சிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா 

சிறுகதை: காற்றினில் கரையும் கண்ணீர்த் துளிகள் – பா.பானுஸ்ரீ கார்த்திகா 

 

நாங்க போடற எச்சில் சோறு திங்கற கூலிக்கார பசங்க இப்ப எங்களையே எதித்துப் பேசறிங்களா” காவல் ஆய்வாளர் தேனப்பனின் வார்த்தைகள் தேளப்பனாய்க் கொட்டியது. 

“ஐயா பச்சப் புள்ளங்க ஒத்தப் புள்ளைய பெத்த அவகம்மா அழறதப் பாருங்க ஏழைங்கனா எங்களுக்கெல்லாம் நீதி கிடைக்கவே கிடைக்காதாங்கய்யா”, கூட்டத்திலிருந்து குரலுயர்த்திப் பேசிய சென்னானின் வார்த்தைகள் அவரின் செவிகளில் விழுந்ததாகத் தெரியவில்லை. 

காட்டுக்குப்பம் நகரமும், கிராமமும் ஒன்றையொன்று முகம் பார்க்கும் புறநகர். அடித்தட்டு மக்கள் அதிகமாய் வாழும் அவ்வூரில் பல கரும்புள்ளிகளை வைத்து பெரும்புள்ளியானவர் சுந்தரம் லாரி சர்வீஸ் உரிமையாளர் சுந்தரம். ஆற்று மணல் கடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. அவரின் லாரிகள் தமிழகம் முழுக்க சென்று கொண்டிருந்தன. அரசியல் பலமும் பணபலமும் ஒருங்கே கொண்டவர். அவரின் ஒரே தவப்புதல்வன் அரவிந்தன். அரவிந்தன் செய்யும் அக்கிரமங்கள் அனைத்தும் சுந்தரத்தின் பணத்தால் சரி செய்யப்பட பணத்தால் எதுவும் செய்யலாம் என நம்பியவன். நேற்று எட்டு வயதேயான ஜெயபாரதி என்ற சிறுமியைப் பாலியல் வன்புணர்வு செய்து அவளைக் கொன்றுவிட்டு அதை மறைக்க கல்குவாரியில் உள்ள பாறையிடுக்கில் மறைத்து வைத்தான்.

“யோவ் உங்கள்ல ஒருத்தன் மட்டும் உள்ள வாய்யா இன்ஸ்பெக்டர் ஐயா கூப்பிடுறாரு” சொன்ன கான்ஸ்டபிளின் முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடித்தது. அழுது கொண்டிருந்த சீக்கையன் அவன் மனைவி சீதா இருவரும் சென்னானைப் பார்க்க கைலி, பர்முடாஸ், கசங்கிய சட்டை என அவர்களைப் பார்த்ததும் தெரிந்தது அவர்கள்  அனைவரும் மிடில் கிளாஸ்க்கும் குறைவான பொருளாதாரம் கொண்டவர்கள் என்று. ஆனால் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நின்ற அவர்களின் தைரியத்தில் நாங்கள் யாருக்குமே குறைந்தவர்களல்ல என சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அங்கே மொத்தமாய்க் கூட்டத்திலிருந்த எட்டுப் பேரிடமும், ‘நான் உள்ள போய்ட்டு வரேன் நீங்க கம்முனு இருக்கோணும்’ என்று சென்னான் உள்ளே நுழைந்தார். 

உள்ளே குற்றம் செய்த அரவிந்தன் கால் மேல் காலிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தான். “அர்விந்த்! நீங்க உள்ள போங்க” என்ற ஆய்வாளர், “என்னய்யா பிரச்சனை பண்ண வந்திருக்கீங்களா. அதான் நான் சொல்றேன்ல புள்ளைக்கு நஷ்ட ஈடா அஞ்சுலட்ச ரூபாய் சுந்தரத்துக்கிட்ட வாங்கிக் குடுத்துடறேன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் வந்தாச்சு. அந்தப்புள்ள கல்லுக்குழில விழுந்து மூச்சுத்திணறித்தான் இறந்துச்சுனு. இனி எந்த கேஸ் போட்டாலும் எந்த கோர்ட் போனாலும் நிக்காது. பேசாம நீங்க பிரச்சினை பண்ணாம போங்க நா வாங்கித் தரேன்னு சொன்னது காலைல உங்க வீடு தேடி வரும். வேணும்னா உனக்கும் ஒரு இலட்சம் சேத்துத் தரச் சொல்றேன்”.

நடுங்கிப் போன சென்னான், “சார் எட்டு வயசுப் புள்ளைங்க…இப்படி நார்நாராக் கிழிச்சு, ஐயோ எப்படிக் கத்தி அழுதுருக்கும் அது. ஐயோ முடியலிங்க. நாங்க எல்லாம் ஏழைங்க கூழக் குடிச்சாலும் நேர்மையா வாழறவங்க. எங்களுக்கு பணம் முக்கியமில்ல. எங்களுக்கு நீதி வேணும். அந்த மணல் லாரி சுந்தரம் பையன் அரவிந்த் தான் அத்தனையும் பண்ணிருக்கான் அதுக்கு சாட்சி சொல்ல எங்காளுங்க தயாரா இருக்காங்க. நீங்க அவனுக்குப் பாதுகாப்பு கொடுக்காம அவன்மேல் கேஸ் எழுதுங்க சார்”. என்று கதறினார்.

 “யோவ் உன் சௌரியத்துக்கு எல்லாம் நாங்க கேஸ் எழுத முடியாது. கல்லுக்குழில தவறி விழுந்த குழந்தை மூச்சுத் திணறித்தான் இறந்திருக்கு” என்று சாதித்தார் தேனப்பன்.

அதிர்ந்துபோன சென்னான் உடனே ஆவேசமாக“இதையெல்லாம் கேட்டுட்டுப்போக நாங்க ஒண்ணும் படிக்காதவங்க இல்ல. எங்க வேணாலும் போய் போராடுவோம். இதே உங்க வீட்டில் நடந்திருந்தா இப்படித்தான் பேசுவீங்களா?” என்று துணிச்சலாகக் கேட்டார்.

இதை எதிர்பாராத தேனப்பன், முகத்தை இறுக்கிக்கொண்டு, “உங்களுக்கெல்லாம் படிப்பு வந்ததாலதான்யா இத்தன எழவும். யோவ் 304 இந்த ஆளக் கொஞ்சம் நம்ம பாணில விசாரிச்சு அனுப்பனும் லாக்அப்க்கு கூட்டிட்டு வாய்யா” என்று இரைந்தார்.

நேரம் கடந்து போய்க்கொண்டே இருந்தது. வெளியே இருந்த மக்கள் தவிப்பில் இருந்தனர். சென்னான் வெளியே வரவில்லை. பொறுமை இழந்த கூட்டத்தில் மெல்ல அச்சமும் பரவத் தொடங்கியது. சென்னானுக்கு என்ன ஆகியிருக்கும். இந்தப் பாவிகளை நம்பி அவரை மட்டும் தனியாக அனுப்பி விட்டோமே

“உள்ள போய் மூணு மணி நேரமாச்சு. மணி ஆறாகுது. நான் போய் என்னனு கேட்டுட்டு வர்ரேன்” என்றவாறு முருகன் உள்ளே சென்று அவசரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்த ரைட்டரிடம், “ சார் எங்க அண்ணன் உள்ள கூட்டிட்டுப் போனாங்க இன்னும் வெளில வரல” என்றான்.

கண்ணீர் | துவாமதி

“யாரு அந்தக் கொழந்த கேஸ்க்கு வந்தவரா அவரு அப்பவே வெளில போயிட்டாரே” என்றார் அவர்.

“சார் நாங்க வாசல்ல தான் உக்காந்திருக்கோம். அவரு வெளில வரலங்க” என்றான் முருகன் பதட்டத்துடன்.

“சொன்னா நம்ப மாட்டயா போய்யா வெளில போய் எங்கயாவது தேடிப்பாருங்க சீக்கிரம்” என்று முகத்தை நேரே பார்க்காமல் எந்திரத்தனமாகச் சொல்லிவிட்டுத் தனது வேலையில் இருந்தார் அவர்.

“சார் எங்க அண்ணன் என்ன ஆனார். சொல்லுங்க… சொல்லுங்க…” என்று முருகன்கேட்டுக் கொண்டிருந்த போதே வெளியே வந்த ஆய்வாளர் தேனப்பன் அரவிந்தனின் பல்ஸர் வண்டியை ஸ்டார்ட் செய்து அரவிந்தனை அமர்த்திக் கொண்டு அவரு அப்பவே போயிட்டாரே என்றவாறு அவ்விடம் விட்டு வெகமாக நகரத் தொடங்கினார்.

இப்போது வெளியிலிருந்த கூட்டமெல்லாம் ஜெயபாரதிக்காக போராடுவதை விட்டுவிட்டு சென்னானுக்காக போராடத் தொடங்கியது. 

“நியாயம் கேட்டு வந்த எங்கள, இப்படி அநியாயமா கொடுமைப்படுத்தறீங்களே, நீங்க நல்லாவே இருக்கமாட்டீங்க. எம்புள்ள எப்படித் துடிச்சாளோ அப்படி நீங்களும் ஒரு நாளுத் துடிச்சுப் போவீங்க”, வேதனையின் விளிம்பில் சாபமிடத் தொடங்கியிருந்தாள் சீதா

கவனித்துக் கொண்டிருந்த ஏட்டு காதர்பாய் கூட்டத்தினரைப் பார்த்து “என்னய்யா நீங்க அவ்வளவு பெரிய ஆளுகளா. மனசுல என்ன நினைச்சுட்டிருக்கீங்க. உங்களுக்கு யார்யா எஸ்.பி.ஆபிஸ் போற தைரியம் குடுத்தது. போங்கையா கலைஞ்சு” எனக் கத்திக் கொண்டே லத்தியோடு வந்தார்.  ஆனாலும், நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளால் அவர் முகமும் வேதனையை வெளிப்படுத்தியது.

ட்ராஃபிக்கில் ஆமையாய் நகர்ந்த பல்ஸர் ஆளரவமற்ற சாலையில் சிறுத்தையாய் சீறியது. 

ல்ஸரை ஓட்டிக் கொண்டிருந்த தேனப்பன் அரவிந்தனிடம், “தம்பி, இந்த மாதிரி எல்லாம் இனிமேல் பண்ணாதீங்க. ஏதோ நான் இருந்ததால் தப்பிச்சீங்க இல்லனா என்னாகுறது. சரி போஸ்ட்மார்ட்டம் மாத்தி எழுதுறதுக்கு பத்து லட்சமும், என் பேருல கிழக்குக் கடற்கரைச் சாலைல இருக்கு ஹெவன் எக்ஸல்லோல ஒரு பிளாட்டும் வாங்கித் தர்றதா அப்பா சொல்லிருக்காரு. அத நாளைக்கே பண்ணீருங்க”. என வாயெல்லாம் பல்லாக இருக்கையில், அரவிந்தன் அங்கிள்அங்கிள் எனக் கத்திக்கொண்டிருந்த போதுதான் அது நடந்து விட்டிருந்தது.

ஹாரன் அடித்தவாறே வேகமாக வந்த சுந்தரம் லாரி சர்வீஸ் மணல் லாரி அவர்மேல் மோதுவதற்கும் சரியாக இருந்தது. 

ஆ… எனக் கத்திய தேனப்பன் வெளியே தூக்கி வீசப்பட்டிருந்தார். 

கண்விழித்தபோது தேனப்பனுக்கு வலி உயிர் போவது போல் இருந்தது. ‘எனக்கு என்னாச்சு?’ என்றபடி படுத்திருந்த அவர் சற்றே மேலெழுந்து கீழே பார்த்தார். அவரின் இடதுகால் முட்டிக்குக் கீழே நீக்கப்பட்டு அவ்விடத்தில் பஞ்சு வைத்துக் கட்டப்பட்டிருந்தது. 

“அய்யோ… என்னாச்சு எனக்கு…?” 

உள்ளே கண்ணீரோடு வந்த தேனப்பனின் மனைவி பார்வதி, “ஏங்க ரோட்டுல ஆக்ஸிடன்ட்டாகி கிடந்த உங்கள இங்க யாரோ ஒரு நல்ல மனுசன்தான் கொண்டுவந்து சேர்த்தாரு. கடவுளாப் பார்த்துத்தான் அவரு அங்க அனுப்பி வச்சிருக்கணும். நீங்க இருந்த நிலைமைக்கு உயிர் பிழைப்பீங்கனு யாரும் சொல்லல. ஆனா அந்த மனுசன் தான், ஐயா கண்ணு முழிப்பார் நீங்க கவலப்படாதீங்கனு சொன்னார்ங்க. அவர்பேர்கூட… ம்ம்ம்… சீக்கையன்னு சொன்னார்ங்க”.

கேட்டதும் தேனப்பனுக்கு மீண்டும் கண்ணை இருட்டிக் கொண்டுவர மயங்கத் தொடங்கினார். 

அந்நேரம் வரவேற்பரையில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில முக்கியச் செய்தியை விவரித்துக் கொண்டிருந்தார் செய்தியாளர். “காட்டுக்குப்பம் கிராமத்தில் சிறுமி கல்குழியில் விழுந்த விபத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிறுமி தானாக விழவில்லை எனவும் அவள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டதும் தற்போது தெரிய வந்துள்ளது. அதில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அரவிந்தன் நேற்று நடந்த சாலைவிபத்தில் இறந்து போனதால், அவரின் குற்றத்தை மறைக்க உதவிய அரவிந்தனின் தந்தை மணல்லாரி சுந்தரம் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்றவாளிக்கு ஆதரவாக செயல்பட்ட காட்டுக்குப்பம் காவல்துறை ஆய்வாளர் தேனப்பன் மிது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டள்ள நிலையில் பொய்யான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அளித்த மருத்துவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்  எனத் தெரிகிறது” என்ற செய்தி ஓடிக் கொண்டிருந்தது. 

ஜெயபாரதிக்கு அஞ்சலி செலுத்த காட்டுக்குப்பம் கிராமமே கூடியிருந்தது. அவ்வேளையில் இவ்வழக்கில் குற்றவாளிகள் தண்டனை பெற உதவிய ஏட்டு காதர்பாய் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சத்தியக்குமார் உட்பட பல நேர்மையான காவலர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்-பட்டது. 

அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும்னு சொல்வாங்க. இப்ப எல்லாம் அப்பப்ப தண்டனை கிடைச்சிடுது என்ற பீட்டரின் வார்த்தை அருகிலிருந்த ராமனின் காதுக்குள் நுழைந்து காற்றில் கரையத் தொடங்கியது.

************

 

ஆசிரியர் பா.பானுஸ்ரீகார்த்திகா,

263/1,

பாரதியார் தெரு,

திருப்பூர் சாலை, 

காங்கேயம்,

திருப்பூர் (மா) – 638701.

Show 2 Comments

2 Comments

  1. Kalidas

    நிகழ்கால நிகழ்வுகளின் தொகுப்பாய் வெளிவந்திருக்கும் சிறுகதை…மக்களின் எண்ணத.தின் வெளிப்பாட்டை அப்படியே கொண்டு வந்திருக்கிறார் .கதைஞர்.கதையை வாசிக்கையில் இப்படி குற்றவாளிகள் இபரபடியேனும் தண்டிக்கப்பட மாட்டார்களா எனும் எண்ணம் எழுந்து அடங்குகிறது… நிகழ்காலம் பேசும் சிறப்பான சிறுகதை.

  2. ரா.ராஜேந்திரன் . அவிநாசி

    மதிப்பு மிகுந்த கண்ணீர்த் துளிகள்.. நீதியின் கண்ணீர் துளி.. வளர்க தங்களின் சிறுகதை திறன்… வாழ்க வளமுடன் வாழ்த்துக்களுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *