மிகவும் வேக வேகமாக கிளம்பிக் கொண்டிருந்தாள் செல்வி. பத்து மணிக்குள் கடைக்குள்ள இருக்கனும். இல்லாட்டி முழுநாள் சம்பளம் அரை நாள் ஆகி விடும். போன முறையே சங்கர் மிகவும் ஸ்ட்ரிட் ஆக எச்சரித்தான். அதுவும் அவனுக்கு செல்வியைக் கண்டால் எரிச்சலாகவே இருக்கும். பின்னே இருக்காதா சங்கர் கடையின் மேலாளர். அவனைப் பொறுத்தவரையில் பெண்கள் அவனைக் கண்டால் பல்லிளிக்க வேண்டும். அவன் பேசும் போது அவனிடம் வெட்கப்பட வேண்டும் அல்லது அப்படி நடிக்கவாவது செய்ய வேண்டும். சம்பளம் கொடுக்கும் போது அவன் விரல்களை தடவுவதை கண்டும் காணாததுமாய் இருக்க வேண்டும். அவனின் ஓரக்கண் பார்வைக்கு பதில் பார்வை அளிக்க வேண்டும். மொத்தத்தில் அவனுடைய அந்தந்த நிமிட சொற்ப ஆசைகளுக்கு கடையில் உள்ள பணிப்பெண்கள் ஒத்துழைப்பதைப் போன்று இருக்க வேண்டும்.

ஆனால் இதில் ஏதும் செல்வியிடம் நடக்காது. வேலைக்குச் சேர்ந்த புதிதில் செல்வியிடம்…”என்ன செல்வி சேலை ரொம்ப அழகா இருக்கு…நான் வேணும்னா உனக்கு ஒரு சேலை எடுத்து தரவா”என்றான்.

“எடுத்துத் தாங்க இப்ப என்ன ஆனா உங்க பொண்டாட்டிக்கு என் புருசன் சேலை எடுத்து குடுப்பாரு பரவாயில்லையா ”

அவனுக்கு சுருக்கென்று இருந்தது. அதன் பின்பு செல்வியிடம் இது போன்று பேசுவதை நிறுத்திக் கொண்டான்.

அதனால் தான் அவளைக் கண்டால் அவனுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அவனுடைய அதிகாரத்தின் பலத்தை கொண்டு தான் வழிக்குக் கொண்டு வர முடியும் என அவளிடம் எப்போதும் கறாராக இருப்பதாக காட்டுவான். செல்வி இவை எதையும்  கண்டு கொள்வதில்லை. கம்பம் நகரில் மிகவும் பரபரப்பாக இயங்கும் “கந்தன் டீ ஸ்டால் மற்றும் பேக்கரி” ல் தினக்கூலியாக வேலை செய்வதோடு சரி. அங்கு நடக்கின்ற எந்த விசயங்களுக்கும் அவள் செவி சாய்ப்பதில்லை. தனக்கான வேலை முடிந்தவுடன் சம்பளம் வாங்கி கிளம்பிடுவாள்.

“ராதிகா கிளம்பிட்டியாடி” என தன் மகளை பள்ளிக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டே கடைக்கு கிளம்பினாள். மகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு “மாமா மாமா எந்திரிங்க நான் கிளம்பிட்டேன். கடைக்குப் போறேன், இட்லி ஊத்தி வைச்சிருக்கே சாப்புட்டு வேகமா வேலைக்கு போங்க” ராசாவையும் எழுப்பி விட்டு வேலைக்கு கிளம்பினாள்.

தற்போது போறவள் தான் இனி வருவதற்கு இரவு பத்து மணியாவது ஆகும். வேலை பார்க்கும் கடையில் மதிய உணவும் இருப்பதால் வீட்டுக்கு வரவேண்டியதும் இல்லை. கடைக்குப் போனதும் வடைகளுக்கு மாவு ஆட்டணும் . பின்னர் பாத்திரம் கழுவ வேண்டும். மதிய உணவுக்குப் பின் மாலை நேரத்திற்கான வடைகளைச் சுட வேண்டும். பின்பு சட்னி அரைக்க வேண்டும். இறுதியாக சமையலறையை கழுவி விட்டு சம்பளம் வாங்கி வீட்டிற்கு செல்வாள். வழக்கமாக இது தான் சுழற்சியாக இருக்கும். ஓரிரு நாட்கள் மாற்றமிருக்கலாம். ஆனால் வேலை என்னவோ சமையல் கட்டில் தான்.

எல்லோரையும் போல செல்விக்கும் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. “நான் படிச்சி டிகிரி வாங்கி என் குடும்பத்தைக் காப்பாத்துவேன்டி” என தோழிகளிடம் அடிக்கடி சொல்வாள். அவளுடைய ஆசை பனிரெண்டாம் வகுப்பின் பாதியிலேயே முடிந்து விட்டது. வீட்டிற்கு ஒரே மகள் ரொம்ப காலம் வைத்திருக்க முடியாது ராசாவிற்கு பேசி முடித்தனர்.

காலம்: கட்டிடத் தொழிலாளர்கள் பற்றி ...

கோப்பு படம் 

ராசாவும் தினம் ஐநூறு ரூபாய் சம்பாதிக்கும் கட்டிட தொழிலாளியாக இருந்தான். செல்வியை விட நிறத்தில் கொஞ்சம் குறைவு தான். அடுப்படி சுவர்களுக்கு இடையே வெட்கையில் வெந்து வெந்து அவளின் முகமும் தற்போது ராசாவின் நிறத்திற்கு ஈடாக மாறிவிட்டது. ராசாவுக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனை அறிந்த தினங்களில் அவள் முதல் குழந்தையை கருவில் சுமந்தபடி இருந்தாள். அழுது கொண்டே அப்பனிடம் போய் சொன்ன பொழுது ” ஏய் கிருக்கு கழுதை ஆம்பளைனா யெல்லாம் இருக்கத்தா செய்யும், அவனோட அனுசரிச்சி திருத்தி வாழ வைக்கிறதை விட்டுபுட்டு இங்கன வந்து அழுதுட்டு கிடக்க”. ஆத்தாளும் அதனை வழிமொழிவது போன்றே ஆறுதல் சொல்லி அனுப்பினாள். ராதிகா பிறந்து  ஆறு மாதங்களில் கூட குடும்பம் செழுமையாக நடக்கவில்லை. ராசா தினமும் குடித்து விட்டு வரத் தொடங்கினான். ஒரு நாள் ராதிகாவிற்கு நல்ல காய்ச்சல் உடம்பு நெருப்பாக கொதித்தது. ராசா வந்தவுடன் டாக்டரைப் பார்க்கலாம் என்று இருந்தாள். அவன் குடித்து விட்டு தெருவில் “எட்டு”

போட்டபடி நடந்து வந்தான்.  வீட்டில் வந்து விழுந்தவுடன் அவனுடைய சட்டைப் பையை துழாவி பார்த்தாள். பணம் இல்லை. அழுதவாறே பக்கத்து வீட்டு சுமதி அக்காவிடம் நூற்றைம்பது ரூபாய் வாங்கி சென்று வந்தாள். இனியும் ராசாவை நம்பினால் ஏதும் நடக்காது என்பதை அறிந்து கடைக்கு வேலைக்குச் சேர்ந்தாள். தன்னிடம் பணம் கேட்காதவரை சந்தோசம் என ராசாவும் பெரிதாக ஆட்சேபிக்கவில்லை.  சில நாட்கள் பிள்ளையுடன் கடைக்கு வந்தாள். பின்பு ராதிகா பள்ளிக்கு அனுப்பும் நாள் வந்தவுடன் தன் அம்மா வீட்டில் விட்டு வந்து விடுவாள். கடை முடியும் வரை அம்மா பார்த்து கொள்வாள். இப்படியே வாழ்க்கை கடந்து கொண்டிருந்தது.

வேகவேகமாக அவள் கடையில் நுழையும் போது மணி 9.50 ஆனது. சங்கர் அவளை முறைத்துப் பார்த்தான். அவள் தன் வேலையைத் தொடங்கினாள். கடை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. மதிய உணவுக்குப் பின் மூன்று மணி இருக்கும். ராசாவுடன் வேலை பார்க்கும் மணி கடைக்கு வந்தான். “அண்ணே செல்விய பார்க்கனும் எங்க இருக்கு” சங்கரிடம் கேட்டான்.

“ஏன் என்ன விசயம் அந்தபிள்ளைய எல்லாம் பார்க்க முடியாது, வேலையா இருக்கும்” சிடுசிடுத்தான்.

“அதுக்கில்லைணே அந்தப்புள்ளை வீட்டுக்காரு சாரத்துல இருந்து விழுந்துட்டான், தலையில நல்ல அடி”

“சரி சரி கூப்ட்டு போங்க”

செல்வி பதறியபடி மருத்துவமனைக்கு சென்றாள். குடித்து விட்டு சாரத்தில் ஏறியதால் நடந்த வீபரீதம். இரத்தம் நிற்காமல் சென்று கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்குப் பின் ஓரளவு உடம்பு தேறியதாக சொன்னார்கள். ஆனால் தலையில் நல்ல அடி என்பதால் இடது கை விழுந்து விட்டது. வாயும் வலது பக்கமாக கோணி விட்டது. கிட்டதட்ட பக்கவாதம் போல தான். கண்ணீர் வற்ற வற்ற அழுது கொண்டிருந்தாள். பின்னர் வீட்டிற்கு வந்து வழக்கமாக நடைமுறை வேலைகளை தொடர்ந்தாள். முன்பு போல இனி ராசாவும் வேலைக்குப் போக முடியாது. அவனுக்கான பணி விடைகளை செய்து முடித்து விட்டு முன்பை விட வேகமாக கடைக்குச் சென்றாள். இரவு நேரம் தள்ளியே வந்தாள். அப்பொழுது தான் சம்பளம் அதிகமாக கிடைக்கும்.

ராசாவிற்கு இவையெல்லாம் புதிதாக இருந்தது.

“ஏன் செல்வி இவ்ளோ நேரம் கழிச்சு வர்ற? ”

“இப்ப தான் மாமா வேலை முடிஞ்சிது நீங்க சாப்டீங்களா?”

“ம்ம் ,ஆமா நீயாவா வந்த மணி பதினொன்னு ஆகுது”

” இல்ல மாமா கடையில புதுசா ஒரு தம்பி வேலைக்கு சேர்ந்திருக்கான், ரொம்ப நல்ல பையன் அவன் கூட தான் வந்தேன்”

” ஆஆ சரி சரி இனிமே வேகமா வந்திடு” என்றான்.

இரவு தூங்கும் போது ” ஏன் செல்வி உனக்கு நான் பாரமா இருக்கேன்ல?”

“அப்படிலாம் இல்ல மாமா….எதும் நினைக்காம தூங்குங்க”

“இப்பலாம் என் பக்கத்துல படுக்கவே மாட்ற… பிடிக்கலயா செல்வி”…..” இப்படி பக்கவாதம் வந்தவன் கூட படுக்க அருவருப்பா இருக்குல”

“ஏன் மாமா இப்புடி பேசுறீங்க… நான் பக்கத்துல படுத்தா உங்களுக்கு திரும்ப…வைய்க்க செரமமா இருக்குன்டு தான் மாமா”

அவள் நன்கு உறங்கிய பின்பு பக்கத்தில் இருக்கிறாளா என கவனிக்கத் தொடங்கினான். மறுநாள் கடை முடிந்து வரும் வரை காத்திருந்தான். வழக்கம் போல தாமதமாகவே வந்தாள். கடையில் வேலை பார்க்கும் பையனுடன் நடந்து வருவதைக் கண்டு முகம் வாடத் தொடங்கியது.

“என்ன மாமா வெளியில இருக்கிங்க? தூங்கலையா?”

” இல்ல செல்வி நீ வருவனு தான் இருக்கேன்…..ஆமா அந்தப் பையன் கூட என்ன சிரிச்சி பேசிட்டு வர்ற…யாராச்சும பார்த்தா என்ன நினைப்பாங்க”

“அவன் தம்பி மாதிரி மாமா”

“தம்பினு நீ நினைக்கிற ஊரு நினைக்கனும்ல ஏன் உனக்கு அவனை அவ்ளோ பிடிக்குமா?”

“அப்டிலாம் இல்ல ராத்திரி தொணைக்கு

நடந்து வர்றயான்ல…. அக்கா அக்கா னு பேசிகிட்டு வர்றான். அவ்ளோ தான் மாமா”…..” நீங்க வாங்க தூங்கலாம்” என சொல்லி படுக்கையில் படுக்க வைத்தாள்.

கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்குள் பல கேள்விகள் எழத் தொடங்கின. செல்வி கடை முடித்து வருகிற போதெல்லாம் அவளிடம் கேட்பதற்காகவே கேள்விகளோடு காத்திருந்தான்.

“ஆமா உங்க கடையில ஆம்பளைங்க எப்படி செல்வி… அவங்கள என்ன சொல்லி கூப்பிடுவ?”…..” அண்ணேனு தான கூப்பிடுவ”

“ஆமா மாமா”

“உங்க ஓனரு உன்கிட்ட பேசுவாரா செல்வி”

“ம்ம் மாமா எப்பயாச்சும் வருவாரு”

“வீட்டுக்கு ஏதும் போவியா?”

“அதெல்லாம் கெடயாது மாமா”…” கடைக்குப் போறதோட சரி”

இரவில் அவனுக்கு தூக்கம் வராமல் துடித்தான். பல்வேறு எண்ணங்கள் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. செல்விக்கு அவனுடைய கேள்விகளின் உள் அர்த்தம் புரியாமல் மிகவும் சாதரணமாக பதில் சொல்லி பழகினாள்.

Image

“ஏன் செல்வி என் கூட கடைசி வரைக்கும் இருப்பியா…. இப்படியே என்னைய பார்த்துகுவியா?”

“ஏன் மாமா ஏதேதோ பேசுறீங்க…நான் சாகுற வரைக்கும் பார்த்துக்கிறே மாமா”

“நிசமாவே என்னய புடிக்குமா ?”

“நீங்க குடிக்கிறது தான் மாமா பிடிக்காது மத்தபடி உங்கள புடிக்காமா இருக்குமா”

அவனுக்கு தேவையான பதில்கள் வந்தாலும் மனம் போதுமானதாக இல்லை. அவ்வப்போது அவனுடைய மனம் எழுப்பும் குழப்பங்களுக்கு கேள்விகள் வந்து கொண்டே இருந்தது.

பால்காரன் கிட்ட என்ன செல்வி சிரிப்பு வேண்டிகிடக்கு”….கோவத்துடன் வார்த்தைகள் வெளிப்பட்டது.

“சரி மாமா… இனிமே சிரிக்கல”

செல்வியின் செல்போன் அடித்தது.

“ஹலோ கிளம்பிட்டேன் வந்துடுறேன்” என கட் செய்தாள்.

“போன்ல யாரு?”

“கடையில இருந்து மாமா… மாஸ்டர் கூப்பிட்டாரு”

“கடையில வேல செய்றவங்களுக்கு எல்லாம் ஏன் நம்பர் கொடுக்குற…இனிமே எதுனாலும் எனக்கு கூப்ட சொல்லு சரியா”

“ஏன் மாமா? என்னாச்சு?”

“ஏன் நான் சொன்ன செய்ய மாட்டியா… அது கூட சொல்லக்கூடாதா, உன் புருசன் தானடி…நானு” கத்தினான்.

“அய்யோ மாமா தெரியாம சொல்லிட்டேன்….இனிமே அப்டியே செய்றே”….” நான் கிளம்புறேன்”.

வீட்டு வாடகை, ராசாவிற்கான மருந்து, குடும்பச் செலவு என சிக்கனமாக செலவு செய்து வந்தாள். இப்படியே போன நாட்களில் தான் அந்த நிகழ்வும் நடந்தது. செல்வி மீண்டும் கர்ப்பமானாள். ராசாவுக்கு இடியே தலைமீது விழுந்தது போல இருந்தது. ஆனால் செல்விக்கு தெரியும் அது அவனுடைய பிள்ளை தான். அதற்கான வன்முறையை அவள் மீது நிகழ்த்தும் போது அவன் தன்னை மறந்த போதையில் இருந்தான். குமட்டி எடுக்கும் சாராய வாடையுடன் அவனுடைய காமத்திற்கு இடம் கொடுத்த நிமிடங்கள் இப்படி ஆகும் என யோசிக்கவில்லை.

அவள் கருவுற்ற விசயத்தை ராசாவிடம் சொன்ன போது அவன் கேட்ட முதல் கேள்வி

“எவன் கூட போய் படுத்த… எவனோட புள்ளயவோ வகுத்துல சுமக்கிறியே”…..” நான் முடமாயிட்டேன்னு தைரியத்துல பண்ணிட்டியா…. உன்னய வெட்டி புடுவேன்டி கண்டரோலி ” என்றான்.

செல்விக்கு கோபமும் அழுகையும் ஒரு சேர வந்து கத்தினாள்.

“குடிகார பயலே உன்னை கட்டி குடும்பம் நடத்தினதுக்கு இது எனக்கு தேவை தான்டா” என எழுந்து சென்றாள்.

அவள் பின்னால் ஊர்ந்து வந்தவனாக “இந்தக் குழந்தைய கலைச்சிடு வேணாம்டி ஊரு தப்பா பேசும்” என்று கண்ணீர் விட்டான்.

“நம்ம புள்ளை மேல சத்தியமா சொல்றேன் மாமா இது உன் புள்ளை தான்யா”

“நானே விழுந்து ரெண்டு மாசமாச்சிடி எவன் கூட போய் படுத்த?”

“இது உன்கூட நடந்ததுயா நீ நிதானமா இருந்தா தெரிஞ்சிருக்கும் எந்நேரமும் குடியில இருந்தவன் தான நீ”

” முடிவா என்னதான்டி சொல்ற?”

“இத நீ சாதரணமா கலைக்கச் சொல்லிருந்தா கூட பரவாயில்லே , உனக்கு படுத்ததானு கேட்குற என்னால கலைக்க முடியாது” என சொல்லி விட்டு சென்று விட்டாள்.

ஒவ்வொரு நாளும் அவளை வார்த்தைகளால் கொலை செய்தான். அவளைத் தேடி கடையில் இருந்து யார் வந்தாலும் ” இவனுக்கு பிறக்க போற புள்ளையா?” என கேட்கத் தொடங்கினான். ஆம்பளை மனசும், திமிரும் படுக்கையில் கிடந்தாலும் மனைவியை ஆளத் துடிக்கும். அதுவும் சந்தேகம் வந்து விட்டால் சொல்லவா வேண்டு்ம். ஒரு மதம் பிடித்த சாமியாரைப் போல அவனை ஆட்டியது. “உண்மையாவே இது நம்ம குழந்தை இல்லையில்ல சும்மா சொல்லு, நீ பெத்தப் பெறகு கூட எங்கயாச்சும் போட்டுறலாம்” என்றான். அவனின் கேள்விகளும்,வார்த்தைகளும் அவளுக்குள் உளியாய் இறங்கி வலித்தது. வைராக்கியமாக பிள்ளையை பெற்று எடுத்தாள். ஆண் பிள்ளை பிறந்தது. ராதிகா பிறந்த போது “பொட்டைய பெத்து வைச்சிருக்கா” முகம் சுளித்துச்  சென்ற ராசாவிடம் காட்டக் கூட முடியாத அளவிற்கு மனம் பாரமாகிப் போயிருந்தது. சொந்த பந்தமெல்லாம் “அப்பா மாரியே இருக்கான் பாரு” என கொஞ்சிய போது அவளுக்கு மேலும் வலித்தது.

பிள்ளையுடன் வீடு வந்து சேர்ந்தாள். பிள்ளையை ஒரு முறை கூட ராசா முகம் கொடுத்து பார்க்கவில்லை. அழுது கொண்டும் கத்திக் கொண்டும்

“ஊர்காட்டு சிறுக்கி எவனுக்கோ படுத்து என் பிள்ளைனு ஊர நம்ப வைச்சிட்டாலே அவுசாரி” என திட்டினான்.

ஒரு நாள்  வீட்டு வாசலில் அமர்ந்து பிள்ளைக்கு பால் கொடுத்து விட்டு மடியில் வைத்து உறங்க வைத்துக் கொண்டிருந்தாள். வெகு நேரம் குழந்தையின் முகத்தை பார்த்தவன் வேகமாக ஒரு கையும், வாயும் கோணியபடியே இழுத்து வந்தவன். அவளை இடது காலால் எட்டி உதைத்தான். அவன் எத்தி தள்ளியதில் அவள் பிள்ளையோடு வீட்டின் வெளியே போய் உருண்டாள். பிள்ளையை கவனமாக பிடித்திருந்ததால் ஒன்றும் ஆகவில்லை.  ஆத்திரம் கொண்டவனாக வீதியில் அனைவரின் முன்பும் அவளை கம்பால் அடிக்க ஓங்கினான். “ஏப்பா பிள்ளைக்காரிய போட்டு அடிக்கிறியே” என தெருவே திட்டியது.

இத்தனை நாளும் வீட்டிற்குள் கேட்ட கேள்வியை ” எவனுக்குப் பொறந்த பிள்ளைடி ?” “எவன் கூட படுத்து பெத்த?” என தெருவில் வைத்து கேட்டான். கதறி அழுது கொண்டிருந்தாள் செல்வி. வேகமாக மீண்டும் காலினை ஓங்கியவன் குழந்தையின் தலையில் ஒரு உதை உதைத்தான். “நானே கொன்னுடுறேன்டி” என கத்தினான். குழந்தை “வ்வா வ்வா வ்வா ஆஆஆஆ” என கத்தியது.

குழந்தையை தூக்கி தலையில் தேய்த்து விட்டு பக்கத்து வீட்டு அக்காவிடம் கொடுத்தவள். தலைமுடியை எடுத்து கொண்டை போட்டவளாக

“எலேய் குடிகார நாயே உனக்கு இப்ப என்னடா தெரியனும் இது யாருக்கு பெறந்ததுனா உனக்கு பெறக்கலைடா வேற ஒருத்தனுக்கு தான் படுத்தேன், இந்த பிள்ளை மட்டுமில்ல மூத்த பிள்ளையும் வேற ஒருத்தனுக்கு தான் பெத்தேன்”

“நீ ஒரு அவத்தைப்பய டா போய் சாகுடா”..” த்ப்பூ”  துப்பிவிட்டு பிள்ளையை வாங்கி உள்ளே சென்று விட்டாள்.

Ananda Vikatan - 03 December 2014 - பேசாத ...

நன்றி விகடன் 

தெருவே அதிர்ந்து போனது. அவளிடம் இருந்து இப்படி ஒரு கோபம் வெளிப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ராசா மரமாக நின்று போனான். அவள் இப்படி சொல்வாள் என நினைக்கவில்லை. அவனின் ஆண்மையினை சந்தி சிரிக்க வைத்தது. அவனுக்கு அம்மணமாக நிற்பது போன்று இருந்தது.

மறுநாள் காலையில் கடைக்கு கிளம்பி கொண்டிருந்தாள். சமையலறையில் இருக்கும் போது அவளுடைய காலில்  ஏதோ ஊர்வது போல இருந்தது. அது ராசாவின் கைகள். “என்னைய மன்னிச்சிடுமா”. ஊனமான போது கூட விழாத ஆணாதிக்கம். அவன் ஆண்மையை கேள்விக்குள்ளாக்கிய பிறகு சும்மா இருக்குமா.

” என்னய மன்னிச்சிருமா நான் தப்பு பண்ணிட்டேன், புத்தி கெட்ட தனமா பேசிட்டேன்”….”அது நமக்கு பெறந்த பிள்ளை தான் இனிமே உன்னய சந்தேக பட மாட்டேன்” என்றான்.

கண்ணீர் பெருகி நின்றவளாக “பரவால்லை விடுங்க” என்றாள்.

“செல்வி எனக்காக ஒன்னு செய்வியா?”

“ம்ம்”

” யாரு கேட்டாலும் ரெண்டு புள்ளையும் நமக்கு பெறந்ததுண்டு சொல்லு” என்றான்.

அமைதியாக இருந்தவள். “முடியாது மாமா, உனக்கு தெரியும்ல அது போதும்” என்றவளாக  குழந்தையை தூக்கியவாறு கடைக்குச் சென்றாள்.

 

ஐ.முரளிதரன்

கம்பம்

தேனி மாவட்டம்.

2 thoughts on “சிறுகதை: காடிக்காரம் – ஐ.முரளிதரன்.”
  1. பெ

    வாழ்த்துகள் தோழர்.
    தொடர்ந்து எழுதுங்கள்.

  2. அருமை அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *