சமுதாயத்தில் தனக்கு நடந்த ஒரு கொடுமை வேறு யாரும் நிகழக்கூடாது என்று நினைப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த எண்ணிக்கையில் ஒரு நபர் தான் கருப்பன்.
“வசந்த கால நதிகளிலே..
வைரமணி நீரலைகள்..
நீரலைகள் மீதினிலே..
நெஞ்சிரண்டின் நினைவலைகள்..”
டீக்கடையில் ஒலித்த பாடலை ரசித்தவாறே கருப்பன். கட் பனியன் வேட்டி பட்டாபட்டி முண்டாசு சகிதமாக சுருட்டினை பிடித்தபடி.
வேட்டி சட்டை அழுக்கானாலும் பரவாயில்லை முண்டாசு மட்டும் எப்பவும் வெள்ளைவெளேரென்று இருக்க வேண்டும். வெள்ளை முண்டாசு என்பது கருப்பனுக்கு வைர கீரிடம் போல.
அருகில் சைக்கிள் டயரை உருட்டியபடி விளையாடி வந்த சிறுவன். அருகில் இருந்த பழைய ஒலை கதவில் ஒன்றுக்கு அடிக்க,
“ஆக்கங் கெட்ட கூவ.. அவ்ளோ கக்கூஸ கட்டி இருக்கு இங்க வந்து ஏன்டா ஒன்னுக்கு அடிக்கிற..”
குச்சியை தூக்கி கொண்ட துரத்த. டவுசரை அவசரமாக மாட்டிக் கொண்ட சிறுவன் ஓடிச் சென்றவாறே.. “அவசரமா வந்தா இன்னா பண்றது.. போயா யோவ்.. சோன்பப்டி தலை… ” பொதுக் கழிவறையில் நுழைந்தான்.
“பேண்டு வச்சிட்டு போய்டுறது. ஒரு நாள் கழுவ விட்டா தெரியும்.. ” கருப்பன் வேகமாய் சுருட்டை இழுத்து முடித்தான்.
உடலால் அறுபது வயது. உள்ளத்தால் முப்பது என்பதை போல இருப்பார் கருப்பன். பெயருக்கேற்றாற் போல நிறம். வெள்ளை மனம். 28 வருடங்களுக்கு முன்னால் ஊர் கட்டுப்பாடுகளை மீறி கனகு என்ற கனகம்மாளை கரம் பிடித்தார். பேர் சொல்லும் பிள்ளைகள் இல்லை. அது அவர்களுக்குக் குறையென தோன்றவும் இல்லை.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுமார் முந்நூறு குடும்பங்கள் வசிக்கும் சிறு கிராமம் தான் சாணப்பாளையம். பண்ணையார்களும் இதர சாதிக்காரர்களும் வாழும் ஊர்.
ஊரில் உள்ள வீடுகளில் கழிவறை வசதி கிடையாது. பொதுக் கழிப்பிடம் மட்டுமே. அதுவும் பண்ணையார்கள் உபயோகப்படுத்திய பிறகே மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எவ்வளவு அவசரம் என்றாலும் காத்திருக்கத்தான் வேண்டும் என்று எழுதப்படாத விதிமுறை.
இதில் பரிதவிப்பது பெரும்பாலும் பெண்களே. இப்படி தினமும் பல மணிநேர காத்திருப்புக்கு பின்னரே கழிவறை செல்ல வேண்டும் என்பதால் ஊரில் பல பெண்களுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டு காய்ச்சல் வலி என அவதியுற்றார்கள்.
சற்று வசதி உள்ளவர்கள் வேறு ஊருக்கு பிழைப்பு தேடி சென்றுவிட்டார்கள். சற்று வாய் உள்ளவர்கள் பண்ணையார் பெருமக்களிடம் முறையிட்டு சோர்வடைந்தார்கள். தொற்று கனகுவை விட்டு வைக்கவில்லை. இரு சிறுநீரகமும் பழுதடைந்து மருத்துவம் மேற்கொள்ள போதிய பொருளாதார வசதி இல்லாததால் கனகு உலகத்தை விட்டு சென்றுவிட்டாள். கருப்பன் தனிமையுடன் வாழ்ந்தான்.
தனக்கு ஏற்பட்ட மீளா துயரம் இனி யாருக்கும் ஏற்படக் கூடாது என்று பண்ணையார் பெருமக்களிடம் பேசி பொதுக் கழிவறை மேம்பாட்டினைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். மொத்தம் இருபது கழிவறைகள், அதில் இரண்டினை மற்ற சாதிக்காரர்கள் எந்த நேரத்திலும் பயன்படுத்த புதிய வரைமுறை கொண்டு வந்தான். மேலும் அதனை பராமரிக்கும் பணியும் செய்வதாய் ஏற்றுக் கொண்டான்.
பண்ணையார்கள் வளர்க்கும் மாடுகளைத் தேய்த்துக் கழுவிக் குளிப்பாட்டும் வேலை கருப்பனுடையது. நாள் ஒன்றுக்கு 200 ரூபாய் கூலி அளிக்கப்படும். சுருட்டு பீடி டீ வடை போக மீதமுள்ள காசில் ப்ளீச்சிங் பவுடர் பினாயில் துடப்பம் என கழிவறைகளை பரமரிக்க தேவையான அனைத்தையும் வாங்கிக் கொள்வான்.
பல நாட்கள் கழிவுகளின் நாற்றத்தால் பசி மறந்து பட்டினியாய்த் தூங்கி விடுவான். சில சமயங்களில் சாராயமும் பிரியாணியும். ஏதேனும் விசேஷம் என்றால் பண்ணையார் வீட்டு வடை பாயாசம் என்றே அவன் வாழ்க்கை ஓடியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு மக்கள் அனைவரும் கழிவறை பயன்படுத்தத் தயாராக சுத்தமாக இருக்கும்.
கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக ஊரில் சிறுநீரக தொற்றால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சுத்தம் சுகாதாரமான கழிவரைகளை தினமும் உபயோகித்து வந்தனர்.
உன்னதமான பணியை மேற்கொள்ளும் கருப்பனை ஒருவர் கூடப் பாராட்டியோ அல்லது ஒரு வார்த்தை சிரித்து பேசியதோ இல்லை. அது பற்றி கருப்பன் கவலையுற்றதும் இல்லை. சுருட்டு பீடி புகையுடனும் கனகுவின் நினைவுகளோடும் நாட்கள் சென்றன.
அன்று அதிகாலை ஏனோ கருப்பனால் எழுந்திருக்க முடியவில்லை. நெஞ்சு அடைப்பதைப் போன்ற உணர்வு.
அருகில் உள்ள கடையில் கோலி சோடா வாங்கிக் குடித்தான். ஆயினும் ஏதோ ஒன்று நெஞ்சை உருட்டுவது போல தீவிர வலியை உணர்ந்தான். எப்படியோ தட்டுத்தடுமாறி பண்ணையார் வீட்டினை அடைந்தான்.
பார்வதியம்மாள் வெளியே வந்தாள்.
“அம்மா நெஞ்சு வலிக்குது தாயி. தர்மாஸ்பத்திரி போகக் கொஞ்சம் காசு குடும்மா…”
“அய்யோ.. ஐயா வேற வீட்டுல இல்லயே. கொஞ்சம் நேரம் பொறு கருப்பா. இப்ப வந்திடுவாறு…” கையை பிசைந்தவாறே நின்றிருந்தாள் பார்வதி.
“கொஞ்சம் தண்ணீ குடு தாயி.. மயக்கமா வருது…”
இதோ வாரேன்.
உள்ளே சென்றவள் “இவனுக்கு வேற வீடு கிடைக்கலயா.. கக்கூஸ் கழுவுறவன்.. நல்ல சொம்புல தண்ணி குடுத்தா சொம்பு வீணாயிடும்…”
பழைய பாத்திரங்களுக்கு நடுவில் உபயோகப்படுத்தாத சொம்பினைக் கழுவி தண்ணீர் நிரப்பி கொண்டு வந்தாள்.
அவள் தண்ணீரை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்குமுன் கருப்பனின் கண்கள் மூடிவிட்டான். மூச்சு நின்று விட்டது. பார்வதி அதிர்ச்சியில் உறைந்தாள்.
“நன்றி கெட்ட பயலுக.. இனிமே உங்க சாதி தான் வந்து கக்கூஸ் கழுவும். நாறிப்போங்கடா..” கருப்பனை கைதாங்கலாய் தன்னுடன் அழைத்துச் சென்றாள் கனகு.
ஒருவர் இருக்கும் வரையில் அவரின் மதிப்பு தெரியாது என்பதை காலம் சாணப்பாளையம் மக்களுக்கு உணர்த்தியது. ஊரில் மீண்டும் சிறுநீரகத் தொற்று பரவ தொடங்கியது.
இம்முறை ஊரில் ஒரு கருப்பன் கூட இல்லை.
***********
ஆம் தோழர். நிதர்சனம். தற்போது உள்ள சூழலை படைத்து உள்ளீர்கள். இருக்கும் வரைஅருமை தெரிவதில்லை. வாழ்த்துகள்
வாழ்த்துகள் தோழர் சிறப்பு…
சிறப்பான கதைக்கரு. அனைத்து திருநங்கையர் வாழ்விலும் ஜில்லுக்கு கிடைத்த உறவு கிடைக்கப் பெற வேண்டும்.