நான் மாரி வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் சின்னமா, சாமி இருந்தா வரச்சொல்லுங்க என்றான் மாரி.அன்று ஊரில் திருவிழாவிற்கு கலை கட்டியது.கோவில் வாசல் முன்பு வாழைமரம்,தோரணங்கள் கட்டி முடித்துவிட்டு, சீரியல் பல்புகளைக் கட்டிக்கொண்டு இருந்தனர் மணி எலக்ட்டிரிக்கல்ஸ் குழுவினர்.அந்தக் குழுவிற்கு நாம் மறந்து போன பழைய காலத்து ஜீப் ஒன்று சொந்தமாக இருந்தது.
அந்த ஜீப்பில் மேல் டாப் இருக்காது.அந்த ஜீப்பில் சிறுவர்கள் மிராசுதாரர்களைப் போல் நின்று கொண்டு கம்பீர பார்வையுடன் வருவார்கள்.அந்த நான்கு சிறுவர்கள் வீட்டில் வறுமை தாண்டவத்தின் காரணமாக மணி குழுவில் சேர்ந்து கொண்டு தெருமுழுக்க விளக்குகளைக் கட்டுவதும், ரேடியோ போடுவது போன்ற எடுபிடி வேலையைச் செய்வார்கள்.இரவுச் சுவாமி ஊர்வலத்திற்கும் அந்த ஜீப்தான், சுவாமி அலங்கரித்த வண்டியை இழுத்து கொண்டு போகும், அந்த நேரத்தில் தெருவில் உள்ள பையல்கள் அந்த மணி குழுவில் உள்ள பையன்களிடம் கெஞ்சுவார்கள், அண்ணே நாங்களும் வண்டியில் ஏறிக்கொள்கிறோம் என்று, ஒரு முறை முறைத்துவிட்டு மணி குழு ஒரு சிலரை மட்டும் அனுமதிப்பார்கள், அதற்கு அவர்கள் வீட்டிலிருந்து நிறைய சுண்டலை எடுத்து வந்து மணி குழுவிற்கு தர வேண்டும், அப்படி தருபவர்களுக்குதான் வண்டியில் அமர இடம் கொடுப்பார்கள்.
பழைய புனல் வடிவ ரேடியோக்களை கட்டினார்கள்.கோவிலில் ஆரம்பித்துத் தெருவுக்கு தெரு ரேடியோ புனல்கள் முதல் பாடலைப் பாடத்துவங்கியிருந்த நேரம் முழு ஊருக்கே உற்சாகம் தருவதாக இருந்தது.
ஊருக்கு மட்டுமில்லை நம்ம மாரிக்கும் தான்.அந்தத் திருவிழாப்பாடலை நம்பித்தான் அவன் வாழ்நாள் இருந்தது, பறையிசை குடும்பத்தின் வம்சத்தில் மாரி பிறந்திருந்ததால் அதே தொழிலில் இருந்தான், வேறு வேலை என்பதை கனவிலும் நினைத்துப்பார்ப்பதில்லை.அந்தத் தொழிலுக்கு வேலையே ஊரில் இறப்பு மற்றும் திருவிழாக்களில் வாசிப்பது போன்ற நிகழ்வுகளில் அவர்கள் வாழ்வு நகர்வது
உறக்க சொல்ல வேண்டிய செய்திதான்.

மார்கழி பீடைமாதம் என்ற பழைய சம்பிரதாயத்தால் அந்த மாதம் இரவு முழுவதும், ஊர் முழுக்க பறையிசைக்க வேண்டும்.நடுங்கும் குளிரில் முப்பது நாட்கள் இரவு வாசித்தால் எந்தக் கூலியும் கிடையாது, அழகான அந்த மார்கழிப்பனி புல்லில் அமர்ந்து மாரியை பார்க்கும் கணங்களையெல்லாம் பார்பதில்லை அவன், ரம்மியமான காலைப்பொழுதில் கடுங்குளிரை மட்டுமே கோபத்தோடு திட்டுவான், சில நேரங்களில் மார்கழி பஜனைகளையும் சற்று ஆர்வமாகத் தன் பறையை நிறுத்திக் கவனிப்பான், மார்கழி முப்பது வரை பற்களைக் கடித்துக்கொண்டு வாசிப்பான்.கடுமையான குளிர் எடுக்கும் நிலையில் எங்காவது சுள்ளிகளைப் பொறுக்கி குளிர் காய்ந்துகொண்டே ஒரு பீடியை காதுக்கு மேலிருந்து இழுத்து பற்ற வைத்துக்கொண்டே பறைக்கு வார்பிடித்துவிடுவான், ஊரே தூங்கிகொண்டிருக்கும்.ஆனால் மாரி மட்டும் வேலை செய்து கொண்டிருப்பான், அப்புறம் எப்படி இந்தப் பீடைகள் போகும்.
இரவு இரண்டு மணிக்கு ஆரம்பித்து விடிய ஆறு மணி முடியும் வரை மார்கழி முழுவதும் வாசிப்பான்.அப்படி வாசிக்கும் நாட்களில் தேனீர் கடையைப் பரிதாபமாகத் தாண்டுவது தினந்தோறும் வழக்கமாய் இருந்தது.முப்பது நாட்கள் முடிந்து தை மாதத்தில் வரும் பொங்கல் திருவிழாவின் இறுதி நாட்களான கரிநாள் அன்று ஊர்முழுக்க தன் பறையை அதிர விட்டுக்கொண்டே கூடையில் விழும் சில்லரைகளை வாங்குவான்.சிலர் சில்லரைகளாகவும்,சிலர் பத்து ரூபாய் நோட்கள் எனக் கூடையில் போடுவதை சந்தோஷமாக ஒவ்வொரு வாயிற் படியில் நின்று பறையை வாசித்து, வாசித்து வாங்கிச்செல்வான்.
மார்கழி மாதம், எட்டு நாள் திருவிழா மற்றும் சிலர் மரணங்களில் வாசிப்பு எனச் சொற்ப பணத்தில் ஒரு குடும்பம் நடத்துவது பற்றி எல்லாம் கவலை இல்லை மாரிக்கு.அவனைப் பொறுத்தவரை வாசிக்க வேண்டும்.பறை சும்மா இருப்பதை பார்த்தாலே ஏதோ செய்துவிடும் மாரிக்கு, சும்மா இருக்கும் நேரத்தில் சிறிது தீ மூட்டி வார் பிடிப்பது வழக்கம்.
இன்று உற்சாகத்தில் பறையை எடுத்துத் தீ மூட்டி சுதி சேர்த்துவிட்டுதான் தலைவர் வீட்டுக்கு வந்தான் மாரி.
வெளியே வந்த தலைவரைப்பார்த்த மாரி, கை எடுத்துக் கூம்பிட்டுக்கொண்டே, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் தன் இடுப்பில் கட்டினான், சாமி கொஞ்சம் அட்வான்ஸ் கொடுங்க ரொம்ப கஷ்டமாக இருக்கிறது என்றான்.சரி என்று தலைவர் கொடுத்தார்,மாரிக்கு அது போதுமானதாக இல்லை.”சாமி…ஒரு ஐநூறு கொடுங்க… “என்று சற்று ராகமாகக் கேட்டான்.அப்படி ராகமாகத்தான் பேசுவான் மாரி.
“இல்லைடா மாரி கொடி கட்டுகிற உபயமும், கடைசிநாள் உபயமும் பொதுவானது டா,மற்ற ஆறு நாள் உபயத்திற்கு அந்தந்த தெருவில் உள்ளவர்களிடம் வாங்கிக்கொள்” என்றார்.
“சரிங்க சாமி” என்று புறப்பட்டான் மாரி.
“அப்படியே கொம்பூதி சன்னியாசிய கூப்பிட்டுக்கடா, அவன் கொம்பு ஊத வர வேண்டும்” என்றார் தலைவர்.
சன்னியாசிக்கு தாடை தொங்கிய முகத்தோடு எழுபத்தி ஐந்து வயதாகிப்போய்விட்டது,நல்ல உடற்பருமன் அவனுக்கு, கொம்பை எடுத்து நுனிவாயில் வைத்துக் காற்றை நிரப்பும்பொழுது ஏற்படும் கம்பீரம் கைலாயத்தில் சிவனுக்கு அருகில் வாசிக்கும் அழகு தோன்றும்.
கலைநயமிக்கவன், நல்ல நரைத்த தாடியோடு கொம்பை ஊதுவான், அவன் சட்டை மற்றும் இடுப்பில் தொங்கும் துண்டு அழுக்காகவே இருக்கும், கொம்பின் சப்தம் சங்கிலிருந்து வரும் சப்தத்தை விட அற்புதமாக இருக்கும், அவன் கொம்பை எடுத்து ஊத ஆரம்பிக்கும்பொழுது குழந்தைகள் அவனோடு சுற்றுவார்கள், ஊதி ஊதி மூச்சு இறைக்க ஆரம்பிக்கும். அந்தக் கொம்பை ஊதி அவன் வாயும் நுரையீரலும் வலிக்கும் வலிகள் கொடுமையாக இருந்தது, ஆனால் இரவு முழுக்கவும் கொம்பை ஊதுவான், அந்த முழக்கத்திற்கு இதுவரை விடுதலை கிடைக்கவேயில்லை.
“சரிங்க நான் கூப்பிட்டுவருகிறேன்” என்று புறப்பட்டான் மாரி.
ஊர் தெருவுகளைத்தாண்டி காலனியில் நுழைந்தான், அவன் மனதில் உற்சாகம் பொங்கியது, ரொம்ப நாளா நல்ல சாப்பாடு இல்லையெனத் தன் மனைவியோடு அருகில் கடைக்குச் சென்று கொஞ்சம் அரிசியும், காய்கறிகள் மற்றும் கவலை மீனை வாங்கித் தந்துவிட்டு,”டேய் மீனா சாப்பாடு செய் இதோ வந்துவிடுகிறேன்” என்று புறப்படும் நேரத்தில் வீட்டுவாசலில் அவனுடைய மகன் முகில் மலம் கழித்து கொண்டிருந்தான்,கையில் கால் சட்டையோடு அப்பா என்று ஓடி வந்தவனை,என் ராசா எனத்தூக்கி வந்து தண்ணீர் விட்டு அலம்பினான், அவன் கையில் சில்லரை கொடுத்து,முகிலா போய் ஏதாவது வாங்கிக்கோடா எனச் சொன்னதும்,அவன் ஒரேத்துள்ளலில் ஓடினான், கால்சட்டை வீட்டுவாசலில் அப்படியே கிடந்தது.
மாரி தனக்கு துணையாகப் பறையை இசைக்க இரண்டு கலைஞர்களையும், கொம்பூதி சன்னியாசியையும் அழைத்துக்கொண்டு சாராயக்கடைக்கு சென்றான்.ஆளுக்குக் கொஞ்சம் சாப்பிட்டார்கள், சிறிது ஊறுகாய் மற்றும் சுண்டலை சாப்பிட்ட வாறே தெருவில் ஒரமாக நடக்கத்தொடங்கினார்கள், சன்னியாசிக்கு லேசாக நடை பின்னியது.
“இன்னா மாமா முதல்நாளே இப்படி ஆடுற…இன்னும் எட்டுநாளைக்கு இப்படிதாயா” என்று குதுகலித்தான்,”அட அதுயெல்லாம் ஒன்னும் உரை செய்யல மாரி, சாப்பாடு சாப்பிடலே அதான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது” என்றான் சன்னியாசி அவிழ்ந்த துண்டைக்கட்டிக்கொண்டே.

அந்தி சாய்ந்தது மணி ஐந்தாகிவிட்டது, கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடந்தது.கலசம் வரும் வரை காத்திருந்த மாரிக்குழுவினர் கருவறையை விட்டுக் கலசமும்,கொடியும் வந்தவுடன் உற்சாகத்தில் பறை அடிக்க ஆரம்பித்தார்கள்.”தந்தோம்…தந்தோ ம்…தந்தோம்… தந் தந்தோம் தாக்குதிக்கிட… தந் தந்தோம் தாக்குதிக்கிட… “எனப் பறை முழங்கியதும் முழு திருவிழா கலைக்கட்டியது.
நிறைய சிறுவர்கள் இவர்கள் இசைக்கு ஏற்ப ஆடினார்கள்.சில சிறுவர்கள் சன்னியாசியின் கொம்பைத்தொட்டுபார்த்தார்கள், சிலருக்கு ஊதவும் ஆசையாயிருந்தது, அடிக்கடி சன்னியாசி சிறுவர்களைக் கண்டு புன்னகைத்தான்.ஒரு வித பயத்துடன் நடந்துகொண்டே இவர்கள் முழக்க இசை ஊர்முழுவதும் கேட்டது.எட்டாவது நாள் திருவிழா வெகுவிமர்சையாக இருந்தது.கோட்டை வளைத்தல் அன்று நடைபெற்றது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே சண்டைப்போட்டு தற்காலிக கோட்டையை வீழ்த்த வேண்டும்.
கோவிலுக்கு அருகில் மணல் கோட்டை ஒன்று எழுப்பி இருந்தார்கள்.அந்தக் கோட்டையைச்சுற்றிலும் விழல்களால் மதில் சுவர் அமைந்திருக்கும்.அந்தக் கோட்டையின் நடுவில் துரியோதனன் சிலையை மணலால் படுத்திருப்பதை போல் அமைத்து, அவன் தொடையில் சிறிய பானை ஒன்று இருக்கும், அந்தப்பானையில் துரியோதனனின் உயிர் இருப்பதாகக் காட்டி வதம் செய்து கோட்டையை அழிப்பதாக ஐதீகம் நடக்கும். அன்று மாரியோடு முகிலனும் கோட்டைக்கு வந்திருந்தான்.
மாரியோடு பறையிசைக்கும் இருவர்,முகிலன்,சன்னியாசி என்று இவர்களைப் பாண்டவர்களாக நினைத்தான் மாரி, எதிரிலிருந்த அனைவரையும் கௌரவர்களாக நினைத்து வாசித்தான், எப்படியாவது அதிகாரம் அழிய வேண்டும் எனத்துடித்து கொண்டே பறையை முழங்கினான்.முகிலனும் அதற்கு ஏற்றார் போல் ஆடினான்,சாதித்தீ அழிய வேண்டும், எங்களுக்கு மூன்று வேளைக்கும் சாப்பாடு வேண்டும் என்று வாசித்தான்.
டன்…டன்…டன்டன்டன்தாக்குதிக்கட,
டன்…டன்…டன்டன்டன்தாக்குதிக்கட, என அடித்த அடியிலும் கொம்பின் முழக்கத்திலும் கோட்டை அழிந்தது, பாண்டவர்கள் ஆரவரமாகக் கோவிலுக்குள் ஓடினார்கள், மாரிக்குழுவினர்கள் கோவில் வாசல்படி வரை ஓடி உள்ளே செல்லாமல் வாயிலில் நின்று அடிக்க ஆரம்பித்த கணத்தில்,அப்பா வா உள்ள போய் அடிக்கலாம் என்றான் முகிலன்.அவனைப்பிடித்து இழுத்து நிறுத்தினான் சன்னியாசி.விடு தாத்தா என்று கோவிலுக்குள் செல்ல முற்பட்ட முகிலனுக்கு ஒரு பொறிபாக்கட்டை வாங்கி கொடுத்து இழுத்து, இழுத்து பிடித்தான் சன்னியாசி.
கோட்டையை வளைத்த அடுத்த நாள் நெருப்பு திருவிழா இறுதி நாள் விழா கோலாகலமாக நடந்தது, கோவில் கருவறைக்கு சென்று வாசிப்புடன் தீபம் வர வேண்டும், கோவிலுக்கு வெளியே வாசித்த மாரியின் இசைக்கு ஒரு சிலர் மௌனமாக உள்மனதில் ஆட்டத்துடன் ரசித்தார்கள்.
முகிலனும்,சன்னியாசியும் லவகமாக ஆடினார்கள்.முகிலன்,”ஏன்டா மாரி நாம வெளியில அடிக்கிறோம், உள்ள இருக்கிற சாமிக்குக் கேட்குமாடா” என்று கேட்டுக்கொண்டே ஆட்டத்தை ஆடினான்.”டேய் முகிலா சும்மா இருடா”என மாரி அதிகமான வேகத்தோடு பறையை அடித்தான்.
சன்னியாசி தாத்தாவிடம் இந்தக் கேள்வியைக்கேட்டான்.
மோளத்தை ஏன் தத்தா அடிக்கிறோம் என்று கேட்டான் முகிலன்.அந்த கேள்விக்குச் சன்னியாசி இதுதான் நம்ம பேச்சு மொழிக்கு முன்னாடி இருந்த முதல் மொழி என்றான், முகிலனுக்கு புரியவில்லை ஆடிக்கொண்டே இருந்தான்.சன்னியாசி இதுதான்டா நமக்குச் சோறுபோடுது என்று உரக்க கத்தினான்.
தீபத்தோடு கோவில் கருவறைக்குள் இருந்து நெருப்பு மிதிக்கும் இடம் நோக்கி ஊர்கார்கள் ஓடிவந்தார்கள்.மரக் கட்டைகள் அடிக்கி வைத்திருந்த சிறு இடைவெளியைத் தீபத்தால் நிரப்புவதை தொலைவிலிருந்து வாசித்துக்கொண்டே பார்த்தான் மாரி,இதுவரை அந்த நெருப்பு எரிந்து கொண்டுதான் இருக்கிறது.
மாரியின் பறை அதிரும் வேளையில் முகிலன் சிவதாண்டவம் ஆடினான், முகிலனைப்பார்த்த சன்னியாசியாலும் ஆடாமல் இருக்க முடியவில்லை, அவனும் சேர்ந்து ஆடினான்.அப்பொழுதான் சன்னியாசி தான் ஈசன் மரபில் உதித்தை கொம்பூதி முழங்கினான்.
ப.தனஞ்ஜெயன்

