சிறுகதை: வைகுண்ட ஏகாதசி – பா.அசோக்குமார்

 சிறுகதை: வைகுண்ட ஏகாதசி – பா.அசோக்குமார்

தினமும் காலையில் எழுந்தவுடன் காலண்டரில் தேதியை கிழிப்பதையே முதல் வேலையாக செய்து கொண்டிருந்தான் சென்றாயன். “நீயெல்லாம் என்னத்த படிச்சு கிழிச்ச?” அப்படினு யாரும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக இருக்குமோ என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவன் அன்றாடம் இதனை செய்து வருவது இரண்டு முக்கிய காரணங்களுக்காக மட்டுமே.

தினமும்  அதில் அச்சடிக்கப்பட்டுள்ள  பழமொழி மற்றும் பொன்மொழி போன்ற வாசகங்களை  படித்துப் பார்த்து ரசிப்பது அவனது அன்றாட பொழுதுபோக்காக இருக்கிறது. ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அதனை ஒரு பழைய டைரியில் எழுதி வைத்து அவ்வப்போது படிக்கும் பழக்கத்தையும் அவன் பெற்றிருந்தது கூடுதல் சிறப்பு தானே.

மற்றொரு காரணம் என்னவென்று பார்த்தால் அன்றைய நல்லநேரம், ராகுகாலம், எமகண்டம் போன்றவற்றை பார்ப்பதே ஆகும்.  அதற்கு ஒரு முக்கியமான காரணமொன்றும் இருந்தது.

ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவனுடைய ஆசிரியை ஒருவர், ஒருநாள் ராகு காலத்தை பற்றிய ஒரு தகவலைக் கூறினார்கள். அது அவன் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டது.

“ராகு காலத்தில் எந்தவொரு ஒரு நல்ல காரியத்தையும் செய்யக் கூடாது என்பார்கள். அப்படித்தான் என் பையன் சொல்லியும் நான் கேட்காமல் ஒரு நாளு, புடலங்காய் விதையை அந்த நேரத்துல நட்டு வச்சுட்டுட்டேன். அந்த  புடலங்காய்  காய்க்கவே இல்ல” என்று சொன்னார்கள். அதை சொன்னதோடு மட்டும் விட்டிருந்தால் கூட பரவாயில்லை. அடுத்து அவர்கள் சொன்ன சமாச்சாரம் என்னவென்றால், “ராகு காலத்தை ஈஸியா நாம காலண்டரை பார்க்காமலே கண்டுபிடிக்க ஒரு வழியிருக்கு” என்றார். இதைக் கேட்டவுடனே எல்லாருக்குமே ஆச்சரியமாக இருந்தது.  “ராகுகாலம், தினமும் ஒன்றரை மணிநேரம் தான் இருக்கும். அதுவும் ஒவ்வொரு நாளும் வேறவேற நேரத்தில் இருக்கும்.

ஏழு முப்பது முதல் ஒன்பது மணி வரை, ஒன்பது மணி முதல் பத்து முப்பது வரை, பத்து முப்பது முதல் பன்னிரண்டு வரை என பயணித்து நான்கு முப்பது முதல் ஆறு மணி வரை என நிறைவடையும்” என்றார். “இது என்ன கிழமைக்கு எந்த நேரம் என்று கண்டுபிடிப்பதற்கு   ஒரு சூத்திரம் இருக்கு” என்றார். “கணக்கு டீச்சர் இங்கும் சூத்திரம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்களே” என்று மனத்திற்குள் எண்ணியவாறே சிரித்தனர் மாணவர்கள்.

“தினமும் சற்று வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது ஞாயமே” என்று ராகம் போட்டு பாடிக் காட்டினார் ஆசிரியர்.

” இதுல ‘தி’னா திங்கள், ‘ச’னா சனி.  திங்கட்கிழமை ஏழு முப்பது முதல் ஒன்பது. இதேபோல் ஞாயிற்றுக்கிழமை நான்கு முப்பது முதல் ஆறு மணி என இருக்கும்‌. இது உண்மையா பொய்யா என்று  நீங்க சந்தேகப்பட்டால், உங்க வீட்ல போயி காலண்டர எடுத்து செக் பண்ணி பாத்துக்குங்க” என்றார் ஆசிரியை. இதை கேட்ட உடனேயே ஒரு நோட்டில் இதை எழுதி வைத்துக் கொண்டான் சென்றாயன். உடனே அதை அப்படியே மனப்பாடம் பண்ணி சொல்லிச் சொல்லி பார்த்துக் கொண்டான். “தினமும் சற்று வெளியே புறப்பட்டு விளையாட செல்வது ஞாயமே” என்று திரும்பத் திரும்ப சொல்லி பார்த்து மனப்பாடமே பண்ணிட்டான்‌. அன்றைக்கு ஆரம்பித்த பழக்கம் தினமும்  “இன்னைக்கு ராகுகாலம் சரியா இருக்கா?” என்று சரிபார்க்க ஆரம்பித்தான். இந்த ராகு காலத்தை மட்டும் பார்த்துக்கொண்டிருந்தவன் திடீரென்று ஆராய்ச்சி மனப்பான்மையில் இறங்கிவிட்டான். இதே மாதிரி இந்த நல்லநேரம் எமகண்டத்தையும் எப்படி ஈஸியா கண்டுபிடிக்கிறது? இதற்கு ஒரு சூத்திரத்தைக் கண்டுபிடிப்போம். அப்படியென்று அதைப் பற்றிய ஆராய்ச்சியில் அவன் இறங்க ஆரம்பித்தான். அந்த ஆராய்ச்சி தோல்வியில் முடிந்ததா இல்லை மறந்து தான் போனதா என்று தெரியவில்லை. ஆனாலும் இன்று வரை காலையில் எழுந்து  காலண்டரை கிழிக்கிற வேலையை மட்டும் செய்து கோண்டு தான் இருக்கிறான். அப்படி இன்றைக்கு காலையில் எழுந்து காலண்டரை கிழித்த போது அவன் கண்ணில் எதார்த்தமாகப்பட்டது வைகுண்ட ஏகாதசி. இதை பார்த்த உடனேயே அவனுக்கு ஒரு சந்தேகம் துளிர்விட்டது. அதென்ன வைகுண்ட ஏகாதசி. இத்தனை நாளும் அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, பிரதோஷம் என்று தான் படித்திருக்கிறோம். இதென்ன  வைகுண்ட ஏகாதசி? என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அப்படியே சிந்தித்தவாறே கதவில்லாத நிலை வழியாக அடுத்த அறையில் கிழக்குப் பக்கமிருந்த அடுப்படி மேடையில் இருந்த செம்பை எடுத்தான்.

நுழைந்த நிலை வழியே திரும்பி இடதுபுறமிருந்த குளியலறையை ஒட்டி இருந்த தண்ணீர்த் தொட்டியில் இருந்த நீரில் செம்பைக் கழுவிவிட்டு மூன்றே எட்டில் வாசல்படியில் இறங்க ஆரம்பித்தான்.

வாசலில் மாட்டுச் சணத்தைக் கரைத்துக் கொண்டிருந்த அவனது அம்மா வள்ளியிடம் “வைகுண்ட ஏகாதசி என்றால் என்னம்மா? ” என்றான். “ஏன்டா.. அதுவொரு விசேஷம்டா.. நீ போய் முதல்ல பால வாங்கிட்டு வா” என்றாள்‌.

வீட்டிற்குள் இருந்தவரை அளவோடு இருந்த குளிர் இப்பொழுது அதிகமாக இருப்பது போல் தெரிந்தது. தெருவின் நுழைவில் நான்கு ஐந்து பேர் குந்த வைத்து கூத காய்ந்து கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் அங்கே சென்று நின்றுவிட்டு கதகதப்பாக போகலாமா? என்று யோசித்தவன் பால் வாங்க நேரமாகிவிடும் என்று  வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

பொதுவாக இடது புறத்தில் தான் செல்லவேண்டும் என்பதற்காக சாலையை கடக்க முயன்ற போது சைக்கிளில் கிடா மீசையுடன் மாயாண்டி அண்ணன் சென்றார். அவரது சைக்கிள் கேரியரில் ஒரு பெரிய தூக்குச் சட்டி கட்டியிருந்தது. அதை பார்த்தவுடன் சட்டிக்குள் நிச்சயம் சோறு தான் இருக்கும். தோட்டத்தில் பாத்தி கட்ட கிளம்பிவிட்டார் என்று நினைத்துக்கொண்டே சாலையைக் கடந்தான்.

பொதுவாக சாலையில் செல்லும் பொழுது ஏதேனும் படித்த  ஒரு பாடத்தின் கேள்வி பதில்களைச் சொல்லிப் பார்த்துக் கொண்டே செல்வதுதான் அவனது வழக்கம். இதுகூட அவனுடன் படித்துவந்த அவனது நண்பனான முத்துப்பாண்டியனின் வழிகாட்டுதலே ஆகும். என்றும் அப்படி சொல்லிப் பார்த்துக் கொண்டே செல்பவன் மூளைக்குள்  இன்று வைகுண்ட ஏகாதசி வந்து குடியமர்ந்து விட்டது.

“யாரிடம் இதை கேட்பது? வைகுண்ட ஏகாதசி அப்படினா என்ன? இவ்வளவு நாளும் ஏகாதசி அப்படினா என்னன்னு தெரிஞ்சுக்காமலே இருந்துட்டோமே! வைகுண்டம்னா என்ன? குண்டா அப்படின்னா பெரிய சட்டி. வைகுண்டம் என்னவா இருக்கும்?” என்று பலவாறாக சிந்தித்தவாறே சென்றுகொண்டிருந்தான். இடையில் குறுக்கிட்ட பாலத்தை கடந்து செல்லும்போது அந்த ஓடையில் தண்ணீரே இல்லாமல் வற்றிப்போய் வெறும் மணல் மட்டும் இருப்பதை  பார்த்தவாறு நடந்தான். “இதில் தண்ணி வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அப்படியே கருப்பட்டியை கரச்சுவிட்டாப்புல.. வேடிக்கையா இருக்கும்ல” என்று கடந்தகால நினைவுகளைச் சிந்தித்தவாறே நடக்கலானான்.

அந்த பால் பண்ணைக்குள் அவன் நுழைந்தபோது அப்போதுதான் பால் ஊற்றுவதற்கு மணியண்ணன் வந்திருந்தார். மீசையை நன்கு மழித்து வழுக்கைத் தலையுடன் இருந்த ரவியண்ணன் அவரிடமிருந்த சிறிய பால் கேனிலிருந்து பாலை ஒரு லிட்டர் படியில் அளந்து வாங்கி  பெரிய கேனில் ஊற்றிக் கொண்டே இருந்தார்.  “கொஞ்சம் வழிய விடு மாப்ள” என்று ரவியண்ணன் கூற, மணி கொஞ்சமாக கேனை சாய்த்தார்.  கடைசியாக ஒரு சிறிய கண்ணாடி குடுவையில்  சிறிது பாலை ஊற்றி அதில் பால்மணியை வைத்து அளத்து பார்த்துவிட்டு,  “என்ன இன்னைக்கு அளவு கொஞ்சம் கம்மியா காட்டுதே” என்று வினவினார். அதற்கு வியர்த்து வழிந்த முகத்தை துடைத்துக் கொண்டே மணி, “மாட்டிடம் தான் போய் கேட்கணும்” என்று சிரித்துக்கொண்டே கூறினார். “என்ன மாப்ள.. நக்கலா பேச ஆரம்பிச்சிட்டியா.. அளவு கம்மியானா பால் வாங்க மாட்டேன். பாத்துக்கோ. அப்புறம் என்னயெல்லாம் குத்தம் சொல்லக் கூடாது” என்று அதட்டும் தொனியில் கூறினார் ரவியண்ணன்.

“நான் ஒண்ணும் தப்பா சொல்லல மாமா… எப்பவும் போல கறந்த பால சூடு மாறாம கொண்டு வந்துருக்கேன் மாமா.. என்ன போய் நீங்க இப்படி சொல்லலாமா?” என்று கூறிக் கொண்டே பால்கணக்குச் சீட்டை நீட்டினான் மணி.  அதை வாங்கி தேதியை எழுதி பக்கத்தில் எட்டு(8) என்று போட்டுவிட்டு கொஞ்சம் தள்ளி  கையொப்பமிட்டார் ரவி. மாலையில் எழுதுவதற்கான இடம் காலியாக இருந்தது. அதன் பிறகு பால் வாங்க நின்றிருந்த ஒவ்வொருவருக்கும் எவ்வளவு என்று கேட்டவாறு வரிசையாக பாலூற்றிக் கொடுத்தார் ரவியண்ணன். சென்றாயன் செம்பை நீட்டும்போது ” பெரிய வாய் வச்ச செம்பா கொண்டு வரலாமிலடா. டெய்லி உனக்கு சொல்லணுமா?” என்று  அதட்டிக் கொண்டே பால் ஊற்றினார். படியிலிருந்து பால் கொஞ்சம் கூட வழியவே இல்லை.  “எங்கம்மா இததான் கொடுக்கிறாங்கண்ணே” என்று சொல்லிக்கொண்டே தன் கையிலிருந்த பாக்கெட் சைஸ் பால் கணக்கு நோட்டை நீட்டினான் சென்றாயன்.

பால் வாங்கிக் கொண்டு மீண்டும் சாலையின் இடதுபுறமாகவே நடந்துவர தொடங்கினான். இப்பொழுதும் வைகுண்ட ஏகாதசியே அவனது மூளை முழுவதும் வியாபித்திருந்தது.

வீட்டை நெருங்கி வரும் வேளையில் சாலையின் இடதுபுறத்தில் தொத்தன் தாத்தா ஒரு ஆட்டின் கால்களை மடக்கி பிடித்துக் கொள்ள ஈஸ்வரன் அண்ணன் கத்தியால் அதன் கழுத்தை அறுத்து கொண்டிருந்ததைப் பார்த்தான். கிண்ணத்தில் உப்பு போட்டு வைத்திருந்த பாத்திரத்தில்

ரத்தத்தை பிடித்துக் கொண்டிருந்ததைக் கண்டு ரசித்துக் கொண்டே நின்றான். ரத்தம் சிறுதுளி கூட வீணாகவில்லை. ஆட்டை தூக்கி தொங்கவிட்டு தோலை உரிக்கும் வரை வேடிக்கை பார்க்கலாமா என்ற யோசித்தான். டீ போட லேட்டானா அம்மா திட்டுவாங்க என்று எண்ணியவாறு அவசரமாக நடையைக்கட்டினான் சென்றாயன்.

நாளை வைகுண்ட ஏகாதசி: சொர்க்க வாசல் ...
இவன் வீட்டுத் தெருவிற்குள் நுழையும் போது அவனது தங்கை காவ்யா வாசலை கூட்டிக் கொண்டு இருந்தாள். இவன் வருவதை பார்த்தவுடன் அவள் கூட்டாமல் விளக்கமாற்றை ஓரமாக வைத்து நின்றாள். இவன் அவளிடம் சென்று, “வைகுண்ட ஏகாதிசினா என்னனு தெரியுமா?” என்றான். அப்படி கேட்ட உடனே, “அது… வந்து.. அப்படின்னா எனக்கு என்ன தெரியும்? நானே அம்மாகிட்ட லேட்டாயிடுச்சுனு திட்டு வாங்கிட்டு கூட்டி கிட்டு இருக்கேன். அந்த பக்கம் போ” என்று சொல்லிக்கொண்டே அவள் வாசலை பெருக்க ஆரம்பித்தாள். அவன் வாசப்படியில்  ஏறும்போது அவனம்மா பானையில் இருந்த பழைய தண்ணியை ஐந்து படிகள் முழுவதும் ஊற்றி வாசல்படியை கழுவிக்கொண்டே தண்ணீர் எடுக்க தெருக்குழாயை நோக்கி விரைந்தாள்.

அப்போது அவனது அப்பா பெருமாள் கழுவிய  தன் முகத்தை துடைத்து விட்டு கண்ணாடியை பார்த்து தனது குருவிக்கூடு தலையை சீவிக் கொண்டு இருந்தார். அவருக்கு ஆறு முப்பது மணிக்குள் அவரது  அன்றாட வேலை தொடங்கிவிடும். பலசரக்குக் கடையை திறக்கும் அவசரத்தில் அவர் இருப்பது தெரிந்தது.

அதற்குள் பானையில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தாள் வள்ளி. “டேய், சென்றாயா.. மண்ணெண்ணெய் ஸ்டவ் அடுப்பை பற்றவை” என்று கூறிக்கொண்டே பிடித்து வந்த  தண்ணீரை தண்ணீர்த்தொட்டியில் ஊற்றிவிட்டு அரக்கப்பரக்க அடுத்த குடத்தை தூக்க ஓடிக்கொண்டிருந்தாள்.

அடுப்பிலிருந்து மண்ணெண்ணெய் வருவதற்கான திறப்பியை லேசாக திருகி கொஞ்சம் மண்ணெண்ணெயை வழிய விட்டு, உடனே அதனை அடைத்து ஒரு தீக்குச்சியை உரசி தீ பற்றவைத்தான் சென்றாயன். குபீரென்று பற்றிய தீயில், எரிந்த நாப்பது வாட்ஸ் பல்பைவிட பிரகாசமாக தெரிந்தது அந்த உள்ளறை. வழிந்தது முழுவதும் எரிந்த பின் அடுப்பு ஒரு பக்கமாக மட்டுமே எரிய தொடங்கியது. நாலாபுறமும் பிரகாசமாக எரிய ஸ்டவ் பின் எடுத்து அந்த பர்னரின் துளையினுள் விட்டு குத்தி குத்தி கீரி விட ஆரம்பித்தான்.

ஸ்டவ் பின்னால் கீறி விட்டு அடுப்பை பிரகாசமாக எரியவிடுவதில் இவன் கொஞ்சம் சாமர்த்தியசாலி தான். அவனுடைய தங்கை இதேபோல் கீரி விடும்போது பின்னை உடைத்து அம்மாவிடம் திட்டு வாங்கிய அனுபவமும் நடந்தது உண்டு. இதை அவன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்த  தங்கையை அவளது அம்மா திட்டிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது ‌. “ஏழு கழுத வயசாச்சு. இன்னும் ஒரு கோலம் உருப்படியா போட தெரியுதான்னு பாரு.. அழிச்சு அழிச்சு போட்டுகிட்டு இருக்க” என்று திட்டிக்கொண்டே உள்நுழைந்த வள்ளி டீ போடும் பாத்திரத்தை கழுவி அதில் பாலை ஊற்றி கொஞ்சம் தண்ணீர் ஊற்றி டீ போட ஆயத்தமானாள்.

‘பல்ல விலக்கலாமா இல்ல டீ குடித்த பின்னர் பல்லை விலக்கிக் கொள்ளலாமா’ என்று யோசித்தவாறே உள்ளறையிலிருந்து வந்தவன் கண்ணாடியின் கீழே வாசலைப் பார்த்தவாறு அமர்ந்துக் கொண்டு டிவியில் எஸ்சிவி சேனலில் ஓடிய பாடலைப் பார்க்க ஆரம்பித்தான்.

அப்படியே மெதுவாக அவனது அப்பாவிடம், ” அப்பா, வைகுண்ட ஏகாதசி அப்படினா என்னப்பா?” என்றான். பொதுவாக அவனுக்கு ஏனோ அவனது அப்பாவிடம் எதைக் கேட்பது என்றாலும் சிறிது தயக்கம் சிறுவயது முதல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. அது என்ன காரணம் என்பது தான் புரியவில்லை. எதுவென்றாலும் தனது தேவைக்கு தனது தங்கையையே துணையாக கொண்டிருப்பதையே அவன் வழக்கமாக கொண்டிருந்தான். தேர்ச்சி அட்டையில் கையெழுத்து வாங்குவது முதல் வாங்கி சாப்பிடுவதற்கு காசு வாங்குவதாக இருக்கட்டும்… படம் பார்க்கச் செல்ல அனுமதி கேட்பதாகட்டும்… எல்லாமே அவனுக்கு அவனது தங்கையின் உதவிதான். தங்கையை விட அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் தங்கை தான் இவனுக்கு கையெழுத்து வாங்கி   தருவாள். அப்படிப்பட்டவன் இந்த சந்தேகத்தை மட்டும் துணிந்து கேட்டுவிட்டான்‌. ஆர்வத்தின் முன் பயம் நிற்காது தானே.

மகன் இப்படி கேட்கவும் ஒருவித புன்வுறுவல் அவரது முகத்தில் பூத்தது தெரிந்தது. அந்தக் காலத்தில் எஸ்எஸ்எல்சி வரை படித்தவர் என்பதால் அவருக்கு தெரிந்திருக்கும் என்று இவன் நம்பினான். அவன் நம்பிக்கை வீண் போகாத வண்ணம் அவர், “வைகுண்ட ஏகாதசி என்பது பெருமாள் சாமியை கும்பிடுபவர்கள் பொதுவாக வழிபடும் ஒரு விழா. அன்னைக்கு இரவு முழுவதும் விழித்திருந்து சாமி கும்பிட்டா  சொர்க்கத்துக்கு போவங்க.. அப்படினு  சொல்லுவாங்க. ஸ்ரீரங்கத்தில் இருக்க பெருமாள் கோயிலில சொர்க்கவாசல் திறப்பாங்க. மத்த நாளெல்லாம் அது திறக்க மாட்டாங்க” என்று  சொன்னார். உடனே அவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியல. “அப்ப சொர்க்கத்துக்கு போகணும்னா இன்னைக்கு ஃபுல்லா தூங்காமல் முழிச்சு இருக்கணுமா? அதுக்காக க்ஷிரங்கம் தான் போகணுமா? என்று  கேட்டான் சென்றாயன்.  அதற்கு பெருமாள், “அப்படியெல்லாம் இல்லடா.. பெருமாள் கோவில் இருக்கிற ஊரிலெல்லாம் திறப்பாங்க. இரவெல்லாம் பஜனை, பாசுரங்கள் படித்தல் என்றெல்லாம் செய்வாங்க” என்றார்.

அவன் அப்பா அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே நறுமணம் கமழும் டீயுடன் அவனது அம்மா வள்ளி அடுப்படியிலிருந்து வெளியறைக்கு நான்கு தம்ளர்களுடன் வந்தாள். உள்ளறையில் இருந்தவாறே இவர்கள் பேசிய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்தவள் இப்பொழுது பேச ஆரம்பித்தாள். “எங்க  ஊர் சோழவந்தானிலுள்ள பெருமாள் கோவிலிலும்  சொர்க்கவாசல் திறப்பாங்க. சின்னவயசுல நாங்கெல்லாம் கோவிலுக்கு போயிட்டு வருவோம்” என்று கதையளக்க ஆரம்பித்தாள். உடனே அவனது அப்பா குறுக்கிட்டு “அதெல்லாம் அப்புறம் பேசுங்க. மொதல்ல டீயை ஆற்றி கொடு. போய் கடையை திறக்கணும் “என்று அதட்டினார். ” நான் பேசினா மட்டும் உங்களுக்கு பொறுக்காதே” என்று செல்லமாக சிணுங்கிக் கொண்டே டீயை ஆற்றுவதில் கவனம் கொண்டாள் வள்ளி. கோலம் போட்டுவிட்டு வீட்டிற்குள் வந்த காவ்யா, “சிவராத்திரிக்கும் அப்படித்தானே முழிப்பார்கள்” என்று கேட்டாள்.

“எட்டாவது படிக்கும் தனக்கு தெரியாதது ஏழாவது படிக்கும் தன் தங்கச்சிக்கு தெரிஞ்சிருக்கே” என்று ஆச்சரியத்தோடு பார்த்தான் பெருமாள். “உனக்கெப்படி இதெல்லாம் தெரியும்?” என்று தங்கையை பார்த்துக் கேட்டான். அதற்கு அவள்,” சின்னமனூரில் இருக்கிற நம்ம பெரியம்மா, சிவகாமி அம்மன் கோயிலுக்கு இந்த மாதிரி சிவராத்திரி விரதம் இருப்பாங்கல. நாம லீவுக்கு போகும்போது பார்த்திருக்கிறோமில” என்றாள்.

“அப்ப வருடத்துக்கு ரெண்டு முற இப்படி முழிப்பாங்களா! அப்படி முழிச்சா ரெண்டு தடவ சொர்க்கத்துக்கு போவாங்களா?” என்று கேட்டான் சென்றாயன்.

அதற்கு அவங்க அப்பா, “அட கிறுக்கு பயலே, அது அப்படி இல்லடா…. சிவன கும்பிடறவங்க சிவராத்திரிக்கும் பெருமாள கும்பிடுறவங்க வைகுண்ட ஏகாதசிக்கு முழிப்பார்கள்” என்று சொன்னார்.

உடனே எல்லோரும் கொல்லென்று சிரித்துக்கொண்டே டீயைப் குடிக்கத் தொடங்கினர். ” அப்ப நாம சிவராத்திரிக்குத் தான் முழிக்கணுமா? பெரியம்மா அப்ப தானே விரதம் இருக்காங்க” என்றாள் காவ்யா. அதற்கு, “அப்படியெல்லாம் கணக்கு இல்ல பாப்பா” என்றார். பெருமாளுக்கு முகம் வாட தொடங்கியது. இருந்தாலும் சுதாரித்துக் கொண்டு , “அம்மா, இன்னைக்கு நைட்டு நாம எல்லோரும் முழிப்போமா?” என்று கேட்டான். உடனே காவ்யா, “இங்க எங்க பெருமாள்கோவில் இருக்கு. நாம முழிச்சிட்டு காலையில கோயிலுக்கு போக?” என்று குதர்க்கமாக கேட்டாள். உடனே, “பால்வண்ணநாதர், பெருமாள் தானே. அங்க போகலாமில… மார்கழி பஜனை எல்லாம் பாடுகிறார்கள் தானே?” என்றான் சென்றாயன். அதற்கு வள்ளி,  “கோயிலுக்கு போகணும்னு அவசியமில்லை.   இங்கே சொர்க்க வாசலெல்லாம் இல்ல. இது சுயம்புவாக வந்த பால்வண்ணநாதர் தான்டா…  இருந்தாலும் முழிக்கிறதுதானா முழிக்கலாம். உங்களால முடிஞ்ச முழிங்க. முடியுமா உங்களாலா?” என்று கிண்டலடித்தாள்.”

சரி. சரி. நீங்க கதை பேசிக்கிட்டே இருங்க. நான் குளிச்சிட்டு கடைக்கு கிளம்புறேன்” என்று துண்டை எடுத்துக்கொண்டு அதே அறையில் இருந்த குளியலறைக்குள் நுழைந்தார் அவனது அப்பா.

அன்று பள்ளிக்கு நடந்து சென்று வந்த போதும் அவனுக்குள் வைகுண்ட ஏகாதசி பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது.

“அதென்ன கோயில் இருக்கிற ஊர்ல இருக்கிறவங்க மட்டும் விரதம் இருக்கிறாங்க. இங்கெல்லாம் அப்படி யாரும் இருக்கிறதே இல்ல. இதென்ன ஒரே குழப்பமா இருக்கு ?”என்று நினைத்துக்கொண்டே நடந்து சென்றான்.

இப்படியாக அன்று நாள் முழுவதும் அவன் சிந்திக்கும் ஒவ்வொருவரிடமும் வைகுண்ட ஏகாதசி பற்றியே கேட்டுக்கொண்டு இருந்தான். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களிடத்தில் இதைக் கேட்க ஏனோ தயக்கமாகவே இருந்ததால் கேட்கவில்லை.

மாலை பள்ளி முடிந்து வீடு வந்த பின்னர் கடையில் இருந்த அப்பாவை மாற்றிவிட கடைக்கு  போனான். அவன் முகம் கம்மென்று இருந்ததை வெங்காயத்தை புடைத்துக் கொண்டு கவனித்தவாறே “என்னடா ஆச்சு உனக்கு?” என்றார்.அப்பாவிடம் மீண்டும் கேட்க தயங்கிக் கொண்டே,  “அது எப்படிப்பா, சும்மா முழிச்சுக்கிட்டே இருக்கமுடியும்? டிவி பாக்கலாம்ன …அதுவும் பார்க்க கூடாதுன்னு சொல்றீங்க. அப்புறம் எப்படி முழிக்கிறது? ” என்று கேட்டான்.  “அப்படியெல்லாம் இல்லடா, டவுன்ல எல்லாம் சாமி படம் போடுவாங்க. அதை போய் பாத்தும் முழிக்கிறவங்க முழிப்பார்கள்” என்று சொல்லிக் கொண்டே  அன்றைய தினத்தந்தி பேப்பரைக் கொடுத்து சம்பூர்ண ராமாயணம் பட விளம்பரத்தைக் காட்டி படிக்கச் சொன்னார்.

அதில், “இன்று நடுநிசி காட்சி உண்டு” என்பது கொட்டை எழுத்தில் இருந்தது. “மதுரை – சென்ட்ரல், திண்டுக்கல் – ஆர்த்தி, தேனி -லட்சுமி, கம்பம் -யுவராஜா , பெரியகுளம் – பவளம், போடி -ஜீவன்” என்று வாசித்தான்.  “ஏம்பா.. அப்ப  தேனியில் இருந்தால் படம் பார்த்திருக்கலாம்: முழித்திருக்கலாம்ல.. நம்மளும் சொர்க்கத்துக்கு போகலாம்” என்று அவன் கூறினான். பெருமாள் சிரித்துக்கொண்டே, “சரி ..சரி…  கொஞ்ச நேரம் கடைய பாத்துக்க. நான் வீட்டுக்கு போய்ட்டு வரேன்.” என்று  சொல்லிக்கொண்டே கடையின் பின்புறம் இருந்த வீட்டிற்கு நடந்து சென்றார்.

இவன் திரும்பத் திரும்ப அந்த சம்பூர்ண ராமாயணம் பட விளம்பரத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தான். சரக்கு கேட்டுவந்த ஒரு சிலருக்கு பொருட்கள் கட்டிக்  கொடுத்து கொண்டிருந்தான். அப்பொது திரும்பி வந்த பெருமாள்,  “சரி .அம்மாவ சமைக்க சொல்லி இருக்கேன். சீக்கிரம் சாப்பிடு. இன்னைக்கு நம்ம ரெண்டு பேரும் நைட்டு தேனிக்கு போயி படம் பாக்கலாம்” என்றார். உடனே அவனுக்கு சந்தோசம் தாங்க முடியாமல், ” என்னப்பா நிஜமாகத் தான் சொல்றீங்களா?” என்றான்.  “உண்மை தான்டா.. போடா.. போய் கொஞ்ச நேரம் படி” என்றார். இவன் துள்ளிக் குதித்துக் கொண்டு பின்புறத்திலிருந்த வீட்டிற்குள் ஓடினான். அங்கே காவ்யா அழுது கொண்டிருந்தாள். அவன் போன உடனே அவளின்  அழுகைச் சத்தம் அதிகமானது.  “இவளும் உங்க கூட வர்றேனு அடம்பிடிக்கிறா. உங்க அப்பா ரெண்டு பேரும் தூங்கிட்டா.. ரெண்டு பேர தூக்கிட்டு வர முடியுமானு கேட்கிறாரு. இவ புரிந்து கொள்ளமாட்ற” என்றாள் வள்ளி.

தங்கச்சியை பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது. எங்கே ஏதாவது பேசினால் திட்டி விடுவாளோ என்று பயந்து கொண்டே ஸ்டீல் கட்டிலில் ஏறிப் படுத்தான் சென்றாயன்.

“டேய், எந்திரிடா. சீக்கிரம் சாப்பிடு. தேனி போகலையா? இப்பவே இந்த தூக்கம் தூங்குறவன் ஏகாதசிக்கு முழிக்க போறானாம்…” என்று அவன் அம்மா சத்தமிட்ட குரல்கேட்டு விழித்துப் பார்த்தான். தேனிக்கு படம் பார்க்கப் போகிறோம் என்ற கற்பனையோடு அவனை அறியாமலேயே உறங்கிப்போனதை அறிந்து வியந்தான்.

வழக்கமாக ஒன்பது மணிக்கு கடையை அடைக்கும் பெருமாள் அன்று எட்டு மணிக்கே கடையை அடைத்துவிட்டு சாப்பிடுவதற்காக வீட்டுக்குள் வந்தார். கடிகாரம் மாட்டியிருந்த சுவற்றின் கீழிருந்த கதவில்லாத நிலையின் இடது புறத்தில் இருந்த ஆணியில் சாவியை தொங்கவிட்டு சட்டையை கழற்றி ஹேங்கரில் மாற்றினார்.

இவன் சாப்பிட்டு முடித்துவிட்டு வாசலில் அமர்ந்திருந்தான். அவனது தங்கை வழக்கம்போல் கட்டிலுக்கு அடியில் போர்வையை தலை முதல் போர்த்திக் கொண்டு தூங்க் தொடங்கி விட்டாள். பெருமாள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர்கள் செல்ல வேண்டிய மயிலாடும்பாறையிலிருந்து தேனி செல்லும் டவுன் பஸ் வந்துவிட்டது என்பதை  வீட்டு வாசலில்  உட்கார்ந்து கொண்டே பார்த்தவுடன், “அப்பா பஸ் வந்துருச்சு. சீக்கிரம் சாப்பிடுங்க” என்று சத்தமிட்டான். அதற்கு அவனது அம்மா, ” பஸ்ஸ திருப்பி பத்து நிமிஷம் நிறுத்திவிட்டு தான்டா எடுப்பாங்க. நீங்க அதுக்குள்ளே கிளம்பி விடலாம்” என்று கூறினார். “நான் வேணும்னா போய் சீட்டு போடட்டுமா?” என்று கேட்டான். ” இந்நேரம் கூட்டமெல்லாம் இருக்காது. ஒன்னாவே போலாம். இரு” என்றார்.

இவன் வீட்டு வாசலில் இருந்து இறங்கி ரோட்டில் சென்று பஸ் நிற்கும் இடத்தில் பஸ் நிற்கிறதா… என்று பார்க்க போனான். இவன் தெருக்கோடியை அடையும்பொழுது பால்பண்ணை ரவியண்ணன் தெருவுக்குள் நுழைந்தார்.

பஸ் கிளம்புவதற்கு முன் அப்பா வந்து விடுவாரா என்ற ஏக்கம் ஒருபுறம் இந்த அண்ணன் இப்ப எதுக்கு வந்தாரு என்ற யோசனை மறுபுறமாக இருக்க தெருவிளக்கின் மங்கிய ஒளியில் இருபுறமும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நின்றுகொண்டிருந்தான்.  சிறிது நேரத்தில் அப்பாவும் அண்ணனும் நடந்து வருவதைப் பார்த்தான். பேருந்து இன்னும் கிளம்பாமல் தான் இருந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்துவிடலாம் என்று மீண்டும் வீட்டிற்கு ஓடி வந்தான்.  வரும்போது தான் எதிரில் வந்த அப்பாவை கவனித்தான். அவர் கையில் கடையின் சாவி இருந்தது.

“என்னம்மா, அப்பா கடையை திறக்க போறாரா… பஸ் வந்துரும் இல்ல?” என்றான் சென்றாயன் கோபத்துடன். அவன் அம்மா எதுவும் பேசாமல் “அமைதியாக இரு” என்று கூறினார். அவங்க அப்பா இரண்டு கதவுகளில் ஒன்றை மட்டும் திறந்து வெளி விளக்கை போடாமல் உள்விளக்கை மட்டும் போட்டு பொருட்களை எடுத்து கொடுப்பதை வாசலில் நின்று பார்த்துக்கொண்டே இருந்தான் சென்றாயன்.

கடையின் வாசலை ஒட்டி ஓடிய தெரு சாக்கடையில் இருந்த கொசுக்கள் அவனது கால்களில் கடிக்கத் தொடங்கின. அவற்றை தட்டிக்கொண்டே பஸ்ஸையே பார்த்துக்கொண்டிருந்தான். “பஸ் கிளம்பி விடக்கூடாது ஆண்டவா”என்று பெருமாளை வேண்ட தொடங்கினான் சென்றாயன். வைகுண்ட ஏகாதசி பிரார்த்தனை தொடங்கிவிட்டது போல.

திடீரென்று விளக்கு பிரகாசமாக எரிந்தது. பஸ் கிளம்பியது தெரிந்தது. இங்கு கடையை எட்டிப்பார்த்தான். அப்பாவும் அந்த அண்ணனும் சுவாரஸ்யமாக பேசி சிரித்துக் கொண்டிருந்தனர். இவனுக்கோ கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. கண்கள் பனிக்க பனிக்க பேருந்தை பார்த்துக்கொண்டே நின்றான். புறப்பட்ட பேருந்து அவனை கடந்து நிதானமாகச் சென்றது. பேருந்து கடந்து தான் தாமதம், அழுதுகொண்டே வீட்டிற்கு ஓடி போய் படுக்கையில் படுத்து அழ ஆரம்பித்தான்.

சிறுகதை : நீரின்றி அமையாது உலகம் ...

“டேய்.. எந்திரிச்சு வாடா ..அப்பா கூப்பிடுறாரு” என்ற அவன் அம்மாவின் குரல் கேட்டு  எழுந்தவன்  இருபதடி தூரத்தை இரண்டு நிமிடங்களாக தயங்கித் தயங்கி நடந்து கடை வாசலை அடைந்தபொழுது ரவியண்ணன் நடந்து போவது தெரிந்தது.  காளியம்மன் கோவில் ஒலிபெருக்கியிலிருந்து முருகப் பக்தர்களின் பஜனைப் பாடல் ஒலி கேட்கத் தொடங்கியது. கடை உள்ளே ஏறிட்டு அப்பாவை பார்த்தான்.  “பஸ் போயிருச்சு. இன்னொருநாள் போலாமா?”என்று அவன் அப்பா கனிவாக கேட்டார். “இதை சொல்லத்தான் கூப்டீங்களா..ஆச காட்டி மோசம் பண்றீங்களே” என்று மீண்டும் அழத் தொடங்கினான் சென்றாயன்.

“டேய்..என்னடா வெளிச்சமா தெரியுது. பஸ் இன்னும் போகல போல” என்றார் பெருமாள்.

சென்றாயன் பின்னாலே வந்த அவனது அம்மா சாலையை எட்டி பார்த்து “கண்ணகி பஸ் வந்து நிக்குது” என்றாள்.

” ஏய்..வள்ளி, கதவ நீயே பூட்டிக் கொள்” என்று கூறிக் கொண்டே செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினார்.

அதற்குள் சென்றாயன் சாலையைக் கடந்து கிளம்பி வரும் பஸ்ஸை மறிக்க தயாராக நின்றான்.

மறித்து நின்ற பஸ்ஸில் ஏறி அமர்ந்த பின்னரும் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தான்  சென்றாயன். டிக்கெட் எடுத்துவிட்டு திரும்பிய அப்பாவைப் பார்த்து புன்முறுவல் பூத்தான் அவன்.

உறங்கி விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். இருட்டில் எதுவுமே தெரியாமல் போகவே பஸ்ஸில் பாடிய பாடலைக் கேட்டுக் கொண்டு ‘இது  என்ன படம்?’ என்ற ஆராய்ச்சியில் மூழ்கினான்.

பஸ் நிற்கும் ஊரில் எல்லாம் ஏறுவோர் இறங்குவோரை வேடிக்கை பார்த்தபடியே வந்து தூங்காமல் தேனி வந்து சேர்ந்தான் சென்றாயன்.

அடித்து பிடித்து வேகமாக வந்து நேஷனல் தியேட்டரை அடைந்த போது கைகடிகாரத்தைப் பார்த்து மணி பத்து முப்பது (10:30) ஆகிவிட்டது என்றார் பெருமாள்.

“படம் போட்டாச்சா?” என்று கேட்டுக் கொண்டே இரண்டு டிக்கெட் வாங்கினார் பெருமாள்.

உள்நுழைந்து சீட்டைத் தேடி உட்கார்ந்த போது ” வந்தியளா வந்தியளா கூத்து பாக்க வந்தியளா” என்ற பாடல் பாடிக் கொண்டிருந்தது.

இடைவேளையில் சென்றாயனுக்கு சோமாஸ் வாங்கித் தந்துவிட்டு கோல்டு ப்ளாக் ப்ளைன் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார் பெருமாள்.

பெருமாள் விடும் புகையை ரசித்துக் கொண்டே கேண்டினில் இருந்த பலகாரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருந்தான் அவன்.

ஒருவழியாக தூங்காமல் வெற்றிக்கரமாக “பாஞ்சாலங்குறிச்சி” படம் பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியேறினர் இருவரும்.

அடுத்து “சம்பூர்ண ராமாயணம்” படம் ஓடும் தியேட்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.

மார்கழி மாதக் குளிர் ஒருபுறம் வாட்ட நேஷனல் தியேட்டரிலிருந்து கிட்டத்தட்ட 2 கி.மீ தூரமுள்ள லட்சுமி தியேட்டருக்கு நடந்தே வந்தனர் இருவரும்.

இங்கும் அவர்கள் வரும் முன்னரே படம் துவங்கி இருந்தது. கூட்டம் அலைமோதியது கண்டு ஆச்சரியமடைந்தான் சென்றாயன்.

அந்த தியேட்டர் சீட் போல்  செகுசாக இல்லாமல் இங்கு பெஞ்ச்  தான் இருந்தது. உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் நெளிய ஆரம்பித்தான் சென்றாயன்.

குளிர் ஒருபுறம் வாட்ட , புரியாத புராண பாஷை ஒருபுறம் மிரட்ட கண்கள் சொருகியது சென்றாயனுக்கு.

இதனைக் கவனித்த பெருமாள், அவனை அப்படியே பெஞ்சில் படுக்க வைத்தார். சென்றாயனும் மறுப்பேதும் சொல்லாமல் தூங்கிப் போனான்.

டேய், எழுந்திருடா என்று எழுப்பினார். என்னப்பா… என்று முழித்து விளக்கொளி கண்கள் கூச மலங்க மலங்க விழித்துப் பார்த்தான் சென்றாயன்.

தான் எங்கிருக்கிறோம் என்பதை உணர்ந்தவனாக அழ ஆரம்பித்தான் சென்றாயன்.

” ஏன்டா அழுவுறா? ” என்று பெருமாள் கேட்க… ” எல்லாம் போச்சுப்பா… எல்லாம் போச்சு.. நான் தூங்கிட்டேனே” என்று கதறினான். ம்.ம்… விடு.. விடு.. வா டீ குடிக்கலாம் தூக்கம் போய்விடும் என்றார்.

டீ வாங்கி இருவரும் குடித்த பின்னர் படம் மீண்டும் தொடங்கியது. மணி மூன்று முப்பது  (3:30) ஆனதைப் பார்த்த பெருமாள், “படம் பாக்கலாமா, வூட்டுக்கு போகலாமா” என்று கேட்டுக் கொண்டே அவன் பதிலுக்குக் காத்திராமல் தியேட்டர் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தார். சென்றாயனும் பின்தொடர்ந்தான்.  மீண்டும் 1 கி.மீ தூரமுள்ள பஸ் ஸ்டாண்ட்டிற்கு நடந்தே வந்து சேர்ந்தனர்.

வாட்டும் குளிருக்கு இதமாக அவித்த வேர்க்கடலை வாங்கித் தந்து கொறிக்கக் கொடுத்தார் பெருமாள்.

நான்கு மணிக்கு  வருஷநாடு செல்லும் கண்ணகி பஸ் வர ஏறி அமர்ந்தவுடன் தூங்கிப் போயினர் இருவரும். ஐந்து முப்பது மணிக்கு ஊர் வந்து சேர்ந்தது கூட தெரியாமல் தூக்கக் கலக்கத்திலேயே வீட்டு வந்து படுத்து உறங்கினான் சென்றாயன்.

வழக்கம்போல் காலை ஆறு மணிக்கு அவனது அம்மா பால் வாங்கி வர எழுப்பினாள். “எலே, விரத காரா…. வைகுண்ட ஏகாதசி விரதக்காரா… எந்திரிடா… போய் பால் வாங்கிட்டு வாடா.. சொர்க்க வாசல் வேற திறந்திருக்கு உனக்காக ” என்று சிரித்தாள்.

கண்களைக் கசக்கிக் கொண்டே எழுந்து முகம் கழுவி காலண்டரைப் பார்க்காமலே பால் செம்புடன் கிளம்பினான் சென்றாயன்.

                 முற்றும்.

பா.அசோக்குமார்

மயிலாடும்பாறை

தேனி.

Show 2 Comments

2 Comments

  1. கார்த்திக் மலர்

    அருமை. வைகுண்ட ஏகாதசியன்று கண்விழிக்க ஆசைப்பட்டு பத்து மணிக்கு முன்னால் தூங்கிய நாள்களை நினைவுபடுத்துகிறது.

    • பா. அசோக்குமார்

      மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *