Subscribe

Thamizhbooks ad

சிறுகதை: ராமனைத் தேடி…. – மே- பா. எம். தங்கராஜூ

தெருவில் அவனையொத்த பிள்ளைகள் ஓடிப் பிடித்து விளையாடியும், கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டும் குழந்தைப் பருவத்தின் இயல்பான குணங்களோடு மாலைப்பொழுதின் மங்கிய ஓளியில் புழுதியளைந்து கொண்டிருக்கையில் மணிகண்டன் மட்டும் துயரமும், கவலையும் தோய்ந்த முகத்துடன் கையிலிருந்த புத்தகத்தையும், சன்னல் வழியே வெளியுலகத்தையும் பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அரைப்பரீட்சையில் மார்க் குறைவாக எடுத்தானென்று அவன் அப்பா பள்ளிக்கூடம் முடிந்தவுடன் வீட்டை விட்டு வெளியேறாமல் இரவு வரை படிக்க வேண்டுமென்று கடுமையாக உத்தரவு போட்டிருந்தார். முழுப்பரீட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. மணிகண்டனுக்கு விளையாட்டு கூட இரண்டாம் பட்சம்தான். அவன் எண்ணமெல்லாம் கோயிலைச் சுற்றியே இருந்தது. இன்றிலிருந்து கோயிலில் ஒரு வாரத்திற்கு ஆன்மீகச் சொற்பொழிவு நடக்கிறதாம். மதுரையிலிருந்து சோமநாதன்னு பெரிய மகான் வாரார்.

அம்மாவுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. பிள்ளை எத்தனை நேரம் தான் வீட்டிலேயே கிடப்பான்? கடவுளா பார்த்து கொடுக்கிற படிப்புக்கு இவன குத்தம் சொல்லி என்ன செய்ய? டேய்.மணிகண்டா, படிச்சது போதும் கொஞ்ச நேரம் வெளியிலே போய்ட்டு வாடா…

மணிகண்டனுக்கு மனதுள் உற்சாகம் துள்ளியது. தந்தையை நினைத்து தயங்கி நின்றான்.

நீ கிளம்பு… அவரு வந்தா நான் சொல்லிக்கிறேன். அப்படியே கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடுறேம்மா.

சரி. பிரசங்கம் முடிஞ்சதும் சீக்கிரம் வந்துரு. அந்த பெருமாள்கிட்ட நல்ல புத்தியையும்,தீர்க்காயுசையும், படிப்பையும் கொடுடா ஆண்டவனேனு வேண்டிக்க…

மணிகண்டனுக்கு தேக வளர்ச்சியும் வாலிப முத்திரைகளும் ஏற்படும் பருவம் அது. உடலிலும், மனதிலும் சதா துடிப்பும் வேகமும் பிறந்தது. மனம் சம்பந்தமில்லாத வி~யங்களிளெல்லாம் துழாவ ஆரம்பித்தது. மனதிலே உற்றார் உறவினர் மீது வெறுப்பு, எப்போதும் சிடு மூஞ்சியும், கலகலப்பின்மையும், எதையோ நினைத்து ஏங்குவது போலவும், ஏகாந்தத்தை நாடுவதும், வீட்டை வெறுத்து எங்காவது போய்விடலாமா என்று அண்மைக் காலமாக மணிகண்டன் எண்ணினான்.

அன்றிலிருந்து மணிகண்டன் தினமும் கோயிலுக்கு போக ஆரம்பித்தான். ஏற்கனவே அவனுள் இருந்த ஆன்மீகப்பற்று மகான் சோமநாதரின் வெண்கலக் குரல் சொற்பொழிவால் பக்தி முற்றி கனிந்து மெருகேறியது. தான் அறிந்தவற்றையெல்லாம்  எதிரே உள்ளவர்கள் புதிதாய் கேட்கிறார்கள் என்ற நம்பிக்கையுடன் சோமநாதர் மிகுந்த ஈடுபாட்டுடன் பிரசங்கம் செய்தார்.

     “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது                                                        

      எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது                                                   

      எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்                                                          

      உன்னுடையது எதை இழந்தாய்?                                                           

      எதற்காக நீ அழுகிறாய்?                                                                        

      எதை நீ கொண்டுவந்தாய்? அதை நீ இழப்பதற்கு                                                                            

      எதை நீ படைத்திருக்கிறாய்? அது வீணாவதற்கு                                                                            

     எதை நீ எடுத்துக்கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது                                                         

      எதை நீ கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட்டது         

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையவராகிறது. இந்த மாற்றம் உலக நியதியாகும். ஆம்… பெற்றோர், உடன்பிறந்தோர், சுற்றம், பந்தம், பாசம் இந்த உலகம் எல்லாம் பொய்தானே…

மரணம் வரும், அதுதான் நிலைத்த உண்மை. அந்தப் பெரிய உண்மைக்கு நேரில் இவையெல்லாம் அற்பப் பொய்!  படிப்பு ஏன்? செல்வம் எதற்கு?முடிவில் ஒரு நாள் செத்துப் போவாமே… அப்போது இவற்றில் ஏதாவது ஒன்று, யாராவது ஒருவர் நம்மை முதுமையிலிருந்தோ, மரணத்திலிருந்தோ காப்பாற்ற முடியுமா?

இறந்த மனிதன் எதைப் பற்றி கனவு ...

நம்மை உருவாக்கியதாகச் சொல்லப்படும் தாய் தந்தை மற்றும் எல்லா உயிரினங்களும் ஒரு நாள் மரணமடைவார்கள். இவர்களில் யாரையாவது, எதையாவது நான் அல்லது என் அறிவு, என் அறிவுரை உயிர்ப்பிக்க இயலுமா என்ன? முடியாது!

அப்படியானால் இந்த உலகுக்கும் நமக்கும் என்ன உறவு? நான் யார்? நீங்கள் யார்? வீடு என்பதும், மனைவி மக்கள் என்போரும், இன்பம் துன்பம் என்றும் எல்லாமே பொய்!

மரணத்தை மனிதன் வெல்ல முடியாது. நம்மால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை. அப்புறம்…? இறைவனை அடைவது தான் பிறவிப் பயன்.  கடவுளை எப்படி அடைவது?

ஆசைகளைத் துறப்பதன் மூலம் மனிதன் இறைவனை அடைய முடியும். உயிர்கள் மீண்டும், மீண்டும் பிறந்து பந்த பாசச் சூழலில் சிக்கி பாவ ஆத்மக்களாக மாறி மீளா நரகத்தில் விழாதிருக்க, பிறவி நீத்து லோகக் கடவுளாகிய ஸ்ரீராமனின் பாதார விந்தங்களை அடைவது. ஜெய் ஸ்ரீ ராம்!

அயோத்தி நகரில் மேகம் திரண்டு நிற்பது போன்ற அரண்மனையில் உலகின் அர்தத்த்தையே தேர்ந்த பெருமிதத்தில், தெளிவில் மின்னிப் புரளும் விழிகளை மூடி, இயற்கையின் பிரம்மாண்டத்துடன் லோகத்தையே காத்தருள கம்பீரத்துடன் அமர்ந்திருக்கிறாரே அவர்தான் ஸ்ரீராமன். அவன் ஜனித்த பூமியில் கோவில் கட்டி விழா எடுக்ககூடாதாம். அற்ப மனிதர்கள் ஆண்டவனுக்கு தடை செய்கிறார்கள்.

ஸ்ரீராமன் ஆலயத்தில் நரனின் சமாதி. வந்தேறிகளால் பாரத மாதாவிற்குக் களங்கம். நல்ல வேளையாக கோடானு கோடி கரசேவர்களால் அந்த அவமானச் சின்னம் துடைத்தெறியப்பட்டது.  பாரத் மாதா கீ ஜெ!

மணிகண்டன் கற்பனையில் அயோத்தி தெரிந்தது. அயோத்தி சென்று ஸ்ரீராமனை தரிசித்து அவர் பாதங்களில் வீழ்ந்து அவருக்குப் பணி விடை செய்ய வேண்டும். அதையே பிறவியின் பயனாகக் கொள்ள வேண்டும். அங்கே தன்னலமற்று திருத்தொண்டாற்றி வரும் சங்பரிவாரோடு சேர்ந்து மற்றக் கருமங்கள் யாவையும் மறந்து ஆசைகளை, பந்தங்களை, தன்னை, உலகை அனைத்தையும் துறந்து விட்டால் ஸ்ரீராமன் நிச்சயம் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். ஜெய் ஸ்ரீ ராம்!

இன்றோடு மணிகண்டனுக்கு எட்டாம் வகுப்பு முழுப்பரீட்சை முடிகிறது. நாளைக்குத் தான் அவன் பயணம் ஆரம்பம். அதை நினைக்கும் போதே மாய வாழ்வை உதறியெறிந்த செருக்கு அவன் முகத்தில் தோன்றியது. எல்லாப் பெருமையும் நாளையிலிருந்து….

ஜெய் ஸ்ரீ ராம்! மணிகண்டன் மனதில் உற்சாகம் பொங்கியது.

ஒரு மாதமாகவே அவன் பெட்டிக் கடையில் கால் கால் ரூபாயாக சேர்த்து பத்து ரூபாய் பண்டு அடைத்து வாங்கி வைத்திருந்தான்.

மறுநாள் தூங்கி எழுந்ததும் பம்புசெட்டிற்குப் போய் நன்றாக குளித்து விட்டு, வெளுத்த டவுசர் சட்டை போட்டுக் கொண்டு சாந்து பொட்டை எடுத்து வந்து கண்ணாடி முன் நின்றான். ஆன்மீகம் மலர்ந்து அருள்மொழியும் தன் முகத்தைப் பார்த்து பெருமிதம் கொண்டான்.

என்னடா இந்நேரத்துல மினுக்கல் … பெருமாள் கோவிலுக்கு போறேம்மா… சீக்கிரம் போயிட்டு வா. உங்கப்பா ஜவுளிக் கடையிலே ஒனக்கு வேலை வாங்கிட்டு வச்சிருக்காறாம். ஒரு மாசம் அங்க போயி இரு. ஏதாவது கொடுத்தாங்கன்னா புத்தகம் நோட்டு வாங்குறதுக்கு ஆகும்.

ஆண்டவன் சேவைக்கே என்னை அர்ப்பணித்த நான் கேவலம் ஒரு இழி பிறவி ஜவுளிக்கடை முதலாளிக்கு ஏவல் செய்வதா?

ம்ம்… இந்த மூடாத்மாகளுக்கு என்னிக்குத் தான் ஞானம் வரப்போகுதோ… மனதுக்குள் நொந்து கொண்டு அஞ்ஞானியான அம்மாவுக்காக வருத்தப்பட்டான்.

தகப்பன் ஒரு மாமிச மலை. உண்பதும், உடுப்பதும், உறங்குவதும் தவிர அவருக்கு ஒன்னும் தெரியாது. லோகத்தில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டி மெய்ஞானத்தைப் பரப்ப பகவான் இன்னும் எத்தனை அவதாரம் எடுக்க வேண்டுமோ…

ஸ்ரீ ராம ஜெயம் |Page 3, Chan:6394020 |RSSing.com"

நெற்றியில் ஆச்சரியக் குறி போல் நாமம் இட்டான். ஸ்ரீராமன் பால பருவத்தில் இப்படித் தான் இட்டுக்கொள்வார்;. ஜெய் ஸ்ரீ ராம்!

டப்பாவில் வீட்டு செலவுக்கு வைத்திருந்ததில் ஒரு பத்து ரூபாயை எடுத்துக் கொண்டு வெளியேறினான். முதலில் மதுரை, மதுரையிலிருந்து சென்னை, சென்னையிலிருந்து லக்னோ, லக்னோவிலிருந்து பைசாபாத், பைசாபாத்திலிருந்து ஸ்ரீராமனின் ஜென்ம பூமியாம் அயோத்தி.

அயோத்தி இங்கிருந்து எவ்வளவு தூரம்?

எவ்வளவு தொலைவு இருந்தாலும் போயிட வேண்டியது தானே… பிறகு என்ன யோசனை?

சாப்பாடு?

போகிற வழியெல்லாம் எவ்வளவு கோயில்கள், எத்தனை புண்ணியவான்கள் எவ்வளவு ராமபக்தர்கள்….

உலகத்து உயிர்களையெல்லாம் வாழ வைக்கும் ராமபிரான் எனக்கு மட்டும் படியளக்காமலா இருப்பான்?

தாய், தந்தை, பந்த பாசம், சுற்றம், செல்வம், கல்வி எல்லாவற்றையும் துறந்து மதுரை ரயில்வே நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருந்தான். இதோ எதிரில் நிற்கும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் அவன் பயணத்திற்கு தயாராக இருப்பது போல் நின்றிருந்தது.

சிறிது நேரத்தில் பிளாட்பாரத்தில் சுறுசுறுப்படைந்த போது, ஹோல்டால் லக்கேஜூடன் பறந்து ஓடுபவர்கள், ஒவ்வொரு பெட்டியாக ரிசர்வேசன் சார்ட்டைப் படித்துக் கொண்டு அதில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என தேடி அலைபவர்கள், சிறிய கைப்பையை மட்டும் தோளில் மாட்டிக்கொண்டு ஒய்யாரமாய் கைவீசி நடந்து கொண்டிருக்கும் இளஞ்ஜோடிகள், அஞ்சல் மூட்டைகளைத் தள்ளுவண்டியில் அடுக்கி தள்ளிக்கொண்டு வரும் ஆர்எம்எஸ் ஊழியர்கள், பெரிய கண்ணாடி சோ கேஸிற்குள் ரொட்டி பாக்கெட், பிஸ்கட், சிகரெட் வைத்து வியாபாரம் செய்யும் முதியவர், சிவப்பு சீருடையுடன் சுமைகளைத் தூக்கி வரும் போர்ட்டர்கள், ரெயில் பெட்டியைத்;;; திறந்தவுடன் தங்கள் பணியை ஆரம்பிக்க ஆயத்தமாகும் குழந்தை பிச்சைக்காரர்கள், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் விளம்பரங்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் தொலைக்காட்சி பெட்டிகள் எல்லாம் பார்த்து, மனித வாழ்க்கை இத்தனை அவசரமாகவும், வேகமாகவும் இயங்குவதில் லயித்துப் போய் தன்னை மறந்து மணிகண்டன் உட்கார்ந்திருந்தான்.

பிளாட்பாரத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டே இருந்தது. திருவிழா நடப்பது போலவும், தேர் வர இருப்பது போலவும் ஜனக் கூட்டம் நெறித்தது. ஊர்வலம் பார்க்கத் திரண்டிருப்பது போல் பிளாட்பாரத்தின் ஓரத்தில் ஜனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். இதெல்லாம் ஏன் என்று அவனுக்கு விளங்கவே இல்லை.

அது சரி, இவர்களுக்கெல்லாம் மெட்ராசில் என்ன ஜோலியாம்?

பயணம் என்பதே ஒரு லட்சியத்திற்காக மேற்கொள்ள வேண்டிய உயரிய செயல் என்று அவன் எண்ணி இருந்ததாலேயே இயல்பாகவே அவன் மனதில் இந்தக் கேள்வி எழுந்தது. அதே நேரத்தில் தான் மட்டுமே அரிய குறிக்கோளுடன் இருப்பதாகவும், தனக்குத்தான் பயணம் செய்ய தகுதி இருக்கிறது என்று எண்ணி இறுமாந்திருந்தான்.

கண்ணாடிப் பெட்டிக் கடையைப் பார்த்தான். தன் உள்ளுறுப்பு ஒன்று அதற்கு ஏதோ தேவையென்று அறிவுறுத்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரொட்டி பாக்கெட்கள் மீது பார்வையை நிறுத்தினான். ஊரிலிருந்து மதுரைக்கு பஸ் டிக்கெட் போக மீதி சில்லரையை எண்ணினான். பெட்டிக் கடை முதியவரிடம் ஆறே முக்கால் ரூபாய் கொடுத்து ஒரு ரொட்டி பாக்கெட் வாங்கி ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டான். அதுவரை வறண்டிருந்த அவன் வாய் உமிழ்நீரை சுரந்து தள்ளியது.

பாக்கெட் முழுவதையும் தின்று விட்டு தண்ணீர் குடிக்கச் சென்றான். குடிநீர்த் தொட்டி ஒரத்தில் மெலிந்;த பிச்சைக்காரி தன் குழந்தைக்குப் பாலூட்டி கொண்டிருந்தாள். வற்றிய மார்பகத்திலிருந்து பால் வராமல் உப்புகரித்ததோ என்னவோ குழந்தை சப்புவதும், ஏமாற்றத்தால் காலை உதைத்து அழுவதுமாய் இருந்தது. தாய் டி.வியை ரசித்துக் கொண்டிருந்தாள்.

பார்த்ததும் அருவருப்படைந்தான். இவர்களுக்கெல்லாம் என்ன வந்தது? ஏன் இப்படி திரிகிறாhகள்? எப்படியாவது உயிர் வாழனுங்குற ஆசையா…

மனிதர்களைச் சுற்றி எத்தனை ஆயிரமாயிரம் ஆசைகள்? எத்தனையோ ஆயிரமாயிரம் கவலைகள்… ஆசையின் மறுபாதி தான் கவலை என்று அப்பட்டாமாகத் தெரிந்தாலும் மனிதர்களால் ஆசைப்படாமலோ, கவலைப்படாமலோ இருக்க முடியவில்லையே…

உஜிலாதேவி: அம்மா என்றால் அன்புதானா?

அவன் அம்மா ஞாபகம் வந்தது. பிள்ளைப் பருவத்தில் அவள் தாய் அவனை வெறும் பாலூட்டி மட்டும் வளர்க்கவில்லை. தேய்ந்து வந்த அவளுடைய ஆசைக் கனவுகள் யாவற்றையும் அவன் மூலமாக அல்லவா புதுப்பித்து வளர்த்துக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் கூட என்னைக் காணாமல் இருக்க முடியாதே அம்மா… இப்போ எப்படியெல்லாம் அலைமோதி; தவிக்கிறாயோ…

திரும்பி நடந்து வருகையில் எடைபார்க்கும் எந்திரத்தில் ஏறி நின்று ஒரு ரூபாய் நாணயத்தை உள்ளே போட்டான். சில வினாடிகளில் டபக்கென்று ஒரு மஞ்சள் நிற அட்டைத் துண்டை துப்பியது. இருபத்தெட்டு கிலோவா… ஆச்சரியப்பட்டான். அட்டையின் பின்புறம் இலவச இணைப்பாக ஜோதிடம் சொல்லப்பட்டிருந்தது. “நினைத்த காரியம் வெற்றியாகும்”  அதைப் பார்த்;தவுடன் மணிகண்டனுக்கு இப்போதே அவனுடைய லட்சியத்தில் வெற்றியடைந்து விட்டதாக நினைத்தான். எல்லாம் பகவான் செயல். ஜெய் ஸ்ரீராம்! ராமா… அடுத்த வேளை உணவை நீ தான் அருள வேண்டும்.

பின்னால் யாரோ கையை இறுக்கிப் பிடிப்பது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தான். பேண்ட், சட்டையுடன் உயரமாக நின்றிருந்தார். மீசை அடர்த்தியாக இருந்தது.

யார்ரா நீ? பேசாமல் இருந்தான்.

என்னலே முழிக்கிறே… நான் வெளியூர் சார்… மெட்ராஸ் போகனும்…  கூட யார் இருக்காங்க? நான் மட்டும் தான் வந்தேன். சட்டை, டவுசர் பையை சோதனை போட்டார். ஓகோ… வித்தவுட்டா… நட. சார்… நான் அயோத்திக்கு போற ராம பக்தன் சார் என்ன விட்டுருங்க சார்…

மதுரை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியின் விடிகாலைப் பொழுதில், நடந்த சம்பவங்களையெல்லாம் அசைபோட்டுக் கொண்டு மணிகண்டன் உட்கார்ந்திருந்தான்;. அவனைப் போல் ஏராளமான சிறுவர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களில் பலர் இளங்குற்றவாளிளென்று அவர்கள் பேச்சுக்கிடையே வெளிப்பட்ட போது அவன் அதிர்ந்தான். மனிதர்களில் இத்தனை வகையா? நான் வந்தது ஒரு காரணமென்றால் இவர்களெல்லாம் இங்கே வந்ததற்கு என்ன காரணம்? அவன் இதுவரை கேட்டறியாத கெட்ட வார்த்தைகளையெல்லாம் அவர்கள் உபயோகப்படுத்தினார்கள். இரவு முழுவதும் தூக்கமில்லை. என்னிக்கு இங்கிருந்து போவேனோ… அப்போது முதல்நாள் ரயில்வே நிலையத்தில் அவனைப் பிடித்த மீசைக்காரர், அதிகாரி அழைப்பதாக அவனைக் கூட்டிச் சென்றார். இவனை எங்கே பிடிச்சிங்க? ரயில்வே ஸ்டே~னில் சார். பாக்கெட் ஏதும் அடிச்சானா… இல்ல பழைய கிரிமினலா… நோ சார்… இவன் ஒரு வித்தவுட.; டேய் உன் பெயரென்ன? மணிகண்டன்.  அப்பா பேர், அட்ரஸ் சொல்லு… சொன்னான்.

சரி போ, உங்கப்பாவை வரச்சொல்லி லெட்டர் எழுதுறேன். சார்…                                                                என்ன? இனிமே இப்படியெல்லாம் வரமாட்டேன் சார். சாமியெல்லாம் வீட்டிலேயே, ஊரிலேயே கும்பிட்டுக்கிறேன். எங்கம்மாவ அழுவாம இருக்கச் சொல்லி எழுதுங்க சார்.

மூக்கு கண்ணாடியைக் கழற்றி அதிகாரி அவனைப் பார்த்தார். சரி… போ எழுதுறேன்.

மணிகண்டன் திரும்பி போகும் முன் அதிகாரியின் தலைக்கு மேலே சுவற்றில் எழுதியிருந்ததை ஆழ்ந்து படித்தான்.

மாதா, பிதா, குருவே தெய்வம்.

முகவரி

மாதா      

மே- பா. எம். தங்கராஜூ

75- கிழக்குத் தெரு, சக்கம்பட்டி                                                                    

ஆண்டிபட்டி – அஞ்சல்                               

தேனி – மாவட்டம்- 625512                                                                                 

செல்: 9442452505 

Latest

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து...

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை  ...

நூல் அறிமுகம் : புத்தக தேவதையின் கதை – பூங்கொடி பாலமுருகன்

நூல் : புத்தக தேவதையின் கதை ஆசிரியர் : பேராசிரியர் எஸ்.சிவதாஸ் தமிழில்:...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

மணிமாறன் கவிதை

பல்லக்கில் அமர்ந்து அர்ச்சனை காட்டி தட்சணை வாங்குவதில் கவனமாய் இருக்கிறார் குருக்கள் சிலையைத் தொட உரிமை மறுக்கப்பட்டவர் ஆங்காரமாய் சாமி வந்து ஆடுகிறார்.

ந க துறைவன் கவிதைகள்

1. வீடு நேற்று வரை அது என்  தாத்தா வீடு இன்று அதுவே என் அம்மா வீடு நாளை என் வீடாக இருக்குமோ? அல்லது வேறு யாருடைய வீடாக இருக்குமோ? தெரியாது. நல்ல விலைக்கு விற்கப்படுமா? யாரின் கைக்காவது மாறிடுமா? தெரியாது வீடு என்பது எப்போதும் நிரந்தர குடியிருப்பும்...

பாங்கைத் தமிழன் கவிதைகள்

கசப்புச் சுவைகள். *************************          (1) நவீன உடைகள் அடைக்கலப் படுத்திக் கொள்கின்றன வறுமை          (2) வெள்ளையும் ஒன்று கொள்ளையும் ஒன்று கொடி நிறம் வேறு          (3) தாளமிசைக்கும்  கால்கள் தலையசைக்கும் பயிர் களை பறிப்பவள்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here