மன்னன் சகஸ்ரநிகா மாறுவேடத்தில் நகர்வலம் சென்று பார்த்த காட்சிகள் அவனை அதிர வைத்தன. எங்கும் பசி. பட்டினி. எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் மக்கள். இளவரசனாக இருக்கும் வரை அவன் கண்ணில் இவையேதும் பட்டதில்லை. தந்தையார் சதநிகா மஹாராஜா இறந்து இவன் பட்டத்துக்கு வந்து ஆட்சி நிர்வாகத்தை ஏற்றுக் கொண்ட பிறகுதான் நாட்டின் சீரழிந்த நிலமை அவன் கண்களுக்குத் தெரிந்தது. நகர்வலம் முடிந்து நள்ளிரவிலேயே திரும்பிவிட்டாலும், உறக்கமே வரவில்லை. ஏன்? ஏன்? என் நாட்டிற்கு ஏன் இந்த நிலை? விடிந்ததும், தந்தையார் காலத்திலிருந்து தலைமை அமைச்சராக இருக்கும் ப்ருஹதச்வனை அழைத்து வரச் சொன்னான்.
அமைச்சர் வந்ததும், தனது நகர்வலத்தில் தான் கண்ட அவல நிலையைப் பற்றிச் சொன்னான். வளமான தனது நாட்டிற்கு ஏன் இந்த நிலை? என்றான். எல்லா பெரியவர்களையும் போலவே, ப்ரஹதச்வனுக்கும் சுருக்கமாகப் பேசத் தெரியாது. மன்னன் சகஸ்ரநிகாவிற்கு நாட்டின் வளம் பற்றித் தெரியும் என்றாலும். அவர் சாவகாசமாக நாட்டின் வளம் பற்றியே ஆரம்பித்தார். முக்கியமானவற்றைப் பேசும்போது எழுத்து வழக்கிலேயே பேசுவது அவரது வழக்கம்.
“மன்னா, நமது தேசமானது குருதேசத்திற்கு நேர்மேற்கிலும், பாஹ்லிக தேசத்திற்கு தென்மேற்கிலும், ஸால்வதேசத்திற்கு வடகிழக்கு பாகத்தில் விபாஸா நதியின் கிழக்கு பாகத்திலும் நிலை பெற்றிருப்பதை தாங்கள் அறிவீர்கள். நமக்கு வடக்கிலிருக்கும் த்ரிகர்த்த தேசத்தில் உள்ள துரந்தரம் என்ற மலையிலிருந்து உற்பத்தியாகும் சதத்ரு நதியின் பெரும்பகுதியும் நம் தேசத்தில் தான் ஓடுகிறது. நம் தேசத்தின் பூமியானது மிகவும் ம்ருதுவானதாக, மல்லிகைப் புஷ்பத்தின் பரிமளமுடையதான மண்ணைக் கொண்டது. இந்த தேசத்தில் எப்பொழுதும் விசேஷ மழை பெய்வதால், விபாஸா, சதத்ரு நதிகள், அவற்றின் உபநதிகள் ஆகியவற்றில் வெள்ளம் ஸம்பூர்ணமாய் விடாது வருவதால் கோதுமை, கடலை முதலிய தானியங்களும், பழ வ்ருக்ஷங்களும் கொடிகளும் விசேஷமாய் வளர்கின்றன. தேசத்தின் பூமி மேடுபள்ளமாக இராமல் ஸமபூமியாய் இருப்தால் விசேஷ தோப்புகளும், சோலைகளும், நன்வனங்களும் ஆகாயத்தை அளாவளாவது போலவே காணப்படுகின்றன. இந்த தேசத்தின் காடுகளில் மிக உயரமாய் வளரும் சோரா மரங்களும், அகில், சந்தனம் முதலிய பரிமள மரங்களும், நாவல், பலா போன்ற கனி மரங்களும் விசேஷமாய் வளர்கின்றன. நம் தேசத்து திராக்ஷை கொடிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவை விசேஷமாய் வளர்ந்து, சூர்ய வெளிச்சத்தைத் தோட்டத்திற்குள் நுழையாது தடுக்கின்றன, எனவே, நம் வளங்களுக்குக் குறையொன்றுமில்லை,“ என்றார்.
“அதுதான் ஸ்வாமி எனக்கும் புரியவில்லை. இத்தனை வளங்கள் இருந்தும் ஜனங்களிடம் ஏன் இத்தனை வறுமை?” என்றான் மன்னன்.
“சுவர்க்கம் புகுந்த நமது மாமன்னர், தங்கள் தகப்பனார் குறித்து நான் தவறாகச் சொல்வதாகக் கருத வேண்டாம். தங்களுடைய கேள்விக்கு ஒரு அமைச்சனாக சரியான பதிலைத் தருவதே என் கடமை என்ற அடிப்படையிலேயே இதைச் சொல்கிறேன்,” என்று தயங்கி நிறுத்தினார் ப்ரஹதச்வன்.
“தயக்கமின்றிச் சொல்லுங்கள். நீங்கள் என் தகப்பனாரைப் போன்றவர். அவர் மீது உயிரையே வைத்திருந்தவர். நீங்கள் கூறும் எதையும் நான் தவறாகக் கொள்ள மாட்டேன்,“ என்றான் சகஸ்ரநிகா.
“புண்ணியம் சேர்க்கும் ஆசையில் தங்கள் தகப்பனார் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பிராமணர்களுக்கு பொற்காசுகளாக தானம் செய்து வந்ததைத் தாங்கள் அறிவீர்கள். அரசின் கஜானாவின் இருப்பு குறையக் குறைய அதை ஈடுகட்ட கடுமையான வரிகளை விதித்தார். மக்கள் அனைவருமே தங்கள் வருவாயில் மூன்றில் இரண்டு பங்கை வரியாகச் செலுத்த வேண்டியதாயிற்று. இதனால், பெரும் தனவந்தர்களும் கூட பரம ஏழைகளாகிப் போனார்கள். ஏழை மக்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்,“ என்றார். நடைமுறை சார்ந்த விஷயங்களைப் பேசும் போது அவர் அலங்காரமற்ற எளிய மொழிக்கு மாறிவிட்டதைக் கவனித்த சதநிகா அந்தக் கணமே இனி பிராமணர்களுக்கு தானம் கிடையாது என்று முடிவு செய்தான். அதை அறிவிக்கவும் செய்தான்.
மறுநாள் அரண்மனையில் தானம் கிடையாது என்று அறிந்தவுடன், பிராமணர்கள், ஸுதாஸன் தலைமையில் அரசனைச் சந்தித்தார்கள். “தங்களது தந்தையார் செய்து வந்த தானங்களைத் தாங்களும் தொடர்ந்தால் அல்லவா, நமது தேசத்தில் மும்மாரி பொழியும்? நாடு வளம் பெறும்?“ என்றார் ஸுதாசன் பணிவாக. சகஸ்ரநிகா, “தானங்களால் என் தந்தை புண்ணியம் பெற்றார் என்கிறீர்கள். அவர் இப்போது எங்கிருக்கிறார், சுவர்க்கத்திலா? அதற்குக் காரணம் இந்த பிராமண தானங்கள் தானா? என்பதை எனக்கு நம்பகமான விதத்தில் தெரிவித்தால், நான் தானங்களை மீண்டும் மேற்கொள்வது பற்றி ஆலோசிக்கச் சித்தமாக இருக்கிறேன்,“ என்றான். “தங்கள் உத்தரவுப்படியே தங்களது ஐயத்தை தக்க ஒருவரை வைத்துத் தீர்க்கிறோம் அரசே,“ என்று பிராமணர்கள் விடைபெற்றுச் சென்றனர்.
பிராமணர்கள் அரனைச் சரியான வகையில் திருப்திப்படுத்த வேண்டும், இறந்த அரசனைத் தேடிச் சென்று பார்த்து கேட்டு வந்து சொல்லத் தக்க சக்தியுள்ளவர் யார் என்று ஆலோசனை செய்தனர். ப்ருகு முனிவர் தான் இதற்குப் பொருத்தமானவர் என்று ஏகமனதாக முடிவானது.
ப்ருகு முனிவர் பிராமணர்களை மிக மரியாதையுடன் வரவேற்றார். அவர்களது பிரச்சனையைப் பொறுமையாகக் கேட்டு அறிந்து கொண்டார். சூரிய பகவான் தமக்கு மிகவும் வேண்டப்பட்டவன்தான், அவன் மூலம் (ஆம், சூரிய பகவானை அவர் அவன், இவன் என்று ஏகவசனத்தில் தான் சொன்னார் ! ) அரசன் சதநிகாவை நேரில் சந்தித்துக் கேட்டு வருவதாகச் சொன்னார். “நான் எப்படிப்பட்டவன் என்று உங்களுக்குத் தெரியும். எல்லோராலும் போற்றி வணங்கப்படுபவன். நான் விசாரித்து வருவதை அப்படியே மன்னனிடம் சொல்வேன். அது உங்களுக்கு சாதகமாகவும், இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம். பாதகமாக இருந்தால் என்னைத் தவறாக நினைக்கக் கூடாது,“ என்றும் சொல்லிவிட்டார். அவரது சக்தி என்ன ! மகிமை என்ன ! அவரை தவறாக நினைக்க முடியுமா ? ப்ருகு முனிவர் பிரும்மாவின் புதல்வர். பெரும் தபஸ்வி. அவருக்கு க்யாதி, புலோமா, காவ்யமாதா என்று மூன்று மனைவிகள். மஹாலட்சுமி என்ற தன் மகளை காக்கும் கடவுளான மஹாவிஷ்ணுவிற்கு மணம் செய்து தந்திருந்தார். காவ்யமாதாவின் வயிற்றில் உதித்த சுக்ராச்சாரி அனைத்து சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து அசுரர்களின் தலைமை குருவாக இருக்கிறார். மற்றொரு மனைவியான புலோமாவின் புத்திரனான சயவனன் வைத்திய சாஸ்திரத்திற்கு ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளைச் செய்தவன். எனவே, இத்தனை கீர்த்தி பெற்ற ப்ருகு முனிவர் சொல்வதை யாராலும் மறுத்துப் பேச முடியாது. மன்னன் சகஸ்ரநிகாவும் அவர் சொல்வதை அப்படியே கேட்டுக் கொள்வான். பிராமணர்கள் நிம்மதியாக வீடு திரும்பினார்கள்.
ப்ருகு முனிவர் தன் நண்பன் சூரிய பகவானைத் தொடர்பு கொண்டு. மேலுலகத்தில் மன்னன் சதநிகாவைப் பார்க்க உதவுமாறு கேட்டுக்கொண்டார். இரண்டு நாட்களில் யமலோகத்தில் விசாரித்துச் சொல்வதாகச் சொன்ன சூரியன் அதே போல இரண்டாம் நாள் மாலை தகவல் தந்தான். பிராமணர்களும், மன்னன் சகஸ்ரநிகாவும் நினைப்பது போல மன்னன் சதநிகா சுவர்க்கத்தில் இல்லை. நரகத்தில் இருக்கிறான். நாளை நரகத்திலிருந்து ஒரு பிராமணர் ப்ருகு முனிவரைச் சந்திப்பார். ப்ருகு தன் புண்ணியத்தில் ஒரு சிறு பகுதியை அந்தப் பிராமணருக்கு அளித்தால், அவர் ப்ருகு மஹரிஷியை நரகத்திற்கே அழைத்துச் சென்று அரசன் சதநிகாவைச் சந்திக்க வைப்பான் என்று சூரியன் ஏற்பாடு செய்து தந்தான்.
அதே போல மறுநாள் காலையில் ஒரு ஒல்லிப் பிராமணன் ப்ருகு முனிவரை வந்து சந்தித்தான். நரகத்திலிருந்து வருவதாகச் சொன்னான். ப்ருகு உரிய மந்திரங்களைச் சொல்லி, தன் புண்ணியத்தில் ஒரு பகுதியை அவனுக்குத் தந்தார். “மிக்க நன்றி, மகரிஷி, தங்கள் தந்த புண்ணியத்தால் நான் நரகத்தில் இருந்து விரைவில் விடுபடுவேன்,“ என்று சொன்ன அவன் ப்ருகு முனிவரை நரகத்திற்கு அழைத்துச் சென்றான். நரகத்தின் காவலர்கள் இந்தப் பிராமணனைப் பார்த்ததுமே, அவர்களை தடை செய்யாது உள்ளே அனுமதித்தார்கள். அரசன் சதநீகாவின் தோற்றத்தைப் பார்த்த ப்ருகு முனிவர் அதிர்ந்து போனார். அரசன் கூறிய விஷயங்கள் மேலும் அவரை அதிர்ச்சி கொள்ளச் செய்தன. ஆனால், இறுதி உண்மை எப்போதுமே அதிர்ச்சி தருவதாகத் தானே இருக்கும் ? என்று சமாதானம் செய்து கொண்டார்.
![]()
மறுநாள் காலை பிராமணர்களும், அரசப் பிரதானிகளும் ஆவலாகக் கூடி இருந்த அரசவைக்கு ப்ருகு முனிவர் வந்தார். அர்க்கியம், ஆசமனீயம், பாதபூஜை என்று உரிய மரியாதைகளோடு அவரை வரவேற்றான் அரசன் சகஸ்ரநிகா. முனிவர் தான் வந்த விஷயத்தைக் கூறினார்.
“தங்களது தந்தையார் மன்னர் சதநிகாவை நரகத்தின் மிக ஆழமான ஒரு இருண்ட மூலையில் சந்தித்தது எனக்கே அதிர்ச்சியாக இருந்தது. தாமிஸிரம், அக்கினி குண்டம் ஆகிய நரகங்களில் அடைத்து வைத்து தண்டித்து விட்டு, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் மஹாரௌரவம் என்ற மற்றொரு தண்டனை இடத்திற்கு அவரை அழைத்து வந்திருக்கிறார்கள். “நீ பிராமணர்களுக்கு ஏராளமான தானம் செய்து பெரும் புண்ணியத்தைச் சேகரித்தாய் என்றல்லவா கேள்விப்பட்டிருந்தேன். உனக்கு ஏன் இந்தக் கதி?“ என்றேன். உன் தகப்பனார், “உழைக்கும் ஏழை மக்களிடம் வரி என்ற பெயரில் அநியாயமாக பணத்தைப் பறித்து புண்ணியம் சம்பாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் பிராமணர்களுக்குக் கொடுத்தேன். உண்மையில் இங்கு என் கணக்கில் எந்தப் புண்ணியமும் வரவாகப் பதியப்படவில்லை. ஆனால் வரியைக் கொடுப்பதற்காகப் பாடுபட்ட அந்த ஏழை மக்களின் கண்ணீர் தான் சரியாகக் கணக்கிடப்பட்டு, என் பாவக் கணக்கில் வரவு வைக்கப் பட்டிருக்கிறது. அதனுடைய பயனை இப்போது அனுபவித்து வருகிறேன், என்று என் மகனிடம் சொல்லுங்கள்,“ என்றார். “மக்களிடம் கடுமையான வரி வசூல் செய்யவும் வேண்டாம். பிராமணர்களுக்கு தானமும் தரவேண்டாம். என்று என் மகனிடம் சொல்லுங்கள்,“ என்று என்னிடம் உங்கள் தந்தை சொல்லியனுப்பினார்,“ என்றார் ப்ருகு முனிவர்.
தான் எடுத்த முடிவு சரிதான் என்று மகிழ்ந்தான் சகஸ்ரநிகா.
—————————————————————————————————————————————-
குறிப்பு – பதினெண் புராணங்களில் பழமையானதான வாயு புராணத்தின் கடைசி அதிகாரத்தில் சின்னதாக வரும் கதை இது. வாசக ரசிப்பிற்காக சற்று விரிவுபடுத்தியிருக்கிறேன்.
உதவிய நூல்கள் –
- பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், ஞா.மீரா எழுதிய பதினெண் புராணங்கள்
- பி.வி.ஐகதீச அய்யர் எழுதிய புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்.
- அ.வெ.சுகவனேச்வரன் எழுதிய மஹரிஷிகள் வரலாறு.

