அந்த தொகுப்பு வீட்டுக்குள் மூன்று வீடுகள் கிழக்குத் திசையை நோக்கியபடி இருந்தன. முன்னால் காலியிடம் ரிவால்வார் துப்பாக்கி போல இருந்தது. நுழைவாயில் சிறு சந்தைத் தாண்டியதும்.. நாலு மூலைக்கும் கிலுவை , முள் முருங்கை மரங்கள் நிற்க… அவற்றை இணைத்து தென்னங் கிடுகுகள் கட்டி கொல்லையென குளிப்பறை உருவாக்கப்பட்டிருந்தது. அதற்குக் கதவாக கிஸ்தான் சாக்கு தொங்கவிடப்பட்டிருந்தது.

கொல்லையை அடுத்து முருங்கை மரம் நின்றிருந்தது. அதற்கு வயது பற்றி யாருக்கும் தெரியாது.அதனடியில் தான் அந்த வீட்டில் பிறந்த குழந்தைகளின் தொப்பூள் கொடிகளும் , தண்ணீர்க் குடங்களும் , மாசு மற்றவைகளும் புதைக்கப்படும். அந்த மரத்தைப் பார்க்கையில் தூங்கும் குழந்தைகளை மடியில் போட்டுத் தடவியவாறு அமர்ந்திருக்கும் வயதான மூதாட்டி போலத் தெரியும். அம்மரம் இப்போது மரணத்தின் பிடியில் திணறிக் கொண்டிருப்பது காற்றடிக்கும் போதெல்லாம் தவசிக்குக் கேட்கும்.

முருங்கை மரத்தை ஒட்டி கிழக்காக உள்ள பகுதியில் தடுப்புச் சுவராக ,  சுழியன் பேரன் மாயன் வீட்டு மண்சுவர். தெற்கே பன்னிமுட்டி கருத்தமாவின் கொளுந்தன் ராசு வீட்டு மதில்கள். அதை ஒட்டி இடிந்து போன வீட்டு மண்… குவியலாகக் கிடந்தது. அருகில் முருங்கக்குச்சி ஒன்று நடப்பட்டு தளிர்த்திருந்தது.

அந்த மண் குவியலைப் பார்க்கும் பொழுது காளியம்மாளின் பிரியம் கசியும் சிவந்த முகம் நினைவுக்கு வரும். அவளுக்கும் தவசிக்கும் சமமான வயசு. ஒரு நாள் வெயில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்த மத்தியானத்தில்  தன் அம்மா சடையம்மாளுடனும் , அண்ணன் நாராயணனுடனும் கூமா பட்டியிலிருந்து காளியம்மாள் வந்தாள்.

அவளுடைய அப்பா கிணறு வெட்ட வேலைக்குப் போகிறவராம். ஏதோ கிணறு வெட்டு வேலை நடந்து கொண்டிருந்த பொழுது தவறி கிணற்றுக்குள் விழுந்து செத்துப் போனாராம். இந்த வீட்டின் சொந்தக் காரரின் தூரத்துச் சொந்தம் தான் காளியம்மாளின் அம்மா. தமக்கை முறையாம். பரிதவிச்சுக் கிடந்த சடையம்மாளுக்கு ஆறுதல் சொல்லி… வத்றாப்ல நடந்த கல்யாணத்துக்குப் போன இந்த வீட்டுக்கு சொந்தக்காரர் தான் இங்க கூட்டிட்டு வந்தாராம்.

காளியம்மாள் எப்பொழுதும் பளிச்சென்றிருப்பாள். அவளைப் பார்க்கையில் களுக்கென்று சிரிப்பாள். அதில் மயக்க வாசம் வீசும். அப்போது அவனுக்குள் மெல்லிய நடுக்கம் மின்னலிட்டு மறையும்.

Karthiksri Love feel drawings

தவசி தினமும் அவளைப் பார்க்கவும் பேசவும் அவளோடு சேர்ந்திருக்கவும் விரும்புவான். ஆனால் விடுமுறையில் தான் அதற்கான சந்தர்ப்பம் வாய்க்கும். அதனால் அவன் பள்ளியின் ஒவ்வொரு விடுமுறைக்காகவும் காத்திருப்பான்.

கருப்பட்டி பணியாரம் , வேக வச்ச வெள்ளச்சோளம் , வறுத்து வேக வச்ச புளியங்கொட்டைகள் , கலப்பரிசி , கேப்ப பிட்டு , வேக வச்ச தட்டாங்காய் , மொச்சப்பயறு என்று ஏதாவது தின்னக் கொடுப்பாள். அவனும் ஜவ்வு மிட்டாய் , களாக்காய் , புளிச்சிப்பழம் , பொரி உருண்டை , மாங்காய் கீற்று , சுக்கு மிட்டாய் என்று வாங்கிக் கொண்டு வந்து தருவான்.

காளியம்மாளுடைய அம்மா சடையம்மா தினமும் காட்டுக்கு வேலைக்குப் போவாள். உணவு சமைப்பது முதல் தெருக்கள் குழாயில் தண்ணீர் பிடித்து வருவது வரை எல்லா வேலைகளையும் செய்வது காளியம்மாள் தான். அவள் தன் வீட்டை மிகவும் சுத்தமாகவும் , அழகாகவும் வைத்துக் கொள்வாள்.

அவளது அண்ணன் பொறுக்கியாய் சுத்தி அலைந்தான். காசு வைத்து கோலி குண்டு விளையாடுவது தான் அவனை ஒவ்வொரு நொடியும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்தது. அவன் அதற்காகத் திருடத் தொடங்கினான். முதலில் தன் வீட்டில் ஆரம்பித்து மெல்ல மெல்ல அந்தத் தெருவின் பல வீடுகளில் தன் கை வரிசையைக் காட்ட ஆரம்பித்தான்.சில வேளைகளில் சிக்கி உதைபட்டிருக்கிறான். ஆனாலும் அவன் திருந்தவில்லை.

அவனது அம்மாவிற்கு அவனைக் கண்டாலே பிடிப்பதில்லை. பெரும்பாலும் அவனது அம்மா இருக்கும் நேரங்களில் வருவதில்லை. அவள் இல்லாத போது தான் வருவான். அப்போது தன் தங்கச்சி காளியம்மாளிடம் ஏதாவது சண்டை இழுத்து கண்ணு மூக்குத் தெரியாமல் அடித்துப் போடுவான். அவள் வேலைக்குப் போய்த் திரும்பும் அம்மாவிடம் எதுவும் மூச்சு விடமாட்டார். ஆனாலும் அவள் அம்மாவோ…கண்டுபிடித்துத் தன் மகனை மனம் போன போக்கில் திட்டித் தீர்ப்பாள். அப்படி திட்டுகிறபோது காளியம்மாள் தன் அம்மாவை சாந்தப்படுத்த முயற்சிப்பாள்.

ஒரு நாள் காளியம்மாளின் அண்ணன் ஆத்தாக்கண்ணு வீட்டில் கைக் கடிகாரத்தைத் திருடி விட்டான். அந்த வீட்டிலிருந்தவர்கள் அவனை கையோடு பிடித்து தெருவிளக்குக் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துக் கொண்டிருந்தார்கள். சாயந்திரம் மெல்ல வடிந்து கொண்டிருந்தது. அவன் அலறித் துடித்தான். அப்போது சோளக்காட்டுக்குக் களையெடுக்கப் போன சடையம்மாள் வந்து கொண்டிருந்தாள். தன் மகனை எல்லோரும் அடிப்பதைப் பார்த்துத் துடித்துப் போனாள். வேகமாக வீட்டுக்குப் போய் வாசல் கூட்டுகிற விளக்குமாறை எடுத்துக் கொண்டு வந்தாள். அதற்குள் அவனை கம்பத்திலிருந்து அவிழ்த்து விட்டு விட்டுப் போயிருந்தார்கள் எல்லோரும்.

வலியால் முனகியபடி இரத்தம் வழியும் வாயை இடது கையால் துடைத்தபடி நாராயணன் நடந்து வந்து கொண்டிருந்தான். சடையம்மாள் விளக்குமாற்றால் அவனை விளாசு…விளாசென்று விளாசினாள். ஏற்கெனவே புண்ணாகிப் போன அவன் அடி பொறுக்கமாட்டாமல் கதறியபடி வேகமாக ரயில்வே ரோட்டை நோக்கி ஓடிப் போனான். அவளும் தூவென்று அவன் போன திசைச் பக்கமாக காறித் துப்பி விட்டு வீட்டுக்குத் திரும்பினாள்.

நாராயணன் ஓடிப் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. முதலில் அவன் மேல் வெறுப்பாயிருந்த சடையம்மாள் மகனை நினைத்து…நினைத்து அழுதபடியே இருந்தாள். காளியம்மாளின் முகத்தில் இப்போது சிரிப்பே பூப்பதில்லை. அவளின் அண்ணன் போன இடம் தெரியவில்லை. தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் தன் மகனைப் பற்றி விசாரித்தாள் சடையம்மாள். ஒரு தகவலும் தெரியவில்லை.

அன்றைக்கு சடையம்மாள் காட்டுக்குப் போகாமல் வீட்டிலிருந்தாள். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. ஒரு போலீஸ்காரர் அந்தத் தெருவிற்கு வந்து சடையம்மாள் யாரென்று விசாரித்தார். சிலர் அந்த வீட்டிற்கு அவரை அழைத்து வந்தார்கள். அவர் சடையம்மாளைப் பார்த்து , ” நாராயணன் உங்க மகனா….? ” என்று கேட்டார்.

சடையம்மாள் பதட்டத்துடனும் , கேள்விகளோடும்.. ” ஆமாங்கய்யா…” என்றாள்.

உடனே போலீஸ்காரர் நடந்த சம்பவத்தை விவரித்தார். ” நாராயணன் தேனியில் எச்சில் இலை எடுப்பவர்களோடு திரிந்தானாம். ஒரு கல்யாண வீட்டுக்கு முன்னால்…முந்தா நாள்…கூட இருந்தவனுக்கும் இவனுக்கும் வாய்த் தகராறு வந்து முற்றி…அவன் நாராயணனை… பக்கத்தில் நின்றிருந்த மாட்டு வண்டியிலிருந்து சாவியை உருவிக் குத்திப் போட்டான். நாராயணனும் அந்த இடத்திலே செத்துப் போனான்.  பொணம் இப்ப பெரியாஸ்பத்திரியிலே வச்சுருக்காங்க. அவன் சட்டை கேப்பில் உங்க அட்ரஸ் இருந்ததால் தகவல் சொல்ல வந்தேன்… ” என்றார் அவர்.

சடையம்மாள் பெருங்குரலெடுத்து அழுதாள். காளியம்மாள்… மயக்கம் போட்டு விழுந்து விட்டாள்.

மகனை அடக்கம் செய்து விட்டு வந்த சில நாட்களில் சடையம்மாள் தன் மகளான காளியம்மாளைக் கூட்டிக்கொண்டு சொந்த ஊருக்கே போய்விட்டாள். காளியம்மாள் ஊருக்குப் போகும் போது அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுப் போனாள். அந்தப் பார்வை…மண்ணாக உதிர்ந்து கிடக்கும் அந்த வீட்டிலிருந்து தவசியை தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறது.

வசந்ததீபன்

One thought on “சிறுகதை: மண்ணாகிப் பார்க்கும் காதல் – வசந்ததீபன்”
  1. நல்லதொரு சிறுகதை. இறுதி வரி வரையிலும் மனம் பதைக்கிறது

    வாழ்த்துகள் தோழர் வசந்த தீபன்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *