வெண்பனியாய் இருள் அப்பிக் கிடந்தது. இன்னமும் பொழுது முழுமையாக விடியவில்லை. ரயில் போக்குவரத்தை நிறுத்தி இருபது இருபத்தைந்து நாட்கள் ஆனபடியால் வில்லிவாக்கம் ரயில் நிலையம் வெறிச்சோடிக் கிடந்தது. ரயில் நிலையத்தை ஒட்டிய ரெட்ஹில்ஸ் சாலையில் வரிசையாக கடைகள். சாலையிலிருந்து ஆறு படிக்கட்டுக்கு மேலுள்ள கடை வரிசையொன்று மூடிக்கிடந்தது. குறிப்பாக சேட்டின் அடகுக் கடை திறந்து ரொம்ப நாளாகிவிட்டது என்பதை வாசலில் மண்டிக்கிடந்த புழுதியும், காற்றில் பறந்து படிக்கட்டில் குவிந்து கிடந்த காகிதங்களும் உணர்த்தியது.
ஷட்டரையொட்டிய மேல்படியின் ஒரு பக்கத்தில் விரிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ஷீட்டில், பொருந்தாத கிழிந்த பனியன் அரை டிரவுசர் அணிந்திருந்தவன் படுத்திருந்தான். தலைமாட்டில் பல்வேறு வண்ணங்களில் நாலைந்து வாட்டர் பாட்டில்களும் கிழிவதற்கு இடமற்று பிதுங்கி வழிந்த ஒரு ஹேண்ட் பேக்கும் இருந்தது. கீழ்ப்படியில் நாயொன்று அவன் காலையொட்டி படுத்திருந்தது, அவர்களுக்கிடையே இருந்த நெருக்கமான உறவினை வெளிப்படுத்துவதாக இருந்தது. வெளிச்சம் லேசாக பரவிய நிலையிலும் அவன் எழுந்திருக்க மனதின்றி படுத்தபடியே இருந்தான்.
படிக்கு கீழே சற்று தள்ளி வரிசையாய் இரண்டு ஆளுயர இரும்பு குப்பைத் தொட்டிகள் தெருவிற்கு அணி சேர்த்தது. குப்பைத் தொட்டிக்குப் பின்னால் ஏதேதோ அட்டைகளும், பிளாஸ்டிக்கும், பாட்டில்களும் வேறு பொருட்களும் பிளாஸ்டிக் கோணிகளில் கட்டி வைக்கப்பட்டிருந்தது எதிர்சாரியிலிருந்து பார்ப்பவர்க்குகூட தெரியும்
“யோவ் ஏளாயிடுச்சு யெந்திருய்யா”, “பிளாக்கி வாம்மா” பேபியின் குரல் கேட்டதும் நாய் எழுந்து சிலிர்த்துக் கொண்டது. படிக்கு கீழே நின்றிருந்த பேபியின் அருகில் போய் நின்று கொண்டது. இரும்புக் குப்பைத் தொட்டிகளை நாலைந்து முறை முகர்ந்தபடி வலம் வந்து, பின்னர் அதன்மீது காலைத் தூக்கி சிறுநீர் கழிக்கத் தொடங்கியது. அவன் எழுந்திருப்பதாக இல்லை. சற்றே குறைவான உயரம், சாம்பல் பூத்த பூஞ்சையான உடல், முடியப்படாது தோள்வரை விரிந்து கிடக்கும் லேசாக நரைத்த தலைமுடி, நைந்து வெளிறிய நைட்டி ஒன்றை அணிந்திருந்தாள். அவள் இடது கையில் சற்றே நீளமான முனை வளைந்த இரும்புக் கம்பியொன்று இருந்தது. இன்னொரு கையில் அவள் பிளாஸ்டிக் கவர் ஒன்றை பிடித்திருந்தாள். படியேறி அவனருகில் சென்றாள். முதுகைத் தட்டினாள்.
“உஸ்தாத் யெந்திருய்யா, மணி ஆவ்தில்ல?” பேபியின் குரல் வலுத்தது.
அவன் ஆடவோ அசங்கவோ இல்லை. இரு கைகளாலும் அவன் மார்பை உலுக்கினாள். உஸ்தாத் எழுந்து சப்பணமிட்டு உட்கார்ந்தான். கண்களை இரு கைகளாலும் தேய்த்துக் கொண்டான். “என்னாமே, பொளுது விடியல பாட்ட வுடறியே”.
பேபி அவன் அருகில் காலைத் தொங்கவிட்டபடி அமர்ந்து கொண்டாள். “சைக்கள் டீயை காணுமே?”
“மார்க்கெட் உள்ளே ரவுண்ட் அடிச்சிட்டுதான் அந்த பாடு வருவான்”.
“யோவ் சிஜ மோட்டார் சைக்கிள்ளே வந்துடுவான். மால கொண்டையா, தம்பு, ஜக்கு பாய் அல்லாரும் வருவாங்க. காம்டர் வண்டியும் வந்துடும். அதுக்குள்ளார நம்ப நாலு தொட்டியாவது பாத்தாதான் ஏதாவது தேறும்” இடது கையில் இருந்த கம்பியால் அவன் பனியனை இழுத்தாள்.
உஸ்தாத் எழுந்து நின்று கொண்டான். இடுப்பிலிருந்து நழுவிய டிரவுசரை சரி செய்து கொண்டான். கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தபடி படிகளில் இறங்கினான். பிளாக்கி அவனை பின் தொடர்ந்தது. குப்பைத் தொட்டியின் பின்னால் நின்றபடி சிறுநீர் கழித்தான். மீண்டும் படிகளில் ஏறி வாட்டர் பாட்டில் ஒன்றை எடுத்துக் கொண்டான். முகத்தில் தண்ணீரை பீச்சி அடித்துக் கொண்டு வாயைக் கொப்பளித்தான். குனிந்து பேபியின் நைட்டியால் முகத்தை துடைத்துக் கொண்டான்.
“யோவ் ரவுசு வேணாங்” பேபி சிணுங்கினாள். உஸ்தாத் அவள் அருகில் படியில் நெருக்கி உட்கார்ந்து அணைத்துக் கொண்டான்.
“விடுய்யா, நல்ல நேரம் பாத்த, பொளப்பப் பாரு” கையை அகற்றினாள். பிளாஸ்டிக் பையிலிருந்து ஒரு குவார்ட்டர் பாட்டிலை எடுத்தாள். பாதிவரை அதில் சரக்கிருந்தது.
உஸ்தாத் இப்பொழுது வாயைப் பிளந்து சிரித்தான். “எங்கம்மே புச்சே? தண்ணி ஊத்ண கணக்கா கீதே?” அவளிடமிருந்த பிளாஸ்டிக்கை மடித்து டிரவுசர் பையில் வைத்துக் கொண்டாள்.
“டக்கர் சர்க்குய்யா, தண்ணி மொள்ளமா ஊத்து”.
வாட்டர் பாட்டிலை எடுத்து அவள் கையில் இருந்து சரக்கு பாட்டிலில் மெதுவாக ஊற்றினான்.
“ம்” சரக்கு பாட்டிலை மூடி லேசாக குலுக்கினாள். பின்னர் மூடியைத் திறந்தாள். உஸ்தாத் வாங்கிக் கொண்டான்.
“நீ ஆஃப், நா ஆஃப்” பேபி சொன்னவுடன் உஸ்தாத் சிரித்தான். கீழ்ப்படியில் நின்று கொண்டிருந்த பிளாக்கி அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தது.
பாட்டிலை உயர்த்தி நேராக தொண்டைக் குழிக்குள் ஊற்றிக் கொண்டான். நிறுத்தினான். சரியான அளவு குடித்திருக்கிறோமா என்று ஒருமுறை¹ பார்த்து விட்டு பாட்டிலை அவளிடம் கொடுத்தான். “பச்சக்னு அடிக்குதுமே” என்றபடி உதட்டை துடைத்துக் கொண்டான். டிரவுசர் பாக்கெட்டிலிருந்ரு நசுங்கிய பீடியொன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான். ரெண்டு இழுப்பு இழுத்து புகையை மேலே ஊதினான்.
பேபி சாவகாசமாக டீ குடிப்பதைப் போன்று ஊதி ஊதி குடித்தாள். காலி பாட்டிலை அருகில் வைத்துக் கொண்டு “யோய் கொஞ்சம் குடு” என்றவுடன் உஸ்தாத் அந்த பீடியை அவளிடம் கொடுத்தாள். அவள் பீடியை மெதுவாக வலித்தாள். பேபி மூக்கு வழியா புகை விடுவதை உஸ்தாத் பார்த்துக் கொண்டிருந்தான்.
“டப்பாப் பசங்க. தூளக் கொறச்சு ஏமாத்தறானுங்க இந்த லொடுக்குக்கு பேரு கவ்னரு” பீடியை தூக்கியெறிந்தாள்.
உஸ்தாத் எழுந்தான். “டக்கரா கீதே, எங்கே புச்சே மே? ராவுலே படிலேதானே தூங்கினே?”
“ஆமாய்யா. அல்லா கூவலை. வெள்சாமி வந்து எளுப்பினான்.”
“காயலாங் கடை வெள்சாமியா?”
“அந்த பாடுதான். என்னய்யா இப்ப வரேனு கேட்டேன். பொழப்பு இல்லே நாறிப் போச்சு ஒரு மாதிரியாயிட்டேன். என்னோட இருன்னான்.”
“ஜக்கு பாய்தானே கனக்சன். அப்பப்ப போவுமே!”
“அது தெர்யும்யா, ஆனா இப்ப அது யேஇ ஆளாம். அல்லாரும் கூப்டவே பயப்படறாங்க!”
“தூத்தெறி. ஒரு குப்பக்காரிச்சியைகூட விட்டு வைக்க மாட்டானுங்க”.
“வேல முட்சப்பறம் கட்சிலே ஒரு பச்சையை கொடுத்துட்டு சிரிச்சான். அப்பறம் அவன் பைய தடவினேன். சொறுவின சர்க்கை கொடுத்துட்டு கோச்சுக்காத கட தொறந்தப்பறம் கவனிக்கறேன் கண்ணுனு கூவிட்டு போனான். கசுமாலம்” சபித்தாள்.
பேபி தோளில் பிளாஸ்டிக் கோணியை போட்டிருந்தாள். கையில் இரும்புக் கம்பியுடன் அவள் முன்னால் செல்ல தேக ஆகிருதிக்கு பொருத்தமற்ற சற்றே பெரிய பிளாஸ்டிக் கோணிப் பையை தோளில் அணைத்து பிடித்தவாறே உஸ்தாதும், பின் பிளாக்கியும் அவளைத் தொடர்ந்தனர். வழிந்து கிடந்த குப்பைத் தொட்டி அருகில் மூவரும் நின்றனர். தொட்டியைச் சுற்றிலும் நின்று அசைபோட்டுக் கொண்டிருந்த மாடுகளை உஸ்தாத் கம்பியால் தட்டி ஓரமாய் விரட்டினான்.
பேபி கையில் இருந்த கம்பியால் வழிந்த குப்பைகளை கீழே தள்ளினாள். உஸ்தாத் குப்பைகளை கிளற ஆரம்பித்தபோது பிளாக்கியும் தன் பங்கிற்கு காலால் சீக்க ஆரம்பித்து. பிளாக்கி “கம்னு கட” என்று பேபி சொன்னதும் கத்திக் கொண்டே குப்பைத் தொட்டியின் பக்க வாட்டத்தில் சென்று படுத்துக் கொண்டது. ஓரளவிற்கு தள்ளிய பின் தோளில் இருந்த பையையும் இரும்புக் கம்பியையும் குப்பைத் தொட்டியில் போட்ட பேபி, நைட்டியை முட்டிக்கு மேல் வேட்டி போல மடித்து இழுத்து கட்டிக் கொண்டாள். பின்னர் தொட்டியின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறி லாகவமாக குப்பைத் தொட்டிக்குள் இறங்கினாள்.
“ஏம்மே டூப் லைட் ஒடிஞ்சிருக்கு, பார்த்துக்கோம்மே” உஸ்தாத் அவளை எச்சரித்தான். காலில் தட்டுப்பட்ட பொருளை அவன் எடுத்தான். காகிதப் பை. ஆவலுடன் பிரித்தான். மருத்துவ மனையில் பயன்படுத்தி எறிப்பட்ட முக கவசங்களும் கையுறையும் இருந்தன. உஸ்தாத் மகிழ்ச்சியடைந்தான்.
“ஏம்மே இத மாட்டிக்க நாம சேப்பாயிட்டோம்” என்று ஒன்றை அளித்ததோடு இன்னொன்றை எடுத்து தானே அணிந்து கொண்டான். கையுறையை மாட்டிக் கொண்டான். பேபி கையில் வைத்துக்கொண்டு அவனைப் பார்த்தபடி நின்றாள். இப்போது உஸ்தாத் அவள் முகத்தில் அணிவித்து பின் பக்கமுள்ள இரண்டு நாடாக்களையும் இறுகக் கட்டினான்.
“யோவ் மூச் முட்டுதுய்யா” என்றபடி இருப்புக் கம்பியால் உள்ளே நோண்ட ஆரம்பித்தாள்.
“மே, பிலாஸ்டிக் வேணாம்! காய்தமும் வேணாம்!”
“என்யா நீ சொல்றே?”
“பழய சர்க்கே அப்படியே கெடக்கு, லோல் பட்து, காயலான் எப்பக் கடையைத் தொறந்து காசு பாக்கப் போறோம் தெர்லியே?”
“அப்ப எதப் பொறுக்கறது?”
“சில்வர் காயிதம், சப்பை மட்டும் எடும்மே.”
“ஆமாய்யா” அவள் மும்முரமானாள்.
தரையில் தள்ளிவிடப்பட்ட குப்பைகளை தன் கையில் உள்ள கம்பியால் உஸ்தாத் சீக்கத் துவங்கினான். குப்பையே குறைந்தது போல் அவனுக்கு இருந்தது. “என்னாம்மே மீந்த மிச்சம் சோறுகூட இல்லியே. அல்லாரும் துண்றாங்களா இல்லே தூங்கறாங்களா?”
“இந்தாய்யா ரொட்டி கீது” குப்பைத் தொட்டியிலிருந்து பிளாஸ்டிக் பையை வீசினாள்.
உஸ்தாத் கையில் பிடிபடாது கீழே விழுந்தது. குப்பைத் தொட்டியில் அருகில் படுத்திருந்த பிளாக்கி மெதுவாக குரைத்தபடி அவன் அருகில் நின்று வாலை ஆட்டத் துவங்கியது. கீழிருந்து கவரை எடுத்தான் சுற்றியிருந்த ரப்பர் பேண்டை அகற்றி காதில் மாட்டிக் கொண்டான். நாலைந்து துண்டுகள்தான் இருக்கும். எல்லாமே மஞ்சன் பூத்து இருந்தது. முகமூடியை கழற்றி பனியனுக்குள் போட்டுக் கொண்டு ஒரு துண்டை எடுத்து கடித்தான். “ஏம்மே வேணுமா? நல்லா கீது”.
பேபி தொட்டிக்குள் குனிந்து கம்பியால் நோண்டுவதில் மும்முரமாக இருந்தாள்.
“ஏம்மே ரொட்டி வேணுமா?” இன்னொரு துண்டையும் கடிக்கத் துவங்கினான். அவனருகில் வாலை ஆட்டிக் கொண்டிருந்த பிளாக்கி இப்போது குரைக்கத் துவங்கியது.
“அவளுக்கு கொடுய்யா, நம்பளாவது சர்கடிச்சோம். வாயில்லா ஜீவன் அது நேத்லேந்து பட்னிய்யா”
ரொட்டி உறையை கீழே விரித்து அதன் மீது மிச்சமிருந்த துண்டுகளை வைத்தான். பிளாக்கி குரைப்பதை நிறுத்தியது. சொடுக்கும் நேரத்திற்குள்ளாகவே ரொட்டிகளை கடிக்கத் துவங்கியது. தலையை உயர்த்தி உஸ்தாதை பார்த்தது. கையை ஆட்டியவுடன் பழையபடி குப்பைத் தொட்டியின் பக்க வாட்டத்தில் போய் படுத்துக் கொண்டது.
கோணியையும் கம்பியையும் வெளியே போட்டாள். “உஸ்தாத்” தொட்டிக்குள்ளிருந்து பேபி குரல் கொடுத்தாள்.
தொட்டியருகில் சென்று கையை உள்ளுக்குள் நீட்டினான். பேபி அவன் கையைப் பிடித்தபடி எழுந்து நின்றாள். பின்னர் குப்பைத் தொட்டியை பிடித்தபடி வெளியில் தாவினாள். உஸ்தாத் கையால் அணைத்தபடி பிடித்துக் கொண்டான். தரையில் காலை அகற்றி ஊன்றி நின்று கொண்ட பேபி, நைட்டியை பிரித்து விட்டுக் கொண்டாள். கீழே எறிந்திருந்த கோணியையும் கம்பியையும் எடுத்துக் கொண்டாள்.
“சப்பை கம்மியா. சில்வர்தான் தேறும்” குப்பைத் தொட்டியில் சாய்ந்து நின்று கொண்டாள். படுத்திருந்த பிளாக்கி பேபி அருகில் வந்து நின்று கொண்டு வாலை வேகமாக ஆட்டியது. பேபியின் காலை நக்கியது.
“யோவ், பீடி குடுய்யா”.
அவன் கொடுத்த பீடியை வாயில் சொறுகி பல்லால் கடித்துக் கொண்டாள். உஸ்தாத் தீப்பெட்டியை எடுத்து உரசினான். பேபி கண்களை மூடியவாறே புகையை இழுத்தாள்.
பேபி முக கவசம் அணிந்து தோளில் கோணிப்பை தொங்க கையில் கம்பியுடன் நடக்க ஆரம்பித்தாள். உஸ்தாத் சுற்றும் முற்றும் பார்த்தவாறே அவளைப் பின் தொடர்ந்து நடந்து வந்தான். பிளாக்கி பேபியையும், உஸ்தாத்தையும் மாறி மாறி தொடர்ந்தது.
“போஸ்டரே காணும்மே?”
“யோவ் கொட்டாயிலே பூன தூங்கறச்சே எந்த பேமானிய்யா போஸ்டர் ஒட்டுவான்? அவனுங்களும் நாறிப் பூட்டுறுப்பானுங்க. ”
“அதுக்கில்லமே சொவரெல்லாம் க்ளீனா கீது”
“ஆறணா பத்ணா டிக்கட்ல இப்ப படம் கெடயாது. பச்ச வச்சாத்தான் கொட்டாய்க்கு போவலாம்.”
“மெய்ன் ரோட்டுக்கா போய் ஒரு கொட்டாய்லே ரெண்டு பேரும் வாத்யார் படம் பாத்தோம்”.
“உஸ்தாத், அது நாதமுனி கொட்டாய்லே அடிமப் பொண், ரொம்ப வர்சம் ஆச்சு. அப்பக்கூட நீ எங்க என்ன படம் பாக்க வுட்டே” சிரித்தாள். அவன் தோள் மீது கையைப் போட்டுக் கொண்டாள்.
பெருமாள் கோயில் குளத்தருகில் வரிசையாய் நான்கு குப்பைத் தொட்டிகள். நாலைந்து மாடுகள் நந்தியாய் படுத்திருந்தன. ஒவ்வொரு தொட்டியாய் பேபி பார்த்தாள்.
“யோவ், எந்த டப்பாவும் ஃபுல்லாவலே” அவள் குரலில் ஏமாற்றம் தொனித்தது.
“நா எறங்கட்டுமா?”
“வேணாய்யா. நீ குந்து, நான் பீறாய்றேன்” பையையும் கம்பியையும் தொட்டிக்குள் போட்டாள். வழக்கம் போல் நைட்டியை முட்டி வரை தூக்கி இழுத்து மடித்து கட்டிக் கொண்டாள். பக்கவாட்டை பிடித்துக் கொண்டு ஏறி குளத்தில் குதிப்பது போல் உள்ளே குதித்தாள். பிளாக்கி குப்பைத் தொட்டியருகில் படுத்துக் கொண்டது. உஸ்தாத் குத்துக் காலிட்டு குளத்தையொட்டிய சுற்றுச் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.
பொல பொலவென்று வெளிச்சம். மூடிக்கிடந்த டீக்கடை வாசலில் உட்கார்ந்து கொண்டு சைக்கிளில் வரக்கூடிய தம் டீக்காக தவமிருந்தோர் உரக்க பேசிக் கொண்டிருந்தனர். அடுத்திருந்த ஃபாஸ்ட் ஃபுட் கடை திண்ணை காலியாக இருந்தது. கோணிப் பைகளை சாலையோரத்தில் வைத்துவிட்டு உஸ்தாதும் பேபியும் அமர்ந்தனர். பிளாக்கி பேபியின் காலடியில் படுத்துக் கொண்டது.
“சாரு, இது என்னக்கி முடியும்?” பேபி தவத்தில் இருந்த ஒருவரை கேட்டாள்.
“என்ன ஆஃபிஸ்லே ஏதாவது வேலை பெண்டிங்லே இருக்கா?” சொன்னவுடன் அருகாமையில் இருந்தவர்கள் சிரித்தனர்.
“குப்பை பொறுக்கறதுக்கு ஒண்ணும் கர்ஃப்யூ கிடையாதே” மற்றொரு தவயோகி சொன்னார்.
உஸ்தாதுக்கு கோபம் வந்தது. எழுந்தான். பேபி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். “யோவ் குந்துய்யா, சாரு டமாஸ் பண்றாரு”.
“சாரு, பொறுக்கி வைச்ச சர்கெல்லாம் இருவது நாளா அப்டியே கீது. காய்லான் கட தெறந்தா அதெல்லாம் போட்டு பத்து காசு பாப்போம். நாங்க சோறு திங்கலங்கறது வேற, ஆனா இந்த பிளாக்கிக்குக்கூட இப்ப சோறு கெடக்கலே, நாங்க நாயா பேயா அலயறோம். பிளாக்கிய எப்படி சொல்றது சாரு?”
“கவர்மெண்ட்லே பணம் தராங்க, ரேசன்லே பொருள் தராங்களே” தவயோகியேதான்.
“அதெல்லாம் வூடு வாசல் இருக்கற ஒங்களுக்குத்தான். ரோட்டு மேலே அல்லாடற எங்களுக்கு குப்பதான் கெடக்கும். இப்ப அதுக்கும் டப்பா காயுது” உஸ்தாத் உட்கார்ந்தபடியே சொன்னான்.
சைக்கிளில் தம் டீ கேனைக் கட்டிக் கொண்டு பையன் வந்தான். ஸ்டாண்டைப் போட்டுவிட்டு ஹேண்ட் பாரின் இரு பக்கமும் நெருக்கி மாட்டியிருந்த பைகளின் வாயை அகட்டி பிரித்து வைத்துக் கொண்டான். கேன் கட்டப்பட்டிருந்த கயிறு சரியாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்தான். பேபியின் காலடியில் படுத்துக் கிடந்த பிளாக்கி எழுந்து சைக்கிள் அருகில் சென்று திரும்பியது. பழையபடி பேபியின் அருகில் வந்து படுத்துக் கொண்டது.
“சங்கரு, எல்லாம் டைட்டாதான் கீது” பேபி குரல் கொடுத்தாள்.
“ராத்திரியே iட்டா? இல்லே இப்பத்தானா!” சங்கர் சிரித்தான். பேப்பர் கப்பில் டீயைப் பிடித்து தவமிருந்தோருக்கு வரமளித்தான். ‘சங்கர் பட்டர் பிஸ்கெட் இல்லியா’ யாரோ கேட்டார்கள். ஹேண்ட் பார் பையிலிருந்து எடுத்துக் கொடுத்தான். “பேபி, காப்பியா? டீயா?”
“சங்கர், அவளுக்கு ஓவல் கொடு” தவம் கலைத்த ஒருவர் சொன்னார்.
சங்கர் அவர்களை முறைத்தான்.
“சங்கரு, அவரு காண்டாவட்டும். நா காசு தறேன். ஓவல் இருந்தாலும் கொடு, இல்லாங்காட்டி ஓல்ட் மாங்க் இருந்தாலும் கொடு”
உஸ்தாத் எழுந்து சைக்கிள் அருகில் சென்றான். இரண்டு பொறையை வாங்கி பிளாக்கிக்கு போட்டான். சங்கரிடமிருந்து பேப்பர் கப்பை வாங்கி வந்து பேபியிடம் கொடுத்து விட்டு தானும் ஒன்றை வாங்கிக் கொண்டு அவள் அருகில் உட்கார்ந்தான்.
சங்கர் இப்போது சிகரெட்டை வினியோகிக்கத் துவங்கினான்.
“சங்கரு, கவ்னரு கொடு” டிரவுசர் பையிலிருந்து சில்லறையை எடுத்து எண்ணத் துவங்கினான்.
“யோவ், நீ ஜோப்லே வையா, நா தரேன்” நோட்டைக் கொடுத்து சில்லறைகளை வாங்கிக் கொண்டாள். சின்ன சுருக்குப் பையில் அவற்றை போட்டு நைட்டியில் இடுப்புக்கு கீழே வெளியே உள்ள பாக்கெட்டில் போட்டு சேப்டி பின்னால் வாயை மூடினாள். உஸ்தாத் ஒரு பீடியை பற்ற வைத்துக் கொண்டான். பேபி எழுந்து நின்றாள் நைட்டியை தொட்டிக்குள் இறங்குவதைப் போன்று முட்டிக்கு மேல் மடித்து இழுத்து கட்டிக் கொண்டாள். தோளில் கோணிப் பையை மாட்டிக் கொண்டாள். “இந்தாம்மே ரெண்டு இளுப்பு இளுத்துக்கோ” உஸ்தாத் பீடியை தந்தான். பேபி பீடியை இழுத்து புகையை ஊதியவாறே அவர்களைக் கடந்தாள். பிளாக்கி இருவரையும் தொடர்ந்தது.
“கலி முத்திப் போச்சுனு எல்லாரும் சொல்வாங்க, அது சரிங்கறது இப்பத்தான் தெரியறது” தவயோகி ஒருவர் திருவாய் மொழிந்தார்.
லைட் ஹவுஸ் அருகில் உள்ள நடுகுப்பம் ஹவுசிங் போர்ட் இரண்டாவது மாடியில்தான் மால கொண்டையா முடக்கு வாதத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் தன் வயோதிக தாய், மனைவி, வயதுக்கு வந்ததும் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்தி தற்போது திருமணம் செய்ய வேண்டிய வயதில் உள்ள இரண்டு மகள்கள், பள்ளிக்கூடமே செல்லாது வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு மகன் ஆகியோருடன் வசித்து வருகிறான். இருபது வருஷத்துக்கும் மேலாக சென்னை பெருநகர மாநகராட்சியில் தாற்காலிக துப்புரவு பணியாளராக அவன் இருந்து வருவதோடு, இரண்டு பெண்களும் ஃபோர்டிஸ் ஆஸ்பத்திரியில் மிகவும் குறைந்த சம்பளத்தில் ஆயா வேலை செய்வதால்தான் குடும்பம் தத்தித் தத்தி ஓடுகிறது.
பட்டினப்பாக்கத்திலிருந்து எட்டாவது ஸோன் அண்ணா நகருக்குட்பட்ட 95வது டிவிஷன் வில்லிவாக்கத்திற்கு வந்து வேலை செய்வது என்பது அவனுக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்து வருகிறது. ஆஸ்துமா இருந்தாலும் பரவாயில்லை ஒரு வழியாக சீக்கிரமாக எழுந்து டெரிப்ளினை போட்டுக் கொண்டு நாயர் கடையில் டீ பன் சாப்பிட்டுவிட்டு சைக்கிளை மிதித்து வரலாம் என்றால் ஹெர்னியா வேறு தொந்தரவு தருகிறது. சிலநாள் மோசமான நிலைமையில் ரெண்டு பஸ் பிடிச்சு வில்லிவாக்கம் வரதுக்குள்ளே ஆப்செண்ட் போடறதோட இல்லாம வேலையும் செய் என்று சிஐ சொல்வது காலங்காலமாய் நியதியாகவே இருந்து வருகிறது. காரட்டை முன்னே காட்டி ஓடச் சொல்வதைப் போல, பர்மனென்ட் என்று அடிக்கடி உச்சாடனம் செய்யப்படுவதால் மால கொண்டையாவைப் போன்றவர்கள் எந்த வேலையையும் எப்படியாவது செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகிறார்கள்.
அடையார் 13வது ஸோன்லே சிலேட்டர்புரம் இல்லையேல் மயிலாப்பூர்லே ஏதோ ஒரு டிவிஷனுக்கு மாற்றும்படி பல ஆண்டுகளாக அவன் கோரிக்கை விடுத்தாலும் மனுநீதி சோழர்கள் காதில் அது விழவில்லை. கோரிக்கை காதில் விழுவதற்கு அவர்கள் கோரும் தொகையில் இரண்டு பெண்கள் திருமணத்தையும் முடித்துவிடமுடியும் என்ற கருத்தில்தான் மால கொண்டையாவும் இருந்து வந்தான். முத்தையா செட்டியார் மேயராக இருந்த போது மால கொண்டையாவின் முப்பாட்டனார் ரிப்பன் பில்டிங்கில் நுழைந்ததாக மால கொண்டையாவின் தந்தை மால ராமய்யா சொல்லி வருவதுண்டு. அதற்குப் பின் பாட்டனாரும் தந்தையும் மட்டுமின்றி கொள்ளுப் பேரனும் ரிப்பன் பில்டிங்கிலிருந்து வெளியேற முடியாத நிலைதான் இன்னமும் இருந்து வருகிறது
இருபது நாளுக்கும் மேலாகி விட்டது. பஸ்ஸும் கிடையாது மாடி டிரெய்னும் இல்லை சுரங்க டிரெய்னும் நகரத்தில் ஓடவில்லை. ஆயின் துப்புறவு பணியாளர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வராவிட்டால் ஆஃப்செண்ட் போடுவது மட்டும் நின்றபாடில்லை. சைக்கிளை ஓட்டிச் செல்லும் மனோநிலையில் மால கொண்டையா இன்றைக்கு இல்லை. துப்பறவு பணியாளர்களுக்காக பஸ் விடப்படுவதாக நேற்றைய தினம் டிவியில் சொன்னார்கள் என்ற நம்பிக்கையின் பேரில் காமராஜர் சாலையிலிருந்து ராதாக்ருஷ்ணன் சாலையில் நுழைந்தான். சிட்டி சென்டர் அருகில் வந்து நின்றான். சாலையில் நடமாட்டமே இல்லை. பத்து நிமிடங்களுக்கு மேலாகி விட்டது. ஒரு பஸ்ஸும் ஓடவில்லை.
திரும்ப வீட்டிற்கு ஓடினான். சைக்கிளை எடுத்து தள்ளினான். பின்வீலில் காற்று இல்லை என்பதை புரிந்து கொண்டான். வண்டியை தள்ளியபடியே லாயிட்ஸ் ரோடில் நுழைந்தான். பெட்ரோல் பங்கில் இரண்டு மூன்று பேர் மட்டும் இருந்தனர். சைக்கிளுக்கு காற்றடிப்பதில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்தனர். சென்னை பெருநகர மாநகராட்சியின் தாற்காலிக துப்புரவுப் பணியாளர் என்பதையும் பணி நிமித்தம் சென்று கொண்டிருப்பதையும் விளக்கிய பின்னரே கம்ப்ரெஸ்ஸர் பம்ப் இயங்கியது.
அங்குமிங்குமாக போலீஸ் பட்ரோல் வண்டிகள் மட்டும் ஓடிக் கொண்டிருந்தது. பைலட் தியேட்டரை கடந்து போலீஸ் ஸ்டேஷன் அருகில் செல்கையில் நாலைந்து ஆண்களும் பெண்களும் வண்ணப் பொடிகளால் சாலையில் பெரியதாக கோலம் போட்டுக் கொண்டிருந்தனர். அமீன் ஓட்டல் பக்கத்திலிருந்து குப்பை வண்டியை தள்ளிக்கு கொண்டு சற்றே வயதானவர் ஒருவர் வந்து கொண்டிந்தார். அவரைப் பார்த்தவுடன் சைக்கிளிலிருந்து இறங்கி தள்ளிச் சென்றான்.
“என்னங்க, சீனிவாசப் பெருமாள் கோயில் உச்சவம்னா, லாயிட்ஸ் சந்துலே சிவாஜி கம்பெனி வாசல்லேதானே பெரிய கோலம் போடுவாங்க!”
“உச்சவமும் இல்லே கிச்சவமும் இல்லே. போலீஸ் ஸ்டேஷன்லே வேப்பிலை கட்டி கரோனாம்மாவைக் கும்பிடறாங்க. அதையும் நல்லா பார்த்துட்டு பிரசாதம் வாங்கிண்டு போ”.
“நா ஸோன் எட்டுலே வேலை செய்யறேன். இதெல்லாம் பதிமூணுதானே?”
அவர் தலையை ஆட்டினார்.
“ஏதோ வண்டிங்க விடராங்கனு சொன்னாங்க அதாலே அசால்டா இருந்துட்டேன்”.
“மாஸ்க்கும் கிளவுசும் குடுக்க வக்கில்லை. அதக் கேக்கறதுக்கு நாதியக் காணோம். மாலை போடறாங்களாம் விளுந்து கும்பிடறாங்களாம். அல்லாரையும் பர்மனென்ட் பண்ணச் சொல்லு. அது போதும். இப்ப வண்டிய எவன் கேட்டது? வண்டியும் வேண்டாம் குண்டியும் வேண்டாம்.”
மால கொண்டையா சிரித்தான். “அண்ணா உங்களுக்கு பரவாயில்ல மாஸ்க்கும் கிளவுசும்தான், எங்க ஸோன்லே படப்ப, அன்னக்கூட, ஷவலு, மொறம் எதுவும் கெடயாது. கேட்டா பிலாஸ்டிக் போட்டு கெடக்கிற துட்டுலே வாங்கிக்கோனு சொல்றாணுவ. அது இல்லாம அட்டை வித்து ஆயிரம் கெடச்சா மாதிரி சாயந்திரம் போவறச்சே கவனிக்கணும். இல்லாக் காட்டி லீவ்வே கய்ய வைப்பானுங்க.”
“எட்டுலே மட்டுமில்லே, எல்லா ஸோன்லேயும் இதே கதைதான். அதை விடு நீ எங்கே போவணும்”
“வில்லிவாக்கம், அது ஸோன் எட்டு”.
“என் வாயப் பாத்துண்டு இருக்கியே? போய்யா போய் பொழப்பைப் பாரு சிஐயும் சிஎஸ்ஸும் அலறப் போறாணுங்க!”
“நீங்க எங்கேந்து வரீங்க?” சைக்கிளில் மால கொண்டையா உட்கார்ந்தான்.
“மணலி புது நகர்லேந்து வரேன். பேஜாருதான், என்ன பண்ணறது பொழைக்கணுமே!”
மால கொண்டையா சற்று வேகமாய் மிதித்தான். எக்ஸ்பிரஸ் மாலைக் கடந்து வுட்ஸ் ரோடைப் பிடித்து மவுண்ட் ரோட் ஸ்பென்ஸர் சந்திப்பில் ஏறினான்.
ஓவியம் எஸ்.குமார்
மண்ணடி ஒத்தைவாடை தெருவிலுள்ள பால்வாடி அருகில் மால கொண்டையா சைக்கிளை நிறுத்தினான். ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குப்பை வண்டிகளுக்கு இடையில் சைக்கிளை தள்ளிச் சென்று சுவற்றில் சாய்த்து வைத்தான். கேரியரில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த சீருடை சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். விசிலை எடுத்து மாலையாய் போட்டுக் கொண்டு தனது வண்டிக்கு அருகே வந்து நின்றான். முன் வீலையும் பின்னர் பின் இரண்டு வீல்களையும் அழுத்திப் பார்த்துக் கொண்டான். பின்னர் பாக்கெட்டிலிருந்து சாவியை எடுத்து செயினில் பூட்டப்பட்டிருந்த பூட்டை கழற்றி சைக்கிளில் மாட்டி பூட்டினான். இரண்டு துப்புறவுப் பணியாளர்கள் தத்தம் வண்டிகளை அணிவகுப்பிலிருந்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.
“அந்த நாய்க்குத்தான் ஒண்ணைக் கண்டா ஆவாதுனு தெரியுமே? முன்னமே வந்தா என்ன?” தம்பு கேட்டான்.
மால கொண்டையா பதில் பேசாமல் குப்பை வண்டியை எடுப்பதில் மும்முரமாக இருந்தான்.
“கொண்டையா, என்ன பேசமா போறே? ஒண்ணத்தானே கேக்கறேன்?” தம்பு விடவில்லை.
“மாஸ்டர், பஸ்ஸு வரும்னு நேத்து டிவியிலே சொன்னாங்களாம். ஹெரன்யா தொந்தரவு ஜாஸ்தியாச்சு. சைக்கிளும் ஓட்ட முடியலே. பாத்தேன் அப்பறம்தான் சைக்கிள் எடுத்தேன். லேட்டாயிடுச்சு.”
“அவனுங்க எல்லாருமே சாவு கிராக்கின்னா நீ அதுக்கு மேலே இருக்கியே? போய்யா, கேட்டா நீயும் பதில் சொல்ல வாணாமா?”
“மாஸ்டர், நீங்க பர்மனென்டு எதவாணாலும் பேசலாம். நாங்க பேச முடியுமா?”
வண்டியை தெருவில் தள்ளினான்.
“கொண்டையா!”
யாரோ அழைப்பது போல இருந்தது. சுற்றி முற்றி பார்த்தான். முகமேதும் தெரியவில்லை. வண்டியை தள்ளத் துவங்கினான்.
“கொண்டையா நாங்க கூப்பிடறோம், நீ பாட்டுக்க போவறியே!”
திரும்பிப் பார்த்தான். பால்வாடியை ஒட்டிய அப்பார்ட்மெண்ட் காம்பவுண்டுக்குள்ளிருந்த வந்த அழைப்பை புரிந்து கொண்டான். ஆணும் பெண்ணுமாய் நாலைந்து பேர் நின்று கொண்டிருந்தனர்.
“எல்லாருக்கும் வணக்கங்க. லேட்டாயிடுச்சு. மஸ்டர் ரோல் தர மாட்டேனுட்டாங்க, அந்த டென்ஷன்லே வண்டியை எடுத்தேன். கவனிக்கல.”
“சுவரு பக்கம் அட்டை, பிளாஸ்டிக், பாட்டில் எல்லாம் குப்பையாய் சேர்ந்துண்டு இருக்கு. ஒரே வாடை வருது. எப்பத்தான் எடுக்கப் போறே?”
“சார் எல்லாமே ரோட்டு மேலே பால்வாடிப் பக்கத்திலேதானே இருக்கு? அது குப்ப இல்ல சார். க்ளீன் சரக்கு”.
“நீ இந்த ஓரத்திலே குவிச்சு வைச்சிருக்கே. தம்பு நடுவிலே வைச்சிருக்கான். இது போறாதுனு அந்தம்மா……”
“ஆமாம் சார், அவங்க ஜக்கு பாய்”.
“ஏதோ ஒரு பாய், அவங்களும் நெறய சேத்து வைச்சிருக்காங்க. எல்லாத்தையும் எடுங்க, இல்லாக்காட்டி நான் போட்டோ எடுத்து கமிஷனருக்கு அனுப்பிடுவேன்.”
“சார் இதுக்கு முன்னாடி இப்படி நாங்க சேத்து வைச்சதில்ல. அன்னின்னிக்கி போட்டுடுவோம். டெய்லி ஏதோ காசு கெடக்கும். இப்ப இருபது இருபத்தைஞ்சு நாளா எந்தக் கடயும் கிடையாது. கட தொறந்தே ஒடனே எல்லாமே காலியாயிடும், எங்க வயித்திலே அடிக்காதீங்க சார்”.
“கொண்டையா ஒனக்கு சொன்னா புரியாது. இந்த மாதிரி குப்பையிலேந்துதான் கிருமிங்க வரது. புதுப் புது நோவு மனுசனுக்கு தொத்துது”.
“சார் எங்க ஆளுங்க எப்ப மருந்து அடிச்சாலும், சர்க்கு மேலே டபுளாதான் அடிப்பாங்க சார். அவங்களுக்கு தெரியும். நேத்துகூட அடிச்சத நீங்கதான் பார்த்தீங்களே?”
“எனக்கு அதெல்லாம் தெரியாது. இதெல்லாம் உடனே இங்கிருந்து போவணும்”.
“சார், இதெல்லாம் நாங்க போட்டா மாதிரி சொல்றீங்களே. நீங்க போட்டதிலேந்து பிரிச்சு வச்சதுதானே அதெல்லாம்.”
“கொண்டையா, எனக்கே புத்தி சொல்றியா? டேய் மொபைலை எடுத்துண்டு வா” அலறினார்.
மற்றவர்களும் சேர்ந்து கொண்டனர். அங்கே குவிக்கப்பட்டிருந்த அட்டைகளையும் மற்ற கோணிப்பைகளையயும் அகற்றும்படி ஏக காலத்தில் ஊளையிடத் துவங்கினர். லேசாக மூச்சிரைப்பதை உணர்ந்தான். இன்னமும் பேசினால் அதிகரிக்கும் என்ற பயத்தினால் பேசாமல் வண்டியை தள்ளத் துவங்கினான்.
“நீங்க இவ்வளவோ சொல்றீங்க கேக்கறானா பாருங்க. வைக்கற இடத்திலேதான் இவங்களை வைக்கணும்” ஒரு அம்மா சொன்னாள்.
பால்வாடி சுவற்றோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைகளையும் கோணிப் பைகளையும், இருவர் தங்கள் மொபைலால் படம் பிடிக்கத் துவங்கினார்.
வண்டியை தள்ளியவாறே தெற்கு மாட வீதி சந்திப்பிற்கு வந்தான். ரெடிமேட் கடை படியில் உஸ்தாதும், பேபியும் உட்கார்ந்திருந்தனர். கீழே காலடியில் படுத்திருந்த பிளாக்கி ஏதாவது சத்தம் வருகையில் தலையை உயர்த்தி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தது.
“பேபி, குப்ப பூரா ரோட்லே தள்ளிட்டே பாரு!” மால கொண்டையா சிரித்தான்.
“அண்ணா நாங்க தள்லே. அல்லாருமா தொட்டிலே போடறாங்க? மாடு கீதா, பயந்துகினு அப்படியே தூக்கி அடிக்கறாங்க”.
மால கொண்டையா ஷவலால் எல்லா குப்பைகளையும் வாரி குப்பைத் தொட்டிக்குள் போட்டிக் கொண்டிருந்தான்.
“நா வரட்டா?” உஸ்தாத் குரல் கொடுத்தான்.
“வேணாம். ஜக்கு பாய் வந்துச்சா?”
“டூட்டி மாத்தி வுட்டாங்களாமே. வெல்கம் காலனிப் பக்கம் போச்சு” உஸ்தாத் சொன்னான்.
சாலையின் ஓரமாக வைக்கப்பட்டிருந்த மூன்று குப்பைத் தொட்டிகளிலும் குப்பை வழிந்தது. ஷவலால் மேலே தட்டி பறக்காதபடி செய்தான். நின்று கொண்டிருந்த மாடுகளை விரட்டினான். தொட்டியைச் சுற்றியுள்ள பகுதி சுத்தமாயிற்று. ஷவலையும் அன்னக்கூடையையும் தன் வண்டியில் வைத்துக் கொண்டான்.
“அண்ணா, நாஸ்தா செஞ்சியா?” பேபி கேட்டபடி படியில் இறங்கினாள்.
“இல்லம்மே. பஸ்ஸ நம்பி ஏமாந்துட்டேன். காலீலே லைட் ஹவுஸ் கிட்டே டீ சாப்பிட்டதுதான்.”
“காய்லான் கட தெறந்தா, இந்த பேஜாரு இல்லே” உஸ்தாத் சொன்னான்.
“அது சர்தான். டெய்லி ஏதோ பிலாஸ்டிக் அட்டை போட்டு பொளுது ஓடிச்சு. இப்போ என்ன செய்யறது? நீயும் சர்க்கு வைச்சிருக்கே. அங்கே அல்லாரும் வைச்சிருக்கோம். எப்போதான் போடறது? அங்கே அடப்பாஸை இங்கே வைக்காதேனு இப்பக்கூட அந்த அப்பார்ட்மெண்ட் ஆளுங்க சண்ட வலிச்சாங்க.”
“சேட்டு வீட்லே டெய்லி பேபிய திட்றாங்க. காய்லானுக்கே பிளாட்பாரம்தான் கோடவுன். ஆனா நம்ப வைச்சா காண்டாவறாங்க”.
“குப்பக்காரிச்சிங்க துட்டுப் போட்டு காய்லான் மாதிரி கோடவ்னா எடுக்க முடியும்” பேபி நைட்டி பையிலிருந்து சுருக்குப் பையை எடுத்து எண்ணி மால கொண்டையாவிடம் கொடுத்தாள்.
“அண்ணா கீதாக்கா வூட்லே இருபது ரூபாக்கு இட்லி, இருபது ரூபாக்கு தோசை வாங்கு. உனக்கும் ஏதாவது வாங்கிக்கோ”.
“என்னாம்மே பச்சை வெளயாடுது?”
“அப்பறம் பேசலாம். தெருவை முடிச்சுட்டு வரும்போது வாங்கியாந்துடு”.
“ஏம்மே, நீயே போயேன்”
“குப்பை பொறுக்கிங்க அவங்க வீட்டுக்குள்ள வரக்கூடாதாம்” உஸ்தாத் சொன்னான்.
“நா”
“அண்ணா, நீ அள்றே” பேபி சிரித்தாள்.
மால கொண்டையா வண்டியை தள்ளிக்கொண்டு விசிலால் ஊதியபடி தெருவிற்குள் நுழைந்தான்.
கையை கழுவிக் கொண்டு படியில் உட்கார்ந்தான். பொட்டலத்தை பிரிக்கவில்லை. காம்பேக்டர் இடைவிடாமல் ஹாரன் அடித்தபடி வந்து நின்றது. “டேவிட், இதோ வரேன் லொள்ளு பண்ணாதே!” மால கொண்டையா அப்படியே பொட்டலத்தை வைத்துவிட்டு எழுந்தான். காம்பேக்டர் ரிவர்ஸில் வந்தது. குப்பைத் தொட்டியருகில் நின்றது. அதிலிருந்து இரண்டு பேர் குதித்தனர். ஹைட்ராலிக் ஹாண்டில் நீட்டியவுடன் அவர்கள் குப்பைத் தொட்டியை இழுத்தனர். மால கொண்டையா பின்னால் நின்று தள்ளினான். தொட்டியை ஹாண்டிலில் மாட்டினர். தொட்டியை அப்படியே உயர்த்தி உள்ளே கொட்டிக் கொண்டது. மூன்று தொட்டியும் கொட்டிய பின்னர் ஹைட்ராலிக் கதவு கொட்டப்பட்ட குப்பைகளை அமுக்கியது. காம்பேக்டர் அடியிலிருந்த தண்ணீர் பொத பொதவென்று கொட்டியது. லேசாக அழுகல் வாடை எங்கும் பரவியது. மால கொண்டையா காலி குப்பைத் தொட்டிகளை வரிசையாக தள்ளி வைத்தான்.
“என்ன கொண்டையா, கவனிப்பு இல்லையா?”
“டேவிட், எங்கே பொரளுது? அட்டையும் சப்பயுமே குவிஞ்சு கெடக்கு, எப்ப காசாவுமோ தெர்லியே?”
“கொடுங்கையூர்லியே பேஜார்தான். வண்டி போனா நாப்பது பேர் ஓடியாருவாங்க. இப்ப நாலு பேரைக் கூட காணும். எல்லாமே மோடாத்தான் இருக்கு”.
“ஆமாம் எங்க ஆளுங்க வந்து கர்சாத்தானே கரயும்” பேபி குரல் கொடுத்தாள்.
“என்னா பேபி? ஒண்ணை காணுமேனு பாத்தேன். என்ன செம்ம கைமாவா?”
“போய்யா நாறிண்டுருக்கோம். துன்னே ரெண்டு நாளாச்சு. இப்பத்தான் கொண்டையா நாஸ்தா வாங்கியாந்தாரு”.
பேபி காம்பேக்டர் அருகில் சென்றாள். “கண்ணு, கட்டிங் கீதா? கொடேன்”.
டேவிட் சிரித்தான். ஸ்டியரிங்கிலிருந்து கையை எடுத்து உட்கார்ந்தபடியே குனிந்து தரையில் நின்றிருந்த பேபியின் கன்னத்தில் கிள்ளினான். “என் பேபிக்கு இல்லாதயா?” எழுந்தான் சீட்டுக்கு அடியில் இருந்து காகிதத்தில் சுத்தி வைக்கப்பட்டிருந்த பாட்டிலொன்றை கொடுத்தான். பேபி வாங்கிக் கொண்டாள். டேவிட் மீண்டும் அவள் கன்னத்தில் கைவைத்துவிட்டு ஸ்டியரிங்கைப் பிடித்தான்.
“கண்ணு, இன்னக்கி உஸ்தாதோட ஜல்சா பண்ணுமே. நாளக்கி நா வரேன் டக்கரா குளிச்சுட்டு ரெடியாயிரும்மே” டேவிட் சிரித்தான்.
“அப்படீன்னா சோப்புக்கு துட்டு குட்யா!”
காம்பேக்டர் நகர்ந்தது.
உச்சி வெயில். சற்றே கடுமையாக இருந்தது. மால கொண்டையாவிற்கு மூச்சிரைப்பதாகத் தோன்றியது. காலி வண்டியை தள்ளியபடியே வந்தான். காய்லான் கடையையொட்டிய பிளாட்பாரத்தில் மூட்டைகள் குவிந்து கிடந்தது. வெவ்வேறு வகையான மூன்று சக்கர வண்டிகள் ஓரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். உஸ்தாதோ பேபியோ கண்ணில் படவில்லை. மெதுவாக வண்டியை தள்ளினான். பால்வாடி அருகே வருவதற்குள் நாக்கு வெளியே தள்ளி விட்டது. நாலைந்து வண்டிகள் வரிசையாக அணி வகுத்திருந்தன. வண்டிகளை பொறுமையாக பார்த்தான். தம்பு வண்டியைக் காணோம். வண்டியை அணைத்து தள்ளி விட்டு பால்வாடி காம்பவுண்ட் உள்ளே நுழைந்தான். புங்க மரத்தடியில் உட்கார்ந்து கொண்டான். மூச்சிரைப்பு அடங்குவதாகத் தெரியவில்லை. உள்ளேயிருந்து யாரோ ஒரு பையன் வந்தான். கையால் சைகை செய்தவுடன் அருகில் வந்தான். “உள்ளே யாராவது இருந்தா கூப்பிடுப்பா”.
ஜக்கு பாய்தான் வந்தாள். “கொண்டையா என்ன ஆச்சு?”
“லேசா மூச்சிரைக்குது கொஞ்சம் தண்ணி கொண்டா மாத்திரையை போட்டுக்கறேன்” பேண்ட் பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் கவரை எடுத்தான். பிரித்தான். பல வண்ணங்களில் மாத்திரைகள். இரண்டு மாத்திரைகளை போட்டுக் கொண்டு ஜக்கு பாய் கொடுத்த தண்ணீரை குடித்தான்.
“ஸ்டேஷன் ரோட் போயிட்டு தம் டீ வாங்கியாறட்டுமா?”
“அதெல்லாம் வாணாம், நான் கொஞ்ச நேரம் சாஞ்சா போதும்”.
“இல்லே கொண்டையா, பிரிஞ்சி சோறு கொண்டாந்தேன். கொஞ்சம் வேணா சாப்பிடு”.
“எதுவும் வாணாம்.” கண்ணை மூடிக் கொண்டான்.
டப் டப் மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டவுடன் கண்ணைத் திறந்தான். வண்டி நேராக உள்ளே வந்தது. இவன் காலடியில் நின்றது. சூப்பர்வைசர் தான்.
எழுந்தான். “என்னா சார் இங்கே வந்துட்டே?”
உள்ளேயிருந்து ஜக்கு பாயும் இன்னும் வேறு பெண்களும் வெளியே வந்தனர். சூப்பர்வைசரைப் பார்த்ததும் ஜக்கு பாய் சிரித்தாள். “சாரு, எங்கே வந்தே? உள்ளே வாங்க” என்றாள்.
“ உங்க பஞ்சாயத்துதான் பெரும்பாடா இருக்கு” போனை தேய்க்கத் தொடங்கினான்.
குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் ஸ்டூலை ஜக்கு பாய் உள்ளேயிருந்து எடுத்து வந்தாள். “சாரு, இதுலே குந்து” கொஞ்சலாக இருந்தது.
சுற்றும் முற்றும் நோட்டம் விட்டவாறே அவன் உட்கார்ந்தான்.
“தம்பு எங்கே?”
“சாப்பாடு கொண்டாரலை, மண்டபம் கிட்டே வாங்கியாறேனு போயிருக்காரு” ஜக்கு பாய் சொன்னாள்.
“இங்கே ராம்லால் சேட்டு கடை வாசல்லே, குப்பைத்தொட்டிக்குப் பின்னாலே யார் சரக்கு வைச்சிருக்காங்க?”
“நம்ப ஆளுங்க இல்லே சார். உஸ்தாதும் பேபியும்தான் வைச்சிருக்காங்க” மால கொண்டையா சொன்னான்.
“அவங்க யாரு? நா பார்த்திருக்கேனா?”
ஜக்கு பாய் சிரித்தாள். ”உஸ்தாத் நாகேஷ் கணக்கா சிரிச்சா மாதிரி, கிளிஞ்ச பனியன் ஆப் டவுசரோட சுத்துவான். அவன பாக்காத இருந்துருக்கலாம். ஆனா வில்லிவாக்கத்திலே பேபிய தெரியாம சினேகிதம் வெக்காம கார்ப்பரேசன் ஆளுங்க ஆருமே இருக்க மாட்டாங்க”.
“நா ஒண்ணு கேட்டா, நீ ஒண்ணு சொல்றியே” சலித்துக் கொண்டான். “ மால கொண்டையா, இப்ப அவங்க எங்கே இருப்பாங்க?”
“காய்லான் கடை பக்கத்திலேதான்”.
“அவங்களை அழைச்சிண்டு வாங்க. ஏம்மா ஜக்கு பாய், பக்கத்து அப்பார்ட்மெண்ட்லேந்து வாட்ஸ் அப்லே கம்ப்ளையண்ட் கொடுத்திருக்காங்க. அவங்களையெல்லாம் கூப்பிடு”.
ஒரு கையில் கேரி பேக்கும், இன்னொரு கையில் வாட்டர் பாட்டிலுமாய் தம்பு வந்தான்.
“வணக்கம் சார். சாப்பிடறீங்களா?” சிரித்தான்.
“பஞ்சாயத்துக்கு வந்தா சாப்பிடச் சொல்றீயே! யோவ் சீக்கிரம் நாலு வா போட்டுண்டு வா”.
புங்க மரத்தடியில் கும்பல் கூடியிருந்தது. ஒத்தைவாடைத் தெரு அப்பார்ட்மெண்ட்டில் இருக்கக்கூடியவர்கள் ஆண்களும் பெண்களுமாய் பத்து பேருக்கு குறையாமல், நின்று கொண்டிருந்தனர். நடுவில் ஸ்டூலில் சூப்பர்வைசர் உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் அந்த டிவிஷனைச் சார்ந்த சிஐ கிருபாலும் நின்று கொண்டிருந்தார். துப்புரவுப் பணியாளர்கள் மால கொண்டையா, தம்பு, ஜக்கு பாய் இல்லாமல் வேறு ரெண்டு மூணு பேரும் இருந்தனர்.
உஸ்தாத் ஒரு கையால் டிரவுசரைப் பிடித்துக் கொண்டு சற்று வேகமாய் நடந்து வந்தான். பேபி தோளில் கோணிப்பை இல்லை. ஆனால் கம்பியுடன் பிளாஸ்டிக் பை ஒன்றை வைத்திருந்தாள். பிளாக்கி பின்னால் வந்து கொண்டிருந்தது.
மால கொண்டையாவை பேபி பார்த்துவிட்டாள். “அண்ணா காப்பரேசன் ஆளுவ மீட்டிங். நாங்க ஏன் வர்ணம்?”
“உங்கள சூப்பர்வைசர்தான் இட்டாரச் சொன்னாரு”.
இருவரும் சற்று தள்ளி வெயில் படியாத இடமாக பார்த்து உட்கார்ந்து கொண்டனர். பிளாக்கி படுத்துக் கொண்டது.
“கிருபால் ஏன் பேசாம நிக்கறே. கம்ப்ளையண்ட் வந்ததை சொல்லு”.
“கார்ப்பரேசன் ஆளுங்க அட்டை பாட்டில் குப்பையை காம்பேக்டர்லே போடாமா, ரோட்லேயே முப்பது நாளா சேர்த்து வைச்சிருக்காங்கனு கம்ப்ளையண்ட் வந்திருக்கு.”
“சார், அதுனாலே நாங்கள்ளாம் உள்ளே உக்கார முடியலே. நாத்தம் குடலைப் புடுங்குது. சாப்பிட முடியலே. எல்லாருமே அவஸ்தைப் படறோம். அது மட்டுமிலே ஏதாவது நோய் நொடி வந்தா யார் அலையறது?”
சூப்பர்வைசர் துப்புரவுப் பணியாளர்களைப் பார்த்தார். “என்னய்யா சொல்றீங்க?” கேள்வியை எழுப்பினார்.
“சார், இந்த குப்பையை பிரிச்சு ஏதோ ரெண்டு ரூபா பாக்கறதுங்கறது ரொம்ப நாளா இருக்கு. உங்களுக்கு தெரியாதது இல்லே. ஆனா காய்லான் கடையெல்லாம் மூடியாச்சு. அதுனாலே சர்க்கு அப்படியே சேந்துருச்சு. எங்களுக்கும் ஏதோ கொஞ்சம் நாஸ்தாக்கும் சர்க்குக்கும் காசு கெடக்கும் அதெல்லாம் போச்சு” தம்புதான் துணிச்சலாக பேசினான்.
“இவங்க அப்பார்ட்மெண்டு வாசல்லே யாரெல்லாம் அடைச்சி வைச்சிருக்கீங்க?”
“சாரு, அவங்க அப்பார்ட்மெண்டு வாசல்லே யாருமே வைக்கறதில்லே. நீங்கதான் மோட்டார் சைக்கிள்லே வரும்போதே பாத்திருப்பீங்களே? இந்த காம்பவுண்டுக்கு வெளியே நாங்கதான் கோணி மூட்டையிலே கட்டி போட்டுருக்கோம். நாளைக்கு வெள்சாமி கட தெறந்தாச்சுனா அல்லாம் காலியாயிடும். இடமும் கிளீனாயிடும்” ஜக்கு பாய் பதில் சொன்னாள்.
கிருபால் உஸ்தாத் பக்கம் திரும்பினார். “யோவ் ராம்லால் சேட் கட வாசல்லே குப்பையை குவிச்சுட்டு குடும்பம் நடத்தறீங்களாமே? அங்கேந்தும் கம்ப்ளையண்ட் வந்திருக்கு.”
பேபி எழுந்து நின்று கொண்டாள். பிளாக்கியும் எழுந்து நின்று கொண்டது. சுருங்கி கசங்கியிருந்த நைட்டியை உதறினாள். பின்னர் இழுத்து விட்டுக் கொண்டாள். “சாரு, கம்ப்ளைட் குப்பைக்கா? இல்லாக்காட்டி குடும்பத்துக்கா?”
அப்பார்ட்மெண்ட் ஆசாமிகளும் சிரித்தனர்.
“ஊர் உலகம் பூரா கரோனா பயத்துலே நடுங்கிண்டு இருக்கோம். எப்படியெல்லாமோ வரதுனு சொல்றாங்க. சுத்த பத்தமா இருக்க வேண்டாமா? கேட்டா எதிர்க்கேள்வி போடறாளே? குப்பை பொறுக்கறவளுக்கு இருக்கற திமிரைப் பாத்தீங்களா!” ஒரு அம்மா சொன்னாள்.
பேபி பேசாமல் உஸ்தாதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னாமே, பேசமா நிக்கறே அம்மா சொல்றாங்க இல்லே, பதில் சொல்லு” தம்புதான் குறுக்கிட்டான்.
பேபி சிரித்தாள். “குப்பை அள்றவங்களும் குப்பை பொறுக்கிங்களும் நாதியத்தவங்க. அதான் பேசறாங்க. சுத்த பத்தம் பத்தி இந்தம்மா இவ்ளோ பேசறாங்க. இவங்கல்லாம் தூமத் துணி இல்லாக்காட்டி கொயந்தங்களுக்கு கட்றாங்களே டைபர் அத கவர்லே சுத்தி கண்ல கைலே படாம என்னிக்காவது தொட்டிலே போட்றுக்காங்களா? டெய்லி இருவது தொட்டிலே ரெண்டு தபா இல்லாக்காட்டி மூணு தபாகூட இறங்கி நோண்டறேன். இருவது வர்சமா இதத்தான் செய்றேன். எப்பவோ ஒத்தருதான் கவர்லே கட்டிப் போட்டிருப்பாங்க”.
“ஏம்மா அசிங்கமா பேசாதே நிறுத்து!” கிருபால் சொன்னான்.
“சாரு, இது மட்டும் இல்ல, இன்னும் கீது. வேல செஞ்சிட்டு கயட்டின ரப்பர் ஒறயக்கூட காய்தத்திலே சுத்திப் போட மாட்டானுங்க அசிங்கம் புடிச்சவங்க”
சற்றே மௌனம் கவ்வியது.
ஸ்டூலில் அமர்ந்திருந்த சூப்பர்வைசர் எழுந்தார். “நாங்க ஒண்ணு கேட்டா நீங்க எல்லாரும் வேற ஒரு பதில் சொல்றீங்க.” அப்பார்ட்மெண்ட்காரர்கள் பக்கம் திரும்பினார். “ஏங்க அட்டை பாட்டில்தானே கோணிலே கட்டி வைச்சிருக்காங்க. இவ்ளோ நேரம் இங்கே நிக்கறேன். ஒரு வாடை இல்லையே?”
“நீங்க அந்த டிபார்ட்மெண்டுலேயே இருக்கறதாலே பழகிப் போச்சு” ஒருவர் சொன்னார்.
“இன்னும் ஏழெட்டு நாள்தானே இருக்கு, லாக்டவுன் முடிஞ்சவுடனே காய்லான் கடை திறந்தவுடனே எடுத்துடறேனு சொல்றாங்களே. பொறுத்துக்கக் கூடாதா?”
“சார், இந்த குப்பையினாலே என்னன்னவோ வரும்கராங்க. உங்க டிபார்ட்மெண்ட்லேயே குப்பையை குவிக்காதீங்கனு சொல்லிண்டு இருக்கீங்க. போதாக்குறைக்கு கரோனாவேற.”
சூப்பர்வைசர் சிரித்தார். “அம்மா, ஏதேதோ சொல்லி எல்லாரையும் பயமுறுத்தாதீங்க.”
“நானா எதையும் சொல்லலே, எல்லாரும் சொல்றதுதானே!”
“அதெல்லாம் வதந்திங்கம்மா. இப்படித்தான் சிக்கன் சாப்டா வரும், மட்டன் சாப்டா வரும்னு சொல்லி கௌப்பி விட்டாங்க. எதுனாலே வரதுனு சரியா தெரிஞ்சாதான் நாம்ப எச்சரிக்கையா இருக்கலாம். வதந்தியை நம்பினா நம்ப குளோஸ்தான். மொதல்ல தெரிஞ்சக்கோங்க கரோனா ஒட்டுவாரொட்டி. ஒருத்தருட்டேந்து இன்னொருத்தருக்கு எச்சில், இருமல், தும்மல் மூலமா காத்துலே பரவி லங்ஸை அட்டாக் பண்ணறது. இதுக்கும் அங்கே இருக்கற அட்டை குப்பைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதை புரிஞ்சுக்கோங்க!”
“அப்படீன்னா அங்கே குப்பையை சேத்து வைக்கலாம்னு சொல்றீங்களா?” இன்னொருவர் நுழைந்தார்.
“குப்பை சேர்க்கறது ஒரு இஷ்யூ, கரோனா வேற இஷ்யூ. இரண்டையும் ஒண்ணா பாக்க வேண்டாம். அதத்தான் நான் சொல்ல வரேன்.”
“சார், எங்களுக்கு எதுவுமே தெரியாத மாதிரி டீச் பண்ணாதீங்க. உங்க ஆளுங்க குப்பையை க்ளீன் பண்ணறதுக்கு பதிலா வேற இடத்திலே குவிக்கறாங்க. உங்களுக்கும் அவங்களுக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங். அதுனாலேதான் ஆக்ஷன் எடுக்கறதுக்கு பதிலா சால்ஜாப்பு சொல்லிண்டு இருக்கீங்க”.
“ஏங்க, சால்வ் பண்ணணுங்கறதுக்காகத்தானே நான் உடனே ஸ்பாட்டுக்கு வந்திருக்கேன்.”
“சார், நாங்க வாட்ஸ் அப்லே அப்லோட் செஞ்சவுடனே வந்தீங்க. தேங்க்ஸ். ஆனா இதை எடுக்கலேன்னா சூப்பர்வைசருக்கு டிவிஷனை சுத்தமா வைச்சிக்கறதில அக்கறையில்லைனு நாங்க கமிஷனருக்கு கம்ப்ளையண்ட் கொடுப்போம்” கறாராக பேசினார்.
துப்புறவு பணியாளர்களை சூப்பர்வைசர் பரிதாபமாக பார்த்தார்.
“ஏம்மா, ராம்லால் சேட் கட வாசலை க்ளீன் பண்ணிடுங்க” கிருபால் சொன்னார்.
“சாரு, ஒங்காளுங்க கிட்டே சொல்றீங்க கரீட். ஆனா நா பொறுக்கினதுலே நீ கை வைக்க ரூல் கெடயாது” பேபி குரலில் அழுத்தம் தொனித்தது.
தம்பு சிரித்தவாறே கிருபாலையும் பேபியையும் மாறி மாறி பார்த்தான்.
“ஏம்மா, என்ன சொல்றே நீ? அது கவர்மெண்ட் ப்ராப்பர்டி”.
“சாரு, தொட்டிலே பொறுக்கினது கவருமெண்ட் பாப்பர்டினா சொல்றே?”
“ஆமாம்!”
“சாரு, அப்படீன்னா அது கோட்டைக்குன்னா போவணும்! ஏங் கொடுங்கயூர் போவுது?”
அப்பார்ட்மெண்ட்வாசிகள் மட்டுமின்றி துப்புரவுப் பணியாளர்களும் பேபியையும் பிளாக்கியையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“கிருபால் பேசிண்டே போவாதே, நான் சொல்றேன். இங்கேயும் சேட்டு கடை வாசல்லேயும் இருக்கற அட்டை பாட்டில் இதெல்லாம் எடுத்து இடத்தை நாலு மணிக்குள்ளே எல்லாரும் காலி பண்ணணும். இல்லேன்னா காம்பேக்டர்லே க்ளீன் பண்ணிடுவோம். அதுக்கு முன்னாடி பார்த்துக்கோங்க. ஏதாவது முக்கியமான பொருள் இருந்தா அதையாவது எடுத்து வைச்சிக்கோங்க”.
“ஏ சாரே, வூடு வாசல இட்சுத்தான் நாங்க அல்லாரும் ரோட்டுக்கு வந்தோம். இப்ப பொறுக்கி வச்சதக்கூட விட்டு வெக்க மாட்டீங்களா?”
“சார், மேடம் நீங்கள்ளாம் போங்க. இடம் க்ளீனாயிடும். காம்பேக்டர் வந்துட்டு போனப்பறம் ப்ளீச்சிங் போடச் சொல்றேன்.”
“தேங்க்ஸ் சார். அவங்களுக்கெல்லாம் இதப் பத்திய அவேர்னஸ் கிடையாது. அதுனாலேதான் அட்டை பாட்டில் காசு பெரிசா தெரியுது. இதை இப்படியே விட்டா நோய் பூதமா பரவிடும் அந்தக் கவலைதான் எங்களுக்கு” கலைந்து சென்றனர்.
துப்புரவுப் பணியாளர்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொண்டிருந்தனர். கிருபாலும் சூப்பர்வைசரும் தனியே சென்றனர்.
“யாருய்யா காம்பேக்டர்?” சூப்பர்வைசர்தான் கேட்டார்.
“சார், இன்னக்கி டேவிட்தான் டூட்டி”.
“அவன் நம்பரப் போட்டுக் கொடுய்யா”.
கிருபால் பெயரைத் தேடி தட்டினான். “டேவிட், நான் சிஐ கிருபால் பேசறேன்”.
. . . .
“நம்ப ஸோன் சிஎஸ் உங்ககிட்டே பேசணும்னு சொன்னாரு. அவருட்டே கொடுக்கறேன்”
. . . .
கிருபாலிடமிருந்து மொபைலை வாங்கிக் கொண்டார். “டேவிட், நான் ஸோன் எட்டு சிஎஸ் பேசறேன்.”
. . . .
“இப்ப எங்கே இருக்கே?”
. . . .
“95லே பால்வாடிகிட்டே அட்டை பாட்டில் குவிஞ்சிருக்கு, அதெல்லாம் க்ளியர் செய்யணும்”.
. . . .
“ராம்லால் சேட் கடை தெரியுமில்லியா? அங்கேயும் அதே மாதிரிதான்”
. . . .
“நாலு மணிக்குள்ளே எல்லாத்தையும் கிளியர் செய்யணும்”.
. . . .
“அதெல்லாம் சரி, சரக்கு க்ளீன், அட்டை சப்பை சில்வர் …. . . “
…. . . .
“லொட்டு லொசுக்கைப் பத்தி தெரியாது. ஆனா பத்து இருபது நாள் சரக்கு, அஞ்சு ஆறு பேர் சரக்கு, ஆறாயிருத்துக்கு கொறயாம கெடக்கும்”
. . . .
“காம்பேக்டர் உள்ளே போவறகுக்கு முன்னாடிதான் யார்டுலே தந்திடுவாங்களே!”
. . . .
“சரி, கொறக்காதே மூணு ரூபாயாவது கிருபால்கிட்டே கொடுத்துடு. நான் வாங்கிக்கறேன்” போனை கிருபாலிடம் அளித்தார்.
“அவன் வந்தான்னா நிக்க வச்சு வாங்கிடு, வா” அழைத்தார்.
இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். தம்புவும் மற்றவர்களும் சைக்கிளில் சென்றனர்.
“உள்ளே வந்து குந்துய்யா, அப்பவே யெரக்கதுனு சொன்னியே இப்ப எப்படி இருக்கு?” மால கொண்டையாவை ஜக்கு பாய் அழைத்தாள். “நீங்களும் ஏன் அங்கே வெயில்லே நிக்கறீங்க? வாங்க உள்ளே”.
உஸ்தாதும் பேபியும் உள்ளே சென்றனர். பிளாக்கியும் வந்தது.
மால கொண்டையாவுக்கு வருத்தம் மேலிட்டது. “பாவிப் பசங்க பொழைக்க விடமாட்டாங்க.”
“ஆமாய்யா நானும் இருபது நா சரக்கு வைச்சிருந்தேன். எல்லாத்தையும் அந்த டேவிட் அடிச்சிண்டு போயிடுவான்” ஜக்கு பாய் புலம்பினாள்.
“அக்கா, நீ அத சொல்லாதே உங்க ஆபிஸருங்க டேவிட்டுகிட்டே கறந்துடுவாங்க” பேபி சிரித்தாள்.
“நீங்கள்ளாம் சம்பளக்காரங்க எப்படியோ பொளுது போயிடும். எங்களச் சொல்லுங்க இருபது நாள் சர்க்கு. சோறும் இல்லே சர்க்கும் போச்சு” உஸ்தாத் குரல் கம்மியது.
“யோவ் சேத்து வைக்கறது சேட்டுய்யா. இது நம்ப ஜாதி புத்தி கெடயாது. எப்படியோ வச்சோம் போச்சு, விடு!”
“இருபது நாள் சர்க்காச்சே பேபி” ஜக்கு பாய்க்கு துக்கம் இன்னும் அடங்கவில்லை.
“ஏன் பொலம்பறீங்க! மெட்ராஸ்லே எவ்ளோ ஜனம், அத்தினி பேரும் பொளுது விடிஞ்சா குப்ப போடாதியா இருக்கப் போறாங்க. கவலப் படாதீங்க, கையும் காலும் நல்லா இருக்கறச்சே எல்லாத்தையும் நாம்ப பொறுக்கலாம் பீறாயலாம்.”
இப்பொழுது ஜக்குபாய் லேசாக சிரித்தாள்.
“அக்கா நாலு கிளாஸ் கெடக்குமா?”
தண்ணீர்ப் பானை மீதிருந்த பிளாஸ்டிக் டம்ளர்களை ஜக்கு பாய் எடுத்து வந்தாள். பேபி கையிலிருந்து பிளாஸ்டிக் கவரை உஸ்தாதிடம் கொடுத்தாள். உள்ளேயிருந்து பேப்பர் சுற்றிய பாட்டிலை எடுத்தான். ஜக்கு பாய் மகிழ்ச்சியடைந்தாள். உஸ்தாத் நான்கு டம்ளர்களிலும் பங்கிட்டான். வாட்டர் பாட்டிலை எடுத்து ஜக்கு பாய் தண்ணீரை ஊற்றத் துவங்கினாள். “எனக்கு தண்ணி வேணாங்கா, அப்டியே குட்சுக்கறேன் ” டம்ளரை பேபி எடுத்துக் கொண்டாள். ஐக்கு பாயும், மால கொண்டய்யாவும் டம்ளரை உயர்த்தி பருகத் தொடங்கினர்.
“உஸ்தாத், பீடி கொடு”
பீடியை வாயில் சொறுகிக் கொண்டாள். உஸ்தாத் உரசினான். புகையை வலிக்கத் துவங்கினாள். பிளாக்கி பேபி காலடியில் படுத்துக் கொண்டது.
பேப்பர் கடையில் எவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. எனவே சற்று தயங்கி ஒதுங்கியே நின்று கொண்டிருந்தேன். அதற்குள் ராகேஷ் பாண்டியன் ஓட்டலில் பார்சல் வாங்கி வந்து விட்டான். இங்கேயும் அவன்தான் சற்றே நீந்தி பேப்பரை வாங்கினான். கரோனா லாக்டவுன் செய்திகள் அயர்ச்சியை ஏற்படுத்தியது.
“வீட்டில் போய் படிச்சுக்கலாம், மாமா கீழே பார்த்து வாங்க” அவன் முன்னே சென்று கொண்டிருந்தான்.
“என்ன நீ பாட்டுக்க நேரே போறே?”
“இல்ல, மாதா சிலையண்ட போய் ஒத்தைவாடை தெரு வழியா போயிடலாம்.”
“ஏய், அந்த தெருவிலே நாய்த் தொந்தரவு இருக்குமே!”
“நாயெல்லாம் சோறில்லாம காஞ்சுண்டு கிடக்கு”.
திரும்பினோம். இனம் புரியாத பரபரப்பு. மாதா சிலையருகில் தெருவில் வாகனங்கள் செல்லமுடியாதபடி இரும்பு தடுப்புகள் நிறுத்தப்பட்டிருந்தன. இரண்டு மூன்று போலீஸ் பட்ரோல் வண்டிகளும், ஸ்ப்ரேயர் வண்டியொன்றும் நின்று கொண்டிருந்தது. தெருத் தடுப்பு அருகில் ஃப்ளெக்ஸ் போர்டுகளை நாலைந்து பேர் கட்டிக் கொண்டிருந்தனர். நான் தயங்கி நின்று கொண்டிருந்தேன். போலீஸ் ஜீப்பொன்று வந்து கொண்டிருந்தது. அதில் கட்டியிருந்த ஒலி பெருக்கி வழியே ஒத்தைவாடை தெருவில் கரோனா நோய்த் தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளதால் அத்தெருவில் எவரும் செல்லக்கூடாது என்று அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ராகேஷ் வந்தான்.
“எந்த வீட்டுலே?”
“பால்வாடி பக்கத்திலே இருக்கற வெஜ் அப்பார்ட்மெண்ட்லே ரெண்டு பேருக்கு கரோனாவாம். இப்பத்தான் தெரிஞ்சுதாம். ஆம்புலன்ஸ் வந்திருக்கு”.
“பேரே வித்தியாமா இருக்கே?”
“ஆமாம் மாமா. அங்கே டூலெட் போர்ட் போட்டா வெஜிடேரியன்ஸ் ஒன்லிதான் போடுவாங்க. அதுனாலே நாங்கள்ளாம் அதை வெஜ் அப்பார்ட்மெண்ட்னுதான் சொல்வோம்.”
சிரித்தேன்.
“வெளிநாட்டுலேந்து சொந்தக்காரங்க வந்தாங்களாம். அவங்ககிட்டேந்து மத்தவங்களுக்கு தொத்திகிச்சுனு பேசிக்கறாங்க.”
“ அங்கே இன்னும் எத்தினி பேர் வீட்லேயே இந்தநோவை பாதுகாப்பா பொத்தி பொத்தி வைச்சிண்டு இருக்காங்களே! இங்க யாரும் நிக்க வேண்டாம் மூவ் பண்ணுங்க.” போலீஸ்காரர் சொல்லிக் கொண்டிருந்தார்.
“மாமா, நாம்ப தெற்கு மாடவீதி வழியாவே போயிடலாம்.”
அவனைப் பின் தொடர்ந்தேன்.
@ராமச்சந்திர வைத்தியநாத்
9445693425
02-05-2020