கண்டதையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஒடுகிற அவசரகதியில் வெளிச்சம், தான் பகலில் கண்ட அத்தனையும் வாரிக்கொண்டு மறைந்து போகவே அங்கே வேக வேகமாக இருட்டிக் கொண்டு வந்தது. பிச்சுப்பட்டி கிராமத்தின் தெற்கே ஊருக்கு எல்லையில் அய்யனாரு சாமிக்கு கோவில்கட்டி அதற்கென்று தெப்பக்குளமும் வெட்டி வைத்திருந்தார்கள். கோவிலைச் சுற்றிய நிலம் தரிசாய் கிடக்க அங்கே கருவேல மரங்கள் மடமடவென்று வளர்ந்து அக்கம் பக்கத்து ஊர்களுக்கும், உள்ளூர் மனிதர்களுக்கும் ஏகபோக அடைக்கலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. அந்த ஆள் அரவமற்ற கருவேலங் காட்டுக்குள்ளிருந்து திடீரென கை வெட்டுண்ட மனிதன் ஆங்காரமாய் தொண்டை கிழிய கத்துகிற ஓலச் சத்தத்தைப் போலவும், சட்டென்று கொஞ்ச நேரம் அமைதியாகி டம்.. டம் என்று ஏதோ பெரிய கல்லைக் கொண்டு ஒன்றின் மேலே வெறியுடன் போட்டு உடைப்பதைப் போலவும் ஒன்றன் பின் ஒன்றாக மாறி மாறி சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.
மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லாத பகுதிக்குள் நடந்து கொண்டிருக்கிற இந்த அரவத்தை என்னவென்று கேட்கவோ, ஓடிவந்து யாரென்று பார்க்கவோ அங்கே வெட்டருவாளோடு அரற்றிக் கொண்டு நிற்கிற அய்யனாரைத் தவிர வேறு யாருமில்லை. நல்லதோ கெட்டதோ அவர் அங்கிருந்து நகருவதுமில்லை. நீண்ட காலமாக ஏனென்று எதையும் காது கொடுத்துக் கேட்பதுமில்லை. அதனாலேயே கருவேலங் காட்டுக்குள் எதையும் செய்யத் துணிகிற மனிதர்களின் நடமாட்டங்கள் மட்டும் இருந்து கொண்டே இருக்கும். இதனால் மக்களின் வண்டிப்பாதையாக இருந்த இடம் கொடியவர்களின் கூடாரமாகவே மாறிவிட்டது. அங்கே சத்தியமூர்த்தி மட்டும் ஒற்றை வேப்ப மரத்திற்குக் கீழே தன் எடைக்கு ஏற்ப கருங்கல்லை தலைக்கு மேலே தூக்கியவாறு கடுங் கோபத்தோடு நின்று கொண்டிருந்தான்.
நீண்டநாட்கள் விரதமிருந்து வழிக்கப்படாத அழுக்கு மீசை, தாடியோடும் அதற்கேற்ப பொருள் கொள்ளுமாறு கருப்பு நிற லுங்கியையும் அவன் அணிந்திருந்தான். நீண்டநாள் அழுதழுது சோர்ந்துபோன முகத்தில் கண்கள் மட்டும் உயிர்ப்போடு கோபத்தில் சிவந்திருந்தது. கண்களிலிருந்து வடிந்து வடிந்து கன்னங்களில் கண்ணீர் அழுக்கேறிய படலம் கோடுகளாய் படர்ந்திருந்தது. பாராங் கல்லின் எடை தாளாமலோ அல்லது உள்ளங்காலிருந்து உச்சந்தலைவரை ஏறிய கோபத்தின் நடுக்கத்தினாலோ அவனது கைகளின் நரம்புகள் புடைக்க, தசைகள் கெட்டிப்போய் வெளிறிய தோல் வழியே துணுக்குற்ற எலும்புகளும் துருத்திக் கொண்டிருந்தன. கோபமும் அழுகையும் ஒருசேர இருக்கிற குழம்பிய மனிதனின் அவல நிலையை அவன் எட்டியிருந்தான். குளிருக்குத் தாளமிடுகிற பற்களைப் போல அவன் நரநரவென்று கடித்துக் கொண்டு இடையிடையே உதடுகள் துடிதுடிக்க ஏதேதோ வாயிற்கு வந்தவற்றையெல்லாம் உளறிக் கொண்டிருந்தான்.
அவன் பார்வை முழுவதும் பலமுறை கல்லைப் போட்டு சுக்குநூறாக உருத்தெரியாமல் உடைக்கப்பட்ட அவனது தொலைபேசியிலேயே நிலைத்திருந்தது. இருந்தும்கூட அவனது கோபம் இன்னமும் தணியவில்லை. அடுத்த நிமிடமே தன் பிள்ளையை முதன் முதலாக படம்பிடித்துக் கொடுத்த செல்போன் என்ற நினைவு தட்டவே சட்டென்று உடைந்துபோய் அழுதுகொண்டே கல்லை தூக்கி தெப்பத்திற்குள் எறிந்தான். இப்படி எவ்வளவு நேரமாக கல்லைப் போட்டு ஆங்காரமாய் உடைப்பதும், சடாரென்று தோன்றிய பிள்ளையின் நினைவில் தடுமாறியபடி கதறி அழுவதும் நடந்து கொண்டிருக்கிறது என்பதை கருவேல மரப்பூவில் அமர்ந்திருக்கிற தேன்சிட்டுக்குத்தான் தெரியும்.
அவன் அமைதியாய் அழுகையிலே ஓடிவந்து பூவைப் பற்றிக் கொண்டு தேனைப் பருகுவதும், கல்லைத் தூக்க ஓங்கும்போது படபடவென்று பறந்து அருகிலுள்ள வேப்ப மர கிளைகளின் பின்னால் ஒளிந்துகொண்டு என்னவாம்? என்பதைப் போல பவ்வியமாகவும் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. தன் பிள்ளையினுடைய ஞாபகங்கள் ஒவ்வொன்றாக கண்ணுக்குள் வந்து அப்பிக் கொள்ளவே பொங்கி வழிந்து வந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு திரும்பவும் ஓடிப்போய் சிதைந்து போய் கிடந்த தொலைபேசியின் முன்னால் மண்டியிட்டு அதனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
தன்னை மீண்டும் மீண்டும் அழ வைத்துப் பார்க்கிற உடைந்த செல்போன் துண்டங்களை மண்ணோடு சேர்த்து அள்ளியெடுத்து அதனை கைவிரல் இடுக்குகளின் வழியே நழுவச் செய்து காற்றிலே அவற்றைப் புடைத்துக் கொண்டிருந்தான். தரையோடு சுழன்று அடித்த காற்றில் தூசி துணுக்குகள் பறந்து சென்று சத்தியமூர்த்தியின் கண்களில் அப்பிக் கொண்டது. கோவம் பழத்தை சிறு பூச்சிகள் அரித்து கருப்புத் துளையிட்டிருப்பதைப் போல, அவனது அழுதே சிவந்த கண்களில் ஒட்டியிருந்த தூசிப்படலம் ஒட்டுமொத்த கண்களையே துளையிட்டதைப் போல காட்சியளித்தது. அவனால் கண் எரிச்சலைத் தாங்க முடியவில்லை. தனது இருகைகளாலும் கண்ணை பொத்திக் கொண்டு தனக்கு ஏற்கனவே பழக்கப்பட்ட பாதையில் தடதடவென்று ஓடிச்சென்று பாதி நிரம்பியிருந்த தெப்பத்தினுள் தொப்பென்று விழுந்தான். தண்ணிக்குள் இருந்தபடியே சிவந்த கண்களை முட்ட முட்ட விழித்தபடி தூசி துணுக்குகளை கழுவிக் கொண்டிருந்தான். இந்த முறை ஒளிந்திருந்த தேன்சிட்டால் தெப்பமாகிவிட்ட அவனது கண்ணீரை துளியளவும் பார்க்க முடியவில்லை.
தொப்பென்று நனைந்த சட்டை, லுங்கியோடு தெப்பத்தின் நெடிய படிகளில் வந்து பவ்வியமாக உட்கார்ந்து கொண்டான். தெப்பத்தின் படிகளோடு சேர்ந்தே வளர்ந்த வேப்பமரத்தின் நிழலும் அதன் அடிமரத்தில் சாய்ந்துகொள்ள இடமும் கிடைத்தது சத்தியமூர்த்திக்கு ஒரளவு ஆறுதலாக இருந்தது. இன்னமும் அவனால் பிள்ளையின் நினைவுகள் மேலெழுந்து வந்து துன்புறுத்துவதை தவிர்க்க முடியவில்லை. மனைவி கவிதாவின் வயிற்றுக்குள் பிள்ளை வளரும்போதே அவன் தன் கற்பனையாலே பிள்ளையை கொஞ்சம் கொஞ்சமாக மனதிற்குள் வரைந்து வைத்திருந்தான். அப்படிப்பட்ட நினைவுகளை எப்படி அவனால் உடனே அழித்துவிட முடியும்?
அக்கா மகள் கவிதாவை விரும்பித்தான் திருமணம் செய்து கொண்டான். திருமணம் முடிந்ததிலிருந்து வாழ்க்கை மேடுபள்ளமின்றி நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. அன்றைய இரவில் மெதுவாக கவிதாவை உச்சிமுகர்ந்து மெல்ல அரவணைத்து காமத்தில் நுழையும் போது அவனது காதுகளை பற்களால் வருடுவதைப்போல பாசாங்கு செய்துவிட்டு தான் கருவுற்றிருப்பதாக சொன்ன அந்த கணம்கூட நேற்று நடந்ததைப்போலத்தான் இருந்தது சத்தியமூர்த்திக்கு. அடுத்தடுத்த நாட்களின் மகிழ்வான தருணங்கள் வரிசையாக வந்து மனதை அலைக்களிக்கவே எல்லாமே முடிந்துவிட்ட விரக்தியுடன் வேப்பமரத்தின் அடித்தண்டைப் பற்றிக்கொண்டு அப்படியே கீழே சரிந்து பொத்தென்று விழுந்தான்.
சத்தியமூர்த்தி கலங்கிப்போன கண்களைத் துடைத்துக் கொண்டும், மூக்கிலிருந்து வழிகின்ற சளியை அழுத்தமாக உறிஞ்சிக்கொண்டும் மெல்ல உடைந்துபோன செல்போனை திரும்பிப் பார்த்தான். “நான் அம்மாவாகிட்டேன் ஆனா நீங்க அப்பாவாக இன்னும் பத்து மாசம் பாக்கி இருக்கு ” என்று அப்போது மனைவி சொன்ன வார்த்தைகளின் பாரம் வந்து நெஞ்சை அடைத்தது. அழகான குழந்தை படத்தை வலைதளத்தில் தேடிப் பிடித்து செல்போன் முகப்பில் வைத்த ஞாபகமும் கூடவே கண்முன்பாக வந்து நின்றது. இத்தனைக்கும் ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்றெல்லாம் தேடாமல் மை கியூட் பேபி என்று தேடியதில் கிடைத்த வாநீரை வடித்துக்கொண்டே வாய்விட்டுச் சிரிக்கிற குழந்தைப் படம்தான் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. குழந்தைகள் என்றாலே அழகுதானே, இதிலென்ன அழகான குழந்தை? என்கிற குறுகுறுப்போடு உதட்டோரத்தில் சிறு புன்னகையை தவழவிட்டு மரத்தின் உச்சியையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
தெப்பத்திலிருந்து மேலெழுந்த காற்று வேப்பமரத்தின் உச்சந் தலையைப் படித்து ஒரேயடியாக உலுப்பிக் கொண்டிருந்தது. கிளைகளோடு காய்ந்த சருகுகளும் உரசிக் கொள்கையில் எழுகின்ற சத்தம் சத்தியமூர்த்திக்கு உடைந்த செல்போனின் முகப்பிலிலிருந்த குழந்தையே எழுந்து ஓடிவந்து அப்பா.. அப்பா என்று அழைப்பதைப் போன்ற பிரம்மையை உண்டாக்கியது. உலகத்தில் இனிமேல் எதையுமே கேட்க விரும்பாதவனைப் போல தலையாட்டிக் கொண்டே கைகளால் இருகாதுகளையும் பொத்திக் கொண்டு மரத்தில் முட்டிமுட்டி கதறி அழுதான். அவனது வேதனைப் புரிந்து கொண்டதைப்போல வேகமாய் விழுந்த வேப்பம் பூக்கள் அவனது முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தன.
ஓவியம் எஸ்.குமார்
மருத்துவர் ஸ்கேன் செய்து குழந்தையைப் பரிசோதிக்க வேண்டுமென்று சொன்னபோது என்ன சொல்லப்போகிறார்களோ என்ற பதட்டமும், குழந்தை வயிற்றுக்குள் எப்படியிருக்கும் என்கிற ஆசையும், ஆர்வவும் அதிகமாயிருந்தது. கருப்பு வெள்ளை படமாக சிறுசிறு அசைவுகளோடு குழந்தை நெளிகின்ற வீடியோவை மருத்துவர் காட்டுகின்றபோது நின்ற இடத்திலிருந்தே கட்டடத்திற்கு வெளியேவரை துள்ளிக்குதித்தார்கள் இருவரும். மருத்துவர் ஸ்கேன் செய்து முடித்தவுடன் கொடுத்த அறிக்கையிலிருந்த சிசுவின் கலைத்துப் போட்ட மங்கலான படத்தை இதே செல்போனில்தான் அவன் படம் பிடித்திருந்தான். அப்படியிருந்தும்கூட இந்த செல்போனை மண்ணோடு மண்ணாக ஆக்கும்படியான கோபம் சத்தியமூர்த்திக்கு இன்னமும் கொஞ்சம்கூட குறைந்தபாடில்லை.
தினந்தினம் தனது பிள்ளையைப் பற்றிய கவிதைகளையும், கனவுகளையும், ஆசைகளையும் பேஸ்புக்குகள், வாட்ஸாப்பிகள் என பதிவிட்டபோது கிடைத்த நண்பர்களின் வாழ்த்துகளும், கிண்டல்களும் அவனது குழந்தையைப் பற்றிய கனவு உலகத்திலேயே எட்டி உதைத்துத் தள்ளியிருந்தது. நண்பர்கள் வீட்டிற்குச் செல்கின்ற போதெல்லாம் அவர்களின் குழந்தைகள் விளையாடுகிற பொம்மைகளையும், வைத்திருக்கிற பொருட்களையும் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு அவ்வப்போது அமேசான், பிளிப்கார்ட், ஸ்னாப்டீல் என்று கூகுளில் தேடிப்பார்த்துக் கொண்டிருப்பான். அதிலிருந்து தனது குழந்தைக்காக எதையெல்லாம் வாங்க வேண்டுமென்று குறிப்புகளாக எடுத்து வைத்துக் கொள்வதை அப்போது ஒரு வழக்கமாகவே வைத்திருந்தான். ஆனால் அட்டைப் பூச்சியின் கொடிய நச்சரிப்பைப்போல அதுவே தனது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வந்து தன்னை சித்ரவதை செய்யப் போகிறது என்பதை அப்போதே சத்தியமூர்த்தியால் உணர முடியாமல் போனது.
பிரசவ தேதிக்கு இரண்டு மாதத்திற்கு முன்பே கவிதாவிற்கு பிரசவ வலி வந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். இதே தெப்பக்குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போதுதான் செல்போன் சிணுங்கிக் கொண்டே இத்தகவலை காதோரமாக உதிர்த்துவிட்டு அவனது குளிர்ந்த கன்னத்தில் சூட்டை இறக்கிவிட்டுச் சென்றது. சத்தியமூர்த்தி மருத்துவமனை நுழைவதற்கு முன்பே கவிதாவை பிரசவ அறைக்கு உள்ளே அழைத்துச் சென்றுவிட்டார்கள். கவிதாவிற்கு இரத்த அழுத்தம் இருநூறுக்கு மேல் சென்று வலிப்பே வந்துவிட்டதாகவும், குழந்தையை மருந்து வைத்து வெளியே எடுக்காவிட்டால் அம்மாவின் உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர்கள் வந்து சொல்லிவிட்டுப் போனார்கள். இப்போது எந்த உயிரை விட்டுக்கொடுத்து எந்த உயிரை காப்பாற்ற வேண்டுமென கேட்டு மருத்துவரிடம் மன்றாடுவது என்ற திகைப்பில் நெஞ்சிலே அடித்துக் கொண்டு சத்தியமூர்த்தி கதறி அழுததைப் பார்த்தவர்கள் மனிதப் பிறவியிலே இத்தனை கொடுமைகளா? என்று புலம்பிக் கண்ணீர் வடித்திருப்பார்கள்.
“எங்கள் முயற்சியில் எந்த உயிர் பிழைக்குமென்று தெரியாது, முடிந்ததை முயற்சிக்கிறோம்” என்று அர்த்தப்படுகிற பதத்தில் மருத்துவர் வந்து சாட்சிக் கையெழுத்து வாங்கிவிட்டு உள்ளே சென்ற இருபதே நிமிடத்தில் குழந்தையை வெற்று பிணமாய் வெளியே கொண்டு வந்தார்கள். வெந்நீரில் வேகவைத்த கருணைக்கிழங்கைப் போல உப்பிப்போன பிஞ்சு உடலை ஒரு மென்மையான வெள்ளைத் துணியில் சுற்றிக் கொண்டுவந்து கவிதாவின் கணவர் இருக்கிறாரா என்று கேட்டு சத்தியமூர்த்தியின் கையிலே கொடுத்தார்கள். மனைவி இரவும் பகலும் வயிற்றிலே கல்லைக் கட்டிக் கொண்டு சுமப்பதைப்போலவே தானும் கனவிலே எட்டு மாதங்களாக சுமந்த பிள்ளை இப்போது வெறும் பொதிமூட்டையாக துணிக்குள் விரைத்துக் கிடக்கின்ற நிலையைப் பார்க்க முடியாமல் அவன் கண்களை இறுக மூடிக் கொண்டான். தன் வாழ்க்கை இப்போதே முடிந்துவிடக்கூடாதா, இத்தோடு தனது கண்கள் பார்வையை இழந்துவிடக்கூடாதா என்பதைப் போல அவன் கண்களை இழுத்து மூட முயற்சிக்கையில் இமைகளை பிரித்துக் கொண்டு கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது.
அம்மாவை பிழைக்க வைப்பதற்காக சிசு வளர்ச்சியடையும் முன்பே செயற்கையாகவே வலியை ஏற்படுத்தி பிரசவிக்க வைத்துவிட்டதாகவும், பிரசவிக்கும் வரை உயிரோடு இருந்த பிள்ளை வெளியே வந்த அடுத்த நிமிடத்திலேயே இறந்து போயிருக்கும் என்றும் அருகருகே நின்ற மருத்துவமனை ஊழியர்கள் பேசிக் கொண்டார்கள். அவர்களின் ஒவ்வொரு பேச்சுகளுமே அவனது இதயத்தை யாரோ கூர்மையான வார்த்தைகளால் கரகரவென அறுப்பதைப் போல இருந்தது. இது சத்தியமாக ஒரு கொலைதான். ஆனால் ஒரு உயிரை காப்பாற்றுவதற்காக இன்னொரு உயிர் நியாயப்படி தன்னைத் தியாகம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. இதை ஒரு சாமானியன் நிலையிலிருந்து சத்தியமூர்த்தியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இருந்தாலும்கூட அப்போதைக்கு அவனால் அழ மட்டும் முடிந்திருந்தது.
தூரத்தில் நின்றுகொண்டே துப்புரவு தொழிலாளியோ சத்தமாக “டாக்டரம்மாகிட்ட கொழந்த எறந்துபோன சீட்டு வாங்கிட்டு சீக்கிரமா சுடுகாட்டுக்கு போயிட்டு வாங்க. இல்லைனா அங்க பொணத்தை பொதைக்கவிட மாட்டாங்க” என்று சொன்னவுடன் சத்தியமூர்த்தி உடைந்து அழ ஆரம்பித்த கண்ணீர் இந்தக் கணம்வரை நிற்கவே இல்லை. மனைவியை காப்பாற்றிவிட்டோம் என்று சந்தோசப்படுவதா, தன் ஆசை பிள்ளை இப்படி கருவிலேயே கருகிப் போய்விட்டதே என்று அழுவதா என்று புரிந்துகொள்ள முடியாத குழப்ப நிலையிலேயே சுடுகாட்டிற்குச் சென்று புதைத்துவிட்டு மனைவியைப் பார்க்க மருத்துவமனைக்கு ஓடோடி வந்தான். அவன் வருகிற வழியெங்கும் ஒரே ஒரு கேள்வி மட்டும் மீண்டும் மீண்டும் அசரீரி போல அவனுக்கு கேட்டுக் கொண்டே இருந்தது. நம்ம பிள்ளை எங்கே என்று கவிதா கண் விழித்தவுடன் கேட்கப் போகின்ற கேள்விக்கு அவனிடம் அப்போது எந்த பதிலுமே இருந்திருக்கவில்லை.
வீட்டிற்கு வந்துபின்பும் மருத்துவமனை நியாபகம் நீண்ட நாட்களாக வந்துகொண்டே இருந்தது. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் கையில் உயிரின்றி கிடந்த பிள்ளையின் நினைப்பு வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தது. அதனால் உடல் சரியில்லை என்றாலும்கூட மருத்துவமனைக்கு செல்லப் பிடிக்காமல் அதன் வலியை முழுவதுமாக தாங்கிக் கொண்டான். அவனருகே படுத்துக் கொண்டு தினந்தோறும் சோறு தண்ணியில்லாமல் அழுதழுது உடல் வற்றிப் போயிருந்த கவிதாவை பார்க்கும்போதெல்லாம் அழுகை இன்னும் பீறிட்டு வரும். உடனே சட்டையை எடுத்துப் போட்டுவிட்டு வெளியே கிளம்பிச் சென்றுவிடுவான். வாழ்வதற்காகவாவது சாப்பிட்ட வேண்டுமென்பதைக்கூட அவர்கள் இருவருமே மறந்திருந்தார்கள். சொந்த பந்தங்கள் எவரிடமும் அவர்களுக்கான ஆதரவு வார்த்தைகள் துளியளவும் இல்லை. இரவில் எல்லோரும் தூங்கிய பின்பாக சத்தியமூர்த்தி வருவதும், பின்னர் பிள்ளை நினைப்பிலே முணங்கிக்கொண்டே உறங்கிக்கொண்டிருக்கிற கவிதாவை தன் மடியில் எடுத்துப் போட்டு தட்டிக் கொடுத்துக்கொண்டே விசும்பு அழுவதும், அப்படியே சுவற்றில் சாய்ந்து தூங்கிவிடுவதுமாக நாட்கள் கடந்து கொண்டே சென்றது.
பொழுது சாய்ந்த தெப்பக்குளத்தின் கல் படிக்கட்டும், குளத்தின் ஈரக் காற்றும், வேப்ப மரத்தின் நிழலும் அழுதழுது சோர்ந்து போன சத்தியமூர்த்தியின் உடலை மடியில் போட்டு கொஞ்சமாக அசந்து தூங்க வைத்திருந்தன. மனித நடமாட்டமே இல்லாத அந்த குளத்தங் கரையில் தேன்சிட்டு மட்டும் துக்கத்தோடு மேலெழுந்து கீய்ச் கீய்ச்.. கிக்கிக்கிக்.. கீச் கீச் கீச்.. ட்ருய்ங். கீய்ச் கீய்ச்.. கிச்கிச் சூச்.. என்று உச்ச ஸ்தாபியில் ஏக்கப் பெருமூச்சோடு இழுத்துப் பாடுவதும், பின்பு மெல்லிய இடைவெளியில் விட்டு விட்டு கீச்.. கீச்.. சோகத்தை உச்சேசித்து சத்தியமூர்த்தியை இறுக அணைத்து தழுவிக் கொள்வதுமான ஒப்பாரியை இசைத்துக் கொண்டிருந்தது. தூக்கம் என்கிற மருந்து மட்டும் இல்லாவிட்டால் இந்த மனித இனமே பட்டுப் போயிருக்கும் என்று உச்சுக் கொட்டுவதைப் போல அப்போது தேன்சிட்டு வேப்பம் பூவுடன் பேசிக் கொண்டிருந்தது.
திடீரென்று அந்த ஒருநாளில் சத்தியமூர்த்தியின் தொலைபேசிக்கு அமெசானிலிருந்தும் பிளிப்கார்ட்டிலிருந்தும் இன்னும் பிற ஆன்லைன் வர்த்தக கம்பெனியிலிருந்தும் குறுந்தகவல் வந்துகொண்டே இருந்தது. குழந்தை இறந்துபோன சோகத்தில் தொலைபேசியே மறந்து போயிருந்த சத்தியமூர்த்திக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்த இடைவிடாத குறுந்தகவல் சத்தங்கள் அவனை ஏதோ தொந்தரவு செய்து கொண்டிருந்தன. அவனது மின்னஞ்சல் பக்கங்கள் முழுவதும் விளம்பர அறிக்கைகளாக மாறிப் போயிருந்தன. பேஸ்புக்குக்குள் நுழைந்த போதும்கூட விளம்பரங்கள் வரிசையாக மாறிமாறி வந்து கொண்டே இருந்தன. அவனால் எந்தவொரு விளம்பரங்களின் கன்னி வெடிகுண்டிலிருந்தும் எளிதில் தப்பிவிட முடியவில்லை.
ஒவ்வொரு விளம்பரங்களுமே கணக்கச்சிதமாக அவனது ஒவ்வொரு பார்வையின் நகர்வுகளுக்கும் தெரிகின்றபடியும், ஒரு விளம்பரம்கூட அவனது பார்வையிலிருந்து விலகிவிடாதவாறு பக்கங்களைக் கடக்க கடக்க தெளிவாக திட்டமிட்டும் வடிவமைக்கப்பட்டிருந்தன. இந்த வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள் ஏன் இப்பது விடாப்படியாக தன்னை இம்சித்துக் கொண்டிருக்கின்றன என்று எவ்வளவு யோசித்தும் சத்தியமூர்த்திக்கு நீண்ட நேரம் விளங்காமலே இருந்தது. இதையெல்லாம் தான் வாங்க வேண்டுமென்று எண்ணி ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போடுவதை மட்டும் அவனால் உணர முடிந்தது. ஆனால் இவையெல்லாம் எப்படி நடக்கிறது, ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்பதை முழுமையாக அவனால் யோசிக்க முடியவில்லை. இந்த ஆன்லைன் நிறுவனங்களின் நோக்கமே அப்பாவாகப் போகிற சத்தியமூர்த்தி மாதிரியான நபர்களை பொறுக்கியெடுத்து அவர்களுடைய எண்ணங்களைக் குறிவைத்து பெரிய சந்தையாக உபயோகிப்பதுதானே. ஆனால் குழந்தையை இழந்த அப்பாவாகிய சத்தியமூர்த்தியின் மனதை அறிவதற்கான தொழில்நுட்பம் மட்டும் ஏனோ அவர்களிடம் இல்லாமல் போனது.
பிறந்த குழந்தைகளுக்காக வாங்க வேண்டிய பொருட்கள், ஆடைகள், பொம்மைகள் என்னென்ன என்று ஏற்கனவே சத்தியமூர்த்தி கூகுளில் தேடிப்பார்த்த பதிவுகளிலிருந்து அவனை பின்தொடர்ந்து அதிலே சிறந்தவற்றை வாங்குவதற்காக அறிவுரை கூறியும், அவ்வப்போது வந்த புதிய வரவுகளைப் பற்றி ஞாபகப் படுத்தியும், தங்களிடம் வாங்கினால் அதிக தள்ளுபடி தருவதாக ஆசை காட்டியும் மாறிமாறி குறுந்தகவல்களிலும், மின்னஞ்சல்களிலும், பேஸ்புக்கிலும் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தொடர்ந்து தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தன. அவை எல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க சத்தியமூர்த்திக்கு ஆத்திரமாக வந்தது. அப்போதுதான் அவனுக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது. குறைபிரசவத்தில் எட்டாவது மாதத்திலேயே பிறந்துவிட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் கொடுத்த உத்தேச பிரசவ தேதி.. ஆம், இன்றுதான். கூகுளிலோ, ஸ்ஷாப்பிங் மால்களிலோ எங்கோ தனது குழந்தையின் பிரசவ தேதியை மறந்துபோய் பதிவிட்டதை எண்ணி அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது. வீட்டிலுள்ள அத்தனை பேரும், குறிப்பாக கவிதாவும் பல நாட்கள் துயரப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிற சூழலில் இந்த நியாபகங்கள் அவர்களை திரும்பவும் பழைய நிலைமைக்கு கொண்டு சென்றுவிடுமோ என்று அவனின் நெஞ்சம் பதைக்க ஆரம்பித்தது. சத்தியமூர்த்தி கொஞ்சமும் தாமதிக்காமல் திடுதிடுவென்று எழுந்து சட்டை போட்டும் போடாததுமாக செல்போனை தூக்கிக் கொண்டு கண்ணை கசக்கியபடியே தெப்பக்குளத்தை நோக்கி ஓடினான்.
இரண்டு மாதங்கள் போராடி பிள்ளையை இழந்த துயரத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துகொண்டிருந்த சத்தியமூர்த்திக்கு குழந்தையைப் பற்றிய எல்லா நினைவுகளும் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றாக ஞாபகத்தில் மேலெழுந்து வந்து கொண்டிருந்தது. வீட்டிலிருந்து தெப்பங்குளத்தை நோக்கி ஒரே ஓட்டமாக ஓடிவந்த நிற்கிற சத்தியமூர்த்திக்கு அந்தக் குளத்திலேயே விழுந்து செத்துவிடலாம் போல இருந்தது. “எங்க பிள்ளை செத்துப் போச்சு, என்னையும் என்னோட பொஞ்சாதியையும் விட்ருங்க, எங்களை இப்படி உயிரோடயே கொன்னுடாதீங்க” என்று இந்த வணிக நிறுவனங்களுக்கு எப்படிச் சொல்வது என தலையில் அடித்தபடி நொந்துபோய் அழுது கொண்டிருந்தான். தன் பிள்ளைக்கு வாங்க வேண்டுமென ஆசை ஆசையாக தேடி வைத்திருந்த பச்சை நிற வளையல்களின் படம் தொலைபேசியின் ஓரத்தில் வந்து இப்போதாவது வாங்குவீர்களா? உங்கள் குழந்தைகளுக்காக இன்னும் அதிக தள்ளுபடி விலையில்! என்று முக்கிய செய்திபோல செல்போனில் சிணுங்கவே அதற்குமேல் சத்தியமூர்த்தியால் பொறுக்க முடியவில்லை.
ஆத்திரம் ஆத்திரமாக பொங்கி வந்த கோபத்தோடும், பச்சை வளையலை ஆசையாய் போட்டுவிட ஒரு பிள்ளை இல்லாமல் போய்விட்டதே என்கிற ஆதங்கத்தோடும் இதோ ஒருவழியாக செல்போனை உருத்தெறியாமல் உடைத்துவிட்டான். ஆனால் அவனுக்குத் தெரியாது எத்தனை செல்போன்கள் வாங்கினாலும் வலைதளம் மூலமாக அவனைப் பின் தொடருகிற வணிக நிறுவனங்கள் கடைசிவரை சும்மா விடப்போவதில்லை என்று. ஒரு வருடம் கழித்து கூகுள் சென்று பேஸ்புக்கைத் தேடினாலும் மின்னஞ்சல் பக்கங்களைத் திறந்துப் பார்த்தாலும் மீண்டும் இதே வணிக நிறுவனங்கள் ஒரு வயதுக் குழந்தைக்கான விளம்பரங்களோடு வந்து வரிசையில் நிற்கத்தான் போகிறது. இன்னும் எத்தனை செல்போன்களை, எவ்வளவு காலங்கள் சத்தியமூர்த்தியால் உடைத்தெறிய முடியும்?
தலைக்கு மேலே எழுந்த நிலவானது தனது மங்கிய ஒளியால் அவ்விடத்தை விளக்கேற்ற அப்போது வீசிய மற்றுமொரு குளிர்ந்த காற்றில் சத்தியமூர்த்தி தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தான். ஒருமுறை செல்போன் உடைந்து கிடந்த திசையை நோக்கி வெறித்துப் பார்த்துவிட்டு தடாலென எழுந்து வீட்டை நோக்கி வேக நடை போட்டான். அந்த சமயத்தில் சத்தியமூர்த்தி சென்ற திசைக்கு எதிர்திசையில் தேன்சிட்டு அதன் குஞ்சுகளைப் பார்ப்பதற்காக கூட்டை நோக்கி பறந்து கொண்டிருந்தது.