‘சன்டே அதுவுமா ஏன் எல்லா வேலயயும் இப்டி இழுத்து போட்டுக்கறே வசு….’
கோழிக்கறி வாங்கி வந்த பையை, எங்கே வைப்பது என தடுமாறிய படியே அலுத்துக் கொண்டார் கணவர்.
‘நா எங்க இழுத்து போட்டுக்கறேன்…. வேலதான் என்ன இழுத்து போட்டுக்குது’
கழுவி விடப்பட்டு, ஈரம் தேங்கிக் கிடந்த பால்கனி சுவரில் அமர்ந்து, சிறகுகளுக்குள் தலை நுழைத்து இளைப்பாறிக் கொண்டிருந்த காகம், சத்தம் கேட்டு விருட்டென பறந்து போனது.
முணுமுணுப்புடன் பதில் சொல்லிக் கொண்டே துடைத்து விட்டதில், சற்றே கூடுதலாய் பளபளத்தன சமையலறை டைல்ஸ் கற்கள். வேலைக்குச் செல்லும் நாட்களின் பரபரப்பில், இதற்கெல்லாம் எங்கே நேரம் கிடைக்கிறது.
காலையில் இருந்து தொட்டு, தொட்டு ஒவ்வொரு வேலையாய் இழுத்துக் கொண்டேயிருந்தது. பிசுபிசுக்கும் டப்பாக்களை கழுவி வைத்ததும், தோல் இறைந்து கிடக்கும் வெங்காயம், பூண்டு கூடைகள் கண்ணில் பட, அப்படியே என்னையும் கொஞ்சம் தேய்த்து விடேன் என்று கேஸ் அடுப்பு கெஞ்ச, எண்ணெய் பிசுக்கு சொட்டி விழும் சிம்னி பயமுறுத்த… பேரலையாய் வாரிச் சுருட்டியபடியே, சமையலறைச் சுவர்கள் அவளை விழுங்கிக் கொண்டிருந்தன.
‘ம்மா…. தல குளிக்க வைக்க இப்போ வர்றியா இல்லயா, எவ்ளோ நேரம் வெயிட் பண்றது… இதுக்குத்தான் நானே குளிச்சிக்கறேன்னு சொன்னேன்….’
குளியலறைக்குள் இருந்து பொறுமையிழந்து கத்திக் கொண்டிருந்தாள் மகள்.
‘தோ வந்துட்டேன்டி… கை வேலய அப்டியே பாதில விட்டுட்டு வர முடியுமா? போன வாரமே நா ஊர்ல இல்ல. என்னத்த தேய்ச்சு, என்னத்த அலசினியோ…’
‘ஆ… வலிக்குது…. மெதுவாம்மா. சன்ச்டே அதுவுமா தூங்கக் கூட விடாம ஏம்மா இப்டி படுத்தறே. டிபன் சாப்டுட்டு பொறுமையா குளிச்சு இருப்பேன்…’
‘எட்டு மணி வரைக்கும் தூங்குனது பத்தாதா… ஒரு டெத் நியூஸ், போயிட்டு வரணும்டா. தொண தொணன்னு பேசிக்கிட்டே இருக்காம, கொஞ்சம் வாயை மூடு. ஷாம்பு வாய்க்குள்ள போகுது பாரு…’
யாரும்மா… என கேட்க வாயெடுத்தவள், தற்காலிகமாக நிறுத்திக் கொண்டாள். வழக்கமான காலைகளில் பரபரப்பும், கோபமுமாய் இருக்கும் அம்மா, ஞாயிற்றுக் கிழமைகளின் காலைகளில் அதீத கோபமாய் இருப்பாள் என்பது அவளுக்கு நன்கு தெரியும். ஆனால், கிளம்புவதற்குள் எப்படியும் கேட்டு தெரிந்து கொள்ளாமல் விடமாட்டாள். இல்லையென்றால், தலை வெடித்து விடும் அவளுக்கு.
நேற்றே வந்திருந்தது அந்த சாவுச் செய்தி. வசுமதி வேலைசெய்யும் வளாகத்தில், வேலைசெய்யும் ஒரு ஊழியரின் அம்மா. மாதக் கணக்கில் படுத்த படுக்கையாய் கிடந்த போராட்டம், நேற்று ஒரு முடிவுக்கு வந்திருந்தது.
வெவ்வேறு துறைகளில் பணிபுரிவதால், வேலை நிமித்தமான பழக்கம் பெரிதாக எதுவுமில்லை. தொழிற்சங்க கூட்டங்கள், போராட்டங்கள் மூலம் அறிமுகமான தோழர்.
சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு வரை கூட, நெருக்கமான பழக்கம் எதுவும் வாய்த்திருக்கவில்லை. மரணப் படுக்கையில் தனது தாயை கிடத்தி விட்டு, சென்ற வாரம் திருநெல்வேலியில் நடந்த தொழிற்சங்க மாநாட்டிற்கு வந்திருந்தார். அந்த உணர்வு தான், அவசியம் போய் விசாரித்து விட்டு வரவேண்டுமென்று உள்ளுக்குள் அரித்துக் கொண்டேயிருந்தது.
சென்ற வாரம் வெள்ளிக்கிழமை இரவு, இரயில் நிலையத்தில் காத்திருந்த போது தான், தான் பயணம் செய்யப் போகும் இரயில் ‘சுவிதா விரைவு வண்டி’ என்பதே தெரிய வந்தது வசுவிற்கு.
அவளது துறையில் உடன் வேலை செய்யும் சக தோழர்கள், சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் இரயிலில் முன்பதிவு செய்திருந்தனர். அது நெல்லைக்கு தாமதமாக சென்று சேரும் என்பதாலும், வேறு எந்த இரயிலிலும் இடமில்லாததாலும், தட்கலில் பதிவு செய்து கொள்ளத் திட்டமிட்டிருந்தாள்.
மாநில அளவில் நடைபெறவிருந்த அந்த மாநாட்டின் முதல் அமர்வே, பெண் ஊழியர்களின் மாநாடாக இருந்ததால், காலையில் முன்னதாகச் சென்று, நிகழ்வுகளை ஒருங்கிணைக்க வேண்டி இருந்தது வசுவிற்கு. பரவலாக மற்றவர்களிடம் சொல்லி வைத்ததில், வசு உள்ளிட்ட மூன்று பெண்களுக்கு சேர்த்து இந்த வண்டியில் முன்பதிவு செய்திருந்தனர்.

‘சுவிதா’ இரயில்களுக்கும், வசுவிற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். இந்தியில் பெயர் சூட்டப்பட்ட நாட்டின் பல்வேறு நலத்திட்டங்களைப் போலவே, இந்த இரயில்களும் சொல்லுக்கும் செயலுக்கும் சம்பந்தமில்லாமல் ஓடிக் கொண்டிருப்பதாகவே தோன்றும். நேரத்திற்கு போய் சேர்த்து விடுமா எனும் படபடப்பு, இரயில் ஏறியதும் சக தோழர் ஒருவரின் வீட்டில் இருந்து வந்திருந்த வேர்க்கடலை சட்னியின் ருசியில் கரைந்து போனது.
வாழ்க்கையில் மாற்ற இயலாத வரங்கள் பல. அதில் சுவிதாவும் ஒன்று என்பதை மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்தது, அடுத்த நாள் தாமதமாய் புலர்ந்த காலைப்பொழுது. நெல்லையப்பரை தரிசிக்க வேண்டிய நேரத்தில், மீனாட்சி சொக்கநாதரிடம் மன்றாடியபடியே, வெகுநேரம் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தது சுவிதா.
எஞ்சியிருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் பொய்த்துப் போக, மூன்று பெண்களும் மதுரை இரயில் நிலையத்தில் இருந்து ஒரு வாடகைக் கார் பிடித்து, நெல்லைக்கு செல்லலாமா என யோசித்துக் கொண்டிருந்தனர்.
‘கவலயே படாதீங்க…. ஸ்டேஷன்ல ஒரு ப்ரீபெய்டு டாக்ஸி பிடிச்சு, பத்திரமா ஒங்கள கொண்டு போய் சேர்த்துடறேன்…’ என அவர்களோடு இணைந்து கொண்டார் ராஜசிம்மன்.
சென்னையின் அவசரங்கள் அப்பிய ஆரவாரங்கள் ஏதுமின்றி, அமைதியாய் வரவேற்றது மதுரையின் குளுமையான காலை. ரசித்துக் குடித்த பில்டர் காபிச்சுவையுடன், காரில் ஏறிய போது தான் தெரியவந்தது, அவரது அம்மா மாதக்கணக்கில் படுத்த படுக்கையாய் கிடப்பது. வீட்டுக்கு கைபேசியில் பேசிய போது, நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக வந்த தகவலில், சற்று கலங்கித் தான் போயிருந்தார்.
‘என்ன பண்றதுங்க… இதான் கடைசி மாநாடு. அடுத்த மாநாட்டுக்குள்ள ரிடையர்டாகிடுவேன். அம்மா சைகையிலயே கையை அசைச்சு, போயிட்டு வான்னுச்சி…. நடக்கறது நடக்கட்டும்னு வந்துட்டேன்…’
எளிய மனிதர்களின் அர்ப்பணிப்பின் மீது தான் மாபெரும் இயக்கங்கள் கட்டியெழுப்பப் படுகின்றன. சர்வ சாதாரணமாய் வந்து விழுந்த அவரது வார்த்தைகளை உள்வாங்கிக் கொள்ள, மற்ற மூன்று பேரும் சற்றே அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தது.
வசுவிற்கு, துருத்திக் கொண்டு நின்ற மகளின் கன்னத்து பருக்கள் நினைவில் வந்தன. வளரிளம் பருவத்து மாற்றங்கள் தலைகாட்டத் துவங்கி விட்டிருந்தன அவளிடத்தில். அதிலும், சில நாட்களாக அறிகுறிகள் தீவிரமாகவே தென்பட்டுக் கொண்டிருந்தன.
உடனிருந்த பெண்களிடம் சொல்ல வாயெடுத்த போது, அவர்கள் ராஜசிம்மன் அம்மாவின் மெடிக்கல் ஹிஸ்ட்ரியில் மூழ்கி விட்டிருந்தனர்.
கிளம்புவதற்கு முன் தினம் இரவு கூட, என்ன செய்ய வேண்டுமென்பதை மகளுக்கு மீண்டும் நினைவுபடுத்தியிருந்தாள் வசு.
‘ஏதாச்சும்னா உடனே அப்பாக்கு போன் பண்ணி சொல்லிடுமா… நாப்கின் இன்னர்ஸ் வைக்கற பாக்ஸ்லயே இருக்கு. எப்படி வைக்கறதுன்னு தெரியும் இல்ல….’
‘அய்யோ… எல்லாம் எனக்கு தெரியும்மா… எத்தன முறை இதயே சொல்லிகிட்டு இருப்பே…’
கைபேசியை நோண்டிய படியே, பொறுமையிழந்து பதில் வந்தது.
‘அப்புறம் வயிறு ஏதாச்சும் ரொம்ப வலிச்சா, வெளக்கெண்ணெ தடவிகிட்டு, பேசாம படுத்துடு…
அப்பா வர்ற லேட்டாயிடுச்சுன்னா, இல்லேல்ல… எப்டியும் ஒங்கப்பா லேட்டாத்தான் வருவாரு… அண்ணாவை ஏதாவது ஆர்டர் பண்ண சொல்லி சாப்டுக்குங்க…’
விளக்கெண்ணெய் புதிதாக வாங்கி வைக்க மறந்து போனது திடீரென நினைவுக்கு வந்து, காரின் குலுக்கலோடு சேர்ந்து என்னவோ செய்தது வசுவிற்கு. எப்போதோ வாங்கியது தான் வீட்டில் இருந்தது. கிளம்பும் போதும், கணவரிடம் இது குறித்து பேச வாய்க்கவில்லை.
இரவுக்கான டிபன், அடுத்த இரண்டு நாட்களுக்கு தாக்குப்பிடிக்க புளிக் குழம்பு, தக்காளி தொக்கு, வெங்காயச் சட்னி என செய்து வைத்து விட்டு, அவசரம் அவசரமாக பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பியதில் மறந்தே போனது. இரயில் நிலையம் வந்ததும், சுவிதா எல்லாவற்றையும் மறக்கடிக்க வைத்து விட்டது.
பொறுமையாய் ஆற, அமர ரசித்து, ருசிக்கும் தருணங்கள் பெரும்பாலும் வாய்த்ததில்லை வசுவிற்கு. அள்ளித் தெளித்து, இழுத்து விடும் அவசரக் கோலங்கள் தான் எப்போதும்.
‘இப்போ பசங்க ஸ்கூலுக்கு கெளம்பிகிட்டு இருப்பாங்க. ஒம்பது மணிக்கு மேல தான், அவருக்கு போன் பண்ணி சொல்லணும். வீடு, வேலங்கறத தாண்டி வெளியே வந்தும், இதோ டிரெயின் லேட்டு… பஸ் லேட்டுன்னு ஓடத்தான் வேண்டியிருக்கு….’ அலுப்பும், சலிப்பும் அலைக்கழித்தன.
‘எப்டியோ… நேரத்துக்கு ஓடி சேர்ந்துட்டா போதும்….’ அனிச்சையாய் கண்கள் மூடிக் கொண்டன.
அவள் அதிகம் ரசித்துப் படித்த, அம்பையின் கதையில் வரும் ‘கொலை செய்த அம்மா’வாகி விடுவாளோ எனும் பயம் அடிவயிற்றைக் கவ்விக் கொண்டது.

காலையில் பிள்ளைகளிடம் கைபேசியில் பேசி, அவர்கள் எழுந்துவிட்டதை உறுதி செய்து கொண்ட போது கூட, எவ்வித கலக்கமுமின்றி, சாதாரணமாகத்தான் இருந்தாள் வசு. ஏதோ ஒரு மூலையில் உறைந்து கிடந்த தவிப்பு, எப்படியோ திடீரென விழித்துக் கொண்டு, மனதெங்கும் அப்பிக் கொண்டது பூதாகரமாய்.
மதிய உணவின் போது தான், கணவரிடம் பேச முடிந்தது. மாநாட்டு நிகழ்வுகள் வேறெதுவும் சிந்திக்க விடாமல், முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தன.
‘நைட்டு நா லேட்டாத்தாம்மா வீட்டுக்கு போவேன்… ஒன்னு பன்றேன். பெரியவன வாங்கி வச்சிட சொல்றேன்…’
‘அம்மாவ வேணுமின்னா கெளம்பி வரச் சொல்லவாப்பா…’
ஏதாவதுன்னா, வீட்டுல யாராச்சும் பக்கத்துல இருக்கணும்ப்பா, கொழந்த பயந்துடக்கூடாது… என்பதையும் சேர்த்து சொல்லத் தோன்றியது. அரங்கு முழுவதையும் ஆக்கிரமித்துக் கிடந்த சத்தங்களின் கலவைகளுக்கிடையே, சொல்ல இயலவில்லை.
‘ஏம்மா… அவங்கள வேற கஷ்டப்படுத்தணும். நா பாத்துக்கறேன்…’
’அதானே பயமாயிருக்கு… ஒன்ன பத்தி தெரியாதா…’ சிரித்துக் கொண்டாள் வசு.
‘சாப்டீங்களா தோழர்…’ அக்கறையுடன் விசாரித்துச் சென்றார், ராஜசிம்மன்.
இரண்டு நாட்களும் அவரைக் கடந்து செல்லும் போதெல்லாம், யாராவது அவரது அம்மாவைப் பற்றி விசாரித்தபடியே இருந்தனர். சிலர், முதுகில் தட்டிக் கொடுத்தபடி கடந்தனர். சிலர், உரிமையுடன் கடிந்து கொண்டனர். எல்லாரிடமும், அம்மா கையசைத்து போய் வரச் சொன்னதை சொல்லிக் கொண்டேயிருந்தார். உள்ளூர உறுத்திக் கொண்டிருந்த கலக்கத்தில் இருந்து மீண்டு வர, அவருக்கு அது உதவியிருக்கக் கூடும்.
அம்மா தன் மடியிலேயே உயிர் விட்டாள் என நேற்று இரவு அவர் அனுப்பியிருந்த குறுஞ்செய்தி, அவரது நிம்மதிப் பெருமூச்சையும் சுமந்து கொண்டே வந்தது. எப்படியோ, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, வாழ்நாள் குற்றவுணர்வில் இருந்து, அம்மா அவரை காப்பாற்றி விட்டிருந்தாள்.
‘போதும்மா… எவ்ளோ நேரம் தலய அலசுவே…’
‘ம்… கொஞ்ச நஞ்சமா அழுக்கு சேர்த்து வச்சிருக்கே, சீக்கிரம் குளிச்சிட்டு வா… அப்பா சிக்கன் வாங்கி வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சி… க்ளீன் பண்ணனும், கொழம்பு வைக்கணும். நெறய வேல இருக்கு அம்மாவுக்கு…’
‘ம்மா… சிக்கன் குழம்பா… அப்போ டிபன் பூரி பன்றயா…’
‘அம்மா கெளம்பனும்டா… நைட்டுக்கு வேணா பூரி செஞ்சு தர்றேன், சரியா…’
பூரி கிடைக்கப் போகும் உற்சாகத்துடன், சிரித்துக் கொண்டே தலையை ஆட்டியதில், முடிக்கற்றைகளின் நீர்த்திவலைகள் வசுவின் முகத்தில் தெறித்து விழுந்தன. நீர்த்திவலைகளுடன் மகளின் சிரிப்பும் ஒட்டி வந்து அப்பிக் கொண்டது.
குனிந்து கொண்டே இருந்ததில், இடுப்பு வலியெடுக்க ஆரம்பித்திருந்தது. ஒரு அஞ்சு நிமிஷம் சாஞ்சு உட்காரேன்… என கெஞ்சிக் கொண்டிருந்தது வசுவிடம். ஒரு சர்வாதிகாரியின் தோரணையுடன் அதை கறாராக மறுதலித்துக் கொண்டே, கோழிக்கறியை சுத்தம் செய்யத் துவங்கியவள், கொஞ்சமாக கறியை தனியாக எடுத்து வைத்துக் கொண்டாள்.
‘சிக்கன் 65ன்னா விரும்பிச் சாப்பிடுவாங்க பசங்க. போன வாரமே, ஓட்டல்ல வாங்கி, என்ன சாப்டாங்களோ… பாவம். சிக்கன் கொழம்பும், சாதமும் வச்சிட்டு, ஒரு 11 மணிக்குள்ள கெளம்பிட்டா போதும். வந்து கூட சிக்கன் பொரிச்சுக்கலாம்….’
எண்ணமும், கைகளும் பரபரத்துக் கொண்டிருந்தன வசுவிற்கு.
‘ம்மா…. இங்க வாயேன் கொஞ்சம்…’
‘என்னடாம்மா… அம்மா வேலையா இருக்கேன். என்ன வேணும்…’
‘அய்யோ… அம்மா… ஒரு நிமிஷம் வந்து போம்மா…’ கெஞ்சியது குரல்.
‘இவ்ளோ நேரம் என்னதான் பண்ணிகிட்டு இருக்கே பாத்ரூமுக்…’
கண்களில் இனம் தெரியாத மிரட்சியுடன் ஓரமாய் நின்று கொண்டிருந்தவளைப் பார்த்து, பேச்சு பாதியில் உறைந்து நின்றது. குளியலறை தரையில் ஆங்காங்கே திட்டுத் திட்டாய், பூத்துக் கிடந்தது சிவப்பு.
-எஸ்.பிரேமலதா


அருமையான சிறுகதை….குடும்பப் பொறுப்புகள், கடமைகள், அன்றாடப் பாடுகள், பிள்ளைகள் குறித்த பரிதவிப்புகள் இவை ஆண் – பெண் இரு பாலருக்கும் பொது என்றாலும், நடைமுறையில் ஒரு பெண்ணின் தவிப்புகள் கால காலமான சமூக அடித்தளத்தின் வழி பரவி வந்திருப்பதை, ஆழமானவை. சம நிலையில் இருப்பதாக நினைக்கும் ஆண் மனத்தையும் கேள்விக்கு உட்படுத்தும் இலக்கியங்கள் தொடர்ந்து வருகின்றன. அந்த வரிசையில், பிரேமலதா அவர்களது இந்தக் கதை முக்கிய கவனம் பெறுகிறது. சிறப்பாக சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்த்துகள் தோழர் பிரேமா
எஸ் வி வேணுகோபாலன்
சென்னை 24
94452 59691
Comrade Premalatha is proving herself as a prolific writer. Good flow of the language is seen. The stress that which each and every trade union members face in their day to day affairs is well portrayed. Certainly, a trade union is not built by mere numbers but by the sacrifices and commitments. Greetings to com Premalatha
யதார்த்தமான சித்தரிப்பு. அவசியமான பதிவு. சக தோழியின் சிரமங்கள் தெரியாதவர்களுக்கு தெரியவரும் செய்தி.
ரவிசங்கர்.
யதார்த்தமான சித்தரிப்பு. பதிவு செய்யப்பட்ட வேண்டிய அனுபவங்கள். சக தோழியின் சிரமங்கள் தெரியாதவர்களுக்கு தெரியவரும் செய்தி.
ரவிசங்கர்
தவிப்புகள் தனித்தனி தலைப்பிலிருந்து ஆரம்பித்து கடைசி வரை அழகாக பயணித்த கதை இல்லையில்லை வாழ்வனுபவம்.
மகனுக்கும் தாய்க்கும் இடையே
தாய்க்கும் மகளுக்கும் இடையே
களம் வேறு. உளவியல் காரணங்கள் வேறு வேறு. தேவைகள் வேறு. ஆனாலும் மனம் படும் பாடு இருக்கிறதே. எதார்த்தத்தில் இரண்டும் தவிர்க்க முடியாதவை. ஆனாலும் இது கவலையுடன் மகிழ்ச்சியும் நிறைந்த கலவை. இப்படி இருக்க
இரண்டு களங்களையும் கோர்த்துக் கொண்டு வந்த விதம் கவிதை.
வாய்விட்டு புலம்ப முடியாத கூடுதல் தவிப்பை அப்படியே எழுத்தில் கடத்தி இருக்கிறரார் என்பது கூடுதல் அருமை.