சிறுகதை: “மனித நேயம்” – திருமதி.சாந்தி சரவணன்காலையில் மனைவி ஆதிரை கையால் கொடுக்கும் சுட சுட காபிக்கு இந்த உலகில் இனையே இல்லை.
காலை கடன் முடித்து குளித்து ஒரு திருநீறு பட்டை அடித்து அன்றாட செய்திகளை பிரியத்துடன் அவள் கொடுக்கும் காபியை அருந்தி கொண்டே கேட்பது நகுலனின் வழக்கம்.

மனைவி அருகில் வருகிறாள் அதற்கு முன் காபியின் மணம். காபியின் மனம் நம்மை புத்துயிர் செய்வது ஒரு அலாதி இன்பம் தான்.

“ஆதிரை, உன்னால் மட்டும் தான் இப்படி ஒரு ருசியான காஃபியை போட முடியும்”.

“போங்க, தினமும் உங்களுக்கு இதே வேலை தான்” சிரித்துக்கொண்டே சென்றாள் ஆதிரை.

ஆதிரை நகுலன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
நகுலன் அரசு பள்ளியில் பாட்டு வாத்தியாராக பணியாற்றி வருகிறார்.

இரண்டு பிள்ளைகள். மூத்தவன் முதலாம் ஆண்டு பி ஏ தமிழ் படித்துக் கொண்டு இருக்கிறான். இளையவன் +2 படித்துக் கொண்டு இருக்கிறான்.
மகிழ்ச்சியான சிறு குடும்பம். ஓய்வு நேரங்களில் தெருவில் இருக்கும் பிள்ளைகளுக்கு இலவசமாக இசை கற்றுக் கொடுப்பார். நாம் நல்லதை விதைத்து கொண்டே இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்.

மூத்தவன் மணி, ” அப்பா, குட் மார்னிங்” என சொல்லிக் கொண்டே அருகில் வந்து அமர்ந்தான்.

“குட் மார்னிங் பா. இன்று விடுமுறை இன்னும் சிறிது நேரம் தூங்கி ஒய்வு எடுத்துக் கொண்டு இருக்கலாமே” மணி.

“இல்லப்பா, வழக்கமாக எழுந்திருக்கும் நேரம், விழிப்பு வந்து விட்டது,அது தான்”.

“கல்லூரி நண்பர்களோடு வெளியே செல்ல திடம் ஏதேனும் உள்ளதா?”, மணி.

“எதுவும் இல்லை, அப்பா”.

“சரி, கண்ணா நான் பூந்தமல்லி ஒரு விழாவில் கலந்து கொள்ள வேண்டும். காலை 8.00 மணியளவில் என்னை அந்த அரங்கத்தில் விட்டு விட முடியுமா?”.

“கண்டிப்பா பா. நான் போய் குளித்து விட்டு வந்து விடுகிறேன். டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பலாம்” என புறப்பட தயாரானான்.

“ஆதிரை, டிபன் தயார் செய்துடு மா”, என சொல்லிக் கொண்டே கிளம்ப தயாரானார் நகுலன்.
பத்து நிமிடத்தில் நகுலன், மணி இருவரும் தயாராகி சாப்பிட அமர்ந்தார்கள்.

ஆதிரையின் கை மனம் அலாதி. இருவரும் முறுகலான தோசை சட்னி ருசித்து சாப்பிட, வழக்கம் போல ஆதிரைக்கு இணையரிடத்திலும், மகனிடத்திலும் பாராட்டு. பாராட்ட ஒரு மனம் வேண்டும். அந்தப் பழக்கம் நகுலனிடம் உண்டு. சிறு வயது முதல் தந்தை தாயின் ஒவ்வொரு செயலையும் பாராட்டிப்பேசுவதை கவனித்துக் கொண்டு இருந்த பிள்ளைகள் அதையே பின்பற்றவும் செய்தார்கள். குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தானே முன்னோடி.
ரசித்து ருசித்து சாப்பிட்டு விட்டு , “சரிம்மா நாங்க கிளம்புகிறோம்” என இருவரும் கிளம்பினார்கள்.

பூந்தமல்லி அரங்கம் அடைந்தவுடன் நகுலன் “பத்திரம் மணி” என்று சொல்லி கொண்டே இறங்க, “சரி பா” என மணி கிளம்பினான்.
அரங்க நிர்வாகி சாரதியை நகுலனை கண்டவுடன் வரவேற்க வேகமாக ஓடி வந்தார்.

“வணக்கம் அய்யா, வாங்க வாங்க”.

“வணக்கம் சாரதி. தோழர்கள் எல்லோரும் வந்துட்டாங்க மா?”

வந்துட்டாங்க அய்யா என சொல்லி கொண்டே இருவரும் அரங்கம் நுழைந்தார்கள்.

பார்வை அற்றவர்களுக்காக மாதந்தோறும் நடக்கும் கூட்டம். அந்த கூட்டத்தை தலைமை ஏற்று வழி நடத்தும் பொறுப்பு நகுலனுடையது. தலைமை பொறுப்பை சரிவர செய்து வருகிறார். தற்போது கொரோனா அச்சுறுத்தல் ‌காரணமாக 8 மாதங்கள் கழித்து சமூக இடைவெளியுடன் நடக்கும் முதல் விழா. ஆதலால் மிகவும் கவனத்துடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

அன்று கூட்டத்தின் தலைப்பு “மனிதநேயம்”

‘மனிதநேயம் பண்பு என்ற மரபு நம் அனைவருக்கும் உண்டு. கால சூழல் “நடுவுல சில பக்கத்தை காணோம்” என்பது போல சில நேரங்களில் அந்த பண்பு நலிவடைந்து விடுகிறது . அவ்வாறு இல்லாமல் மனித நேயத்தை நாம் சிதரவிடாமல், மனிதநேயத்தோடு வாழ்வோம்’ என சிறப்பு பேச்சாளர் ஆழமான உரை நிகழ்த்தினார் . ஒரு மணி நேர உரை சிறப்பான முறையில் நடந்தது.விழா முடிந்து அனைவரும் கிளம்ப ஆயுதமானர்கள். சாரதி வழிகாட்டலோடு பார்வையற்ற அங்கத்தினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

அரங்கில் அனைவரும் கிளம்பியதும் நகுலன் அருகில் வந்த சாரதி, ” அய்யா அனைவரும் கிளம்பி விட்டார்கள்”. கோயம்பேடு வரை வாகனம் செல்லும். அதன் பின்னர் அவர்கள் தங்களின் ஊர்களுக்கு பயணிக்க ஏதுவாக இருக்கும்.

நன்றி சாரதி, புன்முறுவலோடு நகுலன் தானும் கிளம்ப தயாரானார்.

“அய்யா இருங்கள் நான் தங்களை பேருந்து நிலையத்தில் ஏற்றி விடுகிறேன். பின் தாங்கள் அங்கிருந்து தொடர் வண்டியில் செல்ல சுலபமாக இருக்கும்”.
“சரிங்க தம்பி, நன்றி” என நகுலன் சாரதியோடு அவரின் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்து நிலையத்தில் இறங்கி கொண்டார்.

சிறிது நேரத்தில் பேருந்து வந்தது. சாரதி நகுலனை வண்டி ஏற்றிவிட்டு ‘பத்திரமாக போயிட்டு வாங்க, அய்யா’ என்று சொல்லி கிளம்பினார்.
கண்டக்டர். டிக்கெட் டிக்கெட் என நகுலன் அருகே வந்தார்

நகுலன் தன் சட்டை பேக்கட்லிருந்து மாற்றுத் திறனாளிக்கான இலவச பஸ் பாஸை எடுத்துக் கொடுத்தார்.

கண்டக்டர், “சார் இது செல்லாது, இது போன வருட பஸ் பாஸ். இந்த வருட பஸ் பாஸை எடுத்துக் காட்டுங்க” என்றார்.

“முதல காசு கொடுத்து டிக்கெட் எடுங்க இல்லனா அடுத்த பஸ்ஸ்டாண்டில் இறங்கி தொலைங்க” என நிதானம் இழந்து கத்த ஆரம்பித்தார்.

நகுலனுக்கு அவமானமாகப் போனது. நாம் அனைவருக்கும் நல்லது தானே செய்கிறோம். நமக்கேன் இந்த நிலை என சற்று கவலை கொண்டார்.
மாற்றுத் திறனாளிகள் பஸ்களில் பயணம் செய்திட ஏதுவாக, இலவச பயண அட்டைகள் ஒவ்வொரு ஆண்டும் அரசு புதிதாகவும், புதுப்பிக்கப்பட்டும் வழங்கி வருகிறது. இந்த பயண அட்டைகளின் கால வரம்பு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை ஆகும். அந்த வகையில் நடப்பாண்டில் மார்ச் மாதம் இறுதியில் கொரோனா தொற்றால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் 2020-21-ம் ஆண்டுக்கான பாஸை புதுப்பிக்க அயிர கணக்கில் மாற்றுத் திறனாளிகள் பேருந்து அலுவலகத்திற்கு வருகின்றனர். இதை தடுக்க, கொரோனா முன்னெச்சரிக்கைாக அரசு ஆகஸ்ட் வரை பாசை பயன் படுத்தி கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பின் அது நீட்டிக்கப்பட்டு டிசம்பர் மாதம் வரை நீண்டுள்ளது என ஆணை. அதனால் மாற்றுத் திறனாளிகள் பாஸை புதுப்பிக்க அலுவலகம் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அறியாமல் இந்த கண்டெக்டர் இவ்வாறு பேசுவதைக் கண்டு மிகவும் வேதனை அடைந்தார் நகுலன்.

“சரிங்க சார். 8 ருபாய் டிக்கெட் ஒன்று கொடுங்க” என டிக்கெட் வாங்கி கொண்டார்.

“இதை முதலே வாங்கி தொலைத்து இருக்கலாம் இல்லை” என புலம்பிக் கொண்டே டிக்கெட் டிக்கெட் என முன்னே சென்றார் நடத்துனர். அவர் தன்னிடம் மற்றுமன்றி சக பயணிகளிடமும் அவர் அவ்வாறே நடந்து கொண்டார்.

நகுலன் அமைதியாக பயணித்தார். தான் இறங்கும் பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்றது.

நகுலன் இறங்கி நேராக காப்பாளர் அறைக்கு சென்றார்.

அவர் இவரை பார்த்தவுடன், “என்ன சார்?” என்றார்.

“அய்யா மாற்று திறனாளி பஸ் பாஸ் புதுப்பித்தல் பற்றி கண்டெருக்கு விவரம் தெரியவில்லை. எங்கள் குழுவில் பல ஆயிரம் பேர் இன்று ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேருந்தில் தான் பயணிக்கிறார்கள். அரசாங்கம் கொடுத்த சுற்றிக்கையை அனைத்து கண்டெக்டரிடம் தாருங்கள் சார். சலுகை இருந்தும் இன்று நான் உபயோகப்படுத்த இயலவில்லை”.

காப்பாளர், “முதலில் அமருங்கள் சார். தண்ணீர் அருந்துங்கள்”. என்றார்.

“நன்றி சார்” என்றார் நகுலன்.

“அரசு ஆணை தகவலை நாங்கள் பகிர்ந்து உள்ளோம் அய்யா. எப்படி இந்த தவறு நடந்தது என தெரியவில்லை” என்றார்.

“அதுக்கு இல்லங்கய்யா. அரசு கொடுத்த சுற்றிக்கை கண்டக்டரிடம் அல்லது பேருந்தில் ஒட்டி வைத்து விட்டால் இந்த அசௌகரியம் ஏற்படாது அல்லவா? அது மட்டுமல்ல மாற்று திறனாளிகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் சலுகைகள் சேர வேண்டும் . சலுகைகள் கிடைப்பதே அரிது. அப்படி கிடைக்கும் சலுகைகள் உரிய நபர்களுக்கு உரிய நேரத்தில் சேர்ந்தால் சிறப்பு” என சொல்லிக் கொண்டு இருக்கையில், அவர் பயணித்த பஸ் கண்டக்டர் அவசரமாக உள்ளே நுழைந்தார்.“அய்யா எங்க அம்மா தவறிட்டாங்களாம். பூந்தமல்லி கிட்ட இருக்கும் போது அலைபேசி வந்தது. என்ன செய்வது என தெரியலை. நான் கிளம்பி கொள்கிறேன். மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்” என படபடவென சொல்லிக் கொண்டே இருந்தவர் அப்போது தான் நகுலன் அங்கு இருப்பதை உணர்ந்தார்.

“அய்யா மன்னிக்கவும், நான் தங்களிடம் தவறாக பேசிவிட்டேன். தாயின் மரண செய்தி என் சொற்களை தடம் புரள வைத்தது “என கூறி பதிலுக்குக் காத்திருக்காமல் பறந்தார்.

மனித நேயம் அனைவரிடமும் உள்ளது ஆனால் சூழ்நிலை அதனை மறைத்து விடுகிறது என்ற அரங்கில் கேட்ட குரல் நகுலன் காதுகளில் ஒலித்தது.
சூழல் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்று பிள்ளைகளுக்கு வகுப்பில் சொல்வது எத்தனை நிதர்சனம்.
நகுலன், “ஆட்டோ, ஆட்டோ – தொடர் நிலையம் வர்றீங்களா பா?” என்றார்.

ஆட்டோ ஓட்டுனர் “உக்காருங்க சார் போலாம்”.

“எவ்வளவு பா” என்றார் நகுலன்.

ஆட்டோ ஓட்டுனர், “பிரசவத்திற்கு மட்டும் இல்லை சார், நம்ம ஆட்டோ, மாற்று திறனாளிகளுக்கும் இலவசம் தான்” என் சொல்லி கொண்டே பாட்டு ஆன் செய்தார்.

ஜிப்ஸி படத்தின் பாடல் ஒலித்தது.

மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
மனிதம் தாண்டி
புனிதம் இல்லை வா
இதயம் தாண்டி
இறைவன் இல்லை வா
வா வெண்புறா
மன்றாடும் நெஞ்சை
மடியில் ஏந்து
மன்னிப்பில் தானே
மானுடம் பூக்கும்
ஒன்றான கைகள்
மலையாய் மாறி
உண்டான வேகம்
வேருடன் சாய்க்கும்
எல்லாம் இங்கே ஓர் உயிர்
வாழ்க, “மனித நேயம்”.

நன்றி

திருமதி.சாந்தி சரவணன்