விக்கி,கார்த்தி, நான், நாங்கள் மூவரும் தான் ஒன்றாக பள்ளிக்குச் செல்வது வழக்கம். அன்றைய நாள் பெரும்பாலும் விக்கியும்,கார்த்தியும் வரப் போவதில்லை என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் அன்று தான் கோவிந்தன் வாத்தியார் “முக்கோணவியல் சூத்திரங்களை” படித்து வரச் சொல்லியிருந்தார். எனவே இன்று வரப்போவதில்லை என சொல்லி இருந்தனர். ஆனால் வீட்டிலும் இருக்க மாட்டார்கள். பள்ளிக்குச் செல்வதாக சொல்லி விட்டு வாய்க்கால் வழியாக ஆற்றுக்குச் சென்று குளித்து விட்டு, மாலையானதும் வீட்டிற்கு திரும்புவதே திட்டம். என்னையும் துணைக்கு கூப்பிட்டார்கள். எனக்கு பயம் கொஞ்சம் அதிகம்.
நாங்கள் மூன்று பேரும் ஒன்பதாம் வகுப்பு வந்த புதிதில் மகிழ்ச்சியாக தான் இருந்தோம். அது எங்கள் பள்ளிக்கூடத்தில் ஒரு முக்கியமான நாள் பத்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை “அரைக்கால் டவுசர்” அணிந்து தான் வருவோம். ஆனால் ஒன்பதாம் வகுப்பு அப்படியல்ல கட்டாயம் “பேண்ட்” போட்டுத் தான் வர வேண்டும். எனவே பள்ளிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் நாங்கள் பேண்ட் போட்டு வந்த முதல் நாள் அது. அந்த முழுக்கால் டவுசரை அணிந்த போது ஏதோ பெரிய மனிதனாக உணரந்தது போல் இருந்தது. அதுவும் புது வாசனையுடன் அடர் நீல நிறம். ஆனால் அந்த சந்தோசம் இரண்டாவது பீரியடு வந்ததும் காணாமல் போனது. யார் எங்களுக்கு கணக்கு வாத்தியாராக வரக் கூடாது என நினைத்திருந்தோமோ அவரே வந்து “நான் தான் இனிமே உங்களுக்கு மேத்ஸ் எடுக்கப் போறேன்” என சொல்லிய போது தானாகவே கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது.
“டேய் என்னடா வழக்கமா கோவிந்த் வாத்தியாரு நைன்த்-சி க்கு தானடா போவாரு”…” இப்ப என்னடா நைன்த்-பி க்கு வந்துட்டாரு”என்றான் கார்த்தி.
“ஏன்டா நான் நைன்த்-சி ல தான் இருந்தேன், உங்க பேச்சை கேட்டு எங்கப்பாவ கூட்டு வந்து இந்த கிளாஸ் வந்தேன் பாரு” சிணுங்கினான் விக்கி.
“விடுங்கடா கரெக்டா படிச்சிட்டா எதும் செய்ய மாட்டாரு டா” என்றேன்.
“போடா வெண்ணை நீ படிப்ப…நாங்க படிக்கனும்ல டா” கார்த்தி கோவப்பட்டான்.
“அவ்ளோ தான்டா செத்தோம்” என்றான் விக்கி.
கோவிந்த் வாத்தியார் மிகவும் கண்டிப்பான பேர் வழி. வயதும் இளம் வயது. ஆளும் நல்ல ஆறடி உயரமாக இருப்பவர். கொஞ்சம் உடல் பருமன்.அவர் அருகில் நாங்கள் நிற்கிற போது உயரத்திலும்,உருவத்திலும் சிறு குச்சி போல தான் இருப்போம். கணக்கு எடுப்பதில் திறமைசாலி. அதனால் தானோ என்னவோ அவருடைய பாடத்தில் யாரும் பெயில் ஆகி விடக் கூடாது என்பார். அப்படி பெயிலாகி விட்டால் அவ்வளவு தான். முப்பத்தைந்து மதிப்பெண்ணிற்கு எத்தனை மார்க் குறைகிறது அத்தனை அடி உட்காருகிற இடத்தில் கிடைக்கும். அதற்காகவே எப்படியாவது படித்து பாஸ் ஆகிறவர்களும் உண்டு. அவர் சொல்கிற பாடங்களை எல்லாம் மறக்காமல் படித்து வர வேண்டும். அவர் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். அப்படி இல்லை எனில் அவரின் பிரம்புகள் எங்களின் பின்னழகை பதம் பார்த்து விடும். “அய்யோ அம்மா” என்றாலும் அதற்கு சேர்த்து ரெண்டு அடி விழும். நல்ல வேளையாக நாங்கள் படித்தது ஆண்கள் பள்ளி. இல்லையென்றால் பெண் பிள்ளைகளின் முன்னால் எங்களின் மானம் கப்பல் ஏறியிருக்கும். ஆரம்ப நாட்களில் கொஞ்சம் நன்றாகத் தான் போனது ஒன்பதாம் வகுப்பு. போக போக முதல் பருவத் தேர்வு, இரண்டாம் பருவத் தேர்வு, மூன்றாம் பருவத் தேர்வு, காலாண்டு என தேர்வுகள் நடக்க நடக்க அவரும் தன் கண்டிப்பை நடத்த துவங்கினார். எனக்கு பெரும்பாலும் கணக்கு சிக்கல் தான். மற்ற பாடங்களில் கூட எழுபதை தாண்டி விடுவேன். கணக்கில் ஐம்பதுலிருந்து அறுபது வரை தான் போகும். விக்கிக்கும், கார்த்திக்கும் கணக்கில் தேர்ச்சி ஆவதே சிரமமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பிரம்பு அவர்களை பதம் பார்த்தது. தேர்வினை தவிர்த்து பாடங்களில் வரும் “சூத்திரங்களை” கேட்டு வேற அடிக்கத் துவங்கினார். கடந்த இரு நாட்களாக அதில் நானும் உள்ளடக்கம் ஆகி விட்டேன். முக்கோணவியலின் சூத்திரங்கள் கடினமாக இருந்தது. வகுப்பில் ஓரிருவரை தவிர அனைவரும் முனங்கால் போட்டு அடி வாங்கினோம். இன்றும் சூத்திரம் கேட்பதாக சொல்லி விட்டு போனார். இதற்கு மேலும் அடி வாங்க முடியாது என்பதால் அவர்கள் திட்டம் போட்டு ஓடி விட்டார்கள்.
மணி 8.50 ஆனது அவர்கள் வரப்போவதில்லை என மெதுவாக நடக்கத் தொடங்கினேன். நாங்கள் படிப்பது கம்பத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆண்கள் உயர்நிலைப்பள்ளி. நடந்து போவதற்கு கிட்டதட்ட அரை மணி நேரம் ஆகும். வீட்டிலிருந்து நேராக கிளம்பினால் தியேட்டர் சந்தில் திரும்ப வேண்டும். பின்பு ஒரே இறக்கமான ரோடு. அதன் பின் போகிற வழியில் சாலையோரத்தின் இருபுறமும் சுடுகாடு இருக்கும். பள்ளி நேரம் தவிர மிச்சமுள்ள நாட்களில் ஆள் அரவமற்று காணப்படும். சில நேரங்களில் புதைத்த இடங்களில் மீண்டும் தோண்டுகிற பொழுது கிடைக்கும் மண்டையோட்டினை வெளியே எடுத்துப் போட்டிருப்பார்கள். கண்கள் ஏதும் இல்லாமல் “ஆ” என வாயைப் பிளந்தபடி கிடக்கும் அதனை பார்க்கவே மிகவும் பயமாக இருக்கும். கறிக்குழம்பு கொண்டு வருகிற நாட்களில் எல்லோர் வீட்டிலும் மறக்காமல் “கரிக்கட்டையும், மிளகாய் வத்தலும், இரும்பு ஆணியும்” வைத்து கொண்டு வருவது வழக்கம். அவ்வாறு செய்யாவிடில் சுடுகாட்டில் இருந்து “ஆவி வந்து கரிய திண்ணுட்டுப் போயிடும்டா” என அம்மா பயமுறுத்துவாள். சுடுகாட்டினைக் கடந்தவுடன் இடது புறம் திரும்புகிற சிறிய மேட்டில் “ஒத்தக்கடை” ஒன்று இருக்கும். அந்தப் பக்கம் இருக்கிற ஒரே ஒரு கடை என்பதால் ஒத்தக்கடையாகி விட்டது. அங்கு தான் பெரும்பாலும் கோவிந்தன் வாத்தியார் காலையும், மாலையும் நிற்பது வழக்கம். நான் போகிற போது அவர் இல்லை. மூச்சு வாங்க தோளில் பையை சுமந்தபடி பள்ளிக்குள் நுழைந்த போது மணி அடித்தது.
விக்கியும், கார்த்தியும் வழக்கமாக வரும் பாதையில் இருந்து மாறி பள்ளிக்கு பின்னால் உள்ள வாய்க்கால் பாதை வழியாக ஆற்றங்கரைக்கு போய் விட்டனர். பள்ளி உடையில் இருந்தால் ஆபத்து என்பதால் மாற்று துணியை தெளிவாக நேற்றே பைக்குள் வைத்தபடி வந்து மாற்றி விட்டனர். சிறிது நேரம் ஆற்றில் குளித்தனர். பின்பு அவர்கள் குளிக்கும் இடத்தை நோக்கி ஒரு கார் வந்தது. அந்தக் காரை விட்டு இறங்கியவரை பார்த்ததும் இருவருக்கும் அதிர்ச்சி ஆகி விட்டது. கோவிந்த் வாத்தியார் தான் இறங்கியிருக்கிறார். விக்கிக்கு நீர் சூடாக இருந்திருக்கிறது. கார்த்தியின் வேலை தான் அது. தப்பிக்கவும் முடியாது நேருக்கு நேராக ஏறுகிற கரையில் நிறகிறார். வேறு பாதையும் இல்லை.
“டேய் இவருக்கு பயந்து ஆத்துக்கு வந்தா இவரு என்னடா இங்க வந்து நிக்கிறாரு” என்றான் கார்த்தி.
“நிம்மதியா ஆத்துல குளிக்க கூட முடியாது போல டா” விக்கி புலம்பினான்.
“இப்ப என்னடா பண்றது”..” இங்கயும் சூத்திரம் கேட்பாராடா”
“பார்க்காத மாதிரி போய்டுவோம் டா” விக்கியின் ஆலோசனைக்கு ஏற்ப இருவரும் வழியின்றி கரையேறியுள்ளனர். முதலில் கவனிக்காமல் இருந்தவர். பின்பு “டேய் என்னடா இங்க ஸ்கூலுக்கு போல யா?” என கேட்டுள்ளார்.
“சார் அது வந்து”… கார்த்திக்கு சொல்லும் போதே நடுங்க ஆரம்பித்து விட்டது.
” ஏன்டா நடுங்குற….தண்ணி ரொம்ப ஜில்லுனு இருக்கா என்ன?”
“ஆமா சார்”என சொல்லி சமாளித்தான் விக்கி.
“சரி ஏன் ஸ்கூலுக்கு போல?”
“அது சார் ஒரு வாரம் வீட்ல தண்ணி வரல சார், அதான் துணி நெறய சேந்திருச்சுனு அம்மா கூட துவைக்க வந்தோம் சார்” என்றான் விக்கி.
“அவங்களை எங்கடா?”
“இப்ப தான் சார் போறாங்க..நாங்களும் கிளம்பிட்டோம் சார்” என சொல்லி கிளம்பும் போது.
“தம்பிகளா ஒரு ஹெல்ப் பா… கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க நாம காரை கழுவிட்டு போய்டுவோம்.. நானே ஊருக்குள்ள இறக்கி விடுறேன்” என்றதும். “சரிங்க சார்” என வேலையை தொடங்கி உள்ளனர். வாளியை எடுத்து கழுவ தொடங்கிய சிறிது நேரம் கழித்து கோவிந்த் வாத்தியார் தன்னுடைய சட்டைப் பையில் இருந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துள்ளார். இருவருக்கும் உச்சி வெயிலின் கிறக்கத்தோடு இதுவும் பெரிய கிறக்கமாக இருந்தது. சென்ற வாரம் தான் பத்தாவது படிக்கும் ஒருவனை ரோட்டில் சிகரெட் பிடிப்பதை பார்த்து பள்ளியில் வைத்து வெளுத்தார். கூடவே கொஞ்சம் அறிவுரைகளும். ஆச்சர்யமாக இருந்தது. இருவரையும் பார்த்தவர் “டேய் யாருகிட்டயும் சொல்லிடாதீங்க பா…சரியா” என்றவுடன். விக்கி “சொல்லமாட்டோம் சார் ஆனா நீங்க ஒண்ணு பண்ணனும்”
“என்னடா பண்ணனும்”
“எங்களை கணக்குல பாஸ் போடனும் சார், அப்புறம் இனிமே எங்ககிட்ட கேள்வியே கேட்க கூடாது சார்”
“அப்படி கேட்டா?”
“எல்லாருகிட்டயும் சொல்லிடுவோம் சார்”..என விக்கி சொல்ல ” டேய் ஏன்டா”… “விடுடா நமக்கு வேற வழி இல்ல இவரு கிட்ட நாம இப்படி பாஸானா தான் இல்லேனா நாம மறுபடியும் ஒன்பதாப்பு தான்டா படிக்கனும்”…கார்த்தியும் ” ஒத்துக்கொண்டான். வாத்தியார் சிறிது நேரம் யோசித்தவர் “சரிடா” ..”ஆனா இத யாருக்கும் சொல்ல கூடாது”என சொல்லி விட்டார். பின்பு ஆற்றிலிருந்து கிளம்பி விட்டனர்.மறுநாள் காலை இவற்றையெல்லாம் என்னிடம் சொல்லி விட்டு “நாங்க தப்பிச்சுட்டோம்ல” என்றனர்.
அன்று அவருக்கு வகுப்பு மதியம் முதல் பீரியடு வந்ததும் “சூத்திரம் படிச்சிட்டீங்களா?” என்றார். வழக்கமாக முதல் பெஞ்ச்சிலிருந்து தொடங்கி வரிசையாக கேட்டு வருவார். அன்றும் அப்படியே தொடர்ந்தது. பலரும் முழங்கால் போட்டபடி இருந்தோம். விக்கியிடம் ஏதும் கேட்க மாட்டார் என இருந்தேன். அவனிடம் வந்த போது
“ம்ம் செங்கோண முக்கோணத்தின் சைன் டீட்டா [sin] வின் மதிப்பு என்ன?” விக்கிக்கு ஈரல் குலையே நடுங்கியிருக்க வேண்டும். திருதிருவென முழித்தான். அடுத்து கார்த்தி “டேன் டீட்டா ஸ்இக்வல் டூ”…” என்ன தெரியலயா வந்து முட்டி போடுங்க” என்றவர். வரிசையாக
ஒவ்வொருவருக்கும் நான்கு அடிகள் குண்டியில் அடித்தார். வேகவேகமாக வந்ததும் பாட்டிலில் இருந்த தண்ணியைக் குடித்தோம். அப்படி குடித்தால் எரிச்சல் குறையும் என்பது நம்பிக்கை. விக்கியும், கார்த்தியும் வரும் போது தனியாக இருக்கச் சொன்னார். எல்லோரும் அடி வாங்கிய பின்பு அதுவரை உட்கார்ந்தபடி அடித்தவர். எழுந்த நின்று கிட்டத்தட்ட குருட்டுத்தனமாக பிரம்பினை வீசினார். அது அவர்களின் முதுகு,கை,கால், தொடை, தலை என சிக்குகிற இடமெல்லாம் அடி விழுந்தது. “சார் விட்ருங்க சார்… இனிமே படிச்சிருவோம் சார்… தப்பு செய்ய மாட்டோம் சார்” என அலறினர். எனக்கு ஏதோ போலிஸ் லாக்ப்பில் சிக்கிய கைதிகள் போல இருந்தது. “நாளைக்கு மட்டும் படிக்காம வாங்கடி தோலை உரிச்சிடுர்றேன்….பாஸ் போடனுமடா பாஸ்… முளைச்சி எலயே விடல பிளாக் மெயில்” என கத்தியபடி பாடம் நடத்தினார். “ரெண்டு பேரும் மொட்டி போட்டு கவனிங்க” என்றார்.
மறுநாள் இருவரும் பயத்துடன் பள்ளிக்கு வந்தனர். நேற்று முழுவதும் படித்ததால் தைரியம் ஏதோ இருந்தது. காலை மூன்றாவது பீரியடு வந்ததும் புத்தகம் வாங்கி சூத்திரம் கேட்கத் துவங்கினார். வரிசையாக கேள்வி வந்தது. “கொசிக்கன் டீட்டா ஸ்இக்வல் டூ?”
“ஒன் பை டேன் டீட்டா சார்”
“ம்ம் காட் டீட்டா ?”
“காஸ் டீட்டா பை சைன்டீட்டா சார்” என்றேன்.
“குட் உக்காரு” அடுத்ததாக விக்கி “கொசிக்கன் டீட்டா ரூட் த்ரி பை டூ வின் மதிப்பு என்ன?”…. கண்கள் கோழிமுட்டையாக உருண்டது. கார்த்தி எழுந்தான் “சீக்கன் ஸ்கொயர் டீட்டா ஈக்வல் டூ”…என்னைப் பார்த்தான்
அவரைப் பார்த்தான். வழக்கம் போல முட்டி போட வைத்து வெளுத்தார். ” இப்டி இருந்தா நைன்த் எப்டி பாசாவீங்க நாளைக்கு இருந்து எப்டி வேணாலும் கேட்பேன் ரெடியா இருங்க” என இருவரையும் மிரட்டி விட்டு போனார். அடுத்தடுத்த நாள் இப்படியே தொடர்ந்தது. அடி வாங்குவதும், அழுவதுமாக இருவருக்கும் நாட்கள் போனது.
பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பதில் சொல்லத் தொடங்கினர். அவர்கள் பதில் சொல்லிய நாட்களில் “வெ ரி குட்” என பாராட்டி சாக்லேட் வாங்கி தந்தார். மற்றவர்களின் தேர்வுத்தாளை விட அவர்களுடையதை ஸ்ட்ரிட்டாக திருத்தினார். அதற்காகவே கவனமாக எழுதினர். இருவரும் தாமதமாக வரும் நாட்களில் இவருடைய பைக்கில் ஏற்றி வந்தார். வகுப்பே ஆச்சர்யமாக பார்த்தது நானும் தான். ஆனாலும் வகுப்பில் கறார் தான். கொஞ்சம் கொஞ்சமாக படிக்கத் துவங்கினோம். விக்கியும், கார்த்தியும் பெயிலாவது குறைந்தது. முழுப்பரீட்சையும் எழுதி முடித்தோம்.
மே மாதம் தேர்வு முடிவுகள் வெளியானது. பள்ளியில் போய் மூவரும் பார்த்த போது அனைவரும் தேர்ச்சி ஆகியிருந்தோம். விக்கியும், கார்த்தியும் மகிழ்ச்சியாக இருந்தனர். “டேய் நாம பத்தாவது போய்ட்டோம் டா…. ஒன்பதாப்பு பாசாயிட்டோம் டா” என ஆற்றிற்கு குளிக்க கிளம்பினோம். போகிற வழியில் ஒத்தக்கடையில் மிட்டாய் வாங்கினோம். கடைக்கு உள்ளே சென்று மோர் வாங்கி குடித்துக் கொண்டிருந்த போது கோவிந்த் வாத்தியார் வந்தார். விக்கியும் ,கார்த்தியும் “டேய் அவரு போகட்டும் டா” என்றனர்.
“என்ன சார் இப்பலாம் கடைக்கே வர மாட்றீங்க?” என கடைக்காரர் கேட்டார்.
“வேலைணே வேற ஒன்னுமில்ல”
“இப்ப என்ன சார் ஸ்கூல் பக்கம்”
“பசங்களுக்கு ரிசல்ட் வந்திருக்கு அதான்”.
” இந்தாங்க சார் உங்க அயிட்டம் “கிங்ஸ்”
“இல்லணே வேணாம்”
“ஏன் சார்”
“நான் சிகரெட் பிடிக்குறத விட்டுட்டேன் ” என்றார்.
ஐ.முரளிதரன்.
கம்பம்
தேனி மாவட்டம்