குறுங்கதை: ஒரேயொரு தீக்குச்சி கடன் கிடைக்குமா? – ஆங்கிலத்தில்: ஸ்டீஃபன் லீகாக்   (தமிழில்: கார்குழலி) தெருவில் நடந்துபோகும்போது ஒரேயோரு தீக்குச்சியைக் கடன்வாங்குவது எளிமையான செயல் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு முறையாவது முயன்று பார்த்தவன் அது உண்மையல்ல என்பதைச் சொல்லிவிடுவான். என்னுடைய அனுபவத்தில் இருந்து நானும் இதை உறுதியாகச் சொல்லமுடியும். 

அந்தத் தெருவின் முனையில் நின்றுகொண்டு இருந்தேன். பற்ற வைப்பதற்காக கையில் ஒரு சிகாரை வைத்திருந்தேன், ஆனால் தீக்குச்சி இல்லை. கண்ணியமான, பார்க்க எளியவராக இருந்த மனிதர் ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். “மன்னிக்கணும், ஐயா. ஒரேயோரு தீக்குச்சி கடன் கிடைக்குமா?” என்று அவரிடம் கேட்டேன்.

தீக்குச்சியா? நிச்சயமாத் தர்றேன்,” என்றபடி மேலங்கியின் பொத்தானைத் திறந்து அரைச்சட்டையின் பாக்கெட்டுக்குள் கையை விட்டார். “ஒன்னு இருந்துச்சு. சத்தியமாச் சொல்றேன், கீழ்சட்டைப்பையில வெச்சுருந்தது நல்லா ஞாபகம் இருக்கு. இருங்க, மேல்சட்டைப்பையில இருக்கும்னு நினைக்கிறேன். ஒரு நிமிஷம் பொறுங்க. இந்தப் பொட்டலங்களைக் கீழே வெச்சுட்டுத் தேடிப்பார்க்கிறேன்.”

அட, ரொம்பச் சிரமப்பட வேண்டாங்க. இல்லேன்னா ஒன்னும் பிரச்சனையில்ல, பரவாயில்ல,” என்று சொன்னேன்.

அட, ஒரு சிரமமும் இல்லைங்க. இதோ, ஒரு நிமிஷத்துல தேடிக் கொடுக்கிறேன். இங்கதான் எங்கேயாவது இருக்கும்,” என்றபடி சட்டைப்பைக்குள் விரலை நுழைத்தார். “ஆனா, இது வழக்கமாப் போட்டுட்டு வர்ற அரைச்சட்டை இல்ல, அதுதான்…”

இதுகுறித்து அவர் உணர்ச்சிவசப்படுவதை உணர்ந்தேன். “பரவாயில்லை, விடுங்க,” என்று தடுத்தேன். “நீங்க வழக்கமாப் போட்டுக்கிற அரைச்சட்டை இல்லைன்னா என்ன, ஒரு பிரச்சனையும் இல்லை.”

இருங்க, கொஞ்சம் இருங்க,” என்றார். “அந்தச் சனியனை இங்கதான் எங்கேயோ வெச்சிருந்தேன். என்னோட கடிகாரத்துல வெச்சிருப்பேன்னு நினைக்கிறேன். இல்லையே, அங்கயும் இல்லையே. இருங்க, மேலங்கியில இருக்கான்னு பார்க்கிறேன். அந்த முட்டாள் தையல்காரனுக்குக் கையை உள்ளவிட்டுத் தேடறா மாதிரி ஒரு சட்டைப்பை தைக்க முடியலை!”அவருடைய படபடப்பும் எரிச்சலும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. கையில் இருந்த கைத்தடியைக் கீழே எறிந்துவிட்டுப் பல்லை இறுகக் கடித்தபடி சட்டைப்பைக்குள் குடைய ஆரம்பித்தார். “எல்லாம் என் சனியம்பிடிச்ச பையன் பண்ற வேலை, எப்பப் பார்த்தாலும் சட்டைப்பையை நோண்டிக்கிட்டு. கடவுளே! இன்னிக்கு வீட்டுக்குப் போனதும் அவனை என்ன பண்றேன் பாருங்க” என்று சீறினார். “இருங்க, என்னோட கால்சட்டைப்பைக்குள்ள நிச்சயமா இருக்கும்னு நினைக்கிறேன். என்னோட மேலங்கியோட நுனியை ஒரு நிமிஷம் தூக்கிப் பிடிக்க முடியுமா…”

இல்ல, இல்ல, இதுக்காக நீங்க ரொம்பச் சிரமப்படாதீங்க. கிடைக்கலேன்னா பிரச்சனையே இல்லை,” என்று மீண்டும் தடுத்தேன். “உங்க மேல்சட்டையை எல்லாம் கழட்டாதீங்க. ஐயோ, உங்க கையில இருக்கிற கடிதம், பொருளையெல்லாம் இப்படிப் பனியில தூக்கி வீசாதீங்க. ஐயோ, கால்சட்டை பாக்கெட்டையெல்லாம் கிழிக்கறீங்களே! கொஞ்சம் சொன்னாக் கேளுங்க, உங்க மேலங்கி, பொட்டலமெல்லாம் இப்படி மிதிபடுதே. உங்க பையனை அப்படியெல்லாம் திட்டாதீங்க, எனக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கலை. ஐயோ, உங்க துணியை எல்லாம் இப்படிக் காட்டுத்தனமாப் பிச்சு எறியறீங்களே.”

திடீரென, வெற்றிக் களிப்பின் உறுமலோடு கையை மேலங்கியின் உள்பக்கத்தில் இருந்து வெளியே எடுத்தார்.

“கண்டுபிடுச்சுட்டேன், இந்தாங்க!” என்று சத்தமாகச் சொல்லியபடி அதை எடுத்து வெளிச்சத்தில் காட்டினார். 

வெறும் பற்குச்சி.

அந்த நொடியில் எனக்குள் ஏற்பட்ட உணர்வுக்குச் செவிசாய்த்து அந்த மனிதரை டிராம் வண்டியின் சக்கரத்துக்குக் கீழே பிடித்துத் தள்ளிவிட்டு ஓடியே போனேன்.