“ நிறுத்து.நிறுத்து. ஓரமா நிறுத்து”
கிளம்பும்போதே பயந்துகொண்டுதான் எடுத்தோம். எங்கெங்கே தடைகள் இருக்குமோ, போலீஸ்காரர் தடுத்து நிறுத்தி விடுவாரோ என்று யோசித்தோம். ஆனால் மெஷின் கொரோனா தொடங்கும்போது ரிப்பேருக்குக் கொடுத்தது. இப்ப மூணு மாசம் ஆனபிறகுதான் சரியாடிச்சுன்னு கடைக்காரர் போனில் சொன்னார். அவர் சொல்லியே மூணு நாள் ஆச்சு. கேப் எடுக்கலாமா அல்லது நம்ம காரையே எடுக்கலாமா? டிரைவர் கூப்பிடலாமா? அவர் மூலம் ஏதும் தொற்று வந்துவிடுமா? இப்படி பல விஷயங்கள் யோசிச்சு குழப்பமா இருந்தது.
எங்கள் குடியிருப்பிற்கு வழக்கமாக வரும் டிரைவருக்கு மூன்று பெண்கள். இருவர் பள்ளியிலும் ஒருத்தி கல்லூரியிலும் படிக்கிறார்கள். வழக்கமாக அவரை பிடிக்க முடியாது. நம்பிக்கையானவர் என்பதால் எல்லோரும் அவரையே கூப்பிடுவார்கள். முதல் நாளே சொல்லிவைக்கவேண்டும். இப்ப கொரோனா வந்த பிறகு தினமும் வந்து கேட்டில் நின்று செக்கியூரிட்டியுடன் பேசிவிட்டு செல்கிறார். மூணு மாசம எப்படி சமாளிக்கிறாரோ? அவரைக் கூப்பிட்டுக்கொண்டு இன்னைக்கு துணிஞ்சு கிளம்பியாச்சு. ஆனா பயந்தபடி பாதியிலேயே போலீஸ்காரர் நிறுத்திவிட்டார்.
டிரைவர் மாஸ்க் போட்டிருந்தார். நாங்களும் போட்டிருந்தோம். இன்று முழு ஊரடங்கும் இல்லை. எதற்காக நிறுத்துகிறார் என்று தெரியவில்லை.
‘எங்க சார் போறீங்க?’
‘மெஷின் ரிப்பேர் பண்ணி வாங்கப் போறோம் சார்’
‘என்ன மெஷின்?’
‘பிரதர் மெஷின் சார்’
‘பிரதர் மெஷினுக்கு நீங்க ஏன் போறீங்க? அவர் போய் வாங்கலாமே?’
‘எங்க மெஷின்தான் சார்’
‘இப்பதானே பிரதர் மெஷின்னு சொன்னீங்க?’
‘பிரதர் கம்பனி மெஷின் சார்’
‘சரி இருக்கட்டும். அவர் கம்பனி ஆளுங்க யாராவது போய் வாங்கலாமே?’
‘இல்ல சார். நாங்க பணம் கொடுத்து பிரதர் கம்பனியிலிருந்து வாங்கின மெஷின் சார்.’
‘மெஷினெல்லாம் பிரதர் கம்பனியிலிருந்துதான் வாங்குவீங்களோ? எவ்வளவு விலை?’
போலீஸ்காரர்களின் எகத்தாளம் கொஞ்சம் என்னை சீண்டியது.
‘700டாலர் சார்.’ டாலரில் சொன்னால் பயப்படுவார்களோ என்று நினைத்து அப்படி சொன்னேன்.
இப்ப அவருடன் இன்னொரு போலீஸ்காரரும் சேர்ந்து கொண்டார்.
‘டாலரா? சார் வெளிநாட்டு விஷயம் போலிருக்கே? தரவா செக் பண்ணணும். ஏதாவது கடத்தல் சம்பந்தமா இருக்கும்’.
‘சார்.நான் கவுரவமான ஆள். இப்படியெல்லாம் பேசாதீங்க.’
‘கொரோனாவ சாக்கா வெச்சு நிறைய கடத்தல் நடக்குது.நாங்க யாரையும் விடமுடியாது.’
கடத்தல் என்றவுடன் என்னுள்ளிருந்த பத்திரிக்கைக்காரன் எட்டிப் பார்த்தான்.
‘சார் என்ன என்ன கடத்தறாங்க?’
‘உனக்கு எதுக்கு அதெல்லாம்? முதல்ல அந்த பிரதருக்கு போன போடு.’
‘அந்த பிரதர்ஸ்ல்லாம் செத்துப் போய் ரொம்ப வருசமாயிருச்சு சார்.’
‘முதல்ல பிரதர்ன்ன. இப்ப பிரதர்ஸ்ங்கற. சரி இருக்கட்டும். அப்புறம் எப்படி அவங்க கம்பனியில மெஷின் வாங்கின?’
‘பிரதர்ஸ் செத்துப் போனாலும் கம்பனி அவங்க பேர்லதான் சார் இருக்கு.’
‘ஃபிரீயா கொடுத்தாங்களா?’
சாலையில் பெரிய போக்குவரத்து ஒன்றும் இல்லை. அதனால் போலீஸ்காரர் ஆற அமர எங்களை மடக்கி மடக்கி கேட்கிறார். கடை மூடி விடக் கூடாது. எங்களுக்காகத்தான் கடையை திறந்து வைத்திருக்கிறேன் என்று சொல்லியிருந்தார்.. மூன்று மாதங்களாக அவருக்கும் வியாபாரம் எதுவும் இல்லை. போலீஸ்காரரிடமிருந்து தப்பிக்க அவருக்கு ஏதாவது அழுதுவிடலாம் என்று பாக்கெட்டில் கை விட்டேன்.
‘இல்ல சார். பணம் கொடுத்துதான் வாங்கினோம்.இதோப் பாருங்க பில்.’ பில்லுடன் ஒரு நூறு ரூபாய் நோட்டும் வந்தது.
‘அதெல்லாம் வை. முதல்ல பில்லைப் பாப்போம்.’
‘இதென்னய்யா பிரதர் சூயிங் மெஷின்னு போட்டிருக்கு? பிரதர்ங்றது ஒரு கம்பனியா?’
‘ஆமாம் சார். நீங்க என்ன நினச்சீங்க?’
‘என்னமோ நினைச்சேன். நீங்க போங்க பிரதர்’ என்றார்.
நூறு ரூபாய் தப்பியது.

