சிறுகதை: வறண்டநிலத்தில் பூ – அ.கரீம்.  

 

கிருஷ்ணமூர்த்தி அமர்ந்திருந்த பேருந்து நாமக்கல் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து தோதான இடம் பார்த்து வண்டி நிற்கும்போது நேரம் காலை பதினொன்றைக் காட்டியது. மேமாத கத்திரி வெயில் ஜன்னல் வழியே சுல்லென்று அடித்தது. வெயில் நன்றாக ஏறுவதற்கு முன்பே கிளம்பவேண்டுமென்று மகன் செல்லமுத்து  நேரமாக எல்லோரையும்   கிளப்பியதால், வெள்ளனே எழுந்த களைப்பில் கிருஷ்ண மூர்த்தி இருக்கையில் கண் அசைந்தவர் அப்படியே தூங்கிப் போனார். அருகில் பேத்தியும்  ஜன்னலோரத்தில் மகனும் தூங்கிக்கொண்டு  இருந்தனர். முன் இருக்கையில் மருமகளும் பேரனும் தூங்கிக்கொண்டு இருந்தனர். .

“பஸ் பத்து நிமிஷம் நிற்கும், பாத்ரூம் போறவங்க போயிட்டு வாங்க” என்று நடத்துநர் கத்தும்போதுதான் எல்லோருக்கும் விழிப்பு வந்தது. “முறுக்கு முறுக்கே..”  “கல்ல…பர்பி..” என்று பேருந்துக்குள் ஒருவர் கத்திக்கொண்டு வந்தார். அப்போதும் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் தூங்கிக்கொண்டு இருந்தனர். “செல்லமுத்து பாத்ரூம் போறயா எழுந்திடு” என்றார். கண் விழிக்காமல் “நான் போகல ஈரோடு போய் பாத்துக்கிறேன்” என்று வாய்மட்டும் அசைந்தது. 

“சரி நான் போயிட்டு வரேன்”

“சீக்கிரம் வந்துடுங்கபஸ் எடுத்திர போறாங்க” என்றான் செல்லமுத்து, அப்போதும் அவனது கண்ணை திறக்கவில்லை. நன்றாகத் தூங்கிக் கொண்டு இருக்கும் மருமகளையும் எழுப்பாமல் அவர் மட்டும் எழுந்தார். தனது காலுக்குக் கீழே வைத்திருந்த அவரது துணிப்பையை எடுத்து  தோளில் மாட்டிக்கொண்டு எழுந்தார்.

கிருஷ்ணமூர்த்தி மின்சார வாரியத்திலிருந்து ஓய்வு பெற்று எட்டாண்டுகள் முடிந்துவிட்டது. வயதின் தளர்வு அவருக்கு இருந்தது. மூத்த மகளை வங்கியில் வேலை பார்க்கும் சொந்தத்தில் ஊர் பக்கமே  கட்டிக்கொடுத்து விட்டதால் மகனின் கவலை மட்டுமே அவருக்கு இருந்தது. டிகிரி முடித்தவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற விசனத்தில் பலரையும் பிடித்து அதே மின்சார வாரியத்தில் வேலை வாங்கிவிட்டார். அவரும் எப்படியாவது மாறுதல் வாங்கி  ஊர் பக்கமே மகனை கொண்டு போக நினைத்தாலும் வாரியத்தில் உள்ள “கடுமையான விலைவாசியில்” இப்போதைக்கு வேண்டாமென்று தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. “வேல கிடைத்ததே பெருசு கொஞ்சம் அங்கேயே ஓட்டுங்க” என்றுதான் அவரோடு வேலை செய்த எல்லோரும் சொன்ன  ஆலோசனை. அமராவதி யூனிட்டில் மகனை கொண்டுபோய்விட்டால் தொல்லையே இருக்காது. 

 மகள் வீட்டில் மனைவி இருப்பதினால் ஓய்வுக்கு பின்பும் இருவரும் தனித்தனியே வாழ்க்கையைக் கடத்த வேண்டியுள்ளது. வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தனியார் பள்ளிகூடத்தில் மகள் வேலைக்கு செல்வதால் மகள் குழந்தையைப் பார்க்க அவளும், மருமகள் ஆத்தூர் சொசைட்டியில் வேலை செய்வதால் மகன் குழந்தைகளை  பார்க்க இவருமாக வாழ்க்கை இருவரையும் தனித்தனியாகப் பிரிந்து ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. மேமாத விடுமுறையில் மட்டும் தான் ஊருக்கு போக முடிகிறது. இடையில் ஒருமுறை ஒருவாரம் விடுமுறைக்குப் போய்வந்து அதுவும் பத்து மாதங்கள் ஓடிவிட்டது. இந்த முறை இரண்டு மாதங்கள் இருக்கலாம். 

கிஷ்ணமூர்த்தி கடந்த நாற்பது வருடத்தில் ஒருபோதும்  மனைவி கலையரசியிடம் பெரும் அன்பைப்  பொழிந்தது இல்லை. மகள் கொஞ்சம் வளர்ந்தபின்பு மனைவியிடம் வெகுநேரம் பேசுவதைக்கூட நிறுத்திவிட்டார்.  வீட்டில் வேளாவேளைக்கு சமைக்கவும், துணி துவைத்து போடும் சம்பளம் இல்லாத வேலைக்காரி” என்ற மனநிலையில் தான் அவளைக் கையாள்வார். அப்பிடிதான் குடும்பம் நடத்திவருகிறார். இப்போதுகூட மகனுக்கு மாறுதல் வாங்க நினைப்பது அவருடைய கூட்டாளி நண்பர்கள் எல்லாம் உடுமலை வட்டத்துக்குள் இருப்பதால்தான் கடைசிக் காலத்தில் பழைய கதைகளை பேசி காலம் ஒட்டவேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த லட்சிய நோக்கமும் அவருக்கு இல்லை.  

கலையரசியும் அவ்வப்போது  நினைத்துக்கொள்வாள்  “என்ன பொழப்பு இது, காலம் முழுக்க ஆக்கிப்போடவும், ஆய் கழுவமுமே வாழ்க்க போச்சு” என்று புலம்பினாலும்  எப்போதும்போல ஐந்து மணிக்கு எழுந்து செய்யும் தினசரி வேலையை நிறுத்தியதே இல்லை. ஆத்தூருக்கு மகனோடு வந்த ஐந்து வருடத்தில் விரல்விட்டு எண்ணுமளவே மனைவியிடம் பேசி உள்ளார். அதுவும் “என்ன பண்ணுற?, சாப்டிய?, உடம்ப பார்த்துக்கோ?, வேற ஏதாவது இருக்க?  சரி வச்சிறேன்” அவ்வளவுதான். அவளுக்கும் தெரியும் அதற்குமேல் இந்த மனிதரிடம் பெரியதாக விசாரிப்பு எதுவும் இருக்காது என்று. தொலைக்காட்சியில் இளம் ஜோடிகள் யாரவது கொஞ்சும்போது “இந்த மனுஷன் எப்போ நம்மள கடைசியா கொஞ்சுனாறு” என்று கடந்த வாழ்வை மனதில் அசைபோடுவாள் கடைசிவரை நினைவு வராமல் அத்தோடு அப்படியே மறந்து அடுத்தவேளை பார்த்து நகர்ந்து விடுவாள். 

வெயில் நன்றாகவே தலைக்கு மேல் சுள்ளென அடித்தது. வெயில் வெள்ளையாய் விரிந்து இருந்தது. அவரின் தலையில் வெள்ளைக்காரன் ஆதிக்கமே அதிகம் இருந்தது.  தனது சுருக்கம் விழுந்த முகத்தில் உள்ள கருப்பு பிரேம் கண்ணாடியைச் சரி செய்துவிட்டு “ஒண்ணுக்கு” போக எங்கே செல்வது என்று பார்வையை பேருந்து நிலையத்தில் நோட்டமிட்டார். தூரத்திலிருந்து பார்க்கும்போத சுத்தம் செய்து பலகாலமான “இலவச கழிப்பறை” தெரிந்தது. அங்கே வேண்டாம் என்று முடிவு செய்து பார்வையை வெளியே விட்டார். வரிசையாக பழக்கடையும் தொடர்ந்து பூக்கடை தள்ளு வண்டியில் செருப்பு கடை என்று நீண்டு இருந்தது. சிலர் மட்டும் வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு கடைசியாக இருந்த பெட்டிக்கடைக்கு அருகில் உள்ள சந்து வழியே நுழைந்தார்கள். அங்குதான் நமக்கான வேலை இருக்கிறது என்று நடந்து போனார். 

In dire need of a new bus stand - The Hindu

சந்துக்குள் நுழைவதற்கு கொஞ்சம் முன்பே சிறுநீர் வாசனை வரவேற்றது. கழிவுப்பாதையில் ஒட்டியிருந்த சுவற்றில் “விந்து விரயம் ஆகிறதா?, விறைப்பு இல்லையா? அளவு சிறியதா? கவலை வேண்டாம்” என்ற  மஞ்சள் மற்றும் ரோஸ் நிற சின்ன சின்ன சுவர் ஒட்டிகள் வரிசையாக இருந்தது. ஒன்றில் “திருப்தி இல்லையா பணம் உடனே வாபஸ்” என்று கொட்டை எழுத்தில் இருந்தது. இங்கே சுவரொட்டிகள்  ஒட்டியபின்பு சிறுநீர் கழிக்கும் பழக்கம் வந்ததா? இல்லை சிறுநீர் கழிப்பது பார்த்து ஒட்டப்பட்டதா? என்ற சந்தேகம் எல்லோரையும் போல கிருஷ்ணமூர்த்திக்கும் வந்தது.

வேட்டியை தூக்கி கட்டி உட்கார்ந்தார். மூச்சை கொடுத்து சீக்கிரம் போனார். அங்கு கிளம்பிய வாசனை உடனே கிளம்பு இல்லையென்றால் வயது மூப்பில் மயக்கமாகி விடுவாய் என எச்சரிக்கை செய்தது போல இருந்தது. முடித்து சந்திலிருந்து வெளியேறிய பின்பும் பலகலவைகளின்  சிறுநீர் வாசனை அவரை பின் தொடர்ந்தே வந்தது. இரண்டு முறை திரும்பியும் பார்த்தார். செருப்புக்கடை தாண்டும்போதும் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் நாசி அந்த வாசனையை துறந்து பூவின் வாசனை வீசியது மூச்சை நன்றாக இழுத்துவிட்டார். பூக்கடையிலிருந்த விரியும் வாசனை கிருஷ்ணமூர்த்திக்கு “அப்பாடா” என்று இருந்தது. 

கடைகளுக்கு பின்னாலிருந்த போஸ்டரில் நடிகை ஷோபாவின் சாயலில் நடிகை ஒருத்தி நின்றுகொண்டு இருந்தது கிருஷ்ணமூர்த்திக்கு சினிமா கொட்டகையில் அப்போது டிக்கெட் வாங்க நடந்திய “பாரக்கிரமம்” நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டே நடந்தார். ஷோபாவை யார் திருமணம் செய்வது என்ற தகராறில் கூட்டாளி குப்புசாமியின் சிறுமூக்கை உடைத்ததும், சமாதனம் பேச வந்த ஊர் பெரியவர்கள் ஷோபா யாரென்று தெரியாமல்  “கூட்டாளிகளுக்குள்ள எதுக்கு சண்ட, பொண்ணு யாருக்குன்னு பின்னாடி முடிவு செஞ்சுக்கலாம்” என்று  ஒப்பந்தம் செய்து முடித்துவைத்ததும் நினைவுக்கு வந்தது. இவர்கள் செய்த ஒப்பந்தம் எதுவும் கடைசிவரை ஷோபாவுக்கு தெரியாது. பின்னால் தனக்கு ஷோபா போன்ற பெண் வேண்டுமென்று அம்மாவிடம் நச்சரித்து அதே முகச்சாயலில் கலையரசியை திருமணம் செய்துகொண்ட நினைவெல்லாம் அசைபோட்டபடியே நடந்தார். தானாக சிரித்தார். 

அப்போது ஷோபாவின் “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா” அதே பாடலை சரத்பாபு ஜீப்பில் உட்கார்ந்து கொண்டு பாடுவதற்கு பதிலாக தான் உட்கார்ந்து பாடுவது போல கனவு அடிக்கடி வந்து போனது. கல்யாணம் ஆனா புதிதில் ஷோபா தற்கொலை செய்து இறந்தபோது தனது கூடவே நேற்றுவரை வாழ்ந்த தன் உயிர் மூச்சு  காதலி இறந்ததைப்போல மனம் ஒடிந்துபோனார். தாடி வைத்து கொஞ்ச நாள் சுற்றினார் சம்மந்தம் இல்லாமல் அவையெல்லாம் நினைவுக்கு வந்தது. வயதான ஷோபாவின் முகம் கலையரசியிடம் இருப்பதை நினைவுப்படுத்திய போது “நீதான் என் ஒரிஜினல் ஷோபா” என்று முதல் இரவில் பேசி அனைத்தது இப்போது நினைவுக்கு வந்தது. அப்போது மாப்பிளையை கேலி செய்ய பாலில் உப்பு போட்டு அவள் கொடுத்ததும் அதை குடித்தவர் “அடிக்கள்ளி” என்று அவளை இறுக்கியதும் ஒரு நொடியில் நாற்பது வருடம் பின்னோக்கி சென்று முன் வந்தார். 

செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் ...

மகனுக்கு இரண்டு வருடம் இருக்கும்போது சாராயம் குடித்துவிட்டு  வந்து கலையரசியை “ஒரு அரசாங்க மாப்பிள்ளைக்கு உங்கப்பன் அப்படி  என்னடி செஞ்சான்” என்று மிதி மிதித்ததும், மறுநாள் போதை தெளிந்தபோது  ஊரே காறி துப்பியதும் அவரின் நீண்ட வாழ்வில் மறக்கமுடியாத நினைவுகள். அன்றுமுதல் அவளும் இவரை மனுசனாக  மதித்ததே இல்லை. யாரவது குடும்ப வாழ்க்கையைப் பற்றி பேசினால் “இந்தாளிடம் வாக்கப்பட்டு என்ன சுகத்த கண்டேன்” என்று ஒரு வரியில் உதிர்த்துவிட்டு அமைதியாக இருந்து விடுவாள். அந்த ஒற்றை வார்த்தையே அவளின் நீண்ட வாழ்வை போதுமானளவு சொல்லியது. பேருந்தின் ஹாரன் சத்தம் அவரை களைத்தது              

பேருந்து கிளம்புவதற்குத் தயாராகிக்கொண்டு “ஹாரனை நான்கைந்து முறை அடித்தது. அருகில் எதோ கடையில் முறுக்கு சுடும் வாசம் வந்தபோது பேரக் குழந்தைகளின் நினைவு வரவே கடையில் முறுக்கு பொட்டலத்தை வாங்கி பையில் திணித்தார். வேக வேகமாகப் போனவர் பேருந்து அருகில் சென்றபோது மகன் வெளியே நின்றுகொண்டு இருந்தான். 

“எங்கப்பா போனீங்க” 

“ஒண்ணுக்கு போனேன் பா” என்று சொல்லிவிட்டு பேருந்தில் ஏறினார். வெயில் இன்னும் கொஞ்சம் தலையில் ஏறி இருந்தது. “எங்க மாமா போனீங்க” என்றாள் மருமகள். “சும்மா பஸ்டாண்டுக்கு  வெளியே போனேன் மா” என்று சொல்லிவிட்டு முறுக்கை எடுத்து நீட்டினார். வெயிலில் வெகுநேரமாகக் கணவர் நிற்கும் உஷ்ணம் மருமகளின் முகத்திலிருந்தது. 

‘சொல்லிட்டு போலாமில்ல” என்றாள். 

“நீங்க நல்ல தூங்கினீங்க அதான் எழுப்பில” என்று அவர் சொல்லும்போது அவரின் சத்தம் கொஞ்சம் பம்பியது. மருமகள் கடுப்பாக  முகம் காட்டியது போல ஒருமுறை கூட கலையரசி முகத்துக்கு நேராகக்  காட்டியதாக நினைவில் இல்லை. மருமகளிடம் மட்டும் பழகிவிட்டது. போய்  வெகுநேரமகிவிட்டதா? என்று தானே கேட்டுவிட்டுப் பேசாமல் ஜன்னல் ஓரத்தில் உட்கார்ந்தார். பேருந்து நகர்ந்தது. காற்று சூடாக முகத்தில் அறைந்தது.        

பேருந்து ஈரோடு வந்து நின்றது. “அப்பா ஊருக்கு இங்கிருந்து அடுத்த பஸ்ல போகணுமா” என்று செல்லமுத்துவின் மகன்  கேட்டான். “ஆமாண்டா எறங்கு சாப்பிட்டு அடுத்த வண்டியில போகலாம்” என்று காலையில் இருந்த அதே சுடுதண்ணி வேகத்தோடு அவன் இருந்தான். 

உடுமலை வந்து சேர்ந்த போது பொழுதாகியிருந்தது. பத்து மாதத்துக்கு பின்பு ஊருக்கு வந்த கிருஷ்ண மூர்த்தியின் முகம் பற்களால் விரிந்தது. சொந்த ஊரின் மண்ணின் வாசனை அவருக்கு உடலில் என்னவெல்லாமோ செய்தது. எதிரில் கூட்டாளி குப்புசாமி நடந்து வந்துகொண்டு இருந்தார். “என்னடா ஷோபா புருசா பேரப் புள்ளைகளுக்கு லீவு விட்டாச்சா ” என்றார். பல மாதங்களுக்கு பின்பு ஊருக்குள் கூப்பிடும் பட்டப்பெயர். இந்த பட்டப்பெயர்  குப்புசாமியின் மூக்கை உடைத்து ஷோபாவை மனைவி ஆக்கியதிலிருந்து ஒட்டிக்கொண்டது.  கலையரசிக்கு கிருஷ்ண மூர்த்தியை மாப்பிள்ளை பார்க்க வந்தவர்கள் “ஏற்கனவே ஏதோ ஷோபானு பொண்ணோட கல்யாணம் ஆகிறுச்சாமா ரெண்டாம் தாராம புள்ளைய தரமுடியாது” என்று மறுத்துவிட்டார்கள் பிறகு புரிய வைத்து கல்யாணம் முடிவதற்குள்ளாக ஒரு வழியாகிவிட்டது.  குப்புசாமியின் மூக்கை உடைத்த அன்றிலிருந்து ஊருக்குள் ஷோபா புருசன் என்றுதான் அழைத்தார்கள். அன்று ஷோபா இறந்தபோது எல்லோரும் வீட்டுக்கு வந்து இவனுக்கு ஆறுதல் சொன்னது கலையரசி வயிறு வாய் எல்லாம்  எறிந்தாள்.  

ஒரு வருடத்துக்கு பிறகு கூட்டாளியைப் பார்த்த அவருக்கு  பழையதெல்லாம் நினைவுக்கு வந்தவராக குப்புசாமியின் கையை பற்றி “மன்னுச்சுடுடா மாப்பிள்ள” என்று கிருஷ்ணமூர்த்தி சொன்னது. ”என்னாச்சு  இவனக்கு பைத்தியம் பிடிச்சிடுச்சா” என்ற சந்தேகம் குப்புசாமிக்கு வந்தது, எதுக்கு மன்னிப்பு கேட்டான் என்று இவருக்கும் புரியவில்லை ஏன் சொன்னேன் என்று அவருக்கும் தெரியவில்லை. “ஆயிரம்தான் இருந்தாலும் கடைசில ஷோபவத்தானே புடுச்ச” என்று கலையரசியைக் குறிப்பிட்டுச் சொன்னபோது கிருஷ்ணமூர்த்தி வாய்விட்டுச் சிரித்தார். பெருசுகள் என்னமோ பேசுங்க என்று எப்போதோ மகனும் மருமகளும் குழந்தைகளோடு போய்விட்டார்கள். காலையில் போஸ்டரில் ஷோபாவை பார்த்ததிலிருந்தே கடந்துபோன பழைய நினைவெல்லாம் மனதில் வந்து வந்து மோதியது.

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் ...

சரி பிறகு பார்க்கிறேன் என்று சொல்லிவிட்டு கிருஷ்ணமூர்த்தி கிளம்பினார்.  “ஆயிரம்தான் இருந்தாலும் கடைசில ஷோபவத்தானே புடுச்ச” என்று குப்புசாமி சொன்ன வார்த்தை காலையில் போஸ்டர் பார்த்த போதே வந்த அதே நினைவு மீண்டும் மனசுக்குள் கிளறியது. முப்பது வருடத்துக்கு பிறகு யாருக்கும் தெரியாமல் அவளுக்கு வாங்கிய “மல்லிகை பூவின்” வாசனை பையிலிருந்து திமிறி வெளியே வந்தது. முறுக்கு வாங்குவதற்கு முன்னதாகவே, “அவளுக்கு பூ வாங்கி கொடுத்து எவ்வளவு வருஷமாச்சு ஒரு மனுஷியாகூட மதிக்கலையே ச்சே “ என்று  வெகு காலத்துக்கு பிறகு வந்த உறுத்தலில் பூவை வாங்கி கசங்காமல் பையுக்குள் வைத்தார். வைத்ததிலிருந்தே மகனோ மருமகளோ பார்த்துவிடுவார்கலோ, பூ வாசம் வெளியே வந்து மரியாதை போயிடுமோ” என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது. அதனாலேயே பையை யார் கையிலும் கொடுக்காமல் தூக்கி கொண்டே திரிந்தார். 

வீட்டுக்கு போகும்போது எல்லோரும் வீட்டுக்கு வெளியே உள்ள  மரத்தடியில்  முகம் கழுவி தேனீருக்காக உட்கர்ந்துகொண்டு  இருந்தார்கள். கலையரசி எல்லோருக்கும்  தேநீர் கொடுத்துக்கொண்டு இருந்தாள். முகத்தில் ஒரு வெறுமை இருந்தது. “அவள்  தனக்காக அது வேண்டும் இது வேண்டுமென்று” எப்போதும் எதனையும் விரும்பி கேட்காதவள். அவளுக்கு பிடித்த புளிக்குழம்பைக்கூட   எல்லோரும் சாப்பிடவேண்டும் விரயம் ஆகக்கூடாது என்று எப்போதாவது சமைப்பாள். அவளின் முகச் சுருக்கம் கடந்தமுறை வந்ததை காட்டிலும் கூடுதலாக இருந்தது. அவளின் மாநிறம் கொஞ்சம் மங்கிப்போய் இருந்தது. தலைமுடி களைந்து வடு எடுக்காமல்  ஆங்காங்கே துறுத்திக்கொண்டு இருந்தது. 

இவரை பார்த்தவுடன் “வாங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு பேரனுக்கு தேனீர்  ஆற்றினாள். மாப்பிளை மகளை பார்த்து சிரித்துவிட்டு “நல்ல இருக்கீங்கள மாப்பிள்ள,  இந்தமுகம் கழுவிட்டு வந்தறேன் நீங்க டீய குடிங்க” என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றவர். வெளியே  நின்றுகொண்டிருந்த மனைவியை கூப்பிட நா தடுமாறியது. எப்போதும் அதட்டி அழைக்கும் அவரின் சுபாவம் தடுமாறியது. முதல்முறையாக வெட்கம் வந்ததை அவராலையே நம்ப முடியவில்லை. அவளை அழைப்பதை யாரவது தப்பாக நினைத்துவிட்டால் என்ன செய்வது என்று உறுத்தலாக இருந்தது. பூ கொடுக்க வேண்டுமே வேறு வழியில்லை கூப்பிடவேண்டியது தான்.

“இந்த இங்க வா” என்று அவர் எப்போதும்போல கூப்பிடும் அதே தோரனையில் மனைவியை கூப்பிட்டார். 

“இனி இந்த மனுஷன் போற வரைக்கும் அதே எடு இத எடுன்னு ஒரே ரோதனையா இருக்கும் அஞ்சு நிமிஷம் உட்கார உடமாட்டாறு ” என்று புலம்பிக்கொண்டே உள்ளே வந்தாள்.    

   “சொல்லுங்க என்ன வேணும்” என்று வந்து நின்றவளை “வாடி என் ஒரிஜினல் ஷோபா” என்று இடுப்போடு இழுத்துப்பிடித்து உதட்டில் அழுத்தி  ஒரு முத்தம் வைத்தார். “உன்ன கஷ்டப்படுத்திருந்த மன்னுசுக்கோ” என்று சொல்லிவிட்டு வெளியே போனார். பேரதிர்ச்சி அடைந்தவள் கையில் வாழை இலையில் பொட்டணம் கட்டிய மல்லிகைபூ கொத்து இருந்தது. வெகு காலத்துக்கு பிறகு நடந்த விபத்தை சுதாரித்து மீண்டபோது அவள் முகம் சிவந்து இருந்தது. 

கிருஷ்ணமூர்த்திக்கு சுடசுட தேனீர்  கொண்டு வந்து கொடுத்தாள். அவள் கூந்தலை யாருக்கும் சந்தேகம் வராதவகையில் கொஞ்சமாக வாறியிருந்தாள். முகம் கழுவி இருந்தாள். கிருஷ்ணமூர்த்தியின் கையில் தேனீரை கொடுக்கும்போது முகத்தை பார்க்காமல் எங்கோ திரும்பி கொடுத்தாள். வறண்ட அவளின்  உதட்டு நிலத்தில் சிறுபூ அரும்பி இருந்தது. தேனீரை அவர் குடித்தபோது உப்பு கரித்தது. “அடிக்கள்ளி” வெளிவந்த வார்த்தை அப்படியே வாய்க்குள்ளயே நின்றது. சூடு நாக்கின் நுனியில் பட்டு அவர் முகம் மலர்ந்தது.  

அ.கரீம்.