சிறுகதை: கொத்தடிமை ஜனநாயகம் – இந்தி மூலம் : ஓம்பிரகாஷ் வால்மீகி (ஆங்கிலம் வழித் தமிழில் : மாதா)

சிறுகதை: கொத்தடிமை ஜனநாயகம் – இந்தி மூலம் : ஓம்பிரகாஷ் வால்மீகி (ஆங்கிலம் வழித் தமிழில் : மாதா)

கடந்த அறுபது ஆண்டுகாலமாக இல்லாத ஒரு நிகழ்வு ஊரையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஏற்கனவே கலங்கியிருந்த குளத்து நீரில் பெரிய களிமண் உருண்டையை புரட்டிப் போட்டது போன்று எழும்பிய அதிர்வுகளும், அதன்பின் ஏற்பட்ட அலைகளும் கிராமத்தின் வாழ்க்கையையே உலுக்கியது. நாளிதழ்களிலும், வானொலியிலும், தொலைக்காட்சிகளிலும் செய்திகள் வெளியாயின, சில தொலைக்காட்சிகளில். இது புரட்சிகரமான நடவடிக்கை எனவும், சில தொலைக்காட்சிகளில் அமைதியைக் கெடுத்து, சட்டம், ஒழுங்குப்பிரச்சனை ஏற்கடுமென புலம்பித் தள்ளினார்கள். அந்த ஊரில் உயர்சாதிக்காரர்கள் ஆத்திரம் பெருகி முகம் இறுகி காணப்பட்டார்கள். சேரிப்பகுதியிலிருக்கும் பெரிசுகளெல்லாம் என்ன நடக்குமோ… எனக் கலங்கிய போய் இருந்தார்கள். ஆனால் இளவட்டங்கள் மத்தியில் உற்சாகம் பொங்கி வழிந்தது. ஆவிழ்த்துவிட்ட கன்றுக்குட்டி துள்ளி விளையாடுவது போல் எழுச்சியுடன் குதுகலம் அடைந்தார்கள்.

சுயராஜ்யம் வந்ததிலிருந்து சௌத்திரி குடும்பத்தினர்தான் பரம்பரை பரம்பரையாக பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வந்நார்கள். ஆவர்கள்தான் சுறுறுக்கிராமங்கள் முழுமைக்கும் முடி சூடா மன்னர்கள். தற்போது தங்களது மேலாதிக்கத்திற்கு, குலப்பெருமைக்கும், சாதிச்செல்வாக்கிற்கும் சரிவு வந்துவிடுமோ என அஞ்சினார்கள். ஆம்.. அரங்சாங்கம் பஞ்சாயத்து தேர்தலை அறிவித்துவிட்டது. இதுவரை பொது தொகுதியாக இருந்த இந்த பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உயர்சாதி வேட்பானர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். தற்போது தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்த வேட்பாளர்தான் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று அரசு அறிவித்துள்ளது.

செய்தியைக் கேள்விப்பட்ட அனைவருக்கும் திகில் பற்றிக் கொண்டது. மேல்சாதிக்காரர்களெல்லாம் தலைவர் சௌத்திரியின் வீட்டு முன்பு கூடினார்கள். முன்னே பெரிய மைதானம். மைதானத்தின் மூலையில் ஒரு மேடை கட்டப்பஞ்சாயத்து செய்வதற்கென்றே அமைக்கப்பட்டது. அந்த இடத்திலிருந்துதான் தலைவர் தீர்ப்பு சொல்வார்.. வாழையடி வாழையாக சௌத்திரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தர்பார் நடத்தி வந்தார்கள். திரண்டிருந்தவர்கள் அச்சத்தோடு எதிர்பார்த்துக்கொண்டியிருந்த சௌத்திரி மேடையேறினார்.
கேடுகாலம் வந்திருச்சு… இந்த ஈனசாதிப் பயல்களுக்கு ஓட்டுப்போட்டு அனுப்பி வச்சா என்ன நடக்குமோ… தெரியலை… செம்மையா சட்டை போடத் தெரியாது. இவனுகள்ளாம் பஞ்சாயத்து தலைவரா வருவாங்களாம்… சர்க்காரு…. அமைதியா இருந்த ஊரைக் கெடுத்குதே…. கடவுளே! எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு ஏன் சும்மா நிக்கிற… ஆவேசமாய்க் கத்தினார்.

ஐயா… உங்களுக்கத்தான் அரசாங்கத்துல மேல்மட்டத்துல உள்ளவங்களையெல்லாம் தெரியுமே… அவங்களப் பார்த்துப் பேசி இத நிறுத்த முடியாதுங்களா… இது நடந்தா, நம்ம ஊருக்கு மடடுமல்ல, நாட்ல இருக்கிற சாதி முழுக்கவும் அவமானம். கூட்டத்திலிருந்த ஒரு பெரியவர் ஆவேசமாய்க் கத்தினார்.

எல்லா வழியிலேயும் நான் பாத்துடேன். ஓன்னும் பிரயோஜனம் இல்லை. மேல்மட்டத்திலே எல்லாம் நம்ம பயலுகதான் இருக்காங்க என்ன செய்ய.. கையை விரிச்சுட்டாங்க… ஒவ்வொருத்தனும் பதவி, சம்பாத்தியம் அலையுறாங்க.. நாமதான் அசிங்கப்பட்டு நிக்க வேண்டிருக்கு… செனத்திரி சோகத்துடன் கூறினார்.

அவருடைய நெஞ்சு கொதித்தது. ஜீரணிக்கவே முடியவில்லை. சர்க்கார் உத்தரவை எப்படி மடைமாற்றுவது? பஞ்சாயத்து தலைவராக ஒருவர் பதவிப் பிரமானம் எடுத்து விட்டால், மீண்டும் அவரை நீக்க முடியாது. பல்லாண்டுகாலம் பஞ்சாயத்து தலைவராக இருந்ததால் அவருக்கு எல்லா விஷயங்களும் தெரிந்திருந்தது. ஊர்த்தலைவரின் குடும்ப பாரம்பரியத்திற்கு பலத்;த அடி விழப்போவதை எண்ணி கிராமமே குமுறிக்கொண்டிருந்தது. சாஸ்திர, சம்பிரதாய புனிதத்தின் மீதுள்ள நம்பிக்கையும், பயமும் இருப்பதால் தான் நமக்கு மரியாதை கிடைத்துவருகிறது. அவர்களை ஒடுக்கி கீழேயே வைக்க முடிகிறது. அதிகாரம் கைக்கு வந்துவிட்டால் சாதிக் கட்டுமானத்தைத் தகர்த்து விடுவார்களே…. குதிரைகள் குறிக்கோளாற்று லாயத்தையே சுற்றுவது போல், சௌத்திரியைச் சுற்றி நின்ற ஆமாம் சாமிக் கூட்டமும் எதைப் பேசுவதென்று தெரியாமல், ஆளுக்கொன்று சொன்னார்கள். ஊர்க்கூட்டத்தில் இத்தனை ஆண்டு காலமாக மாற்றுக் கருத்துகள் சொல்வதற்கு பழக்கப்படுத்தவில்லை. யாரை நம்பி எதைச் செய்வது?

இரவு முழுக்க இமைகளை மூடவில்லை. மனதில் நிம்மதி இருந்தால்தானே தூக்கம் வரும். ஓயாத சிந்தனைகள் அவர் மனதைப் போட்டு புரட்டிக் கொண்டிருந்தன.

Dalits prevented from cremating body at public crematorium in ...

கோப்பு படம் 

விடிந்ததும் முதல் வேலையாக நகரத்திலுள்ள பெரிய அதிகாரிகளை மீண்டும் சந்திக்கச் சென்றார். அவர் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை. மாகாண அதிகாரிகளிடம் சமுதாய உணர்வோடு புரியும்படி சொன்னால் அரசு அறிவிப்பை மாற்றி விடுவார்கள் என்று நம்பினார். கடைசி கட்ட ஆயுதமாக சாதி உணர்வைப் பயன்படுத்தினார். ஆனால் நிலைமை தற்போது அடியோடு மாறிவிட்டது. அவர் யார் யாரையோ சந்தித்து கெஞ்சினாலும் அரசாங்க உத்தரவை மாற்ற முடியவில்லை.

மூன்று நாள் கழித்து ஏமாற்றத்துடன் ஊருக்கு வந்தார். ஊர் கொந்தளித்துக் கொண்டிருந்தது. வீட்டு முன்பு கூடினார்கள்.

எல்லோரையும் பாத்தாச்சு.. நம்ம சொந்தங்களெல்லாம் பெரிய ஆபிசரா இருக்காங்க.. ஒன்னும் முடியலை.. அரசாங்க அறிவிப்பை யாரும்மாத்த முடியாதுண்டாங்க.. இப்ப புதுப்புது கட்சியெல்லாம் இவனுகளுக்கு சப்போர்டா வாராங்க.. சௌத்திரி விரக்தியுடன் பேசினார்.
ஊரைத் தாண்டி என்ன நடக்குதுன்னு தெரியாது இவனுக பொறுப்புக்கு வந்து நிர்வாகம் பண்ணினா கோமாளித்தனமா இருக்காது..?

என்ன.. பெரிய ஜனநாயகம்… யாரு யாருக்கு என்ன தொழில்னு ஆதியிலேயே பிரிச்சு வச்சிருக்கானய்யா… இத்தன வருஷமா நாங்க பரம்பரையா பதவியிலே இருந்து இந்த ஊருக்கும் நாட்டுக்கும் பாடுபட்டதுக்கு என்ன மரியாதை…! எங்கிட்ட அடிமையா இருந்தவன் எனக்கே உத்தரவு போடுவானா? அவர் உள்மனது குமுறிக் ;கொண்டிருந்தது.
அதிகாரிகளுக்கு சௌத்தியின் ஆத்திரம் நன்றாகப் புரிந்தது. வேறு பிரச்சனையென்றால் போட்டி போட்டுக் கொண்டு உதவுவார்கள். இது தேர்தல். யாரும் எதுவும் செய்யமுடியாது. துறைரீதியான பலன்கள் சௌத்திரி எவ்வளவோ பெற்றுள்ளார்.

இதபாருங்க மாமு…. ஓன்னும் கவலைப்படாதீங்க…. யார் பஞ்சாயத்து தலைவரா இருக்கான்றது பிரச்சனை இல்லை. ஊர் அதிகாரமெல்லாம் உங்க கையிலதானே இருக்கு. ஊர்ல ஒரு புல்லு பூண்டு கூட உங்கள மீறி அரசியல் பண்ண முடியுமா? ஊறவினரான அதிகாரி பக்குவமாகச் சொன்னார்.

வேறு ஏதாவது கட்டப் பஞ்சாயத்தோ.. குடும்ப பிரச்சனையோ… நிலத்தகராறோ இருந்தால் சௌத்திரி விஸ்வரூபம் எடுத்து, மீசையைத் திருக்கிவிட்டு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி இருப்பார். இது அப்படி அல்ல. நினைத்துப் பார்த்து நடுங்கினார். பதவி பறிபோய்விட்டால் சுற்றி உள்ளவர்களுக்கும்…… மற்ற சாதிக்காரர்களுக்கும் நம்மீது உள்ள பயம் போய்விடுமே…. எவ்வளவு பணம், சொத்து, செல்வாக்கு இருந்தாலும், அதிகாரத்தில் அமர்ந்து அடக்கியாளுகின்ற பதவி சுகமே அலாதியானது.

பஞ்சாயத்து தேர்தல் நெருங்கி வந்துவிட்டது. தாழ்த்தப்பட்ட தொகுதியை பொதுத் தொகுதியாக்குவதற்கு சௌத்திரி எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவருடைய சாதிக் கட்சித் தலைவர்களையெல்லாம் பேசிப்பார்த்தார். எல்லோரும் ஒரே குரலில் கூறினார்கள். கொஞ்ச காலம் பொறுங்கள். அடுத்த முறை மாற்றிவிடலாம். ஊங்களுக்கு ஒன்றும் குறைவில்லை. இப்ப வரைக்கும் கிங்கா இருந்தீங்க… இனி கிங் மேக்கரா மாறுங்க…. நீங்க கைநீட்ற ஆள் தலைவரா வரப்போறான். அவ்வளவு தானே… எப்பவும் போல உங்களுக்கு அதிகாரம் இருக்கும்……

ஆனால் இத்தகைய போதனைகளில் அவருக்கு சமாதானம் ஆகவில்லை. அவருடைய மண்டையில் நிலைகொண்டிருக்கும் அழுத்தத்தைத் தணிப்பதற்கு யாருக்கும் முடியவில்லை. தலைவர் பதவி போச்சே….

உள்ளாட்சித் தேர்தல் வேலைகள் துவங்கி விட்டன. வாக்காளர் பட்டியல் வெளியிடுவது, வாக்குச்சாவடி அமைப்பது, மண்டல வாரியாக அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டம் நடத்துவது போன்ற வேலைகளை அரசு அதிகாரிகள் மும்முரமாக செய்து கொண்டிருந்தார்கள். வேட்புமனு தாக்கலுக்கு நாள் நெருங்க, நெருங்க சௌத்திரிக்கு கவலையும், பயமும் கூடினாலும், அவர் மனதின் ஒரத்தில் ஒரு திட்டம் கனன்று கொண்டிருந்தது.

சாதியில் முக்கியமான பிரமுகர்களை மட்டும் வரவழைத்து சௌத்திரி அவர் மாளிகையில் ரகசிய கூட்டம் நடத்தினார். வந்தவர்களெல்லாம் நம்பிக்கையில்லாமல் அரை மனதுடனே வந்தார்கள். இனி கூட்டம் நடத்தி என்ன செய்ய…. என்றே நினைத்தார்கள். ஆனால் சௌத்திரியின் விருப்பத்திற்கு மாறாக அவர்களால் செயல்பட முடியாது. இருந்தாலும் சாதிக்காரர்கள் மத்தியில் பொதுவான அம்சம் இழையோடியது. கீழ்சாதிக்காரன் பஞ்சாயத்து தலைவராக வரக்கூடாது அறிவிக்கப்பட்டுள்ள ரிசர்வ் தொகுதியை எப்படி மாற்றுவது? தலைவர் பதவிக்கு யார் போட்டியிருவார்? இதுதான் அவர்களுக்கு புரியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை.

கூட்டத்தில் ஆளுக்கு ஆள் உரத்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். வெற்றுக் கூச்சல்களினால் ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை. இதையெல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்த மாஸ்டர் போலாராம் எழுந்து நின்றார்.

கொஞ்சம் அமைதியாக இருங்கய்யா… சௌத்தி;ரிஜி நீங்கள் அனுமதித்தால் நான் ஒரு கருத்து சொல்லலாமா?

சொல்லுங்க மாஸ்டர்ஜி….. இது என்னோட பிரச்சனை மட்டும் இல்லை. ஊர்ப்பிரச்சனை நம்ம சாதியோட மானப்பிரச்சனை… உங்க மனசுல என்ன திட்டம் இருக்குனு சொல்லுங்க….
அரசாங்க அறிவிப்பு நம்ம சாதிக்கு எதிரா இருக்கு… இந்த நிலமையில் ஒரு குறிப்பிட்ட காரியத்த நேரிடையா செய்றதை விட மறைமுகமாக செய்வதே பலனளிக்கும். எதுக்காக நெய் எடுக்க உங்க கையை பயன்படுத்தனும்…. மாஸ்டர் போலாராம் மனதில் ஒரு திட்டத்தை வரைந்து அதற்கான பீடிகை போட்டார்.

‘மாப்ளே… வாத்தியார் வேலையைக் காட்டிட்ட பாத்தாயா… மாயாஜாலக் கதை சொல்றதையெல்லாம் பள்ளிக்கூடத்திலே வச்சுக்க.. விஷயத்த நேரடியா சொல்லய்யா… சௌத்திரியின் உறவினர் சத்மீர் போலாராமிடம் கூறினார்;

‘தலைவர் ஐயா, பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு உங்ககிட்ட இருக்கிற ஒருவனையே வேட்பாளராக நிறுத்தினால் என்ன? அப்படி செய்தா எப்போதும் போல நாம நினைச்சது நடக்கும். நமக்கு எந்தவித மரியாதைக் குறைவும் வராது…. சொல்லிவிட்டு போலாராம் அமர்ந்தார்.
கூட்டத்திரிருந்த முக்கிய பிரமுகர் பூப்சிங்கிற்கு இந்தக் கருத்து பிடிக்கவில்லை.
‘தலைவரா வருபவன் நாளைக்கு நமக்கு எதிரா மாறிட்டான்னா என்ன செய்யமுடியும்?
ஆனால் தேகாசிங்கிற்கு இந்த திட்டம் பிடித்திருந்தது. தன்னுடைய அடர்ந்த மீசையைத் திருகிக் கொண்டே எழுந்தார்.

‘மாஸ்டர் போலாராம் சொன்னது ரொம்ப அர்த்தமுள்ளது. ஊருக்கு கட்டுப்பட்டு, விசுவாசமாக நடக்கக் கூடிய, பஞ்சாத்து தலைவருக்கு தகுதியானவன் அவங்க ஆளுகள்ள எவனாச்சும் இருக்கானா மாஸ்டர்….

என் மனசுல ஒருத்தன் இருக்கான்….
அனைவருடைய கண்களும் மாஸ்டரின் முகத்தையே நோக்கின. அவர் சொல்லப் போகிற ஒரு வார்த்தை ஊரையே புரட்டிப் போடும்…

சொல்லுங்க… சீக்கிரம் சொல்லுங்க…. யார் அவன்?
‘சௌத்திரி ஐயா, உங்க வயல்ல உழுதுக்கிட்டு, மாடுகளையெல்லாம் பாத்துக்கிறானே… கர்மா.. அவன் தான்.

தலைவர் சௌத்திரி துள்ளி எழுந்தார். ரத்தம் சூடேறியது. கண்கள் சிவந்தன. ஏய் வாத்தியாரே… குடிச்சுட்டு வந்திருக்காயா… என்ன பேசுற… சுய நினைவோடதான் இருக்கியா… படிக்காத மண்ணாங்கட்டி, முட்டாப்பய அவனப் போயி தலைவரா ஆக்கனுங்கிறாயே…
மாஸ்டர் போலாராம் விளக்கிச் சொல்ல எழுந்தார். வாய முடிக்கிட்டு உட்காரய்யா… சௌத்திரி அதட்டினார்.

Won't back off: New turn to India's caste conflicts - india news ...
கோப்பு படம் 

இந்த யோசனை ஒன்னும் மோசமானதா இல்லை தலைவரோ.. கர்மாவைத் தலைவராக்கினா நம்ம சொல்படி எல்லாம் கேட்பான். எப்படியிருந்தாலும் பின்னாடி இருந்து நீங்கதானே ஆளப் போறீங்க… தலைவரோட சந்தன நாற்காலியிலே நீங்க மட்டுந்தானே உட்கார முடியும்….. யோசிச்சு பாருங்க…. தேகாசிங் நயமாகக் கூறினார்.

நிலமை கைமீறிப் போகாதே…? பூப்சிங் பதறி எழுந்தார் நீங்க நெனைக்கிற மாதிரி இது லேசான விஷயம் இல்லை…. இந்த கீழ்சாதி பயலுகள நம்ப முடியாது. காலம் ரொம்பக் கெட்டுக் கிடக்கு. நம்ம தயவுல பதவிக்கு வந்து நாளைக்கு நமக்கு எதிரா திரும்பிடுவானுங்க. பிறகு நாம ஒன்னுமே செய்ய முடியாது. அசிங்கப்பட்டது தான் மிச்சம்.

ஏனக்கு ஒரு யோசனை இருக்கு…..
எல்லோரும் ஆவலுடன் அவரையே பார்த்தார்கள்.
‘தேர்தல் நடந்தாத்தானே எவனும் தலைவரா வருவான்……
தேர்தல் நடக்கலைன்னா….

அதெப்படி முடியும்?
முடியும்…… யாருமே வேட்புமனு தாக்கல் செய்யலைன்னா தேர்தல் எப்படி நடக்கும்? சர்க்காரு நமக்கு அடிபணிஞ்சுதான் ஆகனும்…. தேர்தலை தள்ளப் போட்டுக்கொண்டே போனா… ஊராட்சி மன்றம் அமையாது… எவனும் தலைவரா வரமுடியாது.

அட இது நல்ல திட்டமா இருக்கே… இவனுகள ஒடுக்க இதுதான் சரியான வழி……
பெருமாபாலோர் முகத்தில் மகிழ்ச்சி சிலர் இன்னும் ஆச்சரியத்தில் உறைந்து போய் இருந்தார்கள். இது நடக்குமா… ஆளாளுக்கு இதன் சாதக பாதக அம்சம் பற்றியும், சாதி மானம் காப்பாற்றப்படுவது பற்றியும் காரசாரமாக விவாதித்தார்கள். நடுத்தர வயதுக்காரர்களுக்கு ஒரு சந்தேகம். ஒருவர் எழுந்து கேட்டார்.

இந்த திட்டத்தை ஊர் ஜனங்க ஒத்துக்குவாங்களா…? கூட்டத்தில் ஒரே அமைதி.
விஜயசிங் எழுந்து பேசினார். தலைவரே! தேர்தலைப் புறக்கணிப்பது அரசு உத்தரவுக்கு எதிரானது இல்லையா? இதனாலே எதிர் மறையான விளைவுகள்தான் வரும.; இந்த நடவடிக்கை கிராம வளர்ச்சிக்கு எந்த விதத்திலும் உதவாது…..

படிக்காதவங்களையும் அறிவில்லாதவங்களையும் அரசாங்கம் நம்ம தலையிலே கட்டப் பாத்தா நாம வேற என்ன செய்ய முடியும்..? தெகேதார் சுனில்சிங் கேட்டார்.

ஜனநாயகத்திலே பணக்காரன் ஏழை படிச்சவன் படிக்காதவன் கீழ்சாதி, மேல்சாதியெல்லாம் கிடையாது. அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கனும.; நீங்க சொல்றது ஜனநாயகத்துக்கு விரோதமாகல இருக்கு… விஜய்சிங் கோபமாகப் பேசினார். விஜயசிங்கின் பேச்சு தங்களுக்கு எதிராகத் திரும்புவதை உணர்ந்த தலைவர் சௌத்திரி வேறு யாரும் அவருக்கு ஆதரவாகப் பேசும் முன்பு விவாதத்தை தன் பக்கம் திருப்பினார்.

யார்யா சொன்னது? என்னிக்கு சொன்னோம்…. நாங்காளல்லாம் ஜனநாயகத்துக்கு எதிரிகனு. அந்தக் காலத்திலிருந்து பஞ்சாயத்து அமைப்பை நாங்கதான் முழுமையா நம்புறோம். அதை செயல்படுத்தி வாரோம்… சமூகத்துல எடுக்குற எல்லா முடிவுகளும் பஞ்சாயத்தில் தானே எடுக்கிறோம். இந்த உலகத்துக்கு ஜனநாயகதைத் கத்துக் கொடுத்ததே நாங்கதானய்யா… இன்னிக்கும் சமூகத்துல ஒத்துமையா இருக்கோம்னா நாங்க கடைப்படிக்கிற ஜனநாயகம் தான் காரணம். இப்ப என்ன பிரச்சனைன்னா… ஜனநாயகம்கிற பேராலே அரசாங்கம் எந்த முடிவையும் எங்க மீது திணிக்கக் கூடாது. செல்வாக்கு உள்ளவன் போட்டி போட்டு ஜெயிச்சு வரட்டும். அதுதான்யா ஜனநாயகம்…..

விஜய்சிங் மேலும் விவாதிக்க விரும்பவில்லை. ஆனால் பஞ்சாயத்து தேர்தலை ஊர்க்காரர்கள் சாதிய ஆதிக்கத்தோடு ஆனுகுவதை உணர்ந்து மென்மையாகப் பேசினார்.

West Bengal panchayat polls deferred: Govt to put administrators ...

பஞ்சாயத்து தேர்தலோட உண்மையான நோக்கமே எல்லாருக்கும் அதிகாரம் கிடைக்கனும்கிறது தான். இந்த தடைவ நம்ம பஞ்சாயத்து தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கி இருக்காங்க. அத நடக்க விடாம தடுக்கிறது ரொம் தப்பு. இடஒதுக்கீடு இல்லாம தாழ்த்தப்ட்டவரை பஞ்சாயத்து தலைவரா வரவிட்டுருவீங்களா..?

யார் தடுத்தது? போட்டி போடட்டும் ஜெயிக்கட்டும். சௌத்திரி ஆவேசமாய்க் கத்தினார்.
இத்தன வருஷமா அவங்கள்ள யாரையாவது தலைவரா வரனும்னு எப்பவாச்சும் நினைச்சீங்களா?

இங்க பாரு தம்பி இது மாதிரி முற்போக்கு ஜனநாயகம்னு பேசி வயசுப் பயல்களையெல்லாம் கெடுக்காதே. அவங்களுக்கு தகுதி செல்வாக்கு இருந்தா தலைவரா வரட்டும் பேச்சை நிறுத்திட்டு உட்கார். தலித்துகளுக்கெல்லாம் தலைவராகி டெல்லியிலே போய் அரசியல் பண்ணலாம்னு கனவு கண்டினா அத இன்னயோட மறந்திடு. டெல்லி நமக்கு ரொம்ப தூரம். தலைவர் சௌத்திரி ‘ஜனநாயகத் தன்மையுடன்’ ஆலோசனை கூறி விவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

அதற்குப் பிறகு சௌத்திரியின் பேச்சுக்கு மறுப்போ, எதிர்ப்போ எவரும் சொல்லவில்லை. கொஞ்ச நேரம் கூட்டம் அமைதியாக இருந்தது. சௌத்திரி கூட்டத்தை முடித்து வைக்கவில்லை. தலைவர் ஒரு கருத்தை முடிவாகச் சொல்லிவிட்டால் கூட்டம் முடிந்ததாகக் கருதப்பட்டு வழக்கம் போல் ஒவ்வொருவராகக் கலைந்து சென்றார்கள்.

தெகேதார் சுனில்சிங்கும், தேகாசிங்கும் எல்லோரும் போன பின்பும் உட்கார்ந்திருந்தார்கள். சௌத்திரியின் நிழலுழக வேலைகளையெல்லாம் இவர்கள்தான் செய்வார்கள். அவர்களுக்கு இப்போது வேலை வந்து விட்டது.

அடுத்து நாங்க என்ன செய்யனும்……
மடிமீது தலையனையை வைத்து அதன்மீது கைகளை படரவிட்டிருந்த சௌத்திரி, மெதுவாக அதை எடுத்து கீழே வைத்துவிட்டு அமைதியாகச் சொன்னார்.

இனிமேல் தான் நாம் கவனமா இருக்கனும், ஊரிலிருந்து ஒரு பய வேட்புமனு தாக்கல் செய்யக் கூடாது. அப்படி மீறி எவனாச்சும் தாக்கல் பண்ணினா, அவன் வாபஸ் வாங்கனும்.. இல்லாட்டி மனு தள்ளுபடியாகனும். அதுக்காக என்ன வேணும்னாலும் செய்யுங்க….

சரிங்கய்யா இதுக்காக சாம, பேத, தான, தண்டம் எல்லாத்தையும் பயன்படுத்துவோம். நம்ம ஊரோட கௌரவம் அந்தஸ்து எல்லாம் இதுலதானே அடங்கியிருக்கு கிராமத்தில் பதட்டமான கூூழல் உருவானது. வுpஜயசிங் கூட்டத்திலிருந்து பெருத்த ஏமாற்றத்தோடு திரும்பி வந்தார். அவர் மனதில் ஆயிரம் கேள்விகள் அலைமோதிக் கொண்டிருந்தன. ஒரு தனிமனிதன் என்ன செய்ய முடியும்? காகித்ப்போர் வேண்டுமானால் நடத்தலாம். பஞ்சாயத்து அமைப்புகளே தலித்துக்கு எதிராகத்தான் இருக்கின்றன. விஜயசிங்கினால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஊர்க்கட்டுப்பாட்டை மீறி ஒருவரும் செல்லமாட்டார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கையில், காலமாறுதல் ஆதிக்க சக்திகளுக்கு அதிர்ச்சியைத் தந்தது. இருபத்தாறு பேர் வேட்புமனு தாக்கல் செய்தார்கள். சேளத்திரியின் ஆட்கள் பஞ்சாயத்து ஆபீசுக்கே வந்து எவ்வளவோ சொல்லியும், மிரட்டியும் பலிக்கவில்லை. புதிய தலைமுறையினர். புதிய சிந்தனைகளோடு ஆர்வத்துடன் வெளிவரத் துவங்கினர். வேட்புமனு தாக்கல் முடிந்து விட்டது. மறுநாள் வாபஸ் வாங்கும் நாள். திடீரென்று நிலமை மாறிவிட்டது. சாதியக் கட்டமமைப்பு முழுமையாக நொறுங்கி விழுந்து விடவில்லை. தலித் அல்லாத இருபது பேர் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்கள். ரிசர்வ் தொகுதியில் தங்களுடைய மனு தள்ளுபடியாகும் என்று தெரிந்தே மனு தாக்கல் செய்திருந்தார்கள். இறுதியாக தாழ்த்தப்பட்ட ஆறு வேட்பாளர்கள் களத்தில் நின்றார்கள். சௌத்திரியின் திட்டத்திற்கு பலத்த அடி விழுந்தது.

மறுநாளிலிருந்து அந்த ஆறு பேரையும் ஊரிலிருந்து விலக்கி வைத்தார்கள். ஆறுபேரில் ஒருவரான ரூப்சந்தை தெகேதார் சுனில்சிங் சந்தித்துப் பேசினார்.

இதப்பாருய்யா ஊரப் பகைச்சுக்கிட்டு நீ வாழ முடியாது. நீ எங்கேயும் வேலை பாக்க முடியாது. பலசரக்கு சாமான், தண்ணீர் தர மாட்டாங்க இது ஆரம்பம்தான். போகப் போக நிலமை விபரீதமாகும்… நீ ஜெயிச்சாலும் தலைவராக முடியாது. அதுக்கு முன்னே உன் உடம்பிலே உயிர் இருக்காது… போ…. போயி வாபஸ் வாங்கிட்டு வா…..

சும்மா மிரட்டாதீங்க. நான் வாபஸ் வாங்க முடியாது. தேர்தல்லே நிக்கத்தான் போறேன் என்ன விளைவுகள் வந்தாலும் சந்திக்கத் தயார். ரூப்சந்த் திட்டவட்டமாகக் கூறினார்.
பாக்கலாம்டா… நீ எப்படி பஞ்சாத்து தலைவரா வருவீன்னு… வீணா அழிஞ்சு போயிடுவே… தெகேதார் சுனில்சிங் வன்மத்தோடு சென்றுவிட்டார்.

ரூப்சந்த் சேரியில் கொஞ்சப் பேரை அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றார். ஆனால் இன்ஸ்பெக்டர் புகாரை வாங்க மறுத்து புகார் கொடுக்க வந்தவர்களையே குற்றஞ்சொன்னார்.

தேர்தல் வேலைகளெல்லாம் சுமுகமா போய்கிட்டு இருக்கு. நீ ஒருத்தன்தான் அது இதுனு சொல்லி ஊர் அமைதியைக் கெடுக்கிற….

சார் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான் வேட்புமனு தாக்கல் செய்திருக்கேன். வாபஸ் வாங்கச் சொல்லி தெகேதார் சுனில்சிங் என்னை பகிரங்கமா மிரட்டி நெருக்கடி கொடுக்கிறார். ஆதனால்தான் அவர் மீது புகார் கொடுக்க வந்தேன். அவர் மீது…

Voting in Indian elections reaches next-to-last phase | The Daily Star

ரூப்சந்த் சொல்லி முடிக்குமுன் இன்பெக்டர் இடைமறித்தார். பஞ்சாயத்து தேர்தலுங்கிறது எவ்வளவு பெரிய சமாச்சாரம். அதெல்லாம் ஊர்ப்பெரியவங்க பாத்துக்கிடுவாங்க. உனக்கெதுக்கய்யா இந்த வேலையெல்லாம்… போயி வேட்புமனுவை வாபஸ் வாங்கிட்டு வா…..
நான் ஏன் வாபஸ் வாங்கனும்? ஒரு இந்தியக் குடிமகன் என்ற முறையிலே அரசியலமைப்புச் சட்டம் எனக்கு இந்த உரிமைகளை வழங்கி இருக்கு…. அதைத் தடுப்பதற்கு தெகேதார் சுனில்சிங் யார்..? சட்டம் ஒழுங்கையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கிறவரு நீங்க…. அதனால தான் உங்ககிட்ட புகார் கொடுக்க வந்தேன் தயவு செய்து புகாரை பதிவு செய்யுங்க சார்…
சட்டம் ஒழுங்கப் பத்தி எனக்கு சொல்லித் தாரீயா நீ….. வெளியே போடா முதல்ல….

போலீஸ்னா பொதுமக்களுக்கு நண்பன்தானே. ஏன் புகாரை வாங்காமல் என் மீது கோபப்படுகிறார். ரூப்சந்தால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சார் மேல்சாதிக்காரங்களோட நீங்களும் சேர்ந்துக்கிட்டா எங்களுக்கு யார் சார் பாதுகாப்பு? இந்த முறை பஞ்சாயத்து தலைவர் பதவி தலித்துக்கு ஒதுக்கினதாலே மேல் சாதிக்காரங்க தேர்தல் நிறுத்த சதி செய்யுறாங்க…… நீங்களும்…

எல்லாந் தெரியுதுல. ஏன் ஆபத்துல போய் மாட்டிக்கிற… வேலையைச் செஞ்சோமா பொண்டாட்டியைப் பாத்தோமா பிள்ளைகளை வளத்தோமானு இருக்கனும். தலைவர் பதவியிலே உட்கரனும்னு கனவு காணாதே….யார் பதவிக்கு வரனும்னு ஒரு வரமுறை இருக்கு. அவங்கதான் வரனும.; இதான்யா ஆண்டாண்டு காலமா இருக்கிற நியதி.. இன்ஸ்பெக்டர் சனாதன ஞானத்தோடு கூறினார்.

என்னுடைய உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லை. வருஷமெல்லாம் நாங்க இப்படியேதான் இருக்கனுமா? அதைத்தான் நீங்க விரும்புறீங்களா சார்… சொல்லிவிட்டு ருப்சந்த் வெளியேறினார்.

இந்த வார்த்தைகள் இன்ஸ்பெக்டர் மனதைத் தைத்தது. தன்னுடைய அடர்ந்த மீசையை முறுக்கி அதன் ஓரத்தைக் கூர்மையாக்கினார். வெளியே போய்க் கொண்டிருந்த ரூப்சந்த்தைப் பார்த்து சத்தமாகச் சொன்னார்.

டேய் நீயும் உன் சாதிக்காரப் பயல்களும் வாபஸ் வாங்கிட்டு வாங்க. உங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்து என்ன உதவி வேணும்னாலும் செய்யிறேன். இந்த ரஜபுத்திரனோட வார்த்தையைக் கேட்டா உங்களுக்கு நல்ல காலம். இல்லாட்டா… உங்க பிரச்சனையை நீங்களே பார்த்துக்கிட வேண்டியது தான்….

இந்த வார்த்தையைக் கேட்டதும், ரூப்சந்த் சட்டென்று நின்று திரும்பி பார்த்தார். இன்ஸ்பெக்டர் சாதிப் புத்தியைக் காட்டிட்டாரே என மனதில் நினைத்துக் கொண்டு அமைதியாகச் சொன்னார்.
சார்…. எங்களுக்கு நீங்க உதவி செய்யுறதுனாலே உங்களுக்கு என்ன சார் ஆதாயம் கிடைக்கப் போகுது? எனக்கு இப்பத்தான் புரியுது. முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் இங்கே வந்திருக்க மாட்டேன். நீங்களும் எனக்கு புத்திமதி சொல்லியிருக்க மாட்டீங்க….

இவையெல்லாம் சௌத்;திரியின் நிழலுலக வேலைகள் என ரூப்சந்திற்குத் தெரிந்தது. பஞ்சாயத்து தலைவர் பதவியை பரம்பரைச் சொத்தாகப் பாவித்து, சாதித்திமிரினால் விட்டுக்கொடுக்க மனசில்லை…..ஊர்ப் பெரியவர்கள், போலீஸ் தாலுகா ஆபீஸ் அதிகாரிகள் நீதிமன்றம் ஏன் ஒட்டுமொத்த அரசு எந்திரம்ம முழுவதும் மேல்சாதிக்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

ரூப்சந்த் வீடு திரும்பும் முன்பே, செய்தி காட்டுத் தீ போல் கிராமம் முழுவதும் பரவிவிட்டது. தெகேதார் சுனில்சிங் மீது புகார் கொடுத்ததையும், அதை இன்ஸ்பெக்டர் வாங்க மறுத்து வந்தவர்களையே திட்ட அனுப்பியதையும் ஊர் முழுக்க பேசிக்கொண்டிருந்தார்கள். சேரி மக்களுக்கு தர்மசங்கடமான நிலையாகிப் போனது. ஆளுக்கு ஆள் வந்து ரூப்சந்தை சமாதானப்படுத்திப் பார்த்தார்கள்.

தண்ணீர்க்குள்ளே இருந்துக்கிட்டு முதலையை எதிர்த்து சண்டை போட முடியாது. ஆபத்தைப் புரிஞ்சுக்கோப்பா…..

நீங்க என்ன சொன்னாலும் சரி நான் வேட்பு மனுவை வாபஸ் வாங்க முடியாது.
சேரிக்குள் கூூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. வேட்பு மனு தாக்கலுக்கு முன் ஆர்வமாக இருந்தவர்கள். துற்போது முகம் கொடுத்து பேச மறுக்கிறார்கள். ரூப்சந்தும், மற்றவர்களும் காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் சென்றபோது ஊருக்குள்ளிருந்து சில பெரியமனிதர்கள் சேரிக்குள் வந்து மிரட்டியிருக்கிறார்கள். ஆறு பயல்களும் உடனே வாபஸ் வாங்கலைன்னா உங்கள்ள ஒருத்தனுக்கும் வேலை கிடையாது. கஞ்சி இல்லாம புள்ளகுட்டிகளோட செத்துருவீங்க….

கூடவே ஒரு போலீஸ்காரரையும் கூட்டி வந்திருந்தார்கள். சுத்து வட்டாரத்திலேயே சௌத்திரி குடும்பம்னா ரொம்ப பிரபலமானது. நேர்மையான மனுஷன். எல்லா இடத்திலேயும் அவருக்கு செல்வாக்கு இருக்கு. அவரு எதைச் செஞ்சாலும் ஊருக்கு நல்லதாத்தான் இருக்கும். அவரு வார்த்தைக்கு ஊரே கட்டுப்பட்டு நடக்குது. அதனாலே நீங்களெல்லாம் தேர்தல்ல இருந்து விலகியே இருங்க. போலீஸ்காரர் அவர் பங்கிற்கு உபதேசம் செய்தார்.

சேரிக்குள்ளிருந்து நம்பிக்கை ஓளி பிரகாசிக்க ஆரம்பித்து திடீரென மங்கி மறைந்தது. அங்கு வாழும் மனிதர்களின் மனங்களில் இறுக்கம் அப்பிக்கொண்டது. யாரும் ஒருவருக்கொருவர் தனிமையிலோ பொது இடங்களிலோ பேசிக்கொள்ள முடியவில்லை. எதைப் பேசினாலும் தேர்தலைப் பற்றித்தான் பேசுகிறார்கள் என அவர்களின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று பயந்து நடுங்கினார்கள்.

சேரிமக்களின் உரிமைகளை அவர்களுக்கு விளக்குவதற்காக ரூப்சந்த் வீடுவிடாகச் சென்று கூட்டத்திற்கு ஆழைத்தார். ஒருவர் கூட வரவில்லை. வேலை கொடுக்கிற எசமானருங்க வேண்டாம்னுட்டா நாம எங்க போயி எப்படி பொழைக்கிறது? இந்தப் பயமே அவர்களை ஒன்று சேரவிடாமல் முடக்கியது. ரூப்சந்திடமிருந்து சொந்த மக்களே விலகிப் போனார்கள். எஞ்சியிருந்த தலித் வேட்பாளர்கள் ஆறு பேரில் ரூப்சந்த் தவிர மற்ற அனைவரும் வாபஸ் பெற்றார்கள்.

தங்கள் ஆட்கள் மூலம் மிரட்டி எல்லா வேட்பாளர்களும் வாபஸ் வாங்கிய பின் ரூப்சந்தும் வாபஸ் வாங்குவார் என சௌத்திரி உறுதியாக நம்பியிருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. வேட்புமனு வாபஸ் நேரம் முடிந்துவிட்டது. களத்தில் ரூப்சந்த் மட்டுமே இருந்தார்.

Caste panchayat - Wikipedia

பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ரூப்சந்த் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்கள். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தாழ்த்தப்பட்ட ஒருவர் வெற்றி பெற்றிருப்பது வரலாற்றில் ஒரு முக்கியமான சம்பவம். ஓவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்ள வேண்டிய நிகழ்வு.

சௌத்திரி குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக இருந்த பஞ்சாயத்து தலைவர் பதவி ஒரு தலித்துக்கு கைமாற்றப்படுகிறது. அதுவும் போட்டியின்றி. யாரும் கொண்டாடவில்லை. ஆனால் இதற்கு எதிர்மறையாக ஊரில் மயான அமைதி நிலவியது. எல்லோரும் துக்கமாக இருந்தார்கள்.
ஆரசியலமைப்புச் சட்டப்படி ரூப்சந்த் பஞ்சாயத்து தலைவராக பிரகடனம் செய்யப்பட்டாலும், அவரிடம் இன்னும் பொறுப்புகள் ஒப்படைக்கவில்லை. மற்ற எல்லா இடங்களிலும் பஞ்சாயத்து தலைவரும் உறுப்பினர்களும் பதவிப்பிரமானம் எடுத்துக் கொண்டார்கள். பொறுப்புகளைக் கொடுப்பார்கள், தலைவர் நாற்காலியில் உட்காரலாம் என்று எதிர்பார்த்திருந்த ரூப்சந்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தேர்தல் நடத்திய அதிகாரிகளை பலமுறை சந்தித்து விபரம் கேட்டபோது, மழுப்பலான தட்டிக் கழிக்கும் பதில்களே வந்தன.

இதுநாள் வரை சௌத்திரி பண்ணையில் வேலை பார்த்து வந்த ரூப்சந்த் வேலை நீக்கம் செய்யப்பட்டார். ஊருக்குள் யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை. கஞ்சிக்கு சிரமப்பட்டு வாழ்வாதாரமே நொறுங்கிப் போனது. ரூப்சந்த் மனைவி ராஜ்பிரிக்கும் வேலை மறுக்கப்பட்டது.
ஊன் புருஷன்தான் பஞ்சாயத்து தலைவரா ஆயிட்டானே.. எல்லாமே உங்களுக்குத்தான் சொந்தம். நல்லா அனுபவிப்பயா.. நீ எதுக்குமா வேலை செய்யனும் நீயும் தலைவர் பொண்டாட்யா மாறிட்டே. எல்லாருக்கும் உத்தரவு போடும்மா… என்று ஊர்க்காரர்கள் ஏகடியம் பேசினார்கள்.

யாரும் வேலை கொடுக்காதது மட்டுமல்ல ஊருக்குள் எவரும் கடன் தர மறுக்கிறார்கள். புலசரக்கு கடையில் மளிகைச் சாமான் வாங்க முடியவில்லை கழுத்தில் சுருக்கு கயிறு இறுக்கியது போல் ஆனது.

புதிய தலைமையிலான பஞ்சாயத்து நிர்வாகம் செயல்படவில்லை. தேர்தலுக்கு முன்பு பஞ்சாயத்து எப்படி இயங்கியதோ அதே போல் தான் இப்போதும் நடந்து வருகிறது. பஞ்சாயத்து தலைவருக்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்றுவரை சௌத்திரியின் கையில்தான் உள்ளது. சட்டப்படி அதிகாரங்களும், பொறுப்புகளும் வழங்கப்படாமல் ரூப்சந்த் காகிதத்தில்தான் தலைவராக உள்ளார்.

தலைவராகப் பிரகடனம் செய்யப்பட்டவர் பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் இன்னும் நுழைய முடியவில்லை. பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி தேர்ந்தெடுககப்பட்ட தலைவருக்கு ஏன் பொறுப்புகள் வழங்கப்படவில்லை? இதற்கு என்ன காரணம்? இதன் பின்னணியில் இருக்கும் அமைப்புகள் எவை? தேசிய நாளிதழ்களிலும், நடுநிலை நாளிதழ்களிலும் இதைப்பற்றி ஒரு வரி கூட எழுதவில்லை. எந்த தொலைக்காட்சியிலும் செய்திகள் வெளிவரவில்லை.

கடைக்கோடி கிராமத்தில் கொத்தடிமை ஒருவரைத் தலைவராக்கி ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ரூப்சந்த் பிழைப்புக்காக உயிர்வாழ்வதற்காக சொந்த ஊரைவிட்டு வெளியேறி நகரத்தின் தெருக்களில் குடும்பத்தோடு அலைந்து கொண்டிருக்கிறார். சமூகமே அவரைக் கண்டு ஒதுக்கி, தனது அனாதரவான நிலையில் மருண்டு இந்த உலகத்தில் ஒரு நாதியுமின்றி எப்படித் தனித்து வாழ்வது என்று தவித்து நிற்கிறார். எல்லோரும் இந்நாட்டு மன்னர்களாம் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ரூப்சந்தை காகிதத்தில் தான் தலைவராக்கியது. வாழ்க ஜனநாயகம்!
முற்றும்.

(நன்றி ! இண்டியன் லிட்டரேச்சர்)
இந்தி மூலம் : ஓம்பிரகாஷ் வால்மீகி
ஆங்கிலம் வழித் தமிழில் : மாதா

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *