வித்தகனூர் என்பது மாபெரும் ஊர். பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றிற்கு அண்டை ஊரார்களால் பெயர் பெற்ற ஊர். அவ்வூரின் தற்போதைய தலைவர் பனை ஓலை முறை தேர்தலுக்குப் பின், ஓட்டு போட்ட பானைனையையே மாற்றி தந்திரத்தால் வென்ற தலைவர் என்பது பின்னர்தான் தெரியவந்தது.குடி,போதை, புகை போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்.வீட்டில் புலியாக இருக்கும் தலைவர், நாய்கள் சண்டை போடுவதைப் பார்த்தால் கூட எலியாகி பதுங்கிவிடுவார். ஊரில் அவ்வப்போது தண்ணீர் சண்டை, விடலைப் பசங்க சண்டை வரும் போதெல்லாம் மன்னர்கள் நகர்வலம் போவதுபோல இவர் உலக வலம் சென்று விடுவது அவருக்கு வழக்கம். அடிக்கடி இவ்வாறு ஊதாரியாக ஊர் சுற்றுவதால், செல்வமெல்லாம் அழிந்து கடனாளியானார். வீட்டிலிருந்த காசி,பித்தளை சாமான்கள் எல்லாம் அடகு கடையிலேயே சிறைபட்டன. மனைவியின் 916 KDM கூட சேட்டுக் கடையில் அடைக்கலமானது. .இதையெல்லாம் அறிந்திருந்த ஒரு சில முதலாளிகள் அவருக்கு பணம் கொடுத்து உதவினர். ஊர்த் தலைவர் மேலும் ஊதாரியானார்.ஆனால்,பணத்தைத் திரும்ப கேட்கவில்லை. தலைவர் கைம்மாறாக ஊரில் உள்ள பொறம்போக்கு நிலத்தையெல்லாம் சிறிது சிறிதாக முதலாளிகளுக்கு உரிமையாக்கினார். ருசி கண்ட பூனை ஏழை எளியோரின் நிலம், உடைமைகளை தனதாக்கியது. இவ்வாறு அனைத்தையும் வித்ததால் அது வித்தனூர் ஆனது. அந்த பெயர் கசப்பான நினைவை கிளறியதால், ஊர்த் தலைவர் கெளரவமாக ‘வித்தகனூர் ‘ ஆக்கினார்.
அது மாலை சுமார் ஐந்து மணி இருக்கும். சூரியன் தனது ஒளி கைகளை சுருக்கிக் கொண்டு நிலாவுக்கு வழி விட தயாரானான். அப்போது அந்த உலக தரம் வாய்ந்த வித்தகனூர்,மல்டி டகால்டி மருத்துவமனையிலிருந்து சுமார் 25 அகவையுள்ள இளைஞி வெளியே வந்தாள். அவள் பெயர் நியூனா, க.பூ.பி.நி(கரப்பான் பூச்சி பிடிக்கும் நிறுவனம்) வில் க.பூ.க. (கரப்பான் பூச்சியைக் கண்டு பிடிக்கும்) பணியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிகிறாள்.
அவள் கணவன் பெயர் நியூனார்.அவர் குப்போலோ மருத்துவமனையில் பிளேடு சிகிச்சை நிபுனராக கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார். அவர்களுக்கு இரண்டு வாரிசுகள்.பெரியவள் பெண்,புலிஃபோர்டு மெட்ரிக் பள்ளியில் 3- ஆம் வகுப்பில் படிக்கிறாள். அடுத்து ஆண், அதே பள்ளியில் ப்ரி ப்ரிகே ஜி யில் படிக்கிறான்.
அது வெங்காய வைரஸ் பெருந்தொற்று காலம். அதனால்,மருத்துவமனையிலிருந்து வெளிவந்த நியூனா எம்99 வைரஸ் பாதுகாப்பு உடையை அணிந்திருந்தாள். உலகம் முழுதும் உள்ள மனிதர்கள் ஒரு சிலரைத் தவிர எல்லோரும் அதை அணிந்திருந்தனர்.அப்படி அந்த ஆடையை உடுத்தாதவர்களை மருத்துவ ஊழியர்கள், காவலர்கள் உதவியுடன் ஆட்டுப் பட்டியில் அடைத்து பயமுறுத்தும் திட்டமும் நடைமுறையில் இருந்தது. இதற்கு பயந்தே பெரும்பாலானோர் எம் 99ஆடையை அணிந்தனர். இந்த ஆடையை அணிந்த உடனே உடலில் தோலில் உள்ள நுண்துளைகள் வழியே வெளியேறிய வியர்வையெல்லாம் யூரின் போல பாதங்களையொட்டி ஒடியது. இதுவே எல்லோருக்கும் பொதுவானதால் வியர்வைக்கும் சிறுநீருக்கும் வேறுபாடு இல்லாமல் போனது. . ஆடையில் மூக்கருகில் சுவாசிக்க பைப்புகள் செருக ஏதுவாக இரண்டு துளைகள், அவை முதுகிலிருந்த ஆக்ஸிஜன் குடுவையில் இணைக்கப்பட்டிருந்தன.வாயிருக்கும் இடத்தில் சோறு தின்ன ஜிப் வைத்த இடைவெளி, மேலும் கழிவு நீக்கத்திற்கு என அனைத்து வசதியும் கூடியது அந்த ஆடை .
நியூனாவுக்கு கிருமி கொல்லி மருந்தடித்த ஊழியர், அவளது கார், கார் சக்கரம் என அனைத்தையும் கிருமி கொல்லியால் சுத்தம் செய்தார். நியூனா கார் கதவருகில் சென்றவுடன் கதவு தானே திறந்தது. காரில் அமர்ந்த அவள், இடது கை உள்ளங்கையை முகத்து நேரே வைத்தவுடன், உள்ளங்கை சதையோடு பொருத்தியிருந்த செல்பேசியின் ஒலி & ஒளி உயிர்பெற்றது. செல்பேசி திரையில் மேப்பை தொட்டாள், வாயருகே கொணர்ந்து ‘ஹோம்’ என உச்சரித்தாள். நவீனா இருக்கும் இடத்தையும் அவள் வீட்டையும் இணைத்து ஊதா வண்ண வழிதடத்தைக் காண்பித்தது,செல்பேசி திரை. செல்பேசி ஜிபிஎஸ் காரின் ஜிபிஎஸ் – உடன் இணைக்கப்பட்டிருந்ததால், காரை உயிர்ப்பித்து விட்டாள். தானியங்கி முறையில் கார் தானே நகர ஆரம்பித்து நீயூனாவின் வீடு நோக்கி வேகமெடுத்தது.நியூனாவின் பார்வை காரின் கண்ணாடி வழியே சாலையின் இருபுறங்களையும் கவனித்தன. மக்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாதவாறு எம்99 ஆடையில் நகர்ந்து கொண்டிருந்தனர்.சாதி, ஏழை, மதம் எல்லாத்தையும் வெங்காய வைரஸ் மறைத்து விட்டிருந்தது.
அவள் நினைவு அன்று காலை 4 மணியைத் தொட்டது. தினந்தோறும் க.பூ.பி.நிறுவனத்துற்கு 9.30 மணிக்குச் செல்ல வேண்டும். காலை ஐந்து மணிக்கு எழுந்து பழகியவளுக்கு, விடுமுறையான ஞாயிறு அன்றும் அதே நேரம் எழுந்து விட்டாள். எம்99 ஆடையில் வாயிடம் இருந்த ஜிப்பைத் திறந்து, மவுத் வாஷுடன் நான்கு சொட்டு கிருமி நாசினியைக் கலந்து வாயைக் கொப்பளித்தாள். வாயில் ஒரு புத்துணர்வு, பற்கள் எல்லாம் பளபளத்தன, நான்கு தங்க பற்களும் சிரித்தன. இந்த கிருமிகள் மட்டும் இல்லனா எவ்வளவு நல்லா இருக்கும் என நினைத்துக் கொண்டு, இடது உள்ளங்கையில் இருந்த செல்பேசி திரையில் ‘பிக்கி’ யைத் தொட்டு காஃபி ஃரீ காஃபி ஒன்றை ஆர்டர் செய்தாள். அவள் காஃபி நோய்க்கு கடந்த ஆறு வருடமாக மாத்திரை சாப்பிடுகிறாள். காஃபி நோயைப் போக்க தண்ணீர் சுட வைத்தல், சமைத்தல் போன்ற வேலைகளைத் தானே செய்து வருகிறாள். காஃபி கான பில் வந்தது.
காஃபி 9 செயின்
நீர்வரி 4.50 செயின்
தீ வரி 3.50 செயின்
மா.சே.வரி 2.50 செயின்
ம.அ.சே.வரி 2.50 செயின்
மொத்தம் 22.00 செயின் நியூனாவின் ‘நோ பேங்க்’ கணக்கிலிருந்து வரவு வைக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்தது.
அவ்வூரில் ஞாயிற்றுகிழமைகளில் அனைவரும் கட்டாய முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்பது அவ்வூரின் சட்டம். அதற்காக, பரிசோதனை இயந்திரத்தை வீட்டிலேயே வாங்கி வைத்திருந்தாள்,நியூனா ;ஆன்டி- வைரஸ் அப்டேட் செய்தாள். அதற்கு நோ பேங்க் வங்கி கணக்கிலிருந்து 300 செயின் டெபிட் ஆனது. ஐந்து நிமிடத்தில் பரிசோதனை முடிந்து முடிவு செல்பேசிக்கு வந்தது.
சர்க்கரை – 175 Mg
இரத்த அழுத்தம் – 80/90
கொலஸ்ட்ரால் – 117
காஃபி – 28mg(புதிய நோய்)
வெங்காய வைரஸ் தொற்று – பாஸிட்டிவ்
என பரிசோதனை முடிவு வந்தது. உலகம் முழுதும் வெங்காய வைரஸால் மக்கள் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்தனர். மருத்துவமனை, மருந்து கடைகள், அத்தியாவசிய உணவு பொருள் கடைகள் தவிர மற்ற கடைகள், மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வெங்காயத்தை தோலுரிக்கும் போதும், வெட்டும் போதும் கண் எரிந்தால் அவருக்கு வெங்காய வைரஸ் தொற்று உள்ளதை உறுதி செய்து கொள்ளலாம். இது அனைத்து ஊடகங்களின் வழியே அடிக்கடி விளம்ரம் செய்து மக்களை விழிப்புணர்வு (பயமுறுத்தல்) செய்து கொண்டிருந்தது, அரசு. நியூனா பீதியோடு வெங்காயத்தை உரித்தாள். உடனே வாடையும் எரிச்சலும் ஒரு சேர வந்தது, கண்ணில் கண்ணீர் கசிந்தது. கணவன் குழந்தைகள் யாரையும் தன்னை நெருங்க விடவில்லை. எட்டடி சமூக இடைவெளியை வீட்டிலும் தவறாது கடைபிடித்தாள். நியூனாவின் குழந்தைகள் மற்றும் கணவர் ” நாங்களும் கூட வருகின்றோம்” என்றனர். வைரஸ் தொற்று அவர்களுக்கும் பரவிவிடும் என்ற பயத்தால் அவளே மருத்துவமனை செல்ல முடிவெடுத்தாள். கார் முழுவதும் கிருமி கொல்லியால் சுத்தம் செய்யப்பட்டது. அவள் மல்டி டகால்டி மருத்துவமனை நோக்கி விரைந்தாள்.
காரில் செல்லும் போது அங்கங்கே தென்பட்ட துப்புரவு தொழிலாளர்களின் வண்டியிலே வீட்டிலே இருந்த வெங்காயம் எல்லாம் குப்பை வண்டியிலே வழிந்தது.
விவசாய நிலங்களில் இருந்த வெங்காயங்கள் எல்லாம் அரசால் தீயிட்டு அழிக்கப்பட்டன. வெங்காய காடுகள் எல்லாம் சாம்பல் பூத்திருந்தன.விவசாயிகள் எல்லாம் தலையிலும் முகத்திலும் அடித்துக் கொண்டு அழுது தீர்த்தார்கள். மழைக்காக ஏங்கினோம் மழை சரிவர பெய்யவில்லை;விலைக்காக போராடினோம் அதுவும் எங்கள் கையில் இல்லை, அரசும் எங்களுக்காக இல்லையென நிறைய விவசாயிகள், பயிர்களுக்கு தெளிக்க வாங்கிய மருந்துகளைக் கொண்டு சொர்க்கம் புகுந்தனர்.
வெங்காய விலை கிலோவுக்கு 100 செயினைத் தொட்ட போது ஊடக பேட்டியாளர் ஒருவர் ” வெங்காய விலையேற்றம் ஏழை எளியோரை பாதிக்குமே, அதற்கு உங்கள் பதில் என்ன ?” என்று கேட்டபோது மேல் தட்டைச் சேர்ந்த பெண் மந்திரி ஒருவர் “நாங்களெல்லாம் வெங்காயத்தைப் பயன்படுத்துவதில்லை” எனக் கூறியது வெங்காயத்தை ஒதுக்க நல்ல ஊக்கமாக அமைந்தது, நியூனாவிற்கு. ஒருவேளை பேட்டியாளர்கள்” துணிகளின் விலை ஏறிவிட்டது என்ன செய்வது?” என அந்த மந்திரியிடம் கேட்டிருந்தால்!
கார் அந்த உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனை வாயிலில் நின்றது. மருத்துவமனை காவலாளி ஒருவர் ஓடிவந்து, காரைக் கிருமி கொல்வியால் சுத்தம் செய்தார்; நவீனாவிற்கும் தெளித்தார். மீண்டும் மீண்டும் கிருமி கொல்லியால் மூச்சுத் தினறிய கார்,மனிதனைத் திட்டியதை மனிதன் உணரவில்லை.கார் கதவு தானே விலகி அவள் கீழிறங்க வழி விட்டது. மருத்துவமனைக்கே உரிய பரபரப்பு மருந்து மாத்திரை நெடி, விழிப்புணர்வு வாசகங்கள், நோய் குறிகள் போன்ற தகவல் பலகைகள் அவளுக்கு எந்த விதத்திலும் உற்சாகத்தைக் கொடுக்கவில்லை. முதலில் வரவேற்பறையில் இருந்த பெண் நவீனாவின் பெயர், விலாசம், செல்பேசி எண் போன்றவற்றை கணினி எழுத்துப் பலகை மூலம் பதிவு செய்து விட்டு சமூக இடைவெளி விட்டு போடப்பட்டிருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். அப்போது எம்99 உடையில் வந்த உருவம் இவளின் நெற்றியை ஒட்டி வெப்பமானியை வைத்து சூட்டின் அளவைக் குறித்துக் கொண்டு அடுத்ததாக நவீனா மருத்துவரைச் சந்திக்கலாம் என்றாள்.
உள்ளே போன நவீனா வீட்டில் செய்த பரிசோதனை ரிப்போர்ட்டைக் மருத்துவரிடம் காண்பித்தாள். அதை கவனித்து விட்டு மருத்துவர் ஒரு வீட்டில் பரிசோதனை செய்ய வேண்டிய சோதனைப் பெயர்களை வரிசைப் படுத்தியிருந்தார். மீண்டும் பரிசோதனை முப்பது நிமிட காத்திருப்பிற்குப் பிறகு முடிவு வந்தது. காஃபியும் வெங்காய வைரசும் உறுதியானது . சிகிச்சைக்குத் தேவையான பணத்தைக் கட்டச்சொல்லி ஒரு நர்ஸ் கூறவே, நவீனா பணம் கட்டும் அறைக்குள் சென்று அங்கிருந்த பெண்ணிடம் ஏடிஎம் அட்டையைக் கொடுத்தாள்.அதை வாங்கியபெண் அதை அந்த இயந்திரத்தின் வாயில் செருகினாள், பணத்தை உறுஞ்சிவிட்டு வெறும் அட்டையை வெளியே தள்ளியது.
காஃபி நோய், வெங்காய நோய் அனைத்துக்கும் பரிசோதனை, மருத்துவம் செய்து முடித்தப் பின் வெளியே வந்தாள். அதே காவலாளி, கிருமி கொல்லி தெளித்து விடை கொடுத்தார். … ஏடிஎம் அட்டையைப் போல வெறும் மனுஷியாக காருக்குள் நுழைந்தாள். கார் வீட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. மனித உலகை மறந்து கார் கண்ணாடி வழியே தெரிந்த கருப்பு வெள்ளை மேகங்கள் இடைவெளியின்றி கட்டி புரண்டுவிளையாடி சென்றுக்கொண்டிருந்தன. வரிசையாகவும் V வடிவத்திலும் நாரைகள், கொக்குகள், குருவிகள் எல்லாம் சமூக இடைவெளியின்றி, முக இருப்பிடம் நோக்கி விரைந்தன.


மு.பரமதயாளன்
பாண்டிச்சேரி.
இந்த கொரோனா சூழலுக்கேற்ற விழிப்புணர்வு சிறுகதை அருமை. அதில் மல்டி டகால்டி, க.பூ.பி.நிறுவனம், காஃபி நோய், வெங்காய நோய்,எம் 99 வைரஸ் பாதுகாப்பு ஆடை,நோ பேங்க் என அனைத்தும் சிறப்பாகவும் சிரிக்கும் விதமாகவும் சிந்தனையை தூண்டும் விதமாகவும் இருந்தது. நன்றி தோழர்.
கதை சிறப்பாக உள்ளது தோழர். சமகால நிகழ்வுகளை புனைவு நகைச்சுவை கலந்து சிறப்பான படைப்பு. வாழ்த்துகள் தோழர்