சிறுகதை: ” *பிறந்த வீடு* ” –  பா.அசோக்குமார்

“அத்தே, எங்க வூட்டுக்குள் வராத…” என்று திண்ணையில் உட்கார்ந்தவாறே கத்தினாள் தேவி.
வாசலில் கால்வைக்க போன மரகதம் ஒரு கணம் தடுமாறித் தான் போனாள். ரேன்சு(சாக்கடை)க்கு புறத்தே நின்றவாறு தனது அண்ணன் மகள் தேவியை ஏறிட்டுப் பார்த்தாள் மரகதம்.
“ஐயா, உங்கள வூட்டுக்குள் விடக்கூடாதுனு சொன்னாரு” என்று கண்களைக் கசக்கிக் கொண்டே கூறினாள்.
உள்வாசலில் உட்கார்ந்து பாத்திரம் விலக்கிக் கொண்டிருந்த தேவியின் பாட்டி சீத்தம்மா சத்தம் கேட்டு வாசலைப் பார்த்தாள். மரகதம் நிற்பதைப் பார்த்து ” வா, மரகதம் வா” என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே மறுமொழி பேசாமல் நகரத் தொடங்கினாள் மரகதம். முட்டிக் கொண்டு வந்த கண்ணீர்த்துளி சாக்கடையில் விழுந்தது.
நடந்த நிகழ்வை சரிவர கேட்காமலே ஊகித்தறிந்த சீத்தம்மா, பட்டாசாலையில் பச்சப் பிள்ளைக்கு பால் கொடுத்துவிட்டு கண்ணயர்ந்து கிடந்த மகள் பொன்னம்மாளை எழுப்பினாள்.
“சாண்டகுடிக்கு, அப்படியே அப்பன் சொன்னத உடனே சொல்லிப்புட்டாளே” என்று கதறியபடி மரகதத்தைத் தடுத்து நிறுத்த ஓடினாள் பொன்னம்மாள்..
“மதினி, மதினி… அவ சின்னப் பொண்ணு, ஏதோ தெரியாமல் சொல்லிப்புட்டா… நீ வா மதினி” என அழாத குறையாக கெஞ்சிக் கொண்டே ஓடினாள் பொன்னம்மாள்.
பொன்னம்மாள் ஓடுவதை தன் வீட்டு வாசலில் இருந்த குழாயில் தண்ணீர் பிடிக்க வீட்டிலிருந்து வெளியே வந்த தங்கம்மாள் பார்த்துவிட்டு, “புள்ளத்தாச்சிப்புள்ள ஏன்டி இப்படி ஓடுற” என்று அதட்டினாள்.
“இல்லக்கா.. நீங்களாவது வந்து மதினிய கூப்பிடுங்க… கோவிச்சுக்கிட்டு போறாங்க” என்று திரும்பி பார்த்துச் சொன்னவள் தெருவின் நடுவில் ஓடிய சாக்கடை நீர் வழுக்கி கால் இடறி விழப் போனவள் அப்படியே கையூன்றி தரையில் அமர்ந்துவிட்டாள்.
அவள் பின்னாலே ஓடி வந்த சீத்தம்மா, அவளை கைத்தாங்கலாகத் தூக்கி வீட்டிற்கு அழைத்து வர முயன்றாள்.
இதற்குள் தெருவில் கூட்டம் கூடிவிட்டது. பதறியபடி பானையை போட்டுவிட்டு தங்கம்மாளும் தனது கொழுந்தன் பொண்டாட்டி பொன்னம்மாளைத் தூக்க ஓடினாள்.
“அக்கா, எனக்கு ஒண்ணுமிலக்கா..மொதல்ல..மதினிய வூட்டுக்கு கூட்டி வாங்கக்கா” என்று கேவினாள் பொன்னம்மாள்.
தங்கம்மாள் விருட்டென்று நான்கு எட்டு வைத்து இரண்டு வீடு தள்ளி அவள் வீட்டுக்கு எதிரிலிருந்த வீட்டுவாசலில் போய் நின்று, ” அடியேய், மரகதம் இங்க வாடி” என்றாள்.
அதுவொரு ஓலைகுடிசை வேய்ந்த குட்டிச் சுவர்கள் கொண்ட சிறிய வீடு. வீட்டிற்குள் நுழைய வேண்டுமென்றாலே இடுப்பு வரை குனிந்து தான் செல்ல வேண்டும்.
உள்ளே தேம்பித் தேம்பி அழுதுகொண்டே படுத்திருந்த மரகதம் பதிலுக்கு ஒரு வார்த்தையும் பேசவில்லை. வெளியே வரவுமில்லை.
” ஏன்டி நான் கூப்பிட்டா வரமாட்டியா? அவ்வளவு நெஞ்சழுத்தமாடி உனக்கு?” என்று திட்டிக் கொண்டே தண்ணீர் பிடிக்க விரைந்தாள் தங்கம்மாள்.
வாசலில் உட்கார்ந்திருந்த தேவிக்கு அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது அவள் அம்மா பொன்னம்மாவால்… ஒழுகிய மூக்குச்சளியை சிந்தி கையை சேலையில் துடைத்துக் கொண்டே திட்டிக் கொண்டிருந்தாள் பொன்னம்மாள்.
தேவிக்கு ஒண்ணுமே புரியவில்லை. “ஐயா, நேத்து ராத்திரி சொன்னத தானே செய்தோம். இவங்களும் ஐயா சொல்லும்போது அமைதியாக தானே இருந்தாங்க. இப்ப ஏன் நம்மளத் திட்டணும்” என்று யோசித்தவாறே திண்ணையின் ஓரமாக நகர்ந்து தனது கால்களை வெளியே தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள்.
தேவியின் பாட்டி, பொன்னம்மாளிடம், “நேத்து ராத்திரியே சொன்னேன்.. கேட்டீயாடி.. அவங்க ஐயா சொல்லாருனு இவ அவங்க அத்தையிடம் சொல்லிடப் போறானு சொன்னேன்ல…. சொன்ன மாதிரியே செஞ்சுபுட்டா.. பார்த்தியா” என்று ஏசினாள்.
“நா என்னத்தம்மா கண்டேன். இவ விடிந்தும் விடியாம இப்படி திண்ணையில் வந்து உட்கார்ந்து கொண்டு தொல்லைய இழுத்து விடுவானு…. ஆறாவது படிக்கிற கிடாமாட்டுக்கு அறிவிருக்க வேண்டாமா” என்று தேவியை அடிக்கப் போனாள்.
“ஏண்டி , அவள அடிக்கப் போற… என்னடி நடந்துச்சு” என்று பொன்னம்மாளைத் தடுத்து பட்டாசாலைக்குக் கூட்டிப் போய் உட்கார வைத்தாள் தங்கம்மாள்.
அதுவரை அமைதியாக படுத்திருந்த கைக்குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. ” எல்லாம் இந்த சனியன் பிடித்த கழுதையால் வந்தது. என்னா நேரம் இது பெறந்துச்சோ எல்லாமே நாசமாக தான் நடக்குது” என்று ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள் பொன்னம்மாள்.
சுகபிரசவம் தான் என்றாலும் குழந்தை பிறந்த அன்று தான் முதலமைச்சர் அண்ணாதுரை இறந்து போனார். அதற்கடுத்த இரண்டாம் நாளே பொன்னம்மாளுக்கு ஜன்னி வந்து ஆட்டம் கண்டுவிட்டது.
பார்க்காத வைத்தியமுமில்லை; போகாத கோவிலுமில்லை. இந்த இரண்டு மாசமாக பொன்னம்மாளை கவனித்துக் கொண்டு இதற்கு முன் பிறந்த நான்கு பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ள வந்தவள் தான் தேவியின் பாட்டி சீத்தம்மா.
பிள்ளையை பார்க்க வந்த தம்பி காசி சொன்னதைக் கேட்டு தான் மருமகன் தங்கய்யாவை மேலூருக்கு குறி கேட்க அனுப்பினாள் சீத்தம்மாள்.
குறி கேட்க போன இடத்தில் குறிகாரன் சொன்ன செய்திதான் எல்லோரையும் கலவரப்படுத்துவதாக இருந்தது.
“உங்க வீட்டில் பிறந்த பெண் வாரிசுகள் தான் உங்க மேல் பொறாமைபட்டு செய்வினை செஞ்சிருக்காங்க… இனிமே அவங்க கூட அன்னந்தண்ணி பொழங்கா இருப்பது தான் உத்தமம்” என்று குறிகாரன் சொன்னதாக வந்து சொன்னான் தங்கய்யா.
அப்பொழுது சாப்பிட்டுக் கொண்டிருந்த தேவியைப் பார்த்து, ” ஏய், நாளைக்கு உங்க ஐய்த்தகிய்த்த வூட்டுக்கு வந்தா வூட்டுக்குள்ள விடாதா.. ஐயா சொன்னாருனு சொல்லி அனுப்பிடு” என்று சொல்லிக் கொண்டே ரசம் சாதத்தை நன்கு பிசைத்து சாப்பிட்டான் தங்கய்யா…
வாயில் சோற்றையும் ஐயா வாங்கி வந்த சேவையும் மென்று கொண்டே, சரி..சரியென்று தலையாட்டினவள் தான் இந்த தேவி.
நடந்தவைகளை எல்லாம் அசை போட்டுக் கொண்டே அழுத பிள்ளைக்கு பாலூட்டிக் கொண்டிருந்த பொன்னம்மாளின் கண்களில் சுரந்த கண்ணீர் மார்பில் சுரக்கும் பாலைவிட விஞ்சுவதாக இருந்தது.
“அழுதுகிட்டே பால் குடுக்கா கூடாதுடி… பிள்ளைக்கு சீர் அடிச்சுடும்டி” என்று அதட்டிவிட்டு அடுத்த வீடான தனது வீட்டிற்கு நடந்தாள் தங்கம்மாள்.
இந்த நிகழ்விற்கு பின் மரகதத்தின் குடும்பத்திற்கும் அவளுடன் பிறந்த இரண்டு அண்ணன்மார்களுக்கும் இருந்த ஒட்டுறவு அறுந்தது என்றாகிவிட்டது..
Résultat de recherche d'images pour "tamil village life paintings clipart"  | Village backdrop, Village life, Photo booth backdrop
எத்தனை நாளைக்கு தான் ஒரே தெருவில் இருந்து கொண்டு பேசாமல் கொள்ளாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டே திரிவது என்று மரகதம் யோசிக்க ஆரம்பித்தாள்.
அண்ணன்களே இல்லையென்று ஆனபின்னர் அவர்கள் குடியிருக்க தந்த வீட்டில் ஏன் இருக்க வேண்டுமென்று எண்ணியவளாக அந்த குள்ளமான குடிசை வீட்டைக் காலி செய்துவிட்டு பக்கத்துத் தெருவில் குடியேறினாள் மரகதம்.
இப்பொழுது பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த தேவி பெரிய மனுசி ஆன போதிலும் அத்தை மரகதத்திற்கு சொல்லிவிடவில்லை.
மூத்த அண்ணன் வேலய்யாவின் மகள் கல்யாணத்திற்கும் கூட மரகதத்தை அழைக்கவில்லை.
அந்த சோகமோ என்னவோ, மரகதத்தை படுத்த படுக்கையாக்கிவிட்டது. விஷயமறிந்த பொன்னம்மாளும் தங்கம்மாளும் தங்களது வீட்டுக்காரர்களுக்குத் தெரியாமல் போய் பார்த்துவிட்டு வந்தனர்.
பேச்சு மூச்சு இல்லாமல் உசுரக் கையில் பிடித்துக் கொண்டு இருந்த மரகதத்தைப் பார்க்கவே பாவமாக இருந்தது எல்லோருக்கும்.
தனது கணவர்களிடம் கூறிய போது, அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்தது கண்டு அவர்களும் ஆச்சரியப்படவில்லை.
” என்ன தான் இருந்தாலும், சாதாரண சாக்கடைத் தண்ணி சண்டைக்கு மரகதம் வூட்டுக்காரன் அரிவாள எடுத்துக்கிட்டு மச்சான வெட்ட வந்திருக்கக் கூடாதுல பொன்னம்மா” என்று கூறினாள் தங்கம்மாள்.
“இருந்தாலும், நீ தேவிய ஒருமுறை போய் மரகதத்த பார்த்துவிட்டு வரச் சொல்லுடி” என்றாள் தங்கம்மாள்.
” ஏன்கா”
“சின்னப்புள்ள அறியாத வயசுல தெரியாம வூட்டுக்குள்ள வராத அத்தேனு சொல்லிப்புட்டா… அவளும் இப்ப வயசுக்கு வந்துட்டா.. இன்னும் மாப்பிள்ளை வேற அமையா கிடக்கு… அதுக்குதான்டி சொல்றேன்”
“சரிங்கக்கா” என்ற பொன்னம்மாள் வீட்டின் உள்வாசலிலிருந்த ஆட்டாங்கல்லில் மாவு ஆட்டிக் கொண்டிருந்த தேவியிடம் வந்தாள்.
” அடியே, உங்க அத்த மரகதம் முடியாம சாவக் கிடப்பதாக சொல்றாங்க… நீ போய் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடேண்டி” என்றாள்.
” நான் போகமாட்டேன்மா… நான் போனா அத்த திட்டுமுல” என்றாள் தேவி.
“அவங்களே பேச முடியாமல் கிடக்கிறாங்கடி, அதொல்லாம் திட்டமாட்டங்க.. நீ போயிட்டு வாடி”
“ஐயாவுக்கு தெரிஞ்சா உறியாமட்டையிலே அடிப்பாருமா… நான் போகல”
“அதெல்லாம் தெரியாது. நீ போயிட்டு வாடீ… நான் சொல்றேன்ல.. நான் உன் நல்லதுக்குத் தான்டி சொல்வேன்” என்று கெஞ்சாத குறையாகக் கூறினாள் பொன்னம்மாள்.
அரைகுறை மனசுடன் பயந்துக் கொண்டே எதிர் வீட்டு பூக்கட்டும் பல்கீஸ் அக்காவுடன் போனாள் தேவி.
மரகதம் வீட்டு வாசலிலே போய் நின்று கொண்டு உள்ளே எட்டி பார்த்தாள் தேவி. பல்கீஸ் அக்கா போய் கட்டில் அருகே நின்று கூப்பிட்டது கூட கேட்காத நிலையில் மரகதம் அத்தை படுத்திருந்ததைப் பார்த்து கண்கலங்கினாள்.
“மரகதம், மரகதம்… இங்க பாரு.. யார் வந்திருக்கா என்று? ” என்று பலமுறை கூப்பிட்ட பிறகே கண்விழித்தாள் மரகதம்.
” தேவி வந்திருக்கா..மரகதம்.. தேவி.. உங்க அண்ணன் தங்கய்யா பொண்ணு” என்றாள் பல்கீஸ்.
ஏறிட்டு பார்த்தாள் வாசல்படியை மரகதம். தேவி கதவை ஒரு கையில் பிடித்துக் கொண்டு சுவற்றில் அடித்திருந்த சிவப்பு டிஸ்டம்பரை விரலால் சுரண்டிக் கொண்டு நின்றிருந்தாள்.
” இங்க வாடி, தேவி.. உள்ளே வா… பயப்படுறா மரகதம்” என்று பல்கீஸ் அக்கா கூறிக் கொண்டே திரும்ப வந்து தேவியின் கரம் பற்றி உள்ளே இழுத்தாள்.
தேவி தட்டுத்தடுமாறி காலை உள்ளே வைத்த போது, ” நில்லுடி… ” என்று சப்தம் கேட்டு பயந்து நடுங்கினாள் தேவி.
“சும்மா, வாடி..” என்றாள் பல்கீஸ்.
“நில்லுடி…நீ ஏன்டி வர.. என் வீட்டுக்குள்ள வராத.. என்ன கால வைக்காதனு சொன்ன சிறுக்கிதானடி, போடி வெளியே” என்று இழுத்து பிடித்து வைத்திருந்த மூச்சையெல்லாம் விட்டு ஆங்காரமாய் அரற்றினாள் மரகதம்.
பல்கீஸ் அக்கா பிடித்திருந்த கையை உதறிக் கொண்டே, “இதுக்குத் தான் சொன்னேன், நான் வரலனு… எப்படி திட்டுதுனு பாருங்க” என்று சொல்லிக் கொண்டே சிந்திய கண்ணீரைத் தன் தாவணி முந்தானையில் துடைத்தாள் தேவி.
அதற்குள் மரகதத்தின் மருமகள் மஞ்சு, “அத்த.. வயசான காலத்துல.. இதென்ன பேச்சு.. சின்னப்பொண்ணு ஏதோ தெரியாம பேசியிருக்கும். இன்னுமா அதவே சொல்லுவீங்க ” என்றாள்.
அங்கே மரகதத்தைப் பார்க்க வந்த பக்கத்து வீட்டு பாட்டி, “சாகப் போற வயசுல வாழ வேண்டிய பொண்ணுக்கு சாபமிடாதடி… அது உனக்கும் நல்லதுக்குல” என்று அதட்டினாள்.
இதைக் கேட்டு அமைதியான மரகதம், எதுவும் பேசாமல் படுத்திருந்தாள்.
பின் அந்த பாட்டி சைகை காட்ட, பல்கீஸ் அக்காவுடன் மெதுவாக வந்து கட்டில் அருகே நின்றாள் தேவி.
மஞ்சு நீட்டிய கிண்ணத்திலிருந்த பாலை நடுநடுங்கும் கையால் மரகதத்தின் வாயில் மெது மெதுவாக ஊற்றினாள்.
மரகதத்தின் கண்களில் கண்ணீர் கசிந்தது. வாயிலிருந்து பால் வழிந்தது. தொண்டைக்குழியின் ஆட்டம் அடங்கியது. தேவி ஓவென்று விம்மி விம்மி அழுது கொண்டே வீட்டை நோக்கி ஓடினாள்.
              -முற்றும்-
 பா.அசோக்குமார்
மயிலாடும்பாறை
தேனி மாவட்டம்