“ஆடும் குதிரை“ (Aadum Kuthirai) எனும் தலைப்பிலுள்ள உலக செவ்விலக்கிய சிறுகதைகள் தொகுப்பில் சார்த்தரின் “சுவர்” எனும் சிறுகதை இடம் பெற்றுள்ளது. இந்த தொகுப்பை நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. என்.கே.மகாலிங்கம் என்பவர் மொழிபெயர்த்திருக்கிறார். இலங்கை தமிழ் சொற்கள் ஆங்காங்கே விரவியிருக்கின்றன. மற்றபடி நல்ல மொழிபெயர்ப்பு.
சுவர்- ழான் பால் சார்த்தர்
ஒரு நாட்டில் (ஸ்பெயின் என்று ஊகிக்க முடிகிறது) பாசிஸ்ட் அரசாங்கம் அரசியல் ரீதியான எதிர்ப்பாளர்களை அல்லது அவ்வாறு சந்தேகப்படுபவர்களை கைது செய்து விசாரணை ஏதும் இன்று சுட்டுக் கொல்கிறார்கள். அப்படி கைது செய்யப்பட்டவர்களில் எபியேற்றோ என்பவன் தன் நண்பனைக் காட்டிக் கொடுக்க மறுக்கிறான். மறுநாள் மரண தண்டனை என்கிறார்கள். அவனுடன் இன்னும் இரண்டு பேரும் ஒரு நிலவறையில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். வயதில் இளையவன் யுவான் மிகுந்த பய உணர்வோடும் தான் சாக விரும்பவில்லை என்றும் கதறுகிறான். இரண்டாமவன் ரொம் . அவனும் பயம் கொள்கிறான். ஆனால் வெளிக்காட்டாமல் இருக்க முயற்சிக்கிறான். எபியேற்றோ மட்டும் சாவை பற்றி கவலைப்படாமல் இருக்கிறான். மறுநாள் தண்டனையை நிறைவேற்ற முதல் இரண்டு பேரை கூட்டி செல்கிறார்கள்.
எபியெற்றோவிடம் அவன் நண்பன் கிறிஸ் இருக்குமிடத்தை கூறினால் விட்டு விடுவதாக கூறுகிறார்கள்.. முதலில் மறுக்கும் அவன் அவர்களை கேலி செய்யும் விதமாக அவன் நண்பன் சுடுகாட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறான் என்று கூறுகிறான். உண்மையில் அவன் அவனுடைய மைத்துனர் வீட்டில் ஒளிந்திருப்பது இவனுக்கு தெரியும். கதையில் ஒரு திருப்பமாக கிறிஸ் மைத்துனர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு சுடுகாட்டில் ஒளிகிறான். போலீஸ் அவனை பிடித்து விடுகிறது.
கதையில் அரசாங்கம் எதிர்ப்பாளர்களை எவ்வாறு சுவருக்கு பக்கத்தில் நிற்க வைத்து சுடுவார்கள், உருவம் உருக்குலைய வேண்டுமென்பதற்காக வாயிலும் கண்ணிலும் சுடுவது, வெடிமருந்துகள் இல்லையென்றால் ட்ராக்குகளை எரிக் கொல்வது, தண்டனைக்கு முந்திய இரவில் ஒரு மருத்துவரை அனுப்பி அவர்கள் எவ்வாறு மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள் என்று பார்ப்பது போன்ற கொடூரமான நடைமுறைகள் விவரிக்கப்படுகின்றன.
ஒரு மருத்துவமனையில் இருந்த நோயாளிகளை அப்புறப்படுத்திவிட்டு அதை சிறைச்சாலையாக மாற்றியிருந்தனர். இவர்களை அடைத்து வைத்திருந்த நிலவறை நிலக்கரி கொட்டி வைக்கும் இடம். இரண்டு மூன்று ஓட்டைகள் மட்டுமே உண்டு. அதுவும் சரியாக மூடப்படாமல் மழை நீர் உள்ளே புகுந்து ஈரமாக இருக்கிறது. இவர்களது கோட்டை கழற்றி விட்டு வெறும் மேலாடை மட்டும் அனுமதித்திருந்தனர். குளிராலும் பயத்தாலும் நடுங்குகின்றனர். ஒருவன் பயத்தால் ஆடையிலேயே மூத்திரம் பெய்து விடுகிறான். ஆனால் எபியேற்றோவின் அசாதாரண மன உறுதி குறிப்பிடத்தகுந்தது. அவனுடைய மன உணர்வுகள் பலவிதமாக இருக்கின்றன. அரசு அதிகாரிகளை அவன் நகைக்கும் விதமாகவே பார்க்கிறான். ஆனால் அவனுக்கும் லேசான பயம் வருகிறது. மறுநாள் தன்னை இழுத்துப் போகும்போது அவர்களிடம் கெஞ்சுவது போல் கனவு காண்கிறான். உடனே விழித்துக் கொண்டு தான் ஏதாவது தூக்கத்தில் குழறியிருப்போமோ என்று நினைக்கிறான். தன்னுடைய பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்துக் கொள்கிறான். வேலையில்லாமல் இருந்தது, பல நாள் சாப்பிடாமல் பசியோடு இருந்தது, இரவுகளை பெஞ்சுகளில் கழித்தது;’ஆனால் நான் சாக விரும்பவில்லை; மகிழ்ச்சியை தேடி, பெண்களை தேடி, சுதந்திரத்தை தேடி ஓடி இருக்கிறேன்’என்று கூறுகிறான்.
அவன் பகத் சிங் போன்றவனோ அல்லது சேகுவாரா போன்றவனோ இல்லை. ஆனால் தன்னைவிட தன் நண்பன் கிறிஸ் சமுதாயத்திற்கு , நாட்டிற்கு முக்கியமானவன் என்பதை உணர்ந்து அவனை காட்டிக் கொடுக்காமல் இருக்கிறான்.
அந்த மூன்று பேருடன் நாமும் அந்த நிலவறைக்குள் இருப்பது போன்ற உணர்வை சார்த்தர் சிறப்பாக செய்திருக்கிறார்.
‘ஆகாயம் நன்றாகவே இருந்தது. இருட்டு மூலையில் வெளிச்சம் விழவில்லை. என் தலையை உயர்த்த வேண்டியதுதான். அங்கிருந்து வட விண்மீன் குழுக்களை பார்த்து விடலாம். முந்தி இருந்ததை போல் அல்ல. இப்போது எனது துறவிமட சிறையிலிருந்து, பெரிய ஆகாய துண்டை பார்க்க முடிந்தது. ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு வித்தியாசமான நினைவை தந்தது. காலையில், ஆகாயம் கடுமையான நீல நிறமாக இருக்கையில் அட்லாண்டிக் சமுத்திரத்தின் கரைகளை நினைத்தேன்……. ‘
விசாரணை கேலிக்கூத்தாக நடப்பதை இப்படி விவரிக்கிறார்..

‘ கைதிகளை ஒவ்வொருவராக மேசைக்கருகே கூட்டி வந்தனர். பெயர், தொழில் ஆகியவற்றை அதிகாரிகள் நால்வரும் கேட்டனர். அதன்மேல் அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை.அல்லது அங்கொரு கேள்வியும் இங்கொரு கேள்வியாக சும்மா கேட்டார்கள். ‘வெடிமருந்து நாச வேலைகளில் உங்களுக்கு தொடர்பிருக்கிறதா? 9ஆம் தேதி நீ எங்கே இருந்தாய்?என்ன செய்து கொண்டிருந்தாய்?’பதிலை அவர்கள் கவனிக்கவில்லை.’ மறுநாள் மூன்று பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட மூன்று பெரும் எதோ ஒரு வகையில் ஸ்பெயினில் இயங்கிக் கொண்டிருந்த அராஜக (anarchist?) இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குறிப்பு, நீங்கள் பபாசிஸ்ட்களா? உங்களுக்கு மதகுரு தேவை இல்லையா? போன்ற கேள்விகள் அன்றய ஸ்பெயின் அரசியல் நிலையை சுட்டிக்காட்டுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேலாக சார்த்தர் பற்றிய குறிப்புரையில் 1968இல் பிரான்சில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு பெற்றதால் அவரைக் கைது செய்த போது அதிபர் டி கால் “ நாம் வால்ட்டரை கைது செய்வதில்லை “ என்று கூறியதை மேற்கோள் காட்டியிருந்தார்கள். சார்த்தரை பிரெஞ்சு தத்துவவாதி வால்ட்டருடன் ஒப்பிட்டது மட்டுமல்லாமல் பிரெஞ்சு சமூகம் சிந்தனாவாதிகளை எவ்வளவு உயர்வாக கருதியது என்று புரிந்து கொள்ள முடிகிறது. இங்கு போல் “அர்பன் நக்சலைட்டுகள்” என்று பழித்து சிறையில் தள்ளுவதில்லை போலும்.
எழுதியவர் :
இரா.இரமணன்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.