காரை சர்வீஸ் விடும்போது எனக்கும் மனைவிக்கும் வழக்கமாக வாக்குவாதம் வரும்.
‘ கார் என்னத்த ஓடியிருக்கு?;இப்ப எதுக்கு சர்வீஸ் ?’
‘ஓடினாலும் ஓடாவிட்டாலும் ஆறுமாசத்துக்கு ஒருவாட்டி செஞ்சுதான் ஆகணும்’
‘கீழே இருக்கிற ராமசாமியெல்லாம் விடற மாதிரியே தெரியல்ல. இதுக்கும் தினும் ஆபிசுக்கு கார் எடுத்துட்டு போறாரு. நீங்க கார் எடுக்கணுமின்னாலே யோசிக்கிறீங்க.’
‘நீ போக சொல்ற இடத்தில் பார்க்கிங் வசதி இல்லைன்னா நான் என்ன செய்ய முடியும்? கார் வேண்டான்னு சொன்னா கேட்டியா?
பையனுக்கு கல்யாணம் ஆகப் போகுது.சம்பந்தி வீட்டுக்காரங்க மதிக்க மாட்டங்கா.கார் வாங்கித்தான் ஆகணுமின்னு ஒத்தக்கால்ல நின்ன.’
‘எது சொன்னாலும் எதையாவது பழச சொல்லி என் வாய அடைக்கிறதே உங்க பழக்கமா போச்சு. என்னத்தையும் செஞ்சுட்டுப் போங்க. ஆனா என்கிட்டே காசு கீசு கேக்கப் படாது.’
‘கேக்கல.கேக்கல’
இப்படியாக காரை சர்வீஸ் விடுவது முடிவாகும். அடுத்து கம்பனிக்காரர்கள் வந்து காரை எடுத்துப் போவதில் பிரச்சினை வரும்.
‘சர்வீஸ் விடப் போறேன்னு சொன்னீகளே போகலையா?’
‘புக் பண்ணியாச்சு.இப்ப டிரைவர் வந்து எடுத்துட்டுப் போவாரு’
‘அதான் பாத்தேன். என்னடா இப்படி உக்காந்துக்கிட்டிருக்கிகளேன்னு. அதுக்கு எவ்வளவு கொடுக்கணும்?’
‘அதெல்லாம் ப்ரீதான்.’
‘எப்படி பிரீயா வருவாங்க? பில்லில்ல சேர்த்துருவாங்க. நீங்களே போய் கொண்டு விட்டிட்டு வந்தாத்தான் என்ன?’
‘சும்மா தெரிஞ்சமாதிரி பேசாத. பில்லில்ல எல்லாம் சேர்க்க மாட்டாங்க. நான் கொண்டுவிட்டுட்டு வந்தா திரும்பி வர ஆட்டோ நூறு ரூபா ஆகும்.’
‘பஸ்ஸில வந்தா பத்து ரூபாதான் ஆகும். ஏதோ செஞ்சிட்டுப் போங்க. மாசக் கடைசியில கையில காசில்லன்னு என்கிட்டே வந்து நிக்கக் கூடாது.’
என் மனைவியின் சிக்கனத்தால்தான் குடும்பம் ஓடுகிறது என்றாலும் இப்பொழுது கொஞ்சம் வருமானம் அதிகமான நிலையிலும் பழைய வாழ்க்கை முறையையே வாழ சொல்லும் அவரின் பிடிவாதம் கோபத்தை ஏற்படுத்துகிறது. எனக்கு வயசாவதையும் ஏற்றுக் கொள்வதில்லை. பக்கத்து வீட்டுக்காரர் பைக்க அவரேதான் துடைக்கிறார்; எதிர்த்த வீட்டுக்காரர் டியூப் லைட்ட அவரேதான் மாத்தறார்ன்னு ஏகப்பட்ட கம்பேரிசன்கள்.
ஒரு வழியா கார் சர்வீஸ் ஆகி வரும். எப்படியோ ஐயாயிரம் ரூபாய் பக்கத்தில் கொண்டுவந்து விடுகிறார்கள். பில்லில் இரண்டு காலமாக எழுதி மூன்றாவது காலத்தில் சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி என்று என்னன்னவோ காட்டி கடைசியில் ஐயாயிரத்து ஐநூத்தி ஐம்பது என்று காட்டுவார்கள். இதற்கே போனில் அந்த மேனேஜர் அந்தப் பாலீஷ் போடலாம், இந்த பாலீஷ் போடலாம் என்று படிக்கிற பட்டியலில் பாதியை வேண்டாமென்று சொல்லிவிடுவேன்.
கடைசி பிரச்சினை காரை எடுத்து வருகிற டிரைவருக்கு ஒரு ஐம்பது ரூபாய் டிப்ஸாக கொடுப்பதா வேண்டாமா என்பது.
‘அதெல்லாம் அவர்கள் சேர்த்துதான் சார்ஜ் பண்ணியிருப்பாங்க. நாம ஒண்ணும் கொடுக்க வேண்டாம்.’ என்று மனைவியிடமிருந்து குரல் வரும். மனைவிக்கு கொடுக்கும் ஒரு சலுகையாக அதை ஏற்றுக்கொண்டு டிரைவரிடம் சாவியை வாங்கிக் கொண்டு நன்றி என்று சொல்லி அனுப்பி விடுவேன். சிலர் ஒரு நிமிடம் தயங்குவார்கள். சிலர் அப்படியே போய் விடுவார்கள்.
இதை என் நண்பனிடம் சொன்னேன். அவன் சொன்னான்.
‘அந்தக் கம்பெனியில் டிரைவருக்கு என்ன சம்பளம் கொடுத்து விடுவார்கள்? பத்தாயிரத்துக்குள்ளதான் இருக்கும். இல்லைன்னா டிரிப்புக்கு இவ்வளவுன்னு பீஸ் ரேட்டா இருக்கும். நீ மனிதாபிமானத்தில் ஒரு ஐம்பது ரூபாய் கொடுத்திருக்கலாம்’
‘அப்படிக் கொடுப்பது அவங்கள அந்த ஏற்பட்டுக்குள்ளேயே இருக்க வச்சுடும். அவங்க சம்பளம் பத்தலன்னா போராடணும். நம்ம போராடல்லியா?’ என்று ஒரு நியாயம் பேசினேன்.
‘ஒண்ணு சாதாரண மனுசங்கள்ட்ட இருக்கிற அனுதாப உணர்வோடு இரு. இல்ல போராட்டம் அப்படின்னு பேசறதா இருந்தா அவங்களுக்கு சங்கம் வைக்கறதுக்கு நீயும் ஏதாவது செய். இரண்டும் இல்லாம நீ செய்ற கஞ்சத்தனத்துக்கு ஏதாவது சொல்லாதே’ என்றான். மனைவிக்கிட்டிருந்து நண்பன்ட்ட போனா ஏதாவது ஆதரவு கிடைக்கும்னு நினச்சா இது அதைவிட பெரிய தாக்குதலா இருக்கு. என்ன சொல்றீங்க?


கார் விற்பனையாளர் கார் பழுதுபார்ப்புக்கு அதிகாரமாய்ப் பெறும் கட்டணத்திற்கு முக்காமல் முனங்காமல் பணத்தைக் கொடுத்து விடுபவர் கார் பழுது நீக்கியபின் காரை எடுத்து வரும் ஓட்டுனருக்கு கொடுக்கும் ஐம்பது ரூபாய்க்கு யோசிக்கும் நடுத்தரக் குடும்பத்தாரை பரிகசிக்கும் கதை , வாழ்த்துகள் ,ரமணன் அவர்களுக்கு.