சிறுகதைச் சுருக்கம் 98 : க்ருஷாங்கினியின் ‘படம்’ சிறுகதை – ராமச்சந்திர வைத்தியநாத்
தலைமுறை மாற்றத்தை இடைவெளியை நுட்பமாக கையாண்டிருக்கிறார்,

படம்
கிருஷாங்கினி

அந்த எண்ணம் யாரின் மூலம் முதலில் வெளியாயிற்று என்ற ஆராய்ச்சி தேவையின்றி அனைவராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஸ்தூலமாகப் பார்க்க இயலாமல் போன தாத்தாவை படமாக்கிமாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கையால் எழுதுவது தவிர்த்த உருவப்படங்கள் பெரிது பண்ண இயலாமல் இருந்த காலம். ஆதலால் ஒரு நல்ல சிறிய உருவப் படத்தைக் கண்டு பிடிக்க முதலில் ஏற்பாடு ஆயிற்று.

ஒரு குழுப்படத்தில் இருந்து அவரைத் தனித்து பிரித்து எடுத்த அதன் மூலம் உருவ அளவில் ஓவியம் எழுதத் தீர்மானித்து அதற்கான ஓவியரையும் அணுகியாயிற்று. தாத்தாவின் உருவ வர்ணணை அம்மாவின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. அவருடைய கண்கள் மிக முக்கியம் என்பதாக ஓவியருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அவர் கண் ஊசி மாதிரிக் குத்தும். தப்பு செஞ்சிட்டு அவர் முன்னாலே போக முடியாது. பொய் சொல்ல முடியாது, ஒரு சாயங்காலம். ஒத்தையடிப்பாதைலே அப்பா வந்துண்டு இருக்கார். வர வழிலே பாதைலே ஒரு புலி, கண் இரண்டும் நெருப்புத் தணல் மாதிரி. அப்பா கண்ணும் நெருப்புதான். புலியை பார்த்தபடி அதனோட பார்வையோட தன் பார்வையை இணைச்சுத் தைச்சுட்டார். தன் காலை பின்புறமாக வச்சு வச்சு வந்த வழியே காலாலே விழிங்கிண்டு வரார். புலி அப்பாவோட பாதையைத் தன் காலாலே விழிங்கிண்டு முன்னே முன்னே வரது. இப்படியே மெதுவா நடந்து ஊர் எல்லைக்குக் கொண்டு வந்தார் அந்தப் புலியை. மனுஷாளப் பார்த்த புலி மிரண்டது. புலியை அப்பாவோட பார்த்த மனுஷா மிரண்டால் புலி திரும்பி காட்டைப் பார்த்து ஓடிடுத்து. கண் அப்படி இருக்கணும், ஈர்க்கணும்.

இது போல பல அத்யாயங்கள் தாத்தா சம்பந்தப்பட்டவர்கள் மூலம்.

படம் எழுதி முடியும் வரை எங்களுடனேயே தங்க ஓவியரும் இசைந்தார். வீடு மஹா பெரியது, அவரின் இருப்பு மற்றவர்களைப் பாதிக்காது. ஆனால் அவரால் செய்யப்படுவது மற்றவர்களை அதிகம் பாதித்தது. அவரின் அறையில் அந்த வீட்டுக்குப் புதிதான ஆயில் மணம் தொடக்கத்தில் ரசம் குழம்பில் காபியில் துணிகளில் என்பதாக அனைத்திலும் முன்னின்று தொந்தரவு செய்தது. தெரியாமல் ஒரு நாள் பழகிவிட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. படத்தின் ஒவ்வொரு நாள் வளர்ச்சியும் கண்டுபிடிக்கப் போட்டி வைக்கப்பட்டது. பள்ளியில் இருந்து நேரே வீட்டிற்கு வரவைத்தது. அந்த அறைக்குள் நுழைவது புனிதம்போல் பட்டது, இரவில் பயமாக இருந்தது நுழைய, அதில் நுழைந்து வெளிவரும் ஓவியர் மஹா பலசாலி எனத் தோன்றினார்.

முடிவாக ஒரு நாள் படமும் முடிக்கப்பட்டது. ஓவியத்தை மாட்டுவது பற்றி இடம் பற்றி திரும்பவும் ஒரு முறை கலந்து ஆலோசிக்கப்பட்டது. எல்லோராலும் படம் பெரியவர் போல இருப்பதாக ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அனைத்துச் சிறுவர்களுக்குமே அந்தப் படம் என்னவோ பயத்தை உண்டு பண்ணியது. அமானுஷ்யம் பற்றிய பயம். சிறுவர்கள் அனைவருக்கும் அந்தப் படம் இருந்த இடத்தில் தனியே நிற்க சிறிது நேரம் அதை தொடர்ந்தாற்போல உற்றுப் பார்க்க முடியாது. அந்தப் பெரிய கூடத்தில் நான்கு பக்கச் சுவரின் தொடரில் வாசல் கதவிற்கு நேரே வீட்டின் பின்கட்டைப் பிரிக்கும் சுவரின் நடுவில் படம் மாட்டப்பட்டது. வாசலில் படி ஏறுவதிலிருந்து பின்கட்டு வரும்வரை பல நிலைப்படிகள் கடந்து வரும்வரை அந்த ஓவியம் வருபவரை கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கும்.

பகல் வானத்தை நோக்கி கண்மூடிக் கொண்டு கிடக்கும் போது இமைகளுக்குள் ஏற்படும் மிக மிருதுவான மென்மையான சமமான பரந்த சிவப்பு அந்தக் கூடத்தின் தரையில் இருக்கும், அதன் நடுவில் பெரிய தாமரைப்பூ மலர்ந்து இருக்கும். மலர்ந்த தாமரையில் நடனம் ஆடிக்கொண்டு இருக்கும் போது மிகத் திரளான மக்கள் நாற்புறமும் நின்று நடனத்தில் நளினத்தையும் இசையைன் இனிமையையும் எனது அழகையும் பாராட்டி வியப்பதாக கற்பித்து மகிழ்வேன்.

அந்தப் பெரிய காலியான கூடத்தில் அந்த நீள சதுர படம் மாட்டப்பட்டுவிட்ட பின் நாற்புறமும் சுழன்று முன் போல பாடிக்கொண்டு ஆட முடியாதவாறு போயிற்று, அந்தக் கூடத்தில் காலையில் மாலையில் வெயில் சுடர் பட்டு மாரிச்சன் தங்கமென மின்னி இளம் மனதில் குதூகலம் நிரம்பி வழிய வைக்கும். ஆனால் படம் மாட்டிய பின் கண் விழிக்க முதலில் படுவது ஜன்னல் தவிர பெரிதான படத்தின் நீள் சதுரம் கண் விழிக்கும் முன்பே பயப்படுத்தும் கூர்மை.

அந்தக்கூடத்தின் மங்கிய ஒளியில் மனம் மிரண்டு அம்மாவின் அருகில் இடம் தேடும். அம்மாவின் தொடல் தேவை ஏற்படும். “பயம்மா இருக்கும்மா.” “ச்சி என்ன பயம் தாத்தா பாரு நம்மோட இருக்கார் அவர் இருக்கற இடத்திலே பயம் அப்படீங்கற வார்த்தையே கிடையாது. தாத்தாவை நெனச்சுண்டே தூங்கு.” பயமே படத்தால்தான் என்று எப்படிப் புரிய வைப்பது ?

ஒருநாள் வயிற்று வலி, மருந்து கொடுத்த பின் தாத்தா படத்தின் முன் விபூதியும் இடப்பட்டது. அதுவே பின்னால் மருந்துக்கு முன்பும் பின்பும் செய்யும் சடங்காயிற்று. சில புரியாத வெளியாக முடியாத பிரச்சினைக்கு சத்யம் வாங்கிக் கொள்ள சாட்சியாயிற்று அந்தப் படம். சத்தியத்தின் காரணம் பொய்யின் பின் விளைவுகள் பற்றின பயம்தான். எது எப்படியோ மிகப் பெரிய அந்த அகலக் கூடத்தின் பிரதிபலிப்பாக எப்போதும் கூட்டம் கொண்ட விசேஷம் போன்ற வாசனையையும் அந்தப் படம் அதிகம் ஆக்கிக் காட்டியது.

தலைமையில் மாற்றம். தலைமை வேர் செயலிழந்து பக்க வேர்களில் பலம் அதிகமாயிற்று. மேடு பள்ளமற்ற சமமான மேல் தளம் சமமான தரை மிகச் சமமான சுவர்களின் இடையே சமமான கலர் கண்ணாடிச் சதுரங்கள் எல்லாம் இல்லாமல் ஆயிற்று. நிரந்தரம் என்று எண்ணி அதிக நேர யோசனைக்குப் பின் மாட்டப்பட்ட பெரிய நீள் சதுரமான அந்தப் படமும் கழற்றப்பட்டது. நிகழ்கால இருப்பிடத்தில் மல்லாந்து படுத்தாலும் தெரியும் சிறு கண்ணாடி வண்ணமற்று. சிறிய சதுரமாக வீட்டில் நடுவே வெளிச்சத்திற்காக தரையில் சிவப்புத்தான். ஆனால் இது செங்கல் சிவப்பு.

வீடு கூடம் என்ற வார்த்தைகளின் அர்த்தமே அகலமான என்பது இல்லாமல் அதன் அர்த்தமும் அகலமும் மிகக் குறுகியதாக ஆயிற்று. அந்த அகலமான நீள் சதுரப்படம் மாட்ட நிகழில் சுவர் இல்லாமல் போனது மட்டும் அல்லாமல் அதன் இருப்புக்கே இடம் இல்லாமல் போனது. மிகப் பெரிதாகத் தோற்றம் அளிக்கவாரம்பித்தது. படுக்க வைக்கவும் அகலமற்று நீட்டி மாட்டவும் சுவரற்று சாய்த்து வைக்கவும் இடமற்றுப் போயிற்று. வீட்டில் அது துருத்திக் கொண்டே நின்றது.

காலத்தின் அதிக நேரம் ஆட்கொண்டிருக்கும் உணர்வுகளான எரிச்சல் ஏழ்மையைப் பெரிதாக்கிக் காட்ட அந்த நீள் சதுரம் அடிக்க வடிகால் ஆயிற்று. அந்த நீள் சதுரத்தின் இடம் ஒவ்வொரு படியாக இறங்கி கடைசிக் கட்டுக்குச் சென்றது. அதற்கு இரண்டு கால்கள் பொருத்தப்பட்டன. தனிமைத்தேவை காரணமாகவும் அதற்கு ஒரு உபயோகம் கருதியும் அதை மறைப்பாகப் பயன்படுத்தத் தொடர்கினர்.

இவ்வளவில் அதன் துணிப் பரப்பில் பலதரப்பட்ட நீண்ட கீரல்கள் ஆங்காங்கே துளைகள் ஏற்பட்டு விட்டிருந்தன. கால்கள் நட்டுத் தடுப்பான பின்பும் துணியின் துளைகள் காரணமாக தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் மறுபடியும் காலுடன் கூசி எரிச்சலாக நின்றது.

பின் இருக்கும் நீர்த்தோட்டியில் அடிக்கடி தூசி நிறைந்து நீரை உபயோகிக்க முடியாமல் செய்தது காற்று. ஒரு சிறிய குருவி அதில் விழுந்து இறந்தது. காக்கைகள் அடிக்கடி திறந்த நீர்த்தொட்டியில் முங்கி நீர் அருந்தின. மீண்டும் நீள் சதுரப்படம் காலற்றதாயிற்று. தொட்டியின் நீரின் சுத்தத்தைப் பாதுகாக்கும் தடுப்பாக பறவைகளின் தாகத்தையும் தடுத்து குறுக்காக வைக்கப்பட்டது. ஓவியம் நீரைப் பார்த்து மூடப்பட்டிருக்கும் போது அதில் படும் நீர்த்திவலைகள் அதில் ஒட்டாமல் வெயில்படும்போது மின்னிக் கொண்டு இருக்கும். படத்தின் பின்புற வெள்ளைப் பகுதி நீரில் படுவதல் ஈரம் தாக்கி துணியின் நிறம் மாறுபட்டு பழுப்பாயிற்று.

நாளடைவில் துணி முற்றுமாய் கிழிந்துவிட அந்த நீள் சதுரப்படம் எதற்கும் உபயோகமற்று நீரில் ஊறி முகம் மாறி உடல் மாறி உளுத்துப் போன நிலையில் கட்டைகள் கழற்றப்பட்டு இந்த துணி அகற்றப்பட்டு தீக்கிரையாகிக் கரியாகின.

கணையாழி – அக்டோபர் 1990

பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.