சிறுகதை: கடவுள் நகரத்தில் பிச்சை புகு காண்டம் – வசந்ததீபன்

சிறுகதை: கடவுள் நகரத்தில் பிச்சை புகு காண்டம் – வசந்ததீபன்

துளசிதாசர் வாழ்ந்த அந்த நகரத்திற்கு வந்திருக்கிறேன் என்று மனம் ஆனந்தத்தில் துள்ளியது. ராம சரித மானஸத்தின் கவிதை வரிகள் தெருவெங்கும் வரவேற்புத் தோரணங்களாய்  தொங்கிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது. பிஸ்மில்லாஹ் கானின் ஷெனாய் இசைச் சுரங்கள் காற்றில் மிதந்து வந்து பன்னீர்ப் பூக்களை என் மேல் சொரிவது போலிருந்தது.
பாரதியின் மூச்சுக்காற்று இந்நகரக் காற்றில் கலந்திருக்கிறது  போல என்னுள் பிரக்ஞை உண்டாகியது. எங்கிருந்தோ அவரின் பாடல் வரிகள் எனக்குள் வருகின்றன… ” நிற்பதுவே நடப்பதுவே நீங்களெல்லாம் சொப்பனந்தானோ…பல தோற்ற மயக்கங்களோ..கற்பதுவே கருதுவதே உன்னில் ஆழ்ந்த பொருள் இல்லையோ..வெறும் காட்சிப்பிழை தானோ.. ” நான் இனம்புரியாத உணர்வுகளால் திளைக்கிறேன்.மந்தாகினி நதியின் சப்தம் மந்திரங்கள் உச்சரிப்பது போல் கேட்டது.

இந்த மண்ணில் பாதம் பதித்து விட்டேன்… ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்… இனி பிறவிகள்  ஏதும் இல்லை… பாவக்கடலில் உழலும் துன்பமும் இல்லை… பேரின்பம் பெற்று விட்டேன்.. பேரின்பம் பெற்று விட்டேன்… என மனக் குருவி உச்சஸ்தாயில் பாடிக் கொண்டிருந்த போது.. யாரோ அதட்டுவதாக அறிந்து நிஜத்திற்கு வந்தேன்.

எதிரில் ஆட்டோக்காரன் ஒருவன் தனது கருமஞ்சள் ஆட்டோவின் இருக்கையில் தொங்கியபடி..ஒரு கால் வண்டிக்குள்ளும் மறுகால் நிலத்தில் மிதித்தபடியும் கத்தினான்…” சவமே.. விலகிப் போ.. “எனக் ஹிந்தியில் கத்தினான்.

நான் துடித்துப் போனேன். எவ்வளவு ஆசைகளும் கனவுகளுமாய் இந்த மண்ணில் காலடி வைத்ததும்.. என்னவிதமான நாரசமான வார்த்தைகளைக் கேட்க வேண்டியதாகி விட்டது.

தெருக்களைப் பார்த்தேன். இடுக்கமாகவும் ,  ஒடுக்கமாவும்.. குப்பைகள் சிதறிக் கிடக்க அருவருப்பாய் இருந்தது. சாலைகளில் ஈக்களாய் மனிதர்கள் மொய்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை உரசியபடி.. மாடுகளும் ம்மா..ம்மா..என்று கத்தியபடி சென்று கொண்டிருந்தன.

அதன் வயிற்றெலும்புகள் துருத்திக் கொண்டிருந்தன. வீடுகளெல்லாம் கரிந்த மரப்பெட்டிகள் போலிருந்தன.  சந்து..சந்துகளாயிருந்த அந்த நகருக்குள் ஆட்டோக்களும் , குதிரை வண்டிகளும் திரிந்தன.

நான் கங்கை நதியின் கரையிலுள்ள படித்துறைக்குப் போனேன். நதிக்குள் கீழாக இறங்கும் படிகளில் இறங்கினேன். கனவுகளுக்குள் இறங்கிப் போவது போலிருந்தது. தண்ணீர் சலசலத்துப் போய்க் கொண்டிருந்தது. கரைக்குச் சற்றுத் தள்ளி கம்பிவேலி போடப்பட்டிருந்தது.அதற்குள்ளாக ஆண்களும் பெண்களும் குளித்துக் கொண்டிருந்தார்கள். நான் கால் வைத்த படியில் மலம் மாதிரி ஏதோ கிடந்தது. பார்க்காமல் சட்டென்று அதை மிதித்து.. அருவருப்புடன் நீரில் கழுவ கீழாகச் சென்றேன். கம்பிவேலிகளில் பழைய துணிகள் சிக்கி ஊறியபடிக் கிடந்தன. அங்கு கூட்டம் அதிகமாயிருந்தது. எல்லோரும் நீரில் முங்கி..முங்கி எழுந்து கொண்டிருந்தார்கள்.

முழங்கால்கள் வரை நீரில் நனைத்துக் கழுவி விட்டு மெல்ல படிகளேறினேன். சில காக்கைகள் கத்தியபடி பறந்து திரிந்தன. இதமான வெப்பம் எங்கும் பரவியிருந்தது. யாத்ரீகர்கள் குடும்பத்துடன்.. தனித்து.. ஈசல்களைப் போல எங்கும் திரிந்தார்கள்.

காசிவிஸ்வநாதர் கோவிலை தேடிச் சென்றேன். எந்தத் தெருவில் அரிச்சந்திரன்.. தன் மனைவியை ஏலம் போட்டு விற்றிருப்பான் என யோசித்து..கண்களால் துளாவியபடி கோவிலுக்கு முன்பாக வந்து சேர்ந்தேன்.

நீண்ட வரிசைகளில் விதவிதமான அங்ககீனர்களான பிச்சைக்காரர்கள் உட்கார்ந்தபடி பல்வேறு மொழிகளில் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நதிக்கரை மாதிரி அமர்ந்திருந்த அவர்களின் ஊடாக கோவிலை நோக்கி நடந்தேன். எனக்கு முன்னாள் வடநாட்டு யாத்ரீகர்கள் சென்றார்கள். அவர்களில் ஒருவர் வலதுபுறமாய் அமர்ந்திருந்த ஒரு பிச்சைக்காரனுக்கு 1 ரூபாயை போட்டுவிட்டு நகர்ந்தார்.

பிச்சைக்காரன் 2-ம் பாகத்திற்கான ...
பிச்சைக்காரன் கோப்பு படம்

அதைப் பெற்றுக்கொண்ட பிச்சைக்காரன் தமிழில் வசவுச் சொல்லை ஆத்திரமாக அந்த தர்மம் செய்த நபர் மீது வீசினான். அவரோ அதைக் கண்டுகொள்ளாமல் விரைந்தார். அவருக்குப் பின்னால் சென்று கொண்டிருந்த நான் பட்டென்று திரும்பி வைதவனைப் பார்த்துக் கேட்டேன்… ” நீ என்ன தமிழா…” ?

என் திடுக்கென்ற கேள்வியைத் கேட்டதும் அவன் துள்ளி எழுந்தான். அவனுக்கு வயது 30 இருக்கும். மெல்லிய புன்னகை தவழ என்னைப்  பார்த்து.. ” ஆமாங்க.. நீங்க எங்கிருந்து வர்றேங்க…? ” என்றான்.

நான் என்னைப் பற்றிக் கூறி விட்டு காசிக்கு சாமி தரிசனம் செய்ய வந்ததைப் பற்றிக் கூறினேன்.

அவன் என்னைத் தன்னோடு வருமாறு கூறி விட்டு முன்னால் நடந்தான். என்னால் மறுக்க முடியாமல் அவன் பின்னால் வளர்ப்பு ஆடு போல் போனேன். நெருக்கமான சிறு சிறு சந்துகளையெல்லாம் தாண்டி ஒரு டீக்கடையின் முன்பாக நிற்க்கச் சொல்லி.. சற்று நேரத்தில் திரும்புவதாகக் கூறிச் சென்றான்.

அவ்விடத்தை விழிகளைச் சுழலவிட்டுப் பார்த்தேன். தமிழர்கள் அதிகம் வாழும் பகுதி போல் இருந்தது. கடைகளில் ஹிந்தி மற்றும் தமிழில் விளம்பர பலகைகள் தொங்கின. என்னைக் கடந்து செல்பவர்கள் தமிழில் உரையாடியபடி சென்றார்கள். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.

சென்ற சிறிது நேரத்தில் திரும்பிய அவன் முற்றிலும் வேறுபட்டு இருந்தான். கிழிந்த சட்டையும் , அழுக்குக் கப்பிய அரைக்கால் சட்டையும் , திரித்திரியாய் சடைத்து இருந்த தலையும் கொண்டு விகாரமாய் காட்சியளித்த அவன் நெளிவு நெளிவாய் வாரப்பட்ட தலையுடன் ஸபாரி உடையில்.. முகத்தில் கறுப்புக் கண்ணாடி.. வலக்கையில் தங்க நிற வாட்சு என அணிந்து தமிழ் சினிமாக் கலைஞன் போல் இருந்தான்.

என்னருகில் வந்ததும்.. வாருங்கள் போவோம்..என்றான். அப்போது தான் எனக்கு உறைத்தது. ஆமாம்… யார் இவன்..? நம்மை எங்கே அழைக்கிறான்.. ? என்ற எண்ணம் எழுந்தாலும்… அவனைத் தொடர்ந்தேன்.

மனதில் பயமும் , திகிலும் குடியேறியது. தன் வசமாக்கி எங்கேயாவது கடத்திச் செல்கிறானோ..? மனித உறுப்புக்களைக் கொள்ளையிடும் கும்பலிடம் விற்று விடுவானோ ? நரபலியிடும் சாமியார்களிடம் ஒப்படைத்து விடுவானோ ? கொத்தடிமையாய் எவரின் வசத்திலாவது விட்டு விடுவானோ ? எனக் குழம்பியபடியே சென்றேன்.

என்னைப் பார்த்துக் கேட்டான்… ” என்ன அரண்டு போன மாதிரி வர்றீங்க..? ” நான் பதிலளிக்காமல் வலிய புன்னகைத்தபடி அவன் பின்னால் தொடர்ந்தேன்.

அவன் மெல்லச் சிரித்தபடி…” ஒன்னும் பயப்படாதீங்க…” என்றான் என் மனதை படித்தது போல.

இருவரும் கங்கைக் கரைக்கு வந்து சேர்ந்தோம்.தூரத்தில் இரண்டு படகுகள் சென்று கொண்டிருந்தன.

புதிதாக மணமான தம்பதியினர் இருவர் கரையில் சூடம் பொருத்திக் கொண்டிருந்தனர். அருகில் அவர்களது உறவினர்கள் போல் நின்றிருந்தவர்கள்.. இவர்களின் செய்கைகளைக் கண்டு ரசித்து சிரித்துக் கொண்டிருந்தனர். மணமகள் முகத்தை சரிகைத்துணியால் மூடியிருந்தாள். மணமகனோ.. பட்டு வேட்டியானது கரை ஒட்டிய நீரில் விழுந்து விடாமல் முழங்காலை விட்டு சற்று மேலேற்றி ..குத்த வைத்து உட்கார்ந்தபடி மணமகள் பொருத்தும் சூடம் எரியத் துணை செய்ய.. இருகைகளையும் சூடத்தைச் சுற்றி மறைத்துக் கொண்டிருந்தான்.

புரோகிதர் ஒருவர் பித்ரு சடங்கு செய்வதற்காக யாரேனும் வருவார்களா என்று உட்கார்ந்தபடி எதிர் நோக்கியிருந்தார். நீண்ட சடைகளை வளர்த்து துறவிகளைப் போலிருந்த ஒரு ஆணும் , பெண்ணும் அருகருகே உட்கார்ந்திருந்தனர். அவர்களில் அந்தப் பெண் சிறு செம்பிலிருந்து பாலை நீரில் துளித்துளியாக ஊற்றிக் கொண்டிருந்தாள்.

கரையோரமாகவே நாங்கள் நடந்தோம். கூட வந்த நபரை நெருங்கிய நண்பனைப் போல நினைக்கத் தொடங்கினேன். அவனும் அப்படித்தான் உணர்ந்திருப்பான் போல.. சகஜமாக பேசியபடி வந்தான்.

ஓரிடத்தில் ஈமக்கிரியை செய்து கொண்டிருந்தார்கள். அரிச்சந்திரன் காத்த மயானம் எங்கிருக்கிருக்கிறதோ..? என நினைத்துப் பார்த்தேன். எரியத் தொடங்குவதற்கு முன்னதாக அந்தச் சிதையிலிருந்து புகை எழும்பி அவ்விடத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அங்கு கும்மலாக ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்.

இந்திரலோகத்திலிருந்து பகீரதன் என்ற அரசனின் முன்னோர்கள் ஜென்ம சாபல்யம் அடைவதற்காக கங்கைநதி பூமிக்கு கொண்டு வரப்பட்டது என்று எப்போதோ படித்த புராணக்கதை என் நினைவில் எழுந்தது.

அந்த நதி பட்டதும் பாவ நிலமாயிருந்த இந்த உலகம்.. புனிதமாக்கப்பட்டது என்றும்.. காசிக்குச் சென்று கங்கையில் குளித்தால் சகல பாவங்களும் கழுவப்பட்டு.. புனிதர்களாய் யாவரும் மாற்றப்பட்டு மோட்சம் பெறுவார்கள் என்பது இந்துக்களின் தீராத நம்பிக்கை.

அது உண்மையென்று அறிந்தவர்கள் எவருமில்லை. ஆனால் நீண்ட காலத்திலிருந்து மக்கள் காசிக்குப் பயணப்பட்டபடி இன்னும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமும் பிரமிப்பும் நிரம்பிய பூடகமான விஷயம்.

என் அருகே வந்த நண்பன் அமைதியாக ஏதோ யோசனையில் வரும் என்னைப் பார்த்ததும் அறிந்து கொண்டான். என் கவனம் முழுவதும் கங்கை நதி மீதும் அதன் கரையில் நடக்கும் ஈமக்கிரியைப் பற்றியும் இருப்பதை. உடனே என்னிடம் சொன்னான்.. ” இந்தா.. பாருங்க நண்பா..இவனுக பொணத்த முழுசா எரிய விடமாட்டானுக.. சில பேர் தான் சாம்பல தண்ணியில் கரச்சு விடுவானுக..அதிகமான பேர் அரை குறையாக வெந்த சடலத்த அப்படியேத் தண்ணிக்குள்ள தூக்கிப் போட்டுட்டு போய்விடுவானுக..அத இங்க கஞ்சாக் குடிச்சிட்டுத் திரியற இந்த சாமியார் பயலுக.. பிச்சு பிச்சு தின்பாங்க..சிலபேர் தண்ணிமேல மிதக்குற அது மேல் ஏறி தவம்செய்யுறேன்னு..பொணம் அழுகி சிதஞ்சு போறவரைக்கும் உட்கார்ந்திருப்பானுக…”

நான் அதிர்ந்து நடுங்கினேன்.

ஒரு பெண் வாழையிலையில் மாவு விளக்கு ஏற்றி கங்கையை நோக்கி நீட்டி வட்டமாகத் தன்னைச் சுற்றி ஆராதித்துக் கொண்டிருந்தாள்.

மாவிளக்கு வழிபாடு | Maavilakku procedure in Tamil

எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. நண்பனிடம் கேட்டேன்..” ஆமா… நண்பா..இந்த நதிக் கரையில் இருக்கிற கிராமங்கள் , நகரங்களிலிருந்து இறந்தவர்களை அடக்கம் செய்யாமல்.. நதியில் எறிந்து விடுவார்களெனக் கேள்விப்பட்டிருக்கேன்…அது உண்மையா…? அவன்..” மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் எறிவார்கள்..” என்றான்.

நாங்கள் கடைவீதியான பகுதியில் நடந்து கொண்டிருந்தோம். சாலையின் இருபுறங்களிலும் தரையின் மேல் ‌காய்கறிகள் , பழங்கள் , வீட்டு உபயோகப் பொருட்கள் என பரப்பி விற்றுக் கொண்டிருந்தார்கள். சிலர் தள்ளு வண்டிகளில் பானிப்பூரி , சென்னா மசாலா போன்ற பல்வேறு தின்பண்டங்களை வைத்து.. தங்களைச் சுற்றி நிற்பவர்களுக்கு சிறு சிறு தட்டுகளில் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

யாத்ரீகர்கள் கூட்டம் கூட்டமாக பல வயது வித்தியாசங்களில்… தெருக்களில் முண்டியடித்துப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே பாதையோரங்களில் வயதான ஆண்களும் பெண்களுமாய் காணப்பட்டார்கள். அவர்களின் கையில் கிழிந்த துணிப்பைகள் , வட்டி ,போணி போன்றவைகள் இருந்தன.

நண்பனிடம் ஆச்சரியமாய் ஏன்…? இந்த ஊரில் வயதானவர்கள் அதிகமாக தெருவோரங்களில் திரிகிறார்கள் எனக் கேட்டேன்.

அதற்கு நண்பன் சொன்னான்..” மோட்சத்திற்குச் செல்லக் காசி நகருக்கு வந்து விட்டாலே போதும் என்ற குருட்டு நம்பிக்கையில.. பலபேரு வயதானவர்களை இங்க கூட்டிட்டு வந்து அனாதரவாய் விட்டுட்டுப் போய்றாங்க. பலபேரு அவர்களாகவே குடும்பத்தாரால கைவிடப்பட்டு இங்க வந்து சேர்றாங்க. இன்னும் பலபேரு நோயாளிகளையும் , ஊனமுற்றவங்களையும் கொண்டு வந்து விட்டுட்டு ஓடிர்றாங்க. சிலபேரு தான் தாம் கொண்டுவந்து விடுறவங்கள பராமரிக்க ஆட்கள நியமிச்சு வேண்டிய உதவிகள் செய்யுறது. ஆனா அவங்க கூட  பணம் கொண்டு வந்து கொடுப்பதோடு சரி..தங்களின் அன்பையோ..ஆறுதலையோ..பராமரிப்பில் உள்ளவங்க கிட்ட காட்டாம.. வந்த கணத்திலே திரும்பிப் போய் விடுவார்கள்.

இப்படி ஆதரவற்றுத் திரியும் வயதானவர்களை , ஊனமுற்றவர்களை பல சமூக விரோதக் கும்பல்கள் கையகப்படுத்தி… அவர்களை பிச்சை எடுக்க வைப்பது..கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விற்கப் பயன்படுத்துவது.. பாலியல் தொழில் செய்ய கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது..மேலும் மனித உறுப்புக் கொள்ளையர்களிடம் விற்பது.. போன்ற பஞ்சமாப் பாதகங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அக் குழுக்களுக்குள் அடிக்கடி மோதல்கள் ஏற்படும். அப்போது அவற்றில் சிக்கி சிதைவது பாவப்பட்டவர்களான  அந்த வயதானவர்களும் , ஊனமுற்றவர்களும் , நோயாளிகளும் தான்.

எனக்கு பகீரென்றது. மனது கனத்து வலித்தது. என்னால் கோவிலுக்குள் செல்ல மனசில்லை. வயிறு பசித்தது. நண்பனிடம் சாப்பிட்டு விட்டு பிறகு கோவிலுக்குப் போகலாம் என்று சொன்னேன். அவனும் சரியென்றான்.

போகிற வழியில் நண்பனைப் பற்றி ஏனோ… கேட்கத் தோணியது. சற்றுத் தயக்கத்துடன் கேட்டேன்.

அவனும் கொஞ்சம் கூட குழறாமல் சொல்ல ஆரம்பித்தான்…. ” என் பெயர் சன்னாசி. நான் மதுரை மாவட்டம் மேலூரில் ITI முடித்து விட்டு நண்பர் ஒருவரின் வழிகாட்டலில் ஜபல்பூருக்கு வந்து ஒரு எவர்சில்வர் பாத்திரங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். திடீரென்று அந்தக் கம்பெனியை எந்த வித காரணமின்றி மூடிவிட்டார்கள். எனவே நான் வேலையிழந்ததும் நிலை குலைந்து போனேன். கடைசியில் ஒருவழியாக மனதைத் தேற்றிக் கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பவதற்காக கொல்கத்தாவிற்கு வந்து ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த பொழுது தான் அங்கு ஒருவனைச் சந்தித்தேன். அவன் திருநெல்வேலிக்காரன். இட்லி வியாபாரம் செய்து வந்தான். பசியினால் மயங்கி விழுந்த என்னைப் பார்த்து..தமிழ்காரன் என.. என் உடை தோற்றங்களை வைத்து அறிந்து.. முகத்தில் தண்ணீர் அடித்து.. எனக்கு சாப்பிட இட்லி கொடுத்தான். நானும் என்னைப் பற்றிய விபரங்கள் எல்லாவற்றையும் அவனிடம் சொன்னேன்.

திருநெல்வேலிக்காரனும் என்னை ஆறுதல்படுத்தி இட்லி வியாபாரத்தில் தனக்கு உதவியாளாக வைத்திருந்தான்.

சில காலம் சிரமமில்லாமல் கழிந்த போது வங்காளி ஒருவன் எனக்கு நண்பனான். அவன் என்னிடம்.. தான் பணம் தருவதாகவும்.. இட்லி வியாபாரத்தைச் சுயமாக செய்யுமாறும்.. வரும் லாபத்தில் இருவரும் பங்கு பிரித்துக் கொள்ளலாம் என்றும் சொன்னான். அவன் பலமுறை வற்புறுத்தியும் நான் என்னை ஆதரித்தவனை விட்டு விலக விருப்பமில்லாமல் இருந்தேன். ஆனாலும் ஒரு கட்டத்தில் வங்காளி நண்பனின் பேச்சைக் கேட்டு அவனிடம் ரூ.5000/-வாங்கி அவனின் கார்ஷெட்டில் தங்கி இட்லித் தொழிலை சுயமாகத் தொடங்கினேன்.

அங்கு ரயில் நிலையம் , பஸ் நிலையம் மற்றும் பல இடங்களில் இட்லி வியாபாரம் செய்வது எல்லாம் திருநெல்வேலிக்காரர்கள் தான். முழுவதுமாக கொல்கத்தாவை ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்கள் என்னைத் தனித்து வியாபாரம் செய்ய விடாமலும் , யாரையும் என்னிடமிருந்து இட்லி வாங்க விடாமலும் இடஞ்சல் செய்ததில் என்னுடைய தொழில் முடங்கி கை முதலை இழந்து போனேன்.

இந்நிலையில் இனி நீ கொல்கத்தாவில் இருந்து பிரயோசனமில்லை என்று சொல்லி..அந்த வாங்காளி நண்பன் தன் பணத்தைப் பற்றிக் கவலைப்படாதேயென பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்து.. என் கையில் வழிச் செலவுக்குப் பணத்தைக் கொடுத்து.. நீ..உன் ஊருக்குப் போ…எனச் சொன்னான்.

நானும் நொந்தபடி ரயில் நிலையத்திற்கு வந்து அமர்ந்தேன். பயணிகள் கூட்டத்தினால் நிலையம் திணறிக் கொண்டிருந்தது.

வாரணாசி ( காசி ) ரயில் நிலையத்தில் ...

அப்போது ஒரு சாமியார் என்னருகில் வந்தார். வந்தவர் என்னுடைய பரிதாப நிலையைப் பார்த்து விசாரித்தார். நானும் நடந்தவைகளை விவரித்தேன். என் மீது இரக்கப்பட்ட அவரும் என்னிடம்… ” என்னுடன் வர்றயா.. ? ” எனக் கேட்டார். நானும் ஏதும் பதிலளிக்காமல் உட்கார்ந்திருந்தேன்.

அவர் மேலும் சொன்னார் _ ” காசிக்குப் போனால் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்…” நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று வார்த்தையைக் கேட்டதும் உடலோடு நிழல் செல்வது போல சாமியாருடன் காசிக்கு வந்து ஒரு பிச்சைக்காரனாகிப் போனேன். சாமியாரும் சிறிது காலம் என்னோடு இருந்து விட்டு எங்கோ போய் விட்டார்…” என முடித்தான்.

நண்பன்  சொன்னவைகள் என்னை உலுக்கிப் போட்டது.

மேலூருக்கு பக்கத்தில் சின்னக்கா பட்டியில் பிறந்த சன்னாசி காசியில் தொழில்முறைப் பிச்சைக்காரன். தினசரி குறைந்தபட்சம் ரூ. 2000/- வரைக்கும் அவனது வருமானம். அவனது சொந்த ஊரில் தோட்டம் , வயல் என்று வாங்கிப் போட்டிருக்கிறான். மேலும் அவன் புதுசா வீடு ஒன்றும் கட்டியிருக்கிறான்.

” இன்னும் 2 வருசந்தான் இங்க இருப்பேன். பிறகு சொந்த ஊருக்குப் போயிருவேன்… அப்புறந்தான் கல்யாணம் செய்யணும்…” என மேலும் சொல்லிக் கொண்டே வந்தான்.

பாம்பாட்டி ஒருவன் தெருவில் வித்தை காட்டிக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி ஆட்கள் வட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். அவனருகில் இரண்டு பாம்புக்கூடைகள் இருந்தன. ஒன்று மூடப்பட்டிருந்தது. மற்றொன்றில் சாம்பல் நிறத்தில் ஒரு நாகப்பாம்பு படம் எடுத்தபடி ஆடிக் கொண்டிருந்தது. அவன் குத்த வைத்தபடி இருகைகளில் மகுடியைப் பிடித்து உதடுகளில் பொருத்தி பாம்பிற்கு முன்னால் மேலும் கீழும் இடமும் வலமும் ஆட்டியபடி ஊதி இசை எழுப்பிக் கொண்டிருந்தான். சற்றுத் தள்ளி சிறிது தூரத்தில் தரையில் ஊன்றப்பட்ட இரும்புக் கம்பியில் கட்டப்பட்ட சங்கிலியை இழுத்துக் கொண்டு கீரிப்பிள்ளை ஒன்று மிரண்டு மிரண்டு அங்கும் இங்கும் ஓடியது.

முகம்மது அசைவ உணவகம் என்று ஹிந்தியில் பெயர்ப்பலகை தொங்கிய கடைக்குள் சன்னாசி நுழைந்தான். பின் தொடர்ந்த எனக்குள் பயமும் தயக்கமும் ஊறியது.

புனிதமான காசிநகருக்கு புண்ணியம் தரும் விஸ்வநாதரையும் , விசாலாட்சியையும் வழிபட வந்த நான் அசைவ உணவை உண்ணப் போகிறோமே என்பதால் அல்ல… வகை வகையாய் ஆர்டர் பண்ணித் தின்று விட்டு… என் தலையில் பில்லைக் கட்டிவிட்டு ஓடிப் போய் விடுவானோ…சன்னாசி என.. நிரந்தர வேலையற்ற என் நிலைமை சந்தேகம் கொள்ள வைத்தது.

சன்னாசி என்னிடம் எதுவும் கேட்காமல் 2 சிக்கன் பிரியாணி , ஈரல் கறி , ஆம்லெட் என் ஆர்டர் கொடுத்தான். நான் பதறிப் போனேன்.

மேஜையின் மீது கொண்டு வந்து வைத்தவைகளைப் பார்க்க..பார்க்க.. தடுமாறி நாற்காலியிலிருந்து விழுந்து விடுவேனோ… என்பது போலிருந்தது.

சன்னாசி சாவகாசமாய் சாப்பிட ஆரம்பித்தான். நான் அமைதியாய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும்… ” சாப்பிடுங்க..” என்றான்.

நான் மெதுவாக விள்ளல் விள்ளலாக எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தேன்.

விரைவாக சாப்பிட்டு முடித்து விட்டு கையை கழுவி விட்டு வந்து அமர்ந்த சன்னாசி 2 சிக்கன் பிரியாணி பார்சலுக்கு ஆர்டர் கொடுத்தான். நான் கடைசியிலிருந்த சிறிதளவு பிரியாணியை அப்படியே வைத்து விட்டு கை கழுவப் போனேன்.

சன்னாசி சிரித்துக் கொண்டே மேஜையிலிருந்த தட்டில் கொஞ்சம் ஓமத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.

இப்படியே நழுவி விடலாம் என்று நினைத்தேன். ஆனாலும் வாசலில் வைத்து பிடித்து விடுவார்களோ என்ற பயமும் திகிலும் எழுந்தது.

பார்சலை வாங்கிக் கொண்டு சன்னாசி கை கழுவிக் கொண்டிருந்த என்னைக் கூப்பிட்டான். நான் பர்ஸைத் தொட்டுக் கொண்டு அவனிடம் போனேன்.

அவன் என்னிடம் பார்சலைக் கொடுத்தான். நான் பணம் என்று இழுத்தேன். அதற்கு அவன் அதெல்லாம் கொடுத்தாச்சு… போகலாம்… என்றான். எனக்கு உயிர் வந்தது போலிருந்தது. அதோடு என்னை நினைத்தே எனக்கு வெட்கம் வந்தது.

உணவகத்தை விட்டு கீழிறங்கி சாலைக்கு வந்தோம். என் மனசு இனம் புரியாத ஆனந்தத்தில் நிரம்பி இருந்தது. சன்னாசியிடம் சொன்னேன்.. அவனைத் தேற்றுவது போல… ” பாவம்.. பிச்சைக்காரர்கள்..எவ்வளவு சிரமப்படுறாங்க..கைகள் அழுகிய நிலையிலும்..புண் வலியுடன் வெயிலில் வதங்கியபடி… ”

என் பேச்சைக் கேட்டதும் சன்னாசி ஆரவாரமாக சிரித்தபடி சொன்னான்…” நண்பா..அவர்கள் கையும் காலும் அழுகிப் போகல..ஆட்டுக்கறியக் கட்டி அதன் மேல் வெண்ணெய் தடவி இருக்காங்க..வெயில் அதன் மேல் பட்டதும் அது உருகி அழுகியிருப்பது போலத் தெரியும். அதைப் பார்க்குறவங்க இரக்கப்பட்டு காசுகளைப் போட்டுட்டுப் போவாங்க.. இவங்க ராத்திரியில வீட்டுல போய் தம் உடம்போடு கட்டியிருந்த கறியை வறுத்துத் தின்னுட்டு சரக்கோ..கஞ்சாவோ அடிப்பாங்க. இங்க என்னப்பாத்த இடத்துலே புண்ணு வந்தவங்களையும் பெரு வியாதி வந்தவங்களையும் உட்கார விட மாட்டாங்க. துரத்தி விட்டுறுவாங்க. அங்க இருந்தவங்க எல்லோரும் என்னப்  போலத் தான்…”

மறுபடியும் நாங்கள் கோவிலுக்கு முன்னால் வந்தோம். எனக்கு கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய விருப்பமில்லை. சன்னாசி என்னை எவ்வளவு வற்புறுத்தியும் நான் போக விரும்பவில்லை. கையிலிருந்த பார்சலை அவனிடம் நீட்டினேன்.

அவன் சொன்னான்..” நண்பா.. உனக்காகத் தான் இதை வாங்கினேன்..போகிற வழியில் பசிக்கு சாப்பிட்டுக்கோ… தேவப்படுறவங்களுக்கு குடுத்துக்க…”

நான் துடித்துப் போனேன். மேலும் அவன்.. ” பொழச்சிருந்தா மறுபடியும் பாப்போம்…” என்றபடி போய் விட்டான்.

மண்கலயத்தில் போட்டு மண்ணாலான மூடியிட்டு..மூங்கில் நார் தூக்கில் வைக்கப்பட்டிருந்த சிக்கன் பிரியாணிப் பார்சல்களை இரண்டு கைகளிலும் தொங்கவிட்டபடி கடவுள் நகரத்தின் ரயில் நிலையத்தை நோக்கி நான் நடந்தேன்.

வசந்ததீபன்
Show 4 Comments

4 Comments

 1. Dev

  அருமை! காசியின் உண்மையான நிலையும் அதுவே! உன் வீடே சொர்க்கம்! உன் உளமே கோயில்! கதை மிக நன்றாக உள்ளது! வாழ்த்துகள் சகோ!

  • வசந்ததீபன்

   நன்றிகள் சகோதரரே

 2. jananesan

  வாரனாசி நகருக்குப் போனவர்களுக்கு இக்கதையின் எதார்த்தம் விளங்கும். வானளாவ அளந்துவிடும் வளர்ச்சிநாயகன் இத்தொகுதியின் எம்.பி இவ்வூரை இப்படிவைத்துக்கொண்டே தனது விரிந்த மார்பைக் காட்டி குதிப்பது நம் மக்களை என்னவாகக் கருதுகிறார் என்பது வேதனை. கதையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உதவுதாகக் காட்டி இருப்பது நேசத்தைக் காட்டுகிறது. வாரனாசிக்கு வந்து விட்டு காசிவிஸ்வநாதரைக் கும்பிடாமல் திரும்புவது படைப்பாளியின் தார்மீகக் கோபத்தைக் காட்டுகிறது. வாழ்த்துகள் வசந்ததீபன்.

  • வசந்ததீபன்

   நன்றிகள் தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *