சோத்துப் பானையை உலகம்மாள் திறந்து பார்க்க நினைத்த போது  தான் தங்கராசு ஓடி வந்து தெருவுக்கே செய்தி சொன்னான்.  கையும் காலும் பரத்தித் தள்ளிய நிலையில் ரப்பர் செருப்பை கூட போடாமல் அம்மன் கோவில் கெணத்தை நோக்கி ஒரே ஓட்டமெடுத்தாள்.

அவள் வருவதற்கு முன்பாகவே தளவாய் புர கிராம மக்கள் கோவில் கெணத்தை சுற்றி மறைத்திருந்தனர்.  “உலகமா மவன் கற்பகம் தான்” என்பது அந்த கூட்டத்தால் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் கூட்டத்தை விலக்கிக்கொண்டு எட்டிப்பார்த்தாள்.   முதலில் நம்ப முடியாமல் பிறகு நம்பினாள்.  அவனின் சட்ட தோள்பட்டையில் இவளின் குண்டு குண்டு கை தையல்கள் தான் அடையாளம் காண ஆதாரமாக தெரிந்தது.  போனவாரம் கபடி விளையாட்டில் கிழித்தது. பழுத்து காய்ந்து கெணத்திற்குள் உதிர்த அந்த ஆண உயர வேப்பமர இலைகளுக்கு நடுவில் சஞ்சாரம் செய்து ஒய்ந்திருந்தான்.  யாரையும் பார்க்க விரும்பாத கற்பககுமார் கெணத்திற்குள் வெளிச்சத்தை தேடுவது போல இறந்து கிடந்தான்.

வயிறு கொதிகலனாய் கொதிக்க, தொண்டை இரண்டாக பிளக்கும் அளவிற்கு கத்தி அழுது கண்ணீரை சடசடயாய் ஒழுகவிட்ட உலகம்மாள். நேற்று இரவு தூங்கும் போது வீசிய கற்பகத்தின் வேர்வை நாற்றம் இப்போது வீசுவது போலிருந்தது.

“ஏய்யா… எங் கற்பவோ. எம் மவனே, நீ இங்க மெதக்கத் தான், நா இங்க கெடக்கேனா? நாதியத்து கெடந்தவள, நடு தெருவுல வுட்டியேல” என்று சொல்லி அழுதவள் கண்ணீரால் தோவாளையை நினைத்தாள்.  தலை கெரங்கி  தரையில் சாய்ந்தவளை  பாக்கியத்தோடு சேர்ந்து சில பேர் தாங்கிப் பிடித்தனர்.  சிறிது நேரத்திலேயே ஊர் சனம் அடைக்க கோவில் கெணத்தில் கூடிவிட்டார்கள்.  காட்டுக்கு போனவர்கள் கூட வீட்டுக்கு போகாமல் விசயம் கேள்விப்பட்டு கெணத்திற்கு வந்து சேர்ந்தனர்.  கோவில் வில்லு மேடையில் பெருசுகள் அங்கு உட்கார இடமில்லாதவர்கள் கோவில் மண்டபத்திலும் உட்கார்ந்திருந்தனர்.  கொடை விழாவிற்கு சிறிய தேரினை இழுப்பதற்கு கூடும் கூட்டத்தினை போல காட்சியளித்தது.  கற்பகத்தோடு விளையாடும்  பட்டன் முருகன் மேலும் சில பேர் கூட வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்க்க  முனைந்தபோது “ஏலேய் அங்குட்டு  போங்கல” என்று விரட்டினான் தங்கராசு.  நண்பனைப் பார்க்க அனுமதிக்காத தங்கராசு மேல் அவர்களுக்கு கோபம் தான்.  இருக்காதா பின்ன?

“ஏணிய  எடுத்தாங்கல,  சமஞ்ச புள்ள மாதிரி நிக்காதீங்க. ஏலேய், இளவெட்ட பயலுவலா நின்று அழகு பாக்கிரிங்களாடா. செவிணினு நிக்கிரதுக்கு, வீட்டுல போய் காய் நறுக்கலாம்ல”  என்று தங்கராசு தட தட வென்று வார்த்தையை உதிர்த்த போது தான் மேலத்தெரு காரர்களுக்கு கோபம் சுர்ரென்று ஏரியது. அவனின் தகரடப்பா குரலில்,  அந்த அதிகாரப் பேச்சு கூட்டத்திற்கு நடுவில் ஓங்கி ஒலித்தது.

“ராசு… ஏணி வந்திடுச்சி, ஓலப் பாயும் கொச்சயையும் எடுக்க ஆளுக்க போயிருக்கு” என்று கூட்டத்தில் அதட்டலோடு அவன் தெருக்காரனின் குரல்.  தங்கராசு வீருவீரு  என்று கத்தியது அவனுக்கு எரிச்சல் வந்திருக்கும்.



மேலத் தெருவில் இருந்து கோவில் பூசாரியும் வந்துவிட்டார்.  மூணு நாலு பெருசுகளோடு கிசுகிசுத்துக் கொண்டிருந்த பூசாரி தனது கிடா மீசையை நிமிடத்துக்கு ஒரு‌ முறை நீவினார்.  யாரையும் எதிர்பார்க்காத தங்கராசு கோவிலை பார்த்து கும்பிட்டு   தொபுகடீர் என்று குதித்ததில் தண்ணீர் அதிர்ந்தது. அந்த அதிர்வு  கற்பகத்தின் உடலை பலமாக அசைத்தது.  மேலும் இரண்டு பேர் குதித்ததில் தண்ணீர் கெணற்றின் நாலாபக்கமும் சரிபாதியாக சிதறித் தெறித்தது.

மேலிருந்து ஏணியை இறங்கியவர்கள் “ஏணி வழுவும். ஏப்பா பாத்து பாய சுத்துங்க குறுக்கால கொச்சத்த போட்டுங்க ” என்று ஆலோசனை திசைக்கு ஒன்றாய் வந்தது.

“ஒடம்பு ஓதிருக்கா, நாத்தம் கீத்தம் வருதால”

“ஏப்பா சும்மா சலம்பாதீங்க, பொழுது  வேற சாயிது சீக்கிரம் ஆவட்டும்”

“எங் கனிப்பு படி உசுரு போயி ஒரு மணி நேரம் இருக்கும் நெனைக்கேன்”

“சண்டாளப்பய சாவரதுக்கு வெற யெடம் தெரியலியாக்கும்” என்ற குரல்கள்.

இந்த குரல்களுக்கு நடுவில் அழுத படி உலகம்மாவை தாங்கிப்பிடித்த பாக்கியம்

“ஏங்க  மொவத்த திருப்புங்க பெத்தவ பாக்க வேண்டாமா?” என்றாள்.

பிடித்து நிற்பதற்கு  இடமில்லாத தங்கராசு

சற்று பயத்தோடு தான் திருப்பினான்.  முகத்தை பார்த்த

உலகம்மா “ஐயோ எம் மவனே, எம் புள்ள எங் கட்டி தங்கொ” என்று சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அழுததில் ஊர் காரர்களின் கண்களில் கூட குளம் கெட்டியது.  காற்றை கலங்க வைக்கும் அழுகை. வயிற்றை திருகும் சத்தம் அது. பிரசவ வலி அழுகை இவளின் அழுகையோடு தோற்றுப்போகிற தருணம்.

“மருமவனு கூப்புட வழி இல்லாம பண்ணீட்டியேல. வெவரங்கெட்ட வயசுல வெனய வாங்கீட்டியே, எங் கற்பவும்” என்று அழுத பாக்கியத்தின் அழுகை சத்தத்தை கேட்டு எதற்கும் அழுகாத  தங்கராசு கூட நீரில் பொதிம்பிப் போன கற்பகத்தின் முழங்கையை பிடித்தபடி கண்ணீர் விட்டான்.



            ‌

                                              *****

வார இறுதி நாட்களில் கற்பகத்தை வீட்டில் பார்ப்பது  என்பது பட்டபகலில் வெள்ளியை பார்ப்பதுக்கு சமம்.  காலையில்  போகிறவன்  பொழுது சாய்ந்து தான் வீடு திரும்புவான்.  கெச இருட்டாக இருந்தாலும் தடத்தில் சரியாக நடந்து வந்து விடுவான். ஒரு வருடம் பொய்த்துப் போன மழை மருவருடம் பெய்கையில் சம்சாரிக்கு ஏற்படும் மனமகிழ்ச்சியை போல நண்பர்களோடு ஒவ்வொரு வார விடுமுறை நாட்களில் விளையாடும், விளையாட்டில் அத்தகைய இன்பத்தை அடைகிறான்.  சீசனுக்கு ஆட்சி மாறுவது போல் இவர்களுக்கு சீசனுக்கு ஒரு விளையாட்டு.  ஒன்பதாப்பு வரை தான் ஆட்களை சேர்க்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது.  அந்த சட்டத்தை இயற்றியவர்களே பட்டனும் முருகனும்‌ தான். சுருள் முடியும் , ஒல்லியான தேகமும், கருத்த நிறமும் அவனை எலியாக பாவிக்கும். ஆனால் தமிழ்நாட்டின் அந்த நடிகரின் ரசிகன் நான்தான் என்று தன் முடியை கையால் வேகமாக வாரி சிரிப்பான்..

“வெளயாடப்போயி வெளயாடப்போயி, கருக் குளிச்சி பன்னிக்குட்டியாயிட்டல” என்று கூறி உலகம்மாள் அடிக்கடி கோபமடைவாள். குளிக்காமல், சாப்பிடாமல் இவன் விளையாடப்போவது பரதேசி போலிருக்கும். அதட்டி பார்த்தவள் அடித்தும் பார்த்துவிட்டாள். இருப்பினும் வாரம் தவறாமல் புளியந்‌ தோப்புக்கு போகத்தான் செய்கிறான்.  அப்படியானவன் நேற்று போகவில்லை. காரணம் இரண்டு நாட்களுக்கு முன்பு பம்பர விளையாட்டில் முருகனின் பம்பரம் பட்டனால் உடைக்கப்பட்டது தான். பட்டனின் பட்டறை ஆணி குத்தி இரண்டாகப் பிளந்தது திசைக்கு ஒன்றாய் தெரித்தது பலியானது.

முருகன் தான் முதலில் கையை ஓங்கினான் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை விளையாடிய நான்கு பேரும் மண்ணில் கட்டி உருண்டனர். கற்பகம் உட்பட.

உலகம்மாளுக்கு‌ கொஞ்சம் சந்தேகம்.  “ஏன் வெளயாட போவலனு கேட்டா இதா சாக்குனு போயிருவானோ” என்று நினைத்து அமைதியையே கடைபிடித்தாள்.  அப்போது தான் தங்கராசுவின் மனைவி “மருமவன் இருக்கானா” என்று கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

” வாடி பாக்கியம், காலையிலேயே காத்து இந்த பக்கம் வீசுது?”

“காரிய காத்துடி‌, கடைக்கு போவனும்”

“ஓஓஓ…. சரியா போச்சி உம் மருவன அனுப்பவா”

“ஆமா உரிம உருத்து உள்ள மருமவன், அத்தைக்கு மாட்டேனு சொல்லுவானா?” என்றபடி கற்பகத்தை அழைத்து கணக்கு நோட்டையும், ஓட்டை விழுந்த மஞ்சப்பையையும் கொடுத்தாள்.  நோட்டுக்கு மேல் பல வருடங்களாய் படிந்திருந்த எண்ணெய்ப்பசை பிசுபிசுத்தது.

“கற்பகம், மறந்துருவேனு அத்த உள்ளக்க எழுதிருக்கேன் இதுலயே‌ நச்சா வரவு வச்சிருவாரு” என்று சொன்னாள் பாக்கியம்.   மறந்தது நினைவுக்கு வந்தது போல் உலகம்மாள் 5 ரூபாயை கொடுத்து ” நம்மூட்டுக்கு ரெண்டு சில்லு தேங்கா” என்று சொல்லிவிட்டு  பாக்கியத்தோடு ஊர் வலமை பேச உட்கார்ந்தாள்.

கற்பகத்திற்கு எரிச்சல் தான் வந்தது.  இருந்தாலும் எதையும் காட்டாமல் “சேரியத்த‌” என்று சொன்னபடி தெருவில் நடந்தான். எப்படி பாக்கியத்தைக்கு  மறுக்க முடியும்  தளவாய் புரத்தில் உலகம்மாளுக்கென்று யார் இருக்கிறார்கள். உறவு இல்லையென்றாலும் பேருக்கு உறவு என்று சொல்ல இந்த சக்கிலிக்குடியில் தங்கராசும் பாக்கியமும் தான். அதனாலையே கற்பகம் எந்த வேலையையும் தட்டுவதில்லை.  ஆண்டி தொழுவவையும், படப்பையும் தாண்டி ஆசாரிமாரு வீட்டு மொடங்கியில் நுழைந்துவந்து தர்ம நாடார் கடைக்குள் ஏறினான்.

“நாச்சா, சாமா போடுங்க” என்று நோட்டை கொடுத்துவிட்டு” ஐந்து ரூபாயை தனியாக நீட்டி  “இதுக்கு தேங்கா சில்லு ரெண்டுவேனும்” என்றான்.  கடையை புதிதாக பார்ப்பது போல பார்த்தான்.  ஆனால் புதிதாக எதுவும் மாறவில்லை. போன வருடம் கற்பககுமார் ஏழாப்பு படிக்கும் போது தான் கடைக்கு பெயின்ட் அடிக்கப்பட்டது. ஒரு வருடம் ஆகியும்  கூட நிறம் மங்காதது வியப்பளித்தது. அப்போது தான் முருகன் கடைக்குள் நுழைந்தான்.



சற்றும் யோசிக்காத கற்பகம்

“ஏலேய் ஏம்ல யாருமே வரல?”

“சண்டனாலும் சேராம வெளையாடாம இருக்க முடியுமா”

“நாள ஸ்கூல்ல ஒருத்தர் மொவத்த ஒருத்தர் பாக்க வேண்டாமாடே?” என்று வேட்டி சட்டை அணியும் பெரியாட்களின் தொனியில் கேள்வி இருந்தது.

 “எங்கையா நேத்தே பம்பரத்த அடுப்புல போட்டு கொழுத்தீட்டாரு, போடதியில ஒத்த அற வேற” என்று கூறியவன் நேத்து வாங்கிய ணர அடியை நினைத்துப் பார்த்தான்.

“அதுக்குனு கூட்டு சேராம இருக்கமுடியுமால?”

“இனிமே கஷ்டம்தான் மக்கா, இன்னைக்கு வேற விருந்துக்கு தூத்துக்குடியிலிருந்து அத்தையும் மாமனும் வந்திருக்காகவ”

சற்று நிதானித்து,

போன வாரம் கல்யாணத்துக்கு போனல்ல  அவங்கதா” என்றான் முருகன்.

அப்போதுதான்  கவனித்தான்.  முருகன் வாங்கிய  மசாலா பொட்டணத்தை. அதில் “மகாராஜா கோழி குழம்பு மசாலா” என்று அச்சிடப்பட்டிருந்தது.  கற்பகத்திடம் நோட்டையும், பையையும் கொடுத்த தர்ம நாடார் “நாளக்கி சொனங்கம உங்க அம்மய காட்டுக்கு வர சொல்லு. நெரம் கொரஞ்சா படி கொரையும்” என்றார்.  அதையெல்லாம் காதில் வாங்காணதவன் “சரி நாச்சா கண்டிப்பா” என்று கூறி கவனத்தை பொட்டணத்தில் திருப்பி அவனும் முருகனும் பேசிய படி நடந்தார்கள்.

அதில் கோழியின் செப்பை கலர் படமாக போட்டிருந்ததை பார்க்கும் போது அது போன வருட தீபாவளிக்கு சாப்பிட்ட கோழி குழம்பை நினைவூட்டியது. மீதம் இருந்த குழம்பை மறுநாள் உலகம்மாள்  சுடவைத்து தோசை சுட்டு கொடுத்ததை  நினைத்துப் பார்க்கையில் அவனின் நாக்கில் நீர் சுரத்தது. கடைக்கு வந்ததை மறந்தவன் கோழி குழம்பில் மூழ்கிப் போனான். கற்பகத்தின் வீட்டில் வருடத்தில் ஒரு நாள்தான் கறி அதும் தீபாவளியாக தான் இருக்கும். புருஷன் இருந்த வரை கட்டகாலும் சேர்த்து எடுப்பாள் உலகம்மாள். என்று அவன் மேலத் தெருகாரி  கூட ஒடிப்போனானோ அன்றோடு நிறுத்திவிட்டாள்.  மற்றபடி கற்பகத்திற்கு  கோவில் படப்புச் சோற்றில் ஒன்னு ரெண்டு துண்டு மாட்டும் அவ்வளவுதான்.  சங்கிலியக்குடிக்கு பிரதான வழி முருகன் வீட்டு வழி தான். ஆனால் கொஞ்சம் சுத்து. பேச்சில் அது ஒன்றும் பெரிதாக தோன்றவில்லை. மசாலா பட்டணத்தை மோந்து பார்க்க நினைத்த கற்பகம் கேட்டால் முருகன் கொடுப்பானா என்று யோசித்துப் பார்த்தான். முருகன் வீட்டு தெருவில் நுழையும் போதுதான் “மக்கா அத கொண்டா பாப்போம்”.  பேச்சு வாக்கில் அதை கொடுத்துவிட்டான் முருகன். கற்பகத்தின் மூக்கினில் மகாராஜா மசாலா அரியணையிட்டு அமர்ந்தது.  புகைப் பிடிப்பவன் போல் பொட்டலத்தை உரிந்து நுரையீரலில் அடைத்து மெதுவாக வாயின் இடைவெளியில் விடும் போது சிறிதாக சுரத்த நீர் கடலாகக்கூடி தொண்டைக்குள் இறங்கியது.  அப்போது காதுகளில் உள்ள சிறு எலும்புகள் கூட சத்தமிட்டது.  கொஞ்சம் எடுத்து மூக்குப்பொடி போடுவது போல போட நினைத்தவன் ஆனால் முருகன் நிச்சயம் அதுக்கு  சம்மதிக்க மாட்டான் என்பதை அறிந்து “நாமலே வாங்கி மூக்குல போடுவோம்” என்று நினைத்துக் கொண்டான்.

நடந்துக் கொண்டிருந்தபடியே..‌.

“கோழி மட்டும்தானா? ஆடு எடுக்கலையா?”

“ஆடும் தான் ஆனா எங் அத்தைக்கு ஆட்டுக்கறி வாட கொமட்டுமாம், வேக வச்சாச்சு ராத்திரிக்கி தான்”

“இதில் என்ன கொமட்ட கட்டகாலா திங்கிறாங்க”

“என்னவோ… அவுகளுக்காகவே ரெண்டு சேவ அடிச்சிருக்கு” என்று சொன்ன முருகன் பொட்டணத்தை வாங்கிக் கொண்டான்.”சேரி மக்கா, ரைட்டு நாளைக்கு ஸ்கூல்ல பார்ப்போம்”என்றபடி முருகன் வீட்டுக்குள் போனதை கவனிக்காதவன் காது கேளாத கிழவனை கூட திசைதிருப்பும்  அம்மியில் நஞ் என்று அரைபடும்  சப்தத்தில் திசைமாறியது. முருகன் வீட்டு ஓட்டுப் சாய்ப்பில் பார்வையை செலுத்தினான். சட்டியில் கொதித்த சேவக்கறி வாடை ஓட்டு சாய்ப்பின் இடையின் ஊடே வந்து அத்தெரு முழுவதையும் ஆக்கரமித்திருந்தது.  கொதிக்கும் சத்தத்தை கூட  தெளிவாக கேட்கலாம்.



கற்பகத்திற்கு ஆடு பிடிக்காது அப்பா ஓடிப்போன பின்பு  கட்டகாலத் துப்பராக தொடமாட்டான்.  கோழிக்கறி என்றால் போதும், அதும் சேவல் கறி‌ என்றால் கூட இரண்டு துண்டு உள்ளே போகும்.  அதனாலே உலகம்மாள் கடையில் வாங்காமல் தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வீட்டில் வாங்கி வைத்து அடிப்பாள்.  வீட்டிற்கு திரும்பியவன் பையையும் தெங்காய் சில்லையும் உலகம்மாளின்  மடியில் போட்டுவிட்டு ஆவலோடு குழம்பு சட்டியை தொரந்தான்.

அப்போது தான் பாக்கியம்

“இன்னக்கி என்ன வச்ச?”

“கத்திரிக்கா போட்டு புளி குழம்பும். நேத்து  கள எடுக்கப் போனப்போம்  திருட்டுத் தனமா புடுங்கிட்டு வந்தன்ல மல்லிய தொவையலா அரச்சிருக்கேன்” என்று கூறி திருட்டை நினைத்து சிரித்தாள்.

“கத்தி சொல்லாத திருட்டு மெல்லிய, சொந்தம் கொண்டாட ஆளு வந்துராம! நா போற தாயி நெறமாயிட்டடு” என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.

கோழி குழம்பை மனதில் நினைத்து வைத்தவனுக்கு சட்டியை பார்த்ததும் எரிச்சல் வந்தது.  கத்தரிக்காய் கோழி கறியாக தெரியவில்லை.  தொவையல் எதுவாகவும் தெரியவில்லை. கற்பகத்திற்கு பசி எடுத்தாலும் கோபம் அதை மல்லுக்கட்டியது.

மச்சி வீட்டிற்குள் கோபத்தோடு படுத்துக் கொண்டு டிவியை போட்ட போது தான் உலகம்மாள் கேட்டாள்.”வீட்டுக்குள்ளயே கெடக்க, தொறைக்கு புத்தி வந்துட்டோ?”

பதில் இல்லை.

“ஒன்தான் கேட்கேன்”

முகத்தை சுழித்துக் கொண்டு

 “ஆமா ஆமா..‌வார வாரம் நீ வைக்கிற ராமாயணத்துல”

“அப்படினா சந்தோசம் தா,  சரி வா வந்து சாப்புடு  சோத்த ஆறப்போடுதே?” என்றவள் தட்டெடுக்க மேடைக்கு நகர்ந்தாள்.

“எனக்கு சேவகறி வேணும்”

“என்னுதுல சேவகிறியா ?” என்று கேட்டு நின்றாள்.‌

“ஆமா முருவ வீட்டில இன்னைக்கு எடுத்துருக்காக”

“சரி அதுக்கு? தீவாளிக்கு ரெண்டு மாசம் இருக்குல. எடுப்போம்.

“எனக்கு இன்னக்கி வேணும் வாங்கி வச்சிதா” என்றான் அத்தோடு.

“நல்லா இருக்குடே ஒங் கூத்து, நாளைக்கு செத்தா வாய்க்கரிசிக்கு வழிய கானோம் கறிதா வாழுதோ” என்று கோபம் கலந்த முகத்தில் வழிந்த வியர்வையைத் துடைத்தாள். “வவுருகேட்கும் வழி வேனுமுலா” வா வந்து சாப்புடு.

“வச்சி தாரியா இல்ல கடயில வாங்கி திங்கவா?” என்றதுதான் தாமதம் பத்திரகாளியாக உருவமெடுத்து ” தாயோளி மவனே, கடைக்கு காலு போவுதால” என்று படாரென்று முதுகில் ஒரு போடு போட்டாள்.  வேகமான அடி அதனாலேயே கைத்தடம் நன்றாகவே பதிந்துவிட்டது.  முதலில் சினுங்கியவன்  பிறகு அழுதுவிட்டான்.  “எத கேட்டாளும் கைய மட்டும் ஓங்கு” என்று விக்கிரிச்சி விக்கிரிச்சி அழுது பாயை விரித்துப் படுத்தவன் அப்படியே உறங்கிவிட்டான்.  உலகம்மாளும் என்ன எதுன்னு கேட்கவில்லை கோபமும் தணியவில்லை.  ஆனால் அவன் சாப்பிடவில்லை என்பது நினைவிலிருந்தது. இரவு வரை வைராக்கியம் நீடித்தது.  நேரம் ஆகியதால் தொவையல் காயத்தொடங்கியது‌. இரவு சாப்பிட்டான். அதிக பசி இருந்ததால் மீண்டும் ஒரு முறை சோறு வைத்து சாப்பிட்டான் ஆனால் கத்திரிக்காய் தட்டின் ஓரம் ஒதுக்கப்பட்டிருந்தது‌. இரவு தூங்கையில் தலைவாணியை உருவி விட்டு இடது  கையில் தலையை வைத்து வலது கையால் முதுகை தடவி பார்த்த உலகம்மாளுக்கு கைதடம் இருப்பதுபோல் ஒரு அருசாமை.  அடித்ததை நினைத்து அழுகை வரவில்லை நாளை காட்டுக்கு போக வேண்டும் என்ற நினைப்புடன் உறங்கி போனாள்.



தூங்கி எழுந்தவனுக்கு பல் தேய்க்கும் போது தான் நேற்று வாங்கிய அடி நினைவுக்கு வந்தது.  அதும் சுட்டுவிரல் கிடா பல்லை தேய்க்கும் போது தான் போன வருச தீபாவளிக்கு அந்த பல்லில் தான் கறி சிக்கிருந்தது என்பதை நினைத்த தோடு  எரிச்சலும் வந்தது.  குளித்துமுடித்து, வகிடெடுத்து சீவியவன் உலகம்மாளை பார்த்து ஒரு வெட்டு வெட்டினான்.  முகம் கொடுத்து பேசாதவன் காலை சாப்பாட்டை சாப்பிடாமல், டிபன் பாக்ஸை மட்டும் எடுத்துட்டு நடக்கலானான்.

“ஏலேய் தொறப்பா சாய்ப்புல இருக்கு பள்ளியூடம் விட்டு வந்ததும் சாப்புடு” என்று அவள் சொல்லியதை காதில் வாங்காதவனாக நடந்தான். இவளும் “எத்தனை நாளைக்கி பவுசுன்னு பாப்போம்” என்றபடி தர்ம நாடார் காட்டுக்கு கள எடுக்க சென்றாள்.

கிளாசுக்குள் நுழைந்ததுமே கற்பக குமாரை சேவக் கறி வாடை ஆராத்தி எடுத்து வரவேற்றது. பொதுவாக ஸ்கூல் படிக்கும் போது யார் வீட்டிலாவது நல்ல சாப்பாடு என்றால் மதியானம் வரவேண்டிய பசி காலையிலேயே வந்துவிடும்.  நேற்று வைத்த முருகன் வீட்டு கறி‌ சோரை சாப்பிட்டு முடித்து விட்டார்கள்.  சண்டைபோட்டு கோபித்துக்கொண்ட பட்டன் உட்பட கையை மோந்து பார்க்கும் போது தீப்பந்தம் போல் தலை எரிந்தது.  “என்ன மக்கா நீ சீக்கிரம் வரலாம்ல முருகெ வீட்டு கறிய மாதிரி நா இதுவரைக்கும் தின்னதே இல்லல. செழிக்க செழிக்க இருந்துச்சு” என்று பட்டன் சொல்லும் போது அவனை  கடித்துக் குதறும் வெறி நாயாக மாற எண்ணினான்.  யாரிடமும் பேசாதவன் வகுப்பில் இருந்தும் இல்லாதவனாக இருந்தான். பல கேள்விகள் தோன்றி மறைந்தது.

மதியானம் அதிகப் பசி இருந்தும் சாப்பிட்டதாக தெரியவில்லை.  புதிய புதிய யோசனைகள் வந்தது. “எப்போ கொட கொடுக்க நாம எப்போ கறிய திங்க” என்று சலித்துக் கொண்டவன் ஸ்கூலுக்கு பின்புறம் இவர்கள் ஒன்னுக்கு போகும் இடம் நினைவுக்கு வந்து போனது.  சத்துணவு சாப்பாடு அங்கு கொட்டப்படுவதால் கோழி, காக்கா சில நேரம் மாடு முதற்க்கொணடு திங்க வரும்.  அதில் போன வாரம் ஏழு குஞ்சுகளோடு மேய்ந்த கோழி இவர்களைக் கொத்த வந்தபோது ட்ரவுசருக்குள்ளேயே சிறுநீர் வடிந்து நனைந்தது நினைவிலிருக்கிறது.  எந்த முடிவும் எடுக்காமல் குழப்பத்தில் இருந்தவன் “அம்புட்டுகிட்டா, அம்மா வச்சி வைக்க மாட்டா” என்று பயந்தான். இருந்தும் துணிந்துவிட்டான்.

“டங்…டங்… டங்” பெல் அடித்து எல்லோரும் போன பிறகு தான் கல்லை விட்டெறிந்து கோழிக்குஞ்சுகளை தனித்தனியாக கலைத்தான்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு தவ்வியது.  போலீஸ் வந்தால் திருடனைப் போல.  தாய்க்கோழி கூட ஓடி விட்டது.  எதை தொரத்தி பிடிப்பது என்று தெரியாதவன் இரண்டு முட்களின் கீறல்களோடு கருவேலமரத்தின் இடுக்கில் சிக்கிக் கொண்ட செம்பட்டை நிற குஞ்சை ஒரு வழியாக பிடித்து விட்டான். “கீச்சி கீச்சி” என்று சத்தம் கொடுத்த கோழிக்குஞ்சின் தலையை ஒரு திருகு திருகையில் எலும்புகள் முறிந்தது.  சத்தத்தை அடங்கிக் கொண்டு சரணடைந்தது.  டிபன் பாக்ஸ்சில் இருந்த சாப்பாட்டை கொட்டியவன் கோழிக்குஞ்சை உள்ளே வைத்து அடைத்துக் கொண்டான்.  இன்னொரு குஞ்சி இருந்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தவனின் கால்கள் பயத்தில் கடைசியில் நின்ற இடம் வீடுதான்.  டிபன் பாக்ஸை எடுத்து, கழுவி வைத்த பாத்திரத்தோடு பாத்திரமாய் வைத்த போது  எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.  வீட்டை சல்லடை போட்டான்.  உப்பு, மிளகாய்த்தூள் இருந்தது எண்ணெய் கூட கொஞ்சம் இருந்தா நன்றாக இருக்கும்.  அம்மா வருவதற்குள் தடம் தெரியாமல் எல்லாவற்றையும்  முடித்துவிட எண்ணியவன் டிபன் பாக்சை திறந்து கோழிக்குஞ்சை அழகு பார்த்தான்.  பாவமாக தோன்றவில்லை.  மூடி வைத்தவன் தர்ம நாடார் கடைக்கு சென்று மகாராஜா மசாலா எவ்வளவு என்று கேட்டபோதுதான் பத்து ரூபாய் என்பது தெரியவந்தது.  என்னசெய்வதென்று தெரியாதவன் சிந்தனையில் ஆழ்ந்து போக நேற்று பொட்டணத்தை மோந்து பார்த்தது, அதற்கு முன்புறம் இருந்த கலர்படம் இவையெல்லாம் கற்பகத்தை நிலை கொள்ளாதவனாக ஆக்கியது.  வீட்டில் நிச்சயம் ருவா இருக்காது என்பது வெளிச்சம்.  அம்மாவின் மணிபர்சும் சட்டையில் தான் வைத்திருப்பாள். மசாலா இல்லாம வருத்தால் எப்படி என்று எண்ணியவனுக்கு கோவில் கிணறு நினைப்புக்கு வந்தது.

“நாச்சா ஒரு பாக்கெட் இருக்கட்டும் நான் வந்து வாங்கிக்கிறேன்” என்று சொன்னவன் தாமதிக்காமல் கோவில் கெணத்துக்கு வந்து சேர்ந்தான்.

அவனுக்கு தெரிந்வவரை அந்த கெணத்தில் யாரும் குளிக்க மாட்டார்கள். காலை தழுவிக் கூட பாத்ததில்ல.  ஊரார்கள் கோவில் தீர்த்தம் என்பார்கள். வெளியூரில் இருந்து கொடைக்கு வருகிறவர்கள் கூட பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து கொண்டு போய் வீடுகளில் தொளிப்பார்கள்.  கோவிலுக்கு சாமி கும்பிட வருகிறார்களே போன வருடம்  போட்ட அடி பம்பில் தான் காலை கழுவுவார்கள்.

எட்டிப்பார்த்தான் தண்ணீரில் முகம் தெரியவில்லை. ஆனால் வேப்பமரத்து இலைகள் அங்கொன்றும் இங்கொன்மாக குதியாலம் போட்டதை பார்த்தவன் வருடக் கொடையின் போது  மஞ்ச துணியில் எல்லோரும் முடிந்து போட்ட இருவத்தி ஓருருவா பணத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.  முன்பொருமுறை உலகம்மாள் போட்டது கூட கற்பகத்தின் நினைவில் இருக்கிறது.  ஆனால் என்ன நினைத்து போட்டால் என்பது தெரியவில்லை.  வருச கொடைக்கி வருகிறவர்கள் எல்லாரும்  ஏதேனும்  ஒன்றை வேண்டிக்கொண்டு முடிந்து போடுவார்கள்.  “எம் பிள்ளைக்கு கல்யாணம் ஆகனும், வவுத்துல புழு பூச்சி உண்டாவனும், வெள்ளாம விருத்தியா நட்கனும்” என்பதுதான் அவர்களின் முக்கியமான வேண்டுதலாக  இருக்கும். கிழக்கும் மேற்கும் பார்த்தவன் யோசிக்காமல் கிணற்றிற்குள் குதித்தான்.  அந்த நேரத்தில் அந்தப் பக்கம் யாராவது வந்திருந்தால் அடியில் போகப்போக இருள் சூழ்ந்து, மூச்சுவிட வாயைத்திறக்கையில் தண்ணீர் வயிற்றை அடைத்து கற்பகம் இறந்து போனதை யாராவது பார்த்திருப்பார்கள்.  சில மணி நேரம் யாரும் பார்க்காததால் பல ஜிலேபி மீன்கள் கூட அவனின் கண் இமைகளில் தங்களின் பசியை ஆற்றிக் கொண்டது.  மீதமிருந்த இமைச் சதைகள் பாலாடையையாய் தொங்கியது.

ஓலைப் பாயில் சுருட்டி ஏணியில் கட்டித் தூக்கி மண்ணில் கிடத்தினான் தங்கராசு.‌‌  உலகம்மாள் விவரிக்க முடியாத அளவுக்கு வீறிட்டு அழுத போது  ஊர்காரர்கள் முன் வந்து பார்த்தார்கள். தங்கராசு குரலை உயர்த்திக் பொதுவாக பேசினான்  “ஏம்பா சின்ன புள்ள, போலீசுக்கு போன  அறுத்துதான் தருவானுவ, நாச்சாமாறுகளும் ஊராளுக்களும் ஒத்துலச்சா தெரியாம எரிச்சி ராவோடு ராவா காடாத்திரலாம். சொந்தம் பந்தம் இல்லாத பொம்பளய கேசு கீசுனு அழய விட்ர கூடாது. சம்மதம் இருக்குறவங்க கருப்பச்சாமி பூடத்து மேல சத்தியம் செய்ங்க. வாக்கு வாக்கா இருக்கனும்” என்று உலகம்மாள் சார்பாக ஊர்மக்களிடம் சம்மதம் கேட்டான்.

யாரும் எந்த எதிர்ப்பும் சொன்னதாக தெரியவில்லை.  மேலத்தெரு காரர்களில் சில பேர் கொஞ்சம் கிசுகிசுத்தனர். கடைசியில் சத்தியம் செய்தார்கள்.

“ஏப்பா! தூக்குங்க தூக்குங்க கவர்மெண்டு நாயிவ மோப்பம் பிச்சி வந்துரும்” என்று யாரோ குரல் கொடுத்த போதுதான் கோயில் பூசாரிக்கு சாமி வந்தது.  மீசையை முறுக்கிக் கொண்டு இருந்த பூசாரி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்.

கண்ணை உருட்டி நாக்கை மடித்து “யாய்ய்… ம்ம்ம்… எங் கோட்டைக்குள்ளே  கட்டகாலத் திங்கிரவனெல்லாம் செத்துப்போனா ஏ வவுரு கொத்காதா எம் மனசு அழுவாதா” என்று சொல்லி தையத் தக்கா என்று குதித்தார்.

“நடந்தது நடந்து போச்சி.  ஒன்ன வேனுக்கும் கொதிக்க வைப்பாங்கலா. ஒன்ன கொதிக்க வச்சா ஒலவம் தாங்குமா. தாயா பிள்ளையா நெனைச்சி இன்ன பரிகாரம் செய்யனும்னு சொல்லு செஞ்சிபுடுதோம்” என்று பூசாரியின் பக்கத்து வீட்டுக்காரர் கேட்டார்.



“ரத்த பொலி வேணும், அழ அழி எடுத்து, இந்த நஞ்சு தண்ணியை வெளிய எடுத்து, நாள பொழுது விடியருதுக்குள்ள நல்ல செய்தி சொல்லணும் பா…!  யாய்ய்… ம்ம்ம்… என்று சொல்லியபடி திருநீற்றை தலையில் பட்டை அடித்துக் கொண்டார்.

பூசாரி சொன்னதுமே அதற்கான வேலைகள் தொடங்கியது. முகத்தை கற்பகத்தின் நெஞ்சில் புதைத்த உலகம்மாள்  “அம்மாட்ட பேசுல,  எம் மொட்டு அம்மய முழிச்சி பாரேம்ல. யெய்யா எம் பத்தரமாச தங்கோ” என்று கொண்டை முடி அவிழ்து விரிந்து கிடந்தபடி ஆக்ரோஷமாக அழுத அழுகையை  கேட்காத காதுகள் கற்பஙத்தின் காதுகளாகத்தான் இருக்கும். ஈரம் வடிந்த அவனின் காதோரம் நிதானமாக அந்த ஈ அமரும் போதுதான் உடலை ஏணியோடு தூக்கியபடி  தெருகாரர்கள் ஓட்டமும் நடையுமாய் கொண்டு சென்றார்கள்.

அ.சொக்கலிங்கம்,

இந்திய மாணவர் சங்கம்,

தென் சென்னை

5 thoughts on “சிறுகதை :- பொட்டலம் – அ.சொக்கலிங்கம் (இந்திய மாணவர் சங்கம்)”
  1. பொட்டலம் சிறுகதை, உறைய வைக்கும் துயரக் கதை தான். வறுமையைப் பேசும் இன்னொரு கதை தான். ஆனால், எப்போதோ உள்வாங்கிய உண்மை நிகழ்வின் சாயல் தென்படும் கதைக்கருவை எத்தனை நேர்த்தியாக வடிவமைத்து, கசப்பான முடிவில் இருந்து பின்னோக்கிக் காரணத்தைத் தேடி நடக்கும் கதாசிரியரைப் பற்றியவாறு வாசகரும் அதே பதட்டத்தோடு, அதிர்ச்சியோடு, என்னவாக இருக்குமோ என்ற கவலையும் வேதனையும் வலியும் உரத்து உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருக்க நடந்து போய் உறைந்து நிற்கின்றனர். 
    இன்னும் எழுதுங்கள் தோழா…இளம் தோழா…எழுதிக் கொண்டே இருங்கள்.
    எஸ் வி வேணுகோபாலன் 
    94452 59691

  2. உடனுள்ளவரின் வெற்றியை கண்ணூற கண்டு களிப்பதின் ஆனந்தத்தை விட ஆகப்பெறும் மகிழ்ச்சி என்னவாக இருக்க முடியும்.
    வாழ்த்துக்கள் சொக்கலிங்கம் தொடர்ந்து உங்கள் எழுத்து இந்த சமூக அவலங்களை தோலுறித்து சமூக மாற்றத்திற்கானதாய் தொடரட்டும்.
    மகிழ்ச்சி♥️💫

  3. அருமையான படைப்பு 👌👌👌👌 பல படைப்புகள் படைக்க படைத்தவனை வேண்டுகிறேன் என் மண்ணின் மைந்தனுக்காக …🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  4. மண் வாசமிகு கதையின் நடை மிகவும் அழகாக இருந்தது.
    மேன்மேலும் வளர்க படைப்புகள் தருக

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *