சிறுகதை: தலைப்பெழுத்து – பா.அசோக்குமார்

சிறுகதை: தலைப்பெழுத்து – பா.அசோக்குமார்



படுத்த கொஞ்ச நேரத்திலேயே உறங்கும் பழக்கம் என்றுமே அவளுக்கு வாய்த்ததில்லை. இன்றும் அப்படியே உறங்காமல் கண்கள் கொட்டகொட்ட விழித்திருக்க ஏதேதோ எண்ணம் சுருள அந்த வீட்டின் தகர மேற்கூரையையே பார்த்துக் கொண்டிருந்தாள் பால்நிலா.
இன்று தூக்கம் வராததற்கு எட்டு மணி சன் செய்திகளில் அவள் கேட்ட ஒரு செய்தியே முக்கிய காரணமாகும். அந்த செய்தியை கேட்டதிலிருந்தே மனதில் ஏதோ ஒரு இனம்புரியாத உணர்வில் தத்தளிக்க தொடங்கினாள்‌. அந்த மோன மனநிலையிலேயே இன்றிரவு அவள் அரைகுறையாகவே சாப்பிட்டாள். “இந்த செய்தி உண்மைதானா? உண்மையாக இருந்தால் அதை உடனே தான் ஏன் செய்யக் கூடாது” என்று சிந்தித்து சிந்தித்தே தூங்காமல் துவண்டாள்.
எரிந்து கொண்டிருந்த ஜீரோ வாட்ஸ் பல்ப் வெளிச்சத்தில் தனது இரு மருங்கிலும் படுத்திருக்கும் தன் இரு குழந்தைகளை பார்த்தாள். மின்னொளியில் ஜொலித்த முகங்களைக் கண்டு தன்னையறியாமலே கண்ணீர் சிந்த தொடங்கினாள். “நான் செய்தது பாவம் என்றால் அது என்னை மட்டும் பாதிக்காமல் எனக்கு பிறந்த காரணத்திற்காக இந்தக் குழந்தைகளையும் பாதிக்கிறதே” என்று குமைந்தாள். தான் வணங்கும் கடவுளும் இந்த இருளை போலவே இருண்டு போய்தான் இருப்பாரோ என்று நினைத்தவள் தன்னைத்தானே நொந்து கொள்ள ஆரம்பித்தாள்.
“அவனை நான் ஏன் சந்தித்திருக்க வேண்டும். அப்படியே சந்தித்தாலும் அவனிடம் நான் ஏன் காதல் மயக்கம் கொண்டிருக்க வேண்டும். காதலோடு போனால் போகிறது என்று நில்லாமல் எதை நம்பி அவனுக்கு நான் என் கழுத்தை நீட்டினேன்? இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது விதி வலியது என்று தானே எண்ண வேண்டியுள்ளது” என்று நினைத்தபோது முகத்தில் புன்னகை பூக்கத் தொடங்கியது. இன்றைய ரணகளத்திலும் அன்றைய காதல் கிளுகிளுப்பு கண்முன் ஆட ஞாபகத் தித்திப்பு உண்டானது போல.
“வீட்டிற்கு மூத்த பெண்ணாக பிறந்தது தான் என் தவறா? ” என்று விம்மத் தொடங்கினாள் அவள். இந்த ஊர்ல வீட்டில் பிறக்கும் தலப் பிள்ளைக்கு “பால்” என்று தான் பெயர் வைக்கணுமாம். இந்த ஊரில் குடி கொண்டிருக்கும் பால்வண்ணநாதர் என்ற சுயம்பு கடவுளின் அருள்வாக்கு என்று பாட்டி கூறியதை நினைத்து வருந்தினாள் அவள். அதற்காக அவளுக்கு வைத்த பெயர் தான் இந்த பால்நிலா.
‘நிலா’ என்று பெயர் வைத்ததால் தான் என்னவோ நிலாவைப் போலவே தன் வாழ்க்கையும் தேய்ந்து வளர்வதாகவும் வளர்ந்து தேய்வதுமாகவும் மாறி மாறி வருகிறதோ என்று நிந்தனை செய்தாள் தன் பாட்டியை.
அப்பனும் இல்ல; தனக்கு கீழே இருக்கக்கூடிய இரண்டு தங்கைகள், தம்பி என நால்வரையும் காப்பாற்ற அம்மா எடுத்த முடிவு சரியோ தவறோ? அம்மாவைப் பொறுத்த வரை அது சரியாகவே இருந்தாலும் அவளுக்கு ஏனோ விவரம் தெரிந்தது முதற்கொண்டே ,அது நாளும் வேப்பெண்ணெயை குடிப்பது போன்ற அருவருப்பாகவே இருந்தது.
வீட்டிற்கு வந்து அந்த ஆள் அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போதெல்லாம் எங்கேயாவது வெளியே ஓடிப் போய் விடலாமா என்று மருவியவள் அவளே. அதெல்லாம் ஏனோ இன்றும் அவள் கண்முன் வந்து கவலையளிப்பதாகவே இருக்கிறது.
வயதுக்கு வந்த பெண்ணாக அவள் இருந்தபோதிலும் அவங்கம்மா பிள்ளைகளுக்கு தெரியாது என்று நினைத்துக் கோண்டு அவரோடு வாழ்ந்து வந்தார்கள் எனலாம். ஊரெல்லாம் அதை அவள் காதுபட பேசும்போதும், அவளுடன் கூட படிக்கும் பிள்ளைகளும் கிண்டல் செய்யும்போதும் எப்படி அதை நம்பாமல் இருக்க முடியும்?
‘கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்’ என்று இந்த விஷயத்தில் அவளால் இருக்க இயலவில்லை என்பதே உண்மை. இதனால் தன் அம்மாவிடம் அவள் சண்டை போடாத நாளே இல்லை எனலாம். அப்போதும் அவள் அம்மா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்ததன் மர்மம் தனது இந்த சூழலுக்குப் பின்னர் தான் இவளுக்கு புரிந்ததோ என்னவோ?
இதனால்தான் என்னவோ அவளது சமுதாயத்தில் அவளை யாருமே பெண் கேட்டு வரவில்லை போலும். ஏனோ தெரியவில்லை 18 வயது கடந்த நிலையிலும் அவளுக்கு திருமணம் கைகூடவில்லை. அந்த ஊரில் வயதுக்கு வந்தது முதல் 15 வயதானாலே திருமணம் செய்து வைப்பது வழக்கமானதாகவே இருந்தது. இந்த நிலையில்தான் பத்தாம் வகுப்புடன் நின்றவள் தையல் கற்க விரும்பி பக்கத்து ஊருக்கு தினமும் பஸ்ஸில் சென்று வரத் தொடங்கினாள். நன்கு தொழிலைக் கற்று ஒரு தையல் மிஷினை வாங்கிப் போட்டு தைக்க ஆரம்பிக்கும் கனவில் மிதந்தாள் அவள். அதன்மூலம் தம்பி தங்கைகளை காப்பாற்றலாம்; நன்கு படிக்க வைக்கலாம் என்று ஆகாயத்தில் பந்தல் போடும் கனவில் இருந்தபோதுதான் எமகாதகனாக அவன் வந்து சேர்ந்தான் இவள் வாழ்வில்.
படிக்கும் காலம் முதலே எத்தனையோ பேரிடம் அவள் நன்கு பேசி பழகி வந்த போதிலும் தையல் வகுப்பிற்கு செல்லும் தனியார் பேருந்தின் ஓட்டுநரான அவனிடம் மையல் கொண்டாள் இந்த மாது. போவதும் வருவதும் ஒரே பேருந்தாக அமைந்தது எதார்த்தமான ஒன்றா என்று இப்போது நினைத்து பார்த்தாலும் அது உண்மையெனவே புலனாகிறது. நாள்தோறும் அவனை பார்க்கும் வாய்ப்பு இருந்ததாலோ என்னவோ அவனுடன் நெருங்கிப்பழகத் தொடங்கினாள். வீட்டில் கிடைக்காத ஏதோவோர் ஈர்ப்பு அங்கே கிடைக்க, அவனை காந்தமாக பற்றிக் கொண்டாள் இந்த பேதை.


‘இளங்கன்று பயமறியாது ‘ என்பது போல, யாரோ கொடுத்த தூண்டுதலின் பேரில் யாருக்கும் தெரியாமல் அவனை திருமணம் செய்துகொண்டு வாழத் தொடங்கினாள். திருமணம் செய்து வைக்க வழி இல்லாத காரணத்தால் இவள் வீட்டிலும் பெரியதாக எந்தவித எதிர்ப்புமில்லை. அவனுக்கும் அம்மா இல்லாத காரணத்தால் அவனது தந்தையும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. அவருக்கு கைச்செலவுக்கும் குடி செலவுக்கும் மகன் காசு கொடுத்தால் போதுமானதாகவே இருந்தது. அதனால் பெரியதாக பிரச்சனை ஒன்றும் வரவில்லை.
இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது அவர்களது குடும்ப வாழ்க்கை. எல்லாக் குடும்பத்திலும் நடக்கக்கூடிய சண்டை சச்சரவுகளும் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவர்களின் வாழ்விலும் அவ்வப்போது தலைகாட்டியது என்னவோ உண்மைதான். இருந்தாலும் ஏனோ இயல்பாக சென்ற அவர்களது வாழ்வில் வந்திறங்கியது ஒரு இடி. பேருந்தில் நடந்த சிறுவிபத்து ரூபத்தில் வந்த இடி பேரிடியாக விழுந்து அவள் வாழ்வை உருக்குலையச் செய்யும் என்று அவள் கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. பஸ்ஸை எதிரில் வந்த லாரியுடன் மோதிய விபத்தில் எழுந்த பிரச்சினை காரணமாக இவனது வேலை தற்காலிகமாக பறிபோனது என்பது துரதிர்ஷடமே. எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படவில்லை என்ற நிலையிலும் இந்த தண்டனை அவனைக் கொஞ்சம் தடுமாறவே வைத்துவிட்டது.
இருந்த ஒரு வேலையும் பறிபோன விரக்தியில் தத்தளிக்கத் தொடங்கினான். கையிருப்பும் கரையத் தொடங்கியது. மாமியார் வீட்டிலும் கொடுத்து உதவும் வழியில்லை. கண்ணே, மணியே என்று கொஞ்சிக் கொண்டிருந்தவன், கையில் பணமில்லை என்ற போது வசைமொழி பாட ஆரம்பித்தான். வேறுவழியின்றி வேலை தேடி வருவதாக மலையாள தேசம் பக்கம் சென்றவன் மாயமாகிப் போனதே மாபெரும் விந்தை.
தொடர்பு கொள்ள தொலைபேசி வசதி இல்லாத நிலையில், இருக்கிறானா இல்லையா என்ற ஐயப்பாட்டில் தத்தளித்து கொண்டிருந்தவளுக்கு அவனுடன் வேலைக்கு சென்றவர்கள் பின்னர் வந்த தெரிவித்த தகவல் பேரதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. ஏதோ ஒரு மலையாள குட்டியுடன் வாசம் செய்ய தொடங்கிவிட்டானாம் அந்த பாவிப்பயல். மயக்கியது அவளா இல்லை அவனா என்பது தேவையில்லாத ஒன்றாக இருந்தபோதிலும் அவளால் இதனை ஜீரணிக்கவே முடியவில்லை. பால்நிலா நைந்து போனாள்.
காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து அவனை கண்டுபிடித்து இனி ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்தாள் அவள். எப்பொழுது ஒருவன் தன்னை உதறிச் சென்றானோ அப்பொழுதே அவன் செத்துவிட்டதாக தீர்மானித்தாள் அவள். மேலும் அந்த அளவுக்கு அவளுக்கு உதவி செய்வதற்கு குடும்பத்திலும் ஒருவருமில்லை. தம்பி அப்போதுதான் பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பதினொன்றாம் வகுப்பு சேர காத்திருக்கிறான். மற்ற இரண்டு தங்கைகளும் பருவமடைந்து திருமணத்திற்கு காத்திருக்கிறார்கள். கையில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு நீதிமன்ற படியேற அவளுக்கு விருப்பமில்லை. ஏதாவது சொத்துபத்து இருந்தாலாவது வழக்கு போட்டு பிரயோஜனப்படும். குடியிருக்கும் வீடும் வாடகை வீடு. எதற்கும் வழியில்லாத போது ஏன் தண்டச்செலவு என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் பால்நிலா.
வீட்டு வாடகையை எப்படி கொடுப்பது? பிள்ளைகளுக்கு கஞ்சி ஊற்றுவதே கஷ்டமாக இருக்கும்போது மாமனுக்கும் சேர்த்து ஆக்கி போட முடியுமா?என்ன செய்வது என்று தெரியாமல் தவியாய் தவித்துப் போனாள் பால்நிலா. அதுவரை அவன் வீட்டில் வாழ்ந்து வந்தவள் குடிகார மாமனாரை நம்பி இருக்க பிடிக்காமல் தற்சமயம் தாயின் ஊருக்கே திரும்பி வந்துவிட்டாள். யாருக்கும் பாரமாக இருக்க விரும்பாமல் தனி வீடு எடுத்து இந்த வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறாள்.
இப்படியே கடந்தகால நினைவுகளில் சஞ்சரித்துக் கிடந்தவள் சுயநினைவு வந்தவளாக எழுந்து, ” பழைய சாக்கடையை நினைத்தால் நாறத்தானே செய்யும்’ என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டாள். கண்டத நினைச்சு தூங்காமல் கிடந்தால் காலையில வேலை செய்ய முடியாமல் போகுமே என்று எண்ணியவளாய் அந்த வீட்டின் குளியல் அறைக்குச் சென்று சிறுநீர் கழித்துவிட்டு திரும்பினாள். பொம்பள பிள்ளை பெரிய மனுஷி ஆவதற்குள் கழிப்பறை உள்ள வீடாக பார்த்து செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அதிக வாடகைக்கு எங்கே போவது என்று யோசித்தவாறே எதிரிலிருந்த சமையல்கட்டிற்கு போனாள்.
ஒரு ஆள் கால்நீட்டி கூட படுக்க இயலாத அகலம் கொண்ட ஒரு நீள அறையில் சிறு தடுப்பே குளியலறை. எதிரில் சமையல்கட்டு. உள்ளே இதைவிட கொஞ்சம் ஒரு பெரிய அறை. அதற்குள் தான் பீரோ, கட்டில் படுக்கை எல்லாமே. கையை மேலே தூக்கினால் தகரத்தைத் தொட்டு விளையாடலாம். சீலிங் பேன் போட்டால் யாராவது உயரமானவர்கள் வந்தால் மண்டையை காக்க மன்றாடத்தான் வேண்டும். உடனே பேனை ஆப் பண்ண வேண்டும். கோடைகாலத்தில் தான் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியாது.
வீட்டை மாற்றுவது குறித்து யோசித்தவளாக பானையிலிருந்து ஒரு செம்பு நிறைய தண்ணீரை மோந்து மடக்கு மடக்கென்று குடித்தாள். தனது பழைய நினைவுகளையும் மனதிற்குள் திருப்பிவிட்டு மல்லாக்கப் படுத்து உறங்கத் தொடங்கினாள் பால் நிலா. தண்ணீர் கோபத்தை மட்டுமல்ல; வாட்டத்தையும் தணிக்கும்போல….
வழக்கம்போல் காலையில் எழுந்து அன்றாட பணிகளை முடித்துவிட்டு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேலைக்குச் செல்ல கிளம்பினாள். மதிய உணவை வயர் கூடையில் எடுத்துக்கொண்டு பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தாள். அரும்பு மீசை துளிர்க்கும் வாலிபன் முதல் மீசை நரைத்தும் ஆசை துளிர்க்கும் கிழடுகள் வரை ஏக்கப் பெருமூச்சு விடும் வாலிப வனப்பு நிறைந்தவளே இந்தப் பால் நிலா. பேருந்து நிறுத்தம் வரும் வரை அவளை கடந்து செல்லும் எந்தவொரு ஆடவனும் அவளை ஏறிட்டு பார்க்காமல் சென்றதில்லை. அப்படி சென்றால் அவனுக்கு ஏதோ ஒரு குறை இருக்கிறதென்று தான் அர்த்தம்‌.
இத்தனை அழகுமிக்க இந்த பால் நிலாவை விட்டு ஓடிப்போன இவளது கணவனை திட்டாதவர் ஒருவரும் இல்லை எனலாம். அவன் எதற்காக போனானோ ? யாரறிவார் அதை. அழகு ஒன்று மட்டுமே குடும்பம் நடத்த போதுமானதாகிவிடுமா? அந்த சூட்சமத்தை அறிந்தவர் யாருமுண்டோ இந்த அவனியிலே.
பேருந்தில் ஏறி அமர்ந்தவள் மனதில் மீண்டும் நேற்றிரவு செய்தியில் பார்த்த தகவலே கண்முன் நிழலாடியது. “என்ன செய்யலாம்? செய்யலாமா? வேண்டாமா? செய்வதில் என்ன தப்பிருக்கப் போகுது. அரசாங்கமே சொல்லும்போது தயக்கம் என்ன வேண்டிக் கெடக்கு ?” என்று தனக்குத்தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள் பால்நிலா.


தன் கணவன் ஓடிப்போன பின்னர் அவள் அடைந்த துயரங்களும் கஷ்டங்களும் வேதனைகளும் எண்ணிலடங்காதவை. அவையெல்லாம் அவள் கண்முன் வந்து வந்து சென்றன. சபல ஆண்களின் கேலிப் பேச்சுகளும் அவர்களின் மோசமான அணுகுமுறைகளும் அவளை அடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட தகிடுதத்த முயற்சிகள் என அவளது சிந்தனைகள் யாவும் பேருந்தின் பின்னால் செல்லும் சாலையோர மரங்களைப் போல் நீண்டு கொண்டே சென்றன. அவற்றையெல்லாம் நினைத்து பார்க்க பார்க்க ஒருபுறம் சிரிப்பை வரவழைப்பதாக அவை இருந்தாலும் மறுபுறம் ஏனோ மனதை கசக்கிப் பிழிவதாகவே இருந்தது.
ஒற்றை வருமானத்தை வைத்துக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்ப்பதையே வைராக்கியமாக கொண்டு வாழ்ந்து வரும் பால் நிலா அடையும் அவலங்களும் கஷ்டங்களும் கணக்கிலடங்காதவை.ஒருசில நாட்களின் இரவில் அவளுக்கு உண்டாகும் தாபங்களும் அதனால் அவளுள் மேலிடும் கோபங்களும் துயரத்தை உண்டாக்கும் வண்ணமே இருந்து வருகிறது. எங்கே தன் தாயைப் போலவே தானும் ஆகிவிடுவோமோ என்ற பயம் உள்ளூர உண்டாகிக் கொண்டே வருகிறது. இப்படியே போனால் தன் பிள்ளைகளை நல்லமுறையில் கரை சேர்க்க முடியுமா என்ற ஏக்கம் ஒருபுறம் என்று நாளும் அல்லல்படும் வாழ்வையே வாழ்ந்து வருகிறாள் இந்த பால் நிலா.
இப்படி தான்படும் துயரங்களை எல்லாம் நினைத்துப் பார்க்க பார்க்க வழிகின்ற கண்ணீரைத் துடைக்க மனமின்றியே பயணித்தாள். எதிர்த் திசையில் வீசும் பேருந்தின் ஜன்னல் காற்று அவற்றையெல்லாம் காய வைத்து ஆற்றுப்படுவத்துவதாக இருந்தது. தென்றல் காற்று தெம்பூட்டும் காற்றாக மாறியதோ என்னவோ…
கண்ணீரின் காயங்கள் ஆறும். மனதின் காயங்கள் ஆறுமா என்று சிந்திக்கும்போதே அவள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. பேருந்தை விட்டு இறங்கி அலுவலகத்தை அடைந்து தன் பணியை கவனிக்கத் தொடங்கினாள் பால் நிலா.
மகளிர் சுய உதவிக் குழுக்களை நிர்வகிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தான் அவள் வேலை செய்கிறாள். ஏதோ சிறு குடும்பம் நடத்த போதுமானதாகவே இந்த வருமானம் இருந்து வருகிறது. இந்த வேலை கூட அவளது அம்மாவின் அந்தரங்க வீட்டுக்காரரின் சிபாரிசில் கிடைத்தது தான். முதலில் தயங்கினாலும் தனது நிலையின் யதார்த்தத்தை உணர்ந்து சரியென்று ஒப்புக்கொண்டாள். இன்றும் அவளைப் பொறுத்தவரையில் அவர் வேப்பங்காய்தான்.
இந்த வேலையில் அப்படியொன்றும் பெரிய நெருக்கடி ஏதுமில்லாமல் இருந்ததே அவளுக்கு ஒரு ஆறுதலாக இருந்தது. குழுக்களுக்கு அனுப்ப வேண்டிய பணப்பட்டுவாடா குறித்த வேலையை இன்று முடித்தாக வேண்டும் என்ற முனைப்பில் மும்முரமாக பணி செய்தாள் பால்நிலா. வேலையில் முழு ஈடுபாட்டுடன் இருந்த போதிலும் ஏனோ அவள் மனம் இன்று அமைதியை தழுவாமல் ஆற்றாவொணா துயர நிலையிலேயே தள்ளாடிக் கொண்டே இருந்தது.
வேலை சீக்கிரமே முடிந்து விட்டதால் மேனேஜரிடம் அனுமதி வாங்கி 3 மணிக்கே கிளம்பிவிட்டாள் பால்நிலா. அந்தி சாய நேரமிருந்ததால் அவளது மனதின் கொந்தளிப்பை போலவே வெயிலும் சுட்டெரித்துக் கொண்டே இருந்தது. இயற்கையும் எண்ணமும் ஒன்றுபோல இருக்க ஒரு திடமான முடிவு எடுத்தவளாய் வந்த பேருந்தில் ஏறி இருக்கை இல்லாதபோதிலும் கைப்பிடியை இறுகப் பற்றி பயணித்தாள் பால்நிலா.
பேருந்தை விட்டு இறங்கியதும் தன் வீட்டிற்கு செல்லும் வழக்கமான வழியில் திரும்பாமல் தன் பிள்ளைகள் படிக்கும் பள்ளி அமைந்துள்ள கிழக்குத் தெரு நோக்கி நடக்கத் தொடங்கினாள் பால்நிலா.சாலையின் இருபுறங்களிலும் இருந்தவர்கள் ” என்றுமில்லாத அதிசயமாக இந்நேரத்தில் இவள் ஏன் இந்தப் பக்கம் போகிறாள் ” என்று பேசுவது இவளுக்கு ஓரளவு கேட்கத்தான் செய்தது.
பள்ளிக்கு எதிர் திசையில் அமைந்துள்ள பால்வண்ணநாதர் கோவிலைப் பார்த்தபோது ஏனோ அவளுக்கு இன்று வணங்கத் தோன்றவில்லை. தன் மூத்த மகனுக்கும் பால்கணேசன் என்ற பெயரைத் தான் வைத்துள்ளாள் இந்த பால்நிலா. சாலையைக் கடந்து பள்ளிக்கூட வாசலில் நுழையும் போது மிட்டாய்க்கார பாட்டி , ” என்னடி திடீரென இப்ப வந்திருக்க? யாருக்கு என்னாச்சு? ” என்று அக்கறையாக கேட்டாள்.
“சும்மா தான் ஆத்தா, பிள்ளைகள பார்க்க வந்தேன்” என்று விருட்டென்று கூறிக் கொண்டே நடந்தாள்.
பள்ளி தலைமை ஆசிரியை வழக்கம்போல் அவளை இன்முகத்தோடு வரவேற்றார். ஏற்கனவே பலமுறை பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திற்கு எல்லாம் கலந்துகொண்டு தன் கருத்துக்களை தைரியமாக சொல்பவள் இந்த பால் நிலா. இயல்பாகவே ஆண் துணை இல்லாத பெண்களுக்கு இந்த இனம் புரியாத தைரியம் வந்து விடுவது உலக இயல்பு தானே. தான் சந்திக்கும் பிரச்சினைகளும் சவால்களும் இந்த பெண்களை இரும்பாக்கி வைராக்கிய மிக்கவர்களாக மாற்றிவிடுகிறது போல.
“என்ன பால்நிலா? என்ன விஷயம் இப்படி திடீர்னு வந்து இருக்க?” என்று தலைமையாசிரியர் கேட்டார்.
“ஒன்னும் இல்லைங்க மேடம். ஒரு விஷயம் நேத்து செய்தியில் கேட்டேன். அது உண்மையா அப்படின்னு தெரிஞ்சிட்டு போலாம்னு வந்தேன் டீச்சர்” என்றாள் சற்று கூடுதல் கவனத்துடன்‌.
என்ன செய்தியாக இருக்கும் என்று ஒன்றும் புரியாமல் தலைமையாசிரியரே தடுமாறித்தான் போனார்.
பால் நிலா இப்பொழுது மிக இயல்பாக பேசத் தொடங்கினாள். “அது சரியான தகவல் தான் என்று நினைக்கிறேன் டீச்சர். அப்படியிருந்தால் அதை செய்யலாம் என்று முடிவெடுத்துவிட்டேன் டீச்சர். இருந்தாலும் நீங்க சரிணு சொன்னா செய்துடுவேன் டீச்சர்” என்றாள் பால்நிலா‌.
“என்ன விஷயம் என்று சொல்லுமா? நீ எதை பற்றி சொல்றேனு எனக்கு உடனேயே புரிய மாட்டேங்குது” என்று தலைமையாசிரியர் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
“நம்ம முதல்வர், என்னைய மாதிரி கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் தங்களோட குழந்தைகளுக்கு ஏற்கனவே இருக்கிற அப்பாவோட இன்ஷியலை எடுத்துட்டு அம்மாவின் இன்ஷியலை போட்டுக் கொள்ளலாம்னு ஒரு சட்டம் போட்டு இருக்காங்கலாமே… அது உண்மையா டீச்சர்?” என்று கேட்டாள் பால் நிலா.
தலைமையாசிரியர் அப்படியே ஒரு நிமிடம் உறைந்து போனார் என்றே கூறலாம்.
என்றாலும் சற்று சுதாரித்துக் கொண்டு, “உண்மைதான் பால்நிலா. ஆனால் அதற்கான அரசாணை இன்னும் வரவில்லை. நீ என்ன நினைத்துள்ளாய்? ” என்று வினவினார்.


“என்னய விட்டுவிட்டு ஓடிப் போயிட்டான் அந்த எழவு எடுத்தவன். என் பிள்ளைகள நான் தான் கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். பெரிய ஆளா ஆக்கணும் படாதபாடுபடுகிறேன். உங்களுக்கே நல்லா தெரியும்ல டீச்சர். அப்படி இருக்கும்போது எதுக்கு தேவையில்லாமல் அவன் பெயர் …. வேணாம்னு நினைக்கிறேன் டீச்சர்” என்று திடகாத்திரமாகவே கூறினாள் பால்நிலா.
அரசுப் பள்ளியானதால் அதுவரை கேட்டுக் கொண்டிருந்த குழந்தைகளின் பேரிரைச்சல் ஒலி மறைந்து எங்கும் நிசப்தம் நிகழ்வதாகவே தலைமையாசிரியருக்கு ஒருகணம் தோன்றியது.
இதைக் கேட்டவுடன் தலைமை ஆசிரியர் புல்லரித்துப் போனார். சொல்வதற்கு வார்த்தையே வாயிலிருந்து வரவில்லை. பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு பெண், என்னவொரு துணிச்சலான முடிவை எடுத்து வந்து அரசாங்கம் அறிவித்த உடனே அதை செயல்படுத்த நினைத்துள்ளாள் என்று உள்ளார மகிழ்ந்த தலைமை ஆசிரியரின் முகத்திலும் புன்னகை அரும்பத் தொடங்கியது..
பால் நிலாவை பாராட்டும் தொனியில், “வெரி குட்! நீ சொல்றது சரிதான்மா. நிச்சயமா பண்ணலாம். ஒரு லெட்டர் மட்டும் இப்போதைக்கு நீ எழுதி கொடுத்துட்டு போ. அரசாணை வந்தவுடன் நானே மாற்றிவிடுகிறேன்” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே இருவரின் கண்களிலும் கண்ணீர் தளும்பியது.
“தைரியமான பொண்ணுமா..நீ. அழக்கூடாது. உன்ன நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்குமா” என்று நம்பிக்கையூட்டிக் கொண்டே கடிதம் எழுத உதவினார் தலைமையாசிரியர்.
கடிதம் எழுதித் தந்துவிட்டு சிரித்த முகத்துடன் கிளம்ப எத்தனித்த பால் நிலாவை ஒரு நிமிடம் என்று கூறி அமர்த்தினார் தலைமையாசிரியர்.
அருகிலிருந்த ஒரு மாணவியை அழைத்து மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் அவளின் குழந்தைகளை அழைத்து வரச்சொன்னார்.
அவர்கள் வந்தவுடன் தங்களது அம்மாவான பால்நிலாவைப் பார்த்துவிட்டு ஒரு நிமிடம் அதிசயித்துப் போனார்கள். அந்த ஆச்சரியம் மறையும் முன்னரே தலைமை ஆசிரியர் அவர்களிடம் “பார்த்துக்கொள்ளுங்கள். உங்க அம்மாதான் உங்களுக்கு எல்லாமே. அவங்களை எப்பொழுதும் கண்கலங்காமல் நீங்க வச்சு பார்த்துக்கணும். அதுக்கு நீங்க நல்லா படிச்சு முன்னேறவேண்டும்” என்று கூறினார்கள்.
அந்த இரு குழந்தைகளும் தலைமையாசிரியர் என்ன சொல்கிறார்கள் என்று புரியாமலேயே மலங்க மலங்க பார்த்துக்கொண்டிருந்தனர். பிள்ளைகளிடம் சொல்லிக் கொண்டு பால்நிலா அந்த அறையை விட்டு வெளியேறினாள் கண்ணீர்த் துளிகளுடன்.
பாரதி கண்ட புதுமைப் பெண்ணை பார்த்த பூரிப்பில் தலைமையாசிரியர் அப்படியே தன்னுடைய இருக்கையில் கண்ணை மூடி அமர்ந்திருந்தவாரே கூறிக் கொண்டார்.
” கையெழுத்து தலையெழுத்தை நிர்ணயிக்கிறதோ இல்லையோ இந்த தலைப்பெழுத்து நிச்சயம் நல்லவிதமாக நிர்ணயிக்கும்”
பா.அசோக்குமார்.
சத்தியமங்கலம்.



Show 3 Comments

3 Comments

  1. கார்த்திக் மலர்

    விழிப்புணர்வு அருமை

    • ASHOKKUMAR.P

      மிக்க நன்றி

  2. Ramesh

    மாற்றம் ஒன்றே மாறாதது இந்த தலைப்பெழுத்தின் மூலம் பெண்களின் தலையெழுத்து மாறட்டும் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *