண்டு போய் சேர்ப்பதற்காகவும் அதற்கான அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிப்பதற்காகவும் அத்தகைய அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு நிதியளிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது. இதுவரை, அது ஆரம்பிக்கப்பட்ட 8 வருடங்களில் 5 கண்டுபிடிப்புகளை மக்களிடம் நேரிடையாக கொண்டு சேர்த்துள்ளது. இதில் மிக முக்கியமான விஷயம், இவற்றில் மருத்துவம் சார்ந்த  கண்டுபிடிப்புகள் மக்களிடம் குறைந்த விலையில் சென்று சேர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு, அதைக் கண்டுபிடித்தவர்கள் தங்கள் காப்புரிமையை விட்டுத் தர வேண்டும். இந்த 5 கண்டுபிடிப்புகளில் இதுவரை அந்த மாதிரியான நிகழ்வு எதுவும் நடக்கவில்லை. இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதற்குப் பின்பு உலக அளவில் மருத்துவத் துறையில் நடைபெறும் ஊழல் என்பது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. அந்த WOSRI-ன் தலைமைச் செயலகம்தான் தர்ஷனா தங்கியிருந்த ஹோட்டலுக்கு எதிரே இப்போது ஜொலித்துக் கொண்டிருந்த அந்தப் பெரிய கட்டிடம்.

Covid-19 Changed How the World Does Science, Together - The New ...

தர்ஷனா, ஒரு துடிப்பான இளம்பெண். 31 வயதில் பெண்கள் மிக அழகாக இருப்பார்கள் என்ற ஆய்வை உண்மையாக்கியவள். தான் சார்ந்துள்ள துறையில் எதையாவது சாதிக்க வேண்டும் என நினைப்பவள். அவளின் பூர்வீகம் தமிழ்நாட்டில் மதுரை. அவளது முன்னோர்கள் இங்கிருந்து பர்மாவிற்கு பஞ்சம் பிழைக்கப் போனவர்கள். இரண்டு தலைமுறைகளாக அங்கிருந்துவிட்டு, இரண்டாம் உலகப் போரின் முடிவிற்குப் பிறகு மீண்டும் தமிழகம் வந்தவர்கள். அவளின் அப்பா கணேச நாராயணன் ஒரு வக்கீல். எப்பொழுதும் எதாவது ஒரு தடிமனான புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பார். அவர்களது வீட்டில் பாதி கிழிந்த 20 புத்தகங்களும் கிழியாத, தூசு படிந்த 30 புத்தகங்களும் தூசு படியாத 50 புத்தகங்களும், புதிதான வாசனையுடன் ஒரு 60 புத்தகங்களும் அவைகளுக்கான தனித்தனி அலமாறியில் எப்போதுமிருக்கும். அந்த அலமாரிக்கு அருகில் இருக்கும் அந்த இருட்டான அறை ஒருபோதும் திறக்கப்பட்டதே இல்லை. உள்ளே அவர்களது முன்னோர்கள் பர்மாவிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் இருப்பதாகவும் அதை இன்னும் தானே பார்த்தது இல்லையெனவும் தர்ஷனாவின் அம்மா கஸ்தூரி- ஒரு நடனப் பேராசிரியை- அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். கணேச நாராயணனுடன் பிறந்தது இரண்டு தம்பிகளும் ஒரு தங்கையும். இவர்தான் மூத்தவர். முதல் தம்பி சத்தியமூர்த்தி. ஜவுளித் தொழில் செய்கிறேன் என்று அடிக்கடி மலேசியா, சிங்கப்பூர் போய்விடுவார். தன் குடும்பத்துடன் (மனைவி, இரண்டு மகன்கள்) காரைக்குடியில் இருக்கிறார். இரண்டாவது தம்பி சங்கரலிங்கம் குடும்பத்துடன் (மனைவி, ஒரு மகன்) கும்பகோணத்தில் வசிக்கிறார். பில்டிங் காண்ட்ராக்டராக இருக்கிறார். தங்கை லதா கல்லூரியில் படிக்கும்போதே ஒருவனைக் காதலித்து கடுமையான எதிர்ப்புகளுக்குப் பிறகு அவனையேத் திருமணம் செய்து கொண்டு மதுரை எல்லீஸ் நகரில் வசிக்கிறாள். பள்ளி ஆசிரியை. தர்ஷனாவிற்கு சிறு வயதிலிருந்தே, தன் சித்தப்பாக்களை விடத் தன் அத்தையைத்தான் பிடிக்கும். அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. எப்பொழுது அத்தை வீட்டிற்குப் போனாலும் அவர் தர்ஷனாவிற்கு அவளுக்குப் பிடித்த ஆட்டுக் கால் சூப்பும், குடல் வறுவலும் சமைத்துக் கொடுப்பார். இல்லையென்றால் குறைந்தபட்சம் வேக வைத்த முட்டையைப் பொடி பொடியாக நறுக்கி, வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி அதே குடல் கறியின் சுவையில் உடனே ஒரு ‘முட்டை மாஸ்’ ரெடி பண்ணி விடுவார். அதை சாப்பிட்டதற்குப் பிறகு மேலும், ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட இரண்டு சாக்லெட்களும் தர்ஷனாவிற்குக் கிடைக்கும். இரண்டாவது காரணம், அவளின் இரண்டு சித்தப்பாக்களின் மூன்று மகன்களுக்கும் இவளுக்கும் எப்போதுமே ஒட்டாது. ஒரு வாரம் விடுமுறைகளுக்கு அங்கு தங்கலாம் என்று திட்டமிட்டால், ஒரு நாளிலே சண்டை போட்டு வீட்டிற்கு வந்து விடுவாள்.

பிரியதர்ஷனா பிறக்கும்போது பூமியில் வருடம் கி.பி. 1999. அவளது வீட்டில் அவள்தான் ஒரே வாரிசு. அவள் பிறந்ததற்குப் பின்புதான் கணேச நாராயணன் வக்கீலானார். இதனால் மிகவும் செல்லமாகவும் சுதந்திரமாகவும் வளர்க்கப்பட்டாள். இந்த மருத்துவம் தொடர்பான ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட படிப்பு அவளுக்கு கனவெல்லாம் கிடையாது. அது இயற்கையாக நடந்தது. அவள் வளர வளர அவளுக்கு வெவ்வேறு ஆசைகள் இருந்திருக்கின்றன. பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும்போது அவளது அப்பா அவளிடம், “நீ வளர்ந்ததற்குப் பிறகு என்னவாகப் போகிறாய்” என்று கேட்டால், அவள், “நான் ஒரு கிரிக்கெட் பிளையராக ஆவேன், இந்தியாவிற்காக விளையாடுவேன்” என்பாள். காரணம், அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த ஐ.பி.எல். 9 ஆம் வகுப்பு படிக்கும் போது தன் நண்பர்களிடம், “நான் சினிமாவில் ஒரு மியூசிக் டைரக்டராக ஆவேன்” என்று பெருமையுடன் கூறுவாள். அந்த ஆசை முளைத்ததற்குக் காரணம் ஏ.ஆர். ரஹ்மான். பின்பு கல்லூரி படிக்கும் போது ஒரு முறை, அவளின் ஆசிரியர் வகுப்பறையில் எல்லாரிடமும், “இந்தப் படிப்பை முடித்ததற்குப் பிறகு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்” எனக் கேட்டார். இவளின் முறை வந்த போது, “தான் ஒரு ஆர்க்கியாலஜிஸ்டாக ஆவேன்” என்றாள். “அதற்கு நீ எம்.ஏ வரலாறு எடுத்திருக்க வேண்டும்” என்றார் ஆசிரியர். “பரவாயில்லை சார். நான் ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்டில் ப்ரிசர்வேட்டிவ் பிரிவில் சேர்ந்து கொள்வேன்” என்றாள்.  இந்த ஆசைக்குக் காரணம் ஊர் சுற்ற வேண்டும் என்ற ஆவலும், கீழடியும்.

இவற்றையெல்லாம் ஆசைப்பட்டாளேயொழிய அப்படி ஆவதற்கு வேறெந்த முயற்சிகளும் அவள் எடுக்கவில்லை. அவையெல்லாம் ஆசைகள். அவ்வளவுதான். கட்டாயம் அடைய வேண்டிய குறிக்கோள்கள் அல்ல. பின்பு எப்படியோ தற்செயலாக விருதுநகரில் பி.எஸ்ஸி வேதியியல் எடுத்தாள். அதைத் தொடர்ந்து அங்கையே எம்.எஸ்ஸி முடித்தாள். அப்பொழுதெல்லாம் அவள் ஆய்வகத்தின் மூலையில் கெரோசினில் வைக்கப்பட்டிருந்த சோடியம் மெட்டலை எடுத்து ஃக்ளாஸ் பீக்கருக்குள் தண்ணீரில் போட்டு விடுவாள். சோடியம் தண்ணீர் பட்டால் தீப்பற்றக்கூடியது. அது எல்லோரையும் பீதியடையச் செய்துவிடும். இதற்காக அவள் இரண்டு முறை ப்ராக்டிகல் க்ளாசிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறாள். எம்.எஸ்ஸி  முடித்ததற்குப் பிறகு அவளுக்கு இயற்கை விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. காரணம் சொந்த ஊரிலேயே இருக்க வேண்டும் என்ற விருப்பம். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்காததால் கிடைத்த வேலைக்கு ஒப்புக்கொண்டு சென்னை கிளம்பினாள். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தான காஃபா பென்டின் (Gabapentin) தயாரிக்கும் கம்பெனியில் குவாலிட்டி கன்ட்ரோலில் வேலை. ஒரே ஒரு வருடம்தான். வேலையைத் தூக்கியெறிந்தாள். நல்ல வேலை, நல்ல சம்பளம். இருந்தாலும் அது அவளின் சுதந்திரத்திற்கு இடையூறாக இருந்தது. அவளுக்கு எல்லாவற்றையும் விட தன் சுதந்திரம் தான் முக்கியம். கல்லூரியிலையே தான் ஆசை ஆசையாக காதலித்தவன், காதலிக்கும்போதே பல கட்டுப்பாடுகள் இட்டதால் (ஃபேஸ்புக், வாட்ஸப், இன்ஸ்டாவில் ஃபோட்டோ போடக் கூடாது. அப்படியே போட்டாலும் பாஸ்போர்ட் சைசில், முகத்தை மட்டும்தான் போட வேண்டும், வெறும் பனியனும் குட்டைப் பாவாடையுடனும் கட்டாயம் வெளியே வரக்கூடாது, மிக முக்கியமாக தன்னைத் தவிர வேறு எந்த ஆண்களுடனும் நட்பு வைத்திருக்கக்கூடாது, இன்னும் பிற), ஒரு நாள் காபி ஷாப்பில் கடைசி முறையாக அவனுடன் காபி குடித்துவிட்டு ஒரு உறுதியான, என்றென்றைக்குமான ‘குட் பை’ சொல்லிவிட்டாள். அவன் எதுவும் புரியாமல் “ஏன் இந்த முடிவு” எனக் கேட்டபோது “எனக்கு உன்னைத் தவிர எல்லா ஆண்களையும் பிடிக்கிறது” எனக் கூறித் திரும்பி பார்க்காமல் நடையைக் கட்டினாள். அப்போது அவன் விழியில் அவன் சிறு வயதில் கேட்ட, ‘ஒரு மனிதனை செதில் செதிலாக வெட்டித் தின்று கொண்டிருக்கும், வாயெல்லாம் ரத்தம் ஒட்டியிருக்கும் ஒரு பேயை நேரில் பார்த்தது’ போன்ற ஒரு பீதி இருந்ததை தர்ஷனா பார்த்திருக்க வாய்ப்பில்லை.

சென்னையிலிருந்து வந்ததற்குப் பிறகு தன் நம்பிக்கையான (நம்பிக்கையான என்றால் பிடித்தமான என்றும் நாம் நம்பலாம்) ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதலால், அந்த கடினமான முடிவை எடுத்தாள். ஆம். வேதியியலில் பி.எச்டி பண்ண வேண்டும் என்ற முடிவெடுத்தாள். அதன்படியே மதுரை யுனிவர்சிடியில் அதற்கான நுழைவுத் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற்றாள். தர்ஷனாவிற்கு உலகம் கொஞ்சம் புரிபடத் தொடங்கியது இந்த காலகட்டத்தில் தான். பி. எச்டி யில் அவள் தேர்ந்தெடுத்தது, மெடிசனல் கெமிஸ்ட்ரி. தன் ஆய்வு சம்பந்தமாகவும் வெவ்வேறு கான்ஃபரன்ஸ்களில் கலந்து கொள்வதற்காகவும் நிறைய இடங்களுக்கு பயணம் செய்தாள். வேறு வழியில்லாமல் பி. எச்டி சேர்ந்தவள், மூன்றாமாண்டு இறுதியில், அது முடியும் தறுவாயில் கண்டிப்பாக தன் ஆய்வைத் தொடர வேண்டும் என்ற முடிவோடு நிறைய வெளி நாடுகளுக்கு அப்ளே செய்தாள். அதில், கியூபாவிலிருந்து அவளுக்கான அழைப்பு வந்திருந்தது.

மகிழ்ச்சியாக கியூபா சென்று தன் ஆய்வுப் பணியை அங்கு தொடர்ந்தாள். வெற்றிகரமாக அந்த ஆய்வையும் ஒன்றரை வருடங்களில் முடித்துப் பின், அங்கையே சீனியர் சயண்டிஸ்டாக பணியில் அமர்ந்தாள். அங்கு அவள் தேர்ந்தெடுத்தது, டியூபர்குளோசிஸ் (TUBERCULOSIS) நோய்க்கான மருந்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான ஆய்வு. அந்த ஆய்வின் முடிவைத்தான் நாளை அவள் WOSRI-ல் சமர்பிக்கக் காத்திருக்கிறாள்

*************************************************************************.

சரியாக அரைமணி நேரம் அந்த குளிர்ந்த காற்றை அனுபவித்ததற்குப் பிறகு, நாளை ப்ரெசெண்டேஷன் கொடுக்கும் போது முகத்தில் தூக்கக் கலக்கமில்லாமல், முகம் ஃப்ரஷாக இருக்க வேண்டும் என்றெண்ணி வேறு வழியில்லாமல் மீண்டும் மெத்தையில் படுத்துக் கொண்டாள். அவள் அந்த டிஜிட்டல் திரையில் சிகப்பு நிறத்தைத் தொடவில்லை. எந்தத் தடையுமில்லாமல் உள்ளே வந்து கொண்டிருந்த குளிர்ந்த காற்று அவளைத் தூங்க வைத்தது.

2

DWIH New Delhi

மறுநாள் காலை, சொன்ன நேரத்திற்கு தர்ஷனாவும் அவளுடைய மூன்று ஜூனியர்களும் WOSRI-ன் தலைமைச் செயலகக் கேண்டீனில் சந்தித்துக் கொண்டனர். நிக்கோலஸ் அமெரிக்கன். சிறிய தலையில் சுருட்டை முடியுடன் கருப்பாக இருந்தான். எட்வின் ஒரு கனெடியன். நல்ல சிகப்பு. கரீம் இஸ்தான்புல்லைச் சேர்ந்தவன். நிக்கோலஸின் நிறத்திற்கும் எட்வினின் நிறத்திற்கும் இடைப்பட்ட நிறம். மூவரும் தர்ஷனாவின் வழிகாட்டுதலுடன் மருத்துவ உயிர் வேதியலிலேயே வெவ்வேறு துறையில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கின்றனர். தர்ஷனா ‘முட்டை மாஸை’ அந்த நாட்டுப் பெயரில் ஆர்டர் செய்து கொண்டாள். அவர்கள் மூவரும் ‘மீன்’ இறைச்சியை ஆளுக்கொரு ரகமாக ஆர்டர் செய்து கொண்டனர்.

கரீம் கேட்டான். “நம்முடைய இந்த கண்டுபிடிப்பு ஏற்றுக் கொள்ளப்படுமா? அப்படி ஏற்றுக் கொண்டால் அடுத்தது நாம் என்ன செய்ய வேண்டும்?”

“நிச்சயம் அதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அப்படி நம் கண்டுபிடிப்பு வெற்றி பெறும் பட்சத்தில் அடுத்து நாம் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. எல்லாம் அதுவாகவே நடக்கும். இந்த WOSRI-யே அதை நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள்.” என்றாள், தர்ஷனா. நேரம் ஆகிக் கொண்டிருந்தது. அவர்கள் குறித்த நேரத்தில் கான்ஃபரன்ஸ் நடைபெறும் ஹால்க்குப் போக வேண்டுமெனெ அவசரமாக உணவை முடித்துக் கொண்டு புறப்பட்டனர். அவர்கள் அந்த ஹால்க்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே ஏற்கனவே இவர்களைத் தவிர மூன்று குழுவினர் வந்திருந்தனர். அனைவரும் தங்களுக்குள் அறிமுகமாகிக் கொண்டனர். அதில் நார்வேயிலிருந்து வந்தக் குழுவினர் தங்கள் கண்டுபிடிப்பைப் பற்றிக் கூறியதில் அங்கிருந்த அனைவரும் கொஞ்சம் மிரட்சியாக தங்களுக்குள் பார்த்துக் கொண்டனர். அந்த நார்வே குழுவின் தலைவன் போல இருந்தவன் தங்களின் குழு “ஆண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தைத் கொடுக்கப் போவதாகக் கூறினான். அப்படி நடந்தால் ஒரு குடும்பத்தில் பெண்களால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத போது ஆண்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும். இதனால் அவர்களின் பரம்பரையில் குழந்தை இல்லாத விஷயம் தொடர்பாக எந்த சிக்கலும் வராது” எனச் சொல்லித் தன் தோள்களை லேசாகக் குழுக்கிக் கொண்டு இன்னும் பின்னால் நன்றாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

அன்று தர்ஷனா அழகாக, 45 நிமிடத்தில் தன் ப்ரசண்டேஷனை முடித்துக் கொண்டாள். அந்த கமிட்டியில் கிட்டத்தட்ட 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தலைமை வகித்தனர். அவர்கள் எல்லோரும் அப்போது அங்கிருந்தனர். தங்கள் ஆய்வுகளின் முடிவுகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் சமர்பிக்க வந்தவர்கள் தங்களுகென்று ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் தனித் தனிக் குழுக்களாக அமர்ந்திருந்தனர். நிக்கோலஸ், கரீம், எட்வின் மூவரும் ஒரு குழுவாக அவர்களின் இருக்கைகளில் கொஞ்சம் டென்சனாக அமர்ந்திருந்தனர். ஒரு பெரிய திரையில் அவள் பேசக்கூடிய விஷயங்களுக்கு ஏற்ப ஸ்லைட் மாறிக்கொண்டே வந்தது. எதையும் மேம்போக்காக இல்லாமல் அதன் ஆழம் வரைச் சென்று அலசி வந்தாள். TB க்கு இப்போது இருக்கக்கூடிய மருந்துகளில் என்ன பிரச்சனை? அதைத் தான் கண்டுபிடித்துள்ள மருந்து எப்படி நிவர்த்தி செய்யும் என்பதை விரிவாக எடுத்துரைத்தாள். அந்த மருந்து எப்படி, எதை வைத்துத் தயாரிக்கப்பட்டது என்பதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் விரிவாகக் கூறினாள். உடலுக்குள்ளே சென்றதற்குப் பிறகு அது எப்படி வேலை செய்யும் என்பதெற்கெல்லாம் ஸ்லைடில் அவளேத் தயாரித்த வீடியோவை வைத்து அழகாக விளக்கினாள். அவளுடைய மருந்தை வைத்து எலியிடமும் குரங்கிடமும் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அனைத்து ரிசல்ட்களையும் பக்காவாக வைத்திருந்தாள். அங்கிருந்த ஒரு அமெரிக்கனை தர்ஷனாவிற்கு முன்னாடியேத் தெரியும். அவன் கொஞ்சம் விவகாரம் பிடித்தவன். எடக்கு மடக்காகக் கேள்வி கேட்கக் கூடியவன். அவனை மட்டும் சமாளித்து விட்டால் பின்பு எல்லாமே நல்ல படியாக முடிந்து விடும் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கும்போதே, அவன் ஒரே ஒரு கேள்வி குதர்க்கமாக கேட்டான். “நீங்கள் உங்கள் மருந்தை எலி, குரங்குகளுக்கெல்லாம் கொடுத்து சோதனை செய்துள்ளீர்கள். அது நல்ல விஷயம். ஆனால் எனக்கு இதை மட்டும் தெளிவுபடுத்துங்கள். 10 வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அல்லது 65 வயதிற்கு மேலுள்ள வயதானவர்களுக்கு உங்கள் மருந்தை எப்படி, எந்த அளவிற்குக் கொடுப்பது?” என்று கேட்டான். அவள் ஒரு நிமிடம் திகைத்தாலும் பின்பு சுதாரித்துக் கொண்டு, “உங்கள் கேள்விக்கு நன்றி. நாங்கள் TB க்கு மருந்து கண்டுபிடித்துள்ளோம். அது ஆய்வக சோதனையிலிருந்து குரங்கு வரைக்கும் வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேலும் எங்கள் மருந்தால் இது வரை நாங்கள் எந்த வித பக்க விளைவுகளையும் எலியிடமிருந்தோ அல்லது குரங்கிடமிருந்தோ பெறவில்லை. இது வரைக்கும் எங்கள் மருந்து ஆபத்தில்லாத மருந்து தான். நீங்கள் கேட்டது போல, குழந்தைகள் அல்லது பெரியவர்களுக்கு எந்த அளவிற்கு கொடுப்பது, எப்படிக் கொடுப்பது என்பதைக் கண்டறியத்தான் இங்கு வந்துள்ளோம். ஒரு வேளை எங்கள் மருந்து உங்களுக்கு திருப்திகரமாக இருந்தால் WOSRI- தான் அதை பரிசோதித்து சொல்ல வேண்டும்”, என்றாள். அங்கிருந்த எல்லோரும் தலையை முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டனர். அந்த அமெரிக்கனும் கொஞ்ச நேரம் கழித்து யோசித்துப் பார்த்துப் பின்புத் தலையை மெதுவாக ஆட்டிக் கொண்டான். திரும்பி வெளியே வரும்போது, ஃக்ளாஸ் டியூபில் இருந்த தன்னுடைய மருந்தை அவர்களிடம் அடுத்தகட்ட பரிசோதனைகளுக்காக ஒப்படைத்துவிட்டு வந்தாள்.

ஹாலை விட்டு வெளியே வந்ததும், வெளி நாட்டிலிருந்து வந்திருந்த சில குழுவினர் அவளைச் சூழ்ந்து கொண்டு தங்களின் சில சந்தேகங்களைக் கேட்டுக் கொண்டனர். தங்களின் தொடர்பெண்களையும் மெயில் ஐ.டி க்களையும் பரிமாறிக் கொண்டபின் நிச்சயம் ஒரு நாள் தங்களை அழைக்க வேண்டுமெனக் கூறி விடை பெற்றனர். நிக்கோலஸ், கரீம், எட்வின் மூவரும் தர்ஷனாவைக் கட்டிக் கொண்டு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதற்கான முடிவு வர இன்னும் ஆறு மாதமோ ஒரு வருடமோ ஆகலாம். அது வரை அவர்கள் தங்கள் தங்களின் சொந்த நாட்டிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் மூவருக்கும் மதியம் ஃப்ளைட் என்பதால் இப்போதே அவளிடமிருந்து விடை பெற்றுக் கொண்டனர். தர்ஷனாவிற்கு இரவு 2 மணிக்குத்தான் இந்தியாவிற்கு ஃப்ளைட். அது வரை பொழுதைப் போக்குவது எப்பெடியென யோசித்தவாறே தன் அறைக்குச் சென்று அரை மணி நேரம் ஓய்வெடுத்ததற்குப் பிறகு, இங்கிருக்கக்கூடிய முக்கிய இடங்கள் பற்றி கூகுள் செய்தாள். முதல் இடமாக 250 வருட பழமையான நூலகம் ஒன்று வந்தது. இவள் தங்கியிருக்கும் ஹோட்டலிலிருந்து 1 மணி நேர பயணம் தான். யோசிக்காமல் புறப்பட்டாள்.

உண்மையில் அது 250 வருடப் பழமையானது என்றே தெரியவில்லை. நிறையவே நவீனப் படுத்தியிருந்தார்கள். உள்ளே நுழைந்தவுடன் பளீச்சென்ற வெண்மையான கட்டிடம் லேசாகக் கண்களை உறுத்தியது. அங்கிருந்த மக்களை விட அதிகமாக, நிறைய, மீடியம் சைஸ் டிஜிட்டல் பேனர்கள் இருந்தன. குளிர் அதிகம் என்பதால் வெப்பமேற்றும் சாதனத்தை (AIR HEATER) ஆன் செய்திருந்தனர். அது கொஞ்சம் புழுக்கமாக இருந்ததால் தர்ஷனா தன் மேலாடையைக் கழட்டிக் கையில் வைத்துக் கொண்டாள். அங்கிருந்த அனைத்து டிஜிட்டல் திரைகளிலும் அவற்றில் பதியப்பட்டுள்ள புத்தகங்களின் வகைகள் என்ன என்பதன் விவரம் அவைகளின் டெஸ்க்டாப்பில் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அதில் SCIENCE என்ற பிரிவைத் தேடிக் கண்டுபிடித்து, அந்த ஸ்கிரீன் முன்னால் போய் நின்றாள். சுற்றிலும் மெல்லிய இசை கசிந்து கொண்டிருந்தது. அந்த SCIENCE-ஐத் தொட்டதும், முதல் புத்தகத்தின் அட்டைப்படம் ஒளிர்ந்தது. அதில் ஒரு பெண் இருந்தாள். முகத்தில் குழந்தைத் தனமான பாவனை. அந்த முகத்தைப் பார்த்ததும், தர்ஷனாவிற்கு அந்த புத்தகத்தை ஓபன் செய்ய வேண்டுமெனத் தோன்றியது. செய்தாள். மீண்டும் இன்னும் தெளிவாக அதே படம். அதற்குக் கீழே CLARA IMMERWAHR [1870 – 1915] என எழுதியிருந்தது. உள்ளே செல்ல செல்ல அந்த புத்தகம் கீழ்க்கண்ட விஷயங்களை விரிவாகப் பேசியது.

 

3

க்ளாரா இம்மெர்வர் (CLARA IMMERWAHR) [1870 – 1915]

Clara Immerwahr: A Life in the Shadow of Fritz Haber | SpringerLink

1915 ஆம் ஆண்டு. முதல் உலகப்போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலகட்டம். ஜெர்மனியின் (JERMANY) தலைநகர் பெர்லினின் (BERLIN) டாஹ்லெம் (DAHLEM) நகரின் மே ஒன்றின் முடிவிற்கும் மே இரண்டின் தொடக்கத்திற்குமிடையேயான ஓர் இரவு. அந்த டைரக்டோரியல் மேன்சனின் தோட்டத்திலிருந்து ஒரு துப்பாக்கியின் இரண்டு குண்டுகள் வெடிக்கும் சத்தத்தைத் தொடர்ந்து க்ளாரா தன் இதயத்தைப் பிடித்தவாறு புல் தரையில் சுருண்டு விழுகிறார். இப்போது புதிதாக உண்டான அந்த இதயத்தின் துளையிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அது அவர் உடலிலிருந்து உயிர் பிரிந்து விட்டது என்பதை தெளிவாக்குகிறது. அவர் கண்களில் இப்போது கூடுதலாக ஒரு வசீகர ஒளி. உதட்டில் சிறு புன்னகை. கையில் தன் கணவர் ஹேபரின் (HABER) ஆர்மித் துப்பாக்கி.

க்ளாரா இம்மெர்வர் ஜெர்மனியில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண். அவர் பிறந்தபோது பூமியில் வருடம் கி.பி. 1870. யூத நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர். சொந்த ஊர் ப்ரெஸ்லாவுக்கு (Breslau) அருகிலுள்ள போல்கெண்டோர்ஃப் (Polkendorf). அவளது அப்பா ஒரு வேதியியல் ஆய்வாளர். அவருக்கு ஒரு ரசாயனத் தொழிற்சாலையைத் தொடங்க வேண்டுமென்பது கனவு. ஆனால் அது நிறைவேறாமல் தோல்வியில் முடிந்தது. பின்னர் அவர் வேளாண்மையில் ஈடுபட்டது மட்டுமில்லாமல், ப்ரெஸ்லாவில், துணிகள் மற்றும் தரைவிரிப்புகளை வாங்கி விற்கும் ஒரு செழிப்பான கடையில் தன்னையும் ஒரு முதலீட்டாளராக இணைத்துக் கொண்டார். அவரது குடும்பம் ப்ரெஸ்லாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பைப் பராமரித்து வந்தது. க்ளாரா இங்கு தங்கிருந்துதான் தன் படிப்பைத் தொடர்ந்து வந்தார்.

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ப்ரெஸ்லாவ் ஒரு தூசு படிந்த அழுக்கான, சத்தம் மிகுந்த, துர்நாற்றம் வாய்ந்த நகராகத்தான் இருந்தது. ஆனால் அதன் பின்பு, 19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் அப்படியே இரு மடங்காக அதிகரித்த மக்கள் தொகை பெருக்கத்தால், ப்ரெஸ்லாவ் வணிகம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களுடன் கூடிய ஒரு வளமான பெருநகரமாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரத்தில், ப்ரெஸ்லாவ் படித்த நடுத்தர வர்க்கத்திற்கான அறிவியல் மற்றும் கலாச்சாரத்திற்கான முக்கிய மையமாக வளர்ந்தது.

பெர்லின் மற்றும் பிராங்பேர்ட்டுக்குப் பிறகு, ப்ரெஸ்லாவ் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட யூத குடியிருப்புகளுடன் மூன்றாவது அடர்த்தியான யூதச் சமூகத்தைக் கொண்ட நகரமாக இருந்தது. ஜெர்மனியிலே இரண்டாவது பெரிய ஜெப ஆலயம் இங்குதானிருந்தது. அவர்கள் வகுப்புவாத கலாச்சார வாழ்க்கையை வாழ்ந்தனர். அவர்கள் அரிதாகவே தேவாலயங்கள் போய் வந்தனர். அவர்கள் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்ததால் க்ளாராவும் அவளது மூன்று உடன் பிறந்தவர்களும் மிகவும் அடக்கமாகவும் எளிமையாகவும் வளர்க்கப்பட்டனர்.

ப்ரெஸ்லாவின் யூதச் சமூகம் கல்வியைப் பொறுத்தவரை அறிவார்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் எளிமையாகவும் சிக்கனமாகவும் மட்டுமில்லாமல், தங்கள் வாரிசுகளுக்கும்- பெண் குழந்தைகள் உட்பட- கல்வி கற்கும் உரிமையைக் கொடுத்தனர். இது ஜெர்மன் யூத நடுத்தர வர்க்கத்திற்குப் பொதுவானது. ப்ரெஸ்லாவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் 40% மாணவிகள் யூதர்களாகத்தான் இருந்தனர். ஜெர்மன் உயர்நிலைப் பள்ளிகள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை பெண்களுக்கான எந்த வரம்புகளையும் முன்வைக்கவில்லை. 1900 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் கிராண்ட்-டச்சி ஆஃப் பேடன் (Grand-Duchy of Baden), முதல் மாநிலமாக பெண் மாணவியர்களை பல்கலைக்கழகங்களில் சேர்த்தது. அதற்கு முன்னர், பெண்கள் பல்கலைக்கழகங்களுக்குப் போவதென்றால் அதற்கு சிறப்பு அனுமதி தேவை அல்லது ஒரு விருந்தினர் தணிக்கையாளர்களாகத்தான் பல்கலைக்கழகத்திற்குள் நுழைவது என்பது சாத்தியப்பட்டது.

க்ளாரா கல்வி கற்றதன் பின்புலச் சமூகம் இப்படித்தானிருந்தது. க்ளாரா எப்பொழுதும் மற்றப் பெண்களைப் போல தானும் வீட்டு வேலைகள் செய்வதிலே காலம் கழித்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார். அங்குள்ள ஒரு மகளிர் கல்லூரியில் க்ளாரா படித்து பட்டம் பெறும் போது அவருக்கு வயது 22. அப்போது அவர், “தன் நம்பிக்கைக்குப் புறம்பான எதையும் தான் எழுதவோ சொல்லிக்கொடுக்கவோ மாட்டேன்” என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார். க்ளாராவிற்கு இது போதவில்லை. எப்படியாவது அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்ற கணவோடு இருக்கிறார். அதற்காக பல்கலைக்கழகத்திற்குள் நுழைய ப்ரெஸ்லாவில் சிறப்புக் குழுவால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் க்ளாரா தேர்ச்சி பெற்றபோது அவருக்கு வயது 26. பெண்கள் என்றால் நல்ல தாய் மார்களாகவும், வீட்டைப் பார்த்துக் கொள்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்ற பொய்யை மீறி தன்னுடைய 30 ஆவது வயதில், 1900-ல் ரிச்சர்ட் அபேக் (Richard Abegg) என்பவரின் மேற்பார்வையில் ப்ரெஸ்லாவ் பல்கலையில் இயற்பியல் வேதியியலில் (physical chemistry) தன்னுடைய பி.எச்டி யை முதல் பெண்ணாக நிறைவு செய்கிறார்.

க்ளாராவிற்குத் தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்த கனவு மட்டும் பலிக்கவில்லை. தன்னுடைய துறையைச் சேர்ந்தவருமான, சிறந்த ஆய்வாளருமான ஃபிரிட்ஸ் ஹேபர் (Fritz Haber) (இவர் பின்பு 1918-ல் காற்றிலிருந்து அம்மோனியா தயாரிக்கும் வழிமுறையைக் கண்டறிந்ததற்காக நோபல் பரிசு பெறுகிறார்.) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். தனக்குப் பிறந்த முதல் குழந்தை ஹெர்மன் (Hermann) அடிக்கடி உடல் நலமின்மையால் அவதிப்பட்டதால், தன் குழந்தையைப் பார்த்துக் கொள்வதிலே அவர் அதிக நேரம் செலவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. கார்ல்ஸ்ரூவில் (Karlsruhe) தன் கணவர் ஹேபர், ஒரு மதிப்பு வாய்ந்த பேராசிரியராக இருந்த போதிலும், 1909-ல் காற்றிலிருந்து அம்மோனியா தயாரிக்கும் வழிமுறையைக் கண்டறிந்ததால், 1911-ல் அவர் பெர்லினில் உள்ள கைசர் வில்ஹெல்ம் இன்ஸ்டிடியூட்-ல் (Kaiser Wilhelm Institute) இயற்பியல் வேதியியல் மற்றும் மின் வேதியியலின் (Electro chemistry) நிறுவன இயக்குநரானா பின்பும் க்ளாரா ஆய்வகம் பக்கமே செல்லவில்லை. அவரின் திருமண வாழ்க்கை அவர் பயந்த, சாதாரண பெண்களின் வாழ்க்கைக்கு அவரைத் தள்ளியது.

Clara Immerwahr - YouTube

முதல் உலகப்போர் ஆரம்பித்து தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஜெர்மனியின் எல்லா வாசல்களும் அதன் எதிரி நாடுகளால் அடைக்கப்பட்டுவிட்டது. சால்ட்பீட்டர் என்பது ஒரு வகையான வெடியுப்பு. அது வெடி மருந்துகள் தயாரிப்பதற்கு பயன்படக்கூடிய மூலப்பொருள். அப்பொழுது அது இந்தியாவிலும் சிலியிலும் தான் அதிகமாகக் கிடைத்தது. ஜெர்மனி இந்த போரில் வெற்றி பெற வேண்டுமென்றால் இப்போது ஏதாவது செய்தாக வேண்டும். இந்த நேரத்தில்தான் ஹேபர் காற்றிலிருந்து அம்மோனியா தயாரிக்கும் எளிய, செலவில்லாத வழிமுறையை அறிமுகம் செய்கிறார். அந்த அம்மோனியா மூலம் வெடிப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அது ஜெர்மனிக்கு உதவுகிறது. அதோடில்லாமல் தேச பக்தியின் பெயரால், போரில் ரசாயன வாயுக்களை எப்படி பயன்படுத்துவது என்ற ஆபத்தான யோசனையையும் முன் வைத்து, அதற்கு மூலையாகவும் செயல்படுகிறார்.

ஏப்ரல் 22, 1915. ஜெர்மன் இராணுவம் பெல்ஜியத்தின் யெப்ரெஸ் (Ypres) போரில் இரசாயன ஆயுதங்களை, நவீனப் போர் வரலாற்றிலேயே, முதன் முதலாகப் பயன்படுத்துகிறது. மொத்தம் 5,730 சிலிண்டர்களில் 170 மெட்ரிக் டன் குளோரின் (Chlorine) வாயு நான்கு மைல் நீளத்திற்கு புதைக்கப்படுகிறது. இறுதியில் இந்த தாக்குதலால் 1,100 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதோடு 7,000 பேர் காயமடைந்தனர். இந்த நிகழ்வானது அவருக்கு “ரசாயனப் போரின் தந்தை” எனப் பெயர் வாங்கித் தருகிறது. (இந்த சம்பவத்திற்குப் பிறகு உலகில் பல இடங்களில் ரசாயன ஆயுதங்கள் உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. கடைசியாக 2013-ல் சிரிய உள்நாட்டுப் போரில் சரின் (Sarin) என்ற நச்சு வாயு பயன்படுத்தப்பட்டது.) இந்த தாக்குதலுக்குப் பிறகு ஹேபருக்கு கேப்டனாக பதவி உயர்வு கொடுக்கப்படுகிறது. நடைபெற்ற இந்த சம்பவங்கள் அனைத்தும் க்ளாராவிற்குப் பிடிக்கவில்லை. மிக அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகிறார். இந்த வெற்றியை ஹேபர், மே 1 ல் தன் வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடுகிறார். அன்றைய இரவே க்ளாரா தன் கணவரின் ஆர்மி பிஸ்டலால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு அவருக்குப் பிடிக்காத இந்த உலகத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்கிறார். இப்போது வரை அவரின் தற்கொலை குறித்து இரண்டு விதமான பார்வைகள் இருக்கின்றன. 1. தன் கணவர் ரசாயனப் போரின் மூலையாக செயல்பட்டது பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறார் என்பது. 2. திருமணத்திற்குப் பின்பான தன் வாழ்க்கையில் திருப்தி இல்லாமல், அதனால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலினால் தற்கொலை செய்து கொள்கிறார் என்பது.

மன உளைச்சல் காரணமாக இருந்தாலும், அந்த மன உளைச்சலுக்கு க்ளாராவின் கணவரின் செயல் ஒரு முக்கியமான காரணமாக இருந்திருக்கும் என்பது மட்டும் உறுதி.

************************************************************************

4

முடிவிலியின் தொடக்கம்

 க்ளாராவை வாசித்ததற்குப் பிறகு, தர்ஷனா இயல்பாக இல்லை. மனதையும் மூலையையும் குடைந்தெடுக்கும் நிறைய கேள்விகள் அப்போது அவளது மூளையில் முளைத்தன. “அறிவியல் யாருக்காக? ஏன் இத்தனை ரசாயனப் படுகொலைகள்? க்ளாரா இறக்கும்போது என்ன நினைத்திருப்பார்?” நேரம் ஓடிக்கொண்டிருந்தது. அவளுக்கு இந்த புத்தகம் வாங்க வேண்டும் என்று தோன்றியதால் நூலக மேலாளரின் அறையைத் தேடிப் பிடித்தாள். அது மிகவும் உள்ளடங்கித் தனித்திருந்தது. அந்த அறைக்குள் ஒரு நடுத்தர வயதுடையவர் வாயில் புகைத்துக் கொண்டே, கையில் ஒரு கனமான ப்ரின்டெட் புத்தகத்தை வைத்துத் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம், க்ளாரா இம்மெர்வர் என்ற புத்தகம் தனக்கு வேண்டுமென்றாள். அவர் ஒரு முறை அவளை உற்றுப் பார்த்துவிட்டு, அவள் கையில் அணிந்திருந்த ஃப்ரேஸ்லெட்டை ஸ்கேன் செய்து அதற்கான தொகையைப் எடுத்துக் கொண்டு, அந்த புத்தகத்தை அவளது மெயிலிற்கு அனுப்பி வைத்தார்.

Clara Immerwahr (TV Movie 2014) – IMDb

வீட்டிற்கு வந்ததற்குப் பின்பும் தர்ஷனா அந்த புத்தகத்தை பல முறை வாசித்தாள். முக்கியமாக “The suicide of Clara Immerwahr” என்ற தலைப்பிலிருந்த 25 பக்கங்களை மீண்டும் மீண்டும் புரட்டினாள். அது அவளது பல இரவுகளை காவு வாங்கியது. இப்படியே ஆறு மாதங்கள் தாண்டி ஏழாவது மாதம் ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் வீட்டில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல், ஒரு வாரம் தனக்குத் தேவையான துணிகளை எடுத்துக் கொண்டு மதுரை மாட்டுத்தாவாணி பஸ்டாண்டில், ஏதோ ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டாள். கண்டக்டரிடம், “இந்த பஸ் கடைசியா எங்க போய் சேரும்” என்றாள். அவர் தன் தடித்த வாய் வழியாக, “நாகப்பட்டிணம்” என்றார். ஒரு டிக்கெட் வாங்கிக் கொண்டாள்.

***********************************************************************

நாகைப்பட்டிணத்தின் வங்காள விரிகுடா கடல் அந்த அதிகாலை இரண்டு மணி நேரத்தில் எல்லையற்று பரந்து விரிந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்த இரவின் மொத்த இருளையும் உள்வாங்கிக் கொண்டு, வேறொன்றாய், இந்த உலகிலிருந்து தனித்து விடப்பட்டது போல காட்சியளித்தது. அந்த நேரத்திலும், கடற்கரையில் ஒரு பத்து பன்னிரெண்டு பேரின் நடமாட்டமும் ஒரு மீன் விற்கும் வண்டியின் சுறுசுறுப்பான இயக்கமும் இருந்தது. அந்த வண்டி மின்சாரத்தில் ஓடக்கூடியது. அதன் முகப்பில் அன்றைக்கு என்னென்ன மீன் இருப்பில் இருக்கிறது என்பதும், அதன் விலையும் ஒரு சின்னத் திரையில் ஓடிக்கொண்டிருந்தது. தர்ஷனா அந்த வண்டிக் கடைக்கு முன் கடலைப் பார்த்தவாறு பொறித்த நெய் மீனை ருசித்துக் கொண்டிருந்தாள். கடையில் மீன் பொறிப்பவரைத் தவிர வேறு யாருமில்லை. அப்போது அவளுக்கு ஒரு மெயில் வந்துள்ளது என்பதை அவளின் மொபைல் திரை சத்தமிட்டுக் காட்டியது. அதை ஓபன் செய்து உள்ளே போனாள். மெயில் WOSRI-ல் இருந்து வந்திருந்தது. TB க்காக அவள் தயாரித்த மருந்து 100 சதவீதம் நோயைத் தீர்க்கக்கூடியது என்றும் அது பாதுகாப்பானது என்றும் நோயாளிகளுக்கு தாராளமாக அதைக் கொடுக்கலாம் என்றும் WOSRI சர்டிஃபிகேட் கொடுத்திருந்தது. அந்த மருந்திற்கான காப்புரிமைத் தொகை 1 மில்லியன் டாலர் எனவும் குறிப்பிட்டிருந்தது. அந்தப் பணத்தைப் பெறுவதைக் குறித்து அவளுக்கு இரண்டு ஆஃப்சன்களை WOSRI  கொடுத்திருந்தது. 1. தன் வங்கிக்கணக்கில் அந்த பணத்தை WOSRI செலுத்துவதற்கான படிவத்தை பூர்த்தி செய்வது. 2. WOSRI-யிடம் தங்கள் ஆய்வுகளுக்கு நிதி வேண்டி விண்ணப்பித்துள்ள வேறு பல்கலைக்கழகங்களுக்கு அந்த பணத்தை அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்வது. அவள் இரண்டாவது ஆஃப்சனுக்குள் நுழைந்து பார்த்தாள். மூன்று பல்கலைக்கழகங்கள் தங்களுடைய அடுத்தக் கட்ட ஆராய்ச்சிக்காக WOSRI-ல் விண்ணப்பித்திருந்தார்கள். இரண்டு இந்தியாவிலிருந்தும் ஒன்று இந்தோனேஷியாவிலிருந்தும். அவற்றின் தரவுகளையும் அவை எந்த மாதிரியான ஆய்வுகளுக்கு நிதி கேட்டிருக்கிறார்கள், என்பதையெல்லாம் படித்தப் பிறகு, அவள் அந்த ஒரு மில்லியன் டாலரை அந்த மூன்று பல்கலைக்கழகங்களின் ஆய்விற்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதற்கான படிவத்தை அப்போதே பூர்த்தி செய்து அனுப்பிவிட்டுத் தன் மொபைலை பாக்கெட்டுக்குள் சொருகிக்கொண்டப் பின் கடலைப் பார்த்தாள். அது சலனமில்லாமல் குழந்தையாய் இருந்தது. அதன் அலைகளின் சத்தம் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் சினுங்கலைப் போன்றிருந்தது. லேசாகப் புன்னகைத்துக் கொண்டாள். நவீன யுத்த வரலாற்றில் முதல் முறையாக 1915-ல் நடைபெற்ற ரசாயனப் போரும், ஹேபரும், துப்பாக்கியால் தன்னைச் சுட்டு புல் தரையில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு கிடந்த க்ளாராவும் அப்போது அவளின் நினைவில் வந்து போனார்கள்.

000000000000000000000000000000000000000000000

நான் தனியாக இருந்த அவளிடம் சென்று அவளருகே அமர்ந்து கொண்டேன்.

“நீ ஏன் தனியாக இருக்கிறாய்” என்றேன்.

“எனக்குப் பிடிக்கும்” என்றாள்.

“தனியாக இருப்பதா?”

“இல்லை. அதிகாலை 3 மணியிலிருந்து காலை 7 மணி வரை வெறுமனே கடலைப் பார்த்துக் கொண்டிருப்பது.”

“ஓ…”

அவளிடமிருந்த சுவையான நெய் மீன் என்னிடமில்லாததைப் பார்த்தவள், “நீ மீன் சாப்பிடுவாயா?” என்றாள்.

நான் “ம்ம்…” என்றேன்.

உடனே அவள், கடைக்காரரிடம் திரும்பி, “அண்ணா, இன்னொரு ப்ளேட் நெய் மீன்” என்றாள். அவர் சரியாக ஐந்து நிமிடத்தில் இன்னும் ஒரு ஜோடி நெய் மீனைப் பொறித்து அவளிடம் நீட்டினார். இப்போது அவளிடம் இரண்டு ப்ளேட் மீன் இறைச்சி இருந்தது. அவள், அதில் ஒன்றை என்னிடம் நீட்டினாள்.

              –பிரபாகரன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *