சிறுகதை: கொரோனா இரவு – இரா. தட்சணாமூர்த்தி

சிறுகதை: கொரோனா இரவு – இரா. தட்சணாமூர்த்தி

 

“ஏம்மா! ஏதோ தொண்டையை அடைக்கிற மாதிரி இருக்கு…! கொஞ்சம் தண்ணீர் குடுக்கிறீயா?”

“ஏங்க! என்னாங்க! இந்த நேரத்துல… மணி ராத்திரி பதினொன்னு ஆவுது! இப்படி பயங்காட்ரீங்க! அப்படியே எழுந்து நிமிந்து உட்காருங்க! மூச்சை நல்லா இழுத்து விடுங்க!”

ஃபிளாஸ்க்கில் வைத்திருந்த சுடுநீரை ஒரு டம்பளரில் ஊற்றி விரலால் தொட்டுப் பார்த்து சூட்டின் அளவை சரிபார்த்து

“இத்தாங்க குடிங்க…!”

கொடுத்துவிட்டு மார்பைத் தடவி தேய்த்துவிட்டாள், 65 வயது நிறைந்த கோபால் சாமியின் மனைவி ஆண்டாள்.

“ஏங்க! இன்னைக்கு இரவு எடுக்க வேண்டிய மாத்திரை யயல்லாம், சரியா எடுத்தீங்களா? தொண்டையில் ஏதாச்சும் கரகரப்புத் தெரியுதா? தைரியமா சொல்லுங்க! உங்களுக்கும் வயசு எழுபதைத் தாண்டிட்டுது. கொஞ்சம் இருங்க… சுடத் தண்ணியில உப்புப்போட்டு எடுத்து வரேன். கொஞ்சம் வாயில ஊத்திக் கொப்புளிச்சித் துப்புங்க. தொண்டைக் கரகரப்பு சரியாய் போயிடும்.

உப்பு நீரை வாங்கிய கோபால்சாமி வாஷ்பே­ன் அருகில் சென்று வாயை நன்கு கொப்பளித்து உமிழ்ந்தார். மீண்டும் கொஞ்சம் வெந்நீரைக் குடித்தார்.

“மணி இரவு 11.30 ஆவுது நீ படுத்துக்கோ! நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு பிறகு படுத்துப் பார்க்கிறேன்.”

கோபால்சாமி ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சொந்த விடு, பிள்ளையும், மகளும் அமெரிக்காவில் தங்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். மகன் ஐ.டி. கம்பெனியில் வேலைக்கு சென்றவர் அமெரிக்காவில், நீயூ ஜெர்சியில் தனது மனைவி குழந்தையுடன் வசிக்கிறார். மகள் தன் கணவருடன் நியுயார்க்கில் வசித்து வருகிறார். கோபால் சாமியின் நண்பர்களும் உறவினர்களும் “கோபால் சாமிக்கு என்னப்பா குறைச்சல், அவர் கடமைகளும் முடிஞ்சி போச்சு. மகனும் அமெரிக்காவில், மகளும் அமெரிக்காவில், இதுக்கப்புறம் மனு­னுக்கு என்னப்பாக் குறைச்சல்” என்று அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.

சுவரில் இருக்கும் டிஜிட்டல் கடிகாரம் நள்ளிரவு 12.30 என்று காட்டியது. கோபால்சாமியும், ஆண்டாளும் தனித்தனிக் கட்டில் என்றாலும். இரண்டு கட்டில்களையும் ஒன்றாக சேர்த்து தலையணை யருகில் ஒரு பிளாஸ்டிக் ஸ்டூலில் ஃபிளாஸ்க்கில் சுடுநிரும், கொஞ்சம் பிஸ்கட் பாக்கட், மாத்திரைகள், ஒரு டார்ச் லைட் சகிதமும் வைத்துக் கொண்டுதான் உறங்குவது வழக்கம். இரண்டு பேருடைய செல்போன்களும் தலைமாட்டில் வைத்துக் கொண்டுதான் படுப்பார்கள். இந்தியாவில் நள்ளிரவாக இருக்கும் நேரத்தில் அமெரிக்காவில் நண்பகலாக இருக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். அதனால் எந்த நேரத்திலும் பிள்ளைகளிடமிருந்து போன்கால் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டு உறங்குவது போல் விழித்துக் கொண்டுதான் இருப்பார்கள். வயதானவர்கள் தூங்கும்போது டிஸ்டப் செய்யக்கூடாது என்று அமெரிக்காவில் இருக்கும் பிள்ளையும், மகளும் அடிக்கடி தொந்தரவு செய்ய மாட்டார்கள். முடிந்தவரையில் இரவு பத்துமணிக்குள் போன் செய்து நலம் விசாரித்துவிட்டு, ‘மாத்திரையயல்லாம் சாப்பிட்டீங்களா?’ என்று கேட்டுவிட்டு ‘நல்லா படுத்துத் தூங்குங்கப்பா!’ என்று சொல்லி விடுவார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவி இருந்தாலும், அமெரிக்காவில் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதால் பிள்ளைகளுடன், அன்றாடம் போன் விசாரணை செய்து கொண்டாலும்; மனதுக்குள் அதிக பயம் தோற்றிக்கொண்டது பெற்றோர்களுக்கு. இந்தியாவில் கோவிட். தொற்று பரவி உலக அளவில் மூன்றாம் இடத்தை நெருங்கிவிட்டதால் அமெரிக்காவில் இருக்கும் பிள்ளைகளுக்கு, தனியாக வாழும் முதிய வயது பெற்றோர்கள் மேல் அதிக பயம் ஏற்பட்டுப்போனது.

Covid 19- அடுத்து வரும் தாக்குதலுக்குத் ...

“அம்மா! ஆண்டாளு…! எனக்கு கொஞ்சம் பின்பக்கம் முதுகுல கீழ்பக்கம் வலிக்குது…! அது கிட்னி வலிதான் எனக்கு நல்லாத் தெரியும்…! ஆனால் கொஞ்ச நேரத்துல சரியாய் போயிடும்… நீ தூங்கு” அப்படின்னு சொன்னார் கோபால் சாமி.

“ஏங்க…! ஏதாச்சும் வலி, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் கொஞ்சம் பயப்படாம சொல்லுங்க அடக்கி, அடக்கி வைக்காதீங்க…! இந்தாங்க தண்ணீயைக் குடிங்க” டம்ளரில் வெந்நீரை ஊற்றிக் கொடுத்தாள் ஆண்டாளம்மா…

கோபால் சாமிக்கு, தண்ணீர் குடித்த சற்று நேரத்தில் ‘குப்’ என்று உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டியது சற்று வலி குறைந்ததுபோல் தெரிந்தது.

இரவு மணி 1.00 என்று சுவரில் இருந்த டிஜிட்டல் கடிகாரம் மின்னியது. கோபல்சாமிக்கு மூச்சு விடுதலில் சிரமம் வந்ததைத் தொடர்ந்து, கிட்டினியின் வலியும் தொடர்ந்ததால் மனதுக்குள் ஒரு பயம் வந்துவிட்டது.

“ஏங்க….? மாடியில் குடியிருக்கும் கோபிநாத்தைக் கூட்டிட்டு வரட்டுமா? ஒரு ஆம்புலன்ஸ்சைக் கூப்பிடச் சொல்லி ஆஸ்பெட்டலுக்கு போயிடுவோமுங்க.”

“ம்ம்… கொஞ்சம் அவசரப்படாத…! எனக்கு வியர்த்தவுடன் கொஞ்சம் வலி கொறஞ்ச மாதிரி தெரியுது”. சரியாய்ப் போயிடும் இன்னும் கொஞ்சம் நேரம் பார்க்கலாம். நான் ராத்திரி படுக்கப்போகுமுன் சாப்பிட்ட மாத்திரையில் ஏதாகிலும் மாற்றியோ, டோஸ் கூட்டியோ போட்டிட்டு இருப்பேன். மாத்திரைப் பேரை சரியாக பாக்காமக் கூட இது போலவும், ஞாபக மறதியில சில சமயம் இதுபோலவும் மாத்திரையை விழுங்கரதுண்டு” என்று ஆண்டாளம்மாவிடம் சொல்லி சமாதானப் படுத்திக்கொண்டார்.

ஆண்டாளுக்கும் வயது 65 அவளுக்கும் சுகர் இருக்கு. இரத்த அழுத்தம் இருக்கு. கோபால் சாமிக்கு கட்டுப்படுத்தவல்லாத சுகர், உயர் இரத்த அழுத்தம், இதயத்தில் அடைப்பு இருந்து ஸ்டடு வைக்கப்பட்டிருக்கிறது. மூளை நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு இரண்டு முறை பக்கவாதம் வந்ததால் மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று திரும்பியவர். சமீப ஒருவருட காலமாக சைனஸ் பாதித்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மண்டை ஓட்டினுள் உள்ள மூக்கடைப்பை ஆப்ரே­ன் மூலம் சரி செய்து கொண்டவர். இருந்தாலும் மீண்டும் மூக்கடைப்பு ஏற்பட்டு மூக்குக்கு சொட்டு மருந்து போட்டுக் கொண்டு வருபவர்.

“இறப்பு என்பது எல்லோருக்கும் இயற்கையானது. செத்துப் போறதப்பத்தி நமக்கு ஒன்னும் கவலை இல்லை.

நம்மக் கடமையும் முடிஞ்சுப் போச்சு. ஆனாலும் அவசரப்பட்டு ஆம்புலன்சைக் கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனால் டெஸ்ட் பன்னுவான். கோரானா பாசிட்டிவ்னுதான் சொல்லுவான். நம்மள கொராணா பெட்டுல் போட்டாலும் பரவாயில்லை. ஆண்டாளுக்கும் டெஸ்ட் பண்ணுவான். அவளையும் பெட்டுல போடுவாங்க… அப்படியே செத்துட்டாலும் பிள்ளைங்க எதுவும் அமெரிக்காவில் இருந்து வரமுடியாது. நண்பர்கள், உறவினர்களும் கிட்ட வரமுடியாது. அவனே தூக்கிட்டு போயி என்னையோ! எங்க இரண்டு பேரையோ! மண்ணப்போட்டு மூடிடுவானுங்க. சுகர், இருமல் சளி, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் பத்தாதற்கு கிட்னி வலியும், சைனசும் சேர்ந்து கொராணாவுக்கான பத்து அம்சமும் இருக்கு! என்ன செய்வது! நம்ம மட்டும் போயிட்டாலும் பரவாயில்லை! ஆண்டாளுக்கும் கொராணா இருக்கும்! அப்படியே அவள் பொழச்சிக்கிட்டாலும் அவளாள எப்படி இந்த வயசுல துணையில்லாம தனியே வாழ முடியும்!” என்றெல்லாம் எண்ணிக்கொண்டு மீண்டும் படுக்கத் தொடங்கினார்.

“ஏங்க…! மணி 2.30 ஆவுது, எப்படியாலும் தூங்குங்க, பையன் போன் பண்ணா, நான் பேசறேன். தூங்குங்க…!” என்ற சொன்ன ஆண்டாளம்மா. எழுந்து நடு வீட்டுக்கு அதாவது பூஜை அறைக்குச் சென்றவள் குலதெய்வம், கோவிந்தன், ஓம் நமச்சிவாயம், கணபதி, முருகன், லட்சுமி, சரஸ்வதி, சாயிபாபா, ஏசு, அல்லா என எல்லா சாமிக்கிட்டேயும் வேண்டிக்கிட்டு எப்படியாகிலும் இந்தப் பொழுது நல்லபடியா வெடிஞ்சிடனும்னு வேண்டிக்கிட்டு விபூதியை கொண்டுவந்து கணவன் நெத்தியில் பூசிவிட்டு “தூங்குங்க” என்றாள்.

ஜாஎல பகுதியில் 5 பேருக்கு கொரோனா ...

“காலை ஆறு மணிமுதல் ஊடகங்களும், செய்திச் சேனல்களும் இன்றைய பெட்ரோல் விலை, தங்கம் விலை கூறுவது போல், இன்றைய கொரோனா பாதிப்பு, கொரோனா பலி என்று புள்ளி விபரத்தை கூறுவதோடு, வயதானவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், சுகர், உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக நோயாளி, இதய நோயாளிகளை எளிதில் தாக்கும், குறிப்பாக வயதானவர்களைத் தாக்கினால் இறப்பு உறுதி” என்ற ஒலிபரப்பப்பட்டு வருவதைப் பார்த்து பாதி உயிர் போய்விட்டதைப் போல் உணர்ந்து டி.வி. பார்ப்பதையே நிறுத்திவிட்டனர். என்றாலும் சில சமயம் சில சர்க்கரை நோய் நிபுணர்கள், தொற்று நோய் நிபுணர், காச நோய் நிபுணர், காது மூக்குத் தொண்டை நிபுணர் என வந்து அவ்வப்போது டி.வி.யிலும், வாட்சப்பிலும் மிரட்டுவது. ஆளாளுக்கு ஒரு வைத்தியம் சொல்வதை பார்க்காலும் கேட்காமலும் இருக்க முடியவில்லை.

அதனால் மருத்துவர் அறிவுரைகளின்படியும், ஊடக மருத்துவர்களின் கருத்துரைகளின்படியும் சுகர், இதய நோய், பக்கவாதம், சைனஸ், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மருந்துகளோடு பாராசிட்டாமல், வைட்டமின் ‘சி’, கபசுர குடிநீர், தினமும் உப்புநீரில் வாய் கொப்பளித்தல், வேது பிடித்தல் போன்ற எதையும் தட்டாமல் இருவரும் கடைபிடித்துதான் வருகின்றனர். முடிந்த வரையில் உடற்பயிற்சியோடு வேண்டிய எல்லா சாமிகளையும் வேண்டிக் கொண்டுதான் வருகின்றனர். வாசலில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர், கைகால் கழுவ சோப்பு, வாளியில் தண்ணீர் என்று யார் எதைச் சொன்னாலும் அதைச் செய்து வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் டி.வி.யில் வரும் சில கொராணா மரணச் செய்திகள் மன அழுத்தத்தை அதிகமாகி, ரத்த அழுத்தத்தைக் கூட்டிவிடுகிறது.

சுவரில் கடிகாரம் 4.00 என்று காட்டியது கோபால் சாமியிடம் இருந்து சற்று முக்கல் முனகல் சத்தம் வரவே, உடனே லைட்டை “போட்டு ஏங்க! என்னங்க ஆச்சு!” என்று துடி துடித்துப்போய் கேட்டாள் ஆண்டாளம்மா!

“ஒன்றுமில்லை, நெஞ்சை ரொம்ப வலிக்குது! இடப்பக்கம் சுருக்.. சுருக்குன்னு குத்துது… கொஞ்சம் தண்ணியைக் குடு. நான் உன்னைத் தொந்தரவு பண்ணாமலே எழுந்து போய் ஒரு ‘சாம்பிட்டேடு’ மாத்திரையை எடுத்து நாக்குக் கீழ வச்சிக்கிட்டேன். ஆனாலும் வலி இன்னும் கொரையில. ராத்திரி படுக்கப் போகுமுன் தெனமும் சாப்பிடர ஹார்ட் மாத்திரை, கொலஸ்ட்ரால் மாத்திரை, பி.பி. மாத்திரை எல்லாத்தையும்தான் போட்டேன் என்னானுத் தெரியில…. வலி ஏறிக்கிட்டே போவுது கொரையிலயே… பார்ப்போம் இன்னும் கொஞ்சம் நேரம் பார்ப்போம். அதுக்கப்புறம் ஆஸ்பத்திரியைப் பற்றி யோசனை பண்ணுவோம்.”

“ஏங்க எப்ப வலி வந்தாலும் உடனே வந்துடுங்கனுத்தானே அந்த ஹார்ட் டாக்டர் சொன்னாரு எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க.. டாக்டர்கிட்டே பொயிடுவோமுங்க.” ஆண்டாளம்மா பயந்து புலம்பினாள்.

“ஏம்மா…. ஒன்னும் பயப்படாதேம்மா…! நேத்து முருங்கக் காய் சாப்பாடும், வாழக்காய் பொறியலும் சாப்டதுதான் வாயுவைக் கெளப்பி விட்டிருக்கும் எனக்கு இந்த முருங்கைக் கீரையோ, காயோ எதுவுமே ஒத்துக்க மாட்டங்குது… அதான் கேஸ்டிரிக் ஃபாம் ஆயிட்டிருக்கும்… கொஞ்சம் நேரம் பார்ப்போம்” என்று அவரே தன் நோய் அனுபவத்தின் அடிப்படையில் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.

சுமார் ஐந்து மணி அளவில் உடல் முழுவதும் வியர்த்து சற்று வலிகுறைந்ததாக உணர்ந்தார் கோபால் சாமி. ஆம்புலன்ஸ்சைக் கூப்பிட்டு, ஆஸ்த்திரிக்கு செல்வதை தற்காலிகமாகத் தள்ளி வைத்தனர். கடிகாரம் காலை 6 மணியை காட்டியது.

இப்படியாக ஒவ்வொரு இரவும், இன்றுடன் 100 ஆவது நாளாக ஒவ்வொரு  கொரோணா இரவுகளும் விடிந்து கொண்டு இருக்கிறது, இந்த வயதான கோபால்சாமி ‡ ஆண்டாள் தம்பதியருக்கு…!

இரா. தட்சணாமூர்த்தி

ஓய்வு பெற்ற தமிழாசிரியர்

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *