சிறுகதை வாசிப்பனுவம்: அந்தண அம்பேத்கர் – இரா.இரமணன்சொல்வனம் இணைய  இதழில் (246) தெரிசை சிவா அவர்களின்  ‘அந்தண அம்பேத்கார் எனும் கதை வெளி வந்துள்ளது. நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கை சிறப்பாக கையாண்டிருக்கிறார். மனித மனங்களின் ஆழத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளுக்கு அரசியல் வரலாற்று ரீதியான விளக்கம் கொடுக்க முயற்சித்திருக்கிறார். அதற்காக பாராட்ட வேண்டும்.

தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலகர் மாரிமுத்துவிடம் வீடு கட்டும் மனைக்கு சான்றிதழ் பெறுவதற்காக கோயில் போத்தி கிருஷ்ணசாமி அலைகிறார். மாரிமுத்து லஞ்சம் வாங்காத நியாயமாக நடந்து கொள்பவர்தான். ஆனால் கிருஷ்ணசாமியின் முன்னோர்கள் தங்களை எப்படி நடத்தினார்கள் என்பதற்கு ஒரு பதிலடியாக அவரை சில காலம் அலைய விட்டு சான்றிதழ் தரலாம் என்று நினைக்கிறார். தான் செய்வது சரிதானா என்றும் யோசிக்கிறார். 

‘இவ்வாறு மாரிமுத்துக்குள் இருந்த “அதிகாரச்செருக்கை” திடீரென்று எழும்பிய “மனசாட்சியின் நேர்மை” கேள்விகளால் துளைத்தெடுத்தது. கலங்கிய முகத்தோடு திரும்பிச் சென்ற கிருஷ்ணசாமியின் முதுகும், நடையும் மனதை என்னவோ செய்தது. என்ன இருந்தாலும் வயசான ஆளு. சொந்த வீடுங்கிறது மனிதனோட வாழ்நாள் கனவுல்லா. சவம் அடுத்த தடவை வந்தவுடன், சைனை போட்டு அப்ரூவல் கொடுத்திரணும். அவருடைய மூதாதையர் செய்த தப்பிற்கு அவரு என்ன செய்வாரு. மழை நாளில் ஊற்றெடுக்கும் பல வண்ண ஆற்று நீரைப்போல், பற்பல நினைவுகள் மாரிமுத்துவின் எண்ணவோட்டத்தினை நனைத்தன.

அவருடைய உதவியாளர் மாசானம் போத்தியின் முன்னோர்கள் தாழ்த்தப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொண்டார்கள் என்று விவரித்து அவருடைய நடவடிக்கைக்கு நியாயம் கற்பிக்கிறார்.இன்னொரு பக்கம்  மாரிமுத்துவுக்கு வருவாய் ஆய்வாளராக பதவி உயர்வு வரவேண்டிய நேரம். உள்ளூர் கோமதி அம்மன் கோயில் ஆராட்டு விழாவிற்கு குடும்பத்துடன் மாரிமுத்து செல்கிறார். அவர் நாத்திக எண்ணம் உடையவர் என்றாலும் வாழ்க்கையின் முன்னேற்றங்கள் அவரை தடுமாற வைக்கின்றன.

“எனக்கு இதெல்லாம் நம்பிக்கையே கிடையாது என மாரிமுத்து ஆரம்பத்தில் கூறிக்கொண்டார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் பிள்ளைப்பேறு கிட்டியது, நினைத்த இடத்தில் பணி மாற்றம் கிட்டியது, சொந்தமாக வீடு வைத்தது, என பல விஷயங்கள் நேர்த்திக்கடன் முடிந்ததும் நடக்க, அவை யாவும் “பிராத்தனையின் பலனே” என்பதை மாரிமுத்துவும் உள்மனத்துக்குள் ஒத்துக் கொண்டார். இருந்தாலும் உணர்ந்த “ஆத்திக தர்மத்தை” அவர் வெளியில் காட்டிக் கொள்வதில்லை. மனைவியின் நம்பிக்கைக்கு துணை நிற்பதாகச் சொல்வார். மற்றபடி கடவுள் நம்பிக்கை இல்லையென்பார். மனதில் “ஆசை” இல்லாதவன் மட்டுமே, கடவுள் இல்லையென்று கூறமுடியும். மனதிற்குள் ஆசையை வைத்திருப்பவன், கடவுளன்றி யாரிடம் கோரிக்கை வைக்க முடியும். அவ்வாறே ரெவனியூ இன்ஸ்பெக்டருக்கான கோரிக்கையுடன், கோமதிஅம்மனை தரிசிக்க வந்திருந்தனர் மாரிமுத்துவின் குடும்பத்தார்.கோயிலில் பெரும் கூட்டம். மாரிமுத்து போத்தி கிருஷ்ணசாமிக்கு தான் வந்திருப்பதை சைகை காட்டுகிறார். அவர் அதைக் கண்டுகொள்வதில்லை. மாரிமுத்து கோபப்படுகிறார்.

சாமிய நம்ப வேண்டியதுதான், நாங்க உசத்தியாகும்னு சொல்ற, இவனுகள எதுக்கு நம்பணும் என்கிற கமியூனிச சிந்தனை வேறு மேலோங்கியது. இவன் எப்படி நம்மள்ட்ட சைன் வாங்குகான்னு பாப்போம்? – மனதிற்குள் கங்கணம் கட்டினார்.

மாரிமுத்துவுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு இன்னொருவருக்கு வழங்கப்படுகிறது. அதனால் கோபமடைந்திருந்த வேளையில் கிருஷ்ணசாமி மனை அனுமதிக்காக வருகிறார். அந்த கோபத்தை அவரிடம் காட்டி 

சாமி… உங்க அவசரத்துக்கெல்லாம் கவர்மெண்ட் ரூலை மாத்த முடியாது. விவசாய நிலத்துல கட்டிடம் கட்ட அனுமதி இல்ல… எதுவா இருந்தாலும் கேசு முடியுற வரை வெய்ட் பண்ணுங்க…”

சார்… ப்ளீஸ்… உங்களுக்கு வேணும்னாலும்… “- என்று சாமி பேச ஆரம்பித்த அந்த வினாடி கடும் கோபத்திற்கு சென்றார் மாரிமுத்து. தேங்கி நின்ற மொத்த வெறுப்பையும் சாமியின் மீது பாய்ச்சினார்.

உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா சாமி… இனி இப்படி பேசுனேங்கண்ணா, லஞ்சம் கொடுக்க வந்ததா உங்க மேல போலீஸ்ல கம்ளைண்ட் கொடுத்துருவேன்… பெரிய மனுஷனாச்சேன்னு மரியாதையா பேசுனா, ரெம்பதான் ஓவரா பேசுறீங்க… இவ்வளவுதான் உங்களுக்குள்ள மரியாதை … இப்ப கிளம்புறேங்களா…”

கிருஷ்ணசாமி வெறுத்துப் போய் போகும்போது மாசானம் அவரிடம் இதை முடித்துக் கொடுப்பதற்கு  தரகு வேலை பார்ப்பதற்காக வருகிறார்.

அதில்லை சாமி … ஏற்கனவே அவரு டென்ஷன்ல இருந்தாரு… அதுக்கு மேல, உங்க ஆட்கள்னாலே வேற அவருக்கு புடிக்காது…”

என்று தொடங்குகிறார். இதற்கு போத்தி 

‘ஒரு மனுஷனை இன்னொரு மனுஷனுக்கு புடிக்காம போறதுக்கு காரணம் ஜாதி, மதம், இனம், நிறம் எதுவும் காரணம் இல்லை… கொடுக்கப்படும் அதிகாரம்தான்…அது ஒண்ணுதான்… அன்னைக்கு அதிகாரம் எங்க கைல இருந்தப்ப நாங்க ஆடுனோம்… இப்ப நீங்க ஆடுறீங்க… இங்க உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதில்லாம் எதுவும் இல்ல… அதிகாரம் உள்ள மனுஷன், அதிகாரம் இல்லாத மனுஷன்… ரெண்டே பேருதான்… இதத் தவிர வேற எதுவும் இல்லை. பாக்கலாம் மாசானம்… உங்களுக்கு ஒரு அம்பேத்கர் வந்த மாதிரி, எங்களுக்கும் ஒரு அம்பேத்கர் வராமலா போவாரு… பாக்கலாம்…’

‘இல்ல சாமி… உங்க ஆட்கள் அந்த காலத்துல…’

‘இருக்கட்டும் மாசானம்… என் முன்னோர்கள் செய்ததுக்கு நாங்க அனுபவிக்கணும்னா… இப்ப நீங்க செய்றதுக்கு…’- சட்டென்று பேச்சை நிறுத்தி விரக்தியில் நடக்க ஆரம்பித்தார் கிருஷ்ணசாமி.

மாசானத்திற்கு சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்பதோடு கதை முடிகிறது.

கதை பல விவாதங்களை எழுப்புகிறது. அதிகாரம்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்றால் அந்த அதிகாரம் எங்கிருந்து வருகிறது? அதிகாரம் செலுத்துவதற்கு மன விகாரங்கள் மட்டும்தான் காரணமா? 

தாழ்த்தப்பட்டவர்கள் எத்தனை பேர் அதிகாரம் செலுத்தும் இடத்தில் இருக்கிறார்கள்? பஞ்சாயத்து தலைவர் ஆனாலும் உட்காரக் கூட முடிவதில்லை. கொடியேற்ற முடிவதில்லை. அதே போல் எத்தனை பிராமணர்கள் தங்களுடைய தனிப்பட்ட வேலைக்கு அரசு அலுவலகங்களுக்கு அலைகிறார்கள்? கொடுக்க வேண்டியதை கொடுத்தோ சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியோ வேலையை முடித்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும் எல்லோரும் அப்படித்தான். மேலும் கதாசிரியரே சொல்வது போல ‘அந்தணர்களை வாரி அணைத்து முத்தமிடும் அமெரிக்காவுக்கோ, ஆஸ்திரேலியாவுக்கோ இடம்பெயர ரகு போத்தியின் குடும்பத்தினருக்கு’ வாய்ப்பிருகின்றது. இன்னொரு விவாதம் ஆதிக்க-நாத்திகம் குறித்தது. மனிதர்கள் மனதில் ஆத்திகம் எப்பொழுது குடி புகுந்தது? நாத்திகம் எப்பொழுது நிலைக்கும்? ஆசைதான் கடவுள் நம்பிக்கைக்கு காரணம் என்கிறார் கதாசிரியர். பயத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். நோய், எதிர்காலம் என பலவற்றிற்கும் நமக்கு அச்சம் இருக்கிறது. ‘அஞ்சி அஞ்சி சாவார்.அவனியில் இவர் அஞ்சாத பொருளே இல்லை என்று பாரதி சொன்னான். ஆனால் அச்சத்தை எப்படிப் போக்குவது? கதையில் வரும் கோமதி அம்மன் சிறு தெய்வம் என்று சொல்லிவிட்டு அடுத்த பாராவில்  ‘சந்நிதியின் முன்னே திரையிருக்க, உள்ளுக்குள் உஷத்கால பூஜைக்கான அலங்கார ஏற்பாடுகளை கிருஷ்ணசாமியும், அவர் உதவியாளர்களும் செய்து கொண்டிருந்தனர். ‘ என்று கூறுகிறார். இந்த முரண்பாடு ஒரு புறமிருக்க  ‘பெரும் தெய்வ’ வழிபடும் ‘சிறு தெய்வ’ வழிபாடும் ஒன்றுதானா?

முக்கியமான விவாதம் அம்பேத்கர் குறித்தது. கதையை படிக்கும்போது இரண்டு மாறுபட்ட கருத்துகள் எழுகின்றன. ஒன்று அம்பேத்கார் ஒரு சாதியத் தலைவர் என நிறுத்துவது. ‘உங்களுக்கு ஒரு அம்பேத்கர் வந்த மாதிரி, எங்களுக்கும் ஒரு அம்பேத்கர் வராமலா போவாரு… பாக்கலாம்…’ என்கிற வரி அம்பேத்காரின் பொருளாதார, சட்ட, சமூக ஞானம், இந்தியாவிலுள்ள எல்லோருக்காகவும் அவர் இயற்றிய சட்டங்கள், போராட்டங்கள் ஆகியவற்றை மறைக்கும் முயற்சியில் போய் சேர்ந்து விடுகிறது. இன்னொன்று ஒடுக்கப்படும் பிரிவினர் எவரானாலும் அம்பேத்கார் போன்ற ஒரு தலைவர் வேண்டும் என்பது.(பிராமணர்கள் ஒடுக்கப்படவில்லை என்பது தனி.) 

 ‘தாச்சி என்கிற கதையில்(சொல்வனம் இதழ் 245) பெண்கள் மாவட்ட ஆட்சி தலைவராக வர முடிகிற அதே நேரத்தில் அவர்கள் பொது இடங்களில் சிறுநீர் கூட கழிக்க முடியவில்லை என்று வலுவாக பேசிய தெரிசை சிவா இதில் ஒரு பிரிவு அதிகாரத்தில் இருப்பது போலவும் இன்னொரு பிரிவு ஒடுக்கப்படுவது போலவும் தலைகீழாக சித்தரித்திருப்பது நெருடலாக உள்ளது. இரண்டு பேரின்  உள்ளக் குமுறலை மட்டும் காட்டி முடிவை வாசகனின் சிந்தனைக்கு விட்டிருக்கலாம்.