பூங்காவினுள் அமா்ந்தபடி ரொம்ப நேரமாகவே யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு வேளை இவன் அந்த மனிதன்தானோ! இத்தனை ஆண்டுகளில் கொஞ்சமேனும் சாயல் மாறியிருக்காதா? சடை சடையாய் இஷ்டத்திற்கு தொங்கும் உரமேறிய தலை முடிகளும், தாடியும் இல்லாதிருந்தால் எளிதில் தீர்மானித்து விடலாம். அத்தோடு அழுக்கில் தோய்த்த அட்டைக் கரியாட்டம் வேட்டியும், கந்தலும் கசங்களுமான சட்டையுடன் ஒரு மாதிரியாகவும் நின்று கொண்டிருக்கிறான்.
சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இருக்கும். நாங்கள் குடியிருந்த ஏரியாவிற்கு போகும் பாதையில் ‘மல்லிகை’ எனும் பெயரில் திரையரங்கம் ஒன்று இருந்தது. மேலும் இரண்டு டீக்கடைகள், ஒரு டிராக்டா் ஒர்க்ஸ், ஓடு மற்றும் தகரம், குடிசை வேயப்பட்ட சில வீடுகளும் இருந்தன. ஏனைய இடங்களெல்லாம் வெட்டார வெளிகளாகவும், சீமைக் கருவேலங் காடுகளாயும் கிடந்தன.
அந்த இடம் விடுமுறை நாட்களில் எங்களுக்கான சிறந்த பொழுது போக்குக் களம். குண்டு, பம்பரம், கிட்டி, எரிபந்து, நொன்டி, கபடி, காவியம், ஐஸ் ஒன்னு- ஐஸ் ரெண்டு, திருடன் போலீஸ் என்று எத்தனை எத்தனையோ விளையாட்டுக்கள். காலை உணவை முடித்துக் கொண்டு களமிறங்கினால் போதும் மதியம் வீட்டிலிருந்து ”ஏய்… வாடா… லீவு விட்டாப் போதும் எந்நேரமும் குப்பையில ஆடிக்கிட்டு.. வாடா அங்கிட்டு” என யாராவது தேடி வந்து அழைத்தால்தான் திரும்பத்தோனும்.
அவ்வப் போது அவ்விடத்திலே சலையோர சா்க்கஸ்காரர்களும் கயிரு கட்டி வித விதமான வித்தைகள் செய்து வயிற்றுப் பிழைப்புக்கு வழி தேடுவார்கள். வட மாநிலங்களிலிருந்து சிறிய ரக வெண்ணிற அச்சுப் பொம்மைகள் செய்கிறவர்களும் வந்து முகாமிடுவார்கள். எல்லாம் போக வருடத்திற்கு ஒரு முறையேனும் சிறார்களுக்கான ராட்டினங்களும் வந்து சுற்றிவிட்டுப் போகும்.
ஒன்று குடை ராட்டினம். மிகப்பெரிய தார்ப்பாய் குடை சூழ அதன் கீழே கம்பிகள் வழியாய் யானை, சிங்கம், கரடி, புலி, பன்றி, குதிரை, மாடு என விதவிதமான மரப்பொம்மைகள் பல வண்ணங்களில் தொங்கும். இருபத்தைந்து பைசா கட்டணத்தில் ஏறி அமர்ந்தால் பல சுற்றில் மனதும் உடலும் பரவசமடையும்.
மற்றொன்று செவ்வக வடிவில் நான்கு பெட்டிகள் கொண்டது. இரு மரத் தூண்களுக்கிடையே கூட்டல் வடிவத்திலான பலமான இரும்புச் சட்டங்களில் தொட்டிபோல் நாற்புறமும் தொங்கி மேலும் கீழுமாய்ச் சுற்றும். அதற்கும் இதே கட்டணம்தான்.
இதோ பூங்காவினுள் நுழைந்து எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறானே… அதே சாயலில் ஒரு மனிதன் அப்போது கோடை விடுமுறைகளில் வந்து குடை ராட்டினம் கட்டுவார்.

கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என்று நாலாத்திசைகளிலிருந்தும் பிள்ளைகள் வருவார்கள். காலை எட்டு மணிக்கெல்லாம் துவங்கி மாலையில் அவா் நிர்ணயிக்கும் நேரம் வரை சுற்றியபிறகு சங்கிலியால் ராட்டினத்தை கோர்த்துக் கட்டிவிட்டு விங்கு விங்கு என ஓட்டமும் நடையுமாவார்.
ஒல்லியான தேகத்தில் தொள தொளத்த சட்டையும், கைலியும் அணிந்திருப்பார். கண்ணங்கள் உள்விழுந்து ஒடுங்கிய முகம், எத்துப்பற்கள், கச்சிதமாக வெட்டிய கம்பி போன்ற மீசை, முன்புறம் ஏற்றிச் சீவிய தலைமுடி, கைக் கடிகாரம், ரப்பா் செருப்பு, அடிக்கடி உதட்டில் செருகிப் புகையும் பீடி என தனி அடையாளமாய் ராட்டினக்காரன்.
களகளப்புக்குப் பஞ்சமிருக்காது. கை இழுவையில் இயங்கும் ராட்டினமாதலால் ஒவ்வொரு சுற்றுக்கும் நடிகா் நடிகையா் தொடங்கி மாதங்கள் கிழமைகளில் உள்நுழைந்து அப்பளம் பாயாசம் என சொல்லிக் கொண்டே வந்து முடிப்பார். ”ண்ணேய் முருக்குக்கு, அதிரசத்துக்கு” என சிறார்கள் ஒன்ஸ்மோர் கேட்க மீண்டுமாய் இரண்டொரு சுற்று சுற்றுவார். ரொம்பவும் பிரபலமாகிப் போனார் ராட்டினம் போன பிறகும் நினைவில் நிற்பார். அடுத்து எப்போது வருவார் என ஏங்கத் தோன்றும்.
இப்படித்தான் ஒரு முறை அவரும் அவரின் ராட்டினமும் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தது. ஏறுகிறேனோ இல்லையோ பெரும்பாலான பொழுதுகளை ராட்டினக் களத்திலேயே கழித்திருக்கிறேன். சிறுவா் சிறுமியா்களின் இரைச்சல், உற்சாகம், ஆட்டம், பாட்டம், பறக்கும் புழுதி, சுழலும் ராட்டினம் என்று பொழுது போவதே தெரியாது.
’ரொம்ப நேரமாக நிற்கிறானே பயல்… பாவம்’ என்று சிறார்கள் வெகுவாய் குறைந்த தருணங்களில் ராட்டினம் ஓடுகிறது என்பதை காண்பிக்க ஓரிரு முறை என்னை இலவசமாக உட்கார வைத்தும் சுற்றியிருக்கிறார்.
யாருமே இல்லாவிடினும் வாயில் பீடியை புகைத்தபடி முனகிக் கொண்டு வெறும் ராட்டிணத்தை மெதுவாய் சுற்றிவிட்டுக் கொண்டிருப்பதையும் அவ்வப்போது பார்த்திருக்கிறேன். தொடா்ந்து சும்மாவே கிடக்க நேரிட்டால் வழக்கமாக தினமும் மாலையில் செல்லும் ஓடைக்கு அன்று துரிதமாகவே சென்று விடுவார். ஏனெனில் அங்குதான் ’காய்ச்சிய பட்டைச் சாராயம்’ கிடைக்குமாம்.
இன்றைக்கு இருப்பது போல் அரசு மதுபானக் கடைகளெல்லாம் அன்று இல்லை. எங்கோ ஒன்றிரண்டு தனியார் ’ஒயின்ஸ்’-களும், ஓடை, சின்னக்குளம் கண்மாய், கரட்டுப் பக்கம் என ஆங்காங்கே தெரிந்தும் தெரியாமல் காய்ச்சி விற்கப்படும் ’நாட்டு்ச் சாராயமுமே பரிட்சயம். உள்ளே இறங்கிவிட்டால் போதும் ஒவ்வொரு குடிமகனும் ஒவ்வொரு விதத்தில் சாணக்கியன்கள்தான். சாலையோரங்கள் பேச்சு மேடையாகும், சாக்கடையும் ஜவ்வாது குளமாகும், வாய் மொழியில் அந்தரங்க உறுப்புக்களும் ஏலம் விடு பொருளாகும்.
இந்த ராட்டினக்காரன் குடிகாரன் என்றாலும் ’நல்ல’ மனிதன்தான் அந்த நாள்வரை! நாள் முழுக்க உழைத்துவிட்டு மாலையில் ஓடைக்குப் போய் வரும் வழியிலேயே இரவு உணவையும் முடித்துக் கொண்டு இழுத்துக் கட்டப்பட்ட ராட்டினக் குடையின் கீழே பாயிக்கும் போர்வைக்கும் இடையே முடங்கிப் போவார். ஒரு சத்தமும் வராது.
இந்நிலையில்தான் தென்றலில் இலையசைத்து லயித்த மரங்கள் சடிதியாய் வந்த புயலில் சின்னாபின்னமானது போல எதிர் பாராத தருணமொன்றில் அக்காட்சியும் அரங்கேறியது.
ஒரு காலை நேரம். வீ்ட்டில் பழைய கஞ்சியை சாப்பிட்டபின் காசு வாங்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமானேன். தூரத்தில் மல்லிகை தியேட்டரையும்,ஒா்க்ஷாப்புகளையும் தாண்டி சிறியவா் பெரியவா் வித்தியாசமின்றி பரசலான கூட்டம் நின்று ராட்டினம் இருக்கும் திசையை நோக்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
ஓடிய வேகத்திலும் பற்பல உணா்வுகளிலும் இதயப் படபடப்பு இன்னும் அதிகரிக்க விரைந்து போய் நின்றேன். பூட்டப்பட்ட ராட்டினமும் மரப் பொம்மைகளும் நொறுக்கப்ப்டடு குற்றுயிரும் குலையுயிருமாக கிடக்க, ராட்டினக்காரரும் உடை கிழிபட்டு முகம், வாய், தோள்பட்டையெல்லாம் ரத்தம் கசிய வேர்த்து விருவிருக்கக் கிடந்தார். நாலைந்துபோ் கொண்ட கூட்டம் கொச்சை வா்த்தைகளுடன் இன்னும் ஆக்ரோசமாய் தாக்க முற்பட பெரியவா் ஒருவா் தடுத்துக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அங்கு வந்த காவலா்கள் இருவா் ஆட்டோ ஒன்றைப் பிடித்து ராட்டினக்காரரை ஏற்றிக்கொண்டு போயினா். கூட்டம் களையவும் விடை தெரியாத கேள்விகளோடு திரும்பினேன். “இந்தா இனிமேலு ராட்னங் கீட்னமுன்னு சுத்திக்கிட்டு திரியாத என்னா” என வீட்டிலேயும் சொன்னார்கள். ஏனென்று தெரியவில்லை.
ஓரிரு நாள் கழித்து…
“எக்காஆ… அன்னைக்கின்னு பாத்து பொண்ணுத்தாயிக்கும் அவ புருஷனுக்கும் மில்லுல நைட்டு அறவையாம், வந்து சோத்த திண்ணுபுட்டு திரும்ப போயிருக்காக… சரி… போகும் போது சின்னப் புள்ளய அப்புடியே தூங்க வச்சுட்டு போறமே அக்கம் பக்கத்துல யாருகி்ட்டயாவது பாத்துக்கிற சொல்லுவமேங்கிற நெனவுகூட இல்லாம நடுச்சாமத்துல வரத்தான போறோம்னு கதவ மட்டுஞ் சாத்திவிட்டுட்டு அப்புடியே போயிருக்காக…”
“அடக் கடவுளே… ம். அப்புறோம்”
“நல்லா பன்னெண்டு மணி வாக்குல இருக்கும் போல… தூங்கிட்டிருந்த பிள்ள ஓ-ன்னு அலரிக்கிட்டு எந்திருச்சு ஓடியிருக்கா… சத்தங்கேட்டு அக்கம் பக்கத்துல இருக்கவகளு அவக்கு துவக்குன்னு முழிச்சு பாத்தா இவ ஒரு பக்கோ ஓடுறாளாம்… அங்கிட்டு சாக்கடப் பக்கந் தவ்வி இருட்டுக்குள்ள எவனோ இன்னொருத்தனும் ஓடுறானாம்… ஏ புள்ள ஏ புள்ள-ன்னு கூப்புட்டுக்கிட்டே பின்னாடியே போயிருக்காக. இவ ஒரே ஓட்டமா அவகப்பே ஆத்த இருக்க அறவ மில்லுக்குள்ள போயி தேம்மி தேம்பி மூச்சு வாங்க அழுதுருக்கா… என்னாப்பா என்னாச்சுன்னு பொன்னுத்தாயும் அங்க இருந்தவகளும் கேக்க… எம்மா எம்மா நாந் தூங்கிகிருக்கும் போது ராட்டுனத்துக்காரண்ணே ஏங்கிட்ட தப்பா நடக்க பாத்தாகம்மா நானு ஓடியாந்துட்டேன்னு சொல்லி அழுதுருக்கா…“
”அப்பயே அவன சும்மாவா விட்டாங்க?“
“அந்நேரமே அறவையெல்லா விட்டுப்புட்டு ஆளும் பேரும் வந்துருக்காங்கல்ல! விடிய விடிய ராட்னத்துக்காரன ஆளவே காணலயாம். மவனே நீ வராமயா போயிருவன்னு கங்கனங் கட்டிட்டு இருந்துருக்காக… விடிஞ்சப் பெறகு எட்டு மணி வாக்குல ’வேன’ கூட்டி வந்து அறவமில்லாம ராட்டுனத்த கழட்டிக்கிருந்துருக்கயான். புடிச்சுப்புட்டாக. புடிச்சு அடின்னாலும் அடி தொவட்டி எடுத்துருக்காங்க… மொதல்ல இல்லைன்ன சாதிச்சவே பெறகு ஏதோ குடி போதையில தெரியாமப் பண்ணிட்டேன், மண்ணிச்சுக்கன்னு ஒப்புக்கிட்டயாம் போல… பெறகு போலீஸ் வந்து புடிச்சிட்டுப் போயிருக்கு” இப்படியாய் வாசல் திண்னையில் அம்மாவும் பக்கத்து வீட்டு அக்காவும் பேசிக் கொண்டிருந்தது உள்ளே இருந்த என் காதுகளில் விழுந்தது.
![]()
இந்நிகழ்விற்குப் பிறகு ஒரு போதும் அங்கே ராட்டினங்கள் வந்ததில்லை. நாளடைவில் அந்த காலியிடங்களெல்லாம் அப்பார்ட்மென்ட், ஹோட்டல், மண்டபங்கள் என மாறிப் போனது.
கைபேசி வழியாய் வந்த ஓர் அழைப்பு அந்நினைவுகளிலிருந்து என்னை உசுப்பியது. “இந்தா வந்துா்ரேன்” என பேசிவிட்டு அமா்ந்திருந்த சிமென்ட் திட்டிலிருந்து பூங்காவை விட்டு வெளியேற எழுந்தேன். வேறு எவருமற்ற அங்கே மீண்டுமாய் அம்மனிதன் மாத்திரம் கண்களில் தட்டுப்படுகிறான். ஊருக்குள் இவனைப் போன்ற புதியவா்கள் அவ்வப்போது நுழைந்து தலை காட்டிவிட்டு பின் சிலநாட்களில் மறைந்தும் விடுகிறார்கள்!
நெடுநேரம் எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தவன் பின் மெல்ல கைகளை ஆட்டி ஆவிகளுடன் பேசுகிறவன் போல தனியாய் பேசத்துவங்கினான். பின் படாரென திரும்பினான்… திடுத் திடுவென ஓடினான். போன வேகத்தில் வெறுமனே கிடந்த ராட்டினத்தை இருகப்பிடித்தபடி சில நொடிகள் அப்படியே நின்றான். பின் மெல்லச் சுற்ற ஆரம்பித்தான்… அன்று சொன்ன அதே நடிகா் நடிகையா் பெயரை சொல்ல ஆரம்பித்து… மாதங்கள் கிழமைகளில் உள்நுழைந்து நொடிக்கு நொடி வேகம் பலமாய் கூடக்கூட அப்பளம் பாயாசம் தாண்டி கடகடவென சத்தமாய் ஏதேதோ பிதற்ற ஆரம்பித்தான்…

