’ரயில் தெலுங்கானாவிற்குள் சென்றதும், கே.சி.ஆர் (முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ்) எங்களுக்கு பீர் மற்றும் பிரியாணி கொடுப்பார்’ என்று சூரத்-வாராங்கல் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் எனக்கு அருகே அமர்ந்திருந்த  புலம்பெயர்ந்த தொழிலாளி கூறிய போது, நான் சிரித்தேன். அங்கிருந்த மற்றவர்களும் சிரித்தனர். அவர் அதைச் சொன்ன விதம். வேடிக்கையாக இருந்தது, அப்போது நாங்கள் சூரத்திற்கு அருகிலுள்ள உத்னா ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சுமார் 14 மணி நேரம் ஆகியிருந்தது. எங்களில் பெரும்பாலானோர் சாப்பிட்டிருக்கவில்லை. வீடு, பிரியாணி, பீர் ஆகியவை பற்றிய சிந்தனை, எங்களுக்கு கொஞ்ச நேரம் மகிழ்ச்சியளிப்பதாகவே இருந்தது.

நான் ஹைதராபாத்தைச் சேர்ந்தவன், காந்திநகரில் உள்ள குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் படித்து வருகிறேன். பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போது, எங்கள் வளாகம் மூடப்பட்டு, விடுதிகளில் தங்கியிருந்த எங்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான மாணவர்கள் வெளியேறிச் சென்று விட்டனர். அங்கிருந்த கேன்டீன் மூடப்பட்டதால், எங்களுக்கு உணவு எப்போதுமே ஒரு பிரச்சனையாகவே இருந்தது. இறுதியாக, தெலுங்கானாவைச் சேர்ந்த நாங்கள் மூன்று பேர் – என்னுடன் படிப்பவர், பிஎச்.டி மாணவர் ஒருவர் மற்றும் நான் – அங்கிருந்து வெளியேற முடிவு செய்தோம்.

காந்திநகரில் உள்ள அதிகாரியை அணுகினோம். மே 23 அன்று, சூரத்தின் புறநகர்ப் பகுதியில் இருக்கின்ற உத்னாவிலிருந்து வாரங்கலுக்கு செல்லவிருந்த சிறப்பு ரயிலில் செல்வதற்கான இடங்களை எங்களால் பெற முடிந்தது.

மே 23 அன்று எங்கள் விடுதியிலிருந்து அதிகாலை 5.45 மணிக்கே நாங்கள் புறப்பட்டோம். எங்களை அகமதாபாத்திற்கு அழைத்துச் செல்ல காந்திநகர் மாவட்ட ஆட்சியர் வாகனம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருந்து, மேலும் ஐந்து பேர் எங்களுடன் சேர்ந்து கொண்டனர். பிறகு நாங்கள் உத்னாவுக்கு அனுப்பப்பட்டோம், அங்கே எங்களை ஸ்கிரீன் செய்து, பயணத்திற்கான டிக்கெட்டுகளை வழங்குவார்கள் என்று சொல்லப்பட்டது. அந்த ஸ்கிரீனிங் முடிவதற்கு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேலேயே ஆனது. அந்த இடத்தில் இருந்த வெப்பம் தாங்க முடியாததாக இருந்தது. ஸ்கிரீனிங் சென்டரிலிருந்து, மீண்டும் பஸ்ஸில் ஏறச் சொல்லி, எங்களை உத்னா ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். 20 இருக்கைகள் கொண்ட அந்த பஸ் நிரம்பியிருந்தது – குறைந்தது 40 பயணிகள் அந்த பஸ்ஸுக்குள் இருந்தோம். சமூக இடைவெளி எல்லாம் அங்கே கொடூரமான நகைச்சுவையாவே இருந்தது. எங்கள் பஸ்ஸைப் போல, இன்னும் சில பஸ்களும் இருந்தன. அனைத்துமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தன.

Shramik Special leaves for UP but ends up in Odisha » Sirf News

ஸ்டேஷனில் பஸ்ஸை நிறுத்திய எங்கள் டிரைவர் பஸ்ஸிலிருந்து இறங்கி, பஸ்ஸைப் பூட்டிவிட்டு நடந்து சென்று விட்டார். ரயிலில் செல்ல வேண்டிய பயணிகளுக்கான நேரம் வரும் போது மட்டுமே ஒவ்வொரு பஸ்ஸும் திறக்கப்படும் என்று சொன்னார்கள். நாங்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்ட அந்த பஸ்ஸுக்குள் காத்துக் கிடந்தோம். அந்த பஸ் அப்போது எரியும் அடுப்பாக கனன்று கொண்டு இருந்தது.

வெப்பம் மற்றும் சோர்வு காரணமாக அழுது கொண்டிருந்த குழந்தையுடன் எங்களுடைய  பஸ்ஸுக்குள் இருந்த இளம் தாய் ஒருவர், தெலுங்கில் தாலாட்டு பாடல் ஒன்றைப் பாடி தன்னுடைய குழந்தையின் அழுகையை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். நான் அவரது தாலாட்டைக் கேட்டு  ஆச்சரியப்பட்டு போனேன். அவர் தாங்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைத் தாலாட்டாகப் பாடினார். அந்தப் பாடல் மூலம் அதிகாரிகளை அவர் சபித்துக் கொண்டிருந்தார்.

எங்கள் டிக்கெட்டுகளின் விலை ரூ.520தான் என்றாலும், நான் ரூ.700 செலுத்த வேண்டியதாயிற்று. இந்த விஷயங்கள் எவரையும் நிச்சயம் கோபப்படுத்தும். ஆனால் அபோது உங்களால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அனைவரும் எப்படியாவது வீட்டிற்கு வர வேண்டும் என்ற ஆர்வத்திலேயே அப்போது இருந்தோம்.

இறுதியாக, எங்கள் பஸ் திறந்து விடப்பட்டது, ஸ்டேஷனுக்குள்ளே நாங்கள் விரைந்து அனுப்பப்பட்டோம்.  பிளாட்பாரத்தில் காத்திருந்த ரயிலில் நாங்கள் ஏறினோம். கோச்சிற்குள் எப்படி ஏறுவது என்பதற்கான எந்த வழிமுறையும் இருக்கவில்லை. நடைமேடையில் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இருந்தனர், ஆனால் ஒவ்வொரு கோச்சிலும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் யாருமே கணக்கிடவில்லை. இரவு 8.30 மணியளவில் என்ஜினுக்கு அருகே உள்ள கோசிற்குள் என்னால் செல்ல முடிந்தது.

அந்த கோச்சில் வெறும் பெஞ்சுகள் மட்டுமே இருந்தன – நாம் வழக்கமாகப் பார்க்கின்ற ரெக்ஸின் இருக்கைகள் இருக்கவில்லை. மேலும், பெர்த்கள் கிடையாது. இருக்கை எண்கள் இருக்கவில்லை. ஏறியவர்களுக்கிடையே சண்டைகள் மூண்டன. ஒருவருக்கொருவர் முகங்களில் இடித்துக் கொண்டு, பைகளை இருக்கைகளுக்கு கீழே  நகர்த்திக் கொண்டிருந்தனர்.

பெஞ்சுகளில் தூசி நிறைந்திருந்தது. அங்கிருந்த கழிப்பறைகள் மிகமோசமான நிலையில் இருந்தன. ஆனாலும் ரயில் நகரத் தொடங்கியதும், மனதிற்குள் ஒரு நிம்மதி ஏற்பட்டது. இறுதியில், எல்லோரும் தங்களால் இயன்ற அளவிற்கு சிறிய இடத்தைக் கண்டுபிடித்து அதில் அமர்ந்து கொண்டனர்.

எனக்கு ஜன்னல் அருகே இருக்கை கிடைத்தது, என் நண்பர்கள் என் அருகே அமர்ந்திருந்தனர். எங்களுக்கு முன்னால், ஒரு கூட்டம் இருக்கைகளுக்காக சண்டையிட்டுக் கொண்டிருந்தது. நாங்கள் எங்கள் இருக்கையைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தபோதுதான் அவர்கள் அந்த சண்டையை நிறுத்தினார்கள். ஆக கடைசியில், மூன்று பேர் இருக்க வேண்டிய இருக்கையில் 5-6 பேர் இருந்தோம். எனக்குள் கவலை தோன்ற ஆரம்பித்தது. ஒருவேளை நோய்வாய்ப்பட்டு விட்டால் என்ன செய்வது? கோவிட் நோய் வந்து விட்டால் என்ன செய்வது? இவ்வாறான  நிலைமையில் பயணம் செய்வதன் மூலம் எனது குடும்பத்தை நான் ஆபத்தில் ஆழ்த்துகிறேனா? என்ற கேள்விகள் எனக்குள் எழ ஆரம்பித்தன.

Railways ferried around 32 lakh migrants in 2,570 Shramik Special ...

விரைவிலேயே, சாப்பாட்டு வாசனை அந்த பெட்டியை நிரப்பியது. எங்கள் பல்கலைக்கழகம் எங்களுக்கு சில சிற்றுண்டிகளைக் கொடுத்து அனுப்பியிருந்தது, ஆனால் அவை அப்போதே காலியாகி விட்டிருந்தன. அங்கிருந்த பயணிகளில் ஒருவரான சூரத்தில் ஜவுளித் தொழிலாளியாக பணிபுரியும் ரவி, தனது உணவை எங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்த போது, நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம். அவருக்கு நன்றியுடையவர்களாக ஆனோம்.

இரவு உணவிற்குப் பிறகு, அங்கிருந்தவர்கள் சுற்றி அமர்ந்து அரட்டை அடிக்க ஆரம்பித்தனர். இப்போது, சண்டைகள் அனைத்தும் மறந்து விட்டன. பெரும்பாலானவர்கள் தங்களுடைய வீடு மற்றும் குடும்பங்களைப் பற்றி பேசினர் என்றாலும், தெலுங்கானாவை அடைந்தவுடன் என்ன நடக்கும் என்றே கிட்டத்தட்ட அனைவரும் யோசித்தனர். அங்கே சென்றவுடன் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவோமா? அல்லது அரசு  தனிமைப்படுத்தலுக்கு செல்லுமாறு கூறப்படுவோமா? (மாநிலத்திற்கு ரயில்களில் வருபவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, வீட்டிற்கு அனுப்பப்பட்டு, அங்கே தாங்களாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்).

இப்போது தூங்க வேண்டிய நேரம் வந்தது. அங்கிருந்தவர்கள் தங்களால் முடிந்த இடங்களில் – இருக்கைகளுக்கு இடையில், நடைபாதையில், இருக்கைகளில் என்று படுத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள். நானும் எனது நண்பர்களும் சிறிது நேரம் அரட்டையடிக்க உட்கார்ந்தோம். பின்னர், நாங்கள் எங்கள் இருக்கையிலேயே தூங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். அது மிகவும் கஷ்டமாக இருந்தது என்றாலும்,  ஹைதராபாத்திற்கு போய் என்னுடைய சகோதரர் மற்றும் அத்தையைச் சந்திக்கலாம் என்ற எண்ணமே எனக்கு ஆறுதலாக இருந்தது. என்னுடைய பெற்றோர் மஹ்பூப்நகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வருகின்றனர்.

அடுத்த நாள் காலையில், எங்கள் பெட்டியில் உள்ள இரண்டு கழிப்பறைகளைச் சுற்றி மக்கள் கூட்டம் கூடத் தொடங்கியது. ஆனால் அந்த இரண்டுமே பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருந்தன. கழிப்பறைகள் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. துர்நாற்றம் தாங்கமுடியவில்லை.

காலை 9 மணியளவில் ரயில் மகாராஷ்டிராவில் உள்ள அகோலா ரயில் நிலையத்தில் நின்றது. அதிகாரிகள் வாழைப்பழங்கள், தண்ணீர் பாட்டில்களை நடைமேடையில் தூக்கி எறிந்தனர். மீண்டும் சண்டை மூண்டது. அதிகாரிகள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்று யோசித்துப் பார்த்தேன். அது எனக்குள் ஆழ்ந்த அவமான உணர்வை ஏற்படுத்தியது.

சிறிது நேரம் கழித்து, ரயில் மீண்டும் நின்றது. அது ரம்ஜானுக்கு முந்தைய நாள். உள்ளூர்வாசிகள் எங்கள் ரயிலுக்கு வந்து கலர் சாதம் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை எங்களுக்கு வழங்கினர். மற்றொருவர் எங்கள் தண்ணீர் பாட்டில்களை நிரப்ப முன்வந்தார். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். அவர்களுக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்தோம்.

Balharshah Station Pics - Railway Enquiry

மதியம் 12.30 மணியளவில், பலார்ஷா ரயில் நிலையத்தில், ரயில்வே அதிகாரிகள் மதிய உணவை – சுமார் 100 கிராம் கிச்சடி மற்றும் தண்ணீர் பாட்டில்கள் – ஒவ்வொரு கோச்சின் ஜன்னல்கள் வழியாக வழங்கினர். உணவைக் கண்டதும் மீண்டும் சண்டைகள் மூண்டன.

மாலை 6.30 மணியளவில் எங்கள் ரயில் வாராங்கல் ரயில் நிலையத்தை வந்தடைந்தது. என்னுடன் பயணித்த கூட்டத்தினரிடமிருந்து நான் வித்தியாசமாக இருப்பதாக நினைத்தேன் – அவர்கள் பெரும்பாலும் அன்றாடக் கூலிகளாக இருந்தனர். ஆனால் இந்த பயணம் எங்களுக்குள் சமநிலையை ஏற்படுத்தி இருந்தது. ரயிலில் இருந்து இறங்கி நடைமேடையில் இறங்கியபோது, நாங்கள் அனைவருமே ஒரே மாதிரியாகவே உணர்ந்தோம் –  கலங்கியிருந்தோம், களைத்துப் போயிருந்தோம். வீட்டைப் பற்றிய சிந்தனை மட்டுமே எங்களைத் தாங்கிக் கொண்டிருந்தது.

பயணத்திற்குப் பிந்தைய ஸ்கிரீனிங்கிற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலானது. ஆனால் அதிக நேரம் ஆனதாக உணர்ந்தேன். அதன் பிறகு வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட முத்திரை என்னுடைய கையில் குத்தப்பட்டது. ஹைதராபாத்திற்குச் செல்வதற்காக மாநிலப் போக்குவரத்து பஸ்ஸில் ஏற்றப்பட்டேன்.

இரவு 10.30 மணியளவில் நான் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என்னுடைய சகோதரனை அழைத்து, தனிமைப்படுத்தப்படுத்தலுக்காக, அவர் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கிச் சொன்னேன். காந்திநகரில் இருந்து நான் கொண்டு வந்த பைகள் இன்னும் திறக்கப்படாமல் வீட்டிற்கு வெளியிலேயே கிடக்கின்றன. எனது தனிமைப்படுத்தல் முடிந்ததும், மஹ்பூப்நகருக்குச் சென்று, எனது பெற்றோரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன்.

2020 மே 28

நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

https://indianexpress.com/article/india/an-anguished-lullaby-fights-for-seats-water-24-hours-on-a-shramik-special-6430508/

தமிழில்

தா.சந்திரகுரு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *