சிறுகதை: கொடியில் தூளியாடிய தீபாவளி – அன்பூ

சிறுகதை: கொடியில் தூளியாடிய தீபாவளி – அன்பூ



விடிந்தால் தீபாவளி.

வாங்கிய புதுத்துணிகளுக்கெல்லாம்
மஞ்சள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் அப்பாவும் மகளும்.

பையிலிருந்து புது நைட்டியொன்றை உருவியெடுத்து பிள்ளையிடம் தந்து “இந்தாமா… இதுக்கும் ஒரு பொட்ட வைய்யி. உங்கம்மா…நாளைக்கி எப்புடியும் புதுசு கட்டமாட்டா. நைட்டியத் தான் போட்டுக்கப் போறா..
அது…புதுசா இருக்கட்டுமே…”
என்கிறார்…கணவர்.

“ப்பா…ஏம்ப்பா அம்மா தீபாவளியன்னிக்கு மட்டும் புதுசு கட்டமாட்டேன்கிறாங்க…கேட்டா சிரிச்சுக்கிறாங்க…வேலையிருக்கு..
அப்புறமாக் கட்டிக்கிறேம்பாங்க… ஆனா கட்டிக்கவேமாட்டாங்க… ஏம்ப்பா..உங்களுக்குத் தெரியுமாப்பா…”.

” ம்ஹும்..எனக்கும் தெரியாதும்மா…
ஏதோவொரு காரணம் இருக்கு..அழுத்திக் கேட்டா…முகமே மாறிப்போயிடும்..விட்டா அழுதுடுவா போல…அவளுக்காத் தோணுனா சொல்லட்டும்னு நானும் ரொம்ப அழுத்துறதில்லடா…நீயும் இதுபத்தி ஏதும் கேட்டு வைக்காத…என்னா…”.

தீபாவளி லேகியத்தைக் கிளறிக் கொண்டே…இருவரின் கதைப்புகளையும் காதில் வாங்கிய எனக்கு….பொசுக்கென்று அணை உடைத்துக் கொள்கிறது..வருடக் கணக்கில் தேக்கி வைத்த துக்கத்தின் புனல்.

கரகரவென்று வழிந்தோடும் கண்ணீர்ப்படலம்… கிண்டிக்கொண்டிருக்கும் லேகியத்தை மூடி மறைக்கிறது..

சொல்லச் சொல்ல சொல்பேச்சுக் கேட்காது…தாயின் கையுதறியோடும் பிள்ளையைப் போல….என்னை மீறிக்கொண்டு…என் பால்யத்தின் மிச்சமாய் எஞ்சியிருக்கும் அந்தத் துயரக்காட்டின் வழித்தடத்தைத் தேடிப் போய் நின்று கொண்டு …பின்னாலே நான் வருகிறேனாவென்று என்னைத் திரும்பிப் பார்க்கிறது… கயிறறுத்துக்கொண்ட என் நினைவுக்கன்று.

ஒவ்வொரு தீபாவளிக்கும் என்னை மூடம் போட்டுக்கொள்ளவெனவே … தவறாது என் மீது வந்து விழுந்து….கவிழ்ந்துகொள்ளும்.
கருமை பாரித்ததொரு நிழல் தான் இது.

கணவனால் கைவிடப்பட்டு
ஒரு வயதுக் கைக்குழந்தையாய் என்னை இடுப்பிலும்…தம்பியை வயிற்றிலுமாகச் சுமந்து கொண்டு தாய்வீட்டுக்கு வந்த அம்மாவுக்கு… அதன்பிறகு மாமா தான் எல்லாமே என்றாயிற்று.

ஒரு கட்டத்தில் இன்னும் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாமென்று…
உறவுகள் கூடிப் பேசிய கூத்தில்…
ஒரு மாதத்திற்கு வேண்டிய மளிகை சாமான்கள் சகிதமாக..
எட்டுவயதிலும் ஆறுவயதிலுமாய் இருக்கும் எங்களை அம்மாவோடு அழைத்து வந்து அப்பாவிடம் விட்டுப் போனார் மாமா.

அப்பாவின் போக்கறிந்து… இரண்டு நாட்கள் தங்கியிருந்து மாமாவே எங்களைப் பள்ளியில் சேர்த்து தேவையானதை எல்லாம் செய்து கொடுத்து விட்டுத் தான் போனார்.

இவர்தான் அப்பாயென்று அப்போது தான் எங்களுக்குத் தெரியவந்தது.
கொஞ்சமும் சிரிக்காத சிடுசிடு முகமும்…அனல் தெறிக்கும் வெடுக் வெடுக்கென்ற வார்த்தைகளுமாகப் பார்த்த கணமே எங்களுக்குப் பிடிக்காது போயிற்று…அவரை.

காலையில் குளித்துக் கிளம்பினால்…நடு இரவில் தான் வீட்டுக்கு வருவார். போஸ்ட் ஆபீசில்
கிளர்க்காக நல்ல உத்தியோகமும் சம்பளமும் உண்டென்றாலும்
பைசாக் காசு வீட்டுக்குத் தரமாட்டார்.
வீட்டில் எதுவும் சாப்பிடவும் மாட்டார். யாரையும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.

கையுதறியும்… வந்து ஒட்டிக்கொண்டதுகளேயென்று எங்கள் மீது புகைந்தெழுகின்ற கோபத்தில்…வீடென்பது…இரவு மட்டும் தங்கிக்கொள்ளும் விடுதியாகவே மாறிப்போயிற்று அவருக்கு.

குடும்பத்தோடு இன்னும் ஒட்டாத அப்பாவின் நிலையை அறிந்து கொண்ட மாமா…வீட்டுச் செலவுகளுக்குத் தொடர்ந்து காசு கொடுத்தனுப்பியதில்… மேலும் சில மாதங்கள் நகர்ந்து சென்றிருந்தன.




தீபாவளிக்கு இருபது நாட்களிருக்க…
மளிகைச் சாமான்களோடு…அப்பா உட்பட எங்கள் எல்லோருக்கும் புதுத்துணிகளும் தீபாவளிக் காசும் கொண்டு வந்து கொடுக்கும்
சாக்கில் …எங்களைப் பார்த்துவிட்டுப் போனார்…நேசத்தின் குறியீடாயிருந்த எங்கள் மாமா.

அதுவரைக்கும் எங்கள் யாரோடும் வாயைத் திறக்காத அப்பா…
மாமா வந்து போன மறுநாள்…
புதுத்துணிகளைத் தைக்கக் கொடுத்துவிட்டு வரலாமென்று சொல்லி…அதற்கான காசையும் வாங்கிக் கொண்டு…அளவு எடுப்பதற்கென என்னையும் தம்பியையும்…கூடவே அழைத்துப் போனது…எங்களுக்குக் குதியாட்டமாயிருந்தாலும்…
அம்மாவுக்கு ஏனோ நறுக்கென்று
இருந்திருக்கிறது. அவர் சுபாவத்தோடு சில காலங்களைக்
கடத்தியவளாயிற்றே.

பத்துக்குப் பத்து சிறிய கடையில் இரண்டு பக்கமுமாகக் கொடிகளில் தைத்து முடித்த துணிகள் பரத்திக் கிடந்தன. எனக்குப் பாவாடையும் சட்டையும்…தம்பிக்கு கால்சட்டையும்
மேல் சட்டையும்…அப்பாவுக்கு பேண்ட்டும் சட்டையும் அளவெடுத்துக் கொண்ட தையல்காரர்…ஒருவாரம் கழித்து வரச் சொல்லிவிட்டார்.
அம்மாவுக்கு அளவுத்துணியோடு ஜாக்கெட்டும் கொடுத்தாயிற்று.

தையல்கடைக்குப் பத்தடி தூரத்தில் தான் எங்கள் பள்ளிக்கூடம் இருந்தது.
தீபாவளி நெருங்க…நெருங்க..
வகுப்பறை முழுக்க தீபாவளிப் பேச்சுத்தான்.யாருக்கு என்ன கலர்..எத்தனை டிரெஷ்..எந்தக் கடையில வாங்கியது.. வெடியென்ன..பலகாரம் என்னன்னு…பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியாச்சு.

என்னோடு படித்த கமலா…தன் துணியைப் பக்கத்து கடையில் தான் தைக்கக் கொடுத்திருப்பதாய்ச் சொல்லி தோழிகளுக்கெல்லாம் அதைக் காட்டும் ஆர்வத்தில்..மதிய உணவு இடைவேளையின் போது எங்களையெல்லாம் அங்கு அழைத்துப் போனாள்.

போனதும்…அங்கே கொடியில் கிடந்த என் பாவாடை சட்டை தான் முதலில்
என் கண்களுக்குச் சிக்கியது.
பார்த்த கணம் அத்தனை சந்தோசமெனக்கு.
அடுக்கடுக்காய் பிரில் வைத்து…
பாவாடையும்…பஃப் கை வைத்த மேல்சட்டையுமாகக் கண்ணில் வாங்கிய கணம்..உடுத்திக் கொண்டதாகவே மகிழ்ந்து போனது அந்தப் பிராயத்துக்கே உரிய சிறகின் மனது. தோழிகளுக்கெல்லாம் அதுதான் என் துணியென்று
சுட்டிக்காட்டியதில் மேலும் கொள்ளைப் பரவசம் வந்து அப்பிக்கொண்டதெனக்கு.

“மாமா..அது என் துணி தானே…..
என் தம்பியோடது.. அம்மா..அப்பாவோடதெல்லாம் தைச்சாச்சா மாமா”
கடைக்காரரிடம் கேட்க..

“எல்லாம் தைச்சாச்சும்மா…
உங்கப்பா…அவரோட துணிக்கு மட்டும் காசு கொடுத்து வாங்கிட்டுப் போயிட்டாரு. மத்த துணியெல்லாம் ஒன்னும் அவசரமில்ல…தீபாவளி கழிச்சு வாங்கிக்கிறேன்னு சொன்னாரேம்மா…” என்ற போது
தோழிகள் முன்னிலையில்…
தொண்டைக்கும் நெஞ்சுக்குமாய் ஏதோவொன்று அழுந்தப் பிசைய…கூனிக் குறுகி…
மருகித் தவித்த கணம்…வாழ்வின் முதல் அவமானம் அறிமுகமாயிற்று. குளம் கட்டி நின்ற கண்ணீரை மறைக்கவோ…தடுக்கவோ..முடியாது..தடுமாறி நின்ற அந்த நொடி
இன்றுவரைக்கும் என்னைத் துரத்தியடிக்கிறது.

அம்மாவிடம் விசயம் சொன்னதும்
எங்கள் முன் பெரிதாக எதுவும் காட்டிக்கொள்ளவில்லை அவள்.
அவளுக்கு அது…எதிர்பார்த்தது தான் போல.

அன்றைக்கு இரவு…வீட்டிற்கு வரவேயில்லை அப்பா. அதன்பிறகு எப்போதுமே வரவில்லை.

செலவுக்கென்று தனியாக…மாமா அம்மாவிடம் கொடுத்துப்போன காசையும் வாரிச் சுருட்டிக்கொண்டு போயிருந்தார் அப்பா…என்பது பின்னர் தான் தெரிய வந்தது.

வீட்டுக்கு வந்து சேராத அப்பாவை விடவும்…பண்டிகைக்கு வந்து சேராத எங்களின் புதுத்துணிகள் யாவும்…தையற்கடையிலேயே…
தொங்கிக் கொண்டிருந்தது மட்டும் தான் …துக்கம் துக்கமாய் அப்பிக்கொண்டது எனக்கும் என் தம்பிக்கும்.

விடிந்தால் தீபாவளி.

விடிய விடிய பலகார வாசமும்…
வெடிச்சத்தமுமாக அமர்க்களப் படுகின்றன அக்கம் பக்கத்து வீடுகள்.

பக்கத்து வீட்டு ராமுவும் மாதவியும் கை நிறைய வெடிகளை வைத்துக்கொண்டு…வேடிக்கை பார்க்க எங்களைச் சத்தமாய்க் கூவியழைத்தது கேட்டதும்… பட்டென்று கதவை இழுத்துச் சார்த்தி விளக்கை அணைத்து எங்களைத் தன்னோடு இழுத்துப் போர்த்திக்கொண்டாள்…அம்மா.

இருட்டுக்குள் அம்மாவின் விசும்பலொலி கேட்கக் கேட்க…எட்டு வயதில் …முதல் முறையாய் என்னுள் உயிர் அறுந்த அந்த ஓசையை உணர்கிறேன் நான். ஏதும் புரியாது விழித்துக் கொண்டிருக்கிறான்… தம்பி.

நடுச் சாமத்தில்…சன்னலைத் திறந்து பார்த்த அம்மா…புழக்கத்தில் யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு…வாசல் பக்கக் கதவைத் திறந்து வெளியே போய் கதைவைப் பூட்டு போட்டு பூட்டிவிட்டு…
கொல்லைப்புற வழியாக உள்ளே வந்து…அந்தக் கதவையும் உள்ளே பூட்டிக்கொண்டு எங்களை அணைத்த வண்ணம் படுத்துக் கொண்டதையெல்லாம்…நான் அரைக்கண்ணால் தடவிக்கொண்டிருந்ததை அம்மா கவனிக்கவேயில்லை.

ஒருவழியாய்…வெளுத்த கிழக்கில் பூக்கத் தொடங்கியிருந்த விடியலின்
மணம்…பூட்டியிருந்த கதவிடுக்கின் வழியே…தட்டுத் தடுமாறி நுழையப் பார்க்கிறது…உள்ளே. ம்ஹும்…எங்கே…நுழைவது…
அம்மாதான் இறுகப் பூட்டிவிட்டாளே.

வெளியே பட்டாசுச் சத்தம் காதைப் பிளக்கிறது. அந்தக் கருக்கலிலும் வான வேடிக்கையில் தெருவே வெள்ளி பூசிக்கொண்டிருக்கிறது.

உறக்கத்தை வரவு வைத்துக்கொள்ளாத இரவு… பல்லைக் காட்டி நின்ற வெளிச்சத்தைப் பதியம் போட்டுவிட்டு நகர்ந்திருந்தது.



இருபுறமுமாக எங்களை அணைத்துக் கொண்டே கண் திறவாது படுத்திருந்த அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டபோது உப்புக்கரித்தது.

மெதுவாய் எழுந்து…வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்தவள்
வாய் திறந்து பேச்சோ சத்தமோ வரக்கூடாதென்று சொல்லியவாறே…
எங்களைக் குழியலாட்டி…
இருக்கின்ற துணிகளில் கொஞ்சம் நல்லதாய்ப் பட்டதை உடுத்திக் கொள்ளச் செய்தாள்.

அவளும் குளித்து முடித்து…விளக்கேற்றி…எங்களைச் சாமி கும்பிடச் செய்த போது…தன்னையும் மீறி அழுகிறாள் அம்மா. அவள் அழுகை… எங்களுக்கும் அழுகை அழுகையாய் வருகிறது.

இருந்த அரிசியை நீர்க்கக் கஞ்சி காய்ச்சி துளி ஊறுகாயும் உப்பும் சேர்த்துக் கரைத்து…ஆளுக்கு இரண்டு தம்ளர் குடிக்கக் கொடுத்துவிட்டு…மீதமிருந்த கஞ்சியை பத்திரம் செய்து வைக்கிறாள் அடுத்த வேளைக்கு.

சன்னல்களும்…இரு புறத்துக் கதவுகளும் மூடியது மூடியபடியே இருக்கின்றன. சிலேட்டையும் குச்சியையும் தந்து எதையாவது
சத்தமில்லாது செய்யுங்கள் என்று எங்களைப் பணித்துவிட்டு…
ஏதோவொரு புத்தகத்தில் மூழ்குகிறாள் அம்மா.

சிறிது நேரத்தில்…பலகாரத் தட்டுகளோடு படியேறிய பக்கத்து வீட்டு ராமுவும் மாதவியும்…. என்னடாது…வீடு பூட்டியிருக்கு…என்றபடியே
இறங்கிப் போன சத்தத்திற்குக் காது கேட்காதவாறு…
உள்ளிருந்த அம்மா… எங்களின் வாய்களைப் பொத்துகிறாள்.

பலகார வாசனைக்கும்…பட்டாசுக் கூச்சலுக்கும் … வெளியே எட்டிப் பார்க்க முடியாது தவியாய்த் தவிக்கிறான் தம்பி…இப்போது என்ன நடக்கிறது…ஏன் அம்மா கதவைப் பூட்டியிருக்கிறாள்…அப்போ நமக்கு தீபாவளி இல்லையா…புதுத்துணி கிடைக்காதா…பலகாரம் எதுவும் வாய்க்காதாயென்று ஆயிரம் கேள்விகளோடும்…எதையும்..வாய்விட்டுக் கேட்க அச்சப்பட்டுக் கொண்டும்…சுணங்கிப் போய்ப் படுத்தே கிடக்கிறான்.

இருந்த கஞ்சியை மதியப் பொழுதின்
இரைஞ்சுதலுக்குப் படைத்த அம்மா..
கடைசி வரைக்கும்…கதவுக்கு வெளியேயிருந்த தீபாவளியை
எங்கள் கண்களுக்குக் காட்டவேயில்லை.

இரண்டு நாளின் கதவடைப்புக்கு…
தீபாவளிக்குத் தாய் வீட்டுக்குச் சென்று வந்ததாக..கேட்கும் காதுகளுக்குக் கதை சொல்லி முடித்திருந்தாள் அம்மா.

தொடர்ந்த நாட்களில்…தொலைந்தே போன அப்பா…இனி…எங்கள் தினங்களுக்குள் இல்லையென்றான பின்…மீண்டும் மாமாவின் வீடே அடைக்கலமாகிப் போனதெல்லாம் அதன்பிறகான கதைகள்.

அன்றைய தினம் அம்மா ஏன் அப்படிச் செய்தாள் என்று கேள்வி கேட்கின்ற வயதில்…பிற்பாடு கேட்டுத் தெரிந்துகொண்டேன்.
“உடுத்திக் கொள்ள நல்லதாக ஒரு துணியில்லாது…சாப்பிட நல்ல பலகாரம் கிடைக்காது…அக்கம் பக்கத்தாரின் முன்..கூனிக் குறுகி நிற்கும்.. தீபாவளியாக உங்கள் பிஞ்சு மனதில் அன்றைய தினம்
படிந்துவிட வேண்டாமென்றுதான்..
அந்தத் தீபாவளியை மூடிய கதவுக்குள் மூடியே வைத்திருந்தேன்…” என்றாள் அம்மா.

உருண்டோடிய காலங்களில்…
எத்தனையோ தீபாவளிகளை
இனிக்க…இனிக்க..
மணக்க…மணக்க…
சந்தித்தேயிருந்தாலும்…
தீபாவளி என்றாலே…தைத்து முடித்தும் இடுப்புக்கு வந்து சேராது..தையல் கடையின் உத்திரத்தில் தூளியாடிய… அடுக்கடுக்காய் ஃபிரில் கொஞ்சும் அந்த காப்பிக் கலர் பாவாடையும்…பஃப் கை வைத்த அந்த வெந்தயக் கலர் மேல் சட்டையும்….கதவு வரைக்கும் வந்து கைக்குச் சிக்காத அந்த பலகாரத் தட்டும் தான்….இன்றைக்கும் நினைவில் நின்றாடிக் கொல்லுகின்றன.

தேடும் பொழுதில் கிட்டாத எதுவும்… . திகட்டல் பொழுதில் கிடைத்தென்ன லாபம்.

– அன்பூ



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *