கதிரவன் வீட்டிற்கு மெதுவாய் நகர்ந்து செல்ல செல்ல அவசர அவசரமாய் வேலை நடந்தது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக. வீட்டை கூட்டி விட்டு, முகம் கழுவி, தலைசீவி, விளக்கேற்றி விட்டு அனைவரும் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். ஒவ்வொரு நாளும் இந்த இல்லத்தரசிகள் இந்த நேரத்திற்காக மிகவும் எதிர்நோக்கி கொண்டிருப்பார்கள். இவர்களின் சந்திப்பு இரண்டு மணி நேரமாக இருந்தாலும் உற்சாகமாக கலகலப்பாக இருக்கும். சமையல், பாட்டுக்கு பாட்டு, குடும்ப அரசியல், தற்போது ஹிட் கொடுத்த படம், கோலம் போடுவது, பிள்ளைகள் செய்யும் அட்டகாசம் என்று அனைத்தையும் கலந்து அடிப்பார்கள். இல்லத்தரசிகள் அரட்டை அடிக்க பிள்ளைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.
“என்னம்மா லதா ரொம்ப நாள் கழிச்சு காத்து இந்த பக்கம் வீசுது?”
“அது ஒன்னும் இல்லக்கா மாமனார் மாமியார் ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க வரத்துக்கு நாளை மதியம் ஆகும்”
“வீட்ல எப்படி போகுது…..?”
“அட போங்க அக்கா ஏதோ சாப்பாடு, தூக்கம், வீட்டு, வேலைனு வண்டியை கஷ்டப்பட்டு ஓட்டுறேன்”.
“ஏண்டி இப்படி அலுத்துக்குர என்ன ஆச்சு”.
“சின்ன வயசுல இருந்து வேலைக்கு போயி சொந்தக் கால்ல நிக்கணும்னு தான் என் கனவு. கல்யாணத்துக்கு முன்னாடி என் வாழ்க்கை பயங்கர ஸ்மூத்தா போச்சு ஆசைப்பட்ட வேலை, கை நிறைய சம்பளம், மனசு நிறைவா இருந்துச்சு. இப்போ சொல்றதுக்கு ஒன்னும் இல்ல…. வேதனையா இருக்கு . ஒரு பொம்பள சம்பாதியத்துல குடும்ப நடந்த அந்த ஆண் கையாலாகாதவனு சொல்வாங்க அப்படின்னு மாமனார் ஒருபக்கம் சொல்ல, மகன்தான் கை நிறைய சம்பாதிக்கிறான் அப்புறம் நீ ஏன் வேலைக்கு போக ஆசைப்படுற ?. அவனுக்கு என்ன வேணும் வேணான்னு கூட இருந்து பாத்துக்க வேண்டியதுதான். வேலைக்கு போனா நானும் சம்பாதிக்கிறேனு நாட்டாமை புத்தி வந்துரும் அது குடும்பத்துக்கு ஆகாதுனு மாமியார் ஒரு பக்கம். நீ வேலைக்கு போயிட்டா புள்ளைங்கள, என் அப்பா அம்மாவை யார் பார்த்துப்பானு இவரும் ஒரு பக்கம். இப்படியே எல்லாரும் அவங்க அவங்க சௌகரியத்தை தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்களே தவிர என்ன பத்தி எள்ளளவு கூட யோசிக்கிறது இல்லை. நான் ஆசைப்பட்ட வாழ்க்கை இது இல்ல கட்டாயப்படுத்தின்பேர்ல தான் ஹவுஸ் வைஃபா இருக்கிறேனு நினைக்கும் போது ஆத்திரம் ஆத்திரமா வருது”.
முடிஞ்சதா இல்ல இன்னும் இருக்கா?, ‘ஏன் இப்படி அலுத்துக்குரனு’ கேட்டது ஒரு குத்தமா அதுக்கு இந்த போடு போடுறியே லதா. உன் வீட்டு கதைய கேட்கும்போது விரலுக்கு ஏத்த வீக்கம் படத்தோட கதை தான் ஞாபகத்துக்கு வருது”, என்று சொல்ல அனைவரும் சிரிக்க லதாவுக்கு வருத்தம்தான் ஆகையால் அமைதியாக இருந்துவிட்டால்.
“நம்ப மஞ்சு அம்மா இருக்காங்களா”, என்று ஆரம்பித்தால் மரகதம்.” அவங்க வேலைக்கு தான் போறாங்க அவங்க ரெண்டு பிள்ளைங்க, வீட்டுக்கார், அப்பா அம்மானு எல்லாருக்கும் வேண்டியது செஞ்சு வெச்சிட்டு வீட்டு வேலையும் பார்த்துக் கிட்ட பம்பரம் மாதிரி சுத்துவாங்க. இத்தனைக்கும் வீட்டு வேலைக்கு வேலைக்காரினு யாரும் இல்லை. டான்னு அஞ்சு தேதி ஆனா சம்பளம் அக்கவுண்ட்க்கு வந்துரும், அப்புறம் என்ன அவங்க வீட்டுக்காரர் நேரா போயி சுத்தமா காசு எடுத்துட்டு வந்துருவாரு, ஏனா ஏடிஎம் கார்டு, பேங்க் பாஸ்புக் எல்லாம் அவர் கிட்ட தான் இருக்கு”.
“எப்படி இருந்தாலும் சம்பாதிக்கிற காசு வீட்டுக்கு தானே குடுக்கணும் அதுக்கு அவரே எடுத்துகிட்டாரு இது ஒரு குத்தமா, என்று கலா அக்கா வினாவ.
“ஆமாக்கா எப்படி இருந்தாலும் அவங்க சம்பளம் குடும்பத்துக்கு தான் செலவு செய்யபோறாங்க ஆனால் அந்த சம்பள பணத்தை அந்த அக்காவே கையாலேயே அவர் கணவர் கிட்ட கொடுக்கிறது எப்படி இருக்கு, அதுக்கு பதிலா அவரே வலுக்கட்டாயமா ஏடிஎம் கார்டை வாங்கி வெச்சுக்கிறது நம்பிக்கை இல்லா தன்மை மற்றும் டாமினேஷன் இயல்ப காட்டுது. பஸ் செலவுக்கு போக கூட ஒரு ஐநூறு ரூபாய் தருவார் போல. அவங்களுடைய அப்பா அம்மா ரொம்ப வயதானவர்கள் வருமானம்னு சொல்லிக்க ஒன்னும் இல்ல. ஏதோ பெட்டிக்கடை தான் வெச்சு காலத்தை தள்ளுறாங்க . இவங்க கஷ்டப்பட்டு படிக்க வச்சு ஆளாக்கிய சீர் செய்து கல்யாணம் செஞ்சு வச்ச அவங்க அப்பா அம்மாவுக்கு ஏதாவது செய்யனும்னா கூட அவங்க வீட்டுக்காரர் மனசு வச்சா தான் ஏதோ ஒரு தொகை போய் சேரும் அப்படி இல்லன்னா ஒன்னும் இல்ல.”
“சரி, உனக்கு எப்படி இவ்வளவு விஷயம் தெரியும்?”, என்று வினவினால் கலா அக்கா.
“என் சித்தி ஒரு தான் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்தப்போ மஞ்சு அம்மா கிட்ட பேசிகிட்டு இருந்தாங்க, நான் அவங்கள தெரியுமானு கேட்டப்ப போன்ல வெவரமா சொன்னாங்க.”
“ஏன்தான் இந்த ஆம்பளைங்களுக்கு இப்படி ஒரு ஆதிக்க எண்ணம் வருதோ. அப்படி என்ன நம்பிக்கை இல்லாதனம். இதெல்லாம் நெனச்சாலே கோவம் கோவமா வருது”, இன்று மூக்கை புடைத்துக்கொண்டு மரகதம் சீர கலா அக்கா மீண்டும் கவுண்டர் தந்தார்.
“தோடா டெய்லி அல்வா சாப்பிடற நீ எல்லாம் இதை சொல்லவே கூடாது.”
மரகதம் மனதில் வியப்பு எழ, ”இது என்னடா புது ட்விஸ்ட் ?”, என்று திருதிருவென விழிக்க.
“வருவியா வரமாட்டியா வரலனா உன் பேச்சு” என்று அக்கா பாட ஆரம்பிக்க “கா” என்று வனஜாவும் சேர்ந்து கோரசா முடித்தார்கள். “தருவியா தரமாட்டியா தரலைன்னா உன் பேச்சு கா” என்று மீண்டும் அதே மாதிரி பாடினார்கள். மரகதத்துக்கு விழிபிதுங்கி போயிடுச்சு எப்படி தெரியும் என்று கேட்டபொழுது, “இரவு நேரத்தில் தெருவே அமைதியாய் இருக்கும் உன் வீட்டுக்காரர் பாடுன பாட்டு என் வீட்டு சமையல் கட்டு வர கேட்டுச்சு என்று அக்கா சொல்ல, எனக்கு பாத்ரூம்ல கேட்டுச்னு வனஜா முடித்தாள்.
கஜினி படத்துல கதாநாயகி, ஏர் வாய்ஸ் கம்பெனி சொந்தக்காரர் தன்னை காதலிப்பதாக சொன்னால் தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர்களிடம் மரியாதை கிடைக்கும் என்பதற்காக பொய் சொல்வாள், அதே போல தன் கணவன் மீது மற்றவர்களுக்கு இருக்கும் நல்ல அபிப்ராயத்தை மரகதம் கெடுக்க விரும்பவில்லை ஆதலால் அமைதியாக சிரித்து மழுப்பினால்.
இருக்காதா பின்ன மத்த வீட்ல எல்லாம் வீட்டுக்காரர் பொண்டாட்டிய ஒரு பொருட்டாக மதிக்கவில்லை ஆனா இவ வீட்டுக்கார் இவல சுத்தி சுத்தி வரத பெருமையா நினைப்பாங்கள அதை ஏன் கெடுப்பானேன்.
மரகதம் மனதில், “ஆமா இவங்க பாடியது உண்மைதான். தினமும் அல்வாவும் அவருக்குப் பிடித்த ஜாதிமல்லி பூவும் வாங்கிட்டு வருவாரு. இதனாலேயே எங்கேயும் போயிட்டு ரா தங்க முடியாது. அப்பா அம்மா வீட்டுக்கு, கூட பொறந்தவங்க வீட்டுக்கு, ஒரு கல்யாணம் காட்சினு எங்க போனாலும் பொழுதுக்கலாம் வீட்டுக்கு வந்திடனும். கோவத்துல சகட்டுமேனிக்கு அடி வாங்கியதும் உண்டு பொழுது சாஞ்சா அல்வாவும் உண்டு. ஓ ஓ… இதுக்கு பேரு தான் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்னு’ பாடி இருக்காங்க போலனு அப்போலாம் யோசிப்பேன். மனுஷங்க காரியம்னா கால புடிப்பாரு மத்த நேரத்துல கழுத்தை பிடிப்பார் அப்படி ஒரு முரட்டு குணம். “பிங்க்” படத்துல அமிதாப் பச்சன் கிளைமாக்ஸ்ல ஒரு டயலாக் சொல்வார், ‘ கட்டுன பொண்டாட்டியா இருந்தாலும் நோனு சொன்னா நோதான். இதோட நாலுதடவ இந்தப் படத்த பாத்தாச்சு இவருக்கு என்ன தான் புரிஞ்சுதோ எந்த மாற்றமும் தெரியல. தினமும் தலை குளிக்கணும், தல குளிக்காம எப்படி சாமிகிட்ட போறது. தலையே பாரமாய் இருக்கும் ஆசையா ஒரு பழம், ஒரு கூல் ட்ரிங்க்ஸ் குடிச்சா கூட உடனே சளி பிடிக்கும். உடம்பு எப்படி இருக்கு கேட்கிறது கூட வாய் வலிக்கும் இவருக்கு. ஆனால் ஒருநாள் புதுசா வேலை விஷயமா பக்கத்து ஊருக்கு போனாரு, போன இடத்துல வேலையா மாட்டிக்கிட்டாரு மறுநாள் தான் வரதா போன் போட்டு சொல்ல இன்னைக்கு ஒரு நாள் விடுமுறை என செம ஜாலியா இருந்தேன். ஆனா பாருங்க அன்னைக்கு ராத்திரி எல்லாம் தூக்கமே வரல பழகிடுச்சு போல இப்பல்லாம் இல்லன்னா கை உடைந்தது போல இருக்கு, “என்ன வாழ்க்கை டா !”, என்று பெருமூச்சு விட
“அல்வா வந்திருச்சு…..! அல்வா வந்துருச்சு…..! என்று கலா அக்கா சொல்ல தன்னை அறியாமல் உடல் திக்கென்று தூக்கிப்போட்டது, சட்டென்று கவனம் தன் வீட்டுப் பக்கம் திரும்பியது மரகதத்திற்கு.
“மணி ஏழு தான் ஆகுது அதுக்குள்ள என்ன அவசரம்”, என்று கலா ஆக்கா ஓட்டினார். “நான் என் வீட்டில் பீட்ரூட் அல்வா சென்றேன் அது இப்போ நல்லா ஆரி கெட்டியா ஆயிடுச்சு அதான் என் பொண்ணு எடுத்துட்டு வந்தேன்”..
அனைவரும் கொஞ்சம் எடுத்து சுவைத்துப் பார்க்க மிகவும் நன்றாக இருந்தது. அல்வா வழுக்கிக்கொண்டு தொண்டைக்கு போகாம வாயிலே தங்கி, நெருப்பு பட்டதும் மெழுகு கரைவது போல் கரைந்தது. அனைவரும் செய்முறையை கேட்க, “பீட்ரூட் தோல் நீக்கி சிறு துண்டுகளாக வெட்டி அதை நீர் விட்டு மைய அரைத்துக் கொண்டு , வானலில் மூணு ஸ்பூன் நெய் விட்டு சூடேறியதும் பீட்ரூட்டை சேர்த்து நன்றாக கலந்து விடவேண்டும். அரிசி மாவு ஐந்து தேக்கரண்டி எடுத்து நீர் வெட்டு கரைத்து எடுத்து வாணலியில் விட்டு நன்றாக கலந்துவிட வேண்டும் பின் சக்கரை, நறுக்கி வைத்த பாதாம், முந்திரியை சேர்த்து அவ்வப்பொழுது இரண்டு தேக்கரண்டி நெய் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கலந்துவிட வேண்டும் பதம் வந்த பின் ஒரு தட்டில் கொட்டி ஆரியப் பின் வேண்டிய வடிவத்தில் வெட்டிக் கொள்ளலாம்”, என்று கலா அக்கா சொல்லி முடித்தாள். அல்வா எடுத்த விரலை சப்பிக்கொண்டே வனஜா, “அக்கா உங்களுக்கு தான் செம ஜாலி. அண்ண ரொம்ப ஜாலி டைப் கலகலன்னு இருக்காரு, அவரு கோவமா பேசியோ, குரலை ஒசத்தி பேசியோ ஒரு தடவை கூட பார்த்ததும் இல்லை கேட்டதும் இல்லைனு பேசிக்கொண்டே இருக்கையில் திடீரென்று அவ்விடத்தில் அமைதி சூழ்ந்தது .
வனஜாவின் கணவன் சரியான சந்தேகப் பேர்வழி எதையும் எளிதில் நம்ப மாட்டான் அதேசமயம் எல்லா விஷயத்தையும் குதர்க்கமாக யோசிப்பது அவனுடைய வழக்கம். இவளோ நல்ல அழகு சிரித்தாள் லட்சணமாக இருப்பாள். சும்மா முகம் கழுவி தலை சீவி பொட்டு வைத்தாலே போதும் அதுவே நிறைவாக இருக்கும். வனஜாவுக்கு வித வித டிசைன் சேலை கட்ட ஆசை, சின்ன சின்ன தோடுகள் சேகரித்து அணிந்து கொள்ள பிடிக்கும், சினிமா பாடல்களை ரசனையாய் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டே வேலை செய்யும்பொழுது எவ்வளவு பெரிய வேலையாக இருந்தாலும் புத்துணர்ச்சி ஊக்கியாக இருக்கும், கலர் கோலம் போடுவதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு . இவள் கணவருக்கு இதில் எல்லாம் நாட்டம் இல்லை என்பதால் இவளுக்கும் தடை விதிக்கப்பட்டது. பக்கத்து வீட்டு கலா விதவிதமா புடவை கட்டிகிட்டு வேலைக்கு போறது இவன் விரும்புவது இல்லை,இவளிடம் வனஜா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு தினமும் கதை பேசுவதும் இவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது. இந்த பொம்பளையை பார்த்து நம்ம வீட்டில இருக்கிறது ஏதாவது புரட்சி பண்ணப் போறேன்னு வந்து நிக்க போகுது. இந்த பொம்பளைங்களுக்கு வேற என்ன வேலை எப்படி எப்படி எல்லாம் வீட்டு ஆம்பளைங்க ஆமா சாமி போட வைக்கலாம்னு டிசைன் டிசைனா ப்ளான் போடுவார்கள்”.
இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் கலா அக்கா, இக்கரைக்கு அக்கரை பச்சை என்று ஒரே வரியில் முடித்து விட்டார். பழக்கப்பட்ட வரியாக இருந்தாலும் எல்லோருக்கும் எல்லா சூழலுக்கும் பொருத்தமான வரிதான்.
இப்போது நிஜமாகவே அல்வா வந்துவிட்டது. மரகதம் கிளம்பியதும் வனஜாவும் நேரமாகிவிட்டது என்று வீடு சென்றுவிட்டாள். கலாவும் லதாவும் தனியாக அமர்ந்திருக்க கலா அக்கா ஆரம்பித்தார் “ஏன் லதா நீ நல்லா சமைப்பா இல்ல, உன் திறமையை வைத்து நீ ஏதாவது ட்ரை பண்ணலாமே”
“புரியல அக்கா”.
“இல்லடி வேலைக்கு போக முடியல சொந்தக் கால்ல நிக்க முடியலன்னு சொல்ற இல்ல அதனால உன்கிட்ட இருக்கிற சமையல் திறமைய வச்சு யூடியூப் சேனல், இல்லன்னா ஆன்லைன் குக்கரி கிளாஸ்னு எதையாவது ட்டிரை பண்ணலாமே. படிச்ச படிப்புக்கு தான் வேலை செய்யணும்னு அவசியம் இல்ல. சும்மா இருந்தா கண்டதையும் யோசிக்க தோணும் தேவையில்லாத சூழலை உருவாக்கும். அதனால உன் மனசுக்கு பிடிச்சது ஏதாவது செஞ்சு நீயும் சந்தோஷமா இரு உன்ன சித்தியும் நல்ல சூழலை உருவாக்கு”.
“இல்லக்கா வேலைக்கு போய் ஆகும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை தான், இவர் நல்ல சம்பாதிக்கிறார் நான் வேலைக்கு போகணும்னு அவசியம் இல்லை. இருந்தாலும் ஒரு மதிப்பு இல்லாதப்போ கொஞ்சம் கஷ்டமா இருக்கு கா.இவருக்காக நான் எதை வேணாலும் தியாகம் பண்றதுக்கு தயாரா இருக்கேன் ஆனா ஒரு மனுஷியாக கூட மதிக்கிறது இல்லை, ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரமாவது புருஷன் பொண்டாட்டி குள்ள கொஞ்சம் நேரம் ஒதுக்களாம். ஆனால் இது ஒரு நாளும் நடந்ததே இல்லை அவருக்கு அவருடைய ஆபீஸ் வேல பெருசு. வீட்டுக்கு வந்த நியூஸ் பாப்பாரு சாப்பிட்டுவாரு, தூங்குவாரு, இல்லன்னா டயர்டா இருக்கு அப்படின்னு ஏதாவது சாக்கு சொல்லுவாரு . நான் மட்டும் வேலை வேலைன்னு வீட்டுக்குள்ள ஓடிக்கொண்டே இருக்கிற மாதிரி இருக்கும் ஒரு கட்டத்துல நான் ஒரு வேலைக்காரி தானா அதுக்கு தான் நான் கல்யாணம் பண்ணி வந்தேன் என்ற சந்தேகம் கூட வருது அந்த விரக்தியில் தான் நானும் வேலைக்கு போகணும்னு சொல்லி குதிச்சிட்டு இருக்கேன். என்ன ஆல்வேஸ் டிக்கெட் ஃபார் கிராண்டேடுனு எடுத்துக்குறாரு”.
“எனக்கு புரிது லதா அதனாலதான் சொல்றேன் உனக்கு புடிச்ச விஷயத்துல உன் கவனத்தை திசை மாத்து, நேரம் கிடைக்கும்போது உன் கணவனிடம் எடுத்து சொல் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கலாம்”.
“சரி அக்கா நீங்க சொல்ற மாதிரியே நானும் ஏதாவது செய்ய யோசிக்கணும். உங்க கூட பேசினதுல ஏதோ ஒரு தெளிவு கிடைச்ச மாதிரி இருக்கு கண்டிப்பா யோசிச்சு நல்ல முடிவா எடுக்கிறேன். சரி அக்கா அவர் வர நேரம் ஆயிடுச்சு நானும் வரேன் நாளை பார்க்கலாம்”.
“சரி லதா போயிட்டு வா”.
இப்பொழுது கலாக்கா மட்டும் தனிமையில் இருக்க சிந்தனையில் மூழ்கினார். இவங்க மட்டும் விதிவிலக்கா என்ன இவங்களையும் பார்த்திடலாம் . இதுவரை கணவன் மனைவி என்று ஒன்றாக எந்த இடத்துக்கும் சென்றது இல்லை, அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்களின் வீட்டு விசேஷங்களை தவிர. மனைவி எவ்வளவு சம்பாதித்தாலும் கணவர் துணிமணி எடுத்துத் தருவது ஒரு அல்ப சந்தோஷம்தான், அட கூட வந்தாவது உனக்கு புடிச்ச சேலை எடுத்துக்கோனு சொல்லலாம்ல அதுவும் இல்லை. திருமணமான புதிதில் எப்பொழுதும் உர்…. என்று இருப்பதை இவருடைய குணம் என்று நினைத்திருக்க அலுவலகத்தில் ஒருவரின் திருமணத்திற்கு செல்லுகையில் இவருக்கு மிக அழகான பல் வரிசை இருப்பது அப்பொழுதுதான் கலா அக்காக்கு தெரியும். அப்படியே வாயைப் பிளந்த வண்ணம் வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் கலா. தன் கணவனுக்காக விதவித சேலைகள் அலங்காரப் பொருட்கள் என தன் அவதாரத்தை மாற்றிக் கொண்டார். அது ஏனோ வனஜாவின் கணவர் கண்கள் உறுத்தியது. கலா அக்காவை மற்றவர்களிடம் எப்பொழுதும் ஒப்பிட்டு பார்க்கும் குணம் இவருக்கு நிறைய உண்டு. எவ்வளவு திருப்தி செய்ய முயற்சித்தாலும் அதில் ஏதேனும் ஒரு குறை கண்டுபிடிப்பதே இவரது வழக்கம். இந்த குணத்தை மாற்ற முடியாது என்று புரிந்து கொண்ட அக்கா பெருசா எடுத்துக்கிறது இல்லை. மற்றவர்களைப் போல மன அழுத்தத்தில் சிக்கிக்கொள்ளாமல் வாழ்க்கையை திசை மாற்றினார்.
“நாய்க்கு வாக்கப்பட்டா குறைக்கணும், குரங்குக்கு வாக்கப்பட்டா மரம் ஏற கத்துக்கணும்” சும்மாவா சொன்னாங்க. இந்த பழமொழி கணவன் மனைவி இரு பாலருக்கும் பொருந்தும். கடைசியாக ஒரு பஞ்ச் டயலாக், “நம்ப யாரு கூட வாழுரோம்னு முக்கியம் இல்ல, எப்படி வாழுரோம்னு தான் முக்கியம்”
பா.திவ்யா செந்தூரன்.
விழுப்புரம்.
பல பெண்களின் மன பதிவை ஒரு சிறுகதையில். அருமை தோழர். வாழ்த்துகள்
Good
Very nice. All the very best Mrs. Divya senturan