மார்கழி மாதத்தின் காலைப் பொழுது , மணி ஏழு ஆகியும் கதிரவன் எட்டிப் பார்ப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அருகில் யார் நிற்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம்.
டீக்கடை வாசலில் மூவர் முண்டாசு அணிந்தபடி நின்று கொண்டு, ஏம்பா முத்து டீ கேட்டு எவ்வளவு நேரம் ஆவுது இன்னுமா டீ போடுற என்று சத்தம் போட, டீக்கடைக்காரரோ இல்லண்ணே விறகெல்லாம் பனியில கெடந்து அடுப்பே சரியா எரிய மாட்டேங்குது என்றார். சரி சரி பார்த்து போடுப்பா என்றார் சிவப்பு துண்டு முண்டாசுக்காரர்.
அருகில் நின்று கொண்டிருந்த பிச்சைமுத்து கணேசனைப் பார்த்து அறுப்பு அறுவாளுக்கு கருக்கு வச்சிட்டியா என்றான். ஆமா அறுவாள குடுத்து மூனு நாள் ஆச்சு இன்னும் மூச்சு விட மாட்றான் அந்த ஆசாரி என்றான் சலித்துக் கொண்டே.
அதற்குள் அண்ணே டீயை எடுத்துக்கோங்க என்ற குரல் வானொலியின் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சியின் சத்தத்திற்கு நடுவே ஒலித்தது. டீயை குடித்து முடித்த வீரையன் தனது முண்டாசு துண்டை அவிழ்த்து தோளில் போட்டு கொண்டு, பிரதமர் சந்திரசேகர் வேற தமிழ்நாட்டுல ஆட்சிய கலைக்க போறதா பேசிகிறாங்க, ஒட்டு மொத்த நாடும் பொருளாதார சிக்கல்ல தவிச்சிக்கிட்டு இருக்கிறப்போ மாநிலத்திலுள்ள ஆட்சிய கலைக்க முன்டிகிட்டு நிக்கிற தெல்லாம் வேண்டாத வேலை என்று அலுத்து கொண்டார் வீரையன்.
ஏண்ணே இன்னும் ஒரு வாரத்துல அறுவடை தொடங்கிடும் போன வருஷம் குடுத்த அதே கூலிதான்னு பேசிகிறாங்க என்றான் பிச்சைமுத்து. என்ன அதே கூலியா என்று கேட்டுக் கொண்டே, கூலி கெடக்குது கூலி குறைந்தது மரியாதையாவது நடத்துறாங்களா என்றான் கணேசன். சற்று கோபமடைந்த வீரையனோ ஆமாம், கருப்பு சட்டைக்காரன் தன்மானம் சுயமரியாதைன்னு சொல்லி தொண்டை தண்ணி வத்த கூட்டத்த போட்டுகத்துறான், நீங்க அத கேக்காம சாயந்திரம் ஆனா சாராய கடைக்குல போறீங்க, அப்புறம் வந்து நின்னுகிட்டு மரியாதை இல்ல, மண்ணாங்கட்டி இல்லன்னு சொல்லிக்கிட்டு என்று கடிந்து கொண்டார்.
மூவரும் பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் இவர்களைக் கடந்து செல்வது தெரிந்தது. சற்று சுதாரித்துக் கொண்ட கணேசன் யாரு சண்முகமா என்றார் சற்று உரத்த குரலில். ஆமாம் சித்தப்பா என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தான் அந்த இளைஞன். அரும்பு மீசை, அகண்ட மார்பு, திருநீருட்ட நெற்றி யாரையும் எளிதில் கவரும் முகத்தோற்றம், லேசான புன்னகையுடன் என்ன சித்தப்பா கூப்பிட்டீங்களா என்றான். என்ன! அதுக்குள்ள பட்டறைக்கு கிளம்பிட்டியா என்றார் கணேசன். வேலை நிறைய கிடக்குன்னு ஆசாரி சீக்கிரமே வர சொல்லிட்டாரு என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்ப முயல, சரி சரி பாத்து பத்திரமா வேலை செய்யணும் என்று அறிவுரை கூறிய கணேசன் பெருமூச்சு விட்டார். சற்று நேரம் அமைதியாக இருந்த கணேசன் எங்க அண்ணன் அல்ப ஆயுசுல போனதுக்கு அப்புறம் படிப்பையும் பதினொன்னாவதோடு நிறுத்திட்டு பட்டறைக்கு வேலைக்கு போறான் பாவம் என்றார்.
சண்முகம் வேலை செய்யும் பட்டறையோ மேட்டு தெருவை தாண்டி ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள முனீஸ்வரன் கோவில் பக்கத்தில் உள்ளது. இரண்டு மைல் தூரத்திற்கு மேல் நடக்க வேண்டி இருப்பதால் சற்று வேகமாக நடக்க ஆரம்பித்தான். மார்கழி மாதத்தின் கடும் குளிரில் சட்டையின் கிழிந்த பகுதி வழியே காற்று ஊடுருவி உடலை துலைத்து சிலிர்க்க செய்தது. இவை எதையையும் பொருட்படுத்தாத சண்முகமோ ஓட்டமும் நடையுமாக சென்று கொண்டிருந்த போது, தனக்கு பின்னால் ஏதோ வண்டி வருவது போன்ற சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தான்.
சற்று தூரத்தில் வெள்ளை நிற கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த ஊருக்கு யாரு கார்ல வர்ரா என்று யோசித்துக் கொண்டே சாலை ஓரமாக ஒதுங்கிக் கொண்டான். அந்த கார் அவனை கடந்து சென்றவுடன் யாரா இருக்கும்? யார் வீட்டுக்கு போவுது? என்று யோசித்துக் கொண்டே மீண்டும் நடக்க ஆரம்பித்தான். அவன் இதுவரை இவ்வளவு நீளமான அழகிய காரை பார்த்ததே இல்லை. அதுவும் பேருந்து வசதிகூட இல்லாத கிராமத்தில் இது போன்ற காரை கண்டவுடன் எங்கு செல்கிறது என்ற ஆர்வம் அவனை தொற்றிக் கொண்டது.
சண்முகத்தை கடந்து சென்ற அந்த அழகிய கார் மேட்டு தெருவிற்குள் நுழைந்தது. சண்முகத்திற்கோ கார் யார் வீட்டுக்கு செல்கிறது என்பதை விட, மீண்டும் ஒருமுறை அந்த காரை அருகில் நின்று பார்த்து விட வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் நடையின் வேகம் அதிகரிக்க குளிரும் காணாமல் போனது. தெருவிற்குள் சென்ற கார் பட்டாமணியார் வீட்டு வாசலில் நிற்பது தெரிந்தது. அந்த ஊரிலேயே மிகப்பெரிய வீடு அதுதான். குறைந்தது 50 வேலிக்கு மேல் நிலம், தென்னை வாழை தோப்புகள் என சகல வசதிகளையும் கொண்டிருந்தவர். ஆனா நாம சின்ன வயசா இருக்கும் போதே அந்த பட்டாமணியார் இறந்துட்டாரே, ஒரு பாட்டி மட்டும் தானே அந்த வீட்டில இருக்காங்க என்று எண்ணிக்கொண்டே அந்த காரின் அருகில் சென்றான்.
காரில் இருந்து சாமான்களை இறக்கி கொண்டிருந்தவர் ஓட்டுநர் போல் தெரிந்தாலும், காரில் வந்து இறங்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. இருப்பினும் காரை அருகில் நின்று பார்த்த ஆவலில் சற்று நேரம் ரசித்து விட்டு, எத்தனை லட்சம் இருக்குமோ என்று சிந்தித்துக் கொண்டே அங்கிருந்து நகர, பெரிய வீட்டிலிருந்து ஒரு இளம் பெண் நவநாகரிக உடை, கழுத்தில் மின்னும் வைரம், கைகளில் கலகலக்கும் தங்க வளையல்கள், கால்களில் கொஞ்சும் கொலுசுகள் என தங்க வைரங்களால் உடல் முழுவதும் இழைத்திருந்தாலும் அப்பெண்ணின் அழகுக்கு முன்னாள் அவைகள் கூனி குறுகித் தான் நின்றன. அப்படி ஒரு அழகு.
காரின் அருகில் வந்த அழகு மயில் ஓட்டுநரை பார்த்து ஏதோ ஆங்கிலத்தில் கேட்க, சற்று குழம்பியவாறே காரில் இருந்த ஒரு கைப்பையை எடுத்துக் கொடுத்தார். இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சண்முகம் மீண்டும் ஒருமுறை அந்தக் காரையும், பெண்ணையும் பார்த்துவிட்டு அங்கிருந்து நடையை கட்டினான்.
கோவில் அருகே இருந்த பட்டறையை அடைந்தான் சண்முகம். தனக்கு முன்பே வந்து வேலையை தொடங்க ஆயத்தமாகி கொண்டிருந்த ஆசாரி சண்முகத்தை பார்த்தவுடன் வேலை நிறைய கிடைக்குன்னு தான் உன்ன சீக்கிரம் வர சொன்னது என சொல்லிக் கொண்டே சரி சரி கரிய அல்லி போட்டு அடுப்ப பத்த வை என்றார். நெருப்பை பற்றவைத்து பெட்டியை ஊத தொடங்கியவுடன் அந்த வெப்பத்தில் குளிர் முற்றிலும் விலக, காலை கதிரவனும் தனது பணியை தொடங்கியது. வேலை கடுமையாக இருந்ததால் காலையில் நடந்த எந்த நிகழ்வுகளும் அவனுக்கு ஞாபகம் வரவில்லை.
ஒரு வழியாக வேலையை முடித்து வீடு திரும்பி கொண்டு இருந்த சண்முகம், பட்டாமணியார் வீட்டு வாசலில் சிறுமியர்கள் சிலர் சில்லு கோடு விளையாடிக் கொண்டிருப்பதையும், அவர்களுடன் இணைந்து காலையில் பார்த்த அந்த பெண்ணும் விளையாடுவதையும் கவனித்தான். அப்பெண்ணிற்கு சில்லு கோடு விளையாட சரியாக வரவில்லை என்றாலும் முகத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் பீறிட்டது. ஆனால் காலையில் அணிந்திருந்த தங்க வைர நகைகள் தற்போது இல்லை.அவள் அழகிற்கு முன் போட்டி போட முடியாமல் தோற்று ஓடிவிட்டது போலும்.
சண்முகத்தின் நடையிலோ காலையில் இருந்த வேகம் இல்லை. நடப்பவை அனைத்தையும் கவனித்துக் கொண்டு மெல்ல நடந்து வர, தம்பி கொஞ்சம் நில்லு, நாளைக்கு வேலைக்கு போறப்ப கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போ என்றார் பட்டாமனியாரின் மனைவி. அந்த பாட்டியை அவன் பலமுறை பார்த்திருந்தாலும் அவர் முகத்தில் முன் எப்போதும் இல்லாத மகிழ்ச்சியும் சுறுசுறுப்பும் கூடியிருந்தது. சண்முகம் யூகித்துக் கொண்டான். வந்திருப்பது அவர்களின் பேத்தி என்பதும், வருடங்கள் கழித்து சொந்த பந்தங்கள் வந்திருப்பதால் பாட்டி மகிழ்ச்சியில் திளைக்கிறார் என்பதும் அவனுக்கு புரிந்தது. ஆனால் தம்மை என்ன காரணத்திற்காக வரச் சொன்னார் என்பது மட்டும் புரியவில்லை.
மறுநாள் காலை சண்முகம் பட்டாமணியார் இல்லத்தின் வாசலை அடைந்தபோது நேற்று நின்று கொண்டிருந்த அந்த காரை காணவில்லை. ஒருவேளை உறவினர்கள் ஊருக்கு சென்று விட்டார்கள் போல என்று நினைத்துக் கொண்டு, பெரியாத்தா… பெரியா த்தா… என்று குரல் எழுப்பினான். ஆனால் வீட்டில் இருந்து எந்த பதிலும் இல்லை. சிறிது நேரம் கழித்து “ஹூ இஸ் தட்” என்று ஆங்கிலத்தில் கேட்டுக்கொண்டே வெளியே வந்த அந்தப் பெண், சண்முகத்தை பார்த்தவுடன் வந்திருப்பது தான் விளையாடிக் கொண்டிருக்கும் போது நேற்று பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்தவன் என்பது அவளுக்கு நன்றாக தெரிந்தது. இருப்பினும் என்ன வேணும் என்று தட்டு தடுமாறி சண்முகத்திடம் தமிழில் கேட்க, பாட்டி வர சொன்னாங்க அதான் என்று வார்த்தையை இழுத்தான் பதட்டத்துடன். காரணம் புதிய நபரிடம் பேசுவதாலும், தன்னிடம் வேறு எதாவது ஆங்கிலத்தில் கேட்டுவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தாலும் மேலும் பதட்டமடைந்தான். தனக்கு ஆங்கிலத்தில் பேசுவதுதான் தெரியாதே தவிர, என்ன பேசுகிறார்கள் என்பதை ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்த பிறகு தைரியமானான்.
அவர்கள் சிறிது நேரம் வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அதற்குள் பாட்டி வெளியில் வர, வாப்பா சண்முகம்… உட்காரு என்றார். பின்னர் பேத்தியிடம் சண்முகம் யார்? எங்கு வேலை செய்கிறான் என்பதையும், அவனது தந்தை சிறுவயதிலிருந்தே இருந்தே அவர்கள் வீட்டில் வேலை செய்து வந்ததையும், பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டதையும், அவன் பக்கத்தில் உள்ள கொல்லன்பட்டறையில் வேலை செய்கிறான் என்பதையும், அவனது குடும்ப கஷ்ட நஷ்டங்களையும் ஒன்று விடாமல் அவளிடம் சொல்லிக் கொண்டே, அம்மா தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்காங்களா சண்முகம் என்றார்.
ம்ம் என்று அவன் முடிப்பதற்குள் இரு வருகிறேன் என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றார் பாட்டி.
பாட்டி சண்முகத்தை பற்றி கூறிய விவரங்களை கேட்ட அந்த பெண்ணிற்கு அவன் மேல் ஒருவித அனுதாபமும், ஏதோ இனம் புரியாத ஈர்ப்பும் ஏற்பட்டது. அதன்பின் அவள் தொடர்ந்து சண்முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். வீட்டிலிருந்து வெளியே வந்த பாட்டி ‘இந்தா சாப்பிடு என்று பலகார தட்டை நீட்டினார் சண்முகத்திடம். இல்ல வேண்டாம் நான் ஏற்கனவே சாப்பிட்டு வந்துட்டேன் என்று கூறுவதற்குள் வெட்கப்படாம சாப்பிடுப்பா இது நம்ம வீடு தானே என்றார்.
அவனது குடும்பத்தை பற்றியும், அந்த கிராமத்தைப் பற்றியும் தனது பேத்தியிடம் விவரித்துக் கொண்டே ‘ இந்த அறுவாமனைக்கு நல்ல கட்டையா அடிச்சு தீட்டி வாங்கிட்டு வா என்றார் சண்முகத்திடம். மீதியுள்ள பலகாரங்களை தனது சாப்பாட்டு பையில் எடுத்து வைத்துக் கொண்டு வர்றேன் ஆத்தா என்று சண்முகம் சொல்ல, இங்கு சாப்பிடுவதற்கு கூச்சப்படுகிறான் என்பதை உணர்ந்த பாட்டியோ அது குறித்து எதுவும் சொல்லாமல் சரி என்றார்.
அறுவாள்மனையை கையில் எடுத்துக் கொண்டு புறப்பட்ட சண்முகம், அந்தப் பெண் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்து வேகமாக நடந்து கொண்டே, தன் நிலையை அறிந்து, தன் மீது ஏற்பட்ட பரிதாபத்தால், ஒரு பெண், அதுவும் பணக்கார பெண் என்று நினைத்து, எல்லா பணக்காரர்களும்….. என பலவிதமான சிந்தனைகளுடன் நடந்தான்.
பின்னர் தினமும் வேலைக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் அந்தப் பெண்ணை பார்ப்பதும், அவளும் சண்முகத்தை பார்த்து புன்னகைப்பதுமாக சில நாட்கள் ஓடின. பின்னர் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஆகியும் இந்த வழியே சண்முகம் வராததை நினைத்து வருந்தினாள். எப்பொழுதும் பளிச்சிடும் அவளது முகமும் வாட்டத்துடன் காணப்பட்டது. பாட்டியோ பேத்தியின் இந்த மாற்றத்திற்கான காரணத்தை பலமுறை கேட்டும் அவளிடமிருந்து மௌனத்தை தவிர வேறு எந்த பதிலும் வராததால் குழம்பிப் போனார்.
மறுநாள் வழக்கமான நேரத்தில் தெருவில் சண்முகத்தை கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் அவன் முகமோ சோர்வு தொற்றி இருந்தது. சண்முகத்தின் அருகில் ஓடி வந்த அந்த பெண் ஏன் இரண்டு நாட்களாக வரவில்லை என்று கேட்க காய்ச்சல் என்றான். ஏதோ உடல்நிலை சரியில்லை என்பதைத்தான் கூறுகிறான் என்று உணர்ந்தவள் தன் கையில் வைத்திருந்த ஏதோ ஒரு பொருளை அவன் கையில் வைத்து தினித்துவிட்டு ஓடி வந்து விட்டாள். தனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் அவளுக்கே புதிதாக தெரிந்தாலும், அவளுக்கு அது பிடித்திருந்தால் அதைப்பற்றி அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
அவள் தன் கையில் கொடுத்தது ஏதோ வெளிநாட்டு தின்பண்டம் என்பதை தவிர வேறு எதுவும் சண்முகத்திற்கு தெரியவில்லை. இப்படியாக தினமும் இருவரும் சிறிது நேரம் பார்ப்பது, ஏதோ சில வார்த்தைகள் பேசுவது என சில நாட்கள் ஓட, ஒரு நாள் வேலையை முடித்து திரும்பிக் கொண்டிருந்த சண்முகத்தின் எதிரே வந்து நின்ற அந்த பெண் ‘ உன்னிடம் ஒன்று கேட்க வேண்டும் என்று கூறும் பொழுதே அவளிடம் இதுவரை இல்லாத வெட்கமும், ஒரு வித தயக்கமும் அவனுக்கு புதிதாக தோன்றிற்று.
நானும் உங்களிடம் ஒன்னு கேட்கணும் என வார்த்தைகளை மென்று விழுங்க செல்விக்கோ மனம் பூரித்து இரட்டிப்பு மகிழ்ச்சியில் முகம் மேலும் சிவந்தது. செல்விக்கு அதுவரை இருந்த வெட்கம் நீங்கி ‘ என்ன கேட்கணும்னு நினைச்சே??? சொல்லு என்று கேட்டாள் சண்முகத்திடம் ஆர்வத்தோடு. அது வந்து என்று தயக்கத்தோடு நீங்க போட்டிருக்கிற மாதிரி வேற பழைய முழு கை சட்டை இருந்தா குடுங்க என்றான். இப்படி ஒரு கேள்வியை சற்றும் எதிர்பாராத செல்வின் முகம் இருண்டு, தனது ஆசை, மகிழ்ச்சி அனைத்தும் அரை நொடியில் தகர்ந்துவிட்டதை நினைத்து எந்த பதிலும் அளிக்காமல் அமைதியானாள்.
ஆனால் சண்முகமோ அவளின் மாற்றத்தை உணராமல் தரையைப் பார்த்துக் கொண்டே’ தங்கச்சி கரும்பு வெட்டுற வேலைக்கு போகுது முழுக்கை சட்டையாக இருந்தால் கைய கிழிக்காது என்று நிமிர்ந்தான். சண்முகம் தனது முகத்தை பார்க்கும் முன்னரே எந்த பதிலும் கூறாமல் செல்வி வீட்டிற்குள் சென்று விட்டாள்.
செல்வி பதில் சொல்லாமல் உள்ளே சென்று விட்டதை நினைத்து குழம்பிய சண்முகம், அவள் தன்னிடம் என்ன சொல்ல நினைத்து இருப்பாள் என்பதை, அவள் தன்னோடு சில நாட்களில் சில நிமிடங்கள் மட்டுமே பேசி இருந்தாலும் அவளின் இன்றைய நடவடிக்கையை வைத்து உணர்ந்து கொண்டான். இருப்பினும் தனது குடும்பத்தின் நிலை கருதி மீண்டும் செல்வியை பார்ப்பதற்கான எந்தவித முயற்சியும் செய்ய இல்லை, அவளை பார்ப்பதற்கான வாய்ப்பும் அதன் பின் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஒரு சில நாட்களுக்கு பிறகு வேலைக்கு சென்று கொண்டிருக்கும்போது, அதே வெள்ளை நிற கார் தனக்கு எதிரே வருவதை கண்டு, அதில் வருவது செல்வியாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்பிய சண்முகம், அவள் ஊருக்கு செல்லும் முன் கடைசியாக ஒருமுறை அவள் முகத்தை பார்த்து விட வேண்டும் என்று எண்ணி ஓரமாக நின்று காத்திருக்க, கார் கண்ணாடி வழியே செல்வியும் தன்னைப் பார்த்துக் கொண்டே போவதை கவனித்தான். இம்முறை அவள் இவ்வூருக்கு வந்த போது இருந்த துள்ளலும், மகிழ்ச்சியும் இன்றி கலங்கிய கண்களுடன் தன்னை நோக்கி லேசாக கையை அசைத்தவாறே காருடன் கடந்து சென்றாள்.
சண்முகத்தின் கண்களிலும் கண்ணீர் கசிந்தது, மனம் தவித்தது, வாழ்க்கையே முடிந்து விட்டது போல் தோன்றியது. தான் எங்கு இருக்கிறோம் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் கால்கள் மட்டும் கடமையை நோக்கி முன்னேற ‘ ‘சண்முகம்’ என்ற பாட்டியின் குரல் கேட்டவுடன் நினைவு வந்தது போல் திடுக்கிட்டு நிமிர்த்து பார்த்தான். இந்தா இத வாங்கிக்கோ என்று ஒரு பையை நீட்ட அதை வாங்கிக் கொண்டு பட்டறையை நோக்கி வேகமாக நடந்தான்.
நேராக பட்டறைக்கு செல்லாமல் பக்கத்தில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் வந்து அமர்ந்து, கையில் இருந்த பையை திறந்து பார்த்தான், அதில் இரண்டு முழு கை சட்டைகள் இருந்தன. கண்கள் குளமாகி கதறி அழ தொடங்கினான்.
நன்றி,
இங்ஙனம்,
கீரங்குடி சரவணன்
தமுஎகச. அறம் கிளை
ஜனவரி 25, 2024
கும்பகோணம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


The narration is excellent. The narrator included many common and collegial dialogues from the people and villages, which added more flavor to this story. Kudos to Mr. Saravanan. I am anticipating more from him with the exact collegial conversation on his soil.
கதையின் முடிவு மிக நெகிழ்ச்சியாக உள்ளது, டீ கடை அரசியல் மிக யதார்த்தமாக உள்ளது, வானொலியில் இன்று ஒரு தகவலை குறிப்பிடுவது ,முனீஸ்வரன் கோவில் ஆகியவை மிக அருமை, மொத்தத்தில் கதை vera level…..
கருக்கறுவாளா? கலைச்செல்வியா? எனும் கேள்விக்கு சண்முகம் குடும்ப சூழல் காரணமாக கருக்கறுவாளைத் தேர்வு செய்கிறான். சிறப்பான கதை. வாழ்த்துகள்