தடதட தடதட வென்று ஓடும் சத்தம் லேசான அதிர்வை ஏற்படுத்தியது. நாடகம் பார்த்துக்கொண்டிருக்கும் வனிதா சட்டென்று திரும்பி பார்க்க பூஜா தன் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டாள் சில மணி நேரம் கழித்து வெளியே வர அவள் கண்களில் நீர் வழிந்த தடையம் தென்பட்டது,
“என்னடி ஆச்சு?. ஏன் இப்படி ஓடுன?.”
“ஒன்னும் இல்லம்மா என் ப்ரொஃபஸர் காள் பண்றதா சொன்னாங்க சத்தம் கேட்டுச்சு அதான் ஓடிப் போய் பார்த்தேன்”
“கண்ணு ஏன் கலங்கி இருக்கு?”
“முடி கண்ணுல பட்டுடுச்சு நல்லா கசக்கிட்டேன் போல”
“என்ன சொன்னாங்க உன் ப்ரொஃபஸர்?”
“எக்ஸாம் டைம் டேபிள் அப்புறம் எத்தனை மணிக்கு வரணும்னு சொன்னாரு மா”
“வழக்கமா ஒரு கேள்விக்கு மேல கேட்டா பெரிய லாடு மாதிரி எரிஞ்சு விழுவ இப்ப என்ன ரொம்ப பவ்வியம்மா பதில் சொல்ற”.
“ஒன்னும் இல்ல மா”, என்று பூஜா சொல்ல
“சம்திங் ராங்”, என்று வனிதா சொன்னது பூஜா காதில் விழ அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் பூஜா.
“நான் படிக்கப் போறேன்”, என்று சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டாள்.
அன்று ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லை, ரகு வீட்டிற்கு வந்தான். நீண்ட நேரம் தனியாக பேசிக் கொண்டிருந்தோம்,அந்த தனிமை மனதிற்க்கு அலை அலையாய் மகிழ்ச்சி அள்ளித் தந்தது. இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. மெல்ல என் கையை அவன் கையோடு கோர்த்துக்கொண்டு யாரும் இல்லாத வீட்டில் ரகசியம் பேசுவதுபோல காதில் கிசு கிசு என்று பேசினான். அவன் நெருங்கி வந்தபோது அவன் சட்டையில் இருந்து வந்த மெல்லிய பர்ஃப்யூம் வாசம் என்னை சொக்கச் செய்தது அவனின் நெருக்கம் மிகவும் பிடித்திருந்தது. என் கண்களை நோக்கிய அந்தப் பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல் தலை குனிந்தேன். வயிற்றுப் பகுதியில் அடைபட்டிருந்த பறவைகள் பட படவென்று சிறகை அடித்துக்கொண்டு விடுதலை ஆனது போல ஒரு உணர்வு ஏற்ப்பட அந்த நொடி நான் சற்றும் எதிர்ப் பாராத சமயத்தில் என் உதட்டில் அவன் உதடு அழுத்தமாய் பதிந்தது. ஒரு ஆண் மகனிடம் இருந்து கிடைத்த முதல் முத்தம் என் முழு உணர்ச்சியையும் ஆட்டிவிட்டது பலவீனம் அடைந்தேன். அவனுடைய விருப்பமே என்னுடைய விருப்பமாய் மாறியது. அந்த பதினைந்து நிமிடம் போதையில் இருந்ததுபோல சுயநினைவை இழந்து விட்டேன் நாடி நரம்பு எல்லாம் அவனுக்கே அடிமையாகி விட்டது. இரண்டு தினங்களுக்கு முன்பு தான் குமட்டலும், தலைச்சுற்றலும் மாறி மாறி வர சந்தேகத்தின் பெயரில் வீட்டில் சுயபரிசோதனை செய்ய பாசிட்டிவ் என்று வந்தது.

நெஞ்சில் ஏதோ முட்டுவது போல் இருக்க ஒரு அசவுகரியத்தை ஏற்படுத்தி உடலில் நடக்கும் ஒவ்வொறு பணியும் உறைந்து போய் நின்றது. கண்கள் கண்ட செய்திகளை நம்ப முடியாமல் அங்கும் இங்கும் அலை மோதியது, காதுகளை நிசப்தம் அழுத்த தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்டிருக்கும் உயிர் தொண்டையை கிழித்துக்கொண்டு வெளியே வர துடிப்பது போல ஒரு வலி ஏற்பட்டது. இரு கால்களும் பலவீனமடைய அடிவயிற்றில் உள்ளுக்குள் யாரோ இரு கைகளை கொண்டு உறுப்புக்களை கொத்தாய் பிடுங்கி எறிவது போல ஒரு அவஸ்தை. அழுகை முட்டிக்கொண்டு வருவது போல் ஒரு உணர்வு ஆனால் வரவில்லை தொண்டையில் ஈரம் வற்ற சிறிது எச்சில் விழுங்குவது கூட கல்லை விழுங்குவது போல் சிரமமாக இருந்தது.
எப்பொழுதும் சமையலறையில் வனிதாவிடம் அரட்டை அடித்துக்கொண்டே முழு நேரமும் செலவிடும் பூஜா இரண்டு நாட்களாக இப்போது எட்டிக் கூட பார்க்கவில்லை, முகமும் கண்களும் எதையோ பறிக்குடுத்தது போல் இருப்பதும், உணவு உண்ண மறுப்பதும், அவ்வப்பொழுது ஓடுவதுமாயி இருப்பதைக் கண்டு பின் தொடர்ந்து பூட்டியிருந்த கதவில் தன் காதை பதித்து கேட்க பூஜா வாந்தி எடுப்பது போல் மெல்லிய சத்தம் கேட்டது. பூஜா வெளியே வருவதற்குள் எண்ணற்ற குழப்பங்கள் எண்ணங்கள் வனிதாவின் தலையைச் சுற்றி சுற்றி வந்தது. கதவைத் திறக்கும் சப்தம் கேட்டவுடன் பூஜாவை வெளியே வரவிடாமல் உள்ளே தள்ளி,” என்ன வாந்தி எடுக்கிற சத்தம் கேட்டுச்சு?”. அவள் கேள்வியில் பதற்றமும் கலவரமும் அப்பிக் கொண்டு இருந்தது.
“ஒன்னும் இல்லம்மா சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கல போல அதான்”.
“என்னடி கதவிடுர ரெண்டு நாளா ஒன்னும் சாப்டல, உன் போக்கே சரியில்ல, முகம் ஒரு மாதிரியா இருக்கு என்ன விஷயம்?”
அழுது அழுது முகம் வீங்கிவிட்டது. இந்த இக்கட்டான சூழலை எவ்வாறு கடப்பது என்று யோசித்து யோசித்து மூளை வெடித்துவிடுவது போல் இருக்க வேறுவழியின்றி ஒத்துக் கொண்டாள் பூஜா.
“அம்மா நான் ரகுவை காதலிச்சு அவன் கூட……..”, என்று வயற்றில் கை வைத்தவாறு சொல்ல
“அடிப்பாவி……”, என்று தழுதழுத்த குரலில் தாரை தாரையாக கண்ணீர் வடிய சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு அக்கம் பக்கம் கேட்டு விடக்கூடாது என்று வாயை பொத்திக்கொண்டு அடிவயிற்றிலிருந்து கதறிக்கொண்டு தலையில் இடி விழுந்தது போல் இருக்க , கால்களில் உணர்ச்சி தொலைந்து போக உட்காரும் நிலையில் தொப் என்று தரையில் விழுந்தாள். அக்கம் பக்கம் தெரிந்தால், உறவினர்கள் மத்தியில் தெரிந்தால் ஒவ்வொருவரும் இவர்களை வார்த்தைகளால் காரித்துப்பும் காட்சி கண்முன்னே நடப்பது போல் கற்பனை ஓட குரல் இழந்த ஊமையாய் தவித்துக் கொண்டு இருந்தாள். வனிதாவின் மண்டைக்குள் மூளை சுற்றுவது போல கொஞ்சம் படபடப்பும் சேர்ந்துகொண்டு அவளை வாட்டியது. ஒன்றும் பேசவில்லை ஏதோ முணுமுணுத்துக் கொண்டு இருந்தாள், “அந்த மனுஷன் நாய் மாதிரி அலஞ்சு உன்னை படிக்க வச்சு ஒசரத்துல வச்சு அழகு பாக்கணும்னு கனவு கண்டார் ஆனா நீ பண்ணிங்க பேரண்ட சாக்கடையை தான் தேடி போவேன்னு போனா நாங்க என்ன பண்ண முடியும். அவர் உடல் சோர்வு கூட பொருட்படுத்தாம எந்த நேரமும், நீ பத்தரமா இருக்க அவரே உன்ன கூட்டிட்டு போறதும் வரதுமா இருந்தார். ஒரு நொடி அப்பாக்கு தெரிஞ்சா தாங்க மாட்டாருனு உனக்கு ஏன் தோனல. எங்க போனாலும் எங்கு வந்தாலும் உன் நெனப்புதான் அவருக்கு சுத்தி சுத்தி வரும் மனுஷன் உன்னை உசுரா பாத்துக்கிட்டாரே டி. வீட்டுக்குள்ள வரும்போது மொதல்ல உன்ன பத்தி தான் விசாரிப்பாரு, பூஜா என்ன பண்ணுது சாப்பிட்டாச்சானு. வெளிய தெரிஞ்சா வாய்க்கு வந்ததெல்லாம் பேசுவாங்களே. அய்யோ ……! அய்யோ…! நான் எதை நெனச்சி அழரது வாழ்க்கனா என்னனு தெரிரதுக்குள்ள இப்படி நாசமாபோய் நிக்குர உன்ன நெனச்சா, இல்ல ஊர் ஜன மத்தில மானம் மரியாதை போச்சேனு அழரதா, இல்ல அவர் இந்த சம்பவத்துல இருந்து எப்படி மீளப்போறாருனு புரியாதத நெனச்சு அழரதா, இல்ல எங்க வளர்ப்புல எங்க தப்பு பண்ணோம்னு தெரியாத நெலமைய நெனச்சி அழரதா…..”
நேரம் கடந்து செல்ல செல்ல முரளி வீடு திரும்பும் நேரம் நெருங்கியது. இருவரும் பயத்தில் தத்தளித்தார்கள், நாசிகளில் தக்கையை வைத்து அடைத்தது போல ஒரு உணர்வு. வனிதா தேம்பித் தேம்பி அழுதுகொண்டே தன் கணவன் எவ்வாறு இதை சகித்துக் கொள்வார் என்று தெரியாமல் பேதலித்துப் போனால். என்னைவிட பூஜாவை அவர்தான் கண்ணுக்குள் பொத்தி பொத்தி வளர்த்தார். பூஜா விஷயத்தில் எப்பொழுதும் பயங்கர ஜாக்கிரதையாக இருப்பார். கடைசியாய் பலி ஆடாய் இவளே விரும்பிக் சிக்கிக்கொண்டதை தான் தாங்கமுடியவில்லை. வண்டி சப்தம் கேட்க படபடப்பு அதிகரித்தது, வேகமாய் துடிக்கும் இதயத்தின் அதிர்வு உடல்முழுக்க பரவியிருக்க பயத்தில் வெடித்துவிடுவது போல் இருந்தது. முரளி உள்ளே நுழைந்தவுடன் வழக்கம் போல் மகளை பற்றி விசாரித்துவிட்டு உள்ளே சென்றார்.

பூஜா தன் அறையை விட்டு வெளியே வரவில்லை. வனிதா அனுபவிக்கும் பயம் கலவரம் அனைத்தும் பூஜாவும் இரண்டு நாட்களாக அனுபவித்தவையே. நாள் முழுக்க பயந்து பயந்து இப்போது சலிப்புதட்டி எது நடந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்று மன திடம் அடைந்தது. வனிதா செய்தியை கேட்டு சில மணி நேரமே ஆனதால் அவளால் நிலையாய் யோசிக்க விடாமல் பதற்றம் கவ்விக்கொண்டது. வீட்டிற்கு வந்து கணவருக்கு உணவு பரிமாறிவிட்டு அமைதியாய் கைகளை பிசைந்தவாறு அமர்ந்திருக்க முரளி அந்த பதட்டத்தை கவனித்தும் ஏதும் கேட்காமல் அமைதியாய் உணவு உண்டுவிட்டு தனியாக பேசிக்கொண்டு இருக்கையில்,” என்னடி என்ன ஆச்சு ஏதோ டென்ஷனா இருக்கிற மாதிரி இருக்கு?”
“நம்ம இப்போ இக்கட்டான சூழ்நிலையில் இருக்கோம் கொஞ்சம் அமைதியா நிதானம்மா முடிவெடுத்தா எந்த பாவப் பழி இல்லாமல் தப்பிச்சிடலாம்.”.
“அப்படி என்ன ஆச்சு?.என்ன பிரச்சன? புரியிர மாதிரி சொல்லு”.
“எனக்கு உங்கள நெனச்சாதான் பயமா இருக்கு. எப்படி தாங்குவீங்கனு எனக்கு தெரியல”
“சரி….. விஷயத்தை சொல்லு”.
வனிதா அமைதியாக சென்று கதவினைத் தாளிட்டாள். தன் கணவரின் இருக்கைகளையும் அள்ளி தன் மார்போடு அணைத்துக் கொண்டு நடுங்கிய குரலில்,” அது எவன்கிட்டயோ வயத்துல வாங்கிட்டு வந்திருக்கு”, என்று சொல்லி முடிக்க முரளியின் உடல் கட்டிப்போட்ட வாறு சிலையாய் நின்றான். உண்ட உணவு செரிமானம் ஆகாமல் வயிற்றை பாரமாக்கியது, வனித்தாவின் செய்தி மனதை பாரமாக்கியது. பூஜா ஒரு குழந்தை இத்தகைய காரியம் செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டாலா என்ன ?,என்னும் கேள்வி அவனை எதும் நம்பவிடாமல் செய்தது. இதுதான் உன்மை என்று உனரும் சமயத்தில் கண்களில் எந்த அசைவும் தென்படவில்லை, “என்ன… என்ன.…”என்று உதடுகள் மறுபடியும் மறுபடியும் பிதற்றிக் கொண்டு இருந்தது.
எதையும் திறமையாய் கையாளும் தன் கணவர் இடிந்துபோய் நிற்கும் கோலத்தை காண முடியாமல் மனதால் நொறுங்கிப் போனாள். அழுது அழுது வனிதா மயங்கி விழ அவளை ஆசுவாசப்படுத்தி கட்டிலில் படுக்க வைத்தான் முரளி. வனிதாவின் அருகில் அமைதியாய் அமர்ந்திருந்தான். தன் மகளை சிறு வயதில் இருந்து எப்படி எல்லாம் பார்த்து பார்த்து கவனித்துக் கொண்டான், பூஜாவின் வரவிற்க்கு பின் இவன் வாழ்க்கை எவ்வளவு சுவாரசியமாக மாறியது, அவளிடம் செலவழித்த நொடிகள் வித்தியாசமான அனுபவங்களை அள்ளி தெளித்தது. சாமியாய் அலங்கரித்து அழகு பார்த்த என் பொண்ணை எச்சல மாதிரி குப்பையில போட்டுட்டானே, என்று விசும்பிக் கொண்டே இருந்தான் முரளி. கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய சுவாசத்தின் வேகம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. கண்கள் சிவந்து போய் நீர் கோர்த்துக்கொண்டு பற்களை நரநரவென்று கடிக்க உதடுகள் துடித்தது. “முண்ட முண்ட அதுக்குள்ள உடம்பு சொகுசு கேக்குதா அந்த முண்டைக்கு. இது தான் வேணும்னு சொல்லி இருந்தா நானே அந்த முன்டைய கூட்டிட்டு போயி எங்கயாவது வித்துட்டு வந்திருப்பேனே. படிக்குற வயசுல படுக்கிற ஆசை வந்துடுச்சா. இந்த வயசுல இந்தத் துணிச்சல் எங்கிருந்து வந்துச்சு இது இன்னும் என்ன செய்ய அஞ்ஜாது. என்ன உசுரோட போதச்சுட்டாளே”, என்று கத்திக் கொண்டே இருக்கையில் பக்கத்து அறையில் பூஜா அனைத்தையும் கேட்டுக் கொண்டு இருந்தாள், அழுதுகொண்டே இருக்கையில் சட்டென்று தன் அறையை விட்டு வெளியேறினாள்.
தன் மொத்த அன்பை கொட்டி ஆசை ஆசையாய் வளர்த்த தன் செல்ல மகளின் உடலை எவனோ ஒருவன் உடல் சுகத்திற்காக ஆசைப்பட்டு காதல் என்னும் பேரில் இவளை அனுபவிக்க இந்த முண்டையும் அனுமதித்ததை நினைத்து நினைத்து அவனின் கோபம் உச்சத்துக்கு ஏறி கொப்பளித்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் பூஜா கதவினை தட்ட விறுவிறுவென்று சென்று கதவை திறந்து அவளை கண்மண் தெரியாமல் அறைந்து தள்ளினான். பூஜா இன்று தான் தன் அப்பாவின் புதுமுகத்தை கண்டால். தன்னிடம் எப்போதும் பாசமாய் நடந்துகொண்ட அப்பா இன்று வாய்க்கு வந்ததை திட்டுபவராய் மாற, பாசத்தை மட்டுமே வெளிப்படுத்த பயன்படுத்தப் பட்ட கரங்கள் இன்று அடிக்க செய்தது தானே முழு காரணம் என்று உணர்ந்து அமைதியாய் நின்றாள். முரளி வெறி பிடித்த மிருகமாய் மாறினான். கைகால்கள் பரபரவென்று துடிக்க பித்து பிடித்தவன் போல அங்குமிங்கும் நடக்க கோவம் கண்களை மறைத்தது, அவன் தலை மட்டும் அதிவேகமாக சுழலுவது போல் தோன்றியது. ஒட்டு மொத்த ஆத்திரத்தையும் சேமிப்பு கொண்டு இரண்டு கைகளை நீட்டியவாறு பூஜாவை நோக்கி ஒரு பைத்தியக்காரனைப் போல வெறி கொண்டு நடந்தான். தன் இரண்டு கைகளால் அவள் கழுத்தைப் பிடித்து நசுக்க, இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் நின்றவளுக்கு சில நொடிகளில் மூச்சுத் திணறல் ஏற்பட தன்னை விடுவித்துக்கொள்ள போராடினாள். பூஜாவின் கண்கள் பிதுங்கி வெளியே விழுந்து விடுவது போல் இருந்தது, நாக்கினை வெளியே தள்ளிக்கொண்டு மூச்சுவிட போராடினாள். சுவாசிக்க முடியாமல் தவிக்க இரு கண்களும் மேல் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொண்டு இருக்கையில், பூஜாவின் கைகள் முரளியின் கைகளை பிடுங்கி எறிய முயற்சித்து தோற்றது. மெல்ல மெல்ல அந்த அறையில் இருள் சூழ்ந்துக் கொண்டு இருக்கையில், ‘எல்லாம் கடந்து போகுமடா இந்த உண்மையை அறிந்தவன் ஞானியடா”, என்று அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடல் பாடியவாறு அவன் செல்போன் அழைக்க சுயநினைவுக்கு திரும்பினான் முரளி. தன் கரங்கள் அவள் கழுத்தில் இருக்கிறதை கண்டு அதிர்ந்து போனான் கைகளை உதறியவாறு குழப்பத்தில் அமர்ந்துவிட்டான்.
சிறு வயதிலேயே முரளியை ஆழமாக சிந்திக்க செய்தது இந்த இரண்டு வரிகள். வாழ்வில் ஏற்றம் இறக்கம் வரும்போதெல்லாம் இவ்வரிகள் இவனை பக்குவம் அடைய செய்தது. சந்தோஷம் தரும் சம்பவங்களாக இருந்தாலும் சோகம் சூழ்ந்தாலும் அந்த சம்பவத்தோடு வாழ்க்கை முடிவதில்லை அதையும் தாண்டி வாழ்க்கை இருக்கிறது கொஞ்சம் நிதானமாக இருந்தால் போதும் இதையும் கடந்துவிடலாம் என்று பலமுறை இவன் வாழ்க்கையில் இவ்வரிகள் புரிய வைத்திருக்கிறது. எனவே இவன் அலைபேசியில் இப்பாடலை ரிங்டோனாக வைத்திருந்தான் முரளி.
கோபம் மெல்ல மெல்ல கரைந்து போக அவன் உடலில் இருந்த சக்தியும் கரைந்து அசதி படர்ந்தது.. தரையில் விழுந்த பூஜா கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிக்க முயற்சி செய்து சுயநினைவுக்கு திரும்பினாள். தொண்டையில் பெரும் வலி ஏற்பட்டது. மூச்சு இரைத்தவாரு ஒரு கையால் தொண்டையை பிடித்துக் கொண்டு மற்றொரு கையின் உதவியால் தரையில் தன்னுடலை இழுத்துக்கொண்டு தன் தந்தையிடம் சென்றாள் பூஜா. அவரின் கால்களை பற்றிக்கொண்டு,” இந்தப் பாவத்தில் இருந்து எனக்கு விமோசனம் தாருங்கள் என்று கேவிக் கேவி அழுது கொண்டு இருக்கையில் முரளி தன் வலது கையை அவள் தலையில் வைத்தான்.” பொழுது விடியும் போது போய் படு” என்று மெல்லிய குரலில் சொன்னான் முரளி.


Super
பெண்களின் நிலையை பெற்றோர்கள் மனநிலை தாங்கிய கதை. வாழ்த்துகள் தோழர்
தாய் க்கு உடல் சுமை…
தகப்பனுக்கோ என்றும் மனச்சுமை…
என்பதுபோல…
கதை..
அருமையான கதை..
வாழ்த்துக்கள்
தாயாக…
தகப்பனாக…
அறியாமல் பிழை செய்த மகளாக…
அத்தனை பாத்திரங்களையும்…
எழுத்தாளர் மனதில்
வாழ்ந்து பார்த்து
எழுதி இருப்பது சிறப்பு .👌
வாசக மனங்களில்
அழுத்தமாக ஊடுருவி
கதையுடன் ஒன்றச் செய்கிறது.
வாழ்த்துகள் 🎊 🎊