வாழ்வில் எதிர்கொள்ளும் அநியாயங்களுக்கும் அநீதிக்கும் எதிராக எதிர்வினையாற்றுவது என்பது ஒரே மாதிரியாக அமைந்துவிடுவதில்லை.

புயல்

கோபிகிருஷ்ணன்

அதிகாலையிலிருந்தே பலத்த மழை. சென்னை அருகே புயலாம்.
தொழிற்சாலை நேரம் முடிந்து தள்ளிப்போட முடியாத ஒரு முக்கியமான விஷயத்தைப் பற்றி சக ஊழியர் குதரத் உல்லா பாட்சாவுடன் பேச அவரது இல்லத்திற்குச் சென்று பேசி முடித்துவிட்டு சுமார் ஒன்பது மணியளவில் தன்வீட்டை நோக்கிப் புறப்பட்டான் ஏகநாத். நைந்துபோன பித்தான்கள் என்றைக்கோ தெறித்து அவை இல்லாத நிலையில் ஸேஃப்டி பின்களைப் போட்டு, ஒருவாறாக மழைக்கோட்டை அணிந்து கொண்டு தொப்பியின்மையால் தலை நனைதலை அனுபவித்துக் கொண்டே, வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

வழியில் சிகரெட் ஒரு பாக்கெட்டையும், ஒரு வத்திப்பெட்டியையும் வாங்கி மழைத்தாளில் சுற்றி வைத்துக் கொண்டான். குழந்தைக்கு இரு தினங்களாக வெதுவெதுப்பான ஜுரம். மருந்துக்கடை ஒன்றில் மாத்திரை இரண்டை வாங்கினான். ஜுரத்தால் அவதிப்படும் குழந்தையை ஏதோ ஒரு வகையில் சந்தோஷப்படுத்தி உற்சாகத்துடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று தோன்றவே, ஒரு கடையில் சாக்கலேட் ஒன்றை வாங்கினான். சிகரெட் ஒன்றைப் பெட்டியிலிருந்து கவனத்துடன் உருவி மழைச் சொட்டுக்களிலிருந்து அதை அரைகுறையாக ஒருவாறு காத்து கைகைளைக் குவித்துப் பற்றவைத்துவிட்டு நடந்து கொண்டிருந்தான். வீட்டை அடைய இன்னும் ஒரு டொக்குச் சந்தையும், ஒரு நீண்ட சந்தையும், இரண்டு சிறு சந்துகளையும் கடக்க வேண்டும்.

வழியில் ஒரு மளிகைக் கடை. காப்பிப் பொட்டலம் ஒன்றையும் சர்க்கரையையும் கொடுக்குமாறு கடைப் பையனிடம் சொல்லிவிட்டு, சிகரெட்டை உறிஞ்சி புகையை வெளித் தள்ளிக்கொண்டிருந்தான். அருகில் ஒரு நடுவயது மாமி. அவள் முகம் கோணினாள். “ஸாரி மாமி..” மன்னிப்புக்கோரி கால்வாசிதான் புகைத்திருந்த சிகரெட்டைக் கீழே போட்டு நசுக்கினான்.

மணி தோராயமாக 9.30. “காலைலே வீட்டே விட்டுக் கௌம்பினா வீட்டு ஞாபகமே இருக்கறதில்லை உங்களுக்கு கொஞ்சங்கூட. நீங்க சீக்கிரம் வரணும்னு நான் வேண்டாத தெய்வங்க இல்லே” ஸோனா பொரிந்து தள்ளினாள். “ஆமா இன்ணெக்கி என்ன விசேஷம்? நான் சீக்கிரம் வரணும்னு சாமிங்களை வேண்டிக்கற அளவுக்கு எனக்கு என்ன திடீர் முக்கியத்துவம்” இது ஏகநாத்.

“ஒண்ணுமில்லே சொல்றேன்.”

“என்ன வீட்டுக்காரம்மா ஏதாவது கத்தினாளா? இல்லெ மளிகைக்காரன் பாக்கிக்காக வந்து கேட்டுக் கத்தினானா? இல்லெ வேறென்ன சொல்லேன்.”

“நீங்க மொதல்லே கைகால் அலம்பிண்டு வாங்க. வெளியே போக வேணாம். இந்த மழைச் சனியன் வேற நின்னு தொலைய மாட்டேங்கறது.”

சமையற்கட்டின் முன்பகுதியில் முகம் கைகால் அலம்பிக் கொண்டு, தலையை துவட்டிக் கொண்டு ஏகநாத் நாற்காலியில் அமர்ந்து கொண்டான்.

ஸிந்தியா “டாடீ எனக்கு இன்னா கொண்டாந்தே?”“

ஒனக்காடா கண்ணா, ஒரு மாத்திரெ ஒனக்கு ஜொரமில்லே, அப்பறம் ஒரு சாக்கலேட்.”

“இன்னா டாடீ, எனக்கு ஸ்வீட்டு. இன்னெக்கி எனக்கு பெர்த் டேவா?” அவளுக்கு எப்பொழுதாவது அரிதாக இனிப்பு கொண்டு கொடுக்கும் சமயமெல்லாம் அவள் கேட்கும் கேள்வி. சாக்கலேட்டை இரண்டு விள்ளல் கடித்துவிட்டு ஸிந்தியா வாந்தி எடுத்துவிட்டாள்.

“இப்போ ஸ்வீட் ஒண்ணு இல்லேன்னு இங்கே யார் அழுதா” ஸோனா வெடித்தாள்.

“என்ன நடந்திச்சு சொல்லு. காப்பி போடு சாப்பிட்டிட்டே கேக்கறேன்.”

“ஒங்களுக்குக் காப்பிதான் முக்கியம். என்னோட அவஸ்தெயெப் பத்தி ஒங்களுக்கென்ன அக்கறை” வாந்தியை வாருகாலால் தண்ணீர் விட்டுக் கழுவிக் கொண்டே ஸோனா எரிந்து விழுந்தாள்.

“சரி காப்பிகூட அப்புறம் போட்டுக்கலாம். விஷயத்தெச் சொல்லு.”

“என்னெ எதுக்கு வேலைலெ சேத்து விட்டீங்க?”

“புதுஸ்ஸா இதிலே சொல்றதுக்கு என்ன இருக்கு? சமூகத்தெப் பத்தி நீ தெரிஞ்சுக்கணும். நாலுபேரோட நீ பழகணும். அப்பொதான் உலகம்ன்னா என்னான்னு ஒனக்குப் புரியும். ஒன்னோட வாழ்க்கை புருஷன் கொளந்தே அடுப்படி வீட்டுச்சுவர் இதுக்குள்ளேயே முடிஞ்சுவிடக்கூடாதுன்னு தான். இப்பொ ஏன் அதெத் திரும்பக் கேக்கறே.”

“என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க இந்த மாதிரிப் பேச மாட்டீங்க. இன்னெக்கி நர்ஸிங் ஹோம்லெ அந்த தியேட்டர் டெக்னீய ராஸ்கல் கோவிந்தன், டியூட்டி ரூம்லெ நர்ஸுப் பொண்ணுகள்ட்டே அம்மணமா போஸ் கொடுத்துண்டு நிக்கற வெள்ளெக்காரச்சி ஒருத்தி ஃபோட்டோவை காட்டினானன். அந்த நாலும் சிரிச்சி கொளெஞ்சி நெளியறதுக. வெக்கங்கெட்ட ஜன்மங்க.”

“இதுக்கு ஏன் இவ்வளவு கத்தல்? கோவிந்தன் ஒண்ட்டே ஒண்ணும் காட்டலியே?”

“அந்த டாக்டர் கெழம் பேரம் பேத்தி எடுத்தாச்சு, ஹார்மோன் இன்ஜெக் ஷன் போட்டுண்டு ஹெட் ஸ்டாஃப் அதுக்கு ஊர்லெ ரெண்டு பசங்க படிச்சிண்டிருக்கு, அதோட ராத்திரியிலே குடும்பம் நடத்தறானாம்.”

என்ன பதில் சொல்வதென்று புரியாத நிலையில் ஏகநாத் சிகரெட் ஒன்றைப் பற்றவைத்துக் கொண்டான்.

“ஒங்களுக்கென்ன ஸ்மோக் பண்ணினா எல்லாம் தீர்ந்து போச்சு. நான் இங்கே கெடந்து குமுறிண்டிருக்கேன். நர்ஸிங் ஹோம்லேருந்து crèche க்குவந்து ஸிந்தியாவெ அழச்சிண்டு மழைலே நனைஞ்சு வீட்டுக்கு வந்திண்டுருந்தேன். கொட்ற மழைலெ கொட இருந்தும் ஒண்ணுதான் இல்லாட்டியும் ஒண்ணுதான். ரோட்லெ ஆள் நடமாட்டம் இல்லெ. ஒரு ஆள் பாண்ட் ஷர்ட் போட்டுண்டு, கையிலே ஒரு சிகரெட்டோட காரிலே உட்கார்ந்துண்டு ஜன்னக் கதவையெல்லாம் ஏத்தி மூடிவச்சிண்டு சுட்டு வெரலெ வளைச்சி ‘மேடம் ஒரு நிமிஷம் இங்கெ வர்றீங்களா’ன்னு கூப்பிட்டது. யாரெக் கூப்பிட்றான்னு திரும்பிப் பார்த்தா ‘மேடம் ஒங்களெத்தான் ஒரு நிமிஷம் கிட்டெதான் வாங்களேன்’னது சில நேரங்களில் சில மனிதர்கள் சினிமாவில் ஸ்ரீகாந்த் லக்ஷ்மியை காரிலெ லிஃப்ட் கொடுத்து அனுபவிச்சுட்டு எறக்கி விட்டுப் போனது ஞாபகம் வந்தது பயந்து நடுங்கிண்டு விறுவிறுன்னு நடந்து வீட்டுக்கு வந்தேன்”.

ஸோனா தொடர்ந்தாள். காலி செஞ்சுண்டு போன பார்வதி வீட்டுக்காரன் வீட்டுக்குள் வந்து காப்பி கேட்டதையும், சினிமாவுக்கு சேர்ந்து போகலாம்னு கூப்பிட்டதையும் சொன்னாள்.ஸோனா இன்னும் முடிக்கவில்லை. அரைக்க கொடுத்த மாவை வாங்கிண்டு வரச்சே, ஒரு வீட்டுத் திண்ணைலே ரெண்டு கேடிப் பசங்க குட்டி ஷோக்காயிருக்கில்லெனு கமெண்ட் அடித்ததையும் சொன்னாள். ஸோனா கொட்டித் தீர்த்தாள். விசும்பிக்கொண்டே ஸிந்தியாவுக்கு சோறு ஊட்டிப் படுக்க வைத்தாள். ஸோனா ஏகநாத்திடமிருந்து ஏதோ ஒரு பதிலை எதிர்பார்த்தாள்.

“சமூகம் இண்ணெக்கி ஒன்கிட்டே அதனோட விஸ்வரூபத்தைக் காட்டியிருக்கு. அவ்வளவுதான் தூங்கு எல்லாம் சரியாப் போகும்” என்றான்.

“உலகத்தெத் தெரிஞ்சுக்கணும்னீங்க. புரிஞ்சுகிட்டவரைக்கும் சகிக்கலை.”

அவள் கண்களில் கசிந்த நீரைத் துடைக்கக்கூடத் திராணியில்லாமல் கிடந்தான் ஏகநாத். ஏகநாத் பாவமே செய்யாத புண்ணி ஆத்மா அல்ல. இருப்பினும் அசிங்கமாகவோ அநாகரிகமாகவோ நடந்துகொண்டதாக அவனுக்கு நினைவில்லை. ஒன்றும் செய்யத் தோன்றாமல் சாக்கடையில் உழலும் பன்றிகள் என்று சற்று உரக்கவே கத்தினான். ஏகநாத்தால் இயன்றது அவ்வளவே.

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *