குறுங்கதை: தேடாத கிளையில்லை – தங்​கேஸ்

குறுங்கதை: தேடாத கிளையில்லை – தங்​கேஸ்

கண்கள் பிறழ பிறழ ஒரு அதீத காட்சி, காட்சிகளின் வழியே கண்ணுக்குள் இறங்கும்  காலத்தின் அதீதம் படிமங்களாக. வாசற்படி முழுவதும் சிதறிக் கிடக்கும் சருகுகளின் காடுகள் சருகுகளின் காடுகளுக்குள் எப்பொழுதும் கேட்டவண்ணமிருக்கிறது உதிர்தலின்மொழி. உதிர்தலின் மொழியை கேட்கும் இதயத்தின் செவிகள் துடிப்போசையை  சருகுகளின் ஒசையாக மாற்றியவண்ணமிருக்கின்றன.காலை இளவெயிலில் மூன்று  சுண்ணாம்பு   தீற்றல்களை   முதுகினில் சுமந்திருக்கும் துடுக்கான அணிலொன்று பறவையின் குரலில் வீச்வீச் என்று காதுகள் விடைக்க வால்துடி துடிக்க துடிக்க இன்னிசைக் கச்சேரியை எழுப்பியபடியே  கிளைகிளையாக  தாவிக்கொண்டிருக்கிறது அதிரும் கிளைகளிலிருந்து  உதிரும்  மஞ்சள் அரளிப்பூக்கள் இந்த  நாளுக்கான சிறப்புக்கொடை. மஞ்சள் இளம்வெய்யில் அந்த சின்ன ஜந்துவின் உருவத்தை  உற்சாகத்தின் உருவமாய் கிளைகளில் சமைத்து வைத்துக் கொண்டிருக்கிறது உஸ்ஸூஸ் ஒரு காற்றலை வந்து சருகுகளை அள்ளிக்கொண்டு செல்கிறது. கைலாசத்திற்கான கடைசிப்பயணம் போல  அத்தனை ஆனந்தமாக லயிப்பில் மயங்கிய சருகுகள் மிதந்து செல்கின்றன  .

நினைவுச்சுழலில் மனம் சுழல்கிறது. சுழலின் தீவிரத்திலும் மெய்யென்னும் நீர்பாம்பு அடிக்கடி  மேற்பரப்பிற்கு வந்து தலைதூக்கி சீறி தன் இருப்பை அவ்வப்போது காட்டிக்கொள்கிறது .

இருகரங்கள் உயிரைப்போல ஒன்றாகப் பிணைந்தபடி நீலகிரி மலையின் தொட்டபெட்டாவில் உள்ள  உயர்ந்த  மலைச்சிகரத்தில் காலவெளியில் ஊர்வலம் போய்  கொண்டிருக்கின்றன  . கேட்காமலே  ஈரப்பனித்துளிகள் அதன் மேல்வந்து செல்லப்பிள்ளைபோல  ஒட்டிக்கொள்கின்றன .  ஒட்டிக்கொள்வதும் உறவாவதற்குத்தான் என்றபடி பிணைந்த விரல்கள் உறவென்னும்  வீணையை  மீட்டியபடி  காலத்தில் இசைசித்திரங்களாகி மன உருவத்தை வெட்டவெளியில் வரைந்துகொண்டிருக்கின்றன. மாமாங்கங்கள் நொடிப்பொழுதுகளாக மாறி நெருப்பின் முன் பனிக்கட்டிகளாக உருகி ஓடிக்கொண்டிருக்கின்றன.



கடைசியில்   அதோ வந்து  விட்டது இதன் ஜோடி. தாவுதீர இவ்வளவு நேரம் கத்தித் தீர்த்துக்கொண்டிருந்த இளம் அணிலுக்கு உற்சாகம் கரைபுரள ஆனந்தம் எல்லைமீறிவிட்டது . பரவசத்தின் சிலிர்ப்புகளை தாங்கிக்   கொள்ள முடியாமல் உடலெல்லாம்  உதறலெடுக்க அது      கிளைக்கு  கிளை தாவுகிறது தலைகீழாக ஓடிஓடி குதித்துப்பார்க்கிறது. அம்பு போல்   மண்ணில் பாய்ந்து மஞ்சள்  அரளிப்பூக்களில் புரண்டுவிட்டு  புழுதியோடு கொஞ்சம்  மகரந்தச்சேர்க்கை நடத்திவிட்டு  மீண்டும்  கிளையேறி கிறுக்குத்தனம்  பண்ணிக்கொண்டிருக்கிறது இணையின்   கடைக்கண் பார்வையில் மோகலாகிரி முற்றி ஆனந்தக்கூச்சல் போட்டவண்ணமேயிருக்கிறது.

சட்டென்று சிலிர்ப்பில்  உச்சத்தில்  இணையை அடைய  கிளைக்கு      கிளை சிறகு  முளைத்த சிட்டாக ஓடி ஒடி ஒட்டி தடுமாறி தாவி  தாவிப்பறக்கிறது. அதற்குள் அதன் எண்ணத்தை மோப்பம் பிடித்த  இணை அடுத்தடுத்த கிளைகளுக்குள் தாவி தன்னை நொடிப்பொழுதில் மறைத்துக் கொள்கிறது.

தொலைதலும் தேடலும் பிரபஞ்சத்தின் காலவெளிதனில் என்றும்   தீர்வதில்லையோ என்னும் படியான மாய நாடகம் அங்கே அரங்கேறிக்கொண்டேயிருக்கிறது.

இப்படியே தனை மறந்த  லயிப்பில் ஏகாந்த நிலையில் எத்தனை காலம் ஆடிக்கொண்டிருக்கிறதோ ஒவ்வொரு ஜீவனும் ?

க்ரீச் க்ரீச் விச் விச் விச் அவ்வளவு தான் நகராட்சி குப்பை  வண்டிலாரியின் டயர்களுக்கு  கீழே இரத்தக்கூழாக நசுங்கிக்கிடக்கிறது துடிக்கும் உயிரின்  சின்னம்  இணையை  அடைய அடுத்த மரத்திற்கு செல்ல விலங்கின்  இயற்கை  எச்சரிக்கை உணர்வினை அலட்சியித்து மனமற்ற நிலையில் தெருவை  தாவி கடக்கும் போது மரணம் கருப்பு டயர் உதடுகளால் முத்தமிட்டு    அதை அள்ளிக்கொண்டு  செல்கிறது.



இமைக்கும்  காலம்  சட்டென்று உக்கிரம்கொண்டு வெறித்தாண்டவமாடுகிறது. பொழுது அனலாய் சுடுகிறது.

எதையும் இன்னும் அறிந்திடாத இதன் இணை அடுத்தமரத்தின் அடுக்குக்குள்ளிருந்து   உறவை  எதிர்பார்த்துக்கொண்டேதானிருக்கிறது அதன் உள்ளுணர்விடம் காலம் பிரிவென்னும் சேதியை இன்னும் கொண்டுபோய் சேர்க்கவில்லை போலும்

உறைந்த  காலம் திருஷ்டிப்பொட்டைப்போல உருளும்  பச்சோந்தியின் விழிக்களுக்குள் அமர்ந்துகொண்டு கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டேதானிருக்கிறது

என் பிரிய சகியே ! இத்தனை ஆண்டுகளில் இந்த அணில் உன்னை தேடாத கிளைகளில்லை. எந்த மரத்தில் எந்த கிளையில்  இப்பொழுது ஒளிந்து கொண்டிருக்கின்றாயோ நீ  ?

   தங்கேஸ்

    தமுஎகச

     தேனி

Show 1 Comment

1 Comment

  1. எம்.பாஸ்கர்

    மிக நன்று

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *