குளித்து முடித்து விட்டு கதவை திறந்து வெளியே வந்தவள், ‘என்னங்க என்னங்க’ என கூப்பிட்டு கொண்டே வந்த தமயேந்தி சுதாரித்துக் கொண்டாள்.
அந்த என்னவர் எங்கு இருக்கிறார், மருத்துவமனையில் இருக்கிறார் என்றது அகம்.
தமயேந்தி நல்ல ரோஜாப் பூ நிறம். அழகாக மஞ்சள் பூசி நெற்றியில் ஒரு திலகம். நிலவு குங்குமம் சூடிக் கொண்டது போல். கருமையான சிறு கூந்தல். 45 வயது என சொல்லமுடியாது.
மெதுவாக படுக்கை அறையில் லைட், மின் விசிறியை ஆன் செய்து விட்டுக் கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டு தலை துவட்டிக்கொண்டே தன் நினைவுகளைப் பின்னோக்கிப் பார்த்தாள்.
மனோஜ் பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமண வரன் தான். மனோஜ் தோல் தொழிற்சாலை தொழிலதிபர். மனோஜின் அப்பா அரசியலில் ஒரு பெரும் புள்ளி. அதனால் மனோஜ் அம்மாவிற்கு இயல்பாகவே அதிகார தோரணை. மருமகளை ஆட்டிப்படைக்கும் ஆளுமை. மனோஜ் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளை அதே சமயம் தமயேந்தி என்றால் உயிர். ஆனால் தொழில் அதிபர் என்பதால் அவனால் குடும்பத்திற்காகப் போதிய நேரம் கழிக்க முடியாமல் போனது. அதில் தமயேந்திக்கு சற்று வருத்தம் தான். ஆனால் அதை ஒரு நாளும் மனோஜிடம் காட்டிக் கொண்டது இல்லை.
அவர்களின் திருமண நாள், தமயேந்தியின் பிறந்த நாள் போன்ற நாட்களில் பெரும்பாலும் மனோஜ் வெளிநாடுகளில்தான் தொழில் காரணமாக பயணித்துக் கொண்டு இருப்பான். இது போன்ற நல்ல நாட்களில் அவர்கள் இருவரும் இணைந்து கோயிலுக்கு போக வேண்டும் என்று ஆரம்ப காலத்தில் தமயேந்திக்கு ஏக்கமாக இருக்கும். வாழ்க்கைப் பயணத்தில் ஆசைகள் எல்லாம் ஏக்கங்களாகவே தங்கிவிட்டன.
பவன், யாழினி இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். இருவரையும் நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பது தான் இருவரின் இலட்சியமும். அந்த இலட்சியமும் நிறைவேறியது. பவன் அமெரிக்காவில் லேதர் டெக்னாலஜி மேல் படிப்பு படித்து கொண்டு இருக்கிறான். இன்னும் ஒரு வருடம் தான். படிப்பு முடிந்ததும் அப்பாவின் தொழிற்சாலையை வழிநடத்தும் பொறுப்பை அடைந்து விடுவான். மனோஜின் கனவும் அது தான்.
யாழினிக்கும் மேல் படிப்பு படிக்க வேண்டும் என ஆசை. ஆனால் மனோஜின் தங்கை மகன் ராகுல் நல்ல தங்கமான பையன். மனோஜிற்குத் தன் மகளை தங்கையின் வற்புறுத்தல் காரணமாக யாழினிக்கு அதில் முழு விருப்பம் இல்லை என்றாலும் திருமண முடித்து வைத்தான்.
திருமணம் முடிந்து இரண்டு வருடம் ஆகிறது.
மனோஜுக்கு இருக்கும் பிரச்சினை, யாழினி திருமண நேரத்தில்தான் தமயேந்திக்கு தெரிந்தது. இப்போது நினைத்தாலும் நெஞ்சம் திடுக்கிடுகிறது.
திருமண வேலைகள் மும்முரமாக இருந்தபோதும் அறிகுறிகள் தெரியவில்லை. அவனும் காட்டிக்கொள்ளாமல் இருந்திருக்கிறான் போலும். ஆனால், திருமண நாள் கிட்டே நெருங்கும்போது, மனோஜ் திடீர் திடீர் என்று மிகவும் சோர்ந்து போய் அமர்ந்து விடுவான். அவளும், வேலைகளின் களைப்பு என்று நம்பி அடுத்தடுத்த வேலைகளை அவள் எடுத்துப் போட்டுக்கொண்டு பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தாள்.
அப்படித் தான், திருமண முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, தமயேந்தி, “என்னங்க இப்படி இருக்கீங்க. சீக்கரமா கிளம்புங்க இன்னும் 3 மணி நேரத்தில கல்யாணம். மேடை ஏற்பாடுகள் நடந்துடிச்சா, காலை டிபன் ரெடியாகி விட்டதா, அய்யருக்கு ஃபோன் செய்யணும் ..” என வேலை பட்டியலை அடுக்கி கொண்டே போனாள்.
“முடியில டீ” என்றான், வேர்வையில் குளித்து இருந்தான், மனோஜ்
” என்னாச்சுங்க ! “என பதறினாள் தமயேந்தி.
அவனோ உடல் மொழியால் தனது வலியை உணர்த்திக் கொண்டிருந்தான்.
“வாங்க டாக்டரிடம் போகலாம்” என்றாள் பதட்டத்துடன்.
மனோஜ் , “பொறு தமயேந்தி, முதலில் நம் மகள் கழுத்தில் தாலி ஏறட்டும்…. அதுவரை நான் உயிரோடு இருப்பேன். என்னை எதுவும் இப்போ தொந்திரவு செய்யாதே ” என்றான்
தமயேந்திக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. உயிரைக் பிடித்துக் கொண்டு கல்யாணத்தை நடத்தி முடித்தாள்.
எல்லாம் நல்லபடியாக முடிந்தது.
பெண் மாப்பிள்ளை, பாலும் பழமும் சாப்பிடச் சென்ற நேரத்தில், மனோஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்
மருத்துவ மனை தீவிர சிகிச்சை அறைக்குள் மருத்துவர்களும், செவிலியர்களும் போவதும் வருவதுமாக இருந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து, திடீர் மாரடைப்பு, சிகிச்சை அளித்து இருக்கிறோம். எந்த ஒரு அதிர்ச்சி தகவலும் அவருக்கு தர கூடாது. பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி ஒரு வாரம் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள்.
தமயேந்தி மிகவும் அக்கறையோடு மனோஜை பார்த்துக் கொண்டாள்.
இரண்டு வருடம் கழித்து இப்போது திடீரென மனோஜ் நினைவிழந்த நிலையில் கீழே விழ ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இப்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறான்.
அலைபேசி ஒலிக்க நினைவிற்குத் திரும்பினாள் தமயேந்தி.
பவன், அம்மா அப்பா உடலில் நல்ல முன்னேற்றம். சிக்கிரமா கிளம்பி மருத்துவமனை வா என்றான்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் தமயேந்தி. உடனே மருத்துவமனை கிளம்பினாள்.
அவசர பிரிவில் நினைவு திரும்பி மனோஜ் தனது நிலை உணர்ந்தான். முதல் முறை மாரடைப்பு வந்தபின் தன் மனதில் எத்தனை எத்தனை மாற்றங்கள். தமயேந்தி என் மனைவி. என் அன்புக்குரியவள். அவள் மேல் நான் வைத்த அன்பை நான் வெளிப்படுத்தி உள்ளேனா என சந்தேகம்.
இப்படியெல்லாம் அவனுள் பல கேள்விகள்.
தமயேந்தி தமயேந்தி என சதா அவளை உச்சரித்து கொண்டே இருப்பான். அவன் அம்மாவுக்கு அது பிடிக்காது. ஆனால் மகனின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னியல்பைத் தற்காலிகமாக மாற்றிக் கொண்டாள்.
மனோஜ் மனதில், தான் இல்லை என்றால் என் தமயேந்தி அவள் எப்படி வாழ்வாள். நான் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும் என் தமயேந்திக்காக என நித்தம் தியானித்தான்.
மனோஜைப் பொறுத்தவரை அது மறு வாழ்வாக அவனுக்கு தோன்றியது.
திடீரென்று மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு , “தமயேந்தி” என்பான்.
“என்னங்க?”
“உனக்கு என்ன என்ன ஆசை, சும்மா சொல்லு”
“என்னங்க திடீரென்று?” என்று புருவத்தை உயர்தியவாறு தமயேந்தி கேட்க, “இல்லம்மா, நான் எத்தனை நாள் இருக்கப் போறேன் தெரியவில்லை….”.என சொல்லி முடிக்கும் முன் தமயேந்தி,”பேசாமா இருங்க. நான் சாவித்திரி மாதிரி எமனிடம் சண்டை போட்டுப் போராடி உங்களைக் காப்பாற்றி விடுவேன். நீங்கள் தைரியமாக இருங்கள். எனக்கு எந்த குறையும் இல்லை” என்று சொல்லிச் சென்றுவிடுவாள்.
மனோஜ் மனைவிக்காக அதிக நேரம் செலவழித்தான். ஒன்றை இழக்கப் போகிறோம் எனும் போது தான் அதன் அருமை புரியும் என்பார்கள். அது நிதர்சனம் தான் என் உணர்ந்தான் மனோஜ்.
இரண்டாம் முறையாக மாரடைப்பு வந்து நினைவிழந்த போதும் நினைவில் நின்றவள் தமயேந்தி.
மகாகவி பாரதியார் பாடிய காலனுக்கு உரைத்தல் பாடலை மனதில் பாட ஆரம்பித்தான் மனோஜ்.
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட…..
மனோஜை மருத்துவர்களோ மருந்தோ காப்பாற்றவில்லை அவன் மனமே, அந்த மனதில் குடி கொண்டு இருக்கும் அவனின் தமயேந்தியின் நினைவே அவனை காப்பாற்றியது. இது அவனுக்கும் காலனுக்கும் மட்டுமே அறிந்த நிகழ்வு.
மனோஜ் தமயேந்திக்கு பிடித்த ஜாதி மல்லி வாங்கி வர மகனை அனுப்பி வைத்து ஆவலுடன் ஆசை மனைவியின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்து இருந்தான்.
அந்த அன்புக்குரிய தமயேந்தி மெதுவாக மனோஜ் அறைக் கதவை மகிழ்வோடு திறக்கிறாள், மனோஜின் விழி காண….
*******


எளிய நடையில் நல்ல கதை.. வாழ்த்துகள் தோழர் 💐
நன்றி தோழர்