சிறுகதை: வஞ்சனை முள்  – பூ. கீதா சுந்தர் புவனா  ஐந்து வயது குட்டிப் பெண்… ரொம்ப சுட்டி.

ஒரு வருடத்திற்கு முன் தன்  தாயைப் பறிக் கொடுத்தாள்.

” கணேசா, இன்னும்  எத்தனை  நாளைக்கு தான் இப்படி  தனியா  இருக்கப்  போற.. நம்ம கண்ணையன்,   பொண்ணு குடுக்க தயாரா  இருக்காரு.. நீ சரின்னு  சொன்னாதானப்பா  எதாவது ஏற்பாடு பண்ண முடியும்.. ? “

” சித்தப்பா.. எனக்கு  ரெண்டாவது கல்யாணம்  பண்றதுல  விருப்பம்  இல்லை  .. என் குழந்தைக்கு  நானே  போதும் சித்தப்பா “

” எப்பா.. நீ இப்டி  சொன்னா  எப்டிப்பா..  உனக்கும்  துணை  வேணும்… உங்குழந்தைக்கும்  அம்மா வேணும்பா.. யோசிக்காதப்பா… சரின்னு  சொல்லு “

”  சித்தப்பா, குழந்தையோட  வாழ்க்கைக்கு  இந்த கல்யாணத்தால  எந்த பாதிப்பும்  வரக் கூடாது சித்தப்பா… பாத்து எல்லா  விஷயத்தையும் விவரமா  பேசி முடிங்க… ” 

ஆறு மாதங்கள்  கடந்து விட்டது. ஆரம்பத்தில்  புவனாவை  நல்லபடியாக   தான் பார்த்துக் கொண்டாள்   பொன்னி.. அப்புறம் கொஞ்சம்  கொஞ்சமாக மனதில் வேற்றுமை  வந்தது.. 

” அம்மா எனக்கு குளிக்க வைங்க “

” ஏன் உனக்கு இன்னும்  குளிக்கத்  தெரியாதா?  நீயே போய் குளிச்சிக்க..  அப்புறம்  நான் ஒன்னும் உங்கம்மா  இல்லை… சித்தின்னே கூப்புடு.. புரியுதா ? ” 

” சரிங்க சித்தி… நான் போய் குளிச்சிட்டு வரேன்.. ” 

பிஞ்சு மனதில் எந்த நஞ்சும் இல்லாததால்.. அவளால்  வேற்றுமையைப் புரிந்து கொள்ள இயலவில்லை.. 

” பொன்னி.. ரெண்டு நாள் வேலையா.. வெளியூர்  போக வேண்டி இருக்கு.. புள்ளைய  பத்தரமாப் பாத்துக்கோ  . நீயும் பத்தரமா  இரு… சரியா ? ” 

” சரிங்க.. நீங்க போய்ட்டு  வாங்க… நான் பாத்துக்கறேன்..”

” அம்மா.. ம் இல்ல இல்ல..சித்தி.. எனக்கு பசிக்கிது  சாப்பாடு போடு சித்தி.. ” 

நேற்று தண்ணீர் ஊற்றி வைத்த சாதத்தைப்  போட்டு.. இரண்டு மிளகாய்  எடுத்து வைத்தாள் பொன்னி .

” சித்தி மீனு  வாசனை  வருதே கொழும்பு சாதம் போடு சித்தி.. ” நாக்கை வைத்து உதட்டில் ஒரு சுற்றுச்  சுற்றினாள் புவனா.. ” அது வந்து… மீன் கொழம்பு வாசம் நம்ம வீட்டுல  இல்லம்மா… பக்கத்து  வீட்டுல இருந்து வருது… ” என்று முழு  வாசனையை  பொய்யால்  மறைத்தாள்  பொன்னி.. 

மியாவ்… மியாவ்.. பூனை வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தது..வாசனை அதை ஒரு இடத்தில்  நிற்க விடவில்லை..

” பப்பி… இங்க ஏண்டா  சுத்தி வர… மீன் கொழம்பு நம்ம வீட்டல  பண்ணல … பக்கத்துல  வீட்டுல.. இந்தா சாப்பிடு ”  என்று    சாதத்தைப்  பிழிந்து  பூனைக்கு வைத்தாள்..புவனா.. பூனை வாயே வைக்கவில்லை.. பொன்னி எவ்வளவு  விரட்டியும் பூனை  அடுப்பங்கறையைச்  சுற்றிச் சுற்றி வந்தது..

சில மணி நேரத்திற்கு  பின்..

மிக கடுமையாக  இரும்பல்  சத்தம்  கேட்டது.. வெளியே  விளையாடிக் கொண்டு  இருந்த  புவனா வீட்டுக்குள் எட்டிப் பார்த்தாள்..

சித்தி தொண்டையைப்  பிடித்துக் கொண்டு இருமிக்  கொண்டு இருந்தாள்.. தட்டில் மீன் குழம்பு சாதம்  சிதறிக்  கிடந்தது.. 

” சித்தி … சித்தி என்ன ஆச்சு சித்தி.. என்று புவனா அருகில் சென்று தலையைத் தட்டியபடியே  கேட்டாள்.. மீன் முள் தொண்டையில் குறுக்காக  மாட்டிக் கொண்டதால்  பொன்னியால்  பேச முடியவில்லை…

தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்.. பொன்னியால்  குடிக்க முடியவில்லை.. க்ஹ..க்ஹ என தொண்டையை  கணைத்துக்  கொண்டே  இருந்தாள்…

” காஞ்சனா  அத்தை. .சீக்கிரமா  வாங்க எங்கம்மாவுக்கு  தொண்டையில்  என்னமோ  ஆயிடுச்சு.. சீக்கிரமா  வாங்க  அத்தை… எல்லாம்  உங்களால  தான்.. என்று காஞ்சனாவின்  கையைப்  பிடித்து இழுத்துச்  சென்றாள்  புவனா…

காஞ்சனாவுக்கு ஒன்றும்  புரியவில்லை.. ” நான் என்ன பண்ணேன்”   என்று யோசித்தபடியே, புவனாவோடு  வேகமாக  நடந்தாள்…  போய் பார்த்ததுமே, தட்டில் மீன்  குழம்பு  சாதம்  சிதறிக் கிடந்தது…  நிலைமை  விளங்கி விட்டது காஞ்சனாவுக்கு… மீன் முள் தொண்டையில்  மாட்டிக்  கொண்டது  என்று…

அடுப்பங்கறை உள்ளே  போய் .. வெள்ளை சாதம் ஒரு கையில் எடுத்து.. உள்ளங்கையில்  வைத்து நன்கு பிடித்து… பொன்னியிடம்  கொடுத்து விழுங்கச்  சொன்னாள்… சாதத்தை  விழுங்க விழுங்க  வலிக் கூடிக்  குறைந்தது.. சாதத்தோடு  சேர்ந்து  முள்ளும்  உள்ளே  இறங்கி விட்டது..

” அத்த…  நீங்க இனிமேலு  முள்ளு  இல்லாம மீனு  வாங்குங்க… பாருங்க சித்தி  எவ்ளோ  கஷ்டப்பட்டாங்க.. எல்லாம் உங்களால  தான்.. ” என்று சொல்லியபடியே பொன்னியின்  தொண்டையை  தன் இளந்தளிர்  விரல்களால்  தடவிக் கொண்டு இருந்தாள்..

பக்கத்து வீட்டு காஞ்சனா  அத்தைக்கு  ஒன்றும் புரியவில்லை… என்ன சொல்லுது  இந்த புவி என்று யோசித்தாள்… சிதறிக்  கிடந்த  மீன் மற்றும் பிசைந்து  கிடந்த  சாதம், மீண்டும் மீண்டும் யோசித்த பின்  உண்மை  புரிந்தது.. பொன்னியைப்  பார்த்தாள். அவள் பார்வை  ஊசியாக  உள்ளே  இறங்கியது..  ஓரமாக  நின்ற பூனையும் பொன்னியை 

” உர் ” ரெனப்  பார்த்துக்  கொண்டு  இருந்துது… 

இருவரின்  பார்வையை  பார்க்க  இயலாத  பொன்னி  தலைக்  கவிழ்ந்தாள்..கண்களில்  இருந்து கண்ணீர்  கொட்டியது.. சூடான  கண்ணீர்  புவனாவின் கையில் பட்ட உடன் …

” ஐய்யோ… சித்தி ஏன் அழுவறீங்க  ? .. தொண்டையில வலிக்குதா?” 

என்று கேட்க.. 

” இல்லடா… புவி  .. உன் சித்திக்கு  தொண்டையில  வலிக்கல…   மீனு முள்ளு சாதத்தோட சேர்ந்து  உள்ள இறங்கிடுச்சி… ஆனா வஞ்சன முள்ளு  நெஞ்சில  குத்துது ”  என்று கூறி விட்டு காஞ்சனா  சென்று விட்டாள்..

பூ. கீதா சுந்தர் 

சென்னை.