அது ஒரு அமைதி சூழ்ந்த வீடு. பொருட்கள் இருக்க வேண்டிய இடத்தில் அடுக்கப்பட்டு, சுத்தமாக இருந்தன. தென்றல் காற்று அவ்வப்போது யாரையோ தேடுவதைப் போல வந்து செல்லும்.
குட்டி…… குட்டி…… என்றது ஒரு குரல், பதில் இல்லை. இப்போது சற்றே வேகமாய்,“அடி எருமை எத்தனை தடவை கூப்பிடுறது”, என்று சமையல் கட்டில் இருந்து விறுவிறுவென்று வந்தார் முகம் மாறியது, கண்கள் ஏமாந்து போனது சிரித்துக்கொண்டே தலையில் அடித்துக் கொண்டு சென்றார். மகள் வீட்டிற்கு வந்து சென்றாலே இப்படித்தான் இருக்கும் அம்மாவுக்கு. எங்கு பார்த்தாலும் மகளின் உருவம் தெரியும், இன்னும் வீட்டிலேயே தான் இருக்கிறாள் என்ற பிரமை. இன்னும் இரண்டு நாட்களில் வீட்டுக்கு வருவதாக தகவல் கிடைத்தப்பின் அவள் நினைவாகவே சுற்றிக் கொண்டிருந்தார் அம்மா. பனிமூட்டம் சாலையை சூழ்ந்துகொள்ள கதிரவன் கம்பீரமாக தோன்றும்போது பனி கூட்டங்கள் மிரண்டு ஓடும், அதேபோல குட்டி, வீட்டுக்கு வந்ததும் தனிமை அம்மாவை விட்டு மிரண்டு ஓடும்.
இன்று வெள்ளிக்கிழமை அம்மா மீனை சுத்தம் செய்து கொண்டே அவ்வப்போது சிரித்தாள், புன்னகைத்தாள். குட்டி பேசியது, அம்மாவை கேலி செய்வது, சிரிப்பூட்டும் வகையில் பாவனை செய்து ஆடுவது அனைத்தும் அம்மாவுக்கு நினைவுக்கு வரும் பொக்கிஷமான ஞாபகங்கள் .
வாரத்தில் ஐந்து நாள் அம்மா ஒருபொழுது இருப்பார்கள். மீதம் இரண்டு நாளில் சஷ்டி, பிரதோஷம், சதுர்த்தி, பௌர்ணமி என்று ஏதாவது வந்துவிடும். என்றாவது ஒரு நாள் மாமிசம் சாப்பிட வாய்ப்பு கிட்டும் கணவருக்கு பெரும்பங்கு, பிள்ளைகளுக்கு சிறு சிறு பங்கு மீதம் எஞ்சியது இரண்டு துண்டு. ஒரு குடும்பத்தில் பெண்ணானவள் மற்றவர்கள் நிறைவாக உண்டார்கள் என்று அக்கறை காட்டுவார். இலையில் உணவு தீர்ந்து விட்டால்,“எனக்கு உள்ள நிறையா இருக்கு நீங்க சாப்டுங்க” என்று பொய் சொல்லி அன்பாய் பரிமாறுவார்.
ஆனால் அந்தப்பெண் நிறைவாக உண்டாரா என்று எவரும் கவனிப்பதில்லை. தொலைக்காட்சியில் வாழை இலை நிறைய சிக்கன், மட்டன், நண்டு, இறால், முட்டை என்று அடுக்கி வைத்து உன்னும் நகைச்சுவை காட்சி ஒன்றை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மா.
“குட்டியியி….. சாப்பிட்டா இந்த மாதிரி சாப்பிடணும் குட்டி” என்று சற்று அசட்டுத்தனமாய் மனதில் இருந்த ஆசையை சொல்ல, அடுத்த முறை வீட்டில் மாமிசம் செய்யும்போது குட்டி, அம்மாக்கு தெரியாமல் தனக்கு ஒதுக்கப்பட்ட பங்கிலிருந்து இரண்டு துண்டும், தன் அண்ணனின் பங்கிலிருந்து இரண்டு துண்டும் எடுத்து அம்மாவின் பங்கில் சேர்த்தால். குட்டி விட்டு கொடுத்ததில் சந்தோஷமாக இருந்தாலும் அண்ணனுடைய பங்கிலும் கை வைத்தது அம்மாவுக்கு சற்று ஆச்சரியமாக இருந்தது.
“ஏன் அண்ணனுடைய தட்டில் இருந்து எடுத்த?”
“இல்லம்மா முதல்ல என் தட்டுல இருந்து ரெண்டு துண்டு எடுத்து உங்க தட்டுல வச்சா உங்க தட்டு நெறையல. மறுபடியும் என் தட்டுல இருந்து எடுத்தா என் பங்கு குறைஞ்சு போச்சு. அதனால அண்ணனோட பங்குல இருந்து சுட்டுட்டென்” என்று சாமர்த்தியமாக சொல்லி சிரித்தாள். இப்படி ஒரு விளக்கத்தை சற்றும் எதிர்பாராத அம்மா,” அடி ப்ராடு”, எப்போது போல நினைத்து சிரித்தார். மாமிசம் சாப்பிடும் பொழுதெல்லாம் அம்மாக்கு குட்டியின் நினைவு தான் வரும்.
சாயங்காலம் மணி ஐந்து ஆனதும் வழக்கம்போல சிவன் கோயிலுக்கு சென்று விளக்கிட்டு பிரகாரத்தை சுற்றி வந்து தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் இருந்து சாமியை நோக்கி பேச ஆரம்பித்தார். கண்கள் நன்றி கடலில் மூழ்கியது. மகளுக்கு நல்லபடியாக உடல் நலம் தேறி பெண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமாக வெளிநாட்டில் இருக்கிறார்கள். நீண்ட நாட்களாக மகனுக்கு நல்ல பொருத்தம் தேடியும் அமையவில்லை தற்பொழுது கைகூடியது அண்ணனின் திருமணத்திற்காக மகளும் ஓரிரு நாட்களில் வீடு வந்துவிடுவாள். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின் அனைவரும் ஒன்றாக இருக்கப் போவதை எண்ணி இறைவனிடம் நன்றி தெரிவித்தார். இறைவனை நமஸ்கரித்து விட்டு எழுந்து நடந்து செல்லும் பொழுது சற்று கால்கள் கடுத்தது. தாங்கி தாங்கி சிரமப்பட்டு நடந்தே சென்றார்.
கண்கள் சாலையை நோக்கி நடந்து சென்றாலும் எண்ணங்கள் எங்கோ கடத்திச் சென்றது. உதடுகள், காலில் ஏற்பட்ட வலியை ஜாடை காட்டினாலும் மறுபக்கம் தன்னையறியாமல் புன்னகை பூக்க எதிரில் வருபவர்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதை கவனித்து சிரிப்பை மறக்க முயற்சித்தார் முடியவில்லை. “ இந்த குட்டி மட்டும் இருந்துச்சுன்னா அழகா காலைப் பிடிச்சு விட்டிருக்கும். சீக்கிரமா வா குட்டி ரெண்டு காலும் உனக்காக வெயிட்டிங்”, என்று எண்ணிக் கொண்டே இருக்கும்போது குபீர் என்று சிரித்தார். “ப்பா…. அது தொடுர இடமெல்லாம் வலிக்கு எதமா இருக்கும். இன்னும் கொஞ்சம் அழுத்தினால் நல்லா இருக்கும் என்று கால் ரெண்டும் ஏங்கும்” . குட்டி, கால் பிடிக்கும்போது போது அவளுடைய மேல் உடம்பு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே இருக்கும். ஐந்து நிமிடத்திற்கு பிறகு உடல் மட்டும் ஆடுமே தவிர கைகளில் அழுத்தம் இருக்காது. கால்களில் வலி கூடிவிடும் அம்மா கண் விழித்து, “என்ன குட்டி ஒடம்பு தான் ஆடுது கை அப்படியே இருக்கு”, என்று குரல் கொடுக்க மீண்டும் பழையபடி நன்றாக பிடித்துவிடுவாள் . அவற்றையெல்லாம் நினைத்தபடியே வீடு நடந்து சென்றார் அம்மா.
அப்பா ஒரு பக்கம் தூங்கி எழுந்தவுடன் நாட்காட்டியின் முகத்தில் தான் விழிப்பார். மகள் வீடுத்திரும்ப இன்னும் எத்தனை நாள் இருக்கிறது என்று தினமும் புதிதாய் கணக்கிடுவார், இதில் நாட்களின் எண்ணிக்கை விரைவாக குறையவில்லை என்று சலிப்பு வேறு. எப்படியோ நாட்களும் கடந்து விமான நிலையத்தில் நின்றபடி தூரத்தில் வரும்போதே குட்டியை கண்டுவிட்டார்கள். மூவருக்கும் அவ்வளவு பெரிய புன்னகை, ஒரு வாய் பத்தவில்லை அவர்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்த. அருகில் குட்டி சென்றதும்,” கொண்டா என் பேத்தியை கொண்டா, உனக்கு ஒடம்புலாம் எப்படி மா இருக்கு டாக்டர பாத்தியா”என்று நலம் விசாரித்தப்படி கையில் தன் பேத்தியை அள்ளிக்கொஞ்ச அவர்களின் சந்தோஷத்தில் தன்னையே தொலைத்து நின்றால், மனதில்” இதற்குதானே ஆசைப்பட்டாய் பால குமாரி”, என்று தோன்றியது. மருமகனுக்கு வேலை அதிகமாக இருப்பதால் வர இயலவில்லை தாமதமாக வந்து சேருவார் என்பதில் சற்று அப்பா அம்மாக்கு வருத்தம்தான். காரில் ஓயாமல் பேச்சு சிரிப்பு என்று நாலு மணி நேரம் போனதே தெரியவில்லை. குட்டி வீட்டிற்குள் நுழையும்போது கோமாவில் இருந்த வீடு மீண்டு வந்தது போல அம்மாவுக்கு ஒரு நெனப்பு. அப்பா வழக்கம் போல் குட்டிக்கு பிடித்த தின்பண்டங்கள் அனைத்தையும் வாங்கி அடுக்கி வைத்திருந்தார். சின்ன குழந்தைங்க தான் புதிதாய் வரைந்த ஓவியத்தை அம்மாவிடம் திரும்பத் திரும்ப காட்ட, அம்மா ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது புதிதாய் பார்ப்பது போல “அடடா! ரொம்ப அழகா இருக்கே, சூப்பர்! சூப்பர்!” என்று சொல்லும்போது அக்குழந்தைக்கு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படும் அதுபோல அப்பா அனைத்தையும் ஏந்திக்கொண்டு மகளிடம் காட்ட, கம்பீரமாய் பார்த்து பழகிய தன் அப்பாவிடம் ஏற்பட்டிருக்கும் இத்தகைய மாற்றத்தைக்கண்ட குட்டிக்கு சற்று புதிதாக இருந்தது, இருப்பினும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் “பா ! என்ன இது? ஐயா! ஜாலி ஜாலி எனக்கா வாங்கிட்டு வந்தீங்க?”, என்று வியப்பை வெளிக்காட்டுவதை போல கேட்கவும் அப்பாக்கு ஒரே பூரிப்பு தாங்கவில்லை. அம்மா உடனே, “அதை ஏன் குட்டி கேக்குற நாலு நாளா உங்க அப்பா பண்ற அமர்க்கலம் தாங்கல, காலையில தூங்கி எந்திரிச்சு நேரா காலண்டரை பார்ப்பாரு யோசிச்சுக்கிட்டே இருப்பாரு வெளியே போயிட்டு வரும்போது ஏதாவது வாங்கிட்டு வந்து நிப்பாரு கேட்டா குழந்தைக்குப் பிடிக்கும் சொல்வாரு”. அப்பா ஒருபொழுதும் மகளை பெயரிட்டு கூப்பிட்டதில்லை குழந்தை என்று சொல்லி பழகி போய்விட்டது.
அண்ணனும் வீடு வந்து சேர்ந்தார். அண்ணன் எப்போது வீடு வந்தாலும் எந்த ஒரு மாற்றம் இருக்காது எப்போதும் போல ஒரே மாதிரியாக தான் இருக்கும். அவர் அறைக்கு சென்று தன் வேலையில் மூழ்கி கொண்டு இருப்பார், குடும்பத்துக்குள் எந்த ஒரு கலந்துரையாடலும் இருக்காது. ஆனால் இம்முறை அப்படி இல்லை. குட்டி எப்போது நேரம் கிடைத்தாலும் அண்ணனை ஓட்டிக் கொண்டே இருப்பாள் அம்மாவும் சேர்ந்து ஜால்ரா தட்ட அப்பா சற்று வெகுளி போல சிரித்தார். பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகள் இல்லாமல் தனியாக எத்தகைய வெறுமை,ஏக்கம் அனுபவித்திருப்பார்கள் என்று தன் அப்பாவின் சிரிப்பில் இருந்து குட்டி கண்டுகொண்டால்.. சற்று வேதனையாக இருந்தாலும் வாழ்க்கையானது சுழன்று கொண்டே இருக்க வேண்டும் அல்லவா ஒன்றும் செய்ய இயலாது அதன் போக்கில் போயாக வேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டாள். அம்மாவிற்கு உடல் நலம் சரியில்லாததால் பார்த்து பார்த்து வேலை பளுவை குறைக்கும் வகையில் எதையாவது வாங்கி அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி தந்தால் குட்டி. நீண்ட நாட்களுக்கு பிறகு வீடே இன்ப வெள்ளத்தில் மூழ்கியது போலிருந்தது.
திருமண நாட்கள் நெருங்க நெருங்க அப்பாவும் துருதுருவென்று வேலை செய்ய ஆரம்பித்தார். வெளியே போவதும் பொருட்கள் வாங்கிக்கொண்டு வருவதுமாக ஒரே பரபரப்பாக இருந்தது. அம்மாவுக்கும் வீட்டை சீர் செய்வது, திருமணத்திற்கு பலகாரம் செய்வது, நலுங்கு, பந்தக் கால் நடுவது என்று பல வேலைகள். அண்ணன் வரப்போகும் அண்ணியுடன் எந்நேரமும் அலைபேசியில். குட்டி அப்பாவுக்கும் அம்மாவுக்கும் எடுபிடி வேலை செய்து கொண்டு அதேசமயம் மகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இப்படியே நாட்கள் பறந்தோடின திருமணமும் நல்லபடியாக முடிந்தது மருமகளை வீட்டுக்கு அழைத்து வந்து விளக்கேற்றிய பிறகு குலதெய்வக் கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று அவசரமாக புறப்பட்டுக் கொண்டிருந்தார்கள் குழந்தை ஒரு பக்கம் தூக்கத்திற்கு அழ, ஒரு மாதிரியான இறுக்கம் சூழ்ந்தது. குட்டிக்கு இவர்கள் சீக்கிரம் இடத்தை காலி செய்யவேண்டும் என்று கோவமும் எரிச்சலும் தலைக்கு மேல் ஏறியது.. காரில் செல்வதற்கு முன் அம்மா, “குட்டி வீட்ல இருக்குற பழத்தை சாப்பிடு நான் வந்து சாப்பாடு சமைச்சு தரேன் என்று சொன்னார்”. அப்பா வழக்கம் போல, “மா வீட்டை பூட்டிட்டு பத்திரமா இரு” என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள். அப்பா கார் ஓட்ட அம்மா பக்கத்தில் இருக்கும் இருக்கையில் அமர, பின்னிருக்கையில் அண்ணனும் அண்ணியும் அமர்ந்தார்கள்.
அனைத்து கதவுகளையும் அவசர அவசரமாக அடைத்துவிட்டு தன் அறைக்குச் சென்று வேகவேகமாக உடைமாற்றிக்கொண்டு வீல் வீல் என்று கத்திக் கொண்டிருக்கும் குழந்தைக்கு பால் கொடுத்து சமாதானம் செய்தாள். பால் குடித்துக் கொண்டிருக்கும் பொழுது குழந்தை தூங்கி விட்டது, குட்டியும் கண் அசந்தாள். நீண்ட நேரம் உறங்கியது போல் ஒரு உணர்வு தென்பட திடுக்கென்று விழித்தாள் . தூங்கி எழுந்ததும் நிசப்தம் சூழ அந்த அமைதி புதிதாய் இருக்க அசவுகரியம் ஏற்பட்டது. தன் உணர்வை திசைமாற்ற பழங்களைக் கழுவி சின்னசின்ன துண்டுகளாய் வெட்டி உண்ணும் பொழுது நல்ல மனம் கொண்ட பழத்தின் சுவை மட்டும் களவாடி போனது போல் ஒரு உணர்வு.மீண்டும் கடித்த சாப்பிட மனம் ஒப்பவில்லை எடுத்து வைத்துவிட்டால். இனம் புரியாத அச்சமும் கலவரமும் எழ தந்தைக்கு அலைபேசியில்அழைக்க, “ நீங்கள் டயல் செய்து எண் சுச்ஆப் செய்யப்பட்டுள்ளது”, என்று வர குட்டிக்கு ஒன்னும் விளங்கவில்லை. “சரி சார்ஜ் இறங்கி இருக்கும்”, என்று சமாதானம் செய்துகொண்டு வீட்டில் எங்கு பார்த்தாலும் துணிப்பை, தட்டு வரிசை, பாத்திரங்கள் இருக்க அவற்றையெல்லாம் அகற்றி வேறு இடத்திற்கு மாற்றிக்கொண்டு இருக்கையில் சிறுசிறு ஞாபகங்கள் மலர்ந்தது.
அப்பா தன் மகளை கொஞ்சிய காட்சி நினைவுக்கு வந்தது. கல்லூரி படிக்கும் காலத்தில் பேருந்தில் செல்லும்போது தாய் மடியில் அமர்ந்திருக்கும் இரண்டு வயது குழந்தையை கண்டால். அடிக்கும் பஞ்சுமிட்டாய் நிறத்தில் கவுன் அணிந்து,இரட்டை ஜடையில் பெரிய செயற்கை பூ வைத்திருந்தது. மூக்கு ஒழுகிய வண்ணம் அம்மாவின் மார்பில் சாய்ந்த படி இருந்தது. முதல்முறை பார்க்கையில் ஏனோ குட்டிக்கு அந்த குழந்தை மீது எந்த ஈர்ப்பும் இல்லை. மீண்டும் மீண்டும் பார்க்கையில் விசித்திரமான ஒரு ஆசை எழுந்தது. தனக்குத் திருமணமான பிறகு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்து அதை தன் அப்பாவின் கையில் கொடுக்கும் பொழுது எப்படியெல்லாம் சீர் ஆடுவார் என்பதை கற்பனை செய்து வைத்திருக்க,, சிறிதும் பிசிறு தட்டாத வகையில் அவர் குழந்தையுடன் இருந்த காட்சி அப்படியே பிரதிபலித்தது.இப்பொழுது அதை நினைத்துப் பார்க்கும்போது குட்டிக்கு ஒரே குதூகலம் ,பூரிப்பு ஏதோ பெரிதாய் சாதித்த உணர்வு ஏற்பட்டது.
குட்டி தன் அப்பா அம்மா மனம் நோகாத வகையில் நடந்து கொள்வாள். தனக்கென்று பெரிய விருப்பு வெறுப்பு என்று ஏதும் இல்லை பெற்றோர்களின் விருப்பம் தான் இவளுடைய விருப்பம். கடைக்கு சென்று ஒரு துணி வாங்குவதோ அல்லது நகை வாங்குவதோ ,படிப்பு, வேலை, மாப்பிள்ளை என்ன அனைத்திலும் அவர்கள் தேர்வு செய்வதையே நிறைவாக ஏற்றுக்கொள்வாள். சில சமயத்தில் பிடிவாதம் பிடிப்பதும் உண்டு தவறான முடிவு எடுக்கும் பொழுது நன்மை தீமையை பக்குவமாக எடுத்துச் சொன்னால் புரிந்து கொண்டு அமைதியாகி விடுவாள். பெற்றவர்களின் சூழ்நிலை குணமறிந்து அதற்கேற்றவாறு தன் மனநிலையை மாற்றிக் கொள்வாள்.
ஒரு உறவு பலமடைய தற்காலிக பிரிவினை மிக அவசியம் என்பார்கள். குட்டி பொறுத்தவரை இது உண்மையாயிற்று. திருமணத்திற்கு பின் தன் பெற்றோரிடம் அதிகபடியான பிணைப்பு ஏற்பட்டது. சனி, ஞாயிறு ஆனதும் அண்ணன் வீட்டிற்கு வந்துவிடுவார். அம்மா குட்டியை எப்படி கவனித்துக் கொள்வாரோ அதேமாதிரி அண்ணனை நன்றாக கவனித்துக் கொண்டாள்.. புளிப்பான சாம்பார், உருளைக்கிழங்கு வருவல்,முறுகலான தோசைக்கு வெங்காய சட்னி, சப்பாத்திக்கு கறி குழம்பு, பிரியாணி, நிறைய பூண்டும் சின்ன வெங்காயமும் போட்டு காரக்குழம்பு ,மீன் குழம்பு,நண்டு, இறால் என்று பிடித்தவை மட்டும் தேர்வு செய்து சமைத்து தருவதுண்டு. அண்ணன் பிரியமாக வெளுத்து வாங்கினாலும்,”இன்னும் அம்மா பக்குவம் வரல உனக்கு” என்று சொல்லும்பொழுது கடுப்பு ஏறும். அதேபோல அப்பா அம்மா வீட்டிற்கு வந்தாலும் அவசர அவசரமாக வீட்டை சுத்தம் செய்து வைப்பாள் இவர்களும் பொண்ணு நல்லா பொறுப்பா இருக்கிறதா நினைத்து பெருமிதம் கொள்வார்கள். இருவரும் தன் வீட்டில் வந்து தங்கும் சமயத்தில் அம்மாவை ஒரு வேலையும் செய்ய விட மாட்டாள்,” குட்டி போரடிக்குது குட்டி ஏதாவது வேலை குடு, ஒரே இடத்துல உட்கார்ந்து இருக்கிறது உடம்பு பாரமா இருக்கு கொஞ்சம் இப்படி அப்படி ஆசை ஃப்ரீயா இருக்கும்”, என்று அம்மா கெஞ்ச “எல்லாம் நான் பாத்துக்குறேன் உடம்பு பாரமா இருக்குனா சாயங்காலம் வாக்கிங் போகலாம் நீங்க எந்த வேலையும் செய்யக் கூடாது”, என்று கண்டிஷனாக சொல்லும்போது அம்மா சிறிது நேரம் அமைதியாக இருக்க பின் சண்டை பிடித்துக்கொண்டு வேலையில் இறங்கி விடுவார்கள். திருமணத்திற்கு முன் சமயல் அறையை எட்டி பார்க்காத அவள் தன் மொத்த அன்பையும் சமையலில் கொட்டி படைத்தாள். ஆசை ஆசையாய் சமைத்ததை அவர்கள் ரசித்து உண்பதில் இவளுக்கு பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. இதெல்லாம் குட்டியின் மனதிற்கு மிக நெருக்கமான நினைவுகள். வெளிநாட்டிற்கு குட்டி செல்வதில் அண்ணனுக்கும் பெற்றோர்களுக்கும் சிறிதும் விருப்பமில்லை ஆனால் குட்டிக்கு வெவ்வேறு ஊருக்கு செல்வதில் மிகுந்த ஆர்வம் அதனால் கணவருக்கு இடமாற்றம் கிடைத்ததில் மிகுந்த சந்தோஷம் தான். எப்போதும் குட்டியின் மனதில் ஒரு ஆசை அரித்துக்கொண்டே இருந்தது தன் பெற்றோர்களை ஓரிரு மாதங்கள் தன்னிடம் இருக்கச் செய்து அவர்களுக்கு நல்லவிதமாக பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான். அப்பாவும், அண்ணனுக்கு திருமணம் முடிந்தவுடன் வந்து தங்குவதாக வாக்களிக்க காசா பணமா எப்படி எல்லாம் உபசரிக்க வேண்டும் என்று டிசைன் டிசைனாக பிளான் போடுவாள்.
பழைய நினைவுகள் கட கட……… கட கட…… என்று ஓடுகையில் மனம் உற்சாகம் பெற்று சுறுசுறுப்பாய் அனைத்து வேலையும் முடித்துவிட்டு சற்று அசந்து உட்கார வாசலில் அழைப்பு சப்தம் கேட்க அதேசமயம் அலைபேசியில் அழைக்க தூங்கும் குழந்தை விழித்து விடுமோ என்று சற்று தடுமாறி பின் சுதாரித்தாள் . அலைபேசியில் பெண்வீட்டார் அழைக்க அவர் குரலில் ஏதோ ஒரு தயக்கம் தட்ட, பிறகு விஷயத்தை பட்டென்று போட்டு உடைக்க பேய் அறைந்தது போல் இருந்தது, இதயம் வேகமாக துடிக்க, அடி வயிற்றில் ஏதோ பிசைவது போல உணர்வு, அழுகை வரவில்லை ஆனால் பதற்றம் தலைக்கேறியது ஏதோ சினிமா கதை கேட்டது போல இருக்க “இவர்களுக்கா இப்படி ஒரு நிலை” என்று குழப்பத்திலிருந்து வெளி வர இயலவில்லை. படத்தில் சில காட்சிகள் ஒவ்வொன்றாக கண்முன் வந்து மறைய, “அதுமாதிரி ஏதாவது அதிசயம் நடந்து அவர்கள் மீண்டு வர மாட்டார்களா?, என்ற தாபம். ஏதோ ஒன்று தொண்டை குழியை நெருக்கி முட்டுவது போல் இருந்தது. “ சீச்சீ…. இருக்காது அவர்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றும் ஆயிருக்காது” என்று தன்னைத் திடப்படுத்திக் கொண்டாலும் , வந்த செய்தி தெளிவாக இருந்தது செவிகள் இச்செய்தியை ஏற்க மறுத்தது “இது எப்படி சாத்தியம், அப்படி என்ன அவசரம்”, என்று எண்ணிக் கொண்டு வாசலில் நிற்க நண்பர்கள் உறவினர்கள் என்று பெருங் கூட்டம் சூழ்ந்து இருந்தும் அனாதையாய் நின்றால் குட்டி.
பா.திவ்யா செந்தூரன்
விழுப்புரம்

