சிறுகதை: கிருஷ்ணமூர்த்தி சார் – நா.ஞானபாரதி

சிறுகதை: கிருஷ்ணமூர்த்தி சார் – நா.ஞானபாரதி

போன வாரம் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டதிலிருந்து   கிருஷ்ணமூர்த்தி சார்  தனஞ்ஜெயன் ஆசிரியருக்கு போன் செய்து வாழ்த்து சொல்ல நினைத்திருந்தார். ஆனால் மறந்து விட்டார். தனஞ்செயன்  ஒரு பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். இன்று  மாலை பள்ளி விட்டு புறப்படும்போதுதான்  நினைவு வந்தது. தனஞ்செயன் ஆசிரியருக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தி சாரிடம் வாழ்த்து பெறுவது தஞ்செயன் ஆசிரியருக்கு உண்மையில் பெருமையாகவே இருந்தது.  வாழ்த்து சொல்லிவிட்டு ” உங்க ஸ்கூல்ல 9th 10th  பசங்க மதிய உணவுல்லாம் ஒழுங்கா சாப்புடுறாங்களா சார் ?” என்றார். “எங்க சார்.. இந்த  தறுதலைங்க பாதி பேர் லன்ச் பிரேக்குக்கு போனா  திரும்பி வர மாட்டாங்க. தினம் சோத்தை குப்பைல தான் கொட்ட வேண்டி இருக்கு” என்றார்.  மாணவர்களை கையாள்வதில்  எத்தனையோ சவால்களை   சந்தித்த கிருஷ்ணமூர்த்தி சாருக்கு   இப்போது தலைமை ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும்  உயர் நிலைப்  பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் பத்தாம் வகுப்பு மாணவர்களும் மதிய உணவை சாப்பிட மறுக்கிறார்கள்; அவர்களை எப்படி சமாளிப்பதென்றே புரியவில்லை. தன் பள்ளி  ஆசிரியர்களிடம் இது  பற்றி  விசாரித்ததில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் பத்தாம் வகுப்பு மாணவர்களும் வரிசையில் நின்று சோறு வாங்கி சாப்பிட ‘கூச்சப் படறாங்க சார்’ என்று  தமிழாசிரியர் மகாதேவன் சொன்னார். இதைத்தான் தனஞ்செயனிடம் விசாரிக்க போன் செய்தார்.  போனை துண்டித்தவுடன்,  தன்  ஹீரோ ஹோண்டா  வண்டியை கிளப்பி  வீட்டுக்கு கிளம்பினார். வழக்கம் போல இன்றும் ஆறு மணிக்குத்தான் கிளம்பினார்.  ஆறு  வருடங்களுக்கு முன்பு  செட்டிப் பாளையம் நடுநிலைப்பள்ளில் தான்  தலைமையாசிரியராய் பொறுப்பேற்றதிலிருந்து கிருஷ்ணமூர்த்தி சார் இப்படித்தான்.  மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளிக்கு வருவதற்கு முன்பு   எட்டரை மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து விடுவார். மாலை எல்லா மாணவர்களும் ஆசிரியர்களும் போனபிறகு ஆறு மணிக்கு வீட்டுக்கு கிளம்புவார்.
ஏதோ சிந்தனையிலேயே வீட்டுக்கு கிளம்பினார். கிருஷ்ணமூர்த்தி சாருக்கு  இந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வருவதே  பிடிப்பதில்லை. நல்லாசிரியர் விருது பெற்ற தனது ஆசிரிய நண்பர்களை இவர் அழைத்து  வாழ்த்துவதும், அவர்கள் பதிலுக்கு ” உங்க முன்னாடி நான்லாம் ஒண்ணுமே இல்ல சார். நீங்கல்லாம்  அப்ளை பண்ணா உடனே குடுத்துடுவாங்க சார்…  நீங்கதான் சார் அப்ளை பண்ண மாட்டேன்னு அடம் பிடிக்கறீங்க ! ” என்று சொல்வதும் வருடா வருடம் வாடிக்கையாகிவிட்டது.  தனஞ்செயன் ஆசிரியரும் இதையேதான் சொன்னார். கிருஷ்ணமூர்த்தி சார்  எத்தனையோ முறை சொல்லி விட்டார் தனக்கு நல்லாசிரியர் விருது மேல் எல்லாம் சுத்தமாக விருப்பம் இல்லை. அதுவும் அதை விண்ணப்பித்து பெறுவது எல்லாம் தனக்கு பிடிக்கவும் இல்லை  என. அதையும் மீறி யாராவது வற்புறுத்தினால், “சார் .. நம்ம  பசங்க நம்மள நல்ல வாத்தியாருன்னு சொல்றப்ப வர்ற  சந்தோசம், இந்த அரசாங்கம் நல்லாசிரியர்னு சொல்றதுல வருமா சார் ? … நம்மள நல்ல வாத்தியாருன்னு நம்ம பசங்கதான சார் சொல்லணும் ? ”  என்ற இவரது கேள்வியில் மறுப்பேதும் சொல்ல முடியாமல் போய் விடுவார்கள் இவரது நண்பர்கள்.
கிருஷ்ணமூர்த்தி சார் சொல்வது போல இந்த ‘பசங்க’ அவ்வளவு  எளிதில் ஒரு ஆசிரியரை நல்லாசிரியர் என்றெல்லாம் சொல்லிவிட மாட்டார்கள். பள்ளிக்கூடத்தில்  சில அற்புதத் தருணங்கள் நடக்கும். அந்த அற்புதத் தருணங்களின் மூலம்தான் மாணவர்களின் மொழியை புரிந்து கொள்ள முடியும். சென்ற வருடம்   கிருஷ்ணமூர்த்தி சாருக்கு செட்டிப் பாளையம் பள்ளியில்  அப்படி  ஓர் அற்புதத் தருணம்  நடந்தது. ஒரு நாள் காலை,  ஆறாம் வகுப்பு  S .ஹேமலதா,  கிருஷ்ணமூர்த்தி சார் பள்ளிக்கு வந்து, தன் ஹீரோ ஹோண்டாவை  நிறுத்துவதற்குள் அவரை  மறித்து, அவர் கையை பிடித்து கை குலுக்கி,  நான்கு செம்பருத்திப் பூ, இரண்டு ரோஜாப் பூ கொஞ்சம் பவழமல்லிப் பூவை எடுத்து தென்னங்கீற்றை முக்கோண வடிவில் பிண்ணி, அதற்கு நடுவில் சில இலைகளை வைத்து  அவரை நோக்கி  அந்த பூங்கொத்தை நீட்டி, “ஹாப்பி ப்ரண்ட்ஷிப் டே சார் … ” என்றாள்.  கிருஷ்ணமூர்த்தி சார்,  ” அட .. கழுத.. என்ன இது ? ப்ரெண்ட்ஷிப் டே ல்லாம் கொண்டாடற ? நான்தான் உனக்கு ப்ரெண்டா ?” என்றார் அந்த பூங்கொத்தை வாங்கியபடி. “ஆமாம் சார்.. நேத்து எல்லா புள்ளைங்களும் மாத்தி மாத்தி ப்ரெண்ட்ஷிப் டே சொல்லிக்கிருச்சுங்க சார் .. எனக்கு உங்களுக்குத்தான் ப்ரெண்ட்ஷிப் டே சொல்லணும்னு தோணுச்சு சார் ” என்றாள் S .ஹேமலதா. சில நொடிகள் உறைந்து போய் நின்றார் கிருஷ்ணமூர்த்தி சார். “ஏன் சார் .. நான் உங்களுக்கு பிரென்ட் இல்லையா சார் ?” என்றவளிடம், “ஆமாம் டா … நீ என் பிரெண்ட்தாண்டா .. ‘ என்றார். அவருக்குப் பிடித்த நல்லாசிரியர் விருது இதுதான்.
மானுட விடுதலை...: சமச்சீர் - கல்வி ...
ஆலங்குப்பம் உயர்நிலைப் பள்ளிக்கு இவர் சேர்ந்த முதல் நாளே மற்ற ஆசிரியர்கள் இவருக்கு கொடுத்த அறிவுரை எட்டாம் வகுப்பு ‘நாகராஜனுக்கு டீ.சி. கொடுத்து’ அந்தப் பள்ளியில் இருந்து அவனை அனுப்ப வேண்டும் என்பதுதான். நாகராஜன்தான் அந்தப் பள்ளியிலேயே மூத்தவன். இரண்டு முறை பள்ளிப் படிப்பை நிறுத்தி மீண்டும் அதே வகுப்பில்  வந்து பள்ளிக்கு சேர்ந்தவன். நல்ல உயரம்.  அரும்பு மீசையுடன் பத்தாம் வகுப்பு மாணவர்களை விட  பெரியவனாய்,   ஒரு பனிரெண்டாம் வகுப்பு மாணவனைப் போல இருப்பான் நாகராஜன்.  ஆசிரியர் நாற்காலியை உடைக்கிறான், வகுப்பறை பெஞ்சுகளை உடைக்கிறான்,  மற்ற மாணவர்களை அடிக்கிறான், நாகராஜனைப் பார்த்தாலே மற்ற மாணவர்கள் பயப் படுகிறார்கள் என்று இவன் மீது ஏகப்பட்ட குற்றச் சாட்டு. “ரெண்டு வருஷம் படிப்பை நிறுத்தி மறுபடியும் படிக்க வர்ற பையன .. நீ ல்லாம் படிக்க லாயக்கில்லடா  னு திரும்ப வீட்டுக்கு அனுப்பறது நல்லா இல்ல சார். கொஞ்ச நாள் பொறுங்க, பாப்போம்” என்று சொல்லிவிட்டு நாகராஜனை பள்ளியில் தொடர அனுமதித்தார். நாகராஜனை ஒரு நாள்  அழைத்து தினமும் காலையும்    மாலையும்  தன்னைப் பார்த்து விட்டு போகும்படி கூறினார் கிருஷ்ணமூர்த்தி சார். கிருஷ்ணமூர்த்தி சார் இந்தப் பள்ளியில்  சேர்ந்த  ஒரு மாதமாக நாகராஜனும் இதை தொடர்ந்து செய்து வருகிறான்.காலை ‘குட் மார்னிங் சார்’ என்பான் , மாலை ‘தேங்க்யூ சார்’ என்பான்.
செட்டிப் பாளையம் பள்ளியில் பெரிய  விளையாட்டு மைதானம்  இல்லை.  இந்தப் பள்ளியில்  ஒரு ஏக்கரில்  மிகப்பெரிய மைதானமும் அகில் ஒரு பெரிய அரச மரமும்   உள்ளது.  ஒரு நாள் காலைக் கூட்டத்தில் அந்த மைதானத்தில் பள்ளித் தோட்டம் அமைத்து அதை  மாணவர்களே  பராமரிக்க வேண்டும் என்றும் அதற்கான மாணவர் குழு அமைக்கப் படும் என்றும் தெரிவித்தார். மரங்களுக்கு வேலி  அமைக்க, காலையும் மாலையும் தண்ணீர் ஊற்ற, மைதானத்தில் இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய, என்று வெவ்வேறு மாணவர் குழு அமைக்கப் பட்டது.எந்தெந்த மாணவர்கள்  எந்தெந்த குழுக்களில் என்பது சுற்றறிக்கையாக தயாரிக்கப் பட்டு அறிவிப்பு பலகையில்  ஓட்டப் பட்டிருந்தது.  சுற்றறிக்கையை அறிவிப்பு பலகையில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களிடம் போய் “என்ன .. பள்ளி தோட்டம் ஆரம்பிக்கலாமா ? ”  என்றார் கிருஷ்ணமூர்த்தி. “கண்டிப்பா செய்லாம் சார் ” என்று ஒற்றைக் குரலில் ஆமோதித்தனர். என்னென்ன மரங்கள் நட  வேண்டும்  என்று மாணவர்களுடன் பேச்சு நடந்தது.  வேப்ப மரம், மாமரம், சப்போட்டா மரம், முருங்கை,  அரசம் போன்ற மரங்கள் மட்டும் இல்லாமல், தக்காளி, பச்சை மிளகாய், ஓமவள்ளி, துளசி, கத்தாழை, செம்பருத்தி  போன்றவைகளும்  வளர்க்க மாணவர்களிடமிருந்து யோசனைகள்  வந்தன. ஏழாம் வகுப்பு தனபாக்கியம் “சார்.. மைதானம் காம்பவுண்ட் வால் சுத்தி மூங்கில் வெக்கலாம் சார்… நல்லா உயரமா வந்துச்சுன்னா உள்ள வெய்யில் வராது சார் ” என்றாள். அருகிலிருந்த எட்டாம் வகுப்பு கனகராஜ் “ஆமாம் சார் .. மூங்கில் வெக்கலாம் சார். கிரிக்கெட் விளையாடினா பந்து வெளிய போகாது சார் ” என்றான். வகுப்பு நேரங்களை விட   நான்கரை மணிக்கு மேல்  இப்படி மாணவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது கிருஷ்ணமூர்த்தி சாருக்கு பிடிக்கும். தினமும் மாணவர்கள் படை சூழ ஏதாவது பேசிக் கொண்டிருப்பார். ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின், ஸ்டீபன் ஹாக்கின்ஸ், அந்த ஊர் பெயர் , மாணவர்களின் பெயர் காரணம், அன்றைய தினம்,  முக்கிய நிகழ்வுகள்   என்று  பல்வேறு விஷயங்கள் பற்றி  செட்டிப் பாளையம் பள்ளியிலும்   மாணவர்களிடம்  இப்படித்தான்  பேசிக் கொண்டிருப்பார். கனகராஜுக்கு அருகில் நின்று  கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு முருகவேலைப் பார்த்து ” சரி…. நீங்கல்லாம் ஏன் மதியம் ஸ்கூல்ல சாப்பிடாம வெளிய போறீங்க ? .. எல்லாம் பேசி வெச்சிட்டு பண்றீங்களாடா ?” என்று கேட்டார். கல்லுளிமங்கனைப் போல் எதுவும் பேசாமல் அவரின் கேள்வியைக் கடந்து விட்டான் அவன். முருகவேள் வகுப்பிலேயே படிக்கும் பரிமளா  ” சார் .. பாய்ஸ் மட்டும்தான் சார் இங்க சாப்பிட மாட்டாங்க. 9th 10th  கேர்ள்ஸ் ஸ்கூல்லதான் சார் சாப்புடுவோம்” என்றாள்.
 பள்ளித்தோட்டம் தொடங்குவதற்காக,  ஒரு நாள்,   சுத்தம் செய்யும் குழு,  மைதானத்தின் புதர்களை அகற்றியது.  அந்தப் புதரில் இருந்து திடீரென சர சரவென ஒரு நீளமான  பாம்பு மைதானத்தின் குறுக்கில் ஓடி, பள்ளிக் கட்டிடத்தை நோக்கி ஓட, அங்கிருந்த மாணவர்கள் ” அய்யோ பாம்பு .. பாம்பு… ” என அலறிக் கொண்டு ஓடினார்கள். இந்த  மாணவர்களின் சத்தத்தைக் கேட்டு மற்ற வகுப்பு  மாணவர்களும் வகுப்பிலிருந்து வெளியே வந்து விட்டனர். பாம்பு சர சரவென ஓடி இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கும் இடத்தில் இருக்கும் பூச மரத்தருகில் வந்து விட்டது. ஆசிரியர்கள் அந்த இடத்திற்கு வருவதற்குள் அந்த பாம்பு ஒரு இருசக்கர வாகனத்தின் இன்ஜின் பகுதியில் பதுங்கிக் கொண்டது. கிருஷ்ணமூர்த்தி சார் மாணவர்களை விலக்கிக் கொண்டிருந்தார். பீ.டி ஆசிரியர் லட்சுமணன்  ஒரு  கம்பை வைத்து வண்டியின் அருகே தட்டிக்  கொண்டிருந்தார். தமிழாசிரியர் மகாதேவன்  ‘சார் நெருப்பு வெச்சா வெளிய வந்துடும்.. ஆனா  பெட்ரோல் டேங்க் பக்கத்துல இருக்கு சார் அந்த பாம்பு’  என்று கிருஷ்ணமூர்த்தி சாரிடம் மெல்லிய குரலில் கூறினார். அப்பொழுதுதான் நாகராஜன் அந்தப் பக்கம் வந்தான். கிருஷ்ணமூர்த்தி சாரைப் பார்த்து ‘எல்லாரையும் கொஞ்சம் ஒதுங்க சொல்லுங்க சார் ‘ என்றான். மெதுவாக வண்டியின் அருகே சென்று பாம்பின் வாலைப்  பிடித்து சட்டென பாம்பை இழுத்து தரையில் அடித்தான். பாம்பு அப்படியே சுருண்டு விட்டது. இன்னும் இரண்டு முறை பாம்பின் வாலை பிடித்து தரையில் அடித்தான். பாம்பு செத்தே விட்டது. கூட்டம் விலகியது. அனைவரும் வகுப்புக்கு சென்று விட்டார்கள்.
மறுநாள் ‘குட்மார்னிங்’ சொல்ல வந்த நாகராஜனின் குரல் வழக்கத்தை விட  சற்று ஓங்கி ஒலித்தது. “நாகராஜ் .. உள்ள வா ” என்று தன் அறைக்கு அழைத்தார் கிருஷ்ணமூர்த்தி சார். கிருஷ்ணமூர்த்தி சார் எதிரில் காக்கி உடையுடன் ஒரு வனத்துறை அதிகாரி அமர்ந்திருந்தார். “சார் .. நான் சொன்னேன் இல்ல. நேத்து அந்த பாம்ப கையால புடிச்சான்னு. இந்தப் பையன்தான்.” என்றார். அந்த வன அதிகாரி நாகராஜனுக்கு கை கொடுத்து ‘பறவால்லயே தைரியமான பையன் போல.. இருந்தாலும் ஜாக்கிரதையா இருக்கணும் பா’. என்றார். ‘சார். . அது தண்ணி பாம்பு சார். ஒன்னும் செய்யாது என்றான்’.
 “நாகராஜ் .. சார் பேரு இளங்கோவன். நம்ம வனத்துறை ஆபிஸ் இருக்குல்ல.. அதுல வன  அதிகாரி . அடுத்த வாரம் நம்ம பள்ளித் தோட்டம் ஆரம்பிக்கறோம் இல்ல.. அதுக்கு ஒரு சின்ன தொடக்க விழா ஏற்பாடு செஞ்சிருக்கு. சார்தான் பேசப் போறாரு. அடுத்த வாரம் புதன் கிழமை… சரி . க்ளாசுக்கு போ”  என்றார். துறை சார்ந்த சிறப்பு விருந்தினர்களை அழைத்து மாணவர்களிடம் பேச வைப்பது, சுற்றுச் சூழல் தினம், மகளிர் தினம், குழந்தைகள் தினம், இலக்கிய தினம்  என அவ்வப்போது  விழாக்கள் நடத்தி மாணவர்களை பேச வைப்பது, என்று தன் பள்ளியை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பார் கிருஷ்ணமூர்த்தி.  செட்டிப் பாளையம் பள்ளியில் இது போன்ற விழாக்களால்,  பேச்சுக்களால்  மாணவர்களிடம் ஏற்பட்ட சிறந்த மாற்றங்களை உணர்ந்தவர் அதை இங்கேயும் தொடர்கிறார். தலைமையாசிரியர் பொறுப்பை விட வகுப்புகளில் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதே கிருஷ்ணமூர்த்தி சாருக்கு பிடிக்கும். ஆனால்  வகுப்பு ஆசிரியராய் இருப்பதை விட தலைமையாசிரியராய் இருப்பதில் சில கூடுதல்  வாய்ப்புகள் கிடைப்பதால்,  இந்த மாதிரி விழாக்கள் கூட்டங்கள் நடத்தி ஒட்டு மொத்த பள்ளி மாணவர்களுடன் உரையாடல் நடத்துவதும் அவருக்கு பிடித்திருந்தது.  செட்டிப்பாளையம் பள்ளியில் போன வருடம் நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு விஞ்ஞானியைப் பற்றி மாணவர்களை பேச சொல்லி மேடம் க்யூரி, ரைட் சகோதரர்கள், நியூட்டன், சி.வி.ராமன், கல்பனாத் சாவ்லா ஆகியோர் பற்றியெல்லாம் மாணவர்கள் பேசியது அவருக்கு இன்றும் நினைவிருக்கிறது. அங்கு நடந்த மகளிர் தின விழாவில் பேசிய D .பாக்கியலட்சுமி தன் உரையை முடிக்கும் போது “விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், கார்த்திகை,என எல்லா விழாக்களும் பெண்களை அடுக்களையில் வைத்தே சோர்வடைய வைக்கிறது. இந்த மகளிர் தினத்திலாவது பெண்களை அடுப்பின் சூட்டிலிருந்து மீட்டு பெண்களை வெளியே கொண்டு வர யோசிப்போம். நன்றி வணக்கம்.” என்று முடித்தவுடன் மாணவர்களின் கை தட்டல் இன்னும் அவர் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
GHS, NAGAMANGALAM: 2018
கோப்பு படம்
ஒரு நாள் ஆசிரியர் கூட்டம் நடத்தி, மாலை ஏழு மணி வரை  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த ஆலோசித்து அதற்கான பொறுப்பாசிரியர்களை நியமித்து,  தானும் எல்லா நாட்களும் ஏழு மணி வரை பள்ளியில் இருப்பதாக உறுதி படுத்தினார். அதே கூட்டத்தில் மாணவர்கள் மதிய உணவை வீண் செய்வதையும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் பத்தாம் வகுப்பு மாணவர்களும் மதிய உணவை சாப்பிட மறுப்பதை பற்றியும் பேசப் பட்டது. பீ.டி சார் லட்சுமணன் ‘சார் டீன் ஏஜ் பசங்க வரிசைல நின்னு சாப்பாடு வாங்க கூச்சப்ப படறாங்க சார். அந்த 10th  செந்திலும் ஜெயப்பிரகாஷும் தான் சார் இத ஆரம்பிச்சானுங்க. .  ஜெயில் சாப்பாடு. ஜெயில் சாப்பாடு னு மத்த பசங்களையும் கெடுத்துட்டாங்க சார்’ என்றார். உஷாராணி டீச்சர்  “சார் .. மத்த பசங்களும் சும்மா இல்ல சார்.. அவ்ளோ காய் கறிய குப்பைல கொட்றாங்க… 9th 10th பசங்க சாப்புடவே மாட்டாங்க.. மத்தவங்க தட்டுல வாங்கி குப்பைல கொட்றாங்க .. அவ்ளோதான் சார் ”  என்றவுடன் கூட்டத்த்தில்  லேசான சிரிப்பலை கேட்டது. “சரி… 9th 10th பசங்க கிட்ட நான்  பேசறேன். மத்த க்ளாஸ் பசங்க சாப்பாடு வீணாக்காம சாப்புட நாம ஏதாவது பண்ணனும்….. ஒரு மூணு டீச்சர்ஸ் மட்டும் லன்ச் டைம்ல கொஞ்சம் லேட்டா சாப்புடுங்க. . கிரவுண்ட் ப்ளோர் வராந்தாவில் ஒருத்தர் . பர்ஸ்ட் ப்ளோர் வராந்தாவில் ஒருத்தர் . சாப்பாடு பரிமார்ற இடத்துல ஒருத்தர்.ஒன்னும் இல்ல. சும்மா. நில்லுங்க .. போதும் ..   ஒரு பத்து நிமிஷம். இல்ல கால் மணி நேரம். ட்யூட்டி பாக்க முடியுமா ? ”  என்றார் கிருஷ்ணமூர்த்தி. ” அது ஒன்னும் பிரச்சினை இல்லை சார். நான் பாத்துக்கறேன் சார்” என்றார் கணக்கு ஆசிரியர் பக்தவச்சலம்.  உஷாராணி டீச்சரும் “ஓகே சார் ‘ என்றார். பீ.டி லட்சுமணன்  ‘சார் . நான் டெய்லி அதான் செய்றேன்.. நான் பாத்துக்கறேன்  சார்’ என்கிறார்.   ராஜகோபாலன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பக்கிரிசாமியும் வாய் திறக்க வில்லை. கொஞ்ச நேரம்  அமைதிக்குப் பிறகு  சித்ரா டீச்சர் ‘ நானும்  பாத்துக்கறேன் சார்’ என்றார். இரண்டு ஆசிரியர்கள் கூட்டத்திற்கே வரவில்லை.
 மாணவர்களை சமாளிப்பதை விட  அரசு பள்ளியில்   ஆசிரியர்களை சமாளிப்பது தலைமையாசிரியர்களுக்கு  சில சமயங்களில் மிகுந்த சவாலாகி விடும். கிரிஷ்ணமுர்த்தி,  ஆசிரியர்களை நான்கு வகையாக பிரித்து வைத்துள்ளார். முதல் வகை ஆசிரியர்கள் தங்கள் சுய உந்துதல் மூலம்  வகுப்பறையில் பாடங்களை புதிய வழியிலும் பாடங்கள் தாண்டிய விஷயங்களை தங்கள் நவீன  படைப்பாற்றல் கொண்டும் மாணவர்களிடம் கடத்துவார்கள். இரண்டாம் வகை ஆசிரியர்கள் பாடப் புத்தகத்தில் என்ன இருக்கிறதோ அதை  மட்டும்  மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். இந்த இரண்டு வகை ஆசிரியர்களைப் பற்றி கிருஷ்ணமூர்த்திக்கு என்றுமே கவலை இல்லை. மூன்றாம் வகை ஆசிரியர்கள் தலைமையாசிரியர் பள்ளியில்  இருந்தால் வகுப்பறையில் இருப்பார்கள். கொஞ்சம் சுமாராக படைப்பு புத்தகத்தில் இருப்பதை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பார்கள். நான்காம் வகை ஆசிரியர்கள் தலைமையாசிரியர் இருந்தாலும் வகுப்பறைக்கு செல்ல ஆர்வம் காட்டாமல் குறைந்த அளவு கடைமை உணர்ச்சியுமின்றி இருப்பார்கள். இந்த இரண்டு வகை ஆசிரியர்கள் மேல்தான் கிருஷ்ணமூர்த்தி எப்போதும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
மறுநாள் காலைக் கூட்டத்தில் கிருஷ்ணமூர்த்தி சார் பேசினார்.  மாணவர்கள் மத்திய உணவை வீண் செய்வதாகவும் உணவை வீண் செய்வது எத்தனையோ பேருடைய உழைப்பை ஏளனம் செய்வது போன்றதாகவும் , அதுமட்டுமில்லாமல் அவரவர் உடலுக்கு தேவையான சத்தும் கிடைக்காமல் போவதாகவும் சில நேரம் பேசி விட்டு, அன்றிலிருந்து இரண்டு குப்பைத் தொட்டி  மைதானத்தில் வைக்கப்படும் என்றும் சொன்னார். “பாய்ஸ்க்கு ஒன்னு கேர்ல்ஸ்க்கு ஒன்னு .. கண்ட இடத்துல சாப்பாட்ட கொட்டாம, இந்த குப்பை தொட்டிலதான் கொட்டணும். பாய்ஸா . கேர்ல்சா .. யார் கொஞ்சமா வீண் பண்றீங்கன்னு பாப்போம்”  என்றார். முதல் வரிசையில் நின்று  கொண்டிருந்த  ஏழாம் வகுப்பு பிரியதர்ஷினி “பாய்ஸ் தான் சார் நிறைய குப்பைல கொட்டுவாங்க ‘ என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள். அது கிருஷ்ணமூர்த்தி சாரின் காதில் பட “பாப்போமே .. யாருன்னு’ என்று சிரித்தார்.
இன்று காலை நாகராஜ்  ‘குட்மார்னிங்’ சொல்ல வந்த போது  ஆறாம் வகுப்பு S.பாலாஜியும் எட்டாம்  வகுப்பு மணிமேகலையும் அவனுக்கு முன் வந்து கிருஷ்ணமூர்த்தி சாருக்கு குட் மார்னிங் சொல்லி இருந்தார்கள். அவர்கள் இருவருக்கும் தன் மேசை டிராயரிலிருந்து ஆளுக்கு ஒரு மாத்திரை எடுத்துக் கொடுத்தார் கிருஷ்ணமூர்த்தி சார். போன வாரம் பள்ளியில்  ஏற்பாடு செய்த  மருத்துவ  பரிசோதனையில் இவர்கள் இருவருக்கும் வெண்தேமல் இருப்பதை பார்த்த மருத்துவர், இருவரும் தவறாமல் தினமும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தியதால்,  பாலாஜிக்கும்  மணிமேகமலைக்கும் இந்த ஏற்பாடு.
இரண்டு குப்பைத்  தொட்டிகளுடன் மதிய உணவுக்கான ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. பாய்ஸ் வரிசையில் நான்காம் வகுப்பு சதீஷ்குமாருக்கும் பத்மநாபனுக்கும் நடுவில் கிருஷ்ணமூர்த்தி சாரும் கையில் தட்டுடன் நின்று கொண்டிருந்தார்.  எதிர் திசையில் கேர்ள்ஸ் வரிசையில் நின்று கொண்டிருந்த   ஏழாம் வகுப்பு  சரண்யா ‘சார் . இன்னிக்கி நீங்க சாப்பாடு கொண்டு வரலையா சார்’ என்றாள் சத்தமாக. ” இல்ல. இனிமே உங்களோடதான் சாப்பிட போறேன்….. …ஓகே வா ” என்றார் கிருஷ்ணமூர்த்தி சார். “நிஜமாவா சார் “… என்று கேட்டு அதை மறுபடியும் உறுதி படுத்திக்க கொண்டாள் சரண்யா.  மதிய வேளையில்  வழக்கத்தை விட இன்று கொஞ்சம் கூச்சலும் மாணவர்களின் பேச்சும் குறைவாக இருந்தது. கிருஷ்ண மூர்த்தி சாரின் தட்டில் கொஞ்சம் சோறும் குழம்பும்  பார்வதி அக்கா பரிமாற, பார்வதி அக்காவுக்கு பக்கத்தில் நின்றிருந்த எட்டாம் வகுப்பு புவனேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி சாரின் தட்டில் ஒரு முட்டையும் கோஸ் பொறியலும்  பரிமாறினாள்.  சுவற்றின் நிழலில் நிறு கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி சாரிடம் வந்து ‘சார் … குழம்புல உப்பே இல்ல சார்’ என்றாள் சரண்யா. ” ஆமாம் .. கொஞ்சம் உப்பு இல்லதான். ..  நான் கிச்சன்ல சொல்றேன். நாளைக்கி சரி பண்ண சொல்லிடலாம்” .. என்று சொல்லி விட்டு “நம்ம வீட்ல நம்ம அம்மா  சில நாள் இப்படி உப்பு இல்லாம சமைச்சா சாப்பிட்டு போவோம் இல்ல .. அத மாதிரி நினைச்சு சாப்ட்ருங்க’ என்றார்.
மாணவர்களுக்கு முடிவெட்டிவிடும் ...
கோப்பு படம்
ஒரு நாள்  மதிய இடைவெளி முடிந்து வகுப்பு தொடங்கும் சிறிது நேரத்திற்கு முன், முதல் தளத்தில்  திடீரென்று சில மாணவர்கள் ஐந்தாம்  வகுப்பு  “அ” பிரிவை நோக்கி ஓடினார்கள். மதிய உணவு ட்யூட்டி முடித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த  உஷாராணி டீச்சரும்  பதற்றத்துடன் ஓடினார். அந்த வகுப்பறையில் வைக்கப் பட்டிருந்த  ஒரு இரும்பு அலமாரியில் விளையாட்டாக இரண்டு மாணவிகள் ஒளிந்து கொள்ள வேறு ஒரு மாணவி அந்த அலமாரியைப் பூட்டி இன்னும் கொஞ்சம் விளையாடி இருக்கிறாள். பூட்டிய சாவியை தூக்கி எரிந்து  மற்ற மாணவிகளும் விளையாட சாவி தொலைந்து விட்டது. உள்ளே இருக்கும் மாணவிகள் இரும்புக்கு கதவை தட்டி தட்டி பயத்தில் அழத்  தொடங்கி  விட்டார்கள். பீ.டி சார் லட்சுமணன், உஷாராணி, கிருஷ்ணமூர்த்தி சார் எல்லாம் வகுப்பறைக்கு வந்து விட்டனர். உஷா ராணி டீச்சர் “லாவண்யா …. சுந்தரவள்ளி .. ரெண்டு பேரும் பயப்படாம இருங்க … கதவை திறந்துடலாம் .. ” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்.  ” சார்..  வெல்டிங் மெஷின்  வெச்சி கதவை திறந்துடலாம் .. ஆனா  உள்ள சூடு தாங்க மாட்டாங்க சார்” என்று கிருஷ்ணமூர்த்தியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகராஜனிடம் கிருஷ்ணமூர்த்தி சார் பிரச்னையை சொல்ல, வேகமாக ஓடிய நாகராஜன்   பக்கத்து க்ளாசில் உடைந்து கிடந்த ஒரு மர  நாற்காலியின் காலை எடுத்துக் கொண்டு வந்தான். அந்த இரும்பு அலமாரியின் கைப் பிடியில் கீழ் நோக்கி அடித்தான். அந்த கட்டையை கீழே போட்டு விட்டு சட்டென கதவைத் திறந்து லாவண்யாவையும் சுந்தரவள்ளியையும் ஒரே நேரத்தில் தூக்கி வகுப்புக்கு வெளியே கொண்டு வந்து அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து .. ” பாப்பா .. ஒன்னும் இல்ல….  பயப்படாத’ என்று கூறிவிட்டு அவன் நடையைத் தொடர்ந்தான்.
அன்று மாலை ‘தேங்க் யூ’ சொல்லிவிட்டு கிளம்பவிருந்த நாகராஜனை கிருஷ்ணமூர்த்தி சார் உள்ளே அழைத்து “நாகராஜன்… நீ ரொம்ப நல்ல பையனா இருக்கியேடா… ” என்று  கொஞ்ச நேரம் அவனிடம்  பேசிக் கொண்டிருந்தார். “உங்க அப்பா என்ன பன்றார் .. “… ” கொளுத்து வேலை சார் “…….. “அம்மா ?” …
 ” அம்மா இல்ல சார் … நான் சின்ன வயசாருக்குள்ளயே  இறந்துட்டாங்க”… “வேற யார் இருக்கா உங்க வீட்ல  ..”  …. ” அண்ணன் ஒருத்தன் இருக்கான் சார் .. ஆனா அவன் எப்பயாவதுதான் வீட்டுக்கு வருவான் … ” “….ம்ம்ம்ம்ம் … … … ” …………….. ” … “சரி … நான் ஒன்னு சொல்றேன் செய்யறியா … ? ”  ……. ” சொல்லுங்க சார்” …. பள்ளித் தோட்டம் தொடங்க வாங்கி வைத்து மீதமிருந்த இரண்டு மாமரக் கன்றை எடுத்து அவன் கையில் கொடுத்தார். “ஸ்கூல்ல ஒன்னு .. உங்க வீட்ல ஒன்னு … இந்த ரெண்டு செடியையும் நட்டு அதுக்கு தண்ணீ ஊத்தி பெருசா வளர வெக்கறது உன் பொறுப்பு”.  ஒரு  ரூல்டுக்கு நோட்டை குடுத்து “இந்த செடிக்கு தினம் எப்ப தண்ணீ ஊத்தன .. .. எத்தனை இலைகள் புதுசா வருது .. அது எவ்ளோ வளருதுனு ஒரு ஸ்கேல் வெச்சு அளந்து தினம் என் கிட்ட காட்டி கையெழுத்து வாங்கணும். செய்வியா  ? ” என்றார். “உனக்கு எப்ப கோவம் வந்தாலும் நம்ம இந்த  செடியை வளக்கற பொறுப்பு இருக்கு. நம்ம தேவை இல்லாம யார் மேலயும் கோவ படக்கூடாதுன்னு நினைச்சுக்க .. அதையும் மீறி கோவம் வந்தா .. உனக்கு என்ன புடிக்கும் இல்ல ? .. ”  ” புடிக்கும் சார் ” … ” என்ன நினைச்சுக்க.. யாரையும் அடிக்க கூடாது. உன் கவனம் முழுசா இந்த செடி மேலதான் இருக்கணும் . செய்வியா ?” என்று மீண்டும் கேட்டார்.     “செய்றேன் சார்” என்று சொல்லிவிட்டு அந்த மரக்  கன்றுகளுடன் சென்றான் நாகராஜன்.
மைதானத்தில் வைக்கப்பட்ட குப்பைத் தொட்டி தினமும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அதில் பெரும்பாலும் காய்கறிகள் தான் கொட்டப்  பட்டிருந்தது.  ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் பத்தாம் வகுப்பு மாணவர்களும் இன்னும் அந்த ‘ஜெயில்’ சாப்பாட்டை சாப்பிட மறுத்து மதிய இடைவேளைக்கு வெளியே சென்று தாமதமாகவும், சில நேரங்களில் மதிய வகுப்புகளுக்கு வராமலும் இருந்து கொண்டிருந்தனர்.  ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்புக்கு தனியே ஒதுக்கப் பட்டிருந்த சிறுநீர் கழிப்பக்கம் முற்றிலும் பயன்பாடற்று, உடைந்த பெஞ்சுகளும் மேசைகளும் அங்கு குவிக்கப் பட்டிருந்தன. மணி அடித்ததும் சிறுநீர் கழிப்பதை சாக்காக வைத்து அவர்கள் தினமும் வெளியே சென்று சிறுநீர் கழிக்க போவதால், பள்ளியின் இரும்பு கதவை  மத்திய வேளையில் பூட்ட வாய்ப்பில்லாத சூழல் இருந்தது. ஒரு சில தினங்களில் அதை சரி  செய்து சிறுநீர் கழிப்பக்கம்  பயன் படும் முறையில் மாற்றப் பட்டது.
 பள்ளித்தோட்டத்திற்கு வைத்த செடிகள் மெதுவாக வளர ஆரம்பித்தது. காலை குழு, மாலை குழு , செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற செடிகளுக்கு வேலி  அமைக்கும் குழு எல்லா மரக் கன்றுகளுக்கும் முறையான வெளி அமைத்துக் கொண்டிருந்தனர். மைதானம் சுத்தம் செய்யும் குழுவில் இருந்த ஏழாம் வகுப்பு  செந்தில்நாதனும் எட்டாம் வகுப்பு பிரகாஷும்  மைதானத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். தினமும் சோறும்  காய்கறிகளும்  அடங்கிய குப்பைத் தொட்டி யை காலி செய்து அதை வெளியே உள்ள மரங்களுக்கு அருகில் கொட்டி வந்தனர்.  அன்று மாலை கிருஷ்ணமூர்த்தி சாரிடம் பேசிக் கொண்டிருந்த பிரகாஷ் “சார் .. டெய்லி அவ்ளோ காய்கறியை கொண்டு போய் குப்பைல கொட்ரோம் சார் … ” …. ” அப்படியா  என்ன பண்ணலாம் சொல்லு …” …. “தெர்லயே சார்”.. ” சரி .. என்னென்ன காய்கறில்லாம் பசங்க கொட்றாங்க ?”  ” எல்லாமே சார் …சோறு ..  உருளை கிழங்கு … கோஸ் பொறியல் , தக்காளி , வெங்காயம் , கறிவேப்பில்லை, பச்சை மிளகாய், பீட்ரூட், சாம்பார்ல இருக்க பூசணி . எல்லாமே குப்பைல இருக்கு சார் ” …. ” சரி .. என்ன பண்ணலாம் ?” ” இப்படிலாம் காய்கறிய கொட்ட  கூடாதுன்னு நாளைக்கி அசெம்பிளில சொல்லுங்க சார் .. ” சிரித்துக் கொண்டே ” சரி . சொல்றேன் .” என்றார் கிருஷ்ணமூர்த்தி சார்.
மறுநாள் காலை கூட்டத்தில் பிரகாஷ் சொன்னதை போல ” எல்லாரும் நிறைய காய்கறிகளை குப்பைல கொட்டறீங்களாம்.. பிரகாஷும் செந்திலும் தான் அதை சுத்தம் செய்றாங்க… அவங்களுக்கு கஷ்டமா இருக்காதா ?  இனிமே யாரும் காய்கறியை கொட்ட கூடாது. பச்சை மிளகாய் தவிர வேற எதுவும் குப்பைல போட கூடாது. யார் அப்படி கொட்றாங்களோ அவங்கள என் ரூமுக்கு அழைச்சிட்டு வரணும். அதுக்கு ஆறு மாணவ தன்னார்வலர்கள் வேணும் கீழ ரெண்டு பேர் மேல ரெண்டு பேர் .. குப்பைத் தொட்டி இருக்கற இடத்துல ரெண்டு பேர் ..அவங்க லீவு போட்டா அந்த சமயத்துக்கு இன்னும் ரெண்டு பேர். யாருக்கு விருப்பமோ என்ன வந்து பாருங்க . அவங்க பேர  நோட்டீஸ் போர்டுல போட்ரலாம்” என்றார்.
அந்த வெள்ளிக்கிழமை  கிருஷ்ணமூர்த்தி சாரை  பார்க்க வந்த நாகராஜன் கையில் இருந்த நோட்டை அவரிடம் காட்டினான். மற்ற இருவருக்கும் மாத்திரைகள் கொடுத்து விட்டு நாகராஜனைப் பார்த்தார்.  ” சார் புதுசா ரெண்டு இலை வந்திருக்கு சார் .. மூணு சென்டி மீட்டர் வளந்திருக்கு சார்” என்றான்.  அந்த நோட்டில் தேதி வாரியாக இருந்த அட்டவணையில் கிருஷ்ணமூர்த்தி “சிறப்பான பணி !  வாழ்த்துக்கள்  ! ” என்று கையொப்பமிட்டார். அன்று மதியம் மாணவத்  தன்னார்வலர்களுடன் மதிய உணவு தொடங்கியது. ஆனால்  கிருஷ்ணமூர்த்தி சார் வரிசையில் இல்லை.  பத்தாம் வகுப்பு பிரேம்குமாரை தன் அறைக்கு வர சொல்லி இருந்தார். அவன் வகுப்பில் உடன் படிக்கும் சாந்திக்கு காதல் கடிதம் கொடுத்து, அதை சாந்தி சித்ரா டீச்சரிடம் சொல்லி, சித்ரா டீச்சர் கிருஷ்ணமூர்த்தி சாரிடம் சொல்லி இருக்கிறார். “உனக்கு சாந்தியை புடிக்குமா ? ” .. ” ஆமாம் சார் ” … ” ஏன் புடிக்கும் ? ” .. ” நல்லா படிப்பா சார் .. அழகா இருப்பா சார் .. யாருக்கு எது தெரிலைன்னாலும் க்ளாஸ்ல சொல்லி தருவா சார் ” .. ” நீயும் நல்லா படிக்கலாமே .. நீயும் அழகா இருக்கலாமே . சாந்தி மாதிரி .. ”  “………………………..…….” ” சரி .. சாந்திக்கு இன்னொரு லெட்டர் எழுது.. ஆனா “காதல்” ங்கற வார்த்தை மட்டும் வர கூடாது. அன்புள்ள தோழிக்கு … உன் கிட்ட இதெல்லாம் எனக்கு புடிச்சிருக்கு  னு ஒரு லெட்டர் எழுதி என் கிட்ட குடு. அத நானே சாந்தி கிட்ட கொடுக்கறேன்” என்றார்.. பிரேம்குமார் அமைதியாக நின்று கொண்டிருந்தான். ‘ “ஒருத்தங்கள நமக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னா .. அவங்கள மாதிரி நம்ம இருக்கனும்.. அதான் அவங்கள புடிச்சதுக்கு அடையாளம்… நீயும் நல்லா படி.. ஏதாவது  தெரியலன்னா சாந்தி கிட்ட கேளு. என் கிட்ட கேளு .. நீயும் தலை எல்லாம் ஒழுங்கா சீவி . சட்டையை இன் பண்ணி அழகா ஸ்கூலுக்கு வா” என்று  அவனிடம் பேசி அனுப்பி வைத்தார்..
மூன்று நாள் விடுப்பு  எடுத்து அடுத்த வியாழக் கிழமைதான்  கிருஷ்ணமூர்த்தி சார் பள்ளிக்கு வந்தார். வழக்கத்தை விட கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தார். முதல் தளத்தில் வகுப்பில் இருந்த நாகராஜன் ஹீரோ ஹோண்டா வண்டி சத்தத்தைக் கேட்டு பக்தவச்சலம் சாரிடம் ‘ஒன் பாத்ரூம்’ சொல்லி விட்டு கிருஷ்ணமூர்த்தி சாரை பார்க்க வந்தான். “என்னடா .. இங்க நிக்கற .. கிளாசுக்கு போகலையா” என்று நாகராஜனைப் பார்த்து கேட்க,  ” ஏன் சார் மூணு நாளா
 வரல ? ”  என்று எதிர் கேள்வி கேட்டான் நாகராஜன். ” உடம்பு ச ரி இல்லடா .. பயங்கர ஜுரம் டா ” என்றார். ” இப்படி சொல்லாம கொள்ளாம  லீவு போடாதீங்க சார்.. ” என்றான் இறுகிய முகத்துடன்.  ” டேய் .. நான் எதுவும் விசேஷத்துக்காக லீவு போடலடா .. உடம்பு சரி இல்லடா ..பயங்கர ஜுரம் டா ……..  சரி கிளாசுக்கு போ ” என்றார்.  செவ்வக வடிவில் இருக்கும் பள்ளிக்கு கட்டிடத்தில் ஒரு மூளையில் தலைமையாசிரியர் அறை. அறைக்கு முன்னும் பின்னும் வராந்தா இருந்தது. இவரின் அறையை கடந்த நாகராஜன் ” இவரு பாட்டும் மயிறு மாரி  லீவு போட்ருவாராம்… இவரை பாக்காம யாரு இருக்கறதாம் ….??!” என்று முனகிக் கொண்டு போனான். கிருஷ்ணமூர்த்தி சாருக்கு இவன் முனகியதைக் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார். நாகராஜன்  சிறிது தூரம் சென்று மறுபடியும் கிருஷ்ணமூர்த்தி சாரின் அறையை நோக்கினான். ” டேய் . . கிளாசுக்கு போடா ” என்று அதட்டி விட்டு தன் இருக்கையில் அமர்ந்தார்.
மதிய உணவு வேளையில்  கிருஷ்ணமூர்த்தி சாரை சந்திக்க  மாணவ  தன்னார்வலர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணமூர்த்தி சார் வரிசையில் வந்து நின்றார்.   என்றும் மதிய உணவு வேளையில் கண்ணில் படாத  ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாணவர்கள், நான்கைந்து பேர்  அந்த சிறுநீர் கழிப்பக்கத்தை பயன் படுத்திவிட்டு  பள்ளிக்கு வெளியே சென்று  கொண்டிருந்தனர். தட்டில் சோறு வாங்கிக் கொண்டு தட்டுடன் நடந்து சென்று வராந்தாவில் மாணவர்களுடன் நின்று கொண்டே சாப்பிட்டார். பிரகாஷ்  “சார் …  பக்கெட்ல கொட்டனா நாங்க பாப்போம்னு   பில்டிங் பின்னாடி நேத்து  கோஸ் பொரியலை தூக்கி எரிஞ்சாங்க சார்… ” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மொட்டை மண்டையுடன்   முதல் தளத்திலிருந்து ஓடி வந்த பரிமளா ” சார் … மேல கை கழுவுனா கீழ  தண்ணி வரும் இல்ல சார் .. அந்த ஓட்டைல .. தாமோதரன் பீட்ரூட்ட போடறான் சார்… அவன் நேத்தும் கோஸ் பொரியலை அந்த ஓட்டைல போட்டான் சார்” என்றாள். பிரகாஷ் வேகமாக ஓடி தாமோதரனை தட்டுடன் தர தர வென இழுத்து வந்து வந்தான். “பீட்ரூட்ட குப்பைல போட்டியா ? ? ” “………” “இவன என்ன செய்யலாம் ? …. அந்த பிரம்பு எடுடா ” என்றார் கிருஷ்ணமூர்த்தி. ” சார் .. வேணாம் சார் . நீங்கதான் அடிக்க மாட்டீங்க இல்ல … வேணாம் சார் ” என்றாள் பரிமளா.  ” ம்ம்ம்ம்ம் .. சரி . அப்பன்னா .. இன்னொரு முறை பீட்ரூட் வாங்கிட்டு வர சொல்லி சாப்புட வெக்கலாமா ? ” என்று கேட்டார். அடுத்த சில நொடிகளில் பிரகாஷ் வேறு ஒரு தட்டில் பீட்ரூட் கொண்டு வந்தே விட்டான். வேறு வழி இல்லாமல் தாமோதரன் அந்த பீட்ரூட்டை சாப்பிட்டு முடித்தான். ” இந்த பீட்ரூட்ல என்ன சத்து இருக்கு தெரியுமா ? ” என்று ஆரம்பித்தார். பிறகு அருகில் இருந்த  ஒன்பதாம் வகுப்பு ராஜேஸ்வரியிடம் ‘ இங்க வா … பீட்ரூட், உருளை கிழங்கு, கோஸ், இதிலெல்லாம் என்னென்ன வைட்டமின் இருக்குனு ஒரு சார்ட்ல அழகா படம் போட்டு எழுதி குடு…  நோட்டீஸ் போர்டுல வெக்கலாம்.” என்று சொல்லி விட்டு கை  கழுவப்  போனார்.  அன்றே அந்த குப்பைத் தொட்டி பக்கெட்டில் பாதி அளவுதான்  இருந்தது. கிருஷ்ணமூர்த்தி சாருக்கு தெரியும் அந்த பக்கெட்டில் இன்னும் இரண்டு வாரங்களில் கறிவேப்பிலையும்  பச்சை மிளகாயும் தவிற  வேறு எதுவும் இருக்காது என.
மதியம் சித்ரா டீச்சரிடம் நாகராஜை பற்றி கொஞ்சம் விசாரித்தார். ” கொஞ்சம் பரவால்ல சார் … அவனால தொந்தரவு இல்ல” என்று மட்டும் சொல்லி முடித்துக் கொண்டார் சித்ரா டீச்சர். அன்று மாலை கிருஷ்ணமூர்த்தி சாறர  பார்க்க வந்த நாகராஜ் அந்த நோட்டை அவரிடம் நீட்டினான். அந்த செடி பதிமூர்ன்னு சென்டி மீட்டர் வளர்ந்திருந்தது.  ” நாகராஜ்…  நீ என்ன காரியம் பண்ற தெரியுமாடா … இந்த மரம் எவ்ளோ முக்கியம் தெரியுமா உனக்கு ?” என்றார். “தெரியும் சார் .. அந்த பாரஸ்ட் இன்ஸ்பெக்டர் அந்த மீட்டிங்ல  சொன்னாரு சார்… ஒரு மரம் அவ்ளோ ஆக்சிஜன் தரும். ஒரு மரம் 3 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஆக்சிஜன் தரும்.. அப்புறம் மரம் புவி வெப்பமடைதலையும் தடுக்கும் னு சொன்னாரு சார்”  .. “வெரி குட் .. அதல்லாம் கவனிச்சியா … . இந்த செடிக்கு வாய் இருந்தா உன்ன அம்மா னு கூப்புடும் டா ” என்றார். ” நிஜமாவா சார் .. நான் அப்படிலாம் நினைச்சு செய்யல சார்.செடி பேசுமா சார் ? என்ன அம்மானு கூப்புடுமா சார் ? ” என்று மளமள வென அழத் தொடங்கி விட்டான். அம்மா இல்லாமல் வளர்ந்தவன் .. அவனுக்கு என்ன தோன்றியதோ என்று எண்ணி கிருஷ்ணமூர்த்தி சாரின் கண்களும் கலங்கி விட்டன. தொண்டையை கணத்துக்கு கொண்டு, “சரி நாளைல இருந்து ஒரு அரை மணி நேரம் கூடுதலா என் ரூம்ல  இருந்துட்டு போ . நான் உனக்கு கொஞ்சமா பாடம் சொல்லி தரேன்” என்றார். கொஞ்ச நேரம் தன அறையில் உட்கார்ந்து கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு வகுப்பு முடியும் வரை காத்திருந்து ஏழு மணிக்கு வீட்டுக்கு புறப்பட்டார். போகும்போது  பள்ளித் தோட்டம் நன்றாக வளர்ந்து கொண்டு வந்தததையும் பார்த்தார்.
மறுநாள் காலை கூட்டத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் பள்ளி தோட்டம் பராமரிப்பதையும் உணவை வீணாக்காமல் சாப்பிடுவதாகவும் பாராட்டி அவர்களையே கை தட்டி பாராட்ட சொன்னார். ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மாணவர்களை பாய்ஸ்  மட்டும்  பணிரெண்டு மணிக்கு மைதானத்திற்கு வர  வேண்டும் என்றும் கூறினார்.
பணிரெண்டு மணிக்கு ஒன்பதாம் வகுப்பு பத்தாம் வகுப்பு பாய்ஸ் மைதானத்திற்கு வந்தடைந்தனர்.  அந்த அரச மரத்தடியில் அவர்களை அழைத்துக் கொண்டு போனார். ஒன்பதாம் வகுப்பில் இருபத்தி ஏழு  மாணவர்களும் பத்தாம் வகுப்பில் இருபத்தி ஐந்து மாணவர்களும் அந்த அரச மரத்து நிழலில் அந்த நிழல் படும் வடிவில் வெயிலிலிருந்து விலகி நின்று கொண்டிருந்தனர்.  ” நான் இப்ப கேக்கற கேள்விக்கெல்லாம் யாருக்கு பதில் தெரியுதோ வேகமா சொல்லணும்.. “
” இது யாருடைய பள்ளி கூடம் ? இங்க போடற சாப்பாடு யாரோடது ? ” …………… ” கவர்மெண்டோடது சார் ” ……….” கவர்மெண்ட்ன்னா யாரோடது ? ” ……….
‘ஜெயலலிதா பள்ளிக்கூடம் சார் ” என்றான் அந்த கல்லுளிமங்கன் முருகவேள்…………” ஜெயலலிதா அவங்க சொந்த செவுல இருந்து உங்களுக்கு சாப்பாடு போடறாங்களா ? ” …………..’இல்ல சார். ‘ …………’ அப்புறம்.. கவர்ன்மெண்ட்டுக்கு எப்படி காசு வருது  ?’………….”மக்கள் குடுக்கற வரிப் பணத்துல சார் ” என்றான் சபரிநாதன். ……….”குட் … என்ன வரி போடறாங்க  ? ” …………..” வருமான வரி சார் ” ……..” குட் .. வேற ” ……………. ” ……………….”
 ” நீங்க வாங்கற எல்லா பொருளுக்கும் வரி இருக்கு தெரியுமா ? நீங்க வாங்கற சோப்பு சீப்பு, வத்தி பொட்டி, துணி  மணி, பேனா, பென்சில்,  .. எல்லாத்துக்கும் வரி இருக்கு .வருமான வரிங்கறது நேர்முக வரி. இப்ப நான் சொன்னதெல்லாம் மறைமுக வரி … எல்லா பொருளோட விலையிலையும் மறைமுக வரி இருக்கு. உங்க வீட்ல அப்பா அம்மா சமைக்கறதுக்கு வாங்கற சப்பாத்தி மாவு, ரவை, சர்க்கரை, டீ தூள், காபி தூள், உப்பு, மஞ்சபொடி, பெருங்காயம், அரிசி,  பருப்பு.. எல்லாத்துக்கும் வரி உண்டு தெரியுமா ?… இந்த வரிதான் நாட்டுக்கு அதிகமா போது. அந்த வரிலதான் அரசாங்கம் பள்ளிக்கூடம் கட்டி கொடுத்திருக்கு. உங்க அப்பா அம்மா கட்ன  வரிலதான் அரசாங்கம் எங்களுக்கு சம்பளம் போடுது. நிஜமா சொல்லப் போனா … எங்க கல்வித்துறை டைரக்டர் எனக்கு பெரிய அதிகாரி கிடையாது. வரி கட்ன உங்க அப்பா அம்மாதான் எனக்கு பெரிய அதிகாரி. . இந்த ஸ்கூல்ல செய்றா எல்லா செலவுலயும் உங்க அப்பா அம்மா கட்ன  வரிப் பணம் இருக்கு.
அப்ப… . இந்த சாப்பாட்டுல என்ன இருக்கு ? உங்க அப்பா அம்மா வோட உழைப்பு இருக்கு. அவங்க கட்ன  வரிப்பணம் இருக்கு. அந்த சாப்பாட்டை வேணாம்னு சொன்னா அவங்க உழைப்ப அசிங்கப் படுத்தற மாதிரி  இல்லையா ? உங்க அப்பா அம்மா உழைப்புக்கு நீங்க குடுக்கற மரியாதை அவ்ளோதானா ? .. இது ஜெயில் சாப்பாடு இல்ல டா … உங்க வீட்டு சாப்பாடு… உங்க அம்மா அப்பா இங்க வந்து உங்களுக்கு பரிமாற முடியாது. அவங்க காட்டுலயும் மேட்டுலயும் வேல செய்றாங்க. உங்க அப்பா அம்மாவுக்கு பதிலா நாங்க இருந்து உங்களுக்கு சாப்பாடு போடறோம் . அத வேணாம்னு சொல்லுவீங்களா ? ” என்று கோவமாக உரத்த குரலில் பேசினார். கிருஷ்ணமூர்த்தி சார் இவ்வளவு கோப்பாய் பட்டு அந்த மாணவர்கள் பார்த்ததே இல்லை.
” இப்ப நான் சாப்புட போறேன், உங்க அப்பா அம்மா உழைப்பை மதிக்கறவங்க,  என்ன மதிக்கறவங்க மட்டும் என் பின்னாடி சாப்பிட வாங்க” என்று சொல்லி விட்டு வரிசையில் தட்டுடன் போய்  நின்றார்.  எல்லா மாணவர்களும் அவர் பின்  நின்றார்கள். அன்று மத்திய உணவை அவர்களுடன்தான்  சாப்பிட்டார். ஜெயில் சாப்பாடு என்று கேலி செய்த செந்திலின் தட்டில் இருந்து கொஞ்சம் பீட்ரூட் எடுத்து சாப்பிட்டார்.
அன்று மாலையும் பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்பு முடிந்து ஏழு மணிக்கு புறப்படத் தயாரானார். இந்த பத்தாம் வகுப்பு மாணவர்களை இந்த வருடம் எப்படியாவது 100 சதவிகிதம் தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே ஹீரோ ஹோண்டா வை கிளப்பி புறப்பட்டார்.  S .ஹேமலதாவும், நாகராஜும், செந்திலும் . இன்னும் நிறைய மாணவர்களும்  சேர்ந்து  அவர் கழுத்தில் போட்ட ஒரு பெரிய  பூ மாலை தொங்கிக் கொண்டிருந்தது.
Show 2 Comments

2 Comments

  1. தனபால் பட்டுக்கோட்டை

    வாழ்த்ுக்கள் ஞானபார
    Jk.யின்ேச்ின் ஒலி வடி வத்தை
    வரி வடிவ மாக்கியதுமிக.சிறப்பு
    நன்ி

  2. Babu

    What a dedicated teacher with revolutionary patience can achieve has been dramatised effectively .
    Krishnamurthi is a rare gem of a. person..May his tribe increase!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *